எல்லைகள் அற்ற பறவை கவிதை – செ.கார்த்திகைசெல்வன்
இச்சைப் பறவைகள்மட்டும்
நீராடிச்செல்லும்
நீர்க்குளம் அல்ல நான்;
கடுஞ்சாடல்களும்
காலன் கல்எறிதலும்
கலங்கச்செய்யும்போது
எனைத் தெளியவைக்கும்
வினையூக்கி நீதான்;
நான் பூக்கும் பருவத் தாமரை
நீ பறித்துச்சென்று
மேடை அலங்கரித்தபின்
வாடிப்போவதற்கானதல்ல;
சூறாவளியிலும் சூறையாடலிலும்
ஊசித்தண்டால் தாக்குப்பிடித்து
மெள்ள மெள்ள
இலக்குச் சூரியனைத்
தேடிப்போவதற்கானது;
அப்படிப் பார்க்காதே !
உன் வீட்டிலும் அவள் இருக்கிறாள்!
வெறும் இச்சை தணிப்பின்
விளைச்சல் அல்ல நீயும் நானும்
விரைவில் ஆவியாகி விடுவதில்லை
வெயிலில் காயும் தேனும்;
இரைக்காகப் புலிகள் விரட்டிய
நிறைமாத மானும்
நீண்ட தூரம் ஓடிச் சென்று
அழகிய குட்டிகளை ஈனும்;
சமத்துவச் சக்கரங்களில் இன்றி
இழுக்கப்படும் மானுடத் தேரும்
அச்சாணிகள் கழன்று
துன்பக் குழியில் விழுந்து நாறும்;
ஆண்பால் பெண்பால்
பேதங்கள் சொல்லும் ஊரும்
அன்பால் ஆனதே பெண்பால்
என என்றைக்குத் தேறும்?
அப்படிப் பார்க்காதே!
உன் வீட்டிலும் அவள் இருக்கிறாள்!
நான் யாசிப்பது எல்லாம்
அடிமைச் சிறையில் இருந்து
மீள்வதற்கான விடுதலை;
நாளும் அரங்கேறுகின்றன நாட்டில்
பல வன்புணர்வு படுகொலை;
நள்ளிரவில் நாய்கள் கூட
சுதந்திரமாய் நடமாடுகின்றன;
நண்பகலில் கூட நிச்சயம் இல்லை
பாதுகாப்பெல்லாம் தடம் மாறுகின்றன;
காலங்காலமாக கருணை இன்றியே
நயவஞ்சகர்களால்
சிதைக்கப்படுகின்றேன்;
நேற்றா இன்றா எப்பொழுதும்
முறையான நீதி இன்றியே
புதைக்கப்படுகின்றேன்;
அப்படிப் பார்க்காதே!
உன் வீட்டிலும் அவள் இருக்கிறாள்!
எதற்கெடுத்தாலும்
எதிர்பாலினக் கவர்ச்சி
என்று சொல்லாதே!
தாயும் தங்கையும் எதிர்பாலினம்தான்
தகாததை மூளைக்குள் தள்ளாதே!
ஏடுகளில் மட்டும் பெண்மகத்துவம்
சொல்லும் மண்ணுலகம்
எதிரில் அதை நடைமுறைப்படுத்தாமல்
போனால் இனிப் புண்ணுலகம்;
எனைக் குறுகிய எல்லைக்குள்
அடைக்காதே!
என்னுலகம் பரந்து விரிந்தது;
வேலிகள் பயிரைக் காக்கத் தேவையில்லை
பக்கத்தில் வராமலிருந்தாலே சிறந்து;
அப்படிப் பார்க்காதே!
உன் வீட்டிலும் அவள் இருக்கிறாள்!
