Mangaiyin Kangal Manarkeni Poem By Navakavi மங்கையின் கண்கள் மணற்கேணி கவிதை - நவகவி

மங்கையின் கண்கள் மணற்கேணி கவிதை – நவகவி




நீர்ஊற்றை ஒளித்து வைக்கும்- அந்த
மணற்கேணி- உன்
நேத்திரங்கள் ஆனதுவோ- என்
மகாராணி?
உன்- விழியின் ஓரமே
பார்- கசியும் ஈரமே!
கண்ணீர் அல்ல…. காதல் கசியுது மெல்ல
கண்ணே கண்ணே…. மறுப்பதேன் அதைச் சொல்ல?
(நீரூற்றை)

இமை இரண்டும்- விரல்- என ஆகி
மனதை மீட்டுமே!
எண்ணங்களை -உன்- வண்ணங்களை
எழுதிக் காட்டுமே!
இனியாவது கனிவாய்திற பேசடி!
ரதமாகநீ வடமாக நான் பாரடி!
மனது வையடி
மௌன தேச பிரஜையாக
மாறினாயடி!
(நீரூற்றை)

கூம்புகிற- பூ- இதழ்களுமே
வீசும் வாசமே!
மூடுகிற- உன்- உதடுகளும்
பேசும் பேசுமே!
கன்னக்குழி முத்தப் புயல் மையமோ?
அன்னக்கிளி உனக்குப்பணி செய்யுமோ?
சொல்வாய் சம்மதம்.
செவ்வாய் திறந்து சிரித்தால் செவ்வாய்
கிரகம் என்வசம்!
(நீரூற்றை)

உன்- கால் சுவடு -ஒரு- ஏடாக
கவிதை வடிக்கிறேன்!
நேர் வகிடு -சொர்க்க- வழி ஆக
நிலவில் நடக்கிறேன்!
மௌனம் உடை தயக்கம் உடை கண்மணி!
காதல் வினா தொடுத்தேன் விடை சொல்க நீ!
கனிவாய் பேசடி
கனிவாய் முத்தம் தருவாய் கண்ணே
இனிதாய் பேசடி!
(நீரூற்றை)

Alla vendum Pillai Poem By Navakavi அள்ள வேண்டும் பிள்ளை பூமியை! கவிதை - நவகவி

அள்ள வேண்டும் பிள்ளை பூமியை! கவிதை – நவகவி




பூமத்திய ரேகையின் நீளம்- இரு
கைகள் வேண்டும் எனக்கு!
ஏந்த வேண்டும் பூமிப் பிள்ளையை- என்
தாய்மை தவழும் இடுப்பு!
என்- கண்ணீர் மொண்டு -புவியை
கழுவிட வேண்டும்!
என்- புன்னகை கொண்டு- புவிக்கு
மெருகிட வேண்டும்!
(பூமத்திய)
திருவிழாவில் வேண்டும் என்றே….
தவறவிட்ட பிள்ளை.
புவிமகளே உன்னைத் தேடி….
கண்டெடுப்பார் இல்லை.
விண்வெளியில் பூமியின் விசும்பல்
விழுகிறதே விண்மீன் செவியில்.
வரலாற்றின் ரத்தச் சிதறல்
வழிந்தோடி வரும்வை கறைகள்.
கண்ட பின்பும்… எடுக்கலையே….பூமி என்னும் புதையல்.
(பூமத்திய)
காலமெனும் நதியின் ஓரம்….
கரையில் பூத்த தாழை
புவிமகளே நீதான் ஆனால்…..
வாசம் போன ஏழை.
பூநாகம் உள்ளே வாசம்;
புவிப் பூவில் விஷ நெடி வீசும்.
புவிப்பகைவர் முள்ளாய் குந்த
பூமடலே ரம்பம் ஆகும்.
தெரிந்திருந்தும்…. தேடுகிறேன்
…. எங்கே சந்தோஷம்?
(பூமத்திய)
தாலாட்டை போர்ப்பாட் டாக்கி…..
துயில் கலைத்தேன் புவியை.
பாட்டுக்குள் பதியன் போட்டேன்….
அரிமாவின் ஒலியை!
அக்குளுக்குள் புவியை வைத்தேன்!
அக்கினியை உடுத்தச் செய்தேன்!
சிக்கலுக்குள் சிக்கிவிடாமல்
செல் வழியில் ஒளியை பெய்தேன்!
கதிர் ஒளியை…. கத்தரித்தேன்…. நடை விரிப்பாய் நெய்தேன்!
(பூமத்திய)

Pookalin Sethi Poem By Navakavi நவகவியின் பூக்களின் சேதி கவிதை

பூக்களின் சேதி கவிதை – நவகவி




“புன்னகை பூக்கின்றீர்கள்
பூக்களே யார் நீங்கள்?”
“மாண்ட பின் மீண்டும் பிறந்த
மழலைகள் ஐயா நாங்கள் ”

“மாண்டவர் வான் போவாராம்
மண்ணில் ஏன் மீண்டும் பிறந்தீர்?”
“அம்மாவின் பக்கம் இருக்கும்
ஆசையால் தங்கி விட்டோம்”

” இவ்விடம் இருக்கும் சேதி
எவ்விதம் அறிவாள் அம்மா?”
“தென்றலில் வாசம் | அனுப்பி
தெரிவிப்போம் அம்மாவுக்கு ”

“ஆயிரம் வகைவா சங்கள்
அறிந்திடல் இயலுமோ சொல்?”
“அவரவர் குழந்தை வாசம்
அம்மாக்கள் அறிவார் ஐயா”

“அன்னையைக் கண்டால்இன்று
அழுவீரோ அம்மா என்று?”
“தேனையே கண்ணீராக்கி
சிந்துவோம் வழியில் நின்று !”

“அல்லியே வெள்ளைக்கார
அம்மாவா உனது அம்மா?”
“இல்லை; என் ஆசை அம்மா
இதயத்தால் வெள்ளை அம்மா!”

“செண்பகப் பூவே உன் தாய்
சிவப்பையா நீயும் பெற்றாய்? ”
“செந்தணல் சிதைத் தீ பட்டு
செந்நிறம் பெற்றேன் ஐயா!”

“புஷ்பங்காள்!நீர் இப்போது
புகல்கின்ற சேதி யாது?
“மலருக்கும் மழலை யர்க்கும்
மரணமே வரக்கூடாது!”

Puvi Nadanam Poem By Navakavi நவகவியின் புவிநடனம் கவிதை

புவிநடனம் கவிதை – நவகவி




சூரிய சந்திரர் ஜோடித் தபேலா!
பிரபஞ்சம் இசைக்குது பார்வெகு நாளா!
கடல்அலைக் கரங்கள் பிடித்திட பதமே
காணுக புவித்தாய் நவரச நடமே!
ததோம் ததோம் என
தபே லாவின்இசை
ஒளியாய் வழியுது!
அதோ அதோ புவி
அன்னையின் நாட்டியம்!
அண்டம் மயங்குது!
(சூரிய)
மஞ்சு மேக உடை
பஞ்சு போல மலைக்
கொங்கை மீது படர,
ஓடும் கங்கைநதி
ஒட்டியா ணம்என
ஆகி வந்து தழுவ,
கோடி நட்சத்திரக் கண்ணால்
கண்டு இதை வானம்,
வியந்து வியப்பில்விரி வாகி
நீள்கிறது போலும்!
பருவ காலங்கள் ஆறும்
பக்கத் திரைச்சீலை ஆகும்!
துருவப் பனி இவளின்
முகத்தில் பூசும்அரி தாரம்.
(சூரிய)
மூங்கில் காடுகளை
புல்லாங் குழல்வனம்
ஆக்கித் துளை புகும் காற்றே!
ஆடு கின்ற புவி
அன்னை மேனியெங்கும்
பொழிக பொழிக இசை ஊற்றே!
சுழன்று சுழன்று இவள்
நடனம் பயில்கின்ற நேரம்,
நீரும் தீயுமிரு
நேத்திரங் களிலும் ஊறும்!
ஆயிரம் யுகம்யுக மாக
ஆதி நடம்இவள் ஆட, -இவள்
பாவம் யாவும் பல உயிரின்
பெருக்கமாய் மாற
(சூரிய)

Indian Love Poem By Navakavi. நவகவியின் இந்தியக் காதல்! கவிதை

இந்தியக் காதல்! கவிதை – நவகவி




கத்திமேல நடக்குதப்பா இந்தியக் காதல்- அது
பாலைவன வாழ்வில்சின்னஞ் சிறிய தூறல்!
சத்து அற்ற சவலைப் பிள்ளை!
நித்த நித்தம் அதற்குத் தொல்லை!
(கத்தி)
சாதி எனும் சுவர் மீது
காதல் எனும் பூனைஅது
எந்தப்பக்கம் தாண்டினாலும் சாக்கடை!
ஏதுங்க பாலடை?
ரொம்ப ரொம்ப எம்பி எம்பி
குதித்தால்தான் அதற்கு தம்பி
கிடைக்குது சிலநேரம் தேனடை!
தகருது மனத்தடை!
இந்தியக் காதல் ஒரு பேப்பர் ஜிகினா!
தங்க ஜிகினா இல்லை தகர ஜிகினா!
கோத்திர மூத்திரத்தில் சமைத்திடும் குருமா!
மூக்குல மோந்துபார்த்தா வாசனை வருமா!
சாதி-கூண்டுக்குள்ள
காதல்- மாட்டிக்கொள்ள
கூண்டினையே வானம்இன்னு நெனைக்கிறான்!
ஒட்டடையே நட்சத்திரமா மயங்குகிறான்!
கூமுட்டைய அடைகாத்தா
குஞ்சு பொரிக்குமா? நம்புறான்!
(கத்தி)
காலரா பேதி நோயும்
காலாவதி ஆகிப் போகும்!
ஜாதிபேதி மட்டும் இங்கே பெருக்குது!
சமத்துவம் சறுக்குது!
கழுத்துல மூணு முடிச்சு
கல்யாண தாலி முடிச்சு
தாலி முடிச்சு சாதிமுடிச்சா இறுக்குது!
சாதிபோட்ட சுருக்கிது!
ஒண்ணுரெண்டு சாதி மீறி கலியாணம்.
ஒழிவது எப்போஇந்த அவமானம்?
இந்தியக் காதல்மனம் சாதிமனம்.
கக்கூசில் கூட இருக்கு ஜாதிமலம்!
அட -பொய்யி நெல்ல
குத்தி- பொங்க வச்சி
சாஸ்திர சம்பிரதாய விருந்தடா!
சப்புக்கொட்டி சாப்பிடுறான் பாருடா!
ஊறுகாயா கூட அங்கே
உண்மைக் காதல் இல்லடா!
(கத்தி)

பாடல்: களை எடுப்பான் விவசாயி..! – நவகவி

பாடல்: களை எடுப்பான் விவசாயி..! – நவகவி

களை எடுப்பான் விவசாயி! சட்டம் போட்டுட்டாரு -மந்திரி சட்டாம்பிள்ளை கணக்கா! கார்ப்பரேட் விவசாயம்- பாரு உழவனை கவுக்கு தக்கா      ‌  அம்பானி சொல்லுற ரேட்டில        அவரையும் துவரையும் விக்கவா?        சம்சாரி…
வெண்மணி தீக்குளியல்

இருதயத்தை விரல் ஆக்கி / ரேகை எடுத்து வந்து சு.பொ.அகத்தியலிங்கம் .

“இதயம் எழுதிய இரத்த வரிகளின் கதைக் கொஞ்சம்… கவனித்துக் கேளுங்கள் …” என அழைக்கும் நவகவி வெண்மணித் தீயின் வெப்பமும் வெஞ்சினமும் சற்றும் குறையாமல் வர்க்கப் போருக்கு ஊதுலையாக இந்த நெடுங்கவிதைத் தொகுப்பை உதிர மை தொட்டு எழுதியிருக்கிறார் . “நந்தனை…