Eazhai Vithavai Pen Poem By Kavithai Thamizhan Naveen ஏழை விதவைப் பெண்... கவிதை - கவிதைத் தமிழன் நவீன் வி

ஏழை விதவைப் பெண்… கவிதை – கவிதைத் தமிழன் நவீன் வி




மாநிறத்தோல் கொண்ட
மங்கையவள் கதையை
எண்ணத்தில் நிறுத்தி
எழுதிய கவிதை…!

கண்களைக் கவர்கிற
கட்டட வரிசையில்
இடுக்கில் இருந்தது
இவளது குடிசை…!

குடிக்கிற தகப்பனும்
வெறுப்பினைத் தரவே,
இவளோ
இளமையில் உழைத்தாள்…!

பள்ளிக்குச் சென்றே
படிக்கிற வயதில்
பத்துப் பாத்திரம்
தேய்த்திவள் பிழைத்தாள்…!

வளர்கின்ற பருவத்தில்
வறுமையில் உழன்றாள்…!
பசியினைப் போக்க- நடு
நிசி வரை உழைத்தாள்…!

வசந்தம் வருமென
நினைத்தாள்…!
சீர்களை வழங்கி
சீக்கிரம் மணந்தாள்…!

இவளுக்கு மகளோ
இவள்போல் பிறந்தாள்…!
தரித்திரம் துரத்த
தாலியை இழந்தாள்…!

குடும்ப அட்டைக்கு
கொடுக்கிற அரிசியை
நம்பியே நகர்ந்தது
இவளது வாழ்வு…!

இடுப்பில் மகளை
சுமந்தே நடந்து
வேலை கேட்டு
பலர்மனை புகுந்தாள்…!

எவரும் இங்கே
இரங்க மறுக்க
இரவில் துணிந்தாள்
விஷத்தைக் குடிக்க…!

பிள்ளைப் பாசம்
இவளைத் தடுக்க
முடிவை மாற்றி
முன்செல்ல முயன்றாள்…!

இடையில் எத்தனை
தடைகள் வரினும்
கலங்கிட வில்லை
இம்முறை இவள்மனம்…!

சுறு சுறுப்பாக
சுற்றிச் சுழன்றாள்…!
அன்பு மகளுக்காய்
பொன்பொருள் சேர்த்தாள்…!

மெல்ல மெல்ல
வலிகள் மறைந்தன…!
வாழ்வில் நலம்பெற
வழிகளும் திறந்தன…!

எதுவும் இங்கே
நிரந்தரம் இல்லை..!
என்பதற்கு இவள்கதை
நிஜமான சாட்சி…!

எதற்கும் துணிந்தே
முன்னே நடக்கும்
எவருக்கும் இங்கில்லை
வாழ்வினில் வீழ்ச்சி..!