கவிதை: மெளனத்தில் நிலா – கவிஞர் ச.சக்தி
மு.அழகர்சாமியின் கவிதைகள்
உன் மௌனம்
******************
உனது
மையிட்ட கண்கள்
மையிடாத கண்களை
விழி ஈர்ப்பு விசையால்
வீழ்த்தி விடவே!
மையிருட்டு
இரவுகளை
களவாடுகிறதோ!
இந்த
இரவுகளை
முழுவதும்
களவாடினாலும்..
இன்னும்
இரவுகள்
வேண்டுமென
நினைக்கும்
உன்
மௌனம்…
மின்னலாய்
**************
விட்டு விட்டு அடிக்கும் மழை
விடாமல் துரத்தும்
உன் நினைவுகள்..
மழை வரும் போது
நீயும் …..
மின்னலைப் போல்
வந்து
செல்வாயே!
ஒத்திவைப்பு
****************
தேதி
குறிப்பிடாமல்
ஒத்தி வைத்து விட்டாய்
நம் சந்திப்பையும்
நாடாளுமன்ற
கூட்டத் தொடர்
போலவே!!!
********************
உன்னை.
அவ்வளவு சீக்கிரம் விட்டுச்செல்ல. ..நான்
ஒன்றும் நீ பயணித்த.
புகைவண்டி அல்ல…….
உன்னை விரைவாக கடந்து செல்ல
நான் ஒன்றும்..எப்போதாவது கடந்து செல்லும்
புயல் காற்றும் அல்ல…
உன்னை அழகை மட்டும் ரசித்து விட்டு
அப்படியே கடந்து செல்ல நான் ஒன்றும்
ரசிகன் மட்டும் அல்ல..
உன்னை அவர்களுக்கு தேவைக்கு
மட்டுமே பயன்படுத்தி விட்டு சென்று விட
நான் ஒன்றும் பயன்பாட்டாளன் அல்ல…
உனக்கு ஆலோனை மட்டும் சொல்லிவிட்டு
அவ்வளவு சீக்கிரம் விட்டு செல்ல
நான் ஒன்றும் மனநல ஆலோகர் மட்டும் அல்ல…
நீ செய்யும் வேலை எல்லாம் ஓவ்வொரு நாளும் உள்வாங்கிக்கொண்டு…
அடுத்த நாளுக்கும்
உன்னை தயார் படுத்த
நினைவுபடுத்திக்கொண்டிருக்கும்
நான் ஒன்றும் நீ குடியிருக்கும்
வீடு அல்ல…
நீ செய்யும் கடமையெல்லாம்
பார்த்துக்கொண்டு குறை மட்டுமே
சொல்லிக்கொண்டிருக்கும்
நான் ஒன்றும் உன் அருகில்
குடியிருக்கும்.
உன் உறவினர் அல்ல…
உன்னை
அடுத்த நிலைக்கு கொண்டு
செல்லக்ககூடிய.
அத்தனைக்கும்
மாற்றானவன்.
நான்..
மு.அழகர்சாமி
கடமலைக்குண்டு
இருபத்திநாலு மணிநேர பகல் கவிதை – ஜேசு ஞானராஜ்
வாகை மரத்தடியில் தூக்கம்
சோகமாய் அமர்ந்திருந்தது!
தூரத்தில் இரவு
செத்துக் கிடந்தது!
தாகம் தேடிய தண்ணீர்
அழுது சோர்ந்த நிலவுக்கு
ஆதரவுக் கரம் நீட்டியது!
மல்லிகை மணமும்
ஜல் ஜல் ஒலியும்
சுதந்திரம் போனதாய் அரற்றின!
அரவான்களும் கோட்டான்களும்
பசியைத் தின்று கொண்டிருந்தன!
சோகம் நிரந்தரமாய்
இரவு காவலாளியிடம்
ஒட்டிக்கொண்டது!
மோகமும் விரக தாபமும்
இச்சையிடம்
கால நீட்டிப்புக் கேட்டன!
இருபத்திநாலு மணிநேரமும்
வேலைசெய்ய மறுத்து
கடவுளிடம் முறையிட்டது பகல்!
கடவுள் என்னைப் பார்த்தார்!
கைகளைப் பிசைந்து கொண்டிருக்கிறேன் நான்!
– ஜேசு ஞானராஜ், ஜெர்மனி
பறக்கும் மனது கவிதை – ராஜு ஆரோக்கியசாமி
உன் நினைவுகளுடனும்
அவற்றின் கனவுகளுடனும்
பேசிக் கொண்டிருக்கிறேன்
தூக்கமில்லா இரவில்
“நம்மை அழ வைத்தவளை
அலற வைப்போனே ஆம்பளையாம் ”
எனக்கு அதெல்லாம் வேண்டாம்ப்பா
உன்னை வாழ வைப்பதே…
உன் தீண்டல்களால்
எந்தத் துலங்கல்களுமில்லை
உன் மௌனம்தான்
ஓங்கி அரைகிறதெனை
ஆயிரம் கேள்விகள்
உன்னிடம் அப்படியே
என்னிடமோ ஒன்றேயொன்றுதான்
காதல், கடைசி வரை
எந்நேரமும் காதல்
தூக்கி அலைகிறேன்
பாரம் ஏதுமின்றி
பறக்கும் மனது
எனக்கு நீ ஆச்சர்யம்
உனக்கு நான் சௌகர்யம்
காதலே அனைத்தின் அஸ்திவாரம்
ஆகவே வாழ்க்கை அபூர்வம்
உன் பரவச பாவனைகள்
என்னுள் ஏதேதோ செய்ய
இதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்
இன்னொரு ரோமியோ- ஜுலியட்
– ராஜா ஆரோக்கியசாமி
சம ஊதியம் கவிதை – சக்தி ராணி
பகல் வெளிச்சம் வரும் முன்னே…இரவின் இருளில் எழுந்தாச்சு…
கதிரவனும் கதிர் விரிக்க…ஆக்கி சமைச்சு…கிளம்பியாச்சு…
கால் வயிறு நிரம்பலையே…
கொஞ்சம் குடிச்ச கஞ்சிக்குந்தான்…
வயிறு நிரம்ப காத்திருக்க…
காலமும் வகை செய்யலேயே…
கால் நோக…தூரத்தொலவு
நடந்த பின்னும்…சேரும் இடம்
வரவில்லை…நொடி வேகம்
சென்று சேர…ஊர்தி வசதியும்
வாய்க்கலையே…
ஒருவழியா…வந்த பின்னும்…
வேலை வாங்க காத்திருக்க…
மேஸ்திரியும்…வந்திருந்த
வேலையெல்லாம் ஒவ்வொன்னா
வகை பிரிக்க…
கிடைச்ச வேளையில்…மனமுவந்து
கல் சுமந்து போகையில…
என்னோட…வயதொத்த
ஆண் மகனும்…என்னைப்போல
கல் சுமக்க…சுமந்த பாரம்
மனம் கொள்ள விரும்பாம…
அப்பப்போ பேசிக்கொள்ள…
நேரப்பொழுது…போர போக்கில்
கதிரவனைக்கூட்டிச் செல்ல…
மாலை வேளை…உற்சாகமாய்
ஊதியமும் கைக்கு வர…
வந்த பணமும் எண்ணி எண்ணி
சேலைக்குள்ள…முடிஞ்சுக்கையில்…
கூடப் பேசிய ஆண்மகனின்…
கையில தான் …அதிகமான
ஊதியமும் தவழ்ந்து வர…
என்ன ஏதுன்னு…விசாரிக்க
பேச்சு மொழி பேசுகையில்…
அப்புறமாத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்…
ஒன்னா வேலை செஞ்சாலும்…
ஆம்பளைங்க வேலைப்பளு…
ஊதியம் எப்போதும் அதிகமென…
– சக்தி ராணி
குமரகுருவின் கவிதைகள்
பண வீக்கமெனும் பூ!!
******************************
பனி உறைவதைப் போல்
மனம் இறுகி உறைகிறது
ஒவ்வொரு இரவும்
ஒரு பூவாய் மலரும்
ஒவ்வொரு பூவும்
உதிரும் தினமும்
கடலொரு பூ
அதன் பூக்காம்புதான்
எங்கே?
இந்தக் கடலை
காற்றில் சிலுப்பிக் காட்டுகிறது…
உணவுப் பொட்டலம்
கொடுக்கும் கைகளைப் பற்றி
முத்தமிடும் நேரம்
சிந்தும் கண்ணீர் துளிதானே
உலகின் மீப்பெரிய ஆசிர்வாதம்?
கிணறு வெட்டுகிறார்கள்
இன்னும் நீர் வரவில்லை
நீர் வரும் ஊற்று
இன்னும் தென்படவில்லை
வானம் பார்த்துக் கொண்டேயிருக்கிறது
“இன்னும் கொஞ்சம் தோண்டுங்கள்
இன்னும் கொஞ்சம் தோண்டுங்கள்”
என்று டார்ச் அடிக்கிறது…
மழை குதித்து விளையாடவொரு
அழகிய கிணறு
எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம்…
குமரகுரு
9840921017
செல்பி குட்டி கதை – இரா. கலையரசி
சும்மா இருப்பா “பேயி பிசாசு” னுகிட்டு. அதுவும் செல்போன்ல வருதாம் போவியா?
சங்கரை பேசி மறித்தான் சுரேஷ். டேய்! நான் எடுக்கிற செல்பியில பாரு! பின்னாடி ஒரு உருவம் தெரியுது.
இவனும் எடுத்தான். ஒரு மங்கிய உருவம் தெரிந்தது. வெவ்வேறு இடங்களில் எடுத்தான். அங்கும் அப்படியே தெரிந்தது.
அவன் எடுத்த அதே நொடியில் அவனை உரசி சென்ற வண்டி தலைகீழாக கவிழ்ந்தது.
“பயம் பேயை விட கொடூரமானது”. இருவரும் நடுங்கினர். மணி இரவு பனிரெண்டு. செல்போன் ஒலித்தது..
போனை எடுக்கவில்லை. மேசையில் இருந்தது. கீழே விழுந்தது. மீண்டும் அழைக்கிறது. நடுங்கிய கரங்கள் காதில் சொருக கனத்த குரல் ஒலித்தது.
சாரி! சார்.”.சாப்ட்வேர் ப்ராப்ளம். சரி செஞ்சுட்டோம். இனி செல்பியில் ப்ளர் இமேஜ் வராது”. ஏது?ப்ளர் இமேஜா?? போன உயிர் திரும்பியது சங்கருக்கு.
தங்கேஸ் கவிதைகள்
கவிதை 1
***********
வெற்றிடங்களாகலாம்
தாய்மை கொப்புளிக்கும்
இரவின் மார்புக்காம்பிலிருந்து
உயிர் பெற
கொஞ்சம் கருணையை உறிஞ்சிக்கொள்ளும் பொருட்டு
எண்ணற்ற ஜீவன்கள் வாய்திறந்திருக்கின்றன
மீன்குஞ்சுகளாய்
நானோ தும்பை பூவாய் பூத்துக்கிடக்கும்
கீழ்வானத்தில் விழிகளை விட்டு விட்டு
வெறுமையாகவே திரும்பி வருகிறேன்
நிரப்பிக்கொள்ளத்தான்
நீ இருக்கிறாயே
இரவில் பகலையும்
பகலில் இரவையும்
மாறி மாறி இட்டு
நிரப்பிக்கொண்டிருக்கும்
இந்த விநோத பிரபஞ்சத்தில்
என்னில் உன்னையும்
உன்னில் என்னையும்
பரஸ்பரம் இட்டு நிரப்பிக்கொள்வத்ற்காகவே
நாம் வெற்றிடமாகலாம்
வா அன்பே !
கவிதை 2
***********
இருளும் வெளிச்சமும் கலந்து செய்த
கோட்டோவியமாய்
என் எதிரில் நீ நிற்பதும்
என் பிரமையோவென
நான் கிசு கிசுக்கத்தானோ ?
பேரன்பின் எல்லையற்ற வெளியில்
அதிசயங்கள் நிகழ்ந்தவண்ணமேயிருக்கின்றன
என்பதற்கு
இதைவிடவா வேறு சாட்சி வேண்டும் சொல் ?
கவிதை 3
************
தூர தூரங்களுக்கும் அப்பால்
திரும்பவே தோன்றாத பால் வீதியின்
பள்ளத்தாக்குகளை இட்டு நிரப்ப
விழிகளை மட்டுமே
கண்ணுக்குத் தெரியாத
தன் மாயக்கரம் ஒன்றினால்
கடத்திப் போய்க் கொண்டிருக்கும்
இன்றைய இரவுக்கும்
விழித்துக் கொண்டே
உடன் பயணிக்கும்
உன் நினைவுகளை மட்டும்
ஒன்றுமே செய்ய முடிவதில்லை
என் அன்பே