நிழல்களின் நிஜங்கள் கவிதை – ஆதித் சக்திவேல்
கூட்டியும் குறைத்தும் தம்மைக் காட்டி
நாட்டியம் ஆட முடிகிறது நிழல்களால்
நிஜங்களைப் போலன்றி
தம்மைச் சுற்றி நாற்புறமும் பிரகாசமான ஒளி வீசிட
நிழல்கள் ஒளிந்து கொள்கின்றன
கண்கள் கூசியதால்
காலத்தின் நிழலை
வேகமாய் உலுக்க
உதிர்கின்றன நினைவுகள்
ஓய்வு கொள்ள
உள்ளம் உறங்குகிறது அந்நினைவுகளின் நிழலின் மடியில்
மரத்தினைத் தழுவிட முடியா
நிலவின் கதிர்கள்
சுழன்று சுழன்று ஆடுகின்றன
இலைகளின் நிழல்களுடன்
மரத்தின் நிழலில்
பழுத்த இலைகளின்
நிழல்களுக்குப் புரிகிறது
தம் இறுதி ஆட்டம் அதுவென
மனம் விரும்பிய படி ஆடுகின்றன
அந்த இறுதி விளையாட்டை
சொட்டும் பனியின் துளிகள்
இலைகளில் வடிந்ததில்
ஈரமாகின்றன அதன் நிழல்களும்
பனிக் காலக் குளிரில்
மரத்தின் நிழலைப்
போர்த்திக் கொள்கின்றன புற்கள்
பிரியும் மனங்கள்
பிழிந்த சோகத்தை
தழுவிய கைகள்
மறைத்து விடுகின்றன
தம் நிழலில்
கரை தொட்டு நிற்கும்
மரங்களின் நிழலைத்
தன்னுடன் இழுத்துச் செல்ல
வேகமாய் ஓடிய ஆற்றின் ஆசையில்
வெள்ளமெனக் கலக்கிறது
ஏமாற்றம்
நிழலாய்
நிலத்தில் பறக்கும் பட்டத்தின் நூல் நிழலின் கையில்
மலர்ந்த பூவையும்
அதன் நிழலையும் பிரிக்கிறது
மணம் என்னும் மெல்லிய கோடு
உச்சிக்குச் செல்லச் செல்ல
நிழல்களை விழுங்கும்
சூரியனின் நிழல் எங்கே விழும்?
மேகம் உரசிப் பறக்கும்
பறவைகளின் நிழலில்
நிறைந்திருக்கிறது சிறகுகளின் வலி
நினைவுகளில் விழுந்த
இசையின் நிழல் ஒலிக்கிறது
அவ்விசை மறைந்த பின்னும்
காகிதங்களில் பதிந்த
கவிஞனின் நிழல்கள்
வாசிக்கப்படுகின்றன கவிதைகளாய்
பின் தொடரும்
வாழ்க்கையின் நிழல்
சில நேரங்களில்
முன்னே பாய்ந்து வர
அந்நிழலைக் கண்டு
அஞ்சுவோரும் உண்டு
நிழலின்றி நிஜமுண்டு
நிஜமின்றி நிழல் ஏது?
