நவீன கவிதைகள் – நா.வே.அருள்
சே குவேராவைப் பனியனில் அணிந்து கொண்டதால்
நவீன மனிதன் என்று நம்பிவிட்டாய்
அவனுக்கு
அலெய்டா சேகுவேராவையே
அடையாளம் தெரியவில்லை.
அவன் பழைய கண்களில்
புதிய கனவுகளில்லை
அவன் புதிய கவிதையில்
துருவேறிய பழைய சொற்களே மிஞ்சியிருக்கின்றன.
முனைகள் முறிந்த புஜக்கட்டைகளைக் கட்டிக்கொண்டு
நவீன திரைக் கலைஞன் என்று சொல்லிக்கொள்வது
எவ்வளவு வேடிக்கையோ
அவ்வளவு வேடிக்கை
பழைய மூளை சுமந்தவனின்
புதிய கணினிப் புளுகுமூட்டை.
இன்னும்
நிலவின் களங்கத்திலேயே தடுக்கி விழுகின்றன
அவனது
நீலம் பாரித்த பழைய கால்கள்.
இன்னும்
மேகத்தின் கூந்தலிலேயே சிக்கிக் கொள்கின்றன
அவனது
காமப் பிசுக்கேறிய கண்கள்.
சேட்டுக் கடையில் அடகு வைக்கப்பட்ட
வீட்டுக்காரியின் தாலியை மீட்க
பாவம்
பழைய கந்தசாமி இன்னும்
நவீன மனிதனையே நம்பியிருக்கிறான்.
நவீன மனிதனோ
க.நா.சுவின்
டி.எஸ்.எலியட் ஜிகினாத்தாள் ஒட்டிய
வீங்கிய கனவுகளைக்
கண்களென எண்ணி
இன்னும்
பஞ்சாங்கங்களையே
பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அவன் இன்னும்
பாரதி வரைபடத்தையே
முழுதாய்ப் பார்க்கவில்லை
எங்கே
தமிழ் ஒளியைத் தரிசிக்கப் போகிறான்?
அவன் சொற்களின் புண்களைச் சொறிந்து சொறிந்து
காயங்களை நவீனப்படுத்திக் கொண்டிருக்கும்
கவிதைக் குரங்கு.
***
தூக்கியெறிந்த அரசனின் உடைகளை
அணிந்து கொள்வதால்
புரட்சிப் பெண்களை
அந்தப்புர அரசிகளாகக் கற்பிதம் செய்கிற
புத்தி பேதலித்த அரச குமாரன்.
நவீன மனிதனின் கையிலிருக்கும்
அய்யனாரின் உடைந்த வாள்
பூர்ஷ்வாக்களின் தோட்டங்களில்
புல் வெட்டிக் கொண்டிருக்கிறது.
நவீன மனிதன்
மூளையை
ஒரு பழைய ஒயினை ஊற்றிவைக்கும்
புதிய குவளையாக மாற்றியிருந்தாலும்
அவனது கவிதை
மூத்திரம் தேங்கியக் குட்டையைப் போல
நாற்றமடிக்கிறது
ஆதிக்க மூட்டையில் திணிக்கப்பட்ட
அரிசிகள்… அவனது கவிதையின் சொற்கள்.
அடிமையின் பசிக்கு உணவாவதில்லை.
நவீன மனிதனை
நம்புவதில் பயனில்லை
உனது கூழுக்கு
உனது மொந்தையை நம்பு உழவனே
உனது தொழிலுக்கு
உனது ஸ்பேனரைத் தேடு தொழிற்கலைஞனே
உனது சைக்கிளை
நீயே மிதி வழிப்போக்கனே
உனது திரைப்படத்தை
நீயே இயக்கு கலைஞனே
உனது யுத்தத்தை
நீயே நடத்து போர் வீரனே
வேண்டுமானால்
பிச்சை எடுப்பதற்கு
அவன் ஒரு பாட்டு தயாரித்துக் கொடுப்பான்.
முகத்திலெறிந்துவிட்டு முன்னேறு
உன் நடையின் தடங்களே
உண்மையான நவீன கவிதைகள்.
***********************
பின்குறிப்பு –
புரட்சிக்காரன் சே குவேராவின் மகள் அலெய்டா சே குவேரா அவர்களின் இந்திய வருகையையொட்டி எழுதப்பட்ட கவிதை
நா.வே.அருள்
