குழந்தை மனம் சிறுகதை – பிரியா ஜெயகாந்த்

குழந்தை மனம் சிறுகதை – பிரியா ஜெயகாந்த்
இனியாவும் அவள் அம்மா நித்யாவும் வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

“அம்மா ப்ளீஸ் நான் இன்னும் கொஞ்ச நேரம் டிவி பாத்துட்டு அப்புறம் எழுதறேன்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“அதெல்லாம் முடியாது நீ ஃபர்ஸ்ட் ஹோம் வொர்க் முடி. அப்புறம் டிவி பாக்கலாம்” என்று நித்யா கூறினாள்.

“இந்த ஹோம் வொர்க், ஸ்கூல் இதெல்லாம் யாரு கண்டு புடிச்சாங்கனு தெரியல அவங்க மட்டும் என் கைல கெடைக்கட்டும்.”

என்று புலம்பியபடியே தனக்கு பிடிக்காத கணக்கு பாடத்தை எழுதினாள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இனியா.

தப்பு தப்பாக எழுதி அதை பலமுறை அழித்ததில் நோட்டின் பக்கங்கள் கிழிந்தன. எதுவும் சொல்லாமல் நித்யா அவள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வழியாக எழுதி முடித்ததும் டிவி பார்க்க இனியா சென்று விட்டாள்.

இரவு உணவிற்கு தோசையும் சட்னியும் இனியாவிற்கு கொடுத்தாள் நித்யா. தட்டில் உள்ள உணவை முழுவதுமாக உண்ணாமல் சிறிது மிச்சம் வைத்தாள்.

“சாப்பாடு வேஸ்ட் பண்ணக்கூடாதுனு உனக்கு எத்தன முற சொல்றது. ஏன் இப்பிடி வேஸ்ட் பண்ற ? ”

என்று நித்யா கேட்பதை இனியா காதில் வாங்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு காலையில் சீக்கிரம் எழுப்பி பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதால் இனியாவை உறங்க வைத்தாள்.

இனியாவின் அப்பா குஜராத்தில் வேலை பார்க்கிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு வருவார். அதனால் அனைத்து பொறுப்புகளையும் நித்யா தனியாகவே பார்க்க வேண்டி இருந்தது. ஒவ்வொரு நாளும் இப்படியே கடந்துக் கொண்டிருந்தது.

நித்யா வீட்டு வேலைகள் முடித்து ஓய்வு கிடைக்கும் போது தனக்கு பிடித்த டெய்லரிங்கில் மூழ்கிவிடுவாள். பழைய துணிகள் கொண்டு வீட்டுக்கு உபயோகமான மிதியடி, ஸ்கிரீன் என்று எதையாவது தைத்துக் கொண்டிருப்பாள். இனியாவின் உடைகளை வடிவமைப்பதில் அவளுக்கு ஆர்வம் அதிகம். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் புதுப்புது டிசைனில் தைத்துக் கொடுப்பாள். இனியாவுக்கு அவள் அம்மா தைக்கும் உடையை விட கடையில் சென்று வாங்கும் உடைதான் பிடிக்கும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை, இனியா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். கீழ் வீட்டில் வசிக்கும் ஸ்ருதி காலிங் பெல் அடித்து விட்டு

“இனியா இனியா”

என்று குரல் கொடுத்தாள். கதவைத் திறந்த நித்யா,

“அவ இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கா ஸ்ருதி, அவ எழுந்ததும் கீழ அனுப்புறேன்” என்று கூறினாள்.

“ஓகே ஆண்ட்டி” என்று கூறிவிட்டு ஸ்ருதி சென்றுவிட்டாள்.

இனியா எழுந்ததும் குளித்து டிஃபன் சாப்பிட்டுவிட்டு டிவியை ஆன் செய்தாள்.

“இனியா, ஸ்ருதி காலைலயே உன்ன தேடி வந்தா. போய் அவ கூட விளையாடு டிவி அப்புறம் பாக்கலாம். ”

“நான் போகலமா. அவள இங்க வர சொல்லுங்க”

என்று இனியா கூறியதும் ஸ்ருதியின் அம்மாவிற்கு நித்யா ஃபோன் செய்து ஸ்ருதியை விளையாட அனுப்புமாறு கூறினாள்.

இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் இருவருக்கும் சண்டை வந்ததில் ஸ்ருதி அவள் வீட்டிற்கு சென்று விட்டாள்.

“என்ன ஆச்சு இனியா, ஏன் ரெண்டு பேரும் சண்டப் போட்டுக்கறீங்க ?” என்று கேட்டதற்கு,

“அம்மா அவ என் டாய்ஸ் எல்லாம் எடுக்கறா எனக்கு பிடிக்கல அதான் எடுக்காதனு சொன்னேன். அவ கோச்சிக்கிட்டு போய்ட்டா. ” என்று பதில் அளித்தாள்.

“ரெண்டு பேரும் சேந்து விளையாடும் போது டாய்ஸ் ஷேர் பண்ணாம எப்பிடி விளையாட முடியும். அவ வீட்டுக்கு போனா அவ உனக்கு குடுக்கறால்ல, அப்ப நீயும் தரனும்தானே ?”

என்று நித்யா கேட்டதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனியாக விளையாட ஆரம்பித்தாள்.

அன்று மாலை பக்கத்தில் இருந்த கடைக்கு இருவரும் சென்றனர். அங்கு தனக்கு பிடித்த விளையாட்டு பொருளை கேட்டு வாங்கிக் கொண்ட இனியா, வீட்டிற்கு திரும்பிய சில மணி நேரங்களில் அதை உடைத்து விட்டாள்.

“இனியா கிளாஸ்ல யார் கூடயும் மிங்கிள் ஆக மாட்டேங்கறா. லஞ்ச் சாப்பிடும் போதும் தனியா தான் சாப்பிடறா.”

என்று சென்ற வாரம் பள்ளியில் ஓபன் டேயில் அவள் வகுப்பு ஆசிரியை கூறியது நித்யாவிற்கு நினைவுக்கு வந்தது.

இனியாவின் செயல்கள் நித்யாவிற்கு கவலை அளித்தது. அவள் கணவரிடம் பேசும்போது எல்லாவற்றையும் கூறி வருத்தப்பட்டாள்.

சில நாட்கள் சென்றன. இனியாவிற்கு இரண்டு நாட்களில் பிறந்தநாள். அவள் பிறந்தநாளில் அவளுடன் இருப்பதற்காக அவள் அப்பா வந்திருந்தார். நித்யா அவர்களிடம்,

“இந்த வருஷம் இனியாவோட பர்த்டேக்கு நான் அவள ஒரு எடத்துக்கு கூட்டிட்டு போகப்போறேன்.” என்றாள்.

“எங்கமா போறோம் ?”

“இதுவரைக்கும் நீ பாக்காத எடம். இன்னும் ரெண்டு நாள் வெயிட் பன்னு”

இனியாவின் பிறந்தநாளன்று காலையிலேயே மூவரும் கிளம்பினர். நித்யா அவர்களை ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து சென்றாள். அந்த இடம் பார்ப்பதற்கு இயற்கை எழில் கொஞ்சும் இடமாக ரம்யமாக இருந்தது. பல ஏக்கர் பரப்பளவில் மரங்களும் செடிகளும் நிறைந்த இடம். அங்கு சென்றதும் இனியா அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்தாள்.

“இது என்ன பிளேஸ்மா. நெறைய கொழந்தைங்க இருக்காங்க. ஆனா ஸ்கூல் மாதிரி இல்லயே?”

“இது அம்மா, அப்பா, சொந்தக்காரங்க யாரும் இல்லாத கொழந்தைங்க இருக்கற எடம். இதுக்கு பேரு குழந்தைகள் காப்பகம். நம்மள மாதிரி வசதியானவங்க நிறைய பேர் இவங்களுக்காக டொனேட் பண்ணுவாங்க. அந்த பணத்த வெச்சு தான் இவங்களுக்கு சாப்பாடு, டிரஸ், படிப்பு எல்லாம் கெடைக்குது.“ என்றாள் நித்யா.

அங்கு அனைத்துக் குழந்தைகளுக்கும் மதிய உணவு வழங்கி அங்கேயே இனியாவின் பிறந்தநாளை கொண்டாடினர்.

அந்த காப்பகத்தின் உரிமையாளர் ஜானகியிடம் நித்யாவும் அவள் கணவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இனியாவும் உடன் இருந்தாள்.

“இங்க இருக்கற குழந்தைங்க ஒவ்வொருத்தருக்கும் பின்னால் ஒரு சோகம் இருக்கு. அவங்க இங்க வந்து சேந்ததே ஒரு பெரிய கதை.

இவங்கள படிக்க வெக்க ஆகர செலவு, போட்டுக்க துணி இப்பிடி அத்தியாவசிய தேவைக்கே சிரமமா தான் இருக்கு.

உங்கள மாதிரி நல்லவங்க இருக்கறதால ஏதோ ஒரு வேள சாப்பாடாவது கெடைக்குது. பல நாள் சாப்பாடு இல்லாம தான் தூங்க வெக்க வேண்டி இருக்கும்.

சில தன்னார்வ குழுல இருக்கவங்க வீடு வீடா போய் பழைய துணி, உபயோகப்படுத்தாத பொருள்னு வாங்கி இங்க கொண்டு வந்து குடுப்பாங்க. அவங்களால முடிஞ்ச உதவி செய்வாங்க.

இந்த குழந்தைங்க சந்தோஷம் தான் என் சந்தோஷம்னு நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்.

அதுல ஒரு நல்ல விஷயம் என்னனா இங்க வளந்து படிச்சு நல்ல வேலைல இருக்கற குழந்தைங்க ஒவ்வொரு மாசமும் முதல் வாரம் ஞாயிறு அன்னிக்கு இங்க வருவாங்க. அவங்களால முடிஞ்ச உதவிய செய்வாங்க. நாள் முழுக்க இங்க இருந்து சாப்பிட்டு விளையாடி சாயந்தரம் தான் கெளம்பிப் போவாங்க” அந்த ஒரு நாளுக்காக நாங்க எல்லாரும் ஒவ்வொரு மாசமும் காத்துக்கிட்டிருப்போம்”

என்று காப்பகம் குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். பிறகு மூவரும் விடைபெற்று வீட்டிற்கு புறப்பட்டனர்.

இனியா எதுவும் பேசாமல் தனக்குள் யோசித்தபடியே இருந்தாள்.

வீட்டிற்கு வந்தவுடன் அம்மா தைத்த உடையை எடுத்து ஊடுத்திக்கொண்டாள். அம்மா “நான் ஸ்ருதிக்கு கேக், சாக்லேட் குடுத்துட்டு வரட்டுமா ? என்று கேட்டாள்.

“ஓகே இனியா, நீ போய் குடுத்துட்டு வா. “

“அம்மா நான் கொஞ்ச நேரம் ஸ்ருதி வீட்ல வெளயாடிட்டு வரேன்.” என்று கூறி சென்றாள்.

இனியாவின் தந்தை சில நாட்கள் கழித்து ஊருக்கு சென்றார்.

இனியாவிடம் சில மாற்றங்கள் ஏற்பட்டதை நித்யா கவனித்தாள். இனியா இப்பொழுது வீட்டுப்பாடம் முடிக்காமல் டிவி பார்ப்பதில்லை. கீழ் வீட்டு ஸ்ருதியுடன் விளையாடும் போது தன் பொருட்களை அவளுடன் பகிர்ந்துக் கொள்கிறாள். உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிடுகிறாள். இவை அனைத்தும் நித்யாவிற்கு மன நிம்மதியை அளித்தது.

“அம்மா இந்த சண்டே என்ன திரும்பவும் அந்த காப்பகத்துக்கு கூட்டிட்டு போறீங்களா ? ” என்று கேட்க நித்யாவிற்கு ஆச்சரியம்.

“கட்டாயம் போலாம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

ஞாயிறன்று இனியா சீக்கிரமே எழுந்து கிளம்பினாள். அவளிடம் இரண்டு பைகள் இருந்தன. அதில் என்ன இருக்கிறது என்று நித்யா பார்ப்பதற்குள் இனியாவே அதை தன் அம்மாவிடம் காண்பித்தாள். அதில் இனியாவின் பழைய உடைகள், உபயோகிக்காத நோட்டு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் இருந்தன.

– பிரியா ஜெயகாந்த்