Norio Nagayama: Tears of ignorance Article by Sa. Devadoss. நோரியோ நகயாமா: அறியாமையின் கண்ணீர் - சா. தேவதாஸ்

நோரியோ நகயாமா: அறியாமையின் கண்ணீர் – சா. தேவதாஸ்




ஜப்பானில் 19 வயதான இளைஞன் 1968-இல் நான்கு பேரைக் கொலை செய்தபோது, ஜப்பானியர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். 28 ஆண்டுகள் கழித்து அவனை ஜப்பானிய அரசு தூக்கிலிட்டபோது எந்தச் சலனமும் இல்லை.
Norio Nagayama: Tears of ignorance Article by Sa. Devadoss. நோரியோ நகயாமா: அறியாமையின் கண்ணீர் - சா. தேவதாஸ்ஆம், நோரியோ நகயாமா என்னும் இளைஞன் அவன். ஜப்பானின் ஒவ்வொரு மூலையிலும் வறுமை பதுங்கி இருந்த துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு அந்நாடு முனைப்பு கொண்டிருந்த அறுபதுகளில் தான் இந்நிகழ்வு.

1949-இல் வறுமை பீடித்த குடும்பத்தில் ஏழு உடன்பிறந்தவர்களுடன் ஒரு குழந்தையாயிருந்தவன் அவன். சூதாடியான தந்தை ஒரு நாள் சாலையோரத்தில் இறந்து கிடந்தார். 5 வயது நிரம்பிய அவனை விட்டுவிட்டு மற்ற ஏழு குழந்தைகளுடன் வேறொரு நகருக்குச் சென்றுவிட்டாள் அவனது தாய்.
Norio Nagayama: Tears of ignorance Article by Sa. Devadoss. நோரியோ நகயாமா: அறியாமையின் கண்ணீர் - சா. தேவதாஸ்ஜப்பானின் வடகோடியில் -1400க்குச் சென்றுவிடும் குளிருள்ள பகுதியில் பிறந்து வளர்ந்த நகயாமா, பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறான். ஜப்பானிலிருந்த அமெரிக்க ராணுவத்தளத்தில் ரகசியமாக ஒரு கைத்துப்பாக்கியினை எடுத்துக் கொண்டவன், 1968-இல் இரு மாதங்களில் இரு மெய்க்காவலர்களையும், இரு ஓட்டுனர்களையும் கொள்ளையடித்து கொலை செய்துவிட்டான். 28 வருடங்கள் சிறைவாசத்திலிருந்த அவனை 1997-இல் ஜப்பான் தூக்கிலேற்றியது.

28 ஆண்டுகால சிறைவாசத்தின்போது உளவியல், தத்துவம், தாஸ்தோயவ்ஸ்கி, செகாவ், மார்க்ஸ் எனத் தீவிரமாக வாசித்தான். சக கைதி ஒருவருடன் அரசியல் கோட்பாடுகளை உரையாடி அறிந்து கொள்கிறான். ஒன்பது நாவல்கள் எழுதி முடிக்கின்றான். அவனது முதல் நாவலை (Tears of Ignorance) வாசிக்கும் ஒரு பெண், சிறை வாழ்வின்போதே அவனை மணந்து கொள்கிறாள். குற்றம் என்றால் என்ன, சமூகத்தில் எங்கே கருக்கொள்கிறது எப்படி வளர்கிறது என்றெல்லாம் புரிதல் கிடைக்கிறது அவனுக்கு.

அறியாமையும் வறுமையுமே தன்னை கொள்ளைக்காரனாக, கொலைக்காரனாக ஆக்கியுள்ளன என்று தன் எழுத்தில் பதிவு செய்கிறான். சமூகத்தின் விளிம்பில் உயிர்பிழைக்க படாதபாடுபட்டிருந்த அவன் பலமுறை தற்கொலைக்கு முயன்றவன்.

அவனது குழந்தைப் பருவம், இளமைக் காலச் சம்பவங்கள் சமூக நீதி குறித்த கருத்துக்கள், தன் குற்றங்களுக்கு உந்துதலாக இருந்தவை என்பதை பற்றியெல்லாம் கவிதையும் உரைநடையுமாக நகயாமா எழுதியதே 1971-இல் வெளியான Tears of Ignorance. அவனது நூல்களெல்லாம் ஜப்பானிய மொழியிலிருந்து இன்னும் மொழியாக்கம் பெறவில்லை.

அதிர்ச்சியூட்டும் தன் அனுபவங்களால் அவனது சுயேச்சையான உறுதிப்பாடு நிலைகுலைந்து விடவே, குற்றவாளியாகுமாறு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறான்.

நீண்ட கால நோக்கிலுள்ள உந்துதல்கள், குற்றவியல் தன்மையின் தோற்றுவாய்களை கணக்கில் கொள்ளாது, உடனடிக் காரணிகளையும் தவறுகளையுமே ஆராய்ந்து தீர்ப்பளித்துவிடுகிறது நீதி அமைப்பு என்பது நகயாமாவின் குற்றச்சாட்டு.
Norio Nagayama: Tears of ignorance Article by Sa. Devadoss. நோரியோ நகயாமா: அறியாமையின் கண்ணீர் - சா. தேவதாஸ்‘‘நானொரு கைதி, நான்கு பேரைக் கொன்றவன், கொலையை மறப்பது சாத்தியமற்றது என நம்புகிறேன்…’’ என்று ஆரம்பிக்கின்றார் தன் முதல் பதிவை.
இன்னோரிடத்தில் இடம் பெறும் ஒரு பதிவு:

‘‘நான் கொன்றேன். இப்போது அதனை எண்ணிப் பார்ப்பதெனில், அதுவொரு தனித்துவமான கொலை. மக்கள், பிறழ்வு, குரூரம் என்கின்றனர்… அவர்கள் தற்கொலை செய்யும்போது, கைத்துப்பாக்கியை பயன்படுத்தினால், மூளையைக் குறி வைக்கின்றனர். சட்டென்று செத்துவிட விரும்புகின்றனர். இருப்பு பற்றி நான் யோசிக்கையில் எனது கொலை செய்யும் முறை குரூரமானது என்பது நிச்சயம், ஆனால் அறிவாளர்கள் அதனைப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள். அதனை நான் சில வார்த்தைகளில் தொகுத்துரைக்க வேண்டுமாயின், எளிதான முறையில் கொன்றுவிட்டேன் என்பதுதான் உண்மை. வருந்துதல் இல்லாமல் மரணம் வாய்த்துவிடும்.”

தனது கொலைகள் குறித்து இப்படி எழுதிவிட்டு, குற்றம் பற்றி பொதுவாக ஆராய்கின்றார்:
குற்றம் என்பது நொடிப்பொழுதில் நிகழ்ந்திடும் அதீத நடவடிக்கைக்கு மேல் ஒன்றுமில்லை. எனவே அத்தருணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு குற்றவாளியை தீர்ப்பிடுவது காழ்ப்புணர்வையே வளர்த்தெடுக்கும். பிற்பாடு, அக்குற்றத்தை உள்ளடக்காமல், ஒட்டுமொத்த காலம் குறித்த சிந்தனையாக அக்கணம் முடிந்து போகும்?

Norio Nagayama: Tears of ignorance Article by Sa. Devadoss. நோரியோ நகயாமா: அறியாமையின் கண்ணீர் - சா. தேவதாஸ்
Image Credit: Amino Apps

அடுத்து தனது நிலையை சுயவிமர்சனம் செய்து கொள்ளும்போது நகயாமா எழுதுகிறார்:
“இப்போது நான் சிறையில் மேற்கொண்டுள்ள சிறிது வாசிப்பால், என் அறியாமைதான் காரணம் எனக் கண்டறிந்தேன்… நான் ஏன் மாறினேன் என்பதைச் சில வார்த்தைகளில் முடிவுகட்டுவதாயின், என் மோசமான வாழ்வுதான். வறுமையிலிருந்து தோன்றுகிறது அறியாமை” 1970-இல் டோக்கியோ மாவட்ட நீதிமன்ற விசாரணையின்போது, பதிலளித்த நகயாமா இதனை மேலும் வளர்த்தெடுக்கிறார்: “எனது தோற்றுவாயை தாங்கள் நன்கறிவீர்கள். அப்போது நான் அறியாமையில் இருந்தமையால் இவை நடந்தன. வறுமையிலும் அறியாமையிலும் இருந்தேன். என்னைப் போன்றவன் இங்கிருக்க ஒரே காரணம் ஏழையாயிருப்பதுதான். அதனை வெறுக்கிறேன். நான் வெறுப்பதால் குற்றங்களை இழைத்தேன். அனைத்தையும் அனைவரையும் வெறுக்கிறேன்! ஏழைகள் சமூக உணர்வை நாசப்படுத்துகின்றனர். மக்களுக்கிடையிலான உறவுகளை அழிக்கின்றனர், முதலாளித்துவ சமூகம் ஏழையரை உருவாக்குகிறது, எனவேதான் நான் இங்கிருக்கிறேன்”
தான் சந்தர்ப்ப சூழல்களால் பலியானவன், குழந்தைப் பருவம் தொட்டு தன் சமூகச் சூழல் தன்னை விளிம்புநிலைக்குத் தள்ளிவிட்டது, தீவிரமான தீர்மானநிலையை வளர்த்தெடுத்தது என்று நம்பினார் நகயாமா.

குற்றவாளிகள் உருவாகும் போக்கினை தீவிரமாகப் பரிசீலிக்கும் தாஸ்தோயவ்ஸ்கி தன் நாட்குறிப்பில் எழுதுகிறார்.: “…இவர்கள் நிச்சயமாகச் சின்னத் திருடர்களாகி விடுவார்கள். தம் நடவடிக்கைகளிலுள்ள குற்றவியல் பண்பினை உணராமலேயே எட்டு வயதுச் சிறுவர்களிடையேயும் சிறு திருட்டு வேட்கையாகிவிடும். இறுதியில் பசி, குளிர், அடி என எதனையும் தாங்கிக் கொள்வார்கள். சுதந்திரம் என்னும் ஒன்றிற்காக மட்டும்; தம் போக்கிரிகளிடமிருந்து ஓடிவந்து, இப்போது தமது நன்மைக்காக நாடோடி வாழ்வை மேற்கொள்வர்…’’
II
வாழ்வின் அதீதப் புள்ளிக்கு தள்ளப்பட்டு விடுவோர் உயிர்வாழ வழிவகை இல்லாது தவிக்கையில் ஒன்று, தற்கொலை செய்து கொள்கின்றனர் அல்லது பிறரைக் கொல்கின்றனர்- கொள்ளையடிக்கும்போது. நகயாமாவின் கொைலகளின் நோக்கம் பணம் பெறுவதே. பல தற்கொலை முயற்சிகள் மேற்கொண்டிருந்த அவர், ஒரு கட்டத்தில் கொலையாளி ஆகியுள்ளார். அதுவும் மைனர் பருவம் முடிந்து மேஜர் பருவம் தொடங்கிடும் 19வது வயதில், மைனர் பருவத்தில் கொலை செய்திருந்தால் மரண தண்டனையிலிருந்து தப்பியிருக்க முடியும்.
III
1997இல் நகயாமாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதும் Amnesty International வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது:
“28 ஆண்டுகளாக சிறைவாசத்திலிருந்த நன்கறியப்பட்ட எழுத்தாளர் நோரியோ நகயாமா உள்ளிட்ட நான்குபேர் ஆகஸ்டு 1 அன்று ரகசியமாகத் தூக்கிலிடப்பட்டனர். கொலைக்காகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த நால்வரும், மரண தண்டனை நிச்சயிக்கப்பட்ட 55 கைதிகளிலிருந்து ஏதேச்சையாகத் தெரிவு செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது. ஜப்பானில் வழமையாக உள்ளதுபோல, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தூக்கு தண்டனை பற்றி தெரியப்படுத்தப்படவில்லை. நால்வரில் ஒருவர் ஒரு பெண்”

நகயாமா வழக்கு விசாரணையில் இரு கட்டங்கள். முதலில் கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதிக்க, உயர்நீதிமன்றம் நகயாமாவின் குடும்ப சூழல்களையெல்லாம் கணக்கில் கொண்டு, ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. “அநாதரவான இடத்திலே கைவிடப்பட்ட அவரது வரலாற்றினை அதீத வறுமையில் வளர்ந்ததை நல்வாழ்வு அமைப்புகள் துணை நிற்காததைப் பரிசீலிக்கையில், அவரது வயதுக்கு ஏற்றவிதத்தில் மனமுதிர்ச்சி வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. சிறையில் மணமுடித்து, தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சற்று ஆறுதல் கிடைக்க முற்பட்டுள்ளார் என்பதும் தெரிகின்றது”

நகயாமாவுக்கு மனநோய் இருந்ததா என்றறிய இருமுறை உளவியல் பரிசோதனை நடந்தது. 1971இல் நடந்த முதலாவது சோதனையில், அவர் அறிவுத் தெளிவானவரே என்று முடிவானது. 1973-74-இல் நடந்த இரண்டாவது சோதனையில், அவரது மனத்திறன் குறைந்திருப்பதாகத் தெரியவந்தது. ஆனாலும் அது பொருட்படுத்தப்படாமல், குற்றவாளியே என்ற முடிவுக்கு நீதிமன்றம் வந்து சேர்ந்தது.

இந்தியாவைப் போலவே அரிதினும் அரிதாக மரணதண்டனையை விதிப்பதாக ஜப்பான் கூறிக் கொள்கிறது. ஆனால் சமயங்களில் திடுதிப்பென்று முன்னறிப்பினை குற்றவாளியின் குடும்பத்தினருக்குக் கூட தெரிவிக்காதபடி இந்தியாவைப் போலவே நிறைவேற்றிவிடும் மரண தண்டனையை வன்முறையின் சுழற்சி என்கிறார் நகயாமா.

இவ்வளவுக்கும் சிறைவாழ்வில், முறையாகப் படிப்பை முடித்திராத நகயாமா தீவிரமாகப் படித்து, மாணவர் இயக்கம் சார்ந்திருந்த சக கைதியுடன் அரசியல்-தத்துவ விஷயங்களை விவாதித்து தெளிவு பெற்றவர். தன் குற்ற நடவடிக்கையிலிருந்து தொடங்கி பல்வேறு விஷயங்கள் சார்ந்து எழுதத் தொடங்கியவர். சுயசரிதம் சார்ந்த (narrative of the self) நாவல் வகைமையில் பங்களிப்பு செய்தவர். 1983இல் ஜப்பானிய புது இலக்கிய விருதினைப் பெற்றவர். தன் முதல் நாவல் வெளியானதும் அதிலிருந்து கிட்டும் வருவாயை, தன் கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கிடைக்கச் செய்தவர் – அது சற்று ஆறுதல் தரும் என்று, அவர் தூக்கிலிடப்படும் முன்பு, தனது நூல்களின் வருவாயை பெருநாட்டின் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அனுப்புமாறு ஏற்பாடு செய்தவர்.

மரண தண்டனையை ஒழிக்கப்பாடுபடும் அமைப்புகளுக்கு அவரது வாழ்வும் எழுத்தும் உத்வேகமாய் இருந்து வருகின்றது. சமூகத்திற்கு அபாயகரமானவர்கள் என்றும் அடிப்படையிலேயே மரணதண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. தண்டிக்கப்பட்ட பிறகு, சிறை வாழ்வில் நகயாமா முறையான குடும்ப வாழ்வை மேற்கொள்வதும், அறிவாற்றல் பெற்று எழுத்தாளர் ஆவதும், தன் குற்ற நடவடிக்கைக்குப் பரிகாரம் தேடுவதும், தன்னைப் போல குழந்தைகள் வறுமையில் உழவக்கூடாது என்னும் அக்கறை மிகுந்தும் இருந்துள்ளார். ஒரு குற்றவாளி சீரிய மனிதனாகி எழுத்தாளராகும்போது, படைப்பாற்றல் அவனை நெறிப்படுத்துகிறது. சமூகத்திற்கு அபாயகரமானவனாயிருந்தவன், இப்போது துணை நிற்பவனாய் உதவக் கூடியவனாய் பரிணாமம் கொள்கிறான், பரிமாணம் பெறுகிறான்.

‘தூக்கிலிடப்படுவதன் பொருட்டு சலனமின்றி காத்திருத்தலுக்கு மாறாக, படைப்பாக்க நடவடிக்கை மூலம், சவால்களை எதிர்கொள்ளும் வாழ்வை தெரிவு செய்து, சிறையில் தன் யதார்த்தத்திலிருந்து தப்பிக்க முயன்றார்.’

ஆதாரங்கள்
1. The Death-row killer who inspires the Children of
peru / cherry casey / tr by Hirohiko katayama & Ed Neidhardt.
2. Prison Literature in defense of a sentenced to death defendant in Japan/Lilion Yamamoto/Tr by Felipe Zobaran, pdf.
3. தாஸ்தோயவ்ஸ்கி-ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு, தமிழில்: சா. தேவதாஸ்/ நூல்வனம், 2019.