தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்: போலி அறிவியலை முறியடிப்போம்….. அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்போம்
ஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்
போலி அறிவியலை முறியடிப்போம்…..அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்போம்
பொ. இராஜமாணிக்கம்,
பொதுச் செயலர்,
அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு
ஜனவரி 30, 1948 அன்று காந்திஜீ அவர்களை கோட்சே சுட்டுக் கொன்றது போன்ற நிகழ்வு ஆகஸ்ட் 20, 2013 அதிகாலையில் அப்படியொரு ஒரு நிகழ்வு நடந்தது. நடந்த இடம் புனா, மகாரஷ்ட்ரா மாநிலம். காலை 7.20 மணியளவில் தனது வீட்டருகே உள்ள பாலத்தின் மேல் நடைப்பயிற்சி செல்லும் போது, ஓம்கரேஸ்வர் கோவிலுக்கருகில், துப்பாக்கி ஏந்திய இரண்டு நபர்கள் மோட்டர் சைக்கிளில் வந்தபடி தபோல்கரை நேருக்கு நேராகச் சுட்டனர். இரண்டு குண்டுகள் தலையிலும் மார்பிலும் பாய அதே இடத்தில் மரணமடைந்தார்.
அவர் வீர மரணம் அடைந்த இடத்தைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பு 2018ம் வருடம் கிடைத்தது. மே மாதம் தேசிய அறிவியல் மனப்பான்மை தினப் பயிற்சிக்காக புனே சென்றிருந்தோம். நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து அதிகாலை புறப்பட்டு நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட பாலத்தைப் பார்வையிடச் சென்றோம். ஒரு சிறிய ஆறு மீது அந்தப் பாலம் கட்டப்பட்டிருந்தது. அந்தப் பாலத்தில் நடந்து சென்ற போது அங்கு நடந்து கொண்டிருந்த நபரிடம் விசாரித்தோம்.
”இது தானே நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட பாலம்” என்று கேட்டோம்.
“ஆம் என்றார்”
“எந்த இடத்தில்” என்றோம்.
”இந்த இடத்தில் தான்” என்றார்.
“அப்படியானல் நீங்கள் அப்போது இருந்தீர்களா?”
“ஆம். எனக்குத் தெரியும். நானும் வழக்கமாக இதில் தான் நடைப் பயிற்சி செய்வேன். அப்பொழுது தான் நடந்தது ” என்றார்.
”அப்படியானல் யார் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா?”
“இல்லை..தெரியாது” என்று சொல்லிவிட்டு அப்படியே நகர்ந்துவிட்டர்.
அவர் முகத்தில் பயமும் கலவரமும் தென்பட்டது. ஐந்து வருடங்களுக்குப் பின் இது தான் அன்றைய நிலை. ஆனால் இன்றோடு எட்டு வருடங்கள் நிறைவு பெற்றும் இன்று வரை குற்றவாளிகள் தண்டிக்கபபடவில்லை. விக்ரம் பாவே, சச்சின் அண்டுரே, ஷரத் கலாஸ்கர் ஆகிய மூன்று நபர்கள் குற்றாவாளிகளாக கண்டறீயப்பட்டு சிபிஐ மூலம் ஆமை வேகத்தில் வழக்கு சென்று கொண்டிருக்கிறது.
இதற்கு முன் 1983 முதல் பலமுறை தபோல்கருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் எந்த போலீஸ் பாதுகாப்புகளையும் பெறவில்லை. “எனது நாட்டிலேயே என் மக்களிடையே நான் போலீஸ் பாதுகாப்புடன் தான் செல்ல முடியும் என்றால் ஏதோ என்ன்னிடம் தப்பு இருக்கிறது என்று அர்த்தம். நான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்டு போராட்டததை நடத்துகிறேன். நான் யாருக்கு எதிராகவும் செயல்படவில்லை. ஆனால் எல்லோருக்குமாகப் போராடுகிறேன் என்றார்.” எவ்வளவு துணிச்சலான மனிதர்!
தபோல்கரைத் தொடர்ந்து பன்சாரே ( ஃபிப், 2015) , டாக்டர் கல்புர்கி ( ஆக.2015), கெளரி லங்கேஷ் (செப்.2017) என மூவர் கொலை செய்யபப்ட்டனர். இந்தியா முழுவதும் இது அதிர்வலைகளைப் பரப்பியது. இந்த நால்வர் கொலையிலும் இந்து வகுப்பு வாதக் குழுக்கள் சமபந்தபப்ட்டிருக்கிறதென்றும் ஒரே முறையில் இந்தக் கொலைகள் நடந்தேறி இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால் இவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.
எனவே தான் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு, புவனேஸ்வரில் 2018 பிப்ரவரியில் நடந்த 16வது அகில இந்திய மாநாட்டில், தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தை தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக அனுசரிப்பதென தீமானிக்கபப்ட்டது. இதன் மூலம் அறிஞர்கள் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தவும், கொலைகாரர்களைக் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கவும், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் கொண்டு வர வலியுறுத்தியும் மக்கள் அறிவியல் இயக்கங்கள் வருடந்தோறும் இத் தினத்தை அனுசரிக்கிறது.
சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் கடந்த ஏழு ஆண்டுகளில் தற்போதைய ஒன்றிய அரசின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும், அரசின் நிர்வாகங்களும் அதன் கொள்கைகளும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் குறிப்பாகாக 51 ஏ (எச்) என்ற அறிவியல் மனப்பான்மைப் பிரிவுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறனர். புராணங்களில் கூறப்பட்ட கற்பனைகளை அறிவியல் எனச் சித்தரித்து போலி அறிவியலை பிரபலப்படுத்துவதும்; சரஸ்வதி நதியைத் தேடுதல், சஞ்சீவி மலையைத் தேடுதல்; சாணம், சிறுநீர் உள்ளிட்ட பசு ஆராய்ச்சிக்காக SUTRA-PIC India Program என்ற ஆராய்ச்சி அமைப்பை உருவாக்கி போலி அறிவியலுக்கு பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்தல் நடைபெற்று வருகிறது. இதனால் முறையான அறிவியல் ஆராய்ச்சிக்கான குறைந்த நிதியும் (0.6% ஜிடிபி) போலி அறிவியல் ஆராய்ச்சிகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
இதே போன்று கல்வியில் வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம், வேத கணிதம் போன்ற படிப்புகளைத் தீவிரமாகத் திணிக்க முயற்சிக்கிறது. பல்கலைக் கழக மானியக்குழு இது வரையிலும் இல்லாத வகையில் வரலாற்றுப் பாடத்திட்டத்தை தானே தயாரித்து அதில் திராவிட சிந்து வெளிநாகரீகத்தை சிந்து-சரஸ்வதி நாகரீகமாகவும், ஆரியர்களின் பிறப்பிடம் இந்தியா தான் எனக் கூறியும், வேத கால நாகரீகத்தை ஆரியரியர்களீன் நாகரீகமாகவும், மத்திய கால இந்திய வரலாற்றை ஆறில் ஒரு பகுதியாகச் சுருக்கியும் இஸ்லாமியர் காலத்தில் தான் நால்வர்ண முறை தோன்றியதென்றும் கடைப்பிடிக்கப் பட்டதென்றும் தயாரித்து இதை தான் பாடமாக்க வைக்க வேண்டும் என நிர்பந்தித்து உள்ளது. இதை விடக் கொடுமையாக பதஞ்சலி ராம் தேவ், வேத பாடங்களை எல்லாம் ஒன்றிணைத்து ”வேதிக் போர்டு ஆஃப் எஜுகேசன்” என்று சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சிக்கு இணையாக மத்திய கல்வி வாரியமாக ஒப்புதல் பெற்றுள்ளார். இனிமேல் இந்தக் கல்வி வாரியம் மூலம் பள்ளிக் கல்வியைப் படித்து உயர் கல்விக்குச் செல்லலாம் என்ற நிலையை உருவாக்கி உள்ளனர்.
மேலும் கடந்த ஒன்றரை வருடங்கள் கோரோனா நோயின் தாக்குதலை பிரதமர் முதல் பல ஒன்றிய அமைச்சர்கள், அதிகாரிகள் வரை அறிவியல் ரீதியாக அணுகுவதற்குப் பதிலாக மூடநம்பிக்கையின் வழியில் மக்களைத் திசை திருப்பி தங்களது இயலாமையை வெளிபடுத்தியதை உலகமே அறிந்தது. கையையும், தட்டையும் தட்டச் சொன்னது; டார்ச் லைட்டையும், செல் போன் லைட்டையும் வானத்தை நோக்கி அடிக்கச் செய்தது;
சாணம், சிறுநீரை மருந்தாகப் பரிந்துரை செய்தது: ஆக்ஜிசன் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாமல் தடுமாறி காயத்திரி மந்திரம் சொன்னால் ஆக்சிஜன் அளவு கூடும் என பிரச்சாரம் செய்தது என எண்ணற்ற போலி அறிவியலை பிரச்சாரம் செய்து தோல்வி அடைந்து இறுதியில் அறிவியலே கொரோனாவை வென்றது என்பது உலகறிந்தது.
இதனால் இந்த ஆண்டு தேசிய அறிவியல் தினத்தில் நாடு முழுவதும் உள்ள மக்கள் அறிவியல் இயக்கங்கள் எவ்வாறு கோரோனாப் பெருந்தொற்றை எதிர் கொள்வதில் வைரஸ் நோயின் அறிவியலும், அதற்கான அறிவியல் கண்டுபிடிப்புகளான தடுப்பு மருந்துகளும், அறிவியல் அணுகுமுறையும், அறிவியல் வழித் திட்டமிடலும், அறிவியல் மனப்பான்மையும் முன்னின்று போலி அறிவியலையும் மூடநம்பிக்கைகளையும் முறியடித்தது என்பதை மக்களிடம் எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.
அதே போல் ஜோதிடத்தை ஒரு பட்ட மேற்படிப்புப் பாடமாக்கி இந்திரா காந்தி திறந்த வெளிப் பல்கலைக் கழகம் மூலம் ஒன்றிய அரசு, தனது இந்துத்வா குறிக்கோளையும் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான கல்வியைக் காவிமயமாக்குவதையும் முயற்சி செய்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் ஜோதிடப் படிப்பை நிராகரிப்போம்; வானவியல் படிப்பை வரவேற்போம் என்ற முறையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அகில இந்திய, மாநில, இணைய வழிக் கருத்தரங்குகள், பயிற்சிகள், சமூக ஊடகப் பிரச்சாரங்கள்; மாவட்ட அளவில், கிளை அளவில் உறுப்பினர்கள் பங்கேற்கும் வகையில் கூட்டங்கள், செயல் முறை சோதனை விளக்கங்கள் என மாபெரும் மக்கள் இயக்கமாக நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 20க்கான மக்கள் அறிவியல் இயக்கங்களின் நிகழ்ச்சிகள் அறிவியலையும் அறிவியல் மனப்பான்மையையும் வளர்ப்பதற்கான பேரெழுச்சி ஆகும்.