போராளி அறிவியல் நாயகி மேரி கியூரி ( 1867-1934 ) – பேரா.சோ. மோகனா
155 வது பிறந்த தினம் கொண்டாடும் கியூரி..
நோபல்..பரிசு
நோபல் குடும்பம்
உலகின் ஆக உயரிய கெளரமாக கருதப்படும் நோபல் பரிசை ஒரு முறை வெல்வதே அரிது. ஆனால் மேரியின் குடும்பம் ஒட்டு மொத்தமும் நோபல் பரிசுகளை அள்ளிச் சென்றுள்ளது. என்றால், அது குயூரியின் குடும்பம் மட்டுமே. அவரின் இல்லத்தில் மேரி குயூரி, கணவர் பியூரி குயூரி, மகள்ஐரீன் மற்றும் பிரெடரிக் ஜோலியட் என ஒட்டுமொத்த குடும்பம் 4 நோபல் பரிசை சுமந்து சென்றார்கள் என்றால் ஆச்சரியம்தான். நமக்கு .வியப்பில் விழிகள் விரிகின்றன. விழி பிதுங்குகிறது.
சாதனைப் பெண்
அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் ஒரு பெண். என்பதே அந்தச் சாதனைக்கு தனிச்சிறப்பும் பெருமையும் சேர்க்கிறது. ஏனெனில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத அந்த கால கட்டத்தில் கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட காலத்தில், அறிவியல் ஆண்களின் தனிச்சொத்து என்று இறுமாப்புடன் இருந்த காலத்தில் அந்த மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது. வாய்ப்பு வழங்கப்பட்டால் ஆண்களுக்கு நிகராக சாதிப்போம் அல்லது ஆண்களையும் மிஞ்சுவோம் என்று ஒவ்வொரு பெண்ணையும் நிமிரச் செய்தவர்தான் அறிவியல் மேதை மேரி கியூரி. சிறுவயது முதலே பெண்களை அடக்கி வைக்கும் பொதுப் புத்திக்கு எதிராக யோசிப்பவராக இருந்தார்
ஏழை மரியா..
போராட்ட குடும்பம்.
வேலைக்காரியாக்கிய வறுமை
அப்போது போலந்து நாடு ரஷ்ய ஜார் மன்னனுக்கு அடிமைப்பட்டு கிடந்தது. போலிஷ் மொழியை ரகசியமாகவே படிக்க வேண்டிய கட்டாயம். அப்பொழுதெல்லாம் போலந்து தேசத்தின் விடுதலைக்காக மாணவர் இயக்கங்களில் மேரி இணைந்து பணியாற்றிஇருக்கிறார். வீட்டில் வறுமை வாட்டவே வேலைக்காரியாக பணிசெய்து குடும்பத்தின் துயரைத் துடைத்தார். அப்பொழுது அரும்பிய காதலை ,”நீ வேலைக்காரி ” என்று சொல்லி,அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர்கள் நிராகரித்தனர்.
தியாக பிம்பம் மேரி
மேரி தனது 15 வது வயதில், ரஷ்ய பள்ளியில், பள்ளி இறுதி நிலையில் தங்க பதக்கம் பெற்றார். மேலே அதிகமாக அறிவியல் படிக்க எண்ணினார். அவரின் குடும்ப சூழல் அதற்கு இடம் தரவில்லை. அவர் முன்னே இரு பெரும் பிரச்சினைகள் பூதமாக நின்றன. 1.மேரி ஆசைப்படும் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க மேரியின் தந்தையிடம் போதுமான பணம் இல்லை. 2. மேலும் பெண்களுக்கான மேற்படிப்பு போலந்து நாட்டில் இல்லை. என்ன செய்ய ? ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்; தமக்கையும் படிக்க வேண்டும். தீவிர சிந்தனைக்குப் பின்னர் ஒரு முடிவு எடுத்தார். அதுதான் தமக்கையை தான் படிக்க வைப்பது. மேரி , தனிக்குடும்பங்களில் வாழும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது என தீர்மானமாக ஒரு முடிவு எடுத்தார். அதன்படி . அவரது அக்கா, புரோன்யா (Bronya ) பாரிசுக்குப் போய் மருத்துவம் படித்தார். .ஆனால் மேரியால் தான் விரும்பியபடி அவரால் உயர்கல்வியை எளிதாகப் படிக்க .முடியவில்லை. ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், படித்து தீர்த்தார். அறிவுப் பசி தீர்க்க கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் என படித்து படித்து தள்ளினார். ஏராளமாய் படித்தார்.
வாழ்க்கை தந்த பிரான்ஸ்
பனியிலும் பசியிலும் படிப்பு
பாரிசில் கொஞ்ச காலம் தமக்கை மற்றும் அவரின் கணவருடன் இருந்தார். பின்னர் மேரி, தனியாக வீடு எடுத்து தங்கினார். ஐரோப்பாவில் எப்போதும் குளிர்காலம் பனிப்பொழிவு வாட்டி வதைத்து விடும். வறுமை மிகுந்த மேரிக்கு குளிர்காலமும் கொடுமை இழைத்தது. . சூடாக்கப்படாத அறை அவரின் எலும்புக்குள் குளிரை ஈட்டியாய் பாய்ச்சியது.உடல் விறைத்தது. சில நேரங்களில் அவர் மயங்கியும் விழுந்தார். பசியினாலும் கூட. அங்கே காலையில் படித்து மாலைகளில் பயிற்சி வகுப்பு எடுத்தார்.அத்துணை வேதனை, கஷ்டம், ஏழ்மையிலும்,1893 கோடையில், தனது 26 ம் வயதில், அந்த பல்கலையில் மேரி முதல் மாணவராக வந்து சாதனை படைத்தார். அவரின் கிரீடத்தில் இன்னொரு வெற்றிச் சிறகு குடிஏறியது. அவருக்கு கல்வியின் மேல் உள்ள காதல் அவரை மேலும் படிக்க தூண்டியது. 1894ல் வேதியல் மேற்பட்ட படிப்பை முடித்தார். ஆனால் வீட்டு நினைவு வாட்டியது. போலந்துக்கு விடுப்பு எடுத்து செல்லும் போதெல்லாம் வேலை தேடினார். போலந்து நாடு மேரிக்கு படிப்பும் தரவில்லை. பணியும் தரவில்லை.
காதலால் மோதப்பட்ட மேரி
மேரி குயூரி மீண்டும் பாரிஸ் திரும்பினார். ஆராய்ச்சிக்கு பதிவு செய்தார். முதன்முதலில் ஈயத்தின் காந்த சக்தி பற்றி ஆய்வு. பேராசிரியர் பியரியை சந்தித்தார் ;அப்போதே பியரி குயுரி (1859-1906,) மேரியின் மனத்திலும் வாழ்க்கையிலும் நுழைந்தார். பியரி மேரியிடம் தன் அன்பை பகிர்கிறார். ஆனால் மேரிக்கு காதல் எல்லாம் தனது தாய் நாட்டின் மீதே இருந்தது.. எனவே தான் போலந்து போய் அங்கேயே வாழப்போவதாக பியரியிடம் சொல்கிறார் மேரி. மேரி சொன்னதும், பியரி தானும் அவருடன் போலந்துக்கு வந்து வாழ்வதாக வாக்களிக்கிறார். இடையில் மேரி போலந்துக்கு சென்று வேலை தேடுகிறார். அங்கே அவர் பெண் என்பதாலேயே அவருக்கு அந்த பல்கலையில் பணி தர மறுப்பு வருகிறது. வேதனையுடன் பாரிஸ் திரும்புகிறார மேரி .
பிரான்சின் முதல் முனைவர்..
பாரிசுக்கு வந்த மேரியின் ஒரே ஆதரவு பியரிதான். பியரிக்கு காந்தவியலில் கட்டுரை எழுத உதவுகிறார்.அந்த கட்டுரைதான், பியரி ஆய்வு முனைவர் பட்டம் பெற பெரிதும் உதவுகிறது. பியரி முனைவர் பட்டம் பெற்று, பேராசிரியர் ஆகிறார். இருவருக்கும் கொள்ளை மகிழ்ச்சிதான். . இருவருக்கு இடையில் எல்லா வேதியலும் ஒத்திருந்தன . அறிவியல் ஆர்வமே இருவருக்கான இணைப்பு. எளிமையாக திருமணம் நடந்தது. . வாழ்க்கையில் காதல் பரிணாமமும் பரிமாணமும் போட்டியிட்டன. அவர்கள் இருவருக்கும் இரண்டு விருப்பமான பொழுது போக்குகள் இருந்தன.. மிதிவண்டி பயணமும், நீள் நெடிய பயணங்களும், இருவரின் இஷ்டமான பொழுதுபோக்குகள். இவை இருவரின் நெருக்கத்துக்கு அதிக நெருப்பூட்டியது. காதல் மிகுந்தது. ஆனாலும் மாட்டு தொழுவம் போலிருந்த ஒழுகிக்கொண்டு இருந்த ஆய்வகத்தில்தான் இருவரும் ஆய்வுகள் செய்தார்கள். அங்கிருந்து தான் மேரி முனைவர் பட்டம் பெற்றார். பிரான்சில் முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண் மேரி கியூரி தான்.
நோபல் வந்தது இருவருக்கும்
போலந்து -பொலோனியம்
பிட்ச்ப்ளேண்டே(Pitchblende) எனும் வேறொரு உப்பிலும் கதிரியக்கம் இருப்பதை மேரியும் கியூரியும் கண்டறிந்தனர் . அதை உண்டாக்கும் தனிமத்தையும் கூட கண்டறிந்தனர். அது புதுவகை தனிமம் என்பதால் அதற்கு ஒரு பெயர் சூட்ட வேண்டும். மேரி தான் பிறந்த நாட்டின் மேலுள்ள காதலால் “பொலோனியம்” என பெயரிட்டார்.பின் கதிரியக்க பொருட்களிலிருந்து ரேடியம் எனும் தனிமம் கண்டறிந்தனர்.ஆனால் நோபல் கமிட்டி, முதலில் பியூரி கியூரி மற்றும் பெக்கொரல் இருவருக்கு மட்டுமே நோபல் தருவதாக சொன்னது. ஆனால் பியூரி, மேரிக்கும் நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்று வாதாடி அவருக்கு வாங்கித்தந்தார். பின்னர் மேரிக்கு நோபல் பரிசு கிடைத்தது 1903ல் மேரிக்கு முனைவர் பட்டமும், நோபல் பரிசும் ஒருங்கே கிடைத்தன.;
1903ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ,மேரி கியூரி,, பியூரி கியூரி மற்றும் பெக்கொரல் ஆகிய மூவருக்கும் கிடைத்தது. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி கியூரி தான். அதை வாங்கக்கூட மேரி கியூரி தம்பதியருக்கு நேரமில்லாமல் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர் தம்பதியர் இருவரும். பின்னர் ஆய்வின் மூலம் கேன்சர் சிகிச்சைக்கு ரேடியம் பயன்படுத்தலாம் என்றும் மேரி தெரிவித்தார்.
மேரியின் ரேடியமும் முதல் உலகப்போர்
முதலாம் உலகப்போரின்போது மேரி கியூரி கண்டுபிடித்த ரேடியம், கதிர்வீச்சு ஆகியவை காயம்பட்ட போர்வீரர்களைக் காப்பாற்றப் பெரிதும் பயன்பட்டன.போர்முனையில் அவற்றைப் பயன்படுத்தி நடமாடும் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டன.
போலந்தில் மேரி சிலை
மேரிக்கு இரண்டு பெண்கள். இளைய பெண் ஈவா கியூரி ஒரு பத்திரிகையாளர்.102 வயது வரை வாழ்ந்து இறந்தார். மூத்த பெண் ஐரீன் ( 1897 -1956) அம்மாவைப் போலவே பெரும் விஞ்ஞானியாக இருந்தார்.
கண்டுபிடிப்பே பாதிப்பான துயரம்
இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசுகளை வென்ற பெருமை மேரி கியூரியின் குடும்பத்துக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இவரது மகள்கள் ஹெலன் மற்றும் பியரியும் ஆகியோரும்கூடப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள். ஐரீன் ஜோலியட்-கியூரி: மறைந்த நாள்- 1956. மார்ச் 17
இளம் வயதில் தனது அம்மாவின் விஞ்ஞானி நண்பர்களோடு பழகும் வாய்ப்புகளைப் பெற்ற ஐரீன் அறிவைத் தேடுவதில் ஆர்வமிக்கவராக இருந்தார். மதத்தின் பிடியில் இருந்த உயர் கல்விநிலையங்களில் நுழைந்து டாக்டர் பட்டமும் பெற்ற பிறகு தனது பெற்றோர் கண்டுபிடித்த போலோனியம் எனும் தனிமத்தைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்தார். நோபல் பரிசும் பெற்றார்.
கடவுள் மறுப்பாளர் மேரி
மேரி குயூரி வாழ்ந்த காலத்தில் பரவிய நாஜியிசத்துக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்த அவர் சோசலிச அரசியலுக்கு ஆதரவானவராக இருந்தார். மேரி கடைசிவரை கடவுள் மறுப்பாளராக இருந்தார்.
67 வயதில் 1934ம ஆண்டு மேரி இறப்பை தழுவினார்.. அவரின் மரணத்திற்கு காரணம் எந்த பாதுகாப்பும் கொள்ளாமல் கதிர்வீச்சுக்கு உள்ளானது தான் ;ஆனால் அதன் மூலம் பல கேன்சர் நோயாளிகளின் உயிர் காப்பாற்றும் செம்பணியை முடித்து இருந்தார் தன்னையே அர்ப்பணித்து பலர் உயிர் காத்த சமூகப் போராளி
முறிக்கப்படாத சாதனை
ஆணாதிக்கம், சட்டதிட்ட இடையூறு, சமுதாயக் குறைபாடு, நோபல் கமிட்டியின் ஒரவஞ்சனை எனப் பல தடைகள் இருந்தாலும் அவற்றை மறக்கடிக்கும் வகையில் ஒரு கதை நோபல் வரலாற்றில் உண்டு. அதுதான் மேரி கியூரியின் பெரும் சாதனை. இருவேறு அறிவியல் துறைகளுக்காக விருது பெற்ற இவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படவே இல்லை
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
“மேரியின் ஆய்வு அவரது வாழ்நாளில் அப்பழுக்கற்றது, எல்லையற்றது. அவர் மனித சமுதாயத்துக்கு மட்டும் அவரது பணியை அர்ப்பணிக்கவில்லை, அவர் தனது எல்லா வேலை ஆய்வுகளையும், ஓர் நியாய தர்மத்தின் அடிப்படையிலேயே தார்மீக தரத்துடன் இருந்தது. இவ்வளவையும் மேரி ஆத்மார்த்த உணர்வுடனும், நல்ல உடல் மற்றும் உள்ள வலுவுடனும், நீதி உணர்வுடனும், செய்து முடித்தார். இப்படி அனைத்துவித அரிய நல்ல குணங்களும் ஒருவரிடம் அமைதல் அரிது “ALBERT EINSTEIN
“I believe that Science has great beauty. A scientist in his laboratory is not a mere technician; he is also a child confronting natural phenomena that impress him as though they were fairy tales.”—Marie Curie
Marie Curie quotes
We must believe that we are gifted for something and that this thing must be attained.” “Nothing in life is to be feared; it is only to be understood.” “I am one of those who think like Nobel, that humanity will draw more good than evil from new discoveries.”
– பேரா.சோ. மோகனா
இயற்பியல் நோபல் பரிசு 2022 – இரண்டாம் குவாண்டம் புரட்சி – ஜோசப் பிரபாகர்
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் கோட்பாடுகளில் ஒன்று குவாண்டம் இயற்பியல். இது ஒரு வினோதமான அறிவியல் கோட்பாடு. இக்கோட்பாட்டின் பல கருத்துக்கள், விதிகள் நமது பொதுப் புரிதலுக்கு (common sense) எதிராக இருக்கின்றன. 1910-ல் உருப்பெறத் தொடங்கிய இக்கோட்பாடு 1930-களில ஓரளவு முழுமையடைந்தது. இதுவரை 20-க்கும் மேற்பட்ட நோபல் பரிசுகளை இத்துறையைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பெற்றுள்ளனர்.
அந்த வரிசையில் 2022 ஆம் ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு குவாண்டம் இயற்பியல் சார்ந்த “குவாண்டம் பிணைப்பு (quantum entanglement)” குறித்த ஆராய்ச்சிக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளாசர் (John Clauser), பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆலன் அஸ்பே (Alain Aspect) மற்றும் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த ஆண்டன் செய்லிங்கர் (Anton Zeilinger) ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாராய்ச்சியானது வெறுமனே கோட்பாட்டு ரீதியான ஆராய்ச்சியாக மட்டுமல்லாமல் நடைமுறையில் நிறைய பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
குவாண்டம் இயற்பியல் என்றால் என்ன?
குவாண்டம் பிணைப்பை பற்றி அறிந்து கொள்வதற்கு முன் குவாண்டம் இயற்பியல் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வது அவசியம்.
ஒரு பந்தை நாம் தூக்கி எறிந்தால் அது உயர பறந்து எந்த இடத்தில் விழும், எந்த நேரத்தில் விழும் என நியூட்டன் விதிகளை கொண்டு கண்டுபிடிக்கலாம். அதே போல் கோள்களின் இயக்கங்களையும் நியூட்டன் விதிகள் மூலம் விளக்க முடியும். பொதுவாக கூற வேண்டுமென்றால் நாம் வாழும் பிரபஞ்சத்தில் கண்ணால் காணக்கூடிய பெரிய பொருட்களின் இயக்கத்தை நியூட்டனின் விதிகள் தெளிவாக விளக்குகிறது.
17-ஆம் நூற்றாண்டில் கலீலியோ, கெப்ளர் மற்றும் கோபர் நிகஸ் ஆகியோரது கண்டுபிடிப்புகளை ஒன்றிணைத்து நியூட்டன் தனது இயக்கவியல் விதிகளை உருவாக்கினார். இதைத்தான் நாம் நியூட்டனின் விதிகள் என்றும் கூறுகிறோம்.
17ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை “நியூட்டன் விதிகள் என்றென்றைக்கும் மாறாதது; உலகில் உள்ள அனைத்து பொருட்களின் இயக்கத்தையும் இந்த விதிகளை கொண்டே விளக்கி விட முடியும்” என்று அறிவியல் அறிஞர்கள் நினைத்து வந்தனர்.
1890-களின் இறுதியில் ஜே.ஜே தாம்சன் எலக்ட்ரானைக் கண்டுபிடித்தார். 1900-களில் ரூதர்போர்டு அணுக்கோட்பாட்டை உருவாக்கினார். அதன் படி அணுவின் மையப் பகுதியில் உட்கருவும், அதனை சுற்றி எலக்ட்ரான்கள் சுற்றி வருகிறது என்றும் கூறினார். ஆனால் பல்வேறு ஆய்வு முடிவுகளை, இந்த ரூதர்போர்டு அணு மாதிரி அல்லது நியூட்டன் விதிகள் மூலம் விளக்க முடியவில்லை. எனவே அணுக்கள், அதனுள் இருக்கும் எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியுட்ரான்களின் இயக்கத்தை விளக்க புதிய இயற்பியல் கோட்பாடு தேவைப்பட்டது.
இந்நேரத்தில் எர்வின் ஸ்ரோடிங்கர், ஹெய்சென்பெர்க், மேக்ஸ் பார்ன், நீல்ஸ் போர், டிராக் போன்ற பல அறிஞர்கள் சேர்ந்து உருவாக்கியது தான் இந்த குவாண்டம் இயற்பியல் கோட்பாடு. இக்கோட்பாடு எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியுட்ரான்கள், அணுக்கள், மூலக்கூறுகள் ஆகியவைகளின் இயக்கத்தை தெளிவாக விளக்குகிறது.
எதிர்கால இயக்கத்தை கணிக்க முடியாத கோட்பாடு
குவாண்டம் கோட்பாடானது நியூட்டன் விதிகளிலிருந்து பல்வேறு வகையில் வேறுபட்டது. நியூட்டனின் விதிகளானது ஒரு பொருளின் நிகழ்கால இயக்கம் பற்றி தெரிந்தால் அப்பொருளின் எதிர்கால இயக்கத்தை துல்லியமாக கணிக்கக்கூடியது. அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பொருள் எந்த இடத்தில் இருக்கிறது, என்ன திசைவேகத்தில் செல்கிறது, அதன் மீது செயல்படும் விசை என்ன என்பது தெரியுமென்றால், இன்னும் நூறு வருடம் கழித்து கூட அப்பொருளின் இருப்பிடம் மற்றும் திசைவேகம் ஆகியவற்றை நியூட்டன் விதிகளால் கணிக்க முடியும். இந்தத் தன்மையை இயற்பியலில் ‘அறுதியீட்டுவாதம்’ (determinism) என்கிறோம். ஒரு பொருளின் எதிர்கால இயக்கத்தை துல்லியமாக கணிக்கக்கூடியது இந்தக் கோட்பாடு (deterministic theory). இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு: நியூட்டனின் விதிகளைப் பயன்படுத்தித்தான் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் நாட்களைக் நாம் கணிக்கின்றோம்.
ஆனால் குவாண்டம் இயற்பியலை பொருத்தவரையில் ஒரு எலக்ட்ரான் ஒரு குறிப்பிட்ட கணத்தில் எங்கிருக்கிறது என்று தெரிந்தால் கூட அடுத்த கணத்தில் அதே எலக்ட்ரான் எங்கிருக்கும் என்று சொல்ல முடியாது. மாறாக அடுத்த கணத்தில் இங்கிருப்பதற்கோ அல்லது அங்கிருப்பதற்கோ சாத்தியம் என்ன அல்லது நிகழ்தகவு என்ன என்று மட்டுமே சொல்லும். எடுத்துக்காட்டாக ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டி விட்டால் தலை விழுமா அல்லது பூ விழுமா என்று முன்பே சொல்ல முடியாது. தலை விழுவதற்கு அல்லது பூ விழுவதற்கு என்ன நிகழ்தகவு என்று மட்டுமே கூற முடியும். அதே போல் தான் குவாண்டம் இயற்பியலும். ஒரு நிகழ்வு நடப்பதற்கு என்ன நிகழ்தகவு என்று மட்டுமே கூறும்.
அடிப்படையில் குவாண்டம் இயற்பியல் நிகழ்தகவை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு. ஸ்ரோடிங்கர் சமன்பாடு அல்லது டிராக் சமன்பாடுதான் குவாண்டம் இயற்பியலில் அடிப்படை. நியூட்டன் சமன்பாடுகளை கணிதரீதியாக தீர்ப்பதன் மூலம் நாம் கண்ணால் காணும் பொருட்களின் இயக்கத்தை புரிந்து கொள்வது போல் ஸ்ரோடிங்கர் சமன்பாடு அல்லது டிராக் சமன்பாடுகளை கணித ரீதியாக தீர்ப்பதன் மூலமே நாம் அணுக்களின் உலகத்தை புரிந்து கொள்ள முடியும்.
மேலே சொன்ன ஒரு ரூபாய் நாணயம் சுண்டி விடப்படும் எடுத்துக்காட்டில் நம்மால் முன் கூட்டியே தலை விழுமா அல்லது பூ விழுமா என கூற முடியாததற்கு காரணம் அந்த ஒரு ரூபாய் நாணயத்தின் இயக்கத்தை விளக்கக்கூடிய நியூட்டன் சமன்பாடுகளை நடைமுறையில் கணித ரீதியாக தீர்ப்பது கடினம். ஆனால் நாம் சிறந்த கேமராக்களை வைத்து ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டி விட்ட பிறகு அது ஒவ்வொரு நொடியும் எப்படி மேலே செல்கிறது, காற்று அதன் இயக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது, புவி ஈர்ப்பு விசை எப்படி அதன் மீது செயல்படுகிறது என்று தெரிந்து கொண்டால் கண்டிப்பாக நியூட்டன் விதிகளை பயன்படுத்தி பூ விழுமா அல்லது தலை விழுமா என்று முன்னமே கோட்பாட்டு ரீதியாக கூற முடியும். ஆனால் நடைமுறையில் இது கொஞ்சம் கடினம் அல்லது நேரம் பிடிக்கும் வேலை என்பதால் நமது வசதிக்காக நிகழ்தகவை பயன்படுத்தி தலை விழுவதற்கு 50% என்றும் பூ விழுவதற்கு 50% என்றும் கூறுகிறோம்.
ஆனால் குவாண்டம் இயற்பியலில் நிகழ்தகவை பயன்படுத்துவதற்கான காரணம் வேறு. நமது இயலாமையோ அல்லது கணித ரீதியாக கடினமாக இருப்பதோ அல்லது தொழில் நுட்ப ரீதியாக சிறந்த கருவிகள் இல்லாததோ அல்ல. அடிப்படையிலேயே அணுக்களின் உலகம் சீரற்ற தன்மையில் (random nature) இயங்குகிறது. மிகச்சிறந்த கருவிகளை வைத்து நாம் எலக்ட்ரானின் இயக்கத்தை கண்காணித்தால் கூட அடுத்த நொடி எது எங்கே செல்லும் என்று நம்மால் கூற முடியாது. எனவே தான் இங்கு நிகழ்தகவு பயன்படுத்தப்படுகிறது. இதுதான் ஐன்ஸ்டீனுக்கு மிக நெருடலாக இருந்தது. அதெப்படி கோட்பாட்டு ரீதியாகக்கூட அணுக்களின் இயக்கத்தை கணிக்கமுடியாதா? அறிவியல் கோட்பாடு என்பது ஒரு பொருளின் நிகழ்கால இயக்கம் பற்றி தெரிந்தால் எதிர்காலத்தை கணிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இது நடக்கவும் சாத்தியம், அது நடக்கவும் சாத்தியம் எனக்கூறினால் அது சரியான அறிவியல் கோட்பாடே அல்ல என்று அவர் கருதினார். “கடவுள் ஒன்றும் தாயக்கட்டை விளையாடுபவரல்ல (God does not play dice)” என்பது குவாண்டம் இயற்பியல் குறித்த அவரது பிரபலமான கூற்று.
ஹைசன்பெர்க் தத்துவம்
குவாண்டம் இயற்பியலின் அடுத்த வினோதத்தன்மை ஒரே நேரத்தில் எலக்ட்ரானின் இருப்பிடத்தையும், அதன் திசைவேகத்தையும் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியாது என்று கூறுகிறது. எலக்ட்ரான் எங்கிருக்கிறது என்று துல்லியமாக தெரிந்தால் அதன் திசைவேகத்தை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியாது. ஒருவேளை எலக்ட்ரானின் திசைவேகம் துல்லியமாக தெரிந்தால் அதன் இருப்பிடம் எங்கு இருக்கிறது என்று துல்லியமாக தெரிந்து கொள்ள முடியாது. குவாண்டம் இயற்பியலில் இதை ஹைசன்பர்க் தத்துவம் என்கிறோம். இங்கு “துல்லியமாக” என்ற சொல்லை நாம் கவனிக்க வேண்டும். ஒரே நேரத்தில் எலக்ட்ரானின் இருப்பிடத்தையும், திசைவேகத்தையும் நாம் துல்லியமாகத்தான் தெரிந்து கொள்ள முடியாதே தவிர நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது கொஞ்சம் பிழையோடுதான் தெரிந்து கொள்ள முடியும். அதே போல் ஒரு குவாண்டம் துகளின் ஆற்றலையும், அது எந்த நேரத்தில் அந்த ஆற்றலை பெற்றிருக்கிறது என்பதனையும் துல்லியமாக கூற முடியாது. கொஞ்சம் பிழையோடுதான் தெரிந்து கொள்ள முடியும்.
இதற்கு காரணம் நமது இயலாமையாலோ அல்லது மேம்பட்ட அளவிடும் சாதனங்கள் இல்லாததாலோ அல்ல. அதுதான் இல்லை. இயற்கையிலேயே அணுக்களின் உலகத்தில் சில பண்புகளின் மதிப்புகளை ஒரே நேரத்தில் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியாது என்று குவாண்டம் இயற்பியல் கூறுகிறது. மற்றபடி ஒரே நேரத்தில் ஒரே ஒரு பண்பின் மதிப்பை துல்லியமாக தெரிந்து கொள்வதில் அதாவது அளவிடுவதில் எந்த சிக்கலும் இல்லை.
இது எலக்ட்ரானுக்கு மட்டுமல்ல புரோட்டான்கள், நியுட்ரான்கள், அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் என அனைத்துக்கும் பொருந்தும். ஆனால் நியூட்டனின் கோட்பாட்டில் அப்படி இல்லை. இந்த நொடியில் நிலா எங்கு இருக்கிறது, என்ன திசை வேகத்தில் செல்கிறது, என்ன ஆற்றல் பெற்றிருக்கிறது என அனைத்து இயற்பியல் பண்புகளையும் என்று துல்லியமாகக் கூற முடியும். நடைமுறையில் கடினமாக இருந்தால் கூட குறைந்தபட்சம் கோட்பாட்டு ரீதியாக நியூட்டன் விதிகளால் இதைக் கூற முடியும். ஆனால் குவாண்டம் இயற்பியல் கோட்பாட்டு ரீதியாகவே சில பண்புகளின் மதிப்புகளை துல்லியமாக ஒரே நேரத்தில் தெரிந்து கொள்ள முடியாது முடியாது எனக் கூறுகிறது.
துகள் மற்றும் அலை இரட்டைப்பண்பு
குவாண்டம் இயற்பியலில் அடுத்த வினோதத்தன்மை: அணுக்கள், எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், மூலக்கூறுகள் சில நேரங்களில் துகள் பண்பை வெளிப்படுத்தும். சில நேரங்களில் அலைப் பண்பை வெளிப்படுத்தும். இதை டிப்ராய் என்பவர் முதன்முதலில் கோட்பாட்டு ரீதியாக கூறினார். பின்னாளில் பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டது.
ஆனால் நாம் கண்ணால் காணும் பொருட்கள் துகள் பண்பை மட்டுமே கொண்டிருக்கிறது. நியூட்டனின் கோட்பாடும் இதைத்தான் கூறுகிறது. எலக்ட்ரானின் அலைப்பண்பை அடிப்படையாக வைத்துத்தான் எலக்ட்ரான் நுண்ணோக்கி செயல்படுகிறது. குவாண்டம் துகள்களின் இந்த இரட்டைப்பண்பு தொழில்நுட்ப உலகில் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
ரியலிசம் என்ற எதார்த்தவாதம்
குவாண்டம் இயற்பியலின் அடுத்த வினோதத்தன்மை கொஞ்சம் ஏற்றுக்கொள்ள கடினமானது. ஆனால் இந்த வருட இயற்பியல் நோபல் பரிசுக்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
ஒரு பொருளுக்கு பல்வேறு இயற்பியல் பண்புகள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கணத்தில் அதன் இருப்பிடம், திசை வேகம், ஆற்றல், உந்தம், கோண உந்தம் என பல்வேறு பண்புகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு பந்தை நாம் உயரே தூக்கி எறிவோம். ஒவ்வொரு நொடியும் அதன் நிலை அல்லது இருப்பிடம் மாறிக்கொண்டே இருக்கும். அதாவது ஒவ்வொரு நொடியும் அதன் எண்மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும். வேகத்தின் மதிப்பு முதலில் குறைந்து ஒரு குறிப்பிட்ட உயரத்தில் சுழியாகி பின் கீழ்நோக்கி விழும்போது அதிகரிக்கும். போலவே, அதன் இயக்க ஆற்றலின் மதிப்பும் தொடர்ந்து மாறுகிறது.
பந்தின் இந்த இயற்பியல் பண்புகளின் மதிப்புகளை ஒரு குறிப்பிட்ட கணத்தில் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்குரிய அளவிடும் கருவியை வைத்து அளவிட்டால் அந்த பண்பின் மதிப்பு தெரிந்து விடும். அல்லது நியூட்டன் சமன்பாடுகளை கணித ரீதியாக தீர்ப்பதன் மூலம் அப்பண்புகளின் மதிப்புகளை கணக்கிடலாம்.
எடுத்துக்காட்டாக பைக்கில் செல்லும் ஒருவரின் வேகத்தை கண்டறிய டிராபிக் போலீஸ்காரர் ரேடார் கருவியைப் பயன்படுத்துகிறார். கருவியை பைக்கை நோக்கி பிடித்தால் போதும். ரேடாரிலிருந்து செல்லும் ரேடியோ அலைகள் பைக்கின் மீது பட்டு எதிரொலிக்கின்றன. அப்படி எதிரொலிக்கப்பட்ட ரேடியோ அலைகளை மீண்டும் அக்கருவியில் வந்து மோதும்போது, பைக் செல்லும் வேகத்தை அளவிடலாம். இங்கு போலீஸ்காரர் அளவிட்டாலும் அல்லது அளவிடவில்லை என்றாலும், பைக்கின் வேகம் அந்த நொடியில் ஒரு குறிப்பிட்ட மதிப்பை பெற்றுள்ளது. அளவிடுதல் என்பதனைப் பொருத்து அப்பண்பின் மதிப்பு அமைவதில்லை.
ஒரு இயற்பியல் பண்பினை அளவிட்டாலும் அல்லது அளவிடாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட கணத்தில் அதற்கு ஒரு குறிப்பிட்ட எண்மதிப்பு இருக்கிறது. பொது அறிவுள்ள அனைவரும் இதை ஏற்றுக் கொள்வர். இந்தத் தன்மையை இயற்பியலில் “ரியலிசம் (realism) அல்லது எதார்த்த வாதம்” என்று அழைக்கிறோம்.
இந்த இருத்தலியல் கருத்தின்படி, ஒரு பண்பிற்கான எண்மதிப்பு சுழியாக (may be zero) இருக்கலாம். அல்லது நேர்க்குறி மதிப்பாக இருக்கலாம் (may be positive value). அல்லது எதிர்க்குறி மதிப்பாக இருக்கலாம் (may be negative value). ஆனால் குவாண்டம் இயற்பியல் இந்த ரியலிசம் அல்லது எதார்த்த வாதத்தை மறுக்கிறது.
குவாண்டம் இயற்பியல்படி அணுக்களின் உலகத்தில் இருக்கும் பொருளின் பண்பை நாம் அளவிடும் வரை அப்பண்புக்கான எண்மதிப்பு (value of the property) என்ற ஒன்று இல்லை. அளவிடும்போதுதான் அப்பண்புக்கான எண்மதிப்பு உருவாகிறது. அதாவது அளவிடும் செயல்தான் அப்பண்புக்கான மதிப்பை உருவாக்குகிறது.
எலக்ட்ரானின் திசைவேகத்தை நாம் அளவிடும் கருவியை வைத்து அளவிடும் போது மட்டுமே அந்தப்பண்புக்கான எண்மதிப்பு ஒன்று உருவாகிறது. அதுவரை அப்பண்புக்கான மதிப்பு என்ற ஒன்று இல்லை. எலக்ட்ரானின் இருப்பிடத்தை நாம் அளவிடும் போதுதான் அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக காட்டுகிறது. அதற்கு முன்புவரை அது எங்கிருந்தது என்ற கேள்விக்கு அர்த்தமில்லை. அதாவது அது எங்குமில்லை.
இது நியூட்டனின் இயற்பியலுக்கு நேர்மாறாக இருக்கிறது. அதுவரை ரியலிசம் அல்லது எதார்த்த வாதம் என்பது அறிவியல் கோட்பாட்டின் அடிப்படைத்தன்மை என்று அனைவரும் நம்பி வந்தனர். ஆனால் குவாண்டம் இயற்பியல் இந்த தத்துவப் பார்வையை மறுக்கிறது.
குவாண்டம் இயற்பியலின் இந்தக்கருத்து நாம் இதுவரை நம்பி வந்த தர்க்கத்திற்கு எதிராக இருக்கிறது. குவாண்டம் இயற்பியல் உருவான காலத்திலும் இந்த கருத்து மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இதை மிகக்கடுமையாக எதிர்த்தார். அவர் வேடிக்கையாக “நாம் வானத்தை பார்க்கிறோமோ இல்லையோ நிலா வானத்தில் ஏதோ ஒரு இடத்தில் இருந்துதானே ஆக வேண்டும்” என்று கேட்டார்.
ஆனால் குவாண்டம் இயற்பியல்படி “நாம் கண்ணாலோ அல்லது தொலைநோக்கியாலோ வானத்தை நோக்கி பார்க்கும் போது மட்டுமே நிலா ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாகக் தெரிகிறது. நாம் பார்க்கும் வரை நிலா வானத்தில் எங்கும் இல்லை”. இதைக் கேட்பதற்கு கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக தெரியலாம். ஆனால் அதுதான் குவாண்டம் இயற்பியல்.
இப்படி பல்வேறு வகைகளில் இக்கோட்பாடு முன்னுக்குப்பின் முரணாக கூறினாலும் நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது. இன்று நாம் வைத்திருக்கும் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் அனைத்தும் குவாண்டம் இயற்பியலின் பங்களிப்பாகும்.
ஏன் குவாண்டம் இயற்பியலின் பல்வேறு கருத்துக்கள் நமக்கு விநோதமாக இருக்கிறது அல்லது பொது அறிவிற்கு (common sense) எதிராகத் தோன்றுகிறது?
மனித இனமானது 3000 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொருட்களோடு உறவாடி நாகரீக அறிவு அல்லது பொதுப்புரிதல் அல்லது தர்க்க அறிவு என்ற ஒன்றை உருவாக்கி இருக்கிறது. நீர், நிலம் கடல், காற்று, மழை, காடு, மலை, நிலா, சூரியன், விண்மீன்கள் என கண்ணால் காணக்கூடிய, தொட்டு உணரக்கூடிய பொருட்களோடு உறவாடி அதன் பண்புகளை, இயக்கத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக பார்த்துப் பார்த்து இந்த தர்க்க அறிவானது மனித இனத்திற்கு உருவாகி இருக்கிறது. இந்த தர்க்க அறிவை வைத்து அணுக்களின் இயக்கத்தை, அணுக்களின் உலகத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.
ஆனால் அடிப்படையிலேயே நமது மூளையில் இருக்கும் இந்த தர்க்க அறிவு அணுக்களோடோ எலக்ட்ரான்களோடோ பழகி உருவானதல்ல.. எனவே அணுக்களோ, எலக்ட்ரானோ, புரோட்டானோ நமது தர்க்க அறிவுக்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்று எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்? இதனால்தான் குவாண்டம் கோட்பாடு நமக்கு பல வகைகளில் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றது.
இ.பி.ஆர் முரண்பாடு (EPR Paradox)
குவாண்டம் கோட்பாடு ரியலிசத்திற்கு எதிராக இருப்பதால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இது ஒரு முழுமையான அறிவியல் கோட்பாடு என்று ஏற்றுக்கொள்ள மறுத்தார். தனது கருத்துக்கு வலு சேர்க்க போடோல்ஸ்கி (Podolsky) மற்றும் ரோசன் (Rosen) ஆகியோருடன் ஒன்று சேர்ந்து கூட்டாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை 1935இல் வெளியிட்டார்.
இதை ஆங்கிலத்தில் Einstein-Podolsky-Rosen Paradox சுருக்கமாக EPR Paradox என்று அழைக்கப்படுகிறது. இந்த வருட நோபல் பரிசின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இ.பி.ஆர். ஆராய்ச்சிக்கட்டுரையின் சாராம்சத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
குவாண்டம் பிணைப்பு மற்றும் எலக்ட்ரான் ஸ்பின்
குவாண்டம் துகள்களின் (அணுக்கள், எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியுட்ரான்கள், மூலக்கூறுகள்) இயக்கம் பற்றிய நிகழ்தகவை விளக்குவதற்கு அலைச்சார்பு (wave function) என்ற கணிதவியல் மாறி (variable) பயன்படுத்தப்படுகிறது. இந்த அலைச்சார்பின் மதிப்புகளை பெற நாம் ஸ்ரோடிங்கர் சமன்பாட்டை அல்லது டிராக் சமன்பாட்டை தீர்வு காண வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குவாண்டம் துகளின் ஒரு குறிப்பிட்ட இயற்பியல் பண்பின் மதிப்பை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் அலைச்சார்பைப் பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட மதிப்பை பெற என்ன நிகழ்தகவு என்று கண்டறிய முடியும். எளிதாக புரிந்து கொள்ள எலக்ட்ரானை எடுத்துக்கொள்வோம். பொதுவாக ஒரு எலக்ட்ரானின் நிலையைக் குறிப்பிட ஒரு அலைச்சார்பு தேவை. இரு எலக்ட்ரான்களின் நிலையைக் குறிக்க இரண்டு அலைச்சார்புகள் தேவை.
ஆனால் ஒரு சில நேரங்களில் இரண்டு எலக்ட்ரான்கள் ஒரு விதமான பிணைப்பில் இருந்தால் இரண்டின் நிலையை விளக்க ஒரே ஒரு அலைச் சார்பு மட்டுமே போதும். இந்த பிணைப்பு “குவாண்டம் பிணைப்பு (Quantum entanglement)” என்றழைக்கப்படுகிறது. பிணைப்பு என்றதும் இரு எலக்ட்ரான்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கின்றது என்று அர்த்தம் அல்ல. இங்கே குவாண்டம் பிணைப்பு என்பது இரு எலக்ட்ரான்களின் பண்புகளின் பிணைப்பு.
எலக்ட்ரான்களுக்கு நிறை, மின்னூட்டம் போன்ற அடிப்படை உள்ளார்ந்த பண்புகள் (intrinsic properties) இருக்கின்றன. அதோடு “ஸ்பின் (spin)” என்ற உள்ளார்ந்த கோண உந்தப்பண்பும் (intrinsic angular momentum) எலக்ட்ரான்களுக்கு இருக்கிறது. இப்பண்பு 1930களில் முதன்முதலாக கண்டறியப்பட்டது. நிறை, மின்னூட்டம் போன்ற பண்புகள் எண் அளவுகள் மட்டுமே. அதாவது இப்பண்புகளை குறிக்க கணித ரீதியாக எண் மட்டும் போதுமானது. ஆனால் இந்த “ஸ்பின்” பண்பு ஒரு திசை அளவு ஆகும். எண் மற்றும் திசை இரண்டுமே தேவை. ஸ்பின் திசையை அளக்க நாம் காந்தபுலத்தை பயன்படுத்த வேண்டும்.
ஒரு ரூபாய் நாணயத்துக்கு பூ, தலை என்ற இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளது போல் எலக்ட்ரானின் ஸ்பின் பண்புக்கு இரண்டு சாத்தியமான திசைகள் உள்ளது. எடுத்துக்காட்டாக காந்த புலத்தை மேல் நோக்கிய திசையில் வைத்து எலக்ட்ரானை இந்த காந்தப்புல பகுதியில் செலுத்தினால் அதன் ஸ்பின் திசையானது காந்தபுலத்திசைக்கு இணையாக மேல் நோக்கி இருக்கும் அல்லது காந்தப்புலத்திசைக்கு எதிர்த்திசையில் கீழ்நோக்கி இருக்கும். இந்த இரண்டு சாத்தியங்கள்தான்.
ஒரு வேளை காந்தபுலத்தை வலப்புற திசையில் செலுத்தினால் எலக்ட்ரானின் ஸ்பின் திசை வலப்புறமாக இருக்கும் அல்லது இடப்புறமாக இருக்கும். எப்போதும் எலக்ட்ரானின் ஸ்பின் திசையானது நாம் காந்த புலத்தை எந்த திசையில் வைக்கிறோமோ அத்திசைக்கு இணைதிசையில் இருக்கும். அல்லது அதன் எதிர்த்திசையில் இருக்கும்.
நாம் ஏற்கனவே பார்த்தது போல் குவாண்டம் இயற்பியல் எலக்ட்ரானின் ஸ்பின் திசை காந்தபுலத்தின் திசைக்கு இணையான திசையில் இருக்குமா அல்லது அதன் எதிர்த்திசையில் இருக்குமா என்று முன்கூட்டியே கூறாது. அதாவது அந்த கேள்வியே குவாண்டம் இயற்பியல் படி அர்த்தமற்றது. மாறாக நாம் காந்தபுலத்தை ஒரு குறிப்பிட்ட திசையில் வைத்து எலக்ட்ரானின் ஸ்பின் திசையை அளவிட்டால், காந்தபுலத்திற்கு இணையான திசையில் ஸ்பின் இருப்பதற்கு என்ன நிகழ்தகவு அல்லது அதற்கு எதிர்த்திசையில் ஸ்பின் இருப்பதற்கு என்ன நிகழ்தகவு என்று மட்டுமே கூறும்.
இப்போது குவாண்டம் பிணைப்பில் உள்ள இரு எலக்ட்ரான்களை எடுத்துக் கொள்வோம். அதில் ஒரு எலக்ட்ரானை பூமியிலும், இன்னொரு எலக்ட்ரானை வியாழன் கிரகத்திலும் வைத்துள்ளதாக கருதுவோம். இப்போது பூமியில் உள்ள எலக்ட்ரானின் ஸ்பின் திசையை அளக்கும்போது அது மேல் நோக்கி இருப்பதாகக்காட்டினால், அதே நொடியில் வியாழன் கோளில் உள்ள எலக்ட்ரானின் ஸ்பின் திசையானது கண்டிப்பாக கீழ்நோக்கித்தான் இருக்கும். ஒரு வேளை பூமியில் உள்ள எலக்ட்ரானின் ஸ்பின் திசை கீழ் நோக்கி இருப்பதாக நாம் கண்டறிந்தால் அதே நொடியில் வியாழன் கோளில் இருக்கும் இன்னொரு எலக்ட்ரானின் ஸ்பின் திசை மேல் நோக்கித்தான் இருக்கும். இதுதான் குவாண்டம் பிணைப்பு. அதாவது பண்புகளின் பிணைப்பு.
குவாண்டம் பிணைப்பிலுள்ள இரு எலக்ட்ரான்களில் ஒரு எலக்ட்ரானின் ஸ்பின் திசை தெரிந்தால் இன்னொரு எலக்ட்ரானின் ஸ்பின் திசையை நாம் அளக்காமலேயே தெரிந்து கொள்ள முடியும். அது எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சரி.
ஆனால் இங்கேதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.
பூமியில் இருக்கும் எலக்ட்ரானின் ஸ்பின் திசையை நாம் அளவிடும் கருவியை வைத்து கண்டுபிடிக்கும் போது நமக்கு தெரிய வரும் திசை எப்படி வியாழன் கிரகத்தில் உள்ள எலக்ட்ரானுக்கு அதே நொடியில் எப்படி தெரிய வருகிறது?
ஏனென்றால் ஐன்ஸ்டீன் சார்பியல் தத்துவத்தின்படி எந்த ஒரு தகவலும் ஒளியின் வேகத்தை தாண்டி பயணிக்க முடியாது. பூமியின் இருக்கும் எலக்ட்ரானின் ஸ்பின் திசை குறித்த தகவல் ஒளியின் வேகத்தில் பரவினால் கூட சார்பியல் கோட்பாடுபடி வியாழன் கோளை அடைய குறைந்தபட்சம் சில நொடிகளாவது ஆகும். ஆனால் வியாழன் கிரகத்திலுள்ள எலக்ட்ரான் பூமியின் உள்ள எலக்ட்ரானின் ஸ்பின் திசையை நாம் அளக்கும்போது என்ன திசை காட்டியது என்று அதே நொடியே தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்கேற்றார்போல் தனது ஸ்பின் திசையை மாற்றிக்கொள்ள முடியும்.
இது ஐன்ஸ்டீன் எழுப்பிய முதல் கேள்வி. ஏனென்றால் இந்த உடனடி தகவல் பரிமாற்றம் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டின் படி சாத்தியமே இல்லை.
அவர் எழுப்பிய இரண்டாவது கேள்வி பூமியில் இருக்கும் எலக்ட்ரானின் ஸ்பின் திசையை நாம் அளவிடுவதற்கு முன் அது எந்த திசையில் இருந்தது என்ற கேள்விக்கு குவாண்டம் இயற்பியல் சொன்ன பதில் அவருக்கு இன்னும் அதிருப்தியை உண்டாக்கியது.
குவாண்டம் இயற்பியல்படி ஸ்பின் திசையை அளவிடுவற்கு முன் எலக்ட்ரான் ஸ்பின் பண்பானது மேல் நோக்கியும் இருக்கும், கீழ் நோக்கியும் இருக்கும். அதாவது இரண்டும் சேர்ந்த கலவை. அதெப்படி சாத்தியம்? ஒன்று மேல் நோக்கி இருக்க வேண்டும் அல்லது கீழ் நோக்கி இருக்க வேண்டும். மனிதன் ஒன்று உயிரோடு இருக்கலாம் அல்லது இறந்து விடலாம். ஆனால் ஒரே நேரத்தில் உயிரோடும், இறந்தும் இருக்க முடியாதல்லவா!! ஒரே நேரத்தில் ஏதாவது ஒன்றுதானே இருக்க முடியும். நமது காமன் சென்சும் மிக ஆழமாக இந்த கருத்தை நம்புகிறது. ஆனால் குவாண்டம் உலகம் நமது காமன் சென்ஸ் படி நடக்க எந்த தேவையும் இல்லையல்லவா. ஒரு தடவை நீல்ஸ் போர் இவ்வாறு கூறினார் “யாரேனும் குவாண்டம் இயற்பியலை படிக்கும்போது முதலில் அதிர்ச்சியடையவில்லை என்றால் ஒரு வேளை அவருக்கு குவாண்டம் இயற்பியல் புரியாமல் இருக்கலாம்”
ஐன்ஸ்டீன் கண்ணால் காணக்கூடிய பொருளாக இருந்தாலும் சரி, அணுக்கள் உலகமாக இருந்தாலும் சரி எல்லாமும் எதார்த்தவாத பண்பை கொண்டிருக்க வேண்டும். நாம் பார்க்கிறோமோ இல்லையோ, அளவிடுகிறோமோ இல்லையோ ஒரு பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பண்புக்கான துல்லிய மதிப்பு ஒன்று “இருந்தாக வேண்டும்” என்று ஆழமாக நம்பினார். பொருளுக்கான புறவய எதார்த்தம் (objective reality) நம்மை சார்ந்து இருக்க முடியாது. அது ஒவ்வொரு பொருளுக்கான உள்ளார்ந்த பண்பு. ஆனால் குவாண்டம் இயற்பியல் புறவய எதார்த்தம் என்ற ஒன்று இல்லை, நாம் ஒரு குவாண்டம் துகளின் பண்பை அளவிடும்போதுதான் அதற்கு ஒரு புறவய எதார்த்தத்தை உருவாக்குகிறோம் (observing act creates the reality) என்று கூறுகிறது. இதை ஐன்ஸ்டீனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த சிக்கலை தீர்க்க ஐன்ஸ்டீன் இன்னொரு மாற்று கருத்தை முன் வைத்தார். அதாவது எலக்ட்ரான்கள் குவாண்டம் பிணைப்பில் உருவாகும்போது அந்த எலக்ட்ரான்களின் ஸ்பின் திசை தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இப்போது இந்த இரு எலக்ட்ரான்களில் ஒன்றை பூமியிலும் இன்னொன்றை வியாழன் கிரகத்திலும் வைத்துவிட்டு ஒரு குறிப்பிட்ட கணத்தில் பூமியில் இருக்கும் எலக்ட்ரானின் ஸ்பின் திசையை அளவிட்டால் என்ன திசை காட்ட வேண்டும் என்று எலக்ட்ரானுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. அதே போல் வியாழன் கோளில் இருக்கும் எலக்ட்ரானிலும் இந்த தகவல் இருக்கிறது. இந்த தகவல் படி தான் இவ்விரு எலக்ட்ரான்களும் தனது ஸ்பின் திசையை ஒன்றுக்கேற்றார் போல் இன்னொன்று மாற்றிக்காட்டுகிறது என்று ஐன்ஸ்டீன் கூறினார்.
எந்த நேரத்தில் எந்த ஸ்பின் திசையை காட்ட வேண்டும் என்ற தகவல் எலக்ட்ரானுக்குள் மறைந்திருக்கிறது. இந்த தகவலை குவாண்டம் கோட்பாட்டால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றார். எனவே குவாண்டம் இயற்பியல் ஒரு முழுமை பெறாத கோட்பாடு என்று இ.பி.ஆர். கட்டுரையில் கூறினார்.
ஐன்ஸ்டீனின் இந்த புதிய கருத்து “மறைமாறிக் கோட்பாடு (hidden variable theory)” என்றழைக்கப்படுகிறது. இந்தக் கோட்பாட்டின் படி ஒவ்வொரு பொருளுக்கும் புறவய எதார்த்தம் என்ற ஒன்று உண்டு. ஆனால் ஒவ்வொரு பொருளுக்கும் இருக்கும் பண்புகளின் மதிப்பு அப்பொருளுக்கென்று உள்ள மறைமாறியை (hidden variable) சார்ந்து உள்ளது. இந்த மறைமாறியை குவாண்டம் கோட்பாடால் கணித ரீதியாக கண்டறிய முடியவில்லை என்பது அவரது நிலைப்பாடு.
இ.பி.ஆர். கட்டுரையை ஐன்ஸ்டீன் வெளியிட்ட போது இயற்பியல் உலகில் பெரும் அதிர்வலைகளை அது ஏற்படுத்தியது. நாளிதழ்கள் கூட “ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியலை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்” என்று எழுதின. கீழே உள்ள படம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் 1935 ஆம் ஆண்டு மே மாதம் 4 தேதி வந்த முதல் பக்கம்.
ஐன்ஸ்டீன் சொல்வது சரியா அல்லது குவாண்டம் இயற்பியல் சொல்வது சரியா என்று எப்படி தெரிந்து கொள்வது? ஆய்வக பரிசோதனைதான் ஒரே வழி. ஆனால் அதிலும் ஒரு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது.
குவாண்டம் இயற்பியல் ஒரு முடிவும், மறைமாறிக் கோட்பாடு இன்னொரு முடிவும் சொன்னால் நாம் ஆய்வக பரிசோதனை செய்து முடிவு எதற்கு சாதகமாக இருக்கிறதோ அந்தக் கோட்பாடுதான் சரி என்று சொல்லி விடலாம். ஆனால் குவாண்டம் இயற்பியலும், மறைமாறிக் கோட்பாடும் ஒரே முடிவைத்தான் இரு வேறு வகைகளில் விளக்குகின்றன. இந்த இரு வேறு விளக்கங்களில் எந்த விளக்கம் சரி என்று எப்படி முடிவெடுப்பது?
கிட்டத்தட்ட இது ஒரு தத்துவார்த்த பிரச்சினையாக தெரிந்ததால் இப்பிரச்சினையை அப்போது யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மாறாக குவாண்டம் இயற்பியலை பயன்படுத்தி நடைமுறை பயன்பாட்டு ஆராய்ச்சிகள் நிறைய நடைபெற்று டிரான்சிஸ்டர், லேசர் போன்ற பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் உருவாக்கப்பட்டன.
பெல் தேற்றம் (Bell’s theorem)
கிட்டத்தட்ட 30 வருடம் கழித்து அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் பெல் என்ற இயற்பியல் அறிஞர் ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியல் குறித்து எழுப்பிய தத்துவார்த்த பிரச்சனை குறித்து தீவிரமாக சிந்தித்தார்.
1964 இல் அவர் குவாண்டம் இயற்பியலின் விளக்கம் சரியா அல்லது ஐன்ஸ்டீன் சொல்லும் விளக்கம் சரியா என்று கண்டுபிடிக்க ஒரு அற்புதமான கணக்கியல் தொடர்பை உருவாக்கினார். இது பெல் சமத்துவமின்மை தொடர்பு (Bell’s inequality) அல்லது பெல் தேற்றம் என்றழைக்கப்படுகிறது.
இந்த தேற்றத்தின் படி குவாண்டம் பிணைப்பில் உள்ள இரு எலக்ட்ரான்களை நாம் பரிசோதனைக்கு உட்படுத்தினால் வரும் எண் இரண்டுக்கும் கீழே இருந்தால் ஐன்ஸ்டீனின் மறைமாறிக் கோட்பாடு சொல்வது சரி. இரண்டுக்கும் மேல் இருந்தால் குவாண்டம் இயற்பியல் சொல்வது சரி. அதாவது பெல் தேற்றத்தை வைத்து அணுக்களின் உலகம் பற்றிய குவாண்டம் இயற்பியலின் விளக்கம் சரியா அல்லது ஐன்ஸ்டீன் சொல்லும் விளக்கம் சரியா என்று முடிவெடுக்க முடியும்.
இப்போது அடுத்த சவால். பெல் தேற்றத்தை பயன்படுத்துவற்கு ஏற்ற ஆய்வக பரிசோதனையை உருவாக்க வேண்டும். இங்குதான் இந்த வருடம் நோபல் பரிசு வாங்கிய மூவரில் ஒருவரான ஜான் கிளாசர் வருகிறார். 1969 இல் கிளாசர், ப்ரீட்மென் மற்றும் அவரது ஆராய்ச்சிக்குழு இணைந்து பெல் தேற்றத்தை பயன்படுத்துவதற்கான புதிய ஆய்வக பரிசோதனையை உருவாக்கினர்.
இந்த ஆய்வில் குவாண்டம் பிணைப்பில் உள்ள இரு எலக்ட்ரான்களுக்கு பதில் குவாண்டம் பிணைப்பில் உள்ள இரு போட்டான்களை அவர்கள் எடுத்துக் கொண்டனர். (ஒளி என்பது போட்டான்கள் எனப்படும் ஆற்றல் துகள்கள் என ஐன்ஸ்டீன் 1905 இல் நிறுவியிருந்தார். நீல நிற ஒளி என்பது நீல போட்டான்களின் தொகுப்பு. சிகப்பு நிற ஒளி என்பது சிகப்பு போட்டான்களின் தொகுப்பு. அகச்சிவப்புக்கதிர்கள் என்பது அகச்சிவப்பு போட்டான்களின் தொகுப்பு) எலக்ட்ரானுக்கு ஸ்பின் என்ற பண்பு இருப்பது போல் போட்டானுக்கு துருவப்பண்பு (polarization) என்ற உள்ளார்ந்த பண்பு இருக்கிறது. இதுவும் திசை அளவு கொண்ட ஒரு பண்பு. எலக்ட்ரானின் ஸ்பின் திசையை கண்டறிய காந்தப்புலம் பயன்படுத்தப்படுவது போல் போட்டானின் துருவ திசையைக் கண்டறிய போலராய்டு என்ற கருவியைப் பயன்படுத்த வேண்டும்.
குவாண்டம் இயற்பியலின் முதல் தத்துவார்த்த வெற்றி
கால்சியம் அணுவை கிளர்ச்சி அடையச் செய்தால், அதிலிருந்து வெளிவரும் போட்டான்கள் குவாண்டம் பிணைப்பில் இருக்கும். கிளாசர், இப்போட்டான்களை எதிரெதிர் திசையில் அனுப்பி அதன் துருவத்திசையை இரு போலராய்டுகளை வைத்து அளவிட்டார்.
இந்த ஆய்வு முடிவுகளை பெல் தேற்றத்தில் பயன்படுத்திய போது வந்த எண் இரண்டுக்கும் மேல் இருந்தது. இது யாரும் எதிர்பாராதது. அப்படி என்றால் குவாண்டம் இயற்பியல் சொல்வது தான் சரியென்றானது.
பின்னாளில் கிளாசர் நகைச்சுவையாக “நான் ஐன்ஸ்டீன் சொல்வதுதான் சரி என நிரூபிக்க முயன்றேன். ஆனால் என்னுடைய பரிசோதனையே ஐன்ஸ்டீனைத் தவறு என்று நிரூபித்து விட்டதே” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். தத்துவார்த்த ரீதியாக குவாண்டம் இயற்பியலுக்கு இது ஒரு மிகப்பெரிய வெற்றி.
ஆனாலும் கிளாசர் பரிசோதனையில் சில ஓட்டைகள் (loop holes) இருந்தது. அது என்னவென்றால் குவாண்டம் பிணைப்பு போட்டான்கள் அதன் மூலத்திலிருந்து வெளிவரும் முன்பே போலராய்டு கருவிகள் குறிப்பிட்ட திசையில் வைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை போட்டான்கள் உருவாகும்போதே தூரத்தில் வைக்கப்பட்டிருந்த போலராய்டுகளின் திசை பற்றிய தகவல் போட்டான்களுக்கு தெரிந்திருந்தால் கூட அந்த திசைக்கு ஏற்ப போட்டான்கள் தனது துருவத்திசையை மாற்றிக் காட்டலாம் அல்லவா. இதை வைத்து குவாண்டம் இயற்பியல் சரி என்று எப்படி முடிவெடுக்க முடியும்?
இக்கருத்தை உடைக்க வேண்டும் என்றால் குவாண்டம் இணைப்பு போட்டான்கள் மூலத்திலிருந்து புறப்பட்ட பிறகு போலராய்டுகளை வந்தடைவதற்குள் போலராய்டுகளின் திசையை மாற்றி அமைக்க வேண்டும். அப்போது கண்டிப்பாக போட்டான்களுக்கு போலராய்டுகளின் திசை முன்கூட்டியே தெரிய வாய்ப்பிருக்காது. ஆனால் போட்டான்கள் வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதால் போலராய்டுகளின் திசையை மிக மிகக்குறுகிய நேரத்தில் மாற்ற வேண்டும். இவ்வளவு குறைந்த நேரத்தில் போலராய்டுகளின் திசையை மாற்றக்கூடிய தொழில்நுட்பம் அப்போது இல்லை.
ஆலன் அஸ்பேவின் திறமை
10 ஆண்டுகளுக்கு கழித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆலன் அஸ்பே இந்த சவாலில் 1982 இல் வெற்றி கொண்டார். அவர் உருவாக்கிய கருவியானது போட்டான்கள் அதன் மூலத்திலிருந்து புறப்பட்டு போலராய்டை வந்தடைவதற்குள் போலராய்டு கருவியின் திசை கன்னாபின்னாவென்று மாற்றி வைத்தது. இதன் மூலம் போட்டான்கள் புறப்படும் போது ஒருவேளை போலராய்டுகளின் திசை அவைகளுக்கு தெரிந்திருந்தால் கூட அப்போட்டான்கள் போலராய்டுக்கு வருவதற்குள் போலராய்டுகளின் திசை மாறிவிடுகிறது.
இந்த தகவல் போட்டானுக்கு செல்ல வேண்டுமென்றால் ஒளியின் வேகத்தை விட அதி வேகத்தில் சென்றாக வேண்டும். அது மறைமாறிக் கோட்பாட்டின்படி சாத்தியமில்லை. இவ்வாறு அஸ்பே செய்த பரிசோதனையின் முடிவுகளும் பெல் தேற்றத்தின்படி இரண்டிற்கும் மேல்தான் வந்தது. குவாண்டம் இயற்பியல் மறுபடியும் வெற்றி பெற்றது.
கிளாசரின் பரிசோதனையில் இருந்த ஓட்டை அஸ்பேயின் பரிசோதனை மூலம் சரி செய்யப்பட்டது. கிளாசர் பரிசோதனையில் இருந்த இன்னொரு குறை அவர் கால்சியம் அணுவை கிளர்ச்சி அடையச் செய்ய ஹைட்ரஜன் ஆர்க் விளக்கை பயன்படுத்தினார். இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் போட்டான்கள் வெளி வராது. குறைவான எண்ணிக்கையுள்ள போட்டான்களை ஆய்வு செய்து நாம் எவ்வாறு ஒரு கோட்பாடு சரியா தவறா என்று முடிவெடுப்பது? என்று அறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.
அஸ்பே இந்த பிரச்சினையை தீர்க்க லேசர் ஒளியை பயன்படுத்தி கால்சியம் அணுவை கிளர்ச்சி அடையச் செய்தார். லேசர் மிக அதிக எண்ணிக்கையிலான போட்டான்களை உருவாக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் கிளாசரின் பரிசோதனையில் உள்ள குறைகளை நீக்கினார்.
ஆண்டன் செய்லிங்கர் பங்களிப்பு
அடுத்த கேள்வி அஸ்பேயின் பரிசோதனையில் கன்னாபின்னாவென்று (random change) போலராய்டு திசையை மாற்றினார் என்று பார்த்தோம் அல்லவா? எப்படி கன்னா பின்னாவென்று மாற்றினார்? இதை கணிதத்தில் ரேண்டம் எண் உருவாக்கம் மூலம் செய்தார்.
ரேண்டம் எண் உருவாக்கத்தில் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு எண் வரும். ஒரு எண்ணுக்கும் அடுத்து வரும் எண்ணுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. இந்த ரேண்டம் எண்களை உருவாக்க ஒரு கணித மென்நிரல் (software program) பயன்படுத்தப்பட்டது. நாம் இந்த மென்நிரல் மாதிரியை கண்டுபிடித்து விட்டால் அடுத்த நொடி என்ன எண் வரும் என்று முன்கூட்டியே சொல்லி விடலாம். ஆனால் அப்படி கண்டுபிடிப்பது எளிதல்ல.
ஆனால் போட்டான்களுக்கு இந்த கணித மாதிரி நிரல் ரகசியம் தெரிந்திருந்தால் ஒவ்வொரு நொடியும் போலராய்டுகளின் திசை எவ்வாறு மாறும் என்ற தகவல் அதனுள் மறைந்திருக்கும். இந்த மறைமாறியின் தகவல்படி போட்டான்கள் துருவ திசையை மாற்றிக்காட்டினால் கூட பெல் தேற்றத்தில் இரண்டுக்கும் மேல் வருவதற்கு வாய்ப்புள்ளது. இப்படி அஸ்பேயின் பரிசோதனையிலும் குறை கண்டுபிடித்தனர்.
இந்த குறையை மூன்றாவது நோபல் அறிஞரான ஆண்டன் செய்லிங்கர்தான் 1990 ஆம் ஆண்டுகளில் சரி செய்தார். அதாவது இரண்டு வெவ்வேறு திசைகளின் இருக்கும் கேலக்ஸிகளில் இருந்து வரும் போட்டான்களை வைத்து போலராய்டுகளின் திசையை மாற்றினார். கேலக்ஸிகளில் இருந்து வரும் போட்டான்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே புறப்பட்டு இருக்கும். எனவே இந்த பரிசோதனையில் உருவாக்கப்படும் குவாண்டம் பிணைப்பு போட்டான்களுக்கு கேலக்சியிலிருந்து வரும் போட்டான்கள் என்ன மாதிரியான நிலையில் வருகின்றது என்று கணிப்பதற்கு வாய்ப்பில்லை.
செய்லிங்கரின் இந்த பரிசோதனையிலும் பெல் தேற்றத்தின் படி வந்த எண் இரண்டுக்குமேல் இருந்தது. எனவே மிகத்தெளிவாக குவாண்டம் இயற்பியல்தான் சரி. அது கொடுக்கும் விளக்கம் தான் சரி என்ற முடிவுக்கு வந்தார்கள்.
ஆண்டன் செய்லிங்கர் பின்னாளில் குவாண்டம் பிணைப்பை நடைமுறை பயன்பாட்டுக்கும் கொண்டு வந்தார். இன்று நாம் பேசும் குவாண்டம் டெலிபோர்ட்டேஷன் (quantum teleportation), குவாண்டம் கம்ப்யூட்டர் (quantum computer) போன்ற கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் இவர்தான். இதைப் பற்றி பிறகு பின்னால் பார்ப்போம்.
ஆண்டன் செய்லிங்கர் பரிசோதனையில் ஓரிரு குறைகள் இருந்தன. அதாவது மூலத்திலிருந்து நிறைய போட்டான்கள் வெளிவந்தாலும் வெளிப்படும் எல்லாப் போட்டான்களும் போலராய்டுகளின் பின்னால் இருக்கும் உணர்கருவியால் (detectors) உணர முடியவில்லை. நூறு போட்டான்கள் வந்தடைந்தால் அதில் 20 அல்லது 30 போட்டான்கள் மட்டுமே உணர்கருவியால் உணரப்பட்டது. மீதி சிதைந்து விட்டது. இந்த 30 போட்டான்களை மட்டும் வைத்து பெல் தேற்றத்தை கணக்கீடு செய்ய முடியுமா? ஒரு வேளை சிதைந்த போட்டான்கள் மறைமாறிக் கோட்பாடு கணிப்பது படி இருக்கலாம் அல்லவா என்ற கேள்வி எழுந்தது.
இதைத் தடுக்க வேண்டும் என்றால் மிகமிக துல்லியமான உணர்கருவியை வடிவமைக்க வேண்டும். 2015 முதல் 2017 வரை நான்கு வெவ்வேறு ஆய்வகங்களில் துல்லியமான உணர்கருவிகள் பயன்படுத்தி ஆய்வுகள் செய்யப்பட்டன. ஆண்டன் செய்லிங்கரும் அதில் ஒரு குழுவில் இருந்தார்.
இந்த ஆய்வில் 1200 மீட்டர் தொலைவில் உள்ள இரு வைரத்தை எடுத்துக் கொண்டனர் ஒவ்வொரு வைரத்திலும் ஒரு கார்பன் அணுவை நீக்கி அந்த வெற்றிடத்தில் குவாண்டம் இணைப்பில் உள்ள ஒரு எலக்ட்ரானை வைத்தனர். அதே போல் இன்னொரு வைரத்தில் உள்ள கார்பன் வெற்றிடத்தில் இன்னொரு எலக்ட்ரானை வைத்து மறுபடியும் ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சி முடிவும் குவாண்டம் இயற்பியலுக்கு சாதமாகத்தான் வந்தது.
குவாண்டம் இயற்பியல் எல்லா வித பரிசோதனைகளிலும் வெற்றி பெற்றுவிட்டது. இதன் மூலம் 1935இல் ஐன்ஸ்டீன் எழுப்பிய கேள்விக்கு சரியான பதிலை தந்துவிட்டனர். அணுக்களின் உலகம் பற்றி குவாண்டம் இயற்பியல் கொடுக்கும் விளக்கங்கள் தான் சரியானது; ஐன்ஸ்டினின் விளக்கங்கள் அல்லது அவரது மறைமாறிக் கோட்பாடு தவறு என்று தெள்ளத்தெளிவாக நிரூபணம் ஆனது. பெல் தேற்றத்தில் ஆரம்பித்த இந்த பரிசோதனைப் பயணம் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வித்திட்டது ஆண்டன் செய்லிங்கர் இதில் மிக மிக முக்கியமானவர்.
குவாண்டம் தகவல் கடத்தல் அல்லது குவாண்டம் டெலிபொர்ட்டேஷன்
செய்லிங்கர் 1997 ஆம் ஆண்டு இரு போட்டான்களுக்கு இடையே உள்ள பிணைப்பை மூன்றாவது போட்டானுக்கு பரிமாற்றம் செய்தார். குவாண்டம் தகவல்களை ஒரு போட்டானில் இருந்து இன்னொரு போட்டோனுக்கு பரிமாற்றம் செய்யும் இந்த முறையை குவாண்டம் டெலி பொலிர்ட்டேஷன் (Quantum teleportation) என்று அழைக்கின்றனர்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நாம் இதுவரை தகவல்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல வெண்டுமென்றால் ஒரு பொருளை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் அல்லது தகவல் கொண்டு செல்லும் போட்டான்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இப்படி போட்டான்கள் செல்லும்போது வழியில் சிதைந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. இது போல பல நடை முறை சிக்கல்கள் இருக்கின்றன.
ஆனால் இந்த குவாண்டம் டெலிபோர்ட்டேஷன் மூலம் எந்த பொருளையோ அல்லது போட்டானையோ எங்கும் நகர்த்த தேவையில்லை. ஒரு போட்டானில் உள்ள தகவல் குவாண்டம் பிணைப்பில் உள்ள இன்னொரு போட்டானுக்கு தகவல்களை குவாண்டம் பிணைப்பின் காரணமாக கடத்துகிறது. இது தகவல் தொழில் உலகில் மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மிக விரைவில் குவாண்டம் இன்டர்நெட் (Quantum internet), குவாண்டம் நெட்வொர்க் (Quantum network) என அனைத்தும் இந்த குவாண்டம் பிணைப்பு (Quantum entanglement) பண்பை பயன்படுத்தி உருவாக்கப்பட போகின்றன.
குவாண்டம் சாவி தொழில்நுட்பம்
இன்னொரு மிக முக்கியமான பயன்பாடு குவாண்டம் மறை குறையீட்டியல் (Quantum Cryptography). இதை குவாண்டம் சாவி விநியோகம் (Quantum Key Distribution) அல்லது QKD தொழில்நுட்பம் என்றும் அழைக்கிறார்கள்.
இப்போது நாம் google pay, paytm என பணப்பரிமாற்றங்களை ஆன்லைன் மூலம் அனுப்புகிறோம். வங்கிப்பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் மூலமே நிறைய நடைபெறுகிறது. ஒரு நாட்டின் ராணுவத்தகவல்கள் மிக மிக ரகசியமாக பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. தகவல் அனுப்புகிற ஒருவர் அத்தகவலோடு ரகசிய சாவி அதாவது மிகப்பெரிய இலக்க ரகசிய குறியீட்டு எண்ணையும் சேர்த்து அனுப்புவார். அதே குறியீட்டு ரகசிய எண்ணை தகவல் பெறுபவர் கொடுத்தால் மட்டுமே அந்த தகவல்களை படிக்க முடியும்.
சைபர் திருடர்கள் யாரேனும் இந்த ரகசிய சாவி எண்ணை தெரிந்து கொண்டால் மிக எளிதாக தகவல்களை திருடி விடலாம். இரகசிய எண் யாராலும் திருட முடியாத அளவுக்கு இருக்க வேண்டும். அதற்காக பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் ரகசிய எண் உருவாக்கத்தை மிக சிரத்தை எடுத்து செய்கிறார்கள். இந்த ரகசிய எண்ணை உருவாக்குவது கணித நிரல் தான். ஒரு வங்கியின் பணப்பரிமாற்ற ரகசிய குறியீட்டு எண் கணித நிரலை ஒருவேளை யாரேனும் கண்டுபிடித்து விட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அடுத்த சில நொடிகளிலேயே அவ்வங்கியின் பணப்பரிவர்த்தனையை அங்கிருந்து திருடிவிடலாம்.
எனவே ரகசிய எண்ணை உருவாக்குவது மிக மிக பாதுகாப்பாக யாராலும் கண்டுபிடிக்க முடியாததாக இருக்க வேண்டும். இதிலும் இந்த ரேண்டம் நம்பர் உருவாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ரேண்டம் எண் உண்மையிலேயே சீரற்ற அல்லது ஒழுங்கற்ற தன்மையில் யாராலும் அடுத்த என்ன எண் வரும் என கணிக்க முடியாததாக இருக்க வேண்டும். என்னதான் கணித நிரல் சிறந்த வகையில் ரேண்டம் எண்களை உருவாக்கினாலும் இந்த கணித நிரலை ஒரு மனிதர்தான் உருவாக்குவார். சைபர் திருடர்கள் எப்படியாவது இந்த கணித நிரலின் அடிப்படை விதிகளை கண்டுபிடித்து விட எப்போதும் வாய்ப்பிருக்கிறது.
இந்த சிக்கலை குவாண்டம் உலகம் மிக எளிதாக தீர்க்கிறது. குவாண்டம் துகள்களின் மிக முக்கிய பண்பு யாரேனும் குவாண்டம் துகள்களின் பண்புகளை அளவிட முயன்றால் அது அளவிடும் செயலால் பாதிக்கப்படும். எடுத்துக்காட்டாக எலக்ட்ரானின் ஸ்பின் திசையை கண்டறிய நாம் அளவிடும் கருவியை பயன்படுத்தினால் அதன் குவாண்டம் நிலை மாறும். அளவிடும் செயல் குவாண்டம் துகள்களை பாதிக்கிறது. இந்த பண்பை இங்கு பயன்படுத்துகிறார்கள்.
நாம் அனுப்ப வேண்டிய தகவல்களை குவாண்டம் சாவியோடு (இரகசிய எண்) சேர்த்து அனுப்பும்போது யாரேனும் இந்த ரகசிய எண்ணை திருட நினைத்து இடை மறித்தால் குவாண்டம் சாவியானது மாறிவிடும். இதுவரை இருந்த தொழில்நுட்பத்தில் ரகசிய எண்ணை திருடியது யாருக்கும் உடனே தெரியாது. மிக மிக தாமதமாகத்தான் தெரிய வரும். அதற்குள் பல தகவல்கள் திருடப்பட்டு விடும். ஆனால் குவாண்டம் சாவி தொழில்நுட்பத்தில் சாவியை இடைமறித்தாலே அதன் ரகசிய எண் மாறிவிடுவதால் யாரேனும் தகவல்களை திருட முயன்றால் உடனடியாக நமக்கு தெரிந்து விடும். இது குவாண்டம் உலகம் நமக்கு கொடுத்த பயன்.
அணுக்களின் உலகம் முழுக்க முழுக்க சீரற்ற அல்லது ஒழுங்கற்ற தன்மையில் உள்ளதால் குவாண்டம் பிணைப்பு எலக்ட்ரான்களை அல்லது குவாண்டம் பிணைப்பு போட்டான்களை வைத்து ரேண்டம் எண்களை உருவாக்கினால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ரேண்டம் எண்கள் உருவாக்கத்தில் இது வரை கணித சூத்திரங்கள் உள்ள மென்பொருள் நிரல்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் முதல்முறையாக இயற்கையின் பண்பை நாம் இங்கு பயன்படுத்துகிறோம். இதன் மூலம் உருவாகும் எண்தான் உண்மையிலேயே ரேண்டம் எண்.
2018 இல் NIST ஆய்வகத்தில் 1124 இலக்கங்கள் கொண்ட மிகச்சிறந்த ரேண்டம் எண்ணை குவாண்டம் பிணைப்பு பண்புகளை பயன்படுத்தி வெறும் பத்து நிமிடத்தில் உருவாக்கினர். இதே மாதிரியான ரேண்டம் எண்ணை கணித நிரல் வைத்து உருவாக்க வேண்டும் என்றால் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பல்வேறு நாடுகள் குவாண்டம் சாவி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(DRDO) மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-டெல்லி (IIT- Delhi) இரண்டும் இணைந்து குவாண்டம் சாவி தொழில்நுட்பத்தை நூறு கி.மீ தொலைவில் உள்ள இரு பகுதிகளுக்கு நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டனர். மிக விரைவில் இந்த குவாண்டம் சாவி தொழில்நுட்பம் எல்லா இடங்களிலும் நடைமுறைக்கு வரப்போகிறது.
1935 இல் ஐன்ஸ்டீன் எழுப்பிய தத்துவார்த்த பிரச்சினை ஜான் பெல்லால் கணித தேற்றமாக மாற்றப்பட்டு பின்னாளில் கிளாசர், அஸ்பே மற்றும் செய்லிங்கரால் ஆய்வக பரிசோதனையாக மாற்றப்பட்டு பல்வேறு நடைமுறை பயன்பாட்டுக்கு வழி திறந்து விட்டது. அதைத்தாண்டி அணுக்களின் உலகம் பற்றிய சரியான புரிதலை நாம் பெற்றிருக்கிறோம்.
ஐன்ஸ்டீன் சார்பியல் தத்துவத்தை வைத்து வெளியும் காலமும் ஒன்றோடொன்று பிணைந்தது என்பது அறிவியல் உலகில் எவ்வாறு புரட்சியை ஏற்படுத்தியதோ அதே போல் “அணுக்கள் உலகத்தில் புற வய எதார்த்தம் என்ற ஒன்று இல்லை. அளவிடும் செயல்தான் அதை உருவாக்குகிறது.” என்ற குவாண்டம் கோட்பாடும் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த தத்துவார்த்த அறிவியல் புரிதல். இரண்டிலுமே ஐன்ஸ்டீன் தொட்ர்புபட்டிருக்கிறார் என்பது சுவையான தகவல்.
முதல் குவாண்டம் புரட்சி 1940களில் நிகழ்ந்தது. குவாண்டம் இயற்பியல் வந்தவுடன் ட்ரான்சிஸ்டர், லேசர், கம்ப்யூட்டர், நானோ தொழில்நுட்பம் என பல்வேறு தொழில்நுட்பங்கள் நமது மனித வாழ்க்கையை பல்வேறு விதங்களில் மாற்றியமைத்தது. இப்போது இரண்டாவது குவாண்டம் புரட்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப உலகில், கணிப்பொறி உலகில் இந்த இரண்டாவது புரட்சி பல்வேறு பாய்ச்சல்களை உருவாக்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.
கட்டுரையாளர் ஜோசப் பிரபாகர் இயற்பியல் பேராசிரியர். முந்தைய ஆண்டுகளின் நோபல் பரிசு குறித்த இவரது கட்டுரைகள் இந்த தளத்தில் இருக்கின்றன. இக்கட்டுரை குறித்த கருத்துகளுக்கு [email protected]
2022ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு – எஸ்.விஜயன்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல்வாரத்தில் அறிவிக்கப்படும் ஆறு நோபல் பரிசுகளில் இயற்கை விஞ்ஞானத்திற்கான மூன்று நோபல் பரிசுகள் பற்றி சர்ச்சைகள் தோன்றியதில்லை. இயற்கை விஞ்ஞானம் என்று நான் கூறுவது இயற்பியல், வேதியல், மருத்துவம் அல்லது உடற்கூறியல் ஆகும். ஏனென்றால் இயற்கை விஞ்ஞானத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்களின் பங்களிப்பு என்பது சக விஞ்ஞானிகளால் பரிசோதிக்கப்பட்டு அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தடம் பதித்த ஆய்வுகளாகும். மற்ற மூன்று நோபல் பரிசுகள் சமூக விஞ்ஞானத்திற்கானது. அவை இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகியவையே. இவற்றில் சர்ச்சைகள் ஏற்படுவதுண்டு. இவையாவும் அரசியல் கலப்படமற்றது என்று கூறமுடியாது. குறிப்பாக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 1969லிருந்துதான் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்பரிசானது ஆல்பிரட் நோபல் உயிலில் கூறியபடி ஏற்படுத்தப்பட்டதல்ல அவருடைய உயில் படி ஐந்து நோபல் பரிசுகளே வழங்கப்பட்டு வந்தன. பொருளாதாரத்திற்கான பரிசு பொருளாதார விஞ்ஞானத்திற்கான நோபல் நினைவுப்பரிசு என்றே அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பென் பெர்னன்க், டக்ளஸ் டயமண்ட், ஃபிலிப் டைவிக் ஆகிய மூன்று அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி காலங்களில் ஏற்படும் வங்கிகள் திவாலாக்கள் நெருக்கடியை நீண்டகாலத்திற்கு இட்டுச் செல்லும் என்று கண்டறிந்ததே இவர்களின் பங்களிப்பு.
இதுவரை வழங்கப்பட்ட 53 பரிசுகளில் அனைத்தும் அறிவியல் பூர்வமற்றது என்று கூறமாட்டேன். அம்ரித்யாசென், ஜோசஃப் ஸ்டிக்லிட்ஸ், லியோன்டியஃப் போன்றவர்களின் பணி அற்புதமானது. இன்னொரு பக்கம் அறிவியலுக்குப் புறம்பான கட்டுரைகளுக்கும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஊகவணிக அம்சங்களை கொண்ட பொருளாதார நடவடிக்கைகளின் மீதான ஆய்வுகளை நான் அறிவியலுக்குப் புறம்பானது என்கிறேன். பொருளாதார ஆய்வுகளை அறிவியல் பூர்மான ஆய்வுகளாக முன்னெடுத்துச் சென்றதில் முதன்மை பங்கு வகித்தவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்காட்லாந்து அறிஞர் ஆதாம்ஸ்மித். பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அறிவியல் ஆய்வுமுறை பாரம்பரியம் டேவிட் ரிக்கார்டோவுடன் நின்றுபோய்விட்டது. அதிலிருந்து அறிவியல் ஆய்வுமுறைக்கும் அறிவியல் அல்லாத ஆய்வுமுறைக்குமான போராட்டம் பொருளாதார அரங்கில் நடந்து வருகிறது.
பொருளாதாரம் என்பது சமூக உற்பத்தியுடனும் செல்வ உற்பத்தியுடனும் தொடர்புடையது. பெருவீத உற்பத்தி என்பது சமீபகாலத்தியது. பெருவீத உற்பத்தி இல்லாமல் சிக்கலான பொருளாதார நடவடிக்கைகள் கிடையாது. சிக்கலான பொருளாதார நடவடிக்கைகள் இல்லாமல் சிக்கல்களை அடையாளம் காணும் ஆய்வுகளும் இல்லை. எனவேதான் நாம் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த பொருளியல் அறிஞர்கள் பற்றி கேள்விப்பட்டது கூட கிடையாது. இந்தியாவில் பண்டைகாலத்தில் விமானம் தயாரிக்கப்பட்டது பிளாஸ்டிக்சர்ஜரி நடத்தப்பட்டது என்று கூறிக் கொண்டு விமான்சாஸ்த்ரா, பிளாஸ்டிக்சாஸ்த்ரா என்று என்று சமஸ்கிருத இலக்கியங்களைக் கூறுபவர்கள் கூட ஸம்பத்சாஸ்த்ரா அல்லது ஸம்பத்சூத்ரா என்ற இட்டுக்கட்டிய சமஸ்கிருத ஸ்லோகங்களை இதுவரை கூறமுடிவதில்லை.
தற்போது நாம் காணும் சிக்கலான பொருளாதார அமைப்பில் ஒவ்வொரு மனிதர்களும் பங்களிப்பாளர்களாகவும் பங்கெடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஒருவரையொருவர் சார்ந்த உற்பத்திமுறை நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒவ்வொருவரும் அவரவர் உழைப்புச்சக்தியை மதிப்புடைய நுகர்வுப்பொருளாகவோ சேவையாகவோ பொதுச்செல்வத்திற்கு மாற்றிவிட்டு தனக்கு வேண்டிய நுகர்வுப்பொருளையும் சேவையையும் பொதுச்செல்வத்திலிருந்து எடுத்துக் கொள்கின்றனர். இது ஆதாம் ஸ்மித்தின் கருத்து. இதற்குள் உள்ள சிக்கல்களை கையாள்வதே பொருளாதாரம். ஒவ்வொருவரின் உழைப்புச்சக்தியை பொதுச்செல்வமாக மாற்றுவது பொதுச்செல்வத்திலிருந்து ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்வது ஆகியவற்றிற்கான நடைமுறைகள் காலப்போக்கில் தாவிப்பாய்ச்சல் முன்னேற்றத்தில் நடந்துவருகிறது. இதில் தனிநபர்களின் பாத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. தனிநபர்களே காலப்போக்கில் செல்வாக்கு உடையவர்களாகவும் சமூகத்தின் திசைவழியை தீர்மானிப்பவர்களாகவும் மாறுகின்றனர். எனவே தனிநபர்களின் நலன்களை புறக்கணித்து சிக்கல்களை தூயவடிவில் ஆய்வு செய்ய முடியாது. இயற்கை விஞ்ஞானத்திற்கு இப்பிரச்சனை கிடையாது. அது இயற்கை விதிகளை ஆய்வு செய்கிறது. இயற்கை விதிகள் என்பவை மனிதர்களுக்கோ தனிநபர்களுக்கோ அப்பாற்பட்டு சுயமாக இயங்குவது. பொருளாதாரம் அப்படிப்பட்டதல்ல. எனவே இதில் அறிவியல்முறை அறிவியல் அல்லாதமுறை என்று கோடுகிழிப்பது சிரமமாக உள்ளது.
தற்போதைய உற்பத்தியமைப்பில் பணம் சரக்காக உருவெடுத்து, சரக்கு திறனுடைய உற்பத்திமுறைக்குள் சென்று மற்றொரு மதிப்பு கூட்டப்பட்ட பயனுள்ள சரக்காக மாறி மீண்டும் பணவடிவம் எடுக்கிறது. திரும்பத் திரும்ப நிகழும் இந்த சுற்றோட்டம் தங்குதடையின்றி நடைபெறும்வரை பொருளாதாரச் சிக்கல்கள் என்பது கிடையாது. இவற்றில் பணம் என்பது உற்பத்தி நடவடிக்கையில் இறங்காமல் சுயேட்சையாக மதிப்புக்கூட்டல் நடவடிக்கையில் இறங்கினால் அது ஊகவணிகத்திற்கு இட்டுச் செல்லும் என்ற முடிவுக்கு பொருளாதாரப் போக்குகளை ஆய்வுசெய்த இருபதாம் நூற்றாண்டு அறிஞர்களில் குறிப்பிட்ட சிலர் வந்தனர். மொத்த பொருளாதார இயக்கத்தை இது சீரழித்துவிடும் என்ற முடிவுக்கும் வந்தனர். அத்துடன் மதிப்புக் கூட்டல் உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்டாலும் சுற்றோட்ட நடவடிக்கைகளே மதிப்புக்கூட்டல் நடைபெறுவதை உத்தரவாதம் செய்கிறது என்றும் சுற்றோட்ட நடவடிக்கைகளில் பணவடிவத்தை சற்று எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்றும் கூறிவந்தனர். எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு என்பதே ஜான் மேனார்டு கீன்ஸ் போன்றவர்களின் வாதம். அரசு அல்லது சமூகத் தலையீடு இல்லாத தூய நடவடிக்கைகளாகவே பொருளாதார நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அதற்குள்ளேயே சிக்கல்களை சரிசெய்யும் ஏற்பாடு இருக்கிறது என்று கூறுபவர்கள் சுதந்திர சந்தைவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். ஒருபுறம் இந்த இரண்டு முகாம்களும் மோதிக்கொண்டிருக்க, பொருளாதார நெருக்கடிகள் காலவட்டத்தில் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறது.
நெருக்கடிகளுக்கு காரணம் என்ன அதை எப்படிக் களைவது என்று நடைபெற்ற ஆய்வுகள் வெளிச்சத்துக்கு வரவில்லை. நெருக்கடி காலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாவது பலவீனமானவர்களும் சிறுகுறு தொழில்களுமே. இவர்களின் எண்ணிக்கை ஆகப்பெரும்பான்மையானது. காலவட்ட நெருக்கடிக்கு தீர்வு கிடையாது என்று முடிவுக்கு பொருளாதார அறிஞர்கள் வந்துவிட்டாற்போல் தெரிகிறது. அதனால்தான் நெருக்கடிக்குள் உள்ள ஒருசில புள்ளிகளை ஆய்வு செய்வது அதைக் களைந்து நெருக்கடியின் தாக்கத்தை குறைக்கலாம் என்ற ஆய்வுகள் பெருகிவிட்டன. அதில் ஒன்றுதான் இந்தாண்டு நோபல் பரிசுபெற்ற ஆய்வு.
ஒரு பலூனை நாம் ஊதிக்கொண்டே போனால் ஒரு கட்டத்தில் அது வெடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். வெடித்த பலூனின் கிழிந்த பகுதியை ஆய்வுசெய்து இந்த இடத்தில் ஏன் கிழிந்தது என்ற ஆய்வை நடத்துவது போன்றதே இதுவும். இந்த இடத்தில் இனி கிழியாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதே அந்த ஆய்வு கொடுக்கும் தீர்வு. ஆனால் ஊதிக்கொண்டே போகும் பலூன் இன்னொரு இடத்தில் வெடிப்பதை இந்த ஆய்வின் முடிவு தடுக்க முடியாது. யாரும் பலூன் வெடிப்பதற்கு ஒட்டுமொத்த காரணமான அதன் அழுத்தம் ஏன் கூடுகிறது அதை எப்படித் தடுப்பது என்ற ஆய்வுக்குள் செல்வதில்லை.
திரும்பத் திரும்ப நிகழும் உற்பத்தி நடவடிக்கைகள், அவற்றை உத்தரவாதம் செய்யும் சுற்றோட்ட நடவடிக்கைள் ஆகிய இரண்டும் செல்வ உற்பத்தியின் அங்கங்களாகும். சுற்றோட்ட நடவடிக்கைகளில் முக்கியமானது உற்பத்திசெய்யப்பட்ட சரக்கு பணமாக மாறி அது மீண்டும் உற்பத்திக்கான அடிக்கூறுகளாக விளங்கும் சரக்குகளாக மாறவேண்டும். இந்த இடத்தில்தான் பணத்தின் பங்கு முக்கியமானது. உற்பத்திக்கான அடிக்கூறுகளுக்கான பணம் இல்லையேல் உற்பத்தி இல்லை (உற்பத்தி என்பதை நான் இங்கே பொருளுற்பத்தி மற்றும் சேவை இரண்டையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன்). பணத்தைக் கையாள்வது வங்கிகளாகும். நெருக்கடிகளில் வங்கிகள் திவலானால் பணம் சுற்றோட்டத்திலிருந்து விலகும், உற்பத்தி நிகழ் முறை நின்றுபோகும். எனவே வங்கிகள் பொருளாதாரத்தைப் பற்றிய சித்திரத்தை வழங்கும் ஒரு கேந்திரமான புள்ளி எனலாம் (Vantage Point). 2022ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற டக்ளஸ் டையமண்ட், பிலிப் டைவிக் ஆகியோர் வங்கிகள் திவாலாகும் போக்கை ஆய்வு செய்து அதற்கான ஒரு புள்ளியில் மாதிரியை உருவாக்கினார்கள். இந்த புள்ளியல் மாதிரிக்கு டையமண்ட்-டைவிக் புள்ளியல் மாதிரி என்று பெயரிடப்படு அழைக்கப்படுகிறது. அந்த புள்ளியில் மாதிரியை 1930-40களில் நடைபெற்ற பெரும் பின்னடைவு (Great Depression) காலத்தில் நிகழ்ந்த வங்கி திவாலாக்களுக்குப் பொருத்தி டையமண்ட்-டைவிக் புள்ளியல்மாதிரி செல்லுபடியாகத்தக்கது என்று பென் பெர்னன்க் நிறுவினர். இதுவே இவர்களின் பங்களிப்பாக கருதி நோபல் பரிசு வழங்கப்பட்டது. அத்துடன் இவர்களின் புள்ளியில்மாதிரி வழியாக 1930களில் நிகழ்ந்தவை சாதாரண பொருளாதாரத் தேக்கம் நீண்டகால பெரும் பின்னடைவாக மாறியது என்பதே இவர்கள் கண்டறிந்தது. இந்த முடிவு பல்வேறு கேள்விகளுக்கு உட்பட்டது. 1930களிள் பெரும் பின்னடைவு பற்றி ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் வந்துவிட்டன.
பொருளாதார காலவட்டம் என்பது பெரு வளர்ச்சி (Boom) – மட்டுப்படல் (Slow down) – தேக்கம் (Stagnation) – பின்னடைவு (Recession) – பெரும் பின்னடைவு (Depression) – மீட்பு (Recovery) – பெருவளர்ச்சி (Boom) என்று பொதுவாக வகைப்படுத்துகிறார்கள். இந்த காலவட்ட சுழற்சியில் அரசு தலையீடு மூலம் தேக்கத்திலிருந்து மீட்புக் கொண்டுவர முடியும். தேக்கத்திலிருந்து பின்னடைவுக்குள் சென்றால் அதை நெருக்கடி கட்டம் என்கிறார்கள். பெரும் பின்னடைவு ஏற்பட்டால் அது கடும் நெருக்கடியாகும். 1930களில் ஏற்பட்டது பெரும் பின்னடைவாகும். 2008ல் ஏற்பட்டதை பெரும் பின்னடைவு என்று கூறத் தயங்குகிறார்கள். அதை உயரிய பின்னடைவு (Great Recession) என்றழைக்கிறார்கள். ஆனால் இதன் தாக்கம் பெரும் பின்னடைவைவிட அதிகம். கடந்த காலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட செல்வமானது இதன் தாக்கத்தை குறைந்தால்தான் 1930கள் அளவிற்கு இது வெடிக்கவில்லை. கடந்த மூன்று நூற்றாண்டுகளில் பலமுறை நெருக்கடி கட்டத்திற்கு சென்றிருக்கிறது. நெருக்கடி ஏன் என்பதில் கவனம் கடந்த காலங்களில் செலுத்தப்படவில்லை.
நோபால் பரிசு பெற்றவர்கள் உருவாக்கிய புள்ளியல்மாதிரி என்ன? அது செல்லுபடியாகத்தக்கது என்று எப்படி நிறுவினார்கள்? என்ற கேள்விகளுக்குள் புகுந்தால் ஆழமாக செல்லவேண்டியதிருக்கும் பொருளியல் கற்றலில் பயிற்சியில்லாதவர்களுக்கு சிரமமாக இருக்கும். எனவே நான் அதற்குள் செல்லவில்லை நானும் தொழில்முறையாக பொருளியல் பயின்றவனில்லை. நான் வாசிப்பு மூலம் கற்றறவைகளுக்கு ஒரு வரம்பெல்லை உண்டு. என்னுடைய பார்வையில் குறைபாடு இருக்க வாய்ப்புண்டு. இருந்தாலும், எனக்கு மாறுபாடு இருக்கும் அம்சங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அவை அறிவியல் சார்ந்த ஆய்வுமுறை என்ற அளவோடு கூறுகிறேன்.
தகவல் விஞ்ஞானத்தின் (Data Science) அடிப்படைகளில் முக்கியமானது இயல்பான மாற்றங்களை தகவல் கிடங்காக மாற்றினால், மாற்றங்களைப் பற்றிய பயனுள்ள முடிவுகளை எடுக்க முடியும் என்பதுதான். இங்கே ஊகங்களுக்கு இடமில்லை. உதாரணமாக ஒரு நகரின் குறிப்பிட்ட சாலையில் உணவு விடுதி வைத்திருப்பவர், குறிப்பிட்டகாலம் சென்றபின் ஒவ்வொரு நாளும் எந்தவகை உணவுப் பதார்த்தம் எந்தளவு விற்பனையாகும் என்பதை அறிவார். கேட்டால் இது அனுபவத்தின் மூலமாக கண்டறிவது என்பார். தகவல் விஞ்ஞானத்தில் பல நூறு நாட்களாக உண்மையில் விற்பனையான பதார்த்தங்களையும் அதன் அளவுகளையும் தகவல் கிடங்கில் போட்டு தகவல் கிடங்கிலிருந்து பயனுள்ள முடிவைக் கொடுக்கும் மென்பொருளை இணைத்தால் புதன்கிழமை மாலைநேரத்தில் எவ்வளவு இட்லி விற்பனையாகும் என்று சொல்லும். இது ஊகத்தின் அடிப்படையில் நிகழ்வதல்ல. நீண்டகால நிகழ்வுப்போக்குகளின் அடிப்படையில் தீர்மானிப்பது
வங்கிகளை எடுத்துக் கொள்வோம். குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு பணத்தை நிரந்தர வைப்புக் கணக்கில் போடுபவர்களின் பணத்தை எடுத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வட்டியைவிட அதிக வட்டிக்கு நீண்டகாலத்திற்கு தொழில்முனைவோருக்கு கடனாகக் கொடுத்து, இரண்டு வட்டிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை பயன்படுத்தி லாபகரமாக நடத்தப்படும் தொழிலே வங்கித்தொழில். இதில் வைப்புக்கணக்கில் போடுபவர்கள் குறைந்த கால முதிர்விற்கும் தொழில்முனைவோர் நீண்டகால முதிர்விற்கும் நிற்பவர்கள். இந்த முதிர்வு இடைவெளியானது வங்கிகள் சந்திக்கும் தொழில்-அபாயம் ஆகும். இந்த முதிர்வு இடைவெளியை முதிர்வுமாற்றம் என்று அழைக்கிறார்கள். முதிர்வுமாற்ற அபாயத்தின் உச்சகட்டம் என்பது வைப்புக்கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வைப்புக்கணக்கை முடிக்க விண்ணப்பிக்கும் போது வங்கிகளால் அவர்களுக்கு பணம் செலுத்தமுடியாத நிலை ஏற்படும். இதை வங்கிஓட்டம் (Bank-run) என்றழைக்கிறார்கள். வங்கி ஓட்டம் திவாலாவிற்கு (Bank-rupture or bankruptcy) வழிவகுக்கும். 1930களின் பொருளாதாரப் பெரும்பின்னடைவின்போது பல வங்கிகள் வங்கிஓட்டத்தின் விளைவாக திவாலாகின. முதிர்வு மாற்றத்ததால் நிகழும் தொழில் அபாயத்தை ஆய்வு செய்து அபாயத்தை குறைக்கும் உபாயத்தை நோபல்பரிசு பெற்றவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.
வைப்புக் கணக்கு வைத்திருப்போர் தங்களுடைய எதிர்காலச் செலவை குறுகிய காலத்திற்கு மட்டுமே கணிக்க முடியும் என்பதால் அவர்கள் குறுகிய கால முதிர்வை தெரிவு செய்கிறார்கள். அவர்களில் ஒரு சிலருக்கு முதிர்வு காலத்திற்கு முன்பே பணம் தேவைப்படும் வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு கொடுக்கப்படும் வட்டியானது முதிர்வு வட்டியைவிட குறைவாகவே இருக்கும். எனினும் அனைத்து வைப்புக்களுக்கு வாடிக்கையாளர்களும் முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை முடிக்கும் நிலை என்பது வராது. வங்கிகள் திவாலாகும் என்ற அச்சத்தில் அல்லது ஊகத்தில் அனைத்து வைப்புக்கணக்கு வாடிக்கையாளர்களும் முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை முடிக்கும் முடிவை எடுக்கிறார்கள். இயல்பான நிலையில் எத்தனை பேர் முதிர்வுக்கு முன்பே கணக்கை முடிக்க கோருவார்கள் என்பதை நாம் தகவல் விஞ்ஞானத்தை வைத்துக் கூறமுடியும். ஆனால் அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரே நேரத்தில் கணக்கை முடிக்கக் கோரும் நிகழ்வை நாம் தகவல் விஞ்ஞானத்தைக் கொண்டு கூறமுடியாது, ஏனென்றால் இது ஊகங்களில் அடிப்படையில் நிகழ்வது. நோபல் பரிசாளர்கள் உருவாக்கிய மாதிரியில் லாம்டா என்றொரு நிகழ்தகவு (Probability) வருகிறது. இது முதிர்வு முன்கூடலின் இரண்டு விதங்களையும் உள்ளடக்குகிறது. ஊகத்தையும் உள்ளடக்கிய நிகழ்தகவின் அடிப்படையில் உருவாக்கிய மாதிரியானது எப்படி அறிவியல் ரீதியாகச் சரியாக இருக்கும் என்ற கேள்வி எனக்கு எழுகிறது.
பொருளியல் வளர்ச்சியில் வங்கிகளை சுற்றோட்டத்தை உத்தரவாதப்படுத்தும் இடைநிலை ஏஜண்டுகள் என்று இவர்கள் அழைக்கிறார்கள். பெருவீத உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் வங்கிகள் கட்டத்தை தாண்டி பல்வேறு இடைநிலை ஏஜெண்டுகள் வந்துவிட்டன. உதாரணத்திற்கு 2008ம் ஆண்டு தோன்றிய சப்பிரைம் நெருக்கடியானது பிணையுறுதியுடைய கடன் பொறுப்பு ஆவணம் (CDO – Collatralised Debt Obligation) மதிப்பிழத்ததன் வாயிலாக தோன்றியது. கடன் கொடுத்த வங்கிகள் கடனாளியிடமிருந்து பெற்ற கடன் பத்திரங்களை பிணையுறுதிகளாகக் கொண்டு இன்னொரு பெரிய நிறுவனத்திடம் கடன் வாங்கும் முறையே CDO. வெறும் வாடிக்கையாளர் – தொழில்முனைவோர் என்ற கட்டத்தைத் தாண்டி, கடன்பத்திரத்தையே ஒரு சொத்தாக அனுமானித்து அதன் உடைமையாளர் அதற்கு பெருங்கடன் கொடுப்பவர் என்ற கட்டத்திற்கு வந்து அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்றுவிட்டது. அடுக்கடுக்கான இந்த இடைநிலை ஏஜண்டுகள் அனைத்தையும் உள்ளடக்கியதுதான் அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட். இது அனைத்துக்கும் இவர்கள் ஆய்வு பொருந்தும் என்று கூறுகிறது நோபல் பரிசு கமிட்டி.
வால்ஸ்ட்ரீட்டை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை அமெரிக்காவின் பொருளாதார வரலாற்றை ஆய்வு செய்தவர்கள் அறிவார்கள். நோபர் பரிசு பெற்ற பென் பெர்னன்க் 2006 முதல் 2012 வரை அமெரிக்க ரிஸ்ர்வ் வங்கியான பெடரல் வங்கியின் தலைவர். இவரை பணிக்கமர்த்திய அதிபர் புஷ் இவர் ஒரு பொருளாதாரப்புலி, நெருக்கடிகளை ஊதித்தள்ளும் ஆற்றல் படைத்தவர் என்பதால் நியமித்தார். இவர் கண்டுபிடித்த கோட்பாடு இவர் கண்முன்னாலேயே நொறுங்கிப் போனதை இவரே ஏற்றுக் கொள்கிறார். 2008ம் ஆண்டில் பெடரல் வங்கித் தலைவர் என்ற முறையில் இவர் திவாலாகிக் கொண்டிருந்த ஏஐஜி என்ற நிறுவனத்திற்கு பிணையாக விதியை மீறி நிதியளித்தார் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. நீதிமன்றத்தில் இவர் அளித்த வாக்குமூலம், “செப்டம்பர்-அக்டோபர் 2008 என்பது 1930களில் ஏற்பட்ட நெருக்கடி உள்ளிட்ட உலகில் ஏற்பட்ட அனைத்து நிதிநெருக்கடிகளிலேயே மிகவும் மோசமானது.” “அமெரிக்காவில் உள்ள 13 முக்கியமான நிதி நிறுவனங்களில் 12 நிதி நிறுவனங்கள் ஒரிரு வாரம் கூட தாக்குப்பிடிக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது” இதையொட்டி பெடரல் வங்கியின் பணவியற் கொள்கை மோசமானது என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளானது. நெருக்கடியானது ஐரோப்பியாவிற்கு பரவியவுடன் அங்கு இருந்த ஐரோப்பிய மத்திய வங்கி (Eurpean Central Bank ECB)யானது 80 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகள் கடைப்பிடித்த அதே நெறிமுறைகளை கையாண்டதால்தான் நெருக்கடி வந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆக, இவர்கள் பரிந்துரைத்த வங்கிகள் அல்லது பொருளுற்பத்தியின் இடைநிலை ஏஜண்டுகளுக்கான கட்டுப்பாட்டு ஒழுங்கு முறைகள் செயல்படவில்லை அல்லது அமலாக்கப்படவில்லை அல்லது அமலாக்க முடியவில்லை என்ற முடிவுக்கு வரலாம்.
புஷ் அரசுக்குப் பின் வந்த ஒபாமா அரசும் பெர்னன்க்கையே பெடரல் வங்கியின் தலைவராக தொடர அனுமதியளித்தது. அத்துடன் நெருக்கடி தீர்வுக்கான கொள்கைகளையும் வரையறுக்கும் உரிமையை இவருக்கு வழங்கியது. இவருடைய தீர்வாக Quantitative Easing (அளவு அடிப்படையில் எளிதாக்குதல்) என்ற கொள்கையை முன்மொழிந்தார். அமெரிக்கப் பொருளாதாரத்தில் மூன்று பலமான அமைப்புகளைச் செயல்படுவதாகக் கூறலாம். ஒன்று Treasury எனப்படும் மத்திய அரசின் நிதியமைப்பு, இரண்டு வால்ஸ்ட்ரீட். அனைத்து நிதி நிறுவனங்கள் பங்குச்சந்தை உள்ளிட்ட அனைத்தையும் வால்ஸ்ட்ரீட் என்று வகைப்படுத்துகிறேன். மூன்றவாது பெடரல் வங்கி. பெடரல்வங்கி என்பது பணவியல் அமைப்புமுறையின் (Monetary System) கொள்கை வகுக்கும் அமைப்பு. மக்கள் உற்பத்தியிலும் சேவையிலும் ஈடுபட்டு செல்வத்தைப் படைக்கின்றனர். படைக்கப்பட்ட மொத்த செல்வத்தில் உற்பத்தியாளர்களான மக்களுக்குக் கிடைக்கப் பெற்றதுபோக மீதி அனைத்தும் உபரியே. இது வரிவடிவில் அரசுக்கும் சுற்றோட்ட ஏற்பாட்டாளர் என்பதால் வால்ஸ்ட்ரீட்டுக்கும் செல்கிறது. 2008 நெருக்கடியின் போது வால்ஸ்ட்ரீட் அடிவாங்கி சுருண்டுவிட்டது, மத்திய அரசின் நிதியமைச்சகத்திலோ 240 பில்லியன் டாலர்கள் (தற்போது 1.37 ட்ரில்லியன்) பற்றாக்குறை. பணவியல் கொள்கைவழித் தலையீட்டின் மூலமே உயிரூட்ட வேண்டும் என்ற நிலையில் உருவானதுதான் பெர்னன்க்கின் திட்டம் Quantitative Easing. இத்திட்டப்படி பெடரல் வங்கியே மதிப்பில்லாத CDOக்களை வாங்குவதன் மூலம் சந்தையில் அவை சுற்றோட்டத்திற்கு திரும்பும் என்பதே எதிர்பார்ப்பு. இதுவரை இது நடைபெறவில்லை. மூன்றாம் QE 2021ல் நடந்தது என்றால் 2008 பின்னடைவிலிருந்து மீளவில்லை என்பதே அதன் அர்த்தம். இதன்விளைவு கடுமையான பணவீக்கம், ஏனென்றால் படைக்கப்படாத மதிப்புக்கு பணம் அச்சடிக்கப்பட்டது என்பதாலேயே. இதை சமாளிக்க வட்டிவீதத்தை இப்போது ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். இறந்துபோன சடலங்களுக்கு உயிர் கொடுத்து புனையப்பட்டு எடுப்பட்ட ஜோம்பி திரைப்படங்ளை நினைவூட்டுவது Quantitative Easing.
பிலிப் டைவிக்கின் நிபுணத்துவப் பட்டியலில் சொத்து மதிப்பிடல் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சொத்து மதிப்பிடலில் புதிய கோட்பாடுகளை உருவாக்கி இரட்டை பற்றாக்குறை நாடான அமெரிக்காவை (மத்திய பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் ஏற்றுமதி இறக்குமதியில் பற்றாக்குறை) நோக்கி உலகத்தில் உருவாகும் உபரிச்செல்வம் பாயவைக்கிறது. டாலர்களில் சொத்தை சேமிக்க விரும்புவர்கள் எந்த வட்டியும் இல்லாமல் அமெரிக்க கருவூல பிணைப்புப் பத்திரத்தை வாங்குவார்கள். கொஞ்சம் வருமானம் வேண்டும் என்று நினைப்பவர்கள் வால்ஸ்ட்ரீட் பாதைக்குத்தான் செல்ல வேண்டும். அங்கே நிறுவனங்களின் மதிப்பை ஊதிப் பெரிதாக்கும் கோட்பாடுகள் வாயிலாக காகிதத்தில் அதிக மதிப்பை பெறும் நிறுவனங்களில்தான் முதலீடு செய்வார்கள். ஓயாமல் அமெரிக்காவை நோக்கிப் பாயும் உலக உபரிப் பணம் அவர்களின் இரட்டைப் பற்றாக்குறைக்கு நிதியளிக்கிறது. 2008ம் ஆண்டு நெருக்கடி இந்த புதிய கோட்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்கிவிட்டது. வங்கி திவாலாக்களில் இந்த புதிய கோட்பாடுகளின் பங்களிப்பை மறுத்துவிட்டு உருவவானதுதான் டையமண்ட்-டைவிக் புள்ளியில்மாதிரி என்று இதிலிருந்து தெரிகிறது.
அத்தோடு நில்லாமல் பெர்னன்க் பெடரல் வங்கித் தலைவராக இருந்தபொழுது இவருக்கு வேண்டிய நிதி நிறுவனங்களுக்குச் சாதகம் செய்தார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. குடியரசுக்கட்சிக்காராரக தன்னை அறிவித்துக் கொண்டவர். அமெரிக்க அரசின் சமூகப்பாதுகாப்பு செலவுகளைக் கடுமையாக எதிர்ப்பவர். குறிப்பாக வலதுசாரி பொருளாதாரக் கொள்கையாளர் அதாவது சுதந்திர சந்தைக் கோட்பாட்டாளர் பொருளாதாரத்தில் அரசு தலையீட்டை எதிர்ப்பவர், எனினும் இவர் பதவி வகித்த காலத்தில் அரசு தலையீட்டின் மூலம் பெருநிறுவனங்களுக்கு சாதகம் செய்தவர். இந்தப் பின்னணியில்தான் நான் நோபல் பரிசு பெற்றவர்களின் பணிகளை பார்க்கிறேன். தோல்வியடைந்த கொள்கைகள், அறிவியல் பூர்வமான நிறுவப்படாத கோட்பாடுகள் ஆகியவை எப்படி பரிசுக்கு தகுதி பெற்றவையாகின்றன என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.
அடிப்படையில் டையமண்ட-டைவிக் புள்ளியல்மாதிரி பொருளாதார அம்சங்களை மிகவும் குறுக்கி எளிமைப்படுத்திவிட்டதாகத் தெரிகிறது. பெர்னன்க் ஆய்வானது இந்த புள்ளியல்மாதிரியை நிறுவவேண்டும் என்ற முனைப்புடன் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இது அறிவியல் வழிமுறையல்ல என்றே நான் கருதுகிறேன். நான் புரிந்து கொண்டவரை சமூகஉற்பத்திமுறை மேலும் மேலும் பலமடைந்து சமூக செல்வம் பெருகிவரும் அதேநேரத்தில் அதன்பலன்களை அனுபவிப்பது சமூக அளவில் நடைபெறாமல் தனிநபர்களின் செல்வாக்கில் நடைபெறுகிறது. இந்த முரண்பாட்டை தீர்க்காமல் நெருக்கடிகளை தடுக்க முடியாது. இதற்குள் சென்று ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆய்வுகள் நடைபெறவில்லை என்று கூறமாட்டேன். நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அவை வெளிச்சத்திற்கு வந்து நடைமுறைப்படுத்தினால் சமூகத்தின் திசைவழியை தீர்மானிக்கும் தனிநபர்களின் அங்கம் குறைந்துபோகும் என்பதால் வெளிச்சத்துக்கு வரவில்லை. எனவே இது ஒரு நீண்ட நெடிய போராட்டமாகும்.
எஸ்.விஜயன்
சென்னை
25-10-2022
நோபல் பரிசு ஏன் இந்தியர்கள் இல்லை? – ஆயிஷா இரா. நடராசன்
சிறுமி ஒருத்தி (1970) சாதாரண அஞ்சலட்டையில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதம் மிகவும் பிரபலம். ஆங்கிலேயர் காலகட்டக் கல்வி சி.வி.ராமன், மேக்நாட் சாகா, சத்தியேந்திரநாத் போஸ் போன்ற அறிவியலாளர்களை உருவாக்கியதுபோல், நமது கல்வி முறையால் யாரையும் உருவாக்க முடிந்ததா என்பது அந்தச் சிறுமியின் கேள்வி. புதுடெல்லியில் உள்ள பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் சிலருக்குப் பிரதமர் இந்திரா காந்தி அதை அனுப்பி, உண்மையில் அப்படி உருவானவர்கள் குறித்து அந்தச் சிறுமிக்கு எழுதி உதவுமாறு கேட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கேள்விக்கு யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. அந்தச் சிறுமி என்ன ஆனார் என்பதும் தெரியாது என்றாலும், நாடு விடுதலை அடைந்த 75ஆவது ஆண்டிலும்கூட அந்தக் கேள்விக்குச் சரியான பதில் நம்மிடம் இல்லை. இந்த ஆண்டும் இந்தியர் எவரும் நோபல் பரிசு பெறவில்லை என்பதை எந்தச் சலனமும் இன்றி நாம் எளிதாகக் கடந்துவிட்டோம். நோபல் பரிசை விடுங்கள்; பொதுவாகவே நம் பல்கலைக்கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சிகள் எந்த நிலையில் உள்ளன என்பது ஆய்வுக்குரியது.
ஆங்கிலேயர் ஆட்சியில் அறிவியல்: ஆங்கிலேயர் ஆட்சியின்போது ராமன், சாகா, போஸ் போன்ற இந்திய அறிவியலாளர்கள் கேம்பிரிட்ஜிலும் ஆக்ஸ்போர்டிலும் சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை. கல்கத்தாவின் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம், காசி இந்து பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் என ஆங்கிலேயர் காலத்தில் செயல்பட்ட இந்தியக் கல்விக்கூடங்களில்தான் இயங்கினர். அவற்றுக்குச் சுதந்திரப் போராட்டச் சதி நடப்பதாகப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொடுக்காத தொல்லை இல்லை. போதுமான நிதி ஆதாரம் என்றைக்குமே கிடைத்திடாத நிலையில்தான் அறிவியல் ஆராய்ச்சி இங்கு பல சாதனைகளைப் படைத்தது. சுதந்திரத்துக்கு முன்பே சர்வதேச அறிவியல் ஆய்விதழ்களில் இந்தியப் பல்துறை அறிவியலாளர்களின் 6,000 ஆய்வுகள் வெளிவந்ததாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலை: இந்திய அறிவியலில் அடிப்படை ஆய்வின் இன்றைய நிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வேலைக்குச் செல்வது எனும் சமூக அழுத்தம் இன்றைய இளைஞர்களை ஆய்வு வட்டத்துக்கு வெளியே நிறுத்திவிட்டது. அதையும் மீறி உள்ளே வருபவர்களைப் பல்கலைக்கழக ஆய்வுச் சூழல் விரட்டியடிக்கிறது; சிலர் தற்கொலை வரைகூடப் போகிறார்கள். ஆய்வு நிதியைப் பங்கிட்டுக்கொள்வது எப்படி என்ற மோசமான அதிகாரச் சுரண்டலாலும் ஊழல்களாலும் கருத்தரங்கங்கள் வெறும் சடங்குகளாகச் சுருங்கிவிட்டன. ஆய்விதழில் வெளிவரும் அளவுக்குத் திறம்பட அறிவியல் ஆய்வுகளை எழுதும் மாணவர், அவர் பெயரில் அந்த ஆய்வை வெளியிட்டுவிட முடியாது. ஆய்வுக்கு வழிநடத்தும் பேராசிரியர்கள் பலர் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, அந்த அற்புதங்களைத் தாம் வெளியிட்டுக்கொள்ளும் வெட்கக்கேடான சூழலே இந்தியப் பல்கலைக்கழகங்களில் நிலவுகிறது. கடந்த 20, 30 ஆண்டுகளாக ஆய்வுத் துறையைப் புறக்கணித்து, பொருளீட்டுவதே வெற்றி எனப் பொறியியல், மருத்துவம் படிக்கச் சென்று, பலர் காணாமல் போனது உண்மை. ஆய்வுத் துறைகளான இயற்பியல், வேதியியல் என அடிப்படை அறிவியலுக்குள் தப்பித்தவறி நுழைபவர்கள் காண்பது என்ன? இந்தியாவில் இன்று முனைவர் பட்ட ஆய்வுகளில் மூன்றில் இரண்டு போலியானவை. தரம்வாய்ந்த ஆய்வுகளுக்கு அரசின் நிதியுதவி பெருமளவு குறைந்துவிட்டது. அறிவியல் சார்ந்த ‘பட்நாகர் விருது’ உட்பட 300 விருதுகளை நீக்கிவிட்டு, நோபல் போன்று ஒரே விருதாக வழங்கப்படும் என்கிற அறிவிப்பும் நம் ஆய்வுச் சூழலை மேலும் நீர்த்துப்போகச் செய்யும்.
நோபல் அறிஞர்களின் பின்னணி: இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்ட பிரான்ஸின் அலான் ஆஸ்பெக்ட், அந்நாட்டின் 72ஆவது நோபல் அறிஞர். பிரான்ஸின் பள்ளி, பல்கலைக்கழகக் கல்வியில் மதிப்பெண்கள் கிடையாது; ஆறு படிநிலைத் தரச்சான்று தரப்படுகிறது. அறிவியல் பட்டப்படிப்பு, ஆறு மாத ஆய்வக உதவியாளர் பணியிடப் பயிற்சியை உள்ளடக்கியது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வாந்தே பேபு, அந்நாட்டின் 32ஆவது நோபல் அறிஞர். ஸ்வீடனில் கல்லூரிக் கல்வி வரை தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது. ஆய்வு மாணவர்களைத் தத்தெடுத்து உலகெங்கும் செல்வதற்கான செலவை அரசே ஏற்கிறது. வேதியியலில் நோபல் பரிசு பெறும் மோர்டன் மேல்டால் டென்மார்க்கைச் சேர்ந்தவர். அங்கே பள்ளிக் கல்வியின் இறுதி ஆண்டில் குறைந்தபட்சம் 100 பக்கம் கொண்ட ஆய்வறிக்கையை விருப்பமான அறிவியல் துறை சார்ந்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். இதுவரை 14 நோபல் அறிஞர்களைத் தந்த டென்மார்க்கில் மொத்தம் எட்டுப் பல்கலைக்கழகங்களே உள்ளன. ஆஸ்திரியா நம்மைவிடப் பல மடங்கு சிறிய நாடு. இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டிருக்கும் ஆண்டன் ஸாய்லிங்கர் ஆஸ்திரியாவின் 23ஆவது நோபல் விருதாளர். இங்கு பாக்சோ சூலன் கல்விச் சீர்திருத்தம் அறிமுகமான பிறகு, பயன்பாட்டு அறிவியல் ஆய்வுக்கூடங்கள் பல திறக்கப்பட்டன. அவற்றில் பல பள்ளிகளோடு நேரடித் தொடர்புடையவை. பள்ளிப் பருவத்திலிருந்தே கோடை விடுமுறையில் மாணவர்கள் அங்கு சிறப்புப் பயிற்சிகள் பெறவும் முடியும். அறிவியல் என்பதே ராக்கெட்டும் ஏவுகணையும் மட்டும்தான் என்கிற நிலை அங்கு இல்லை.
கல்லூரி – பள்ளி இணக்கம் எப்போது?: நாம் நமது கல்லூரி, பல்கலைக்கழகங்களை மட்டுமே குறை கூற முடியாது. நம் பள்ளிக் கல்வி பொதுத்தேர்வு மையக் கல்வியாக இருப்பது முதல் சிக்கல். பெரும்பாலான கலை, அறிவியல் கல்லூரிகளில் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்ட அறிவியல் பிரிவுகளான இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படிக்க ஆளில்லை. பள்ளிக் கல்வித் துறைக்கும் உயர்கல்வித் துறைக்கும் ஒரு இணக்கமும் பிணைப்பும் ஏற்பட வேண்டும். பள்ளி மாணவர்கள் ஆய்வுத் திறனை மேம்படுத்த ‘இன்ஸ்பயர்’, ‘மானக்’ போலவும் தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு போலவும் பல திட்டங்களோடு அந்தந்த ஊர்களின் கல்லூரிகள் பள்ளிக்குள் நுழைய வேண்டும். புத்தக அறிவைக் கடந்து செயல்பட பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். உண்மையான முனைவர் பட்ட ஆய்வு முயற்சிகளும் நோபல் பெறும் அளவுக்கான திருப்புமுனைக் கண்டுபிடிப்புகளும் சுயசிந்தனை, தேடல் சார்ந்தவை. வெற்று மனப்பாடப் பொதுத்தேர்வு மதிப்பெண் கல்வியைத் தூக்கி எறியாதவரை பிரதமர் இந்திராவிடம் அந்தச் சிறுமி அன்று எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நம்மால் சரியான பதிலைத் தர முடியாது என்பதே துயரமான உண்மை.
ஆயிஷா இரா.நடராசன்
கல்வியாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: [email protected]
நன்றி: இந்து தமிழ் திசை
மகாத்மா காந்தி நோபல் விருதைப் பெற முடியாது போன வெற்றியாளர் – தமிழில் தா.சந்திரகுரு
மோகன்தாஸ் காந்தி (1869-1948) அகிம்சையின் இருபதாம் நூற்றாண்டிற்கான வலுவான அடையாளமாக மாறியிருக்கிறார். பின்னோக்கிப் பார்த்து இப்போது பலராலும் அந்த இந்திய தேசியத் தலைவர் நிச்சயம் அமைதிக்கான நோபல் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. நோபல் விருதிற்காகப் பலமுறை காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த விருது அவருக்கு ஒருபோதும் வழங்கப்படவேயில்லை. நோபல் விருது காந்திக்கு ஏன் வழங்கப்படவில்லை என்ற கேள்வியுடன் – நார்வே நோபல் விருதுக் குழுவின் பார்வை குறுகிய கண்ணோட்டத்துடன் அமைந்திருந்ததா, விருதுக் குழு உறுப்பினர்கள் ஐரோப்பியர்கள் அல்லாதவர்களிடையே நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தைப் பாராட்ட முடியாதவர்களாக இருந்தார்களா, காந்திக்கு விருதை வழங்குவதால் பிரிட்டனுக்கும், தங்களுடைய நாட்டிற்கும் இடையே இருக்கின்ற உறவுக்குத் தீங்கு விளையும் என்று அவர்கள் பயந்தார்களா என்பது போன்ற கேள்விகளும் அடிக்கடி எழுப்பட்டு வருகின்றன.
1937, 1938, 1939, 1947ஆம் ஆண்டுகளிலும், இறுதியாக 1948 ஜனவரியில் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவும் காந்தியின் பெயர் நோபல் விருதிற்காகப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. தலாய்லாமாவுக்கு 1989ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்ட போது, காந்தி ஏற்கனவே புறக்கணிக்கப்பட்டது குறித்து நோபல் விருதுக்குழு உறுப்பினர்கள் தங்களுடைய வருத்தத்தைப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர். அப்போதைய விருதுக்குழுவின் தலைவர் ‘ஒருவகையில் தலாய்லாமாவிற்கான இந்த விருது மகாத்மா காந்தியின் நினைவாகவே வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுக் கூறியிருந்தார். ஆயினும் காந்திக்கு ஏன் அந்த விருது வழங்கப்படவில்லை என்பது குறித்து இருந்து வருகின்ற ஊகங்களைப் பற்றி தங்களுடைய கருத்துகளை ஒருபோதும் நோபல் குழுவினர் தெரிவித்ததே இல்லை. காந்திக்கு விருது வழங்கப்படாமை குறித்த அந்த சர்ச்சையின் மீது சிறிதளவிலாவது வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய ஆதாரங்கள் எதுவும் சமீபகாலம் வரையிலும் கிடைக்கவில்லை.
மகாத்மா காந்தி – யார் அவர்?
மிகச் சிறந்த ஆத்மா என்பதாக மகாத்மா என்றழைக்கப்படுகின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இன்றைய மேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் இருந்த சிறிய ஆட்சிப்பகுதி ஒன்றின் தலைநகராக இருந்த போர்பந்தரில் பிறந்தவர். அவரது தந்தை அங்கே முதலமைச்சராக இருந்தார். அவரது தாயார் ஆழ்ந்த ஹிந்து மதப்பற்றாளர். அவரும், காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் அகிம்சை, மதக் குழுக்களிடையே சகிப்புத்தன்மை ஆகியவற்றை மிக முக்கியமானதாகக் கருதுகின்ற ஹிந்து மதப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். இந்தியச் சமூகத்தில் மோகன்தாஸ் காந்திக்கு கிடைத்த இடத்தை அவரால் எவ்வாறு அடைய முடிந்தது என்பதற்கான மிகமுக்கியமான விளக்கமாக அவரது குடும்பப் பின்னணியே இருக்கிறது. மோகன்தாஸ் 1880களின் பிற்பகுதியில் லண்டனுக்குச் சென்று அங்கே சட்டம் பயின்றார். படிப்பை முடித்த பின்னர் இந்தியாவிற்குத் திரும்பிய அவர் அங்கே வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் 1893இல் தென்னாப்பிரிக்காவில் உள்ள நடாலுக்குச் சென்று அங்கே இருந்த இந்திய வர்த்தக நிறுவனத்தில் அவர் பணியில் சேர்ந்தார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்திய சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துகின்ற வகையிலே காந்தி அங்கே பணியாற்றி வந்தார். இனவெறிச் சட்டத்திற்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் அவர் மேற்கொண்ட அந்தப் பணியே தன்னிடம் வலுவான மத உறுதிப்பாட்டை வளர்த்துக் கொள்ளவும், சுய தியாகத்திற்கான உறுதியை ஏற்படுத்திக் கொள்ளவும் அவருக்கு வழிவகுத்துக் கொடுத்தது. அடிப்படை மனித உரிமைகளுக்காக அங்கே நடைபெற்ற போராட்டத்தில் அகிம்சை முறையை பெரும் வெற்றியுடன் காந்தி அறிமுகப்படுத்தினார்.
அவர் கடைப்பிடித்த சத்தியாக்கிரகம் என்ற ‘உண்மையான ஆற்றல்’ என்ற வழிமுறை கருத்தியல் நுட்பம் வாய்ந்ததாக இருந்தது. சட்டத்தின் ஆட்சியை நிராகரிக்காமல், நியாயமற்ற அல்லது அடக்கி வைக்கக்கூடிய சட்டங்களை இந்தியர்கள் மீற வேண்டும் என்பதைக் கொள்கையாக ஏற்றுக் கொள்வதோடு, அனைவரும் சட்டத்தை மீறியதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அமைதியாக, இன்னும் உறுதியுடன், கேள்விக்குரிய அந்த சட்டத்தின் சட்டப்பூர்வத் தன்மையை நிராகரிக்க வேண்டும் என்பதாக அந்தக் கருத்தியல் இருந்தது. அவ்வாறான நடவடிக்கை அவரது எதிரிகளை – முதலில் தென்னாப்பிரிக்க அதிகாரிகள், பின்னர் இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்கள் – தங்களுடைய சட்டங்களில் இருந்த சட்டவிரோதத்தை உணர வைத்தது.
காந்தி மீண்டும் 1915ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து சேர்ந்த போது, தென்னாப்பிரிக்காவில் அவர் செய்திருந்த சாதனைகள் குறித்த செய்திகள் அவரது சொந்த நாட்டில் ஏற்கனவே பரவியிருந்தன. சில ஆண்டுகளிலேயே – முதலாம் உலகப் போரின் போது – அவர் இந்திய தேசிய காங்கிரசில் முன்னணி நபரானார். போரின் இடைக்காலப்பகுதியில் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான அகிம்சைப் பிரச்சாரங்களை அவர் தொடங்கினார்.
அந்த நேரத்தில் இந்திய ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை ஒன்றிணைப்பதற்கான வலுவான முயற்சிகளை மேற்கொண்ட காந்தி ஹிந்து சமுதாயத்தில் இருந்த ‘தீண்டத்தகாதவர்களின்’ விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடினார். அவரது சக இந்திய தேசியவாதிகள் பலரும் திட்டமிட்ட சில காரணங்களுக்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக அகிம்சை முறைகளைப் பயன்படுத்த விரும்பினாலும், காந்தியிடமிருந்த அகிம்சையானது கொள்கை ரீதியானதாகவே இருந்தது. இந்திய தேசியவாதம் அல்லது மதம் குறித்த அணுகுமுறைக்கு அப்பாலும் மக்கள் அவர் மீது மதிப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு அகிம்சை மீது அவர் கொண்டிருந்த உறுதியே காரணமாயிற்று. சிறைத்தண்டனையை அவருக்கு விதித்த பிரிட்டிஷ் நீதிபதிகள் கூட காந்தி ஒரு விதிவிலக்கான ஆளுமை என்பதாகவே அங்கீகரித்திருந்தனர்.
அமைதிக்கான நோபல் விருதிற்கான முதல் பரிந்துரை
1930களின் முற்பகுதியில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிறுவப்பட்டிருந்த, காந்திக்கு ஆதரவாக இருந்த ‘இந்திய நண்பர்கள்’ சங்கங்களின் வலையமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் காந்தியை அதிகம் பாராட்டியவர்களில் முக்கியமானவர்களாக இருந்தனர். அந்த இந்திய நண்பர்கள் வெவ்வேறு சிந்தனைகளின் பிரதிநிதிகளாக இருந்தனர். அவர்களில் மதம் சார்ந்திருந்தவர்கள் காந்தியிடம் இருந்த பக்தியைப் பாராட்டினர். ராணுவ எதிர்ப்பாளர்கள், அரசியல் தீவிர உணர்வாளர்கள் அவரது அகிம்சை தத்துவத்தின் மீது அனுதாபம் கொண்டு அவரை ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பாளராக ஆதரித்தனர்.
1937ஆம் ஆண்டில் நார்வே ஸ்டோர்டிங் (பாராளுமன்றம்) உறுப்பினரான ஓலே கோல்ப்ஜார்ன்சன் (தொழிலாளர் கட்சி) அந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதிற்காக காந்தியின் பெயரைப் பரிந்துரைத்தார். நார்வே நோபல் குழு தயாரித்த சுருக்கப்பட்டியலில் இருந்த பதின்மூன்று பேரில் ஒருவராக காந்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டு இடம் பெற்றிருந்தார். ஆனால் காந்தியின் நியமனத்திற்கு செயலூக்கம் தருகின்ற வகையில் கோல்ப்ஜார்ன்சன் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கவில்லை. ‘இந்திய நண்பர்கள்’ அமைப்பின் நார்வே கிளையில் இருந்த முன்னணி பெண்களால் எழுதப்பட்ட கடிதத்திலிருந்த சொற்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்ற வகையிலே நேர்மறையாகவே இருந்தன.
குழுவின் ஆலோசகராக இருந்த பேராசிரியர் ஜேக்கப் வோர்ம்-முல்லர் அப்போது காந்தி குறித்து விமர்சனப்பூர்வமான அறிக்கை ஒன்றை எழுதினார். ஒருபுறம் ‘சந்தேகத்திற்கு இடமின்றி அவர் ஒரு மிகச் சிறந்த உன்னதமான துறவி – இந்திய மக்களால் தகுதியுடையவராக, மரியாதைக்குரியவராக நேசிக்கப்படுகின்ற முக்கியமான மனிதர்’ என்று ஒரு மனிதராக காந்தியைப் பற்றிய பொதுவான அபிமானத்தை அவர் முழுமையாகப் புரிந்து வைத்திருந்தார். ஆனால் மறுபுறத்தில் அரசியல் தலைவராக காந்தியைப் பற்றிய அந்த நார்வே பேராசிரியரின் விளக்கம் சற்று மட்டுப்படுத்துகின்ற வகையிலேயே இருந்தது. ‘அவரைப் பின்பற்றுபவர்களால் திருப்திகரமாக அவற்றை விளக்க முடியாத அளவிற்கு கூர்மையான திருப்பங்கள் அவருடைய கொள்கைகளில் உள்ளன(…) சுதந்திரப் போராளி, சர்வாதிகாரி, லட்சியவாதி, தேசியவாதியாக அவர் இருக்கின்றார். பொதுவாக புனிதராக இருக்கின்ற அவர் யாரும் எதிர்பாராத வகையிலே மிகச் சாதாரண அரசியல்வாதியாகவும் இருக்கின்றார்’ என்று அவர் எழுதியிருந்தார்.
சர்வதேச அமைதிக்கான இயக்கத்தில் இருந்த பலரும் காந்தி மீது விமர்சனம் கொண்டவர்களாகவே இருந்தனர். அவர்களைப் பின்பற்றி ‘காந்தி ஒரு சமாதானவாதி அல்ல, பிரிட்டிஷார் மீதான தனது வன்முறையற்ற பிரச்சாரங்கள் வன்முறையாக, பயங்கரவாதமாக மாறி விடும் என்பதை காந்தி அறிந்திருக்க வேண்டும்’ என்று நோபல் குழுவின் ஆலோசகராக இருந்தவரும் குறிப்பிட்டிருந்தார். 1920-1921இல் முதலாவது ஒத்துழையாமை இயக்கப் பிரச்சாரத்தின் போது அதுதான் உண்மையில் நடந்தது. ஐக்கிய மாகாணத்தில் இருந்த சௌரி சவுராவில் கூடியிருந்த கும்பல் காவல் நிலையம் ஒன்றைத் தாக்கியது. காவல்துறையினர் பலரைக் கொன்ற பின்னர் அந்தக் கும்பல் காவல் நிலையத்தையும் தீ வைத்துக் கொளுத்தியது.
அவர் ஓர் இந்திய தேசியவாதி என்பதே இந்தியர்கள் அல்லாதவர்களிடமிருந்து அடிக்கடி வருகின்ற காந்தி குறித்த விமர்சனமாகும். பேராசிரியர் வோர்ம்-முல்லர் தன்னுடைய அறிக்கையில் ‘தென்னாப்பிரிக்காவில் நன்கு அறியப்பட்டிருந்த அவருடைய போராட்டம் இந்தியர்கள் சார்பானதாக மட்டுமே இருந்தது; அது இந்தியர்களைக் காட்டிலும் மோசமான நிலைமையில் இருந்த கறுப்பர்கள் சார்ந்ததாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றே கூற முடியும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் காந்தியின் கொள்கைகள் உலகளாவியவையா அல்லது இந்தியத் தன்மை கொண்டவையா என்பது குறித்த சந்தேகங்களையும் அவர் எழுப்பியிருந்தார்.
செல்வுட் பிரபு சிசில் 1937ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருது பெற்றிருந்தார். அந்த ஆண்டு காந்திக்கு அமைதி விருது வழங்குவதை நார்வே நோபல் குழு தீவிரமாகப் பரிசீலித்ததா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அது சாத்தியமற்றதாகவே இருந்தது. அமைதிக்கான விருதிற்காக 1938, 1939ஆம் ஆண்டுகளில் மீண்டும் காந்தியின் பெயரை ஓலே கோல்ப்ஜார்ன்சன் பரிந்துரைத்தார். ஆனால் குழுவின் சுருக்கப்பட்டியலில் காந்தியின் பெயர் இடம் பெறவில்லை. மீண்டும் அந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்கு மேலும் பத்து ஆண்டுகள் கடந்து செல்ல வேண்டியதாயிற்று.
1947: வெற்றியும் தோல்வியும்
1947ஆம் ஆண்டில் காந்திக்கு விருது வழங்குவது குறித்த பரிந்துரைகள் இந்தியாவிலிருந்து நார்வே வெளியுறவு அலுவலகத்தின் வழியாக தந்தி மூலமாக வந்து சேர்ந்தன. பம்பாய் பிரதமராக இருந்த பி.ஜி.கெர், ஐக்கிய மாகாணங்களின் பிரதமராக இருந்த கோவிந்த் வல்லப் பந்த், இந்திய சட்டமன்றத்தின் தலைவராக இருந்த மாவ்லங்கர் ஆகியோர் காந்தியின் பெயரைப் பரிந்துரை செய்திருந்தனர்.
‘இந்த ஆண்டுக்கான நோபல் விருதிற்கு மகாத்மா காந்தியின் பெயரைப் பரிந்துரை செய்கிறேன். மகாத்மா காந்தி இந்திய தேசத்தைக் கட்டியெழுப்பியவர். தார்மீக ஒழுங்கு நிறைந்த மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். இன்றளவில் உலகின் அமைதிக்கான மிகச் சிறந்த வெற்றிவீரராக இருப்பவர்’ என்று தந்தி பாணியில் கோவிந்த் வல்லப் பந்த் எழுதியிருந்ததைப் போலவே அவரது பெயரை முன்வைத்து ஆதரித்தவர்களின் கருத்துகள் இருந்தன. ஆறு பெயர்களுடன் இருந்த நோபல் குழுவின் சுருக்கப்பட்டியலில் மோகன்தாஸ் காந்தியும் ஒருவராக இடம் பெற்றிருந்தார்.
இந்திய அரசியல் வரலாற்றில் 1937க்குப் பின்னர் காந்தியின் பங்கை முக்கியத்துவப்படுத்தி நோபல் குழுவின் ஆலோசகரும், வரலாற்றாசிரியருமான ஜென்ஸ் அருப் சீப் புதிய அறிக்கையொன்றை எழுதினார். ‘காந்தி மற்றும் அவரது இயக்கத்திற்கு மிகப்பெரிய வெற்றியையும், மிக மோசமான தோல்வியையும் ஒரே நேரத்தில் பெற்றுத் தந்த இந்திய சுதந்திரம் மற்றும் இந்தியப் பிரிவினையை நோக்கியதாகவே 1937 முதல் 1947 வரையிலான பத்து ஆண்டுகள் இருந்தன’ என்று சீப் எழுதினார். சுதந்திரத்திற்கு முந்தைய கடைசி பத்தாண்டுகளில் இந்தியர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையிலான போராட்டம்; இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் பங்கேற்பு, இறுதியாக ஹிந்து, முஸ்லீம் சமூகங்களுக்கு இடையிலான மோதல் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கையாள வேண்டியிருந்த மூன்று வெவ்வேறான ஆனாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மோதல்களின் போது காந்தி எவ்வாறு செயல்பட்டார் என்பதை அந்த அறிக்கை விவரித்தது. அந்த அனைத்து விஷயங்களிலும் காந்தி தனது அகிம்சைக் கொள்கைகளையே தொடர்ந்து பின்பற்றி வந்தார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வோர்ம்-முல்லர் எழுதிய அறிக்கையைப் போன்று காந்தியைப் பற்றி சீப் எழுதிய அறிக்கை விமர்சிக்கவில்லை. அது மிகவும் சாதகமாகவே இருந்தது என்றாலும் வெளிப்படையாக ஆதரவும் அளிக்கவில்லை. இந்தியா, புதிய முஸ்லீம் நாடான பாகிஸ்தானைப் பிரித்ததைப் பற்றியும் சீப் ‘1947 ஆகஸ்ட் 15 அன்று டைம்ஸ் பத்திரிகையில் வெளியானவாறு இந்தியப் பிரிவினை என்ற பிரம்மாண்டமான அறுவைச்சிகிச்சை மிகப் பெரிய அளவிலே ரத்தக்களரிக்கு வழிவகுக்கவில்லை என்பதற்கு காந்தியின் போதனைகள், அவரைப் பின்பற்றியவர்களின் முயற்சிகள், அவரது இருப்பு போன்றவற்றிற்கு கணிசமான பங்கு உண்டு என்றே பொதுவாக கருதப்படுகிறது’ என்று சுருக்கமாக எழுதி முடித்திருந்தது இன்றைய நிலையில் பார்க்கும் போது முதிர்ச்சியற்றதாகவே தோன்றுகிறது.
அவரது அறிக்கையைப் படித்த பின்னர் நார்வே நோபல் குழுவின் உறுப்பினர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக்கட்டம் குறித்து புதிய தகவல்களைப் பெற்றதாக உணர்ந்திருக்க வேண்டும். இருப்பினும் அமைதிக்கான நோபல் விருது அதுபோன்ற போராட்டங்களுக்காக ஒருபோதும் வழங்கப்பட்டதே இல்லை. அகிம்சையின் அடையாளமாக காந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் 1947ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் அமைதியற்று இருந்த நிலையில், மிக முக்கியமான இந்தியத் தலைவருக்கு அமைதிக்கான விருது வழங்கப்பட்டால் அதன் மூலம் என்னவிதமான அரசியல் விளைவுகளை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்பது போன்ற விஷயங்களையும் குழு உறுப்பினர்கள் பரிசீலிக்க வேண்டியிருந்தது.
நோபல் குழு உறுப்பினர்கள் 1947 அக்டோபர் 30 அன்று தங்கள் முடிவை எடுத்த போது, குழுவிலிருந்த இரண்டு செயற்குழு உறுப்பினர்களான கிறிஸ்தவ பழமைவாதியான ஹெர்மன் ஸ்மிட் இங்க்பிரெட்சன், தாராளவாத கிறிஸ்தவரான ஆஃப்டெடல் ஆகியோர் காந்திக்கு ஆதரவாகப் பேசினர் என்பதை குழுவின் தலைவராக இருந்த குன்னர் ஜானின் நாட்குறிப்பில் இருந்து இப்போது நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கு ஓராண்டிற்கு முன்னதாக அவர்கள் இருவரும் ஒய்.எம்.சி.ஏ தலைவராக இருந்த ஜான் மோட்டை தீவிரமாக ஆதரித்தனர். பொதுவாக அவர்கள் சமூக மற்றும் கருத்தியல் மோதல்களால் அச்சுறுத்தப்பட்டுள்ள உலகில் தார்மீகம், மத அடையாளங்களுடன் பணியாற்றக் கூடியவர்களை விரும்பியதாகவே தெரிகிறது. இருப்பினும் அவர்களால் 1947ஆம் ஆண்டு மற்ற மூன்று உறுப்பினர்களைச் சமாதானப்படுத்த முடியவில்லை. தொழிலாளர் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி மார்ட்டின் டிரான்மல் இந்திய-பாகிஸ்தான் மோதல்களுக்கு மத்தியில் காந்திக்கு விருது வழங்கப்படுவது குறித்து மிகுந்த தயக்கம் காட்டினார். டிரான்மலுடன் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிர்கர் பிராட்லாண்ட் உடன்பட்டிருந்தார். போரில் ஈடுபாடு கொள்வதற்கு மிகவும் ஆதரவானவராக காந்தி இருந்தார் என்றே அவர்கள் கருதினார்கள்.
ஒரு மாதத்திற்கு முன்பாக நடைபெற்றதொரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி வெளியிட்டிருந்த அறிக்கை அவர் போரை தொடர்ந்து நிராகரிப்பதை கைவிட்டு விட்டதைக் குறிப்பதாக இருந்ததாக டிரான்மல், ஜான் இருவரும் உணர்ந்தனர். ‘பாகிஸ்தானுடனான ‘போரில்’ திரு.காந்தி’ என்ற தலைப்பில் 1947 செப்டம்பர் 27 அன்று வெளியான ராய்ட்டர்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் தந்தியில் ‘இன்றிரவு காந்தி தனது பிரார்த்தனைக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்: தான் எப்போதுமே எல்லா யுத்தங்களையும் எதிர்த்து வந்திருந்தாலும், பாகிஸ்தானிடமிருந்து நீதியைப் பெறுவதற்கு வேறு வழியில்லை என்றால், பாகிஸ்தான் தொடர்ந்து தனது நிரூபிக்கப்பட்ட பிழைகளைக் கண்டு கொண்டு, அவற்றை அகற்றிக் கொள்ள மறுப்பதைத் தொடருமானால், இந்திய ஒன்றிய அரசு அதற்கு எதிராகப் போருக்குச் செல்ல வேண்டும். போரை யாரும் விரும்பவில்லை என்றாலும் நீதியைத் தாங்கிக் கொள்ளுமாறு ஒருபோதும் யாரையும் அறிவுறுத்த முடியாது. நியாயமான காரணத்திற்காக அனைத்து ஹிந்துக்களும் நிர்மூலமாக்கப்பட்டால் தான் கவலைப்படப் போவதில்லை. போர் என்று வந்தால், பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் பாராமுகமாக ஐந்தாவது தூணாக இருக்க முடியாது. பாகிஸ்தானுடன் விசுவாசமாக இருக்க முடியாவிட்டால் அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். அதேபோன்று பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருக்கின்ற முஸ்லீம்கள் இந்திய ஒன்றியத்தில் இருக்கக்கூடாது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனடியாக ‘அந்த அறிக்கை சரியானதுதான் என்றாலும் முழுமையானது அல்ல’ என்று காந்தி கூறியிருந்தார். அந்தக் கூட்டத்தில் தனது எண்ணத்தை தான் மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறிய காந்தி ‘அவர்கள் விரும்புகின்ற ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் அவை போன்ற எதையும் புதிய அரசாங்கம் கொண்டிருப்பதை தான் விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முதலாவது வந்த அந்த அறிக்கை முழுமையானது இல்லை என்பதை ஜான், டிரான்மல் இருவருமே அறிந்திருந்தனர் என்றாலும் அவர்கள் சந்தேகத்துடனே இருந்தனர். தன்னையே மேற்கோள் காட்டிக் கொண்ட ஜான் ‘பரிந்துரைக்கப்பட்டவர்களிலே அவர் (காந்தி) மிகப் பெரிய ஆளுமை என்பது உண்மைதான் என்றாலும், – அவரைப் பற்றி ஏராளமான நல்ல விஷயங்களைச் சொல்ல முடியும் – அவர் அமைதிக்கான தூதர் மட்டுமே அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்; முக்கியமாக அவர் ஒரு தேசபக்தர்(…) மேலும் காந்தி அப்பாவி இல்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். அவர் ஒரு சிறந்த நீதிபதி, வழக்கறிஞர்’ என்று தன்னுடைய நாட்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கை என்றே ஒரு மாதத்திற்கு முன்னதான காந்தியின் அறிக்கையை விருதுக் குழுத்தலைவர் சந்தேகித்ததாகத் தெரிகிறது. 1947ஆம் ஆண்டு இருந்த ஐந்து உறுப்பினர்களில் மூன்று பேர் காந்திக்கு விருது வழங்குவதை எதிர்த்ததால், அந்த விருதை குவாக்கர்ஸ் குழுவிற்கு வழங்க அந்தக் குழு ஒருமனதாக முடிவு செய்தது.
1948: மரணத்திற்குப் பிந்தைய விருது வழங்க கருதப்பட்டது
அந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதைப் பரிந்துரைப்பதற்கான இறுதி நாளுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் 1948 ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். காந்தியின் பெயரைக் குறிப்பிட்டு குழுவிற்கு ஆறு கடிதங்கள் கிடைத்திருந்தன. பரிந்துரைத்தவர்களில் குவாக்கர்ஸ் மற்றும் அதற்கு முன்னால் விருது பெற்றிருந்த எமிலி கிரீன் பால்ச் ஆகியோரும் அடங்குவர். குழுவின் சுருக்கப்பட்டியலுக்குள் மூன்றாவது முறையாக காந்தி இடம் பெற்றார் – இந்த முறை அந்தப் பட்டியலில் மூன்று பெயர்கள் மட்டுமே இருந்தன. காந்தியின் வாழ்க்கையின் கடைசி ஐந்து மாதங்களில் அவரது நடவடிக்கைகள் குறித்து குழுவின் அறிக்கையை குழுவின் ஆலோசகரான சீப் எழுதினார். தனது வாழ்க்கை முறையின் மூலமாக நெறிமுறை மற்றும் அரசியல் அணுகுமுறையில் தன்னுடைய ஆழ்ந்த அடையாளத்தை காந்தி ஏற்படுத்தி வைத்திருக்கிறார். ‘இந்த விஷயத்தில் காந்தியை மதங்களின் நிறுவனர்களுடன் மட்டுமே ஒப்பிட முடியும்’ என்று குறிப்பிட்டு இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் அது ஒரு தரமுறையாக ஏராளமான மக்களிடம் நிலவுகிறது என்று முடித்திருந்தார்.
மரணத்திற்குப் பின் யாருக்கும் அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டதில்லை என்றாலும், சில சூழ்நிலைகளில் நோபல் விருதுகள் மரணத்திற்குப் பின்னரும் வழங்கப்படலாம் என்றே அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்த நோபல் அறக்கட்டளையின் விதிகள் இருந்தன. அதனால் காந்திக்கு விருது வழங்க முடியும் என்பதற்கான சாத்தியம் இருக்கவே செய்தது. இருப்பினும் காந்தி ஓர் அமைப்பைச் சார்ந்தவர் அல்ல, எந்தவொரு சொத்தையும் அவர் விட்டுவிட்டுச் செல்லவில்லை, தன்னுடைய இறுதி விருப்பத்தையும் அவர் எழுதி வைக்கவில்லை என்பதால் விருதிற்கான பணத்தை யாரிடம் தருவது என்று கேள்வியெழுந்தது.
நார்வே நோபல் நிறுவனத்தின் இயக்குனரான ஆகஸ்ட் ஷூ, மரணத்திற்குப் பின் விருதை குழு வழங்கினால் ஏற்படுகின்ற நடைமுறை விளைவுகளைப் பரிசீலிக்குமாறு குழுவின் ஆலோசகர்களில் ஒருவரான வழக்கறிஞர் ஓலே டோர்லீஃப் ரீட்டிடம் கேட்டுக் கொண்டார். பொதுப் பயன்பாட்டிற்குப் பணத்தைப் பயன்படுத்தும் வகையிலான சாத்தியமான பல தீர்வுகளை ரீட் பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து அவர் சுவீடனில் உள்ள விருது வழங்கும் நிறுவனங்களின் கருத்தையும் கேட்டறிந்தார். அந்த நிறுவனங்களின் பதில்கள் எதிர்மறையாகவே இருந்தன. அந்த நிறுவனங்கள் விருது வழங்குவதென குழுவின் முடிவு எடுக்கப்பட்ட பின்னர், விருது பெற்றவர் இறந்தாலொழிய மரணத்திற்குப் பிந்தைய விருதுகளைத் தரக்கூடாது என்றே கருதின.
‘விருதைப் பெறுவதற்கு உயிருடன் வாழ்ந்து வருகின்ற பொருத்தமானவர் யாரும் இல்லை’ என்ற அடிப்படையில் அந்த ஆண்டு யாருக்கும் விருதை வழங்குவதில்லை என்று 1948 நவம்பர் 18 அன்று நார்வே நோபல் குழு முடிவு செய்தது. ‘மரணத்திற்குப் பிந்தைய விருது என்பது விருதை நிறுவியவரின் இறுதி விருப்பத்தின் நோக்கங்களுக்கு முரணானது என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை’ என்று குழுவின் தலைவரான குன்னர் ஜான் தனது நாட்குறிப்பில் எழுதினார். முடிவில் தலைவரின் கூற்றை அவரது மூன்று சகாக்களும் ஏற்றுக் கொண்டனர். ஆப்டெடல் மட்டுமே மரணத்திற்குப் பிந்தைய விருது காந்திக்கு தரப்படுவதற்கு ஆதரவாக இருந்தார்.
‘உயிருடன் வாழ்ந்து வருகின்ற பொருத்தமானவர் யாருமில்லை’ என்று அறிவித்தது குறித்து, காந்தியைத் தவிர்த்து அமைதிக்காகப் பணிபுரிந்த, இறந்து போன வேறொருவரை அதாவது 1948 செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்டிருந்த பாலஸ்தீனத்திற்கான ஸ்வீடனின் ஐ.நா.தூதரான கவுண்ட் பெர்னாடோட்டை அந்தக் குழு மனதில் கொண்டிருந்ததாக பின்னர் ஊகங்கள் எழுந்தன. 1948இல் விருதிற்காக பெர்னாடோட் பரிந்துரைக்கப்படவில்லை என்பதால் அந்த ஊகங்களை நிராகரித்து விடலாம்.
ஆக, இன்னும் ஓராண்டு காந்தி உயிருடன் இருந்திருந்தால் அமைதிக்கான நோபல் விருதைப் பெறுவதற்காக அவர் ஒஸ்லோவுக்கு அழைக்கப்பட்டிருப்பார் என்று கருதுவதற்கான நியாயம் இருக்கவே செய்கிறது.
அமைதிக்கான நோபல் விருது காந்திக்கு ஏன் வழங்கப்படவே இல்லை?
அமைதிக்கான நோபல் விருது கிட்டத்தட்ட ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களுக்கு மட்டுமே 1960ஆம் ஆண்டு வரையிலும் வழங்கப்பட்டிருந்தது. பின்னோக்கிப் பார்த்தால், நார்வே நோபல் குழுவின் பார்வை மிகவும் குறுகியதாக இருப்பதாகத் தோன்றலாம். காந்தி ஏற்கனவே அந்த விருதைப் பெற்றவர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானவராக இருந்தார். அவர் உண்மையான அரசியல்வாதியோ அல்லது சர்வதேச சட்டத்தை ஆதரிப்பவரோ அல்ல. முக்கியமாக அவர் மனிதாபிமான நிவாரணப் பணியாளரோ அல்லது சர்வதேச அமைதி மாநாடுகளின் அமைப்பாளரோ அல்ல என்பதால் ஒருவேளை விருது கிடைத்திருந்தால், நிச்சயம் அந்த விருதைப் பெற்ற புதிய இனத்தைச் சார்ந்தவராகவே அவர் இருந்திருப்பார்.
காந்திக்கு வழங்கப்படுகின்ற விருது குறித்து பிரிட்டிஷ் எதிர்விளைவை ஏற்படுவதற்கான சாத்தியத்தை நார்வே நோபல் குழு கருத்தில் கொண்டதாக எந்த குறிப்பும் காப்பகங்களில் இல்லை. ஆகவே பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தூண்டி விட விரும்பாததாலேயே அந்தக் குழுவின் உறுப்பினர்கள் காந்தியைத் தவிர்த்தனர் என்பதாக ஏற்பட்டிருந்த கருதுகோள் நிராகரிக்கப்படலாம் என்றே தோன்றுகிறது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் 1947ஆம் ஆண்டில் இடையில் ஏற்பட்ட மோதலும், காந்தியின் பிரார்த்தனைக் கூட்ட அறிக்கையும் காந்தி தன்னிடமிருந்த நிலையான சமாதானக் கொள்கையை கைவிட்டுவிடப் போகிறாரா என்று பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதே குழுவின் பெரும்பான்மை மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்படாததற்கு முதன்மைக் காரணங்களாக இருந்திருப்பதாகத் தெரிகிறது. இன்றைய நிலைமையைப் போல் அமைதிக்கான விருதை பிராந்திய மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான தூண்டுதலாகப் பயன்படுத்த நார்வே நோபல் குழு முயன்று பார்க்கும் பாரம்பரியம் அன்றைக்கு இருந்திருக்கவில்லை.
தனது வாழ்க்கையின் கடைசி மாதங்களில், இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் எழுந்த வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர காந்தி கடுமையாக உழைத்தார். குன்னர் ஜானின் நாட்குறிப்பில் நவம்பர் 18 அன்று எழுதியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ள பதிவைத் தவிர, 1948ஆம் ஆண்டில் காந்தியின் பெயரைப் பரிசீலித்த நார்வே நோபல் குழுவின் விவாதங்களைப் பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. ஆனாலும் மரணத்திற்குப் பிந்தைய விருதை காந்திக்கு வழங்குவது குறித்து அவர்கள் தீவிரமாக கருத்தில் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. முறையான காரணங்களின் அடிப்படையில் அந்த விருதை வழங்காமல் 1948க்கான விருது தொகையை செலவழிக்க வேண்டாம் என்றும், அந்த விருதை ஓராண்டு காலம் கழித்து வழங்கிட முன்பதிவு செய்து வைப்பது என்றும் அந்தக் குழு முடிவு செய்தது. விருது பெற்றவர்களின் பட்டியலில் மகாத்மா காந்திக்கு இடம் இருக்க வேண்டும் என்று பலரும் கருதினாலும், மௌனத்துடன் மரியாதையாக அந்த முடிவு எடுக்கப்படாமலே கைவிடப்பட்டது.
https://www.nobelprize.org/prizes/themes/mahatma-gandhi-the-missing-laureate/
நன்றி: நோபல் விருது இணையதளம்
தமிழில் தா.சந்திரகுரு
நூல் மதிப்புரை: அப்துல்ரஜாக் குர்னாவின் தி லாஸ்ட் கிஃப்ட் – பெ.விஜயகுமார்
புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் துயரம்
டான்சானியா நாட்டின் ஜான்ஜிபர் தீவில் பிறந்து இங்கிலாந்தில் வாழும் அப்துல்ரஜாக் குர்னா 2021ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் விருதைப் பெற்றுள்ளார். காலனிய ஆட்சியின் கொடூரங்களையும், அகதிகளின் வாழ்வியல் சோகங்களையும் தன்னுடைய புனைவிலக்கியங்களில் சித்தரித்துள்ளார். ’பாரடைஸ்’, ’ஆஃப்டர் லைவ்ஸ்’ ‘தி லாஸ்ட் கிஃப்ட்’ போன்ற பத்து நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ள குர்னா மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார். சல்மான் ருஷ்டி, குகி வா தியாங்கோ, வி.எஸ்.நைபால் ஆகியோரின் படைப்புகள் குறித்து ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். 1968இல் தன்னுடைய பதினெட்டு வயதில் ஜான்ஜிபர் தீவில் ஏற்பட்ட இனக் கலவரத்திலிருந்து தப்பிக்கவும், தன்னுடைய மேற்படிப்புக்காகவும் இங்கிலாந்து வந்த குர்னா அங்கேயே நிரந்தரமாகக் குடியேறியுள்ளார். கெண்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் பின்காலனிய இலக்கியத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தன் படைப்புகள் அனைத்தையும் ஆங்கிலத்தில் எழுதினாலும் வாய்ப்புகள் கிடைக்குமிடத்தில் தாய்மொழியான சுவாஹிலியின் சொல்லாடல்களையும் குர்னா பயன்படுத்துகிறார்.
குர்னா 2011இல் எழுதிய ’தி லாஸ்ட் கிஃப்ட்’ நாவல் இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் ஒரு குடும்பத்தினர் சந்திக்கும் இன, நிறப்பாகுபாடுகள் பிரச்சனைகளைச் சித்தரிக்கிறது. நாவலில் தந்தை அப்பாஸ், தாய் மரியம், மகள் ஹனா, மகன் ஜமால் ஆகியோர் மட்டுமே முக்கிய கதாபாத்திரங்களாக நடமாடுகிறார்கள். அப்பாஸ் பதினெட்டு வயதில் ஜான்ஜிபரிலிருந்து தப்பித்து இங்கிலாந்து வந்தவர். பதினைந்து ஆண்டு காலம் கப்பலில் வேலை செய்துவிட்டு இங்கிலாந்தின் எக்சிடர் எனும் சிறு நகரத்தில் ஒரு தொழிற்சாலையில் இன்ஜினியராக நிரந்தர வேலையில் சேருகிறார். தன்னுடைய 34ஆம் வயதில் மரியம் என்ற 17 வயதுப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அனாதைப் பெண்ணான மரியம் தன் வளர்ப்புத் தாய் தந்தையரிடம் சொல்லிக் கொள்ளாமல் அப்பாஸுடன் ஓடி வந்து விடுகிறார். இருவரும் கருத்தொருமித்த தம்பதிகளாக வாழ்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் ஹனாவையும், ஜமாலையும் நன்கு வளர்த்து ஆளாக்குகிறார்கள். ஹனா படிப்பை முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியையாகச் சேரவிருக்கிறாள். அவள் தன்னுடன் படித்த நிக் என்ற வெள்ளைக்கார இளைஞனைக் காதலிக்கிறாள். ஜமால் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாக இருக்கிறான்.
நன்கு திடகாத்திரமாக இருந்த அப்பாஸ் தன்னுடைய 63ஆவது வயதில் திடீரென்று நோயில் விழுகிறார். பேச்சுத் திறனை இழந்து படுத்த படுக்கையாகிறார். தன்னுடைய வேலையில் தொடர்ந்து கொண்டே மரியம் கணவருக்குப் பணிவிடையும் செய்து வருகிறார். தன்னை அன்புடன் நேசித்த அப்பாஸின் இளமைக்கால வாழ்வைப் பற்றி அறிந்து கொள்ள மரியம் விரும்பியதில்லை. அவரும் சொல்லியதில்லை. என்றேனும் ஒரு நாள் மரியத்திடமும், தனது பிள்ளைகளிடமும் தன்னுடைய பழைய வாழ்க்கை ரகசியங்களைச் சொல்லிடவே அப்பாஸ் விரும்பினார். சற்றும் எதிர்பாராமல் அவர் படுக்கையில் விழுந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. தங்களுடைய தாய் தந்தையரின் இளமைக்கால வாழ்க்கை பற்றி அறியும் ஆவல் பொதுவாகவே குழந்தைகளுக்கு இருப்பதுண்டு. ஹனாவும் ஜமாலும் தந்தையைப் பார்க்க ஓடோடி வருகிறார்கள். தந்தையின் உடல்நிலை கண்டு மனம் கலங்குகிறார்கள். அப்பாஸுக்குச் சிகிச்சை அளித்திடும் மருத்துவரும் பேச்சுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்கிறார். பயிற்சியாளர் அப்பாஸிடம் ஒரு டேப் ரிக்கார்டரைக் கொடுத்து முடியும் போதெல்லாம் அவரது வாழ்க்கை வரலாற்றை வாய்மொழியாகச் சொல்லி பதியச் சொல்கிறார். தினமும் சிறிது சிறிதாக பதிவாகும் தந்தையின் இளமைக்கால வாழ்க்கையை ஹனா ஓரிரவு முழுவதும் கேட்கிறார்.
துயருற்ற தன் தந்தையின் கடந்த கால வாழ்வை அறிந்து மனமுருகுகிறார். அப்பாஸ் எதிர்பார்த்தது போல் மரியமும், குழந்தைகளும் அவரின் கடந்த கால வாழ்க்கையின் மீது கோபமோ, வெறுப்போ அடையவில்லை. அவர் மீதான அன்பும், நெருக்கமும் அதிகரிக்கவே செய்கின்றன. அப்பாஸின் வாழ்க்கை முழுவதும் வலிகளால் நிறைந்திருந்ததை எண்ணி கண்ணீர் மல்குகின்றனர் அப்பாஸ் ஜான்ஜிபர் தீவில் படிப்பை முடித்து பள்ளி ஆசிரியராகப் பணி ஏற்கும் சமயத்தில் குடும்பத்தினர் அவருக்கு அவசரத் திருமணம் நடத்தி வைக்கின்றனர். அந்தப் பெண் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியிருப்பதை அப்பாஸ் அறிந்து அதிர்ச்சி அடைகிறார். தனக்கிழைக்கப்பட்ட துரோகத்தை நினைத்து வருந்துகிறார். குடும்பத்தையும், நாட்டையும் விட்டுவிட்டு ஓடிவிட நினைக்கிறார். ஜான்ஜிபர் துறைமுகத்தில் நின்றிருந்த வணிகக் கப்பலில் ஏறி ஒளிந்து கொள்கிறார். துறைமுகத்தைவிட்டு கப்பல் நகர்ந்து வெகுதூரம் சென்ற பின்னரே அப்பாஸ் ஒளிந்திருந்ததைக் கண்டுபிடிக்கின்றனர். கப்பலில் வேலையாள் தேவைப்பட்டதால் அவரை வேலைக்குச் சேர்த்துக் கொள்கின்றனர். அப்பாஸ் தன்னுடைய வாழ்வில் பதினைந்து ஆண்டு காலம் கப்பலில் பணிசெய்து கழிக்கிறார்.
கப்பலில் உலகின் பல நாடுகளுக்கும் பயணித்து பல துறைமுக நகரங்களையும் பார்க்கும் வாய்ப்பு அப்பாஸுக்குக் கிடைக்கிறது. ஒருமுறை கப்பல் சில நாட்கள் தென்னாப்பிரிக்கத் துறைமுகம் டர்பனில் நங்கூரமிட்டிருந்த போது ஓர் இஸ்லாமியப் பெண்ணுடன் பழகுகிறார். அது காதலாக மலரும் முன்னர் கப்பல் புறப்பட்டு விடுகிறது. அதேபோல் மொரிஷியஸ் தீவில் லூயி துறைமுகத்திலும் கிளெய்ர் எனும் பெண்ணிடமான ஈர்ப்பும் ஒரு சில நாட்களே நீடிக்கின்றது, கப்பல் வேலையை விட்டுவிட்டு இங்கிலாந்தில் எக்சிடர் நகரத்தில் நிலையான வேலையில் அமர்ந்ததும் மரியம் மீதான காதல் வெற்றியில் முடிந்திட அழகான குடும்பம், அமைதியான வாழ்க்கை என்றாகிப் போகிறது. இருப்பினும் ஜான்ஜிபர் தீவில் விட்டுவந்த பெண், அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தை பற்றிய நினைவுகள் அவரின் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கின்றன. சில சமயங்களில் அவரிடம் குற்ற உணர்வும் மேலிட்டது. தன் வாழ்வின் ரகசியங்களை எல்லாம் சொல்லித் தீர்த்த சில நாட்களிலேயே அப்பாஸ் இறந்து விடுகிறார்.
தங்கள் தந்தையின் பால்ய கால வாழ்வை அறிந்த பிள்ளைகள் இருவரும் தங்கள் தாயின் வேர்களையும் தேடிக் கண்டுபிடிக்க நினைக்கிறார்கள். மரியம் தன்னைத் தத்தெடுத்து வளர்த்த அந்த இரண்டு நல்ல உள்ளங்களைப் பார்த்து மன்னிப்புக் கேட்க விரும்புகிறார். அப்பாஸைத் திருமணம் செய்தபோது அவர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் ஓடிவந்த குற்றம் அவள் மனதை உருத்திக்கொண்டிருந்தது. ஹனாவும், ஜமாலும் அவர்களின் இருப்பிடம் அறிந்து மரியத்தை அங்கே கூட்டிச் செல்கிறார்கள். அந்திமக் காலத்தில் இருந்த தன்னுடைய வளர்ப்புத் தந்தையையும், தாயையும் கண்டு மனம் நெகிழ்ந்து மரியம் மன்னிப்புக் கேட்கிறார். அவர்களின் மன்னிப்பையும், ஆசியையும் பெற்று மனம் நிறைவடைகிறார் மரியம். இதுவே பிள்ளைகள் ஹனாவும், ஜமாலும் தங்கள் தாய்க்குக் கொடுக்கும் ’கடைசிப் பரிசா’கும் தங்கள் தந்தை பிறந்து வளர்ந்த ஜான்ஜிபர் தீவுக்கு பயணத்தை மேற்கொள்ள இருவரும் திட்டமிடுவதுடன் நாவல் முடிவடைகிறது.
அப்பாஸ் – மரியம் தம்பதிகளுக்கு அடுத்தபடியாக ஹனாவும் ஒரு பருமனான கதாபாத்திரமாக நாவலில் தென்படுகிறாள். தன்னுடைய பள்ளி, கல்லூரி, வேலை பார்க்குமிடம், மால்கள், அலுவலகங்கள், ரயில், பஸ் பயணங்கள் போன்ற பொதுவெளிகளில் எல்லாம் வெள்ளையின மக்கள் கடைப்பிடிக்கும் நிறப் பாகுபாடு அவளுடைய மனதில் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்துகிறது. அவள் பல முறை அவர்களின் புறக்கணிப்பையும், நிராகரிப்பையும் அனுபவித்துள்ளாள். ஹனாவின் வாழ்வில் காதல் மலருகிறது, நிக் என்ற வெள்ளைக்கார இளைஞனைக் காதலிக்கிறாள். ஆனால் நிறமும், இனமும் அவர்களின் காதலுக்கு குறுக்கே நிற்கும் என்பதை மிகவிரைவில் புரிந்து கொள்கிறாள். ஒரு முறை நிக் குடும்பத்தினருடன் ஹனா சுற்றுலா செல்கிறாள். நிக்கின் சித்தப்பா ஹனாவின் பூர்வீகத்தைத் தெரிந்து கொள்ள விரும்பி அவளிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார். தான் ஒரு பிரிட்டிஷ் பெண் என்று திரும்பத் திரும்ப அவரிடம் ஹனா சொல்கிறாள். அதில் தவறேதும் இல்லை என்றும் நினைக்கிறாள். அதுதானே உண்மை. இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த தனக்கு இங்கிலாந்தின் குடியுரிமை கிடைத்தும் இவர்களால் ஏன் தன்னை ஒரு இங்கிலாந்துப் பெண்ணாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று ஆதங்கப்படுகிறாள்.
நிறப்பாகுபாட்டிற்கும், நிறவெறிக்கும் இடையிலான இடைவெளி மெல்லிய நூலிழை அளவுதானே! அது எப்போது அறுந்து போகும் என்று யாரறிவார். ஹனாவின் காதலன் நிக் விரைவில் அதை வெளிப்படுத்தி விடுகிறான். அவனுக்கு வேறொரு வெள்ளைக்காரப் பெண் மீது காதல் இருப்பதை அறிகிறாள். அதைச் சுட்டிக் காட்டியதும் குற்றவுணர்வு ஏதுமின்றி அதை ஒத்துக் கொள்ளும் நிக் அவளைக் கலவியின்பத்திற்கு அழைக்கிறான். “இதுவே நமது கடைசி துய்ப்பாக இருக்கட்டும்” என்று ஆணவத்துடன் அவளைக் கூப்பிடுகிறான். அவனைப் பொறுத்தவரை கறுப்பினப் பெண்கள் பாலியல் சுகத்திற்கு மட்டுமே தகுதியானவர்கள். திருமணத்திற்கு ஏற்றவர்கள் அல்ல.
நாவல் முழுவதும் அப்துல்ரஜாக் குர்னா நிறம் மற்றும் இனப்பாகுபாட்டின் பல்வேறு வடிவங்களை நமக்குச் சுட்டிக்காட்டிச் செல்கிறார். அதே சமயம் அதைக் குறிப்பிடும் போது கோபம், ஆத்திரம், ஆவேசம் அடையாமல் வன்முறை வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் மென்மையான மொழியில் சொல்கிறார். அமைதியான மொழிநடையில் அதே சமயத்தில் அழுத்தமாக, உறுதியாக வெள்ளையின மக்களின் பாகுபாட்டை, வெறுப்பைச் சொல்லி விட முடியும் என்பதை நிரூபிக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
தமிழ் நாவலாசிரியர் பூமணி இங்கு நினைவுக்கு வருகிறார். தன்னுடைய ‘பிறகு’ ‘வெக்கை’ போன்ற நாவல்களில் வன்முறைகளற்ற மென்மையான மொழிநடையைக் கொண்டு சாதி இந்துக்கள் கடைப்பிடிக்கும் சாதியப் பாகுபாடுகளை, வெறியை பூமணியால் விவரித்துவிட முடிகிறது. ஆர்ப்பாட்டமும், ஆவேசமும் இன்றி அவரால் தலித்துகளின் வலியை, சோகத்தை, துயரங்களைச் சொல்லி விட முடிகிறது. அது போன்றே அப்துல்ரஜாக் குர்னாவாலும் வெள்ளை இனத்தவர்களின் பாகுபாட்டை, வெறியை அமைதியும், மென்மையும் கொண்ட மொழி கொண்டே சித்தரிக்க முடிகிறது. அதுவே குர்னாவின் வெற்றியாகும்.
இலக்கியத்திற்கான நோபல் விருது குறித்த அறிவிப்பு வருவதற்கு முன்பாக கனடாவின் மார்கரெட் அட்வுட், ஜப்பானைச் சார்ந்த எழுத்தாளர் ஹருகி முராகாமி, நைஜிரியாவின் குகி வா தியாங்கோ, பிரான்சின் ஆனி எர்னோ போன்றவர்களில் எவரேனும் ஒருவரே நோபல் விருதை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்துல்ரஜாக் குர்னா விருதை வென்றிருப்பது இலக்கிய ஆர்வலர்களை வியப்பிலே ஆழ்த்தியுள்ளது. அப்துல்ரஜாக் குர்னா நோபல் விருது பெறுவதற்கு முழுமையான தகுதி கொண்டவர் என்பதற்கு அவரின் படைப்புகளே சாட்சியமாக நிற்கின்றன.
பெ.விஜயகுமார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74 – சுகந்தி நாடார்
என்ன மாதிரியான விழிப்புணர்வு?
சிறந்த கல்வியின் அடிப்படை உன்னதமான கல்வி வளங்களும் மனிதநேயம் வளர்க்கும் ஆசிரியர்களும். இவை இரண்டும் உருவாக தகவல்தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு தேவை.
விழிப்புணர்வின் அடுத்தப்பக்கம் நமது சமூக வலைதளங்களில் வரும் செய்திகள். இணையதளம் என்பதை virtual என்று கூடக் கேள்விப்பட்டு இருக்கின்றோம். அப்படி என்றால்
carried out, accessed, or stored by means of a computer, especially over a network என்று Oxford ஆங்கில அகராதி கூறுகின்றது. இதையே தமிழில் நடைமுறையில் மெய்யான , செயலளவில் மெய்யாகக் கொள்ளத்தக்க என்று அகராதி கூறுகின்றது. அதே virtual என்ற சொல்லை கணினிக் கலைச்சொல்லாக பார்க்கும் போது மெய்நிகர் என்ற சொல்லை நாம் பயன்படுத்துகின்றோம். மெய்நிகர் என்றுதான் கூறுகின்றோமேத் தவிர மெய் என்று சொல்வதில்லை. மெய்க்கு நிகரான ஒன்று மெய்யாகி விட முடியுமா? இதையே தான் Oxford ஆங்கில அகராதியும் not physically existing as such but made by software to appear to do so என்று இன்னோரு விளக்கமும் அளிக்கின்றது. தமிழில் மாயம், மறைமுகம் கற்பனை என்று கூட இச்சொல்லுக்கு பொருள் இருக்கின்றது. இந்த அடிப்படையைக்கூட உணராமல் நாம் இணையத்தில் வரும் தகவல்களை நம்பிச் செயலாற்றிக் கொன்டு இருக்கின்றோம்.
இன்று உலகில் வலம்வரும் செய்திகளில் பெரும்பான்மையான பங்கு முகநூல் வழியாகத் தான் பகிரப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதில் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் உண்மையான மனிதர்களா அல்லது வர்த்தகங்களா என்ற விவரம் முகநூல் நிறுவனத்திற்கு அன்றி வேறு யாருக்கும் தெரியாது. இந்தப் பயனாளர்கள் இடும் செய்திகள் எந்த வகையைச் சார்ந்தவை என்பதும் முகநூலுக்குத் தான் தெரியும். 2021ம் ஆண்டு டிசம்பர் பதினாறாம் தேதி வெளிவந்த அறிக்கையில் முகநூல் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான மெட்டா (meta) கொடுத்துள்ள அறிக்கையில் பல தனியார் அவதானிப்பு (surveillance) நிறுவனங்கள் ஏறத்தாழ 50000 பயனர்களை தாக்கி அவர்களிடமிருந்து விவரங்களை எடுத்து அதை வைத்து உளவு நடத்தி இருப்பதாக அறிவிக்கைத் தெரிவித்து உள்ளது.
நவம்பர் ஒன்பதாம் தேதி முகநூல் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் வெளிவரும் ஒவ்வொரு 10,000 பதிவுகளில் பயனாளர்களை அச்சுறுத்தியும் கோபப்படுத்தியும் மன உளைச்சல் கொடுத்தும் தொந்தரவு கூட பதிவுகள் 14 அல்லது 15 முறை வருகின்றன என்று கூறுகின்றது. இவ்வாறு தவறு இழைக்கும் பயனர்களின் கணக்கை முடக்கியும், அல்லது அவர்கள் மீது வழக்குத் தொடுத்தும் வருகிறது முகநூல்.
முகநூல் கொடுக்கும் தண்டனைகளில் முக்கியமானது இம்மாதிரி பதிவுகளைப் பற்றி எச்சரிக்கையை மற்றப் பயனர்களுக்குக் கொடுப்பதும். அப்பதிவுகளை பயனர்கள் பார்க்காதவாறு கீழே தள்ளுவதுமே தவிர இந்தச் செய்திகளை முழுமையாக அவர்களின் தளத்திலிருந்து எடுப்பதில்லை. அப்படியானால் நாம் மின்னியியல் வழி நுகரும் செய்திகளில் எது உண்மையானது? எது பொய்யானது? எது நிகழ்வுகளைத் தெரிவிக்கப் பயன்படுத்தபடுகிறது? எது நம் உணர்வுகளைத் தூண்டி செயல்பட வைக்கிறது.
ஒருவரின் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய செய்திகளில் எந்த அளவு உண்மை இருக்கும்?
முகநூலில் வரும் எதிர்மறை செய்திகள் இன்று இணையத்தில் வரும் செய்திகளில் ஒரு எடுத்துக்காட்டுத்தான். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இணையத்தில் வரும் செய்திகள் எப்படிப்பட்டவை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூக வலைதளங்களை நம்பி இருக்கும் செய்தியாளர்களை நாம் குறை சொல்லமுடியாது. ஒரு செய்தியை எப்படி எவ்வாறு சேகரிப்பது என்ற அடிப்படையில் அல்லவா மாற்றம் கொண்டு வரவேண்டும்? அந்த மாற்றம் கல்வியாலும் கல்வியாளர்களாலும் தான் வரும்.
சில நாட்களுக்கு முன்னால் வலையோளியாளர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பதிவில் சொன்ன கருத்துக்களுக்காக கொடுக்கப்பட்ட புகாரை இரத்து செய்யும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உயர்திரு நீதியரசர் ஜீ.ஆர் ஸ்வாமிநாதன் அவர்கள் தன் தீர்ப்புரையில்கூட “எந்த ஒரு வலையோளியாளரோ அல்லது பொதுநல செய்திகளைப் பற்றி கருத்துரைக்கும் சமூகவலைதள பிரபலங்களோ இந்திய அரசு சாசனம் Article 19 (1) (a) படி ஊடகங்களும் செய்தியாளர்களும் அனுபவிக்கும் பேச்சு சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என்று கூறுகிறார்.
பசி எவ்வாறு ஒரு காலத்தில் போக்ககூடிய ஒரு பிணியாகப் படுத்தபட்டதோ? எப்படி மின்சாரப் பற்றாக்குறை முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டியத் தேவையாக முதன்மைப் படுத்தப்பட்டதோ அது போல கல்வி முறையில் மாற்றம் இன்றைய இன்றியமையாதத் தேவையாக உள்ளது. கல்விப் புரட்சியில் நம் பொருளாதாரத்தில் மட்டுமல்ல மற்ற எல்லா நிலைகளிலும் தன்னிறைவு அடையலாம்.
செய்தித்தாள், வானோலி தொலைக்காட்சி மூலம் வரும் செய்திகளை நாம் வடிகட்டி எடுத்துப் புரிந்துகொள்ள சற்றேனும் கால அவகாசம் நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் கணினி வழி தகவல் தொழில்நுட்பத்தின் அகோர வடிவமாக, நம்மை வந்து அடையும் இந்த செய்தித் துணுக்குகளின் தாக்கத்தை எவ்வாறு நேர்மறையாக மாற்ற முடியும்? என்ன செய்யலாம்?
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68(கல்வியில் கணினி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 69(கல்வியின் எதிர்காலம் கணினியா?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 72 (தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 73(கல்வி ஏழ்மை) – சுகந்தி நாடார்
மருத்துவத்திற்கான 2021ம் ஆண்டின் நோபல் பரிசு – விஜயன்
அறிவியல் என்பது ஒரு தொடர்பயணம்
அறிவியல் என்பதே சிக்கலான கேள்விகளை எழுப்பி அதற்கான விடை தேடுவதுதான். ஒரு சிக்கலான கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்தவுடன் அத்துடன் அடுத்த சிக்கலானகேள்வி எழும். இதுவே அறிவியலின் தொடர்பயணமாக இருந்து வருகிறது. எனவே இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று நேற்றைய அறிவியல் கண்டுபிடிப்பின் தொடர்ச்சியே. “மற்றவர்களைவிட மேலதிகமான விஷயங்களை நான் பார்த்திருக்கிறேனென்றால் எனக்கு முந்தைய மேதைகளின் தோளில் நின்று நான்பார்க்கிறேன் என்று அர்த்தம்“என்ற ஐசக் நியூட்டனின் கூற்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணத்தை மருத்துவத்திற்கான இந்த ஆண்டு நோபல் பரிசை நாம் கூறலாம்.
வெப்பம், குளிர்ச்சி, அழுத்தம் ஆகியவற்றை நமது உடல் உணர்தலுக்குப் பின்புலமாக உள்ள மூலக்கூறு இயக்கங்களை கண்டுபிடித்த இரு அறிவியலாளர்களுக்கு இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவர் டேவிட் ஜூலியஸ் (David Julius) என்ற அமெரிக்கர். இவர் கலிஃபோர்னிய பல்கலைக் கழகத்தின் சான் ஃபிரான்ஸில்கோ வளாகத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் ஆர்டெம் பாடாபௌடியன்(Ardem Pattapouttian) என்ற லெபனிய – அர்மீனிய அமெரிக்கர். இவர் கலிஃபோர்னியாவின் லஹொயா நகரிலுள்ள ஸ்கிரிப்ஸ் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்தவர். பொதுவாக உணர்தல் என்பது மேல் தோலில் தூண்டப்பட்டு நமது நரம்பு மண்டலத்தில் மின்சமிக்ஞைகளாக மூளைக்கு சென்றடைந்து முளையால் கிரகிக்கப்பட்டு உணர்தலாகும். நரம்பு மண்டலத்தில் தூண்டுதல் எப்படி நடைபெறுகிறது என்பதே விடைதெரியாத கேள்வியாக இருந்தது. இதற்கான விடையை அதற்கே உரித்தான மூலக்கூறுகளின் இயக்கத்தை துல்லியமாக வரையறுத்ததால் இந்த இருவருக்கும் இந்த ஆண்டு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.
சரி, நாம் ஐசக் நியூட்டனுக்கு வருவோம். டேவிட்டும், ஆர்டெம்மும் எந்த மேதைகளின் தோள்மீது நின்று கொண்டு இவற்றைப் பார்த்தார்கள்?இதை நாம் தேடினால் மேதைகளின் நீண்ட பட்டியல் ஒன்று நமக்கு கிடைக்கும். ஆம், உணர்வுகளை உடற்கூறியல் ரீதியாக விளக்கும் முயற்சி ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பண்டைய விளக்கங்கள் இன்றைக்கு நமக்கு சிரிப்பை வரவழைத்தாலும் அவையெல்லாவற்றையும் கடக்காமல் இன்றைய நிலைக்கு நாம் வந்திருக்க முடியாது. இந்த விளக்கங்கள் ஒரு குறிப்பிட்ட திசையில் திரும்பி இன்றைய நிலையை நோக்கி திருப்பிவிடப்பட்டது 17ம் நூற்றாண்டில்தான். அந்த நூற்றாண்டைச் சேர்ந்த ரெணே தெக்கார்தேயின் விளக்கத்தைப் பார்ப்போம். நமது உடலில் நெருப்பு படும்போது நெருப்பில் உள்ள துகள்கள் மூளையையும் நமதுமேல்தோலையும் இணைக்கும் இழை ஒன்றை உருவி எடுக்கிறது என்பதே அவர் கொடுத்த விளக்கம். இதனையடுத்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் வந்த விளக்கங்களில் முக்கியமானது,நமது தோலில் குறிப்பிட்ட சில இடங்களானது குறிப்பிட்ட அதாவது தொடுதல், வெப்பம், குளிர்ச்சி போன்ற உணர்வுகளை தூண்டும் ஆற்றல் பெற்றவை என்பதும் அவை வெவ்வேறு வகையான நரம்புகளை செயல்படுத்துகின்றன என்பதும்தான். இதனையடுத்து நரம்பு மண்டலத்தின் மீது ஆய்வாளர்களின் கவனம் திரும்பியது. தெகார்த்தே கூறிய இழை இப்பொழுது நரம்பாகிவிட்டது. இதிலிருந்து அறிதல் என்பது படிப்படியாகத்தான் முன்னேறி வருகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
உணர்தல் என்ற புதிருக்கான விடையைத் தேடி..
இருபதாம் நூற்றாண்டில் உணர்தலுக்கான நரம்பியல் அமைப்புமுறைக்காக ஐந்து நோபல் பரிசுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்குமுன்பு நடைபெற்ற பணிகளின் தொடர்ச்சியே என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1906ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசானது காமில்லோ கோல்ஜி, சான்டியாகோ ராமோன் கஜோல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் நரம்பு மண்டலத்தின் கட்டமைப்பைக் கண்டறிந்ததற்காக கொடுக்கப்பட்டது. இவர்கள் உடலுக்குரிய உணர்தல் அமைப்புமுறையை உடற்கூறியல் அடிப்படையில் முதன்முறையாக விளக்கியிருக்கிறார்கள். இதற்கு அடுத்து 1932ம் ஆண்டின் மருத்துவத்திற்கான மற்றொரு நோபல் பரிசு சார்லஸ் ஷெர்ரிங்டன், எட்கர் ஆட்ரியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் நரம்பு மண்டல அறிதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்கள். ஆம், நியூரான்கள் என்ற விசேடமான செல்களின் செயல்பாடுகளைக் கொண்டு உடலுக்குரிய உணர்வு அமைப்புமுறையை இவர்கள் விளக்கினார்கள். இதற்கு அடுத்ததாற்போல், 1938ம் ஆண்டு நோபல் பரிசு நரம்புமண்டல ஆய்வுப் பணிக்காக கொடுக்கப்பட்டது. அனிச்சைச் செயல்களை தூண்டும் நரம்பிழைகள் பற்றி அறிதலுக்காக இது வழங்கப்பட்டது. இந்த நோபல் பரிசை வென்றவர் கோரினில் ஹேமேன்ஸ். இதற்கு அடுத்த கட்டமாக, ஒரு ஒற்றையிழை நரம்பின் வெவ்வேறு செயல்பாடுகளை ஜோசப் எர்லாஞ்சர், ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் காஸர் ஆகியோர் கண்டறிந்தனர். இவர்கள் 1944ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றனர். நரம்புமண்டல ஆய்வுப்பணிக்கான அடுத்த நோபல் பரிசு 1963ம் ஆண்டு ஹாட்கின், ஹகஸ்லே, ஜான் எக்லேஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் அயனிகளின் இயக்க அடிப்படையில் நரம்புசெல்களின் செயல்பாட்டை விளக்கினர்.
தோல், தசைகளின் உணர்தலுக்கான நரம்பிழைகள் ஆகியவற்றின் வழியாக தூண்டலுக்கான ஆற்றல் பரவுவதை கோட்பாட்டடிப்படையில் இருபதாம் நூற்றாண்டின் இந்தக் கண்டுபிடிப்புகள் நிறுவியது. வெவ்வேறு வகையான நரம்பிழைகள், அவற்றால் கொண்டு செல்லப்படும் செய்திகள் கடத்தப்படும் வேகம், செயலூக்க ஆற்றல் எல்லை, பரவுதலுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் போன்ற கண்டுபிடிப்புகள் நமது உடலின் இயக்கத்தை உணர்தல், இயங்குவெளிபற்றிய பிரக்ஞை, தொடு உணர்வு, வெப்பஉணர்வு, அசைவியக்க உணர்வுஆகியவற்றை திருப்திகரமாக விளக்குகிறது. எனினும் வெப்பம், தொடுதல் ஆகியவற்றின் ஏற்பிகள், அவற்றிலுள்ள மூலக்கூறுகள், இவை உணர்ந்து கொண்டதை நரம்பிழைக்களுக்கு சமிக்ஞைகளாக எவ்வாறு மாற்றப்பகிறது என்பது புரியாத புதிராகவே இதுவரை நீடித்து வந்தது.
நமது செயல்பாட்டில் நமக்கு சர்வ சாதாரணமாக தென்படும் விஷயங்களின் பின்னால் சிக்கலான பல செயல்பாடுகள் உள்ளன. நரம்பு மண்டலம் இல்லையேல் மனிதன் இல்லை என்னும் நிலைக்கு நமது நரம்பு மண்டலம் ஏராளமான பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றன. சில உதாரணங்களைப் பார்ப்போம். உடலுக்குரிய உணர்வு என்று நாம் வெறும் சொல்லால் அழைக்கப்படுவதற்கு பின்புலத்தில், நமக்கு புறத்தே உள்ள அழுத்தம், வெப்பம் போன்ற யாந்த்ரீக குணங்களை உடற்கூறியல் ரீதியான சமிஞ்கைகளாக மாற்ற வேண்டும். அடிப்படையில் இவை நுண்ணிய மின்சமிக்ஞைகளாக மாறுகின்றன. சமிக்ஞைகளை நரம்பிழைகள் மூலமாக மூளைக்கு கடத்த வேண்டும். மூளையானது இந்த சமிக்ஞைகளை பரிசீலித்து பதிவு செய்யும் அல்லது மேல் முடிவு எடுக்கும். அதேபோல் மூளை இடும் கட்டளைகளை சமிக்ஞைகளாக மாற்ற வேண்டும், அவை நரம்பிழைகள் மூலமாக தசைகளுக்கு வரவேண்டும் தசைகளை கட்டளைகளை நிறைவேற்றும் முகமாக சுருங்கி விரிந்து செயல்பட்டு நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வளவு சிக்கலான செயல்கள் நொடிப்பொழுதில் நடக்கிறது.
அடுப்படியில் நிற்கையில் தீப்பொறி ஒன்று நம் வலது கைமீது படுகிறது என்று வைத்துக் கொள்வோம். தீப்பொறியின் வெப்பத்தை மேல்தோல் ஏற்பி வெப்ப சமிக்ஞையாக மாற்றுகிறது. இந்த சமிக்ஞை நரம்பிழை மூலமாக தண்டுவடத்தின் வழியாக மூளைக்குச் செல்கிறது. சில சமயம் தண்டுவடமே கட்டளைகளை பிறப்பித்து அவற்றை மோட்டார் நியூரான்கள் மூலமாக தசைகளுக்கு அனுப்பும். எனினும் இந்த சமிக்ஞைகள் மூளையில் உள்ள நியூரான்கள் பரிசீலித்து வெப்பம் ஏற்படுத்திய வலியாக மாற்றி பதிவு செய்கிறது. மூளையானது இடது கையை வைத்து தீப்பொறி பட்ட வலது கையின் இடத்தை வெடுக்கென தேய்க்குமாறு கட்டளையிடுகிறது, தண்டுவடம் அல்லது மூளை இடும் கட்டளைகளை நியூரான்கள் சமிக்ஞைகளாக மாற்றி கட்டளைகளை இடது கையின் தசை நார்களுக்கு மோட்டார் நியூரான்கள் வழியாக அனுப்புகிறது. தசைநார்கள் சுருங்கி விரிந்து இடது கை இயங்கி உள்ளத்தின் கட்டளையை நிறைவு செய்கிறது. இது அவ்வளவும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்றுவிடுகிறது. மூளையும் தண்டுவடமும் ஒரே நேரத்தில் சமிக்ஞைகளைப் பெற்று கட்டளைகளை பிறப்பிக்கின்றன. தண்டுவடம் இடும் கட்டளைகளை நாம் அனிச்சை செயல் (Reflexes) என்கிறோம். இந்த இரண்டு கட்டளைகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டால் மூளையின் கட்டளையே இறுதியாக ஏற்றுக் கொள்ளப்படும்.
தீங்குவிளைவிக்கும் வெப்பம் அல்லது அழுத்தம் போன்றவைகளை இரைச்சல் தூண்டுதல் (Noxious Stimuli) என்ற வகைப்பட்டவை. இவற்றை கடத்துபவை விசேடமான நரம்பிழைகள். இவை மிக மிக முக்கியமானவை. இரைச்சல் தூண்டல்கள் என்பவை உடனடி நடவடிக்கைகளை கோருபவை. அழுத்தம், வெப்பம், திரவ ஓட்டம், திரவ மட்டம் போன்ற பல்வேறு கூறளவுகளை உணர்ந்து வேதிவினைகளை கட்டுப்படுத்தி குறிப்பிட்ட வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் நோக்கத்தில் இயங்கும் ஒரு வேதியல் தொழிற்சாலையில்ஒரு குறிப்பிட்டகூறளவு ஒரு எல்லையைக் கடந்தால் இயக்குபவருக்கு எச்சரிக்கை சமிக்ஞை (Warning) கொடுக்க வேண்டும். அது மேலும் தொடர்ந்து மாறி ஆபத்து நிலையை அடையும் போது இயக்கத்தை நிறுத்தக் கோரும் எச்சரிக்கையை (Alarm) செய்ய வேண்டும். இரைச்சல் தூண்டுதல்கள் அவசர எச்சரிக்கைகளைக் கொடுப்பவை. வலிகள் இரைச்சல் தூண்டுதல் வகையைச் சேர்ந்தவை.
இப்படியாக உடலின் இயக்கமானது அது இயங்கும் சுற்றுச் சூழலை உன்னிப்பாக உணர்ந்து அதற்கேற்றாற் போல் தகவமைத்துக் கொள்ளும் ஆற்றலை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதற்கு முக்கியமான ஆரம்பகட்ட உணர்தல் செயல் என்பதை நாம் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த ஆரம்பகட்ட உணர்தலுக்கு முக்கியமானது உடலில் பண்புபெயர்ப்பியாக (Transducer) செயல்படும் அமைப்புமுறையைப் பற்றிய சரியான புரிதல்தான். வெப்பம், குளிர்ச்சி, அழுத்தம் போன்ற கூறளவுகளை (Parameters) உடற்கூறு ரீதியாக உணரும் ஏற்பிகளானவை அவற்றை மின்சமிக்ஞைகளாக மாற்றும், பண்பு பெயர்ப்பிகளாக செயல்படுகின்றன. இந்த நுண்ணிய மின்சமிக்ஞைகள்தான் நரம்பிழைகள் மூலம் மூளைக்குச் செல்கிறது. ஆக, நமது மேல்தோலில் உள்ள ஏற்பிகள் எவ்வாறு பண்பு பெயர்ப்பியாக செயல்படுகின்றன? இக்கேள்விக்கான விடையைத்தான் இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல்பரிசு கண்டுபிடிப்புகள் கொடுக்கின்றன.
சிக்கலான விஷயத்திற்கு நீண்டகாலம் விடைதேடிக்கொண்டிருக்கும்போது யாரேனும் ஒருவர் ஏதாவது ஒரு அம்சத்தில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை கையாள்வதன் மூலமே தேடுதல் நடவடிக்கையில் உடைப்பு ஏற்பட்டு முன்னேற்றம் நடக்கிறது. நெருப்பானது ஏற்பிகளை எரித்துவிடுமே. ஏற்பிகள் நெருப்பால் ஏற்படும் எரிச்சலை நுண்ணிய மின்சமிக்ஞையாக பிறகு எப்படி மாற்றமுடியும்? இப்படித்தான் ஆய்வாளர்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையில் வெப்பம் ஏற்படுத்தும் எரிச்சலும், மிளகாய்ப்பொடி ஏற்படுத்தும் எரிச்சலும் ஒரே வகையைச் சார்ந்திருக்குமோ என்ற ஐயம் எழுந்து,ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்தது. மிளகாயை கடித்தால் மண்டையில் வியர்ப்பது போன்ற உணர்வு, சூடு ஏறுவது என்ற உணர்வு, உதட்டில் எரிச்சல் ஏற்படுவது போன்றவைகளுக்கான காரணம் என்ன என்று 1950களில் ஆய்வு நடத்தப்பட்டது. மிளகாயின் மூலக்கூறுகளை ஆய்வு செய்தபோதுஅதிலுள்ள கெப்ஸைஸின் (Capsaicin) என்ற மூலக்கூறுதான் இந்த விஷயங்களுக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது. அதற்கடுத்த பத்தாண்டுகளில் உணர்வு நரம்பிழைகளை தூண்டும் ஆற்றல் கெப்ஸைஸின் மூலக்கூறுக்கு இருக்கிறது என்று கண்டறியப்பட்டது. அத்துடன் இந்த தூண்டுதலானது நரம்பிழைகளில் உள்ள அயனிப்பாதைகளில் தேவையில்லாத வெப்பத்தை உண்டாக்குகிறது என்றும் கண்டறியப்பட்டது. எனினும் வெப்பத்தை சமிக்ஞைகளாக மாற்றும் பண்புப் பெயர்ப்பிகள் இந்த அயனிப் பாதைகளா அல்லது வேறு ஏதேனும் உடற்கூறு அம்சமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் மரபணு ஆய்வுகளில் தாவிப்பாய்ச்சல் முன்னேற்றம் ஏற்பட்டு மனித மரபணுக்கள் அத்தனையும் 2000ம் ஆண்டில் தொகுக்கப்பட்டுவிட்டது. மரபணுக்கள் (Gene) நமது செல்லுக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் டிஎன்ஏவின் (DNA)இணைப்புச் சங்கிலிகள். குறிப்பிட்ட நீளமுள்ள டிஎன்ஏவை ஒரு குரோமோசோம் (Chromosome) என்றழைக்கிறோம். மனித செல்லுக்குள் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன அதாவது 46 குரோமோசோம்கள் உள்ளன. ஒவ்வொரு மரபணுவும் உடலின் ஒவ்வொரு செயலையும் உறுப்புகளின் பண்புகளையும் தீர்மானிப்பவை. எதிரெதிர் திசையில் சுழன்று செல்லும் நூலிழை போன்ற அமைப்பே டிஎன்ஏயின் அமைப்பாகும்.டிஎன்ஏக்கு மூன்று முக்கியப் பணிகள் உள்ளன. ஒன்று, தன்னுருவாக்கப் பணி. இரண்டு, செல்பிரிதலின் போது புதிய செல்களை உருவாக்குவது. மூன்றவது, மூன்றாவது நமது உடலுக்குத் தேவையான புரோட்டீன்களைத் தயாரிப்பது. புரோட்டின்கள்தான் தசைகளாவும் திசுக்களாகவும் செயல்படுகின்றன அவை உணர்விகளாகவும் செயல்படுகின்றன.தசைகளின் இயக்கம், ஒளியை உணர்தல், தொடு உணர்ச்சி, வெப்பம் குளிர்ச்சி ஆகியவற்றை உணர்தல் போன்றவற்றிற்கு புரோட்டீன்களே காரணம். எனவே, செல்களுக்குள் உள்ள குரோமோசோம்களை,அதாவது டிஎன்ஏவை நாம் உடலமைப்பின் வரைபடம் எனலாம். குறிப்பிட்ட மரபணு குறிப்பிட்ட புரோட்டீனை உற்பத்தி செய்ய வேண்டிய செயல்முறையை (Receipe) தாங்கி நிற்கும். பொதுவாக மரபணுவின் பெயரே அது குறிப்பிட்ட செயல்முறையில் தயாரிக்கப்படும் புரோட்டீனின் பெயராகும். எப்படி தந்தையின் பெயரை மகனுக்குச் சூட்டுகிறோமோ அதுபோலத்தான் இதுவும். எல்லா செல்களிலும் எல்லா மரபணுக்களும் இருக்கும். எனினும், குறிப்பிட்ட பணியைச் செய்யும் செல்லில், குறிப்பிட்ட மரபணு மட்டும்தான் செயலூக்கமுள்ளதாக இருக்கும் மற்றவை அடங்கிக் கிடக்கும். உதாரணத்திற்கு மூக்கிலுள்ள செல்லில் வாசனையை உணரும் மரபணுவே செயலூக்கம் மிக்கது. வாசனை உணரும் ஆற்றல் உள்ள புரோட்டீன் தயாரிப்புக்கு இந்த மரபணு காரணமாகிறது. இதே மரபணுவானது நாக்கில் உள்ள செல்லில் செயலற்று அடங்கிக் கிடக்கும்.மனித மரபணுக்கள் 20,000-25,000 இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் வைக்கப்பட்டுவிட்டது. பொதுவாக இப்பெயர்கள் எண்களும் எழுத்துகளும் சேர்ந்த சிறிய ஒற்றைச் சொல்.
வெப்பத்தை உணர்தல் என்ற புதிர் தீர்க்கப்பட்டது
மரபணுத் தொகுப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் நமது உடலின் ஒவ்வொரு உணர்தல் செயல்பாட்டிற்கும், குறிப்பிட்ட மரபணுவே பொறுப்பு என்ற முடிவுக்கு 1990களிலேயே அறிவியலாளர்கள் வந்து சேர்ந்துவிட்டனர். எனவே வெப்பத்தை சமிக்ஞைகளாக மாற்றுவது நரம்பிழையின் அயனிப்பாதைகளா அல்லது மேல் தோலில் உள்ள வேறு ஏதேனும் ஏற்பிகளா என்ற கேள்விக்கு விடைகான டேவிட் ஜூலியஸ் கெப்ஸைஸின் என்ற மூலக்கூறுடன் இணையும் ஏற்பிகள் ஏதேனும் இருக்கிறதா என்று ஆய்வின் கவனத்தை திருப்பினார்.
அத்துடன், கெப்ஸைஸின் என்ற மூலக்கூறின் உடற்கூறியல் வினை பற்றி அறிந்தால் வலியை தாங்கிச் செல்லும் சமிக்ஞைகள் பற்றிய அறியமுடியும் என்று நம்பினார். ஆய்வைத் தொடர ஒரு அனுமானத்தை செய்தார். மனித மரபணுக்களில் ஏதேனும் ஒரு மரபணு உண்டாக்கும் புரோட்டீன்தான் இந்த கெப்ஸைஸினுடன் வினைபுரிகிறது என்பதே அந்த அனுமானம். கிட்டத்தட்ட 20,000 – 25,000மனித மரபணுக்கள் இருக்கின்றனவே இதில் எது உருவாக்கும் புரோட்டீன் கெப்ஸைஸினுடன் வினைபுரிகிறது என்று எவ்வாறு கண்டறிவது? நீண்ட பெரிய முயற்சி இது. அவரும் அவருடன் பணிபுரிந்து வந்த மைக்கேல் ஜே கேட்டரினா என்பவரும் இணைந்து கெப்ஸைஸினுடன் வினைபுரியும் சாத்தியமுள்ள மரபணுக்களின் தொகுப்பு ஒன்றை உருவாக்குவது என்று முடிவுக்கு வந்தனர். பிறகு அந்த தொகுப்பிலுள்ள மரபணுக்கள் உண்டாக்கும் புரோட்டீனை ஒவ்வொன்றாக கெப்ஸைஸின் மூலக்கூறுடன் பொருத்தி ஆய்வு செய்து புதிரை விடுவிக்கலாம் என்று முடிவெடுத்தனர். உணர்வுகள் கட்டளைகள் போன்றவற்றை பரிசீலித்து செயல்படுத்தும் செல்களை நாம் நியூரான்கள் என்று அழைக்கிறோம். நியூரான்கள் என்பவை விசேடமான செல்கள். எனவே டேவிட் குழுவினர் தண்டுவடத்தில் இருக்கும் நியூரான்களை (rodent dorsal root ganglia) எடுத்து அவற்றிலுள்ள முக்கியமான மரபணுக்களின் பிரதிகளை (cDNA) எடுத்து சேகரிக்கத் துவங்கினர். ஒரு நீண்ட நெடிய பயணத்திற்குப் பின் கள்ளன் அகப்பட்டான். ஆம் அவர்கள் தேடிய மரபணுவை அடையாளம் கண்டுவிட்டனர். இந்த மரபணு தயாரிக்கும் புரோட்டீனானது தற்காலிகமாக எதிரயனிப் பாதையை அமைக்கும் ஆற்றலுள்ள ஏற்பிகளின் குடும்பத்தைச் சார்ந்தது. (Transient Receptor Potential (TRP) Cation Channels).
இவ்வகை எதிரயனிப்பாதை (Cation Channel) உருவாக்கும் ஏற்பிகளை வானிலாய்ட் ஏற்பிகள் என்றழைப்பார்கள். எனவே இதற்கு TRPV1 என்று பெயரிடப்பட்டது. TRPV1 ஏற்பிகள் பற்றிய குணாம்சங்கள் பற்றி இங்கே விளக்க வேண்டிய அவசியமில்லை. இத்துறையில் நிபுணத்துவம் பெறவிரும்புவர்கள் தெரிந்து கொள்ளட்டும். பொதுவான புரிதலுக்காக நாம் இத்துடன் நிறுத்திக் கொள்வோம். பின்னாளில் நடைபெற்ற ஆய்வுக்கூட ஆய்வு முடிவுகளும் அதையொட்டிய பல விஷயங்களும் TRPV1 என்ற புரோட்டீனைத் தாங்கி நிற்கும் ஏற்பிகளேவெப்பம் உண்டாக்கும் எரிச்சல் என்ற உணர்வை நரம்பிழைகளில் அயனிப்பாதையை உண்டாக்கி நுண்ணிய மின்சமிக்ஞைகளாக மாற்றும் பண்புபெயர்ப்பிகள் என்ற முடிவை உறுதி செய்தன. அருகிலுள்ள படங்கள் இதிலுள்ள ஆழமான விஷயங்களை சற்று எளிதாக்குகின்றன. TRPV1 கண்டுபிடிப்பானது ஒரு உடைப்பை ஏற்படுத்திய கண்டுபிடிப்பாகும். இதனைத் தொடர்ந்து குளிர்ச்சியை உணரும் புரோட்டீன் TRPM8 கண்டுபிடிக்கப்பட்டது. TRPV1ஐ கண்டுபிடிக்க எப்படி கெப்ஸைஸின் உதவியதோ, குளிர்ச்சி அறியும் மரபணுவான TRPM8 கண்டுபிடிக்க மென்தால் (Menthol) என்ற வேதிப்பொருள் உதவியது. மிளகாய்ப்பொடி எரிச்சலை ஏற்படுத்துவதுபோல், மென்தாலைத் தொட்டால் குளிர்ச்சி உணர்வு ஏற்படும். பெப்பர்மின்டில் மென்தால் உள்ளது. அதை சுவைக்கும்போது நாம் குளிர்ச்சியை உணர்வதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தொடர்ச்சியாக நடைபெற்ற ஆய்வுகளின் விளைவாக வெப்ப உணர்வில் செயல்படும் பண்புபெயர்ப்பிகள் அனைத்தும் TRP குடும்பமாக அடையாளப்படுத்தப்பட்டுவிட்டன. TRPV1, TRPA1, TRPM2, TRPM8 போன்ற முக்கியமான மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகளின் குணாம்சங்கள் வரையறுக்கப்பட்டு ஆய்வுக் கூடத்தில் நிறுவப்பட்டுவிட்டன. இதன் மூலம் வலிஉணர்வின் ரகசியங்கள் அனைத்தும் கட்டுடைக்கப்பட்டுவிட்டன.
அழுத்தத்தை உணர்தல் என்ற புதிருக்கான தீர்வும் எட்டப்பட்டது
தொடுதல், கிள்ளுதல், குத்துதல், அடித்தல் உட்பட அனைத்தையும் உணருவது இயந்திர அழுத்த உணர்வாக வகைப்படுத்தப்படுகின்றன. வெப்பத்தை உணரும் ஏற்பிகள் இருப்பது போது அழுத்தத்தை உணரும் ஏற்பிகளும் இருக்கின்றன. இந்த ஏற்பிகளில் உள்ள குறிப்பிட்ட புரோட்டீன்கள் அழுத்தத்தை நுண்ணிய மின்சமிக்ஞைகளாக மாற்றும் பண்புப்பெயர்ப்பிகளாக இருக்கின்றன. இத்தகைய புரோட்டீன்களை அடையாளம் காணும் வேட்டையில் வெற்றிபெற்றவரான ஆர்டெம் பாடாபௌடியனுக்கு இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசின் அடுத்தபாதி பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இயற்பியலில் அழுத்தத்தை மின்சாரமாக மாற்றும் நிகழ்வுப் போக்கிற்கு அழுத்த-மின் விளைவு (Piezo Electric Effect) என்று குறிப்பிடுவார்கள். செல்களுக்குள்ளும் அழுத்தத்தை நுண்ணிய மின்சமிக்ஞைகளாக மாற்றும் ஆற்றல் உள்ளவைகள் இருப்பதால்தான் அழுத்த உணர்வுகள் நுண்ணிய மின்சமிக்ஞைகளாக மாற்றப்படுகின்றன.தவளையின் காதுக்குள் ஒலி நுழையும் பாதைக்குள் உள்ள முடியில் உள்ள செல்லானது அழுத்த உணர்வை தூண்டுதலுக்கு காரணமாகிறது என்பது 40 ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டது. முதுகெலும்புள்ள பிராணிகளின் முதுகெலும்பு தண்டில் உள்ள செல்களில் உள்ள நியூரான்களில் இது இருக்கும் என்று ஆய்வு நடத்தப்பட்டது. லேசாகத் தொட்டவுடன் துடிக்கும் மிக்சிறிய புழுக்களில் தொடுஉணர்வு பிரதானமாக இருக்கும் என்று Caenorhabditis elegans என்ற ஒருவகை புழுவை ஆய்வு செய்தார்கள். குறிப்பாக சிறிய உயரினங்களில் நரம்பியல் ஆய்வுகள் செய்வது எளிது ஏனென்றால் அவைகளிடம் உள்ள நியூரான்கள் எண்ணிக்கை மனிதர்கள் போல் பல்லாயிரம் கோடிகளில் இருக்காது. இதேபோல் Drosophila melanogaster என்ற பழ ஈக்களிடமும் ஆய்வு நடத்தப்பட்டது, இவைகளில் ஏதேனும் செல்கள் கண்டறியப்பட்டால் அதுபோன்று இதர முதுகெலும்புள்ள பிராணிகளில் இருக்கிறதா என்று ஆய்வு நடத்தலாம் என்பதால்தான் இது நடந்தது. இதுபோல் தொடுதலுக்கு வெடுக்கென எதிர்வினையாற்றும் சில பாலூட்டிகளிடமும் ஆய்வுகள் நடைபெற்றன. எதிலும் முன்னேற்றமில்லை.
ஆக இதுபோன்ற செல்களை அறிந்து அதிலுள்ள மரபணுவை அறிந்துகொள்வது என்பது வைக்கோல் போரில் ஊசியைச் தேடுவதற்கு ஒப்பாகும். வெப்பஉணர்வு ஏற்பிகளிலுள்ள புரோட்டீனை கண்டுபிடிக்க தண்டுவட நியூரான்களை மட்டும் எடுத்து பரிசோதித்தது போல் இதிலும் அதுபோன்ற அணுகுமுறை வேண்டும். எனவே தேடுதலில் வெற்றிபெற சாத்தியமுள்ள வகைகளை மட்டும் அடையாளப்படுத்தி அதற்குள் தேடுதல் தொடர்ந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் தேடுதல் பணியை முடிக்கலாம் என்று பாடாபௌடியன் முடிவு செய்தார். இயந்திர விசையால் நுண்ணிய மின்தூண்டல் நடைபெறும் பிளாஸ்மா ஜவ்வுகளில் உள்ள Neuro2A என்ற வகை செல்களை இவர் ஆய்வுக்காக தெரிவு செய்தார். இவற்றில் குறிப்பிட்ட 72 மரபணுக்களை பிரித்தெடுத்து ஆய்வுகளை தொடர்ந்தார். இவையனைத்தும் அயனிப்பாதையை உண்டாக்கும் புரோட்டீன்களை படைப்பவை. ஒவ்வொன்றாக ஆய்வுசெய்து வருகையில் அவர் தேடிய மரபணுவைக் கண்டடைந்தார். அது FAM38A என்ற மரபணுவாகும். இதற்கு PIEZO1 என்று மறுபெயரிட்டு அழைத்தார். மனிதக் கருநிலையில் உருவாகும் சிறுநீரகத்தில் உள்ள ஜவ்வுகளின் செல்கள் (HEK-293 அழுத்தத்திற்கு எதிர்வினையாற்றுகின்றன. இவை அழுத்தத்தால் அதிகளவில் மின்தூண்டல் பெறுகின்றன. இவற்றில் PIEZO1 புரோட்டீன்கள் இருப்பதால் இப்படி வித்தியாசமான எதிர்வினைகளை வருகின்றன என்பதை அறிந்தார். அவருடைய தேடலின் முதல் படியாக PIEZO1 அமைந்தது. இதன் குணாம்சத்தை ஆய்வு செய்து வரையறுத்தபின் இதே குணாம்சமுள்ள மரபணுக்கள் தண்டுவட நியூரான்களில் உள்ளனவா என்று ஆய்வு செய்தார். இதில் அவர் PIEZO2 என்ற மரபணுவை கண்டறிந்தார். PIEZO2 பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்தார்.மேல்தோலின் அடுத்த அடுக்கில் உள்ள மெர்க்கல் செல்லானது (Merkel Cell) தொடுதலுக்கு எதிர்வினையாற்றும் தூண்டல் பெறுகிறதென்றும், இது தொடுதலின் போது PIEZO2 உண்டாக்கும் புரோட்டீன் தூண்டும் அளவிற்கு இருக்கின்றன என்பதை பாடாபௌடியன் ஆய்வின் வாயிலாக2014ம் ஆண்டில் நிறுவினார். இறுதியில் PIEZO2 என்ற புரோட்டீனே அழுத்த உணர்வை நுண்ணிய மின்சமிக்ஞைகளாக மாற்றும் பண்புப் பெயர்ப்பிகளில் உள்ளன என்றும் அறிவித்தார். அழுத்தத்தை உணர்தலை மூலக்கூறு மட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்ததால் மேலும் பல ஆராய்ச்சிகள் தொடருவதற்கு இது வித்திட்டது. எனவே உடைப்பு ஏற்படுத்திய இந்தக் கண்டுபிடிப்பானது நரம்பியல் அறிவியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய கண்டுபிடிப்பாகும்.
இந்த ஆண்டின் நோபல் பரிசு
TRPV1, TRPM8, PIEZO புரோட்டீன்களில் அயனிப்பாதைகள் திறக்கப்படுகின்றன என்ற
இக்கட்டுரையானது நோபல் பரிசு இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் அசல் மொழியாக்கம் அல்ல, அதன் தழுவலாகும். இதில் பிழைகள் இருப்பின் இணைப்ச் சொடுக்கினால் வரும் மூலக்கட்டுரையை வாசிக்க வேண்டும். https://www.nobelprize.org/prizes/medicine/2021/advanced-information/