நூல் அறிமுகம்: உச்சிவெயில் – ஜனநேசன்

நூல் அறிமுகம்: உச்சிவெயில் – ஜனநேசன்

      கரிசல்,காட்டில் விளைந்த வைரங்களில் ஒருவர் பா.செயப்பிரகாசம். இவர் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உயரதிகாரியாக பணியாற்றி பணி நிறைவு செய்தவர்.  பணியில் இருந்தபோது பா. செயப்பிரகாசம் என்ற பெயரில் சிறுகதைகளையும் , சூரியதீபன் என்ற புனைபெயரில் கவிதைகள்,…
Punai Vilakkiya Nathiyil Neenthi Book By P. Vijayakumar Bookreview By Jananesan நூல் அறிமுகம் - பெ. விஜயகுமாரின் புனைவிலக்கிய  நதியில் நீந்தி - ஜனநேசன்

நூல் அறிமுகம் – பெ. விஜயகுமாரின் புனைவிலக்கிய  நதியில் நீந்தி – ஜனநேசன்




பேராசிரியர் . பி.விஜயகுமார்  ஆங்கில இலக்கியம் முப்பதாண்டு களுக்கு மேலாக  கற்பித்தவர். சமூக அக்கறையும் ,நாட்டுப் பற்றும் மிக்க கல்வியாளர். ஆங்கிலம் வழியாக  உலக இலக்கியங்கள்  அறிந்தவர் மட்டுமல்லாமல் தமிழார்வத்தால்  பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் நவீன தமிழ் இலக்கியங்கள் வரை வாசித்து  தன்னையும்  தமிழ்மொழி  நடையையும் புதிப்பித்து வருபவர். செம்மலர், புக்டே  இணைய இதழிலும்  தொடர்ந்து புத்தக அறிமுகக் கட்டுரைகளையும், விமர்சனங்களையும்  செய்து வருபவர். கொரோனா பெருந்தொற்று அலையலையாய்  தாக்கி  மானுடர்க்கு மட்டுமன்றி  சக உயிரிகளுக்கும்  பற்பல கேடுகளும், சிற்சில நன்மைகளும்  செய்திருக்கிறது. 

கொடுந்தொற்று முடக் ககாலத்தில், புத்தகத்தின் பால் தீண்டாமை கொண்டவர்களும், ஊர்முடக்கத்தில் வெளியே போக இயலாமல், புத்தகங்களை தூசுதட்டி வாசித்த  அதிசயங்கள்  நடந்தது. இத்தகு மனிதர்களை  ஆற்றுபடுத்தும் விதமாகமாகவும்  தனது முடக்க காலத்தை  இயங்கும் காலமாக்கவும்  பலநூல்களைத்தேடி தேடி வாசித்து, உடனுக்குடன்   புக்டே இணைய தளத்தின் வாயிலாக நூலார்வலர்களுக்கு அறிமுகம் செய்தார். இப்படி அறிமுகம் செய்த 15 நூல்களைப் பற்றிய  அறிமுகக்கட்டுரைகள் அடங்கிய  தொகுப்புதான்  “புனைவிலக்கிய நதியில் நீந்தி…” எனும் இந்நூல்.

கொடுந்தொற்று முடக்ககால இலக்கியசான்றுகளையும் ,மக்கள் எதிர்கொண்ட விதம்பற்றியும்  வாசகர்களுக்கு பகிரும்விதமாக  பிரஞ்சு இலக்கியமேதை  ஆல்பர்ட் காம்யு  எழுதிய ,”தி பிளேக் “ நாவலை  அறிமுகப்படுத்துகிறார்.  அல்ஜீரியாவில் ஓரான் எனும் கடற்கரை நகரில் பிளேக் நோய் எப்படி தாக்குகிறது, அரசு நிர்வாகத்தின்  அக்கறையின்மையும், மக்களின் அலட்சிய மனோபாவமும், சரியான மருத்துவ வசதியின்றியும், தற்காப்பு உணர்வின்றியும்  மாயும் அப்பாவி மக்கள்  குறித்தும் ,  ஆல்பர்ட் காம்யு நெஞ்சைத் தொடும் வண்ணம்  சொல்ல பயன்படுத்திய உத்திகளையும் பேரா. விஜயகுமார் அறிமுகப் படுத்துகிறார்.  

இதேபோல் நமது ரவீந்திரநாத் தாகூர் எழுதிய “தி போஸ்ட்ஆபிஸ்“ நாடகத்தில், கொடும் நோய்வாய்ப்பட்ட அமல் எனும்  சிறுவன் ஊர்முடக்கம் செய்யப்பட்டு அவன்படும் பாடுகளையும், ஜன்னல் வழியே, அவன் இயற்கையோடும், தெருவில் போகும் மனிதர்களோடு கொள்ளும் உறவாடல்களையும், தத்துவச் செறிவோடு  தாகூர் வாசகர்மனத்தில் கிளர்த்தும் தாக்கத்தையும் எடுத்து இயம்புகிறார் விஜயகுமார். இவ்விரு  படைப்புகளும் கொடுந்தொற்றில்  முடங்கிப்போன  மனங்களுக்கு தெம்பையும், ஆறுதலையும் தருகின்றன.

இன்றைய உலகுதழுவிய சூழலில் , நிறவெறியும், பாலியல்வன்ம வெறியாட்டங்களும் மனிதர்களை பீடித்த நோயாக ஆட்டுவித்தலையும் , இவற்றிலிருந்து  மீளும் வழிகளை ஆற்றுப்படுத்தும் விதமாக, ரிச்சர்ட் ரைட் எழுதிய “நேடிவ் சன் “ஆலிஸ் வாக்கர் எழுதிய  “தி கலர் பர்பிள் “ ,சாமன் நஹல் எழுதிய “ஆஸாதி”; பிரியா விஜயராகவன் எழுதிய “அற்றவைகளால் நிரம்பியவள் “ போன்ற படைப்புகளை இந்நூலாசிரியர்  அறிமுகம் செய்கிறார். 

இக்காலத்தில் நம்மை தொற்றிவரும் கொடுந்தோற்றுகளில்  ஒன்றான, மதவெறியின் தாக்கங்களையும், எதிர்கொள்ளும்  முறைகளையும், தோப்பில் முகமது மீரான்  எழுதிய,” அஞ்சுவண்ணம் தெரு “ மு.இராமசாமி எழுதிய , “விடாது கருப்பு” எனும் பெரியாரிய நாடக நூல்கள் மூலம் பேரா. விஜயகுமார் உணர்த்துகிறார். பாசிஸ்ட்களின் அடக்குமுறைகளையும், புத்தகங்களுக்கு எதிரான  நடவடிக்கைகளையும் அவற்றின்  எதிர்விளைவுகளையும், ரே பிராட்பரி எழுதிய “பாரன்ஹீட் -451” நாவல் வழி  சொல்லுகிறார். 

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, அவர்களது  வீரஞ்செறிந்த எதிர்வினைகளைக் கூறும் ,மஹா சுவேதாதேவி  எழுதிய “1084 இன் அம்மா” ,”காட்டில் உரிமை” போன்ற நாவல்கள் மூலம்  தமிழ் வாசகர்களுக்கு  இந்நூலாசிரியர்  அறிமுகம்  செய்கிறார்.

இவற்றோடு சுற்றுச்சூழல்களுக்கு கேடுவிளைவிக்கும் விதமாக, சிலப்பதிகார பின்னணியில்  இரா. முருகவேள் எழுதிய “மிளிர் கல்” நாவலையும், மணல்கொள்ளையின்  விளைவுகளைச் சொலலும் .பா.செயப்பிரகாசம் எழுதிய ,”மணல்” இத்தொகுப்பில் பேராசிரியர் அறிமுகப்படுத்தும் நூல்களின் ஆசிரியர்களின் ஆளுமைச் சிறப்புகளையும், அப்படைப்புகள் உருவான சமூகச் சூழல்களையும், அப்படைப்புகள்  இலக்கிய உலகிலும், சார்ந்த சமூகத்திலும்   ஏற்படுத்திய தாக்கங்களையும், அப்படைப்புகளில் படைப்பாளிகள் கையாண்ட  உத்திகளையும் வாசகமனதில் எளிதில் பதியும், சரளமான நடையில் பேரா. விஜயகுமார்  சொல்லுவது இந்நூலின் சிறப்புகளுள் ஒன்று..!  இந்நூல் வாசிப்புமட்டதை உயர்த்துவது மட்டுமல்ல; ஒரு நூலை வாசகனுக்கு  எப்படி அறிமுகப்படுத்தவேண்டும் என்பதையும் கற்பிக்கிறது.. ஆகவே  இந்நூல் தமிழ்கூறும் நல்லுலகின் வாசகர்கள் கையில்  இருக்கவேண்டிய  அவசியத்தையும்  வலியுறுத்துகிறது.

புனைவிலக்கிய நதியில் நீந்தி… என்ற நூல் தலைப்புக்கு  பொருத்தமான, ஈர்ப்பான அட்டைப்படமும், அச்சும், கட்டமைப்பும் இந்நூலுக்கு கூடுதல்  சிறப்பு.

நூல்: புனைவிலக்கிய நதியில் நீந்தி
ஆசிரியர்: பேரா.பெ..விஜயகுமார்.
வெளியீடு: கருத்துப் பட்டறை
பக்கங்கள்: 152
விலை: 170
தொடர்பு எண்; 9500740687

Azhini Novel By S. N. Arivumathi Novelreview By M.S. Sri laksmi நூல் விமர்சனம்: சொ. நே. அறிவுமதியின் ஆழினி நாவல் - முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி

நூல் விமர்சனம்: சொ. நே. அறிவுமதியின் ஆழினி நாவல் – முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி

மக்களுக்குப்  பல்லாற்றானும் நலம் பயப்பது  நகைச்சுவை உணர்வு. இதனை வெளிப்படுத்தும் செல்நெறிக்கு வளமும் சிறப்பும் கொண்ட தமிழ் இலக்கியமரபு  உண்டு. நாட்டுப்புறக் கலைவடிவங்களாக, மக்களிடையே அன்றாட வாழ்வில் ஊடாடிப் பல்வேறு வழிகளில் வெளிப்பட்டுவந்த நகைச்சுவையுணர்வு ஏட்டில் எழுதா இலக்கியமாக வளர்ந்துவந்திருப்பதை யாரும் மறுக்க இயலாது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே இச்செல்நெறி வழக்கில் இருந்திருக்கவேண்டும். எனவே உலகவழக்கு, புலனெறிவழக்கு என இருவகையாலும் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பும் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் எண்சுவைகளையும் அவை பிறக்கும் களங்களையும் வகைப்படுத்தி உள்ளார். நகைச்சுவை உணர்வின் களங்களாக,

“எள்ளல் இளமை பேதைமை மடனென
உள்ளப்பட்ட நகை நான்கென்ப” 
எனக் குறிப்பிடுகிறார். 

படைப்பில் முழுமையும் நகைச்சுவை உணர்வினை வெளிப்படுத்துவது, ஊடும் பாவுமாகப் பிணைந்து இடையிடையே வெளிப்படுத்துவது, ஆங்காங்கே நகைச்சுவை உணர்வினைத் தெளித்துச்செல்வது போன்ற வழிகளில் இலக்கியங்களில் நகைச்சுவை இடம்பெற்று வந்துள்ளது. தமிழ்க்கவிதை மரபில் இதற்கு எண்ணற்ற சான்றுகளைக் கூறமுடியும். காலத்திற்கேற்பச் செழித்து வளரும் உரைநடை இலக்கியத்திலும், நாடக இலக்கியத்திலும் செல்வாக்குப் பெற்ற நகைச்சுவை இன்று பல்லூடகம் வாயிலாகவும் பரவியுள்ளது.

சிந்திக்கத் தெரிந்த மனித இனத்துக்கே மட்டுமே சொந்தமானது நகைச்சுவை. இதனை வெளிப்படுத்தும் ஆற்றல் எல்லோரிடமும் எளிதில் அமைந்துவிடாது. வெகுசிலரே இத்திறன் கைவரப்பெற்றவராய் இருப்பர். நகைச்சுவையை வெளிப்படுத்தும் உத்தி முறைகள் பற்பல. காட்சி ஊடகங்களில் உடல்மொழியால் மட்டுமின்றிப் பேச்சுமொழியாலும் செய்கைகளாலும் நகைச்சுவையை வெளிப்படுத்திவிட முடியும். ஆனால் எழுத்துவழியான படைப்புகளில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த மிகுந்ததிறமையும் கற்பனைஉணர்வும் தேவைப்படுகின்றன. முதலில் அந்த எழுத்தாளன் நகைச்சுவை உணர்வு உள்ளவனாக இருக்கவேண்டும். கழைக்கூத்தாடி போன்று கவனமாகச் செயல்படவும் வேண்டும்.  நகைச்சுவைப் படைப்புகள் மற்றப்படைப்புகள்போல அதிக எண்ணிக்கையில் வெளிவராததற்கு இந்த அருமைப்பாடும்  ஒரு காரணமாக இருக்கக்கூடும். 

ஆனந்தவிகடன் தேவன் (ஆர். மகாதேவன்), பாக்கியம் ராமசாமி (ஜலகண்டாபுரம் ராமசாமி சுந்தரேசன்) போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளுக்குப் பிறகு நீண்டநாள் கழித்து நான் வாசிக்கும் முழு நகைச்சுவை நாவல் ‘ஆழினி’ என்பதில் அளவற்ற மகிழ்ச்சி. வீட்டில் தனியே இருந்து படித்தபோது என்னை வாய்விட்டுச் சிரிக்கவைத்த நாவல் என்பதோடு நகைச்சுவையின் ஆற்றலை எனக்குள் பாய்ச்சிய நாவல் இது என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. 

நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, அதன் விளைவான பரபரப்பான  வாழ்க்கை முறை  ஆகியவை காரணமாக நகைச்சுவையை மறந்துவரும் இன்றைய இளம்தலைமுறையிலிருந்து நகைச்சுவையையே  அடிப்படையாய்க் கொண்ட ‘ஆழினி’ என்னும்  புதினத்தை எழுதியுள்ளார்  செல்வி சொ.நே.அறிவுமதி. முனைவர்பட்ட ஆய்வுக்காகச் “சங்க இலக்கியத்தில் உணர்ச்சி மேலாண்மை” என்பதை  ஆய்வுப்பொருளாகத் தெரிவுசெய்துள்ள இவருடைய கன்னி முயற்சி இந்த நாவல். 

தமிழ்மொழி  பிறந்து செழித்து வளர்ந்த தமிழ்நாட்டில் இன்று தமிழைப் பேசவும் படிக்கவும் எழுதவும் தயங்கும்  இளம்தலைமுறையினரை எள்ளி நகையாடுவது இந்த நாவலின் நோக்கமாகவும் தொனிப்பொருளாகவும் இருக்கவேண்டும் என்று  எனக்குத் தோன்றுகிறது.  கடற்கன்னி (மெர்மெயிட்  என்னும் மீன்பெண்) செந்தமிழில் – சங்கத்தமிழில் பேச புவனன், பரதன், நந்தினி ஆகிய இளைஞர்களும், நந்தினி, பரதன் ஆகியோரின் தந்தை மாதவன் போன்ற மூத்த தலைமுறையினரும்  அதனைப் புரிந்துகொள்ளாததால் இந்த முடிவுக்கு வரவேண்டி உள்ளது. காலமாற்றத்தில் தமிழர்களின் அக்கறையின்மையால் எத்தனை சொற்கள் வழக்கிழந்துபோய்விட்டன என்பதை எண்ணும்போது  ஆழ்ந்த வருத்தமே மேலிடுகிறது. இத்தகு வருத்தம் செல்வி அறிவுமதிக்கும் தோன்றியிருக்கவேண்டும்.ஆகவேதான் கடற்கன்னி செந்தமிழ் பேசுவதாக அவரால் கற்பனை செய்யமுடிகிறது. 

கடற்கன்னியின் செந்தமிழ் கேட்கையில், நாஞ்சில்நாடன் அவர்கள்  தமிழ் இலக்கியத்தில் பயின்றுவரும் அரிய சொற்களைக்குறித்து ஆய்வுநோக்குடன்  தொடர்கட்டுரைகளாக வடித்துவருவதும் அவற்றைப் புலனத்தின்வழி  என்னுடன் பகிர்ந்துகொள்வதுமே என் நினைவுக்கு வந்தன. அக்கட்டுரைகள்  வாசகர்களாகிய நாம் பழம்பெருமை பேசுவதில் மகிமை ஒன்றுமில்லை; பழந்தமிழ்ச்சொற்களைப் புழக்கத்தில் கொண்டுவரவேண்டும் என்னும் சிந்தனையை நமக்குள்  விதைப்பன. இச்சிந்தனையின் நீட்சியாகவும்  எதிரொலியாகவும்  ஆழினி என்னும் நகைச்சுவைப் புதினத்தை நான் காண்கிறேன். 

கடற்கன்னியின் செந்தமிழைப் புரிந்துகொள்ள இவர்  பேச்சுத்தமிழில் எளிமைப்படுத்தி அடைப்புக்குறிக்குள் கொடுக்கிறார். கதையில் வரும் பாத்திரங்களான புவனனைத் தொடக்கத்தில் மொழிபெயர்க்க வைக்கிறார் நாவலாசிரியர். பின்னர் அவனே செந்தமிழிலும் பேசுகிறான். பரதன் பிற்பகுதியில்  செந்தமிழைப்பேசவும் மொழிபெயர்க்கவும் செய்கிறான். இதன் மூலம் நாவலாசிரியர் “சித்திரமும் கைப்பழக்கம் ;செந்தமிழும் நாப்பழக்கம்”  என்று இளையர்களுக்குக் கூறுவதாகத் தோன்றுகிறது. தமிழில் பேசுவதையே தமிழனுக்கு மொழிபெயர்த்துச் சொன்னால்தான் புரியும் என்றால்  இந்த நிலை எவ்வளவு கொடுமையானது என எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. எங்கே போகிறது நம் சமூகம்? அதேவேளையில் மணிமேகலை கூறும் சாதுவன் என்னும் வணிகனின் மொழிப்புலமை அவனை எவ்வாறு நாகர்களிடமிருந்து காத்தது என்பதையும் எண்ணிப்பார்க்கவைக்கிறது ஆழினி நாவல். 

ஆழினி, ஆழியன் என்னும் தமிழ்ப்பெயர்கள் இனிமைகொண்ட  காரணப்பெயர்களாக அமையுமாறு படைத்திருப்பது பாத்திரப்பண்புக்கு மட்டுமின்றி அறிவுமதியின் தமிழ் உணர்வுக்கும் சான்றாகின்றன.  மனிதப்பிறவி  அல்லாத கடற்கன்னியும் அவள் காதலனும் அழகிய செந்தமிழ்ப்பெயர்களைக் கொண்டிருப்பதும் அவர்கள் செந்தமிழ் பேசுவதுமாகப் படைத்திருப்பது  நாவலாசிரியரின் மொழியுணர்வை- மொழிப்பற்றைமட்டும் காட்டுவதாக எனக்குத் தோன்றவில்லை.   தாய்மொழி அறியாதவனை மனிதனாக எப்படி மதிக்க முடியும்? என்று அவர் கேட்பதாகவே தோன்றுகிறது. நம் தமிழர்கள்  இக்காலத்தில் எவ்வாறு பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுகிறார்கள் என்பதையும் சிந்திக்க வைக்கிறது இந்த நாவல். 

பரதனும் புவனனும் நண்பர்கள். புவனன் பரதனின் உடன்பிறப்பான நந்தினியின் காதலன். பரதன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கப் புவனன்   மீன் வாங்கிவந்து  அதனைக் குழம்புவைக்கத் தொடங்குவதில் கதை தொடங்குகிறது. மீனை வெட்டும்போது ஒரு மீன் கடற்கன்னியாக இருப்பதை அறிகிறான்.அவள் பெயர் ஆழினி.  தன்னைப் புவனன்  வெட்டவிடாமல் தன் வால் மூலம் அவனிடம் வலிமையைக் காட்டுகிறாள் ஆழினி. புவனனின் வலிமை அவளிடம் தோற்றுவிடுகிறது. அவள் செந்தமிழில் பேசுகிறாள். அதனை அவன் யவனத்தமிழ் என்று கூறிப் புரிந்துகொள்ளச் சிரமப்படுகிறான். ஆழினி மாயவித்தைகள்  செய்வதிலும் வல்லவளாக இருக்கிறாள். ஆழினி தன் காதலன் ஆழியனைப் பிரிந்துவந்ததைக் கூறிப் புவனனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவன் மூலம் ஆழியனைத் தேடுகிறாள்.

பரதன், நந்தினி, மாதவன் என ஒவ்வொருவராக ஆழியனைத் தேடும் முயற்சியில் கோர்த்துவிடப்படுகிறார்கள். ஆழினியின் கட்டுப்பாட்டினாலும் அவள் இயக்குவதாலும் புவனனும் பரதனும் பல சாகசங்கள் செய்கிறார்கள். மனிதர்கள் எப்படி இந்த நிலத்தில் வாழ்கிறார்கள் என்பதைத் தன் தேடலின் மூலம் அறிகிறாள் ஆழினி. பல போராட்டங்களுக்குப் பிறகு இறுதியில் ஆழினியும் ஆழியனும் இணைவதாகக் கதை  முடிகிறது. நகைச்சுவை தருவது மகிழ்ச்சி தானே. ஆகவே இந்த நாவலின் சுபமான முடிவை நம்மால் சுகமாகவே ஏற்றுக்கொள்ள முடிகிறது.  

ஆழினி நாவல் கற்பனையும் நகைச்சுவையும் கலவாமல் எழுதப்பட்டிருருந்தால் மொழியைப் பற்றிய பிரச்சாரமாகவே அமைந்துவிடும் வாய்ப்பும் உள்ளது. ஆழினி நாவல் கற்பனையும் சாகசமும் மாயாஜாலமும் நகைச்சுவையும் கேலிச்சித்திர பாணியும்  யதார்த்தமும் கலந்த கலவை என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. நகைச்சுவையைப் பல அணுகுமுறைகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர். ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பதுபோலப் பல நிகழ்ச்சிகள் இருப்பினும் சான்றுக்கு ஒன்றிரண்டை  எடுத்துக்காட்ட முடியும். 

பரதன், நந்தினி, புவனன் ஆகியோர் ஒருவரை ஒருவர் கேலி செய்தவதையும் பரதனும் புவனனும் மாதவனைக் கேலிசெய்வதையும் எள்ளலின் மூலம் வெளிப்படும் நகைச்சுவைக்கு உதாரணமாகக் கூறலாம். இப்பாத்திரங்கள் ஆழினியையும் ஆழியனையும்  அவ்வப்போது  கேலிசெய்கின்றன. அறியாமை காரணமாகப் பிறக்கும் நகைச்சுவைக்கு ஒருவர் பேசும் மொழி புரியாததால் மற்றவர் வேறுவிதமாக அர்த்தப்படுத்திக்கொள்வது,காவலர்கள் தவறாக இட்லிச்சட்டியை (மிஷின்)  அறிவியல் கருவி என மயங்குவது போன்றவற்றைக் கூறலாம். அறிந்தும் அறியாததுபோல் தோன்றும் மடமையின் மூலம் நகைச்சுவையை வரவழைப்பது பரதனின் பாத்திரம். மேலும் இப்பாத்திரம் தானே வலியப்போய்ச் சிக்கலில் மாட்டிக்கொள்வதும் நமக்குச் சிரிப்பை வரவைக்கிறது. இப்பாத்திரம் கடல்பிசாசு, கடல்பூதம் என முறையே  ஆழினி,ஆழியனுக்குப் பெயர் சூட்டுகிறது. பரதனின் பாத்திரம் விகடம் நிறைந்த பாத்திரமாக இருப்பது சிறப்பு.

தமிழ், ஆங்கிலம், மலையாளம்  எனக் கலந்து பேசும்  கலவை மொழியும் கருவியாகி  நகைச்சுவை பிறக்கச்செய்கிறது.   கூகிள் மொழிபெயர்ப்பும் நகைப்பிற்கு இடமாகிறது. மனிதரை விலங்கு எனக்  கருதிக் குரங்கு, பக்கி எனத் திட்டுவது, பாத்திரங்கள் இடம் பொருள் ஏவல் அறியாமல்  பேசுவது, கேட்கப்படும் கேள்விகளுக்கு இடக்காகப் பதில் சொல்வது, ஒலி ஒப்புமை உடைய சொற்களைப் பயன்படுத்தி நகைப்பை ஏற்படுத்துவது, இட்லிச்சட்டி,வடைச்சட்டி என்பனவற்றை மாயாஜாலக்கருவிகளாக்குவது, உவமைகளின் மூலம் சிரிப்பை ஏற்படுத்துவது, சிறுவர் பாத்திரங்களை அறிமுகம் செய்து அவர்களின் மூலம் நகைப்பை உண்டாக்குவது, ஒருவர் மற்றவரை முட்டாளாக்குவது, வீணான சந்தேகத்தின் மூலம் நகைப்பை ஏற்படுத்துவது, நம்பமுடியாத நிகழ்ச்சிகளைப் படைத்துக்காட்டுவது, கதையில் சிக்கல்கள் தோன்றும்போது அவற்றை விடுவிக்கத் தண்ணீர் தெளிப்பது, கடற்கன்னியும் திறம்பெறுவதற்காகச் சுற்றுவது போன்ற கற்பனை நிகழ்வுகள்     போன்று பற்பல  வழிகளில் நகைச்சுவையைத் திறம்படக் கையாள்கிறார். வஞ்சப்புகழ்ச்சி,  மிகைப்படுத்துதல், இரட்டுறமொழிதல் என்னும் சிலேடைப்பேச்சு, அனுபவ நகைச்சுவை , கோமாளித்தனம், நையாண்டி என இன்னோரன்ன வழிகளிலும்  நகைச்சுவையை இந்த நாவலாசிரியர் வெளிப்படுத்துகிறார்.

முன்னர்க்குறிப்பிட்டதுபோன்று எள்ளி நகையாடுவது அறிவுமதியின் நோக்கமாக இருப்பதால் போகிறபோக்கில் சமூக நிகழ்வுகளை அங்கதச்சுவையுடன் வருணித்துச் செல்கிறார். “பஞ்ச் டயலாக்” பாணியில் உள்ளத்தில் தைப்பது போல ‘நச்’ என்று சில அங்கதங்கள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. “புறங்காட்டு வழக்கமெல்லாம் மானிடரிடம்தான் “ என ஆழினி உரைப்பது; காக்கை பிடித்தல் என்னும் பழக்கத்தை புவனன் மூலம் அங்கதமாக்குவது; இளையர்களிடம் மிதமிஞ்சிக் காணப்படும் மொழிக்கலப்பை மாதவன் மூலம் இடித்துரைப்பது, மாறிமாறிப் பேசுவது மனிதப்பண்பன்று என மாதவன் மூலம் கூறுவது , உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா என்னும்  உவமை  மூலம் விளம்பரங்களைக் கேலிப்பொருளாக்குவது எனச் சமூகஅங்கதமாக இந்த நாவல் படைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

சங்க இலக்கிய மாண்பையும்  பல அரிய சங்கத்தமிழ்ச்  சொற்களின் பயன்பாட்டையும்   இந்த நாவல் மூலம் இளைய உள்ளங்களில் விதைக்க முயன்றுள்ளார் அறிவுமதி. பெருந்தொற்றினால் உலகமே பெரும் அவதிக்குள்ளான 2020 ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கிய செல்வி  அறிவுமதி இந்த நாவலின் மூலம் மன உளைச்சலைப்போக்கும் அற்புத மருந்தை அளித்துள்ளார். துன்பம் வரும் வேளையில் மனவுறுதியுடன் அதனை எதிர்கொள்ள நகைச்சுவை கைகொடுக்கும் என்பதை இந்த நாவல் மூலம் நாம் அறிகிறோம்.   மொத்தத்தில் முதல் முயற்சியிலேயே அபாரமான திறமையோடு ஆழினியைப் படைத்துள்ள செல்வி அறிவுமதி இனிவரும் காலங்களிலும் நிறையவும்,  மனம்நிறையவும் எழுதவேண்டும் என்று  எதிர்பார்ப்போம்.தமிழ் வாசகர் உலகம் இளையர் முயற்சிக்கு என்றென்றும் ஆதரவு நல்கவேண்டும்.  வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்று முன்னோர்கள் சொன்னதை மெய்ப்பிக்க நம்முடன் துணை வருகிறாள் ஆழினி.

முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி
மேனாள் விரிவுரையாளர் ( பணி நிறைவு )
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் .

நூலின் பெயர் :ஆழினி
ஆசிரியர்: சொ. நே. அறிவுமதி

பக்கங்கள்: 390
விலை : ரூபாய்
400 /-

Ammavin Vadagai Veedu Book By Indrajith Bookreview By A. Kumaresan. நூல் அறிமுகம்: இந்திரஜித் எழுதிய ‘அம்மாவின் வாடகை வீடு’ - அ. குமரேசன்

நூல் அறிமுகம்: இந்திரஜித் எழுதிய ‘அம்மாவின் வாடகை வீடு’ – அ. குமரேசன்

இலக்கியம் எவ்வாறு உலகத்தை இணைக்கிறது என்றால், மக்களின் வாழ்நிலைகள் மாறுபட்டாலும் அடிப்படை அன்புக்கான ஏக்கம், அதற்குச் செய்யப்படும் துரோகங்கள் ஆகியவை எங்கும் ஒரே மாதிரியாக இருப்பதை வெளிப்படுத்துவதன் மூலமாக. வரலாறு சார்ந்து மலேசியா, தாய்லாந்து, பர்மா உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்த் தொழிலாளர்களின் குருதியும் வியர்வையும் உறிஞ்சப்பட்ட கொடுமைமைப் பேசுகிறது எழுத்தாளர் இந்திரஜித் எழுதிய முதல் நாவலான ‘ரயில்‘. இரண்டாவது நாவல் ‘அம்மாவின் வாடகை வீடு‘ நம் சமகால நிலைமையொன்றைக் காட்டுகிறது.

பொதுவாகவே பலர் தங்கள் அம்மாவையே வாடகை வீடாகத்தான் நினைக்கிறார்கள். அவர் வயிற்றில் குடியிருந்து வந்ததற்காக வயிற்றுக்குச் சோறிட்டால் போதும் சில வசதிகளைச் செய்துகொடுத்தால் போதும் செலவுக்குக் கொஞ்சம் காசு கொடுத்தால் போதும் என்றுதான் நடத்துகிறார்கள். சொத்துள்ள அம்மாக்களுக்குக் கிடைக்கிற மரியாதை வேறு, பிள்ளைகளுக்காகவே சொத்தைக் கரைத்திருந்தாலும் அவர்களுக்குக் கிடைக்கிற மரியாதை வேறு. நாவலைப் படித்து முடிக்கிறபோது நம்மில் சிலருக்குக் குற்றவுணர்ச்சி ஏற்படக்கூடும்.

சிங்கப்பூர் இந்த நாவலின் கதைக்களம். நம் மனங்களில் சிங்கப்பூர் சூழல், வாழ்நிலை குறித்து ஏற்படுத்தப்பட்டுள்ள பிம்பங்களைக் கலைத்துப்போடுகிறது நாவல். 87 வயது வாசுகியின் கை அவ்வாறு கலைத்துப்போடுகிறது. அரசு ஊழியரான கணவர் முருகேசு கிராணி வாங்கிப்போட்ட சொந்த வீட்டில் வாழ்ந்தவர்தான் வாசுகி. அவர் ஏன் சிங்கப்பூரின் ரெட்ஹில்ஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கிறார்?

ஆண் சிங்கங்களாக ஏழு பிள்ளைகளைப் பெறுகிறார். அவர்களும் அரசாங்க ஊழியர்களாகிவிட வேண்டும் என்று பாடுபட்டு, அவர்களையும் பாடுபடுத்தி வளர்க்கிறார். அவர்கள் அரசாங்க வேலைக்குப் போகாவிட்டாலும் ஏதோவொரு நல்லநிலைக்கு வருகிறார்கள். குடிபோதையால் அனைத்தையும் (குடும்பம் உட்பட) இழக்கும் கடைசி மகன் ராஜா, துறவறம் பூண்டு வாடகை கொடுப்பதற்காக தியான மண்டபம் நடத்தும் நான்காவது மகன் சந்திரன் ஆகியோரைத் தவிர்த்து. ஆனாலும் தனக்கு யாருமே இல்லை என்று வாடகைக் கட்டடப் பொறுப்பாளரிடம் சொல்கிற நிலைமை ஏன் ஏற்படுகிறது?

தனியுடைமைச் சமுதாய அமைப்பு தனிமனிதக் கோபதாபங்களையும் பேராசைகளையும் கட்டி வளர்த்து உறவுகளையும் வாழ்க்கையையும் சின்னாபின்னப்படுத்துகிறது. பெண்ணுக்குப் பெண் எதிரியாக்குகிறது. இந்தச் சொற்கள் இல்லாமலே இது உணர்த்தப்படுவது படைப்பின் ஒரு சிறப்பு.

பெண்ணுக்குப் பெண் எதிரி என்றால் மாமியார மருமகள்கள் பகை மட்டுமல்ல. வாசுகியின் அம்மாவே கூட எதிரியாகிறார். மகள் விரும்பிய மாமன் பகலேயைப் புறக்கணித்துவிட்டு, அவசர அவசரமாக முருகேசுவுக்குக் கட்டிவைக்கிறார். முருகேசு மீது கடைசிவரையில் வாசுகிக்கு அன்பு ஏற்படலில்லை. ஆளால் அற்த ஆத்திரத்தில் ஏழு பிள்ளைகளைப் பெற்றுப்போடுகிறார். எவ்வளவு நுட்பமான வாழ்வியல். பகலே, வாசுகி உறவைச் சித்தரிப்பதிலும் அதே நுட்பம். முருகேசு இறந்துபோன பிறகு அவருடைய மூக்குக் கண்ணாடியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் சாப்பிடுகிறார் வாசுகி. உணர்வின் இந்த நுட்பத்தை என்னவென்பது?

பெண்ணுக்குப் பெண் நெருங்கிய நட்பு கொள்வதும் நடக்கிறது. ஒரு சிட்டுக்குருவியைச் செடியின் கீழ் நல்லடக்கம் செய்ய வாசுகிக்கு உதவும் காயத்திரியின் நட்பு அத்தகையதுதான். இருவருக்கும் வயது வேறுபாடு 60! காதல் மணம் செய்துகொண்ட காயத்திரி பின்னர் கணவரைப் பிரிந்து தன் இரண்டு பெண்களோடு வாடகை வீட்டிற்கு வந்த கதையொன்றும் நாவலில் குடியேறியிருக்கிறது.

கணவர் மேல் காயத்திரிக்கு அப்படி என்னதான் கோபம்? “ஆடு வளர்க்கிறவன்கிட்ட ஆட்டுக்கு என்ன கோபம் இருக்கும்? என் கணவரு என்ன நெனச்சாருன்னா நான் எங்க அம்மா வீட்ல புருஷன் இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன். என்னைக் கொண்டுவந்து அவரோட அம்மா வீட்ல வெச்சுட்டா நான் நல்லா இருப்பேன்னு நெனைச்சுட்டாரு.” உரிமைகள் உள்ளிட்ட பெண்ணுணர்வுகள் அவமதிக்கப்படுவதை வாசுகி–காயத்திரி உரையாடல் எடுத்துக்காட்டுகிறது.

தன் பெண்களுக்கு எதுவும் சொல்லப்போவதில்லை, தனது அனுபவம் தனக்கு மட்டும்தான் உதவும். அவர்களுக்குத் தான் கொடுக்கப்போவது சுதந்திரமும் சோறும்தான் என்று சொல்லும் காயத்திரியை வாசுகிக்கு ஏன் பிடித்துப்போகாது? கல்யாணம், மதித்தல், படிப்பு, அன்பு, காதல் பற்றி அவர்கள் தொடர்ந்து பேசுவது ஒரு தத்துவ விசாரணை.

ஆணாதிக்கக் கட்டமைப்பு உலகில் பல பெண்களுக்கும் இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் தேர்வு செய்ய விடுகிறது. வாசுகி, காயத்திரி மட்டுமல்லாமல் ராஜாவை விட்டு விலகி பிள்ளைகளோடு எங்கோவொரு வாடகை வீட்டைத் தேடிப் போகும் நளினா குமாரியின் கதையும் இதைத்தான் காட்டுகிறது. வாசுகிகளையும் காயத்திரிகளையும் நம் ஊரில், நம் தெருவில் பார்க்கலாம். பல நாடுகளிலும் பல சமூகங்களிலும் காணலாம். ஆகவே “பிரபஞ்சப் பேரோசை” பற்றி பேசுகிற இந்த நாவல் இந்த உலகத்துக்குப் பொதுவானதுதான்.

நிகழ்வுத் தொகுப்பாக அல்லாமல், கதாபாத்திரங்களின் குணநலன்களின் வழியாகக் கதை சொல்லப்படுகிறது. வயதான பின்பு எல்லோருக்கும் ஏற்படுவது போன்றே சகோதரர்களுக்குத் தங்கள் தாயைச் சந்தித்து அழைத்துக்கொள்ள விருப்பம் ஏற்படுகிறது. ஆறு சகோதரர்கள் சந்திக்கிறார்கள். இன்னொரு சகோதரன் பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஜாவாவுக்குச் சென்றுவிட்டதாக ஊகிக்கப்படுகிறது. அங்கே சென்றவர்கள் திரும்புவதில்லையாம். யாரோ ஒரு பெண்ணுடன் வாழ்ந்துகொண்டிருப்பான், அல்லது யாரோ ஒரு பெண்ணுக்காகச் செத்துப்போயிருப்பான்…!

அத்தனை பேர் நிற்கக்கூட இடமில்லாத வீட்டில் அவர்களைச் சந்திக்கிறார் வாசுகி. அவர்களுக்கு நிதானமான முறையில் அவர் சொல்லும் பதில் எதிர்பார்க்கத் தக்கதாக இருக்கிறது. ஆனால் அந்த இறுதிக்கட்டத்தில் எதிர்பாராத முக்கியமானதொரு திருப்பம் வருகிறது. நாவலின் பொதுத்தன்மை மட்டுமல்ல, வாசுகிகளின் தனித்தன்மையும் அக்காட்சியால் மேலோங்குகிறது.

எந்த எலியை அடித்துக் கொல்ல கம்பெடுத்தாரோ, அதே எலியின் மீது அன்பு கொள்ளும் ஹென்ரி மாமா போன்ற துணைப்பாத்திரங்கள், நாவலின் செய்திக்குத் துணைசெய்கின்றன. எலிக்குக் கொஞ்சம் தோசை பிய்த்துப்போடும் ஹென்ரி அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து சாப்பிடுகிறார். இடையில் ஏதோ நினைத்துக்கொண்டு அதனை வணங்குகிறார். அது அவரை நிமிர்ந்து பார்க்கிறது. அது ஏதாவது யோசிக்கிறதா என்று பார்க்கிறார். இல்லை பேசாமல் பார்க்கிறது.. எலி எதுவும் யோசிக்காது போலிருக்கிறது… இப்படியாக வரும் வரிகள், எதையும் யோசிக்கத் தயாராக இல்லாத மனிதர்களுக்கானவை.

இன்னொரு இடத்தில், எண்ணங்களை என்ன செய்வது என்று யோசிக்கிறான் ராஜா. “நினைக்காமல் இருப்பதற்கு என்னவெல்லாம் நினைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்”! உண்மையில் உலகில் எவரும் எதையும் நினைக்காமல் இருக்க முடியுமா என்று நினைக்க வைக்கிற கேள்வி இது.

“சொந்தமாக ஒரு வாடகை வீடு” – இத்தகைய முரண்சுவை மிக்க சித்தரிப்புகளும் சமூக விமர்சனமே. முன்னுரையில் இந்திரஜித், “நான் சில கருத்துகளைச் சொல்ல விரும்புகிறேன். அதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். என்பதற்காக இந்த நாவலை எழுதவில்லை. இது இப்படி இருந்தது என்பதைச் சொல்கிறேன்,“ என்கிறார். ஆனால் வாசுகிகளுக்கும் மற்றவர்களுக்கும் என்ன நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்று வெளிப்படுத்துவதே மனிதர்களுக்கு இப்படியெல்லாம் நேரக்கூடாது என்ற கருத்திலிருந்துதானே!

வாழ்க்கை, சமூகம், தத்துவம் எனப் பல கோணங்களில் நினைக்க வைக்கும் நாவலைக் கொடுத்திருக்கிறார் இந்திரஜித். சிறப்பான முறையில் அதனைக் கொண்டுவந்திருக்கிறது ‘உயிர்மை.’

நூல்: அம்மாவின் வாடகை வீடு
ஆசிரியர்: இந்திரஜித்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 126
விலை: ரூ.160
எண் 5, பரமேஸ்வரி நகர் முதல் தெரு, அடையாறு சென்னை – 600020
தொலைபேசி 91–44–48586727
மின்னஞ்சல்: uyirmmai@gmail.com

Sattaikari Book By Karan Karki Bookreview By Karuppu Anbarasan நூல் மதிப்புரை: கரன் கார்க்கியின் சட்டைக்காரி - கருப்பு அன்பரசன்

நூல் மதிப்புரை: கரன் கார்க்கியின் சட்டைக்காரி – கருப்பு அன்பரசன்

சட்டைக்காரி என்ன சொல்வாள்.? காதலிக்கச் சொல்வாள் போராடச் சொல்வாள் நேர்மையான அன்பைச் சொல்வாள்.

புலர் காலைப் பொழுதொன்றில் சென்னையின் வங்கக் கடற்கரையோரம் நின்று பாருங்கள்.. அமைதியும் இரைச்சலுமாக, பெரிய அலையின் பின்னால் சின்ன அலையும்; சின்ன அலையின் பின்னால் பெரியதொரு அலையும், ஒன்றைத் துரத்தி ஒன்று வந்து, ஒன்றின் மீது மற்றொன்று ஏறி கட்டித்தழுவி காதல் புரிந்து சண்டையிட்டு ஊடலில் தனித்தனியாக பிரிந்து வந்து நம் கால்களில் முத்தமிட்டு, பாதத்திற்கு கீழ் கிச்சுகிச்சு மூட்டியும் , மணலை உருவி வாரியணைத்து இழுத்துச் செல்லும்.. நிலை தப்பினால் நம்மையும் சேர்த்தே.

கடல் சூடியிருக்கும் மொத்த இருட்டையும் கீரி, பொன் நிறத்தையும் செந்நிறத்தையும் வாரி அடிவானம் எங்கும் பூசிக்கொண்டே தன் உச்சந்தலையை மட்டும் கடலைப் பிளந்து மேலெழும்பி வரும் கதிரவனை, அவன் செய்து வரும் ஜாலத்தால் தகதகவென மின்னும் கடலையும்.., கடல் மேற்பரப்பின் வெகுதூரத்தில் அலையின் வாட்டத்தில் ஏறியும் இறங்கியும், நடைபயிலும் குழந்தையைப் போன்று ஆடி அசைந்து, கடலின் உவர்ப்பும் தோற்று ஓடும் அளவிற்கு சில்லென்று வீசும் குளிர் காற்றிலும் உரமேறிய.. நரம்புகள் முறுக்கி கிடக்கும் உடம்பெங்கிலும் உப்பைச் சுமந்து நிற்கும் வியர்வை துளியின் வாசம் மணக்க, குரலெடுத்து பேசி உழைப்பின் மொத்தமாக இருக்கும் மீனவ மக்களையும்..

துள்ளி அலையும் மீன்களை, நீரில் பறந்து திரியும் விதவிதமான நண்டுகளை இன்றைய மகிழ்ச்சியான வாழ்க்கையினை அள்ளி வருவார்கள் என அவர்களின் வருகைக்காக கரையில் அலுமினியக் கூடைகளோடு கவிச்சி மணம் கடல் காற்றெல்லாம் பூசிக் கொண்டு காத்து நிற்கும் பெண்களும் குழந்தைகளுமாக.. இயற்கையின், உழைப்பின் பேரழகு எல்லாம் நம் மனதை கிளர்ச்சியூட்டும்.. வாழ்தலின் அவசியத்தை சொல்லி ஒவ்வொரு நிமிடத்தையும் நமதாக்கும்.

மெய்யான நாட்டு நடப்பை உற்று நோக்கினால்.. கபடமில்லாத கண்கள் கொண்டு பார்த்தோமென்றால் பெரும் துயரம் மிகுந்த நம்பிக்கை இல்லா நிகழ்வுகளாகவே அனுதினமும் நடந்து வருகின்றன. இயற்கையின் அத்தனை வளங்களும்..அத்தனை ரகசியங்களும்.. வளம் மிகுந்து நீர் ஆதாரங்களும்.. அதில் வந்தமர்ந்து பேரன்பின் அழகினை குரலெடுத்து சொல்லிச் செல்லும் தூரதேசத்தின் வண்ணவண்ணப் பறவைகளை..

வனப்பின் ரகசியத்தை தன்னை தழுவிச் செல்லும் மேகக் கூட்டத்தின் காதுகளுக்கு மட்டும் சொல்லிக் காதல் மொழி பேசும் மலை முகடுகளை.. பச்சைப்பட்டுத்தி பாங்காய் காட்சிதரும் காட்டு மரங்கள் பலதை.. அச்சமின்றி சுதந்திரமாய் சுற்றித்திரியும் காட்டு விலங்குகளை.. இவைகளோடு நேசம் மிகுந்த வாழ்வினை இயற்கையாகவே வாழ்ந்தும் அவைகளின் அரணாய் விளங்கி நிற்கும் மலை மக்களை, விரட்டியும் விஞ்ஞானத்தின் பெயரால் வளங்கள் அனைத்தையும் சூறையாடி வருவதும் நிதம் வந்து கண்களை இருட்டாக்கி சென்று கொண்டிருக்கிறது.

சென்னைக்கு அருகாமையில் இதோ பழவேற்காடு நம் கண்ணெதிரே சாட்சியாகிக்கொண்டு தற்போது.. கடல் நீரையும் தனதாக்கிக் கொள்ளும் நவீன வியாபாரத்தின் தந்திரம் லாப வெறியாக மாறி கடல் கிராமத்தையும் பெருங்காடுகளையும் அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.. ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் அதற்கு உறுதுணையாக.. இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே, நவீன இந்தியா, டிஜிட்டல் இந்தியா, அதனைத் தொடர்ந்து அழகிய இந்தியாவின் ஒரு பகுதியாக 2047 ஆண்டிற்குள் வரலாற்று சிறப்புமிக்க மெரினா கடற்கரை..

அதை வடிவாகக் காட்டிடும் வங்கக்கடலையும் சென்னை நகர மக்களின் பார்வையிலிருந்து மறைத்திட வானுயர்ந்து தடுப்பு ஒன்றினை நீளும் கரையெங்கும் எழுப்பப்படலாம்.. அறிவியல் துணைக்கொண்டு பொறியியல் தொழில் நுட்பத்தால் உலகத்தின் செல்வச் சீமான்கள் சீமாட்டிகள் என அனைவரும் அதிகாரத்தின் துணைகொண்டு கடல் பரப்பையும், எல்லை அளவிட்டு அடையாள நங்கூரம் நிறுத்தி, தங்களின் உல்லாச சொர்க்க மாளிகைகள் பலதை எழுப்பலாம்.. தீங்கு ஏதும் சென்னை வாழ் மக்களால் ஏற்பட்டு விடாமல் இருக்க நிரந்தரச் சிறப்பு ராணுவமும் இவர்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்கலாம்.. விளை நிலங்களிலும் மேய்ச்சல் நிலங்களிலும் மலைகளிலும் நிலங்கள் தாங்கி நிற்கும் நீர் ஆதாரங்களிலும் இயற்கை வளங்கள் அனைத்தையும் மொத்தமாய் சூறையாடியவர்கள் நாளை கடல் வளங்களையும் தனதாக்கிக் கொள்வார்களோ என்கிற நியாயமான பேரச்சத்தை எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களின் “சட்டைக்காரி” வாசித்து முடித்தவுடன் என் அடி மனசுக்குள் அழுகையோடு கொட்டிச்சென்றாள்.

சக்தி மிகுந்த நீராதாரம் சூழ்ந்த.. வனப்பின் வடிவாகத் திகழ்ந்த.. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள்.. குன்றுகள் மிகுந்த அழகானதொரு நிலப்பரப்பாக.. அதன் அத்தனை ரகசியங்கள் அறிந்த பேரன்பு கொண்ட மனிதர்களாக பகைகொண்ட இருதயம் இல்லாதவர்களாக.. இருக்கும் வளங்கள் அனைத்தும் நாளை நம் சந்ததியினரும் பார்ப்பார்கள் புழங்குவார்கள் என்கிற நம்பிக்கை தாங்கியவர்களாக.. ரசனை மிகுந்த எதிர்பார்ப்பற்ற வாழ்வினை வாழ்ந்து மகிழ்ந்தார்கள் சென்னையின் பூர்வகுடி மக்கள் 70 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து சென்னை நகருக்குள். சென்னையின் பூர்வகுடிகளாக சென்னையை வடிவாக்கியவர்களாக.. சென்னை நிலப்பரப்பு அனைத்திற்கும் உரிமையானவர்களாக இருந்தவர்கள் இன்றும் இருப்பவர்கள்.

சட்டைக்காரி சொல்லியிருக்கும்.. சட்டைக்காரி பேசியிருக்கும் எதுவுமே இல்லாத சென்னையாக.. இயற்கை வாரிக் கொடுத்த அத்தனை வளங்களையும் நவீனத்தின் பெயரால் நாகரிகத்தின் பெயரால் அரசாங்கத்தின் துணைகொண்டு பல சக்திவாய்ந்த பெரும் முதலாளிகளால் முழுவதுமாக சூறையாடப்பட்டு; நீர் ஆதாரத்தின்..

பசுமை வெளிகளின் மீது அதன் உயிர் அணுக்களின் மீது சிமெண்ட்டையும் கருங்கல் ஜல்லிகளையும் கொட்டி இரும்பு கம்பிகளை நட்டு வானுயர்ந்த கட்டிடங்களை தாங்கி நிற்கும் மலட்டு நிலமாக இப்போது. மனிதர்களுக்கும் இயந்திரத்திற்குமான வித்தியாசம் அறியாமல் தன்னை பழக்கப் படுத்திக்கொண்டு, சதைப் பிண்டங்களாக காலத்தை அவர்கள் நகர்த்திக்கொண்டும் காலம் அவர்களை இழுத்துக் கொண்டும்.. கண்களிலும் இருதயத்திலும் சக உயிர்கள் மனிதர்கள் இடம் கொடுத்தும் பெற்றும் அனுபவிக்க வேண்டிய பேரன்பினை தொலைத்தவர்களாக.. பிரியத்தை திருடக் கொடுத்தவர்களாக
சென்னையும் அதன் மக்களும் தற்போது.

நாவலின் பிரதான கதாபாத்திரங்களாக கருணா,ஜெயா, மூசா வித்தை தெரிந்த கால்பந்தாட்ட வீரர்களாக நாவலுக்குள் முழுவதுமாக.. இன்றைய வடசென்னையின் அன்றைய சென்னையின் முக்கிய வீதிகள் எங்கும் நடந்தும் ஓடியும் வருகிறார்கள் தங்களின் வலுவான கறுத்தப் பாதங்களால். இவர்கள் இளைப்பாறிய அல்லிமலர் குளங்களும் தாமரை பூத்திருந்த தடாகங்களும், குளித்து.. குடித்த நீரோடைகளும்..

கால்பந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற போதும், தோல்வியுற்ற போதும் சமநிலையில் இருந்து வாழ்வினை மகிழ்வுடன் சப்பியும், சாராயமும், ஜிஞ்சருமாக குடித்து, இளம் கன்று குட்டியின் தொடை கறி வறுவலோடு கொண்டாடிய அடர் மரங்கள் சூழ்ந்த காடுகளும்.. காதலும் காமமும் கொண்ட புலிகளின் உறுமலும் சிங்கங்களின் கர்ஜனையும் குயில்களின் கூவல்களும் பலவகை பறவைகளின் சத்தங்களும் இன்னும் பல காட்டு விலங்குகளின் இரைச்சலும்.. இரவுப்பனியை பூமியில் சிந்தாமல் மொத்தமாய் முத்துமுத்தான முத்தங்களாக பெற்று அப்படியே அதை விடியற்காலை சூரியனுக்கு அனுப்பி வைக்கும் அடர்ந்த புல்வெளிக் கூட்டங்களின் சமவெளியும்..

நகர மக்கள்.. உழைப்பாளிகள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நாகரிகத்தின் பெயரால் பெருநகர வளர்ச்சி என்ற முகமூடியை அணிந்து அரசின் ஐந்தாண்டு திட்டங்கள், நவநாகரீக சென்னை, திட்டமிட்ட நகர் என்கிற வஞ்சகமான முழக்கங்களால், இயற்கையின் அதிசயங்களை அற்புதங்களை வளங்களை காத்து நிற்க வேண்டிய ஒன்றிய அரசும் மாநில அரசும் போட்டி போட்டுக்கொண்டு பெரு முதலாளிகளின் ஏவல் ஆட்களாக மாறி சென்னையின் நினைவுகள் அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கி நீர் ஆதாரங்களையும் சமவெளிகளையும் மண் தின்னிகளாக உருகொண்டு வானுயர்ந்த சமாதிகளை கட்டிடங்களாக இப்பொழுது நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார்கள்.. அன்றைய சென்னையும் இருக்கிற சென்னையும் ஒப்பிட்டு நாளையே சென்னை எப்படி இருக்கும்.? யார் யாரெல்லாம் இருப்பார்கள் என்று யோசிக்கும் பொழுது வருங்கால சென்னை உழைப்பாளி மக்களுக்கானது என்கிற நினைப்பே வர மறுக்கிறது கரண் கார்க்கி அவரின் சட்டைக் காரியை வாசிக்கும் பொழுது.

உலகெங்கிலுமிருந்து பல வண்ண வண்ண பறவைகள் வந்து சென்ற வாழ்ந்து சென்ற பலநூறு மீன் வகைகள் துள்ளி விளையாடிய ஆளுயர புல்வெளிகளை கொண்ட 4000 ஏக்கர் அளவில் இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இப்பொழுது 400 ஏக்கராக சுருங்கிப் போய் கிடக்கும் பெரும் சோகத்திற்கு மண் தின்னி அரசியல்வாதிகளும் ஆட்சி அதிகாரமும் தவிர்த்து வேறு எவர் காரணமாக இருக்க முடியும். அந்தச் சதுப்புநிலக் காட்டில் ஒரு நாள் முழுதும் தங்கி மகிழ்வோடு தங்களின் இருப்பை கொண்டாடிய ஜெயா, மூசா, பிலிப் மாமா, மைக்கேல் இவர்களோடு நம்மையும் விரல் பிடித்து அழைத்து போய் குதூகலிக்க செய்வார்.. நாவலுக்குள் கிண்டி ராஜாஜி பவன் இடப்புறத்தில் நுழைந்ததும் எழுத்தாளரின் விவரணையானது, மணக்கும் சாராயத்தை ஒரு கிளாஸ் கொடுத்து வாசகனையும் சதுப்புநிலம் புல்வெளி காட்டில் சுகமாக படுக்க வைப்பது போன்றல்லவா இருக்கிறது. செம.

இந்தியாவில் வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு கருப்பின மக்களும் வெள்ளையர்களும் காதலால் இணைந்த ஒரு புதிய சமூகம் ஆங்கில இந்தியர்களாக உருவாகிறது.. அப்படி உருவான ஒரு புதிய சமூகத்திற்கு பொதுவெளியில் வெள்ளையர்களால் உயர்ந்ததொரு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.. ஏழை எளிய இந்திய மக்களை அடக்கியாளும் அந்தஸ்தாக அந்த அதிகாரம் உருப்பெறுகிறது. அதிகாரம் பெற்ற அந்தஸ்தில் வாழ்ந்த ஆங்கிலேயே இந்தியர்கள் என்கிற ஒரு சமூகம் வெள்ளைக்காரர்கள் வெளியேறிய பிறகு வெளிநாட்டில் வாழ முடியாமலும் இந்தியாவிற்குள் அதே அந்தஸ்தோடு இருக்க முடியாமலும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி, இன்றைக்கு அப்படியான ஒரு சமூகம் இல்லாமல் போனதின் வரலாற்றினை ஒரு சமூகம் அழிந்து போன நிஜத்தை நாவலுக்குள் ஐசாக் என்கிற ஆங்கிலேயே இந்திய சமூகத்தின் அடையாளமாக உரையாடலை நிகழ்த்தச் செய்து நமக்குள் சில நியாயமான கேள்விகளை எழுப்பி இருப்பார். நிற வேறுபாட்டின் காரணமாக வெளிநாட்டிற்கு செல்ல முடியாமல் இந்தியாவில் இருக்கக்கூடிய சனாதனக் கொடுமைகளின் காரணமாக இங்கேயும் வாழ முடியாமல் எதிர்கால வாழ்வினை கேள்விக்குறியோடு வாழ்ந்து மறைந்த ஒரு சமூகத்தின் மனசாட்சியாக நாவலுக்குள் விவாதத்திற்கு உள்ளாக்கி இருப்பார் ஆசிரியர் கரன் கார்க்கி.

கை ரிக்ஷா இழுக்கும் கூலித்தொழிலாளி இயேசுவுக்கும்.. கணவனை இழந்து இளமை வாழ்வினை தொலைத்த லிண்டாவுக்குமான காதல்.. எதிர்கொள்ளும் சவால்கள்.. பெரும் எதிர்ப்பிற்கு பிறகு இருவரும் வாழும் புரிதல் கொண்ட நேர்மை மிகுந்த வாழ்வினை வாழ்வதும்.. இந்தக் காதலர்களுக்காக முழுமையாக தன்னுடைய வயது வாழ்க்கை அத்தனையும் ஒப்புக்கொடுத்து அவர்களோடு கடைசிவரை இருந்து வரும் அய்யாக்கண்ணு மெச்சத் தகுந்த மனிதன் ஆவார். இரு உதடு குவித்து ராகத்தோடு இசைக்கும் விசில் சத்தம் இரண்டு நண்பர்களுக்கு இடையே நடைபெறும் உரையாடலின் சாராம்சத்தை அதில் இருக்கும் கேலி கிண்டலை அது சொல்லும் ரகசிய சமிக்ஞையை இயேசுவும், அய்யாக்கண்ணுவையும் தவிர்த்து ரிக்ஷாவில் சவாரி போகும் லிண்டாவும் உணர்ந்து காதலில் தன் மனதை ஒப்புவிக்கும் வரிகளை எழுத்தாளர் காட்சிப்படுத்தும் பொழுது நம்மையும் அந்த விசிலுக்குள் இழுத்துக் கொள்வார்.
அடி தூள் கார்க்கி.

ஸ்லெட்டா-மூசா இருவருக்குமான காதலை அறிந்திருந்த ஸ்லெட்டாவின் அப்பா ஐசக் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய உயிர் பிரியும் தருணத்தில் மூஸாவின் அம்மாவை வரவழைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் என்று நான் இங்கே எழுதும்போது எல்லா சினிமாவிலும் பார்த்துதானே இது என்று எண்ணத் தோன்றும்.. ஆனால் நீங்கள் நாவலை வாசிக்கும்போது காதலுக்குள் தன்னை கொடுத்திட்ட இருவர், அதில் படும் பெரும் துயரங்கள், பாடுகள், சின்ன சின்ன ஆசைகள், மனங்களுக்குள் நிகழ்ந்திடும் போராட்டங்கள், உடலுக்குள் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள், இருவரும் இருவேறு சமூகமாக இருந்திடும் பொழுது குடும்பத்தில் ஏற்படும் சூழல்கள், அதனால் குடும்ப உறுப்பினர்கள் இடையே நிகழ்ந்திடும் உரையாடல்கள், பெற்றவர்கள் குழந்தைகள் மேல் வைத்திருக்கும் பாசம், அக்கறை இவைகள் எல்லாவற்றையும் மீறி காதலர்கள் அனைவரின் சம்மதத்தோடு இணைவது, இதில் நண்பர்களின் உதவி அம்மாவின் ஆதரவு.. இவைகளை காட்சிப்படுத்தி எழுதிய ஆசிரியரின் கைகளுக்கு அன்பு முத்தங்கள்.

நாவலில் இரண்டு ஜோடிகளின் கொண்டாட்ட மனங்களின் விவரணைகள் நம்மை மீண்டும் காதலிக்கச் சொல்லும்.. காதலியின் கரம் கோர்த்து கடற்கரை மணலில் மெல்ல நடை போடச் சொல்லும்.. காதல் உணர்வுகளை.. மனித மனங்களுக்குள் நிகழ்த்தும் மாற்றங்களை.. சந்திக்காத பொழுதுகளில் விழிகள் தாங்கி நிற்கும் வலிகளை.. இதயம் கனத்து நிற்கும் சுமைகளை மென்மையான வலிமிகுந்த சுகம் தாங்கிய வார்த்தைகளால் புனைவுக்குள் காதலை வடிவாக்கி இருக்கிறார் புதினத்தின் ஆசிரியர் கரன் கார்க்கி. சட்டைக்காரிகள் இருவருமே பாசக்காரிகளாக, பேரன்பு கொண்டவர்களாக, நினைத்ததை செய்து முடிக்கும், சாதிக்கும் மன உறுதி கொண்டவர்களாக, நேர் வரும் சவால்களை சந்திக்க எதிர்க்கத் துணிந்து நிற்கும் நெஞ்சுரம் மிக்கவர்களாக இருவரையும் நாவலுக்குள் நடை போட வைத்திருக்கிறார் ஆசிரியர் அவர்கள்.

கர்ணன், மூசா, ஜெயராம், நிகோலஸ், பயிற்சியாளர் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட கால்பந்தாட்ட வீரர்கள் மைதானத்தில் இவர்கள் பந்துகளை துரத்தி ஓடும் போதும் எதிரிகளிடமிருந்து பந்தினை இலாவகமாக உதைத்து ஏமாற்றி இழுத்துச் செல்லும் பொழுதும் நாமும் அந்த பந்தாக மாறி இருப்போம்.. அவர்களின் கால்களாக மாறி இருப்போம்.. அங்கே நிமிர்ந்து இருக்கும் கோல் போஸ்ட் ஆக மாறி இருப்போம்.. ஆரவாரம் செய்து ஆர்ப்பரிக்கும் ஆயிரக்கணக்கான மக்களில் ஒருவராக மாறி இருப்போம், அப்படி மாற்றி காட்டுவார் சட்டை காரியை வாசிக்கும் பொழுதினில் நாவலாசிரியர். கால்பந்தாட்ட மைதானத்தில் வெற்றி தோல்விகளை மீறி அன்பு கொண்ட நண்பர்களாக, பாசம் கொண்டவர்களாக மனிதர்களாக எப்படி அவர்களை நம் சமூகம் கொண்டிருந்திக்கிறது என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார் நாவலுக்குள்.

ஒவ்வொரு படைப்பாளிக்கும்.. அவர் பேசிடும் வார்த்தைக்கும்.. எழுதிடும் எழுத்திற்கும் அரசியல் பின்புலம் உண்டு.. அரசியலே வேண்டாம் என்பவர்களுக்கும், அரசியலே மோசம் என்பவர்களுக்கும், அரசியலிலிருந்தும்பொது வாழ்விலிருந்தும் மக்களை ஒதுக்கி வைப்பதுவென்பதுவே அவர்களின் நோக்க அரசியலாகும்.. சட்டைக் காரி நாவலுக்குள் தனக்குள் இருக்கும் உள்ளார்ந்த அரசியலை மிகவும் தெளிவாக பேசியிருக்கிறார். உழைக்கும் எளிய மக்களுக்கான, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான அரசியல்தான் என்னுடையது என்று, பார்ப்பனியத்திற்கு எதிரான அரசியல்தான் என்னுடையது என்று, சனாதானத்திற்கு எதிரான எழுத்துக்கள்தான் என்னுடையது என்று படைத்திட்ட கதாபாத்திரங்களின் உரையாடல்கள் வழியாக நேர்த்தியாக எளிமையாக அரசியலை தெளிவாகப் பேசி இருக்கிறார் நாவலாசிரியர்.

மதங்களை மீறிய மனிதநேயமும் காதலும் பாசமும் அன்னியோன்யமும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிறைந்து கிடக்கிறது என்பதனை குர்ஷித் அப்பா இறந்த போதும்.. குர்ஷித்தை மணமுடித்த கணவன் எதிர்பாராத விபத்தில் இறந்த போதும் மிகவும் காத்திரமாக நாவலுக்குள் பதிவு செய்திருக்கிறார்.

ஒரே அத்தியாயத்திற்குள் சிறுமி குர்ஷித்தின் அப்பாவை அறிமுகப்படுத்தி அவளுக்கான காதலனை வேறு ஒரு சமூகத்திலிருந்து அழைத்து வந்து அவளின் அப்பாவை மரணிக்கச் செய்து, அவளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து அவளுக்கு ஒரு மகனையும் பிறக்க வைத்து கணவனையும் விபத்தொன்றில் இழக்கச் செய்து கணவனையும் அப்பாவையும் இழந்த அந்த இளம்பெண், பெரும் சமூகத்தில் அவள் எதிர்கொள்ளும் துயரம் மிகுந்த பிரச்சனைகளை வலிமிகுந்த வார்த்தைகளால் பேசி இருக்கிறார். உழைக்கும் எளிய மக்களின் பேரன்பையும் மனிதநேயத்தையும் சக மனிதர்கள் மேல் அவர்களின் எதிர்கால வாழ்வின் மேல் அக்கறை மானுட அழகு கொண்ட மனிதர்களாக எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நிலப்பரப்பெங்கும் மழை கொடுக்கும் கருத்த மேகத்தைப் போன்றே மானுடத்தின் வெள்ளமொன்று அவ்வத்தியாயம் முழுக்க ஓடிக் கொண்டே இருக்கும்.

தான் பொதுவெளியில் கொண்டு சேர்க்க நினைக்கும் கருத்தினை புனைவாக மாற்றி கொடுக்க முற்படும் பொழுது அந்த புனைவுக்குள் பிரதான கருத்திருக்கு வலு சேர்ப்பதற்காக எதிர்கருத்து கொண்ட கதாபாத்திரத்தை காத்திரமாக உருவகப்படுத்துவது.. இப்படியான கதாபாத்திரங்களுக்கு ஆதரவாகவும் நேர் எதிர்மறையாகவும் துணைக் கதாபாத்திரங்களை அமைத்து நாவலுக்குள் பேசவைத்து சொல்லவந்தத கருத்தினை விரிவாக சொல்லி முடிப்பதென்பது நாவலாசிரியர்க்கு ஒரு வகையான உத்தி.

ஆனால் சட்டைக்காரி நாவலுக்குள் ஆசிரியர் உருவாக்கியிருக்கும் பிரதான கதாபாத்திரங்களும் அதற்கு சற்றும் குறையாமல் படைத்திருக்கும் துணைக் கதாபாத்திரங்களும் பேரன்பாளர்களாக , மனித இருப்பின் மீது நேசம் கொண்டவர்களாக, உயிர்கள் மீது உச்சம் கொண்ட காதலர்களாக.. இயற்கையை கொண்டாடுபவர்களாக, மனிதர்கள் துயர் கொள்ளும் பொழுதினில் அவர்களுக்கு துணையாக இருந்து மீட்டெடுக்கும் மனிதநேயம் மிகுந்தவர்களாக மனிதத்தின் அடையாளமாகவே படைத்திருக்கிறார்.

அனைவருமே கால்பந்தாட்ட வீரர்களாக, கை ரிக்ஷா இழுப்பவர்களாக ,கூலி வேலை செய்பவர்களாக, கமர்கட் விற்பவராக, மில் தொழிலாளியாக, வீட்டு வேலை செய்பவர்களாக, ஆசிரியராக, பட்டறையில் உழைப்பவராக, உடல் உழைக்கும் எளியவர்களாக எல்லாவற்றிலும், காதலிலும் நேர்மை மிகுந்தவர்களாக நிஜம் பேசுபவர்களாக, உரிமைக்காக உரத்து குரல் எழுப்புபவர்களாக போராட்டக் குணம் படைத்தவர்களாக படைத்திருக்கிறார். நாவல் முழுவதிலும் மனித சமுத்திரத்தில் நிறைந்து கிடக்கும் பேரன்பும் காதலும் பிரியமும் மனிதநேயமும் மீன் கவிச்சையோடும் மாட்டின் வறுத்த தொடைகறியின் காரத்தோடும் மணம் வீசும் சாராயத்தோடும் கூரையில் படர்ந்து மலர்ந்து கிடக்கும் மத்தியமல்லியின் வாசத்தோடும் பேசப்பட்டிருக்கிறது.

சென்னை நகர உழைப்பாளி ஏழை எளிய மக்களின் வாழ்வியலை அவர்களின் வார்த்தைகளில் அவர்களின் மொழியில் அப்படியே நாவல் முழுக்க பேசி தொய்வின்றி எழுதியும் சிறப்பாக நகர்த்தியிருக்கிறார் தான் சொல்ல வந்த செய்தியினை கதாபாத்திரங்களின் வழியாக நாவல் முழுவதிலும். “உலகில் இயற்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எத்தனையோ நாடகங்களை நடத்துகிறது. விதவிதமாக பாசாங்காய், பொய்யாய், உண்மையாய், உயிராய், மோதலாய், காதலாய், காமமாய், ஆயிரமாயிரம் பாவனைகள் ஆயிரமாயிரம் நாடகங்கள் அழகிய அங்கங்களில், பேச்சில், நடையில், உடையில், பாவனையில், அறிவில், அவமானத்தில், ஆத்திரத்தில், ஏமாற்றத்தில், உடல் மயக்கத்தில், உள்ளக்கிளர்ச்சியில், உடல்பதட்டத்தில், பணத்தில் இன்னும் எத்தனையோ எத்தனையோ ஆணையும் பெண்ணையும் ஒன்றிணைக்கிறது. இதெல்லாம் எதற்கு.. இரண்டு ஒன்றாகி ஒன்று மூன்றாக முப்பதாக பல்கிப் பெருக இயற்கை நடத்தும் கூத்து.

இதில் வெள்ளை, கருப்பு, பழுப்பு, மஞ்சள், நெட்டை,குட்டை, செல்வம், வறுமை, மேல், கீழ் என்று அது பார்ப்பதில்லை உயிர்கள் தழைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறென்ன. ஆனால் மனிதன் நிதானமாக சிலவேளைகளில் ஒரு கவிதையைப் போல அதை மகிமைப்படுத்த நினைக்கிறான் அதற்காக தன் உயிரையும் மாய்த்துக் கொள்கிறான்.” காதல் மன உணர்வுகள்.. சூழல்.. நிஜம் நிறைந்த எதார்த்தம் குறித்து நேர்த்தியாக அழகாக தன்னுடைய சட்டைக்காரியில் பேசியிருக்கிறார் ஆசிரியர். பேரன்பும் பிரியங்களும் தோழர்.

சட்டை காரியை முழுவதுமாக வாசித்து முடித்தவுடன் உடனடியாக தோழர் கார்க்கி தொடர்பு கொண்டேன்.. “தோழர் உங்களுக்கு வயது என்ன என்றேன்.. ஐம்பத்தி மூன்று தோழர் என்றார்..” எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சென்னையை அன்றைய மக்களின் வாழ்நிலையை அவர்களின் வாழ்வியல் முறையை இந்த புதினத்தில் கொண்டுவர எது உங்களை சாத்தியப்படுத்தியது என்றேன். இருக்கும் எங்களின் முன்னோடியின் வாய்மொழிதான் தோழர் என்றார்.

அது அவரின் பெருந்தன்மையை காட்டியது. ஆனால் இத்தனை அழகாக இவ்வளவு காத்திரமாக 70 ஆண்டு காலத்திற்கு முன்பிருந்தே சென்னையை வார்த்தைகளில் கொண்டுவர வாய்மொழி அனுபவம் மட்டும் போதாது என்பது வாசிக்கும் நாம் அனைவரும் உணர்வோம். அந்த வாய்மொழியோடு நிஜங்களைத் தேடி அவர் நடத்தியிருக்கும் விடாமுயற்சிகளும் மெனக்கெடலுமே இந்தப் புதினத்தின் உயிராகும். அவர் சென்னையின் வரலாறு தெரிந்த ஒரு ஆவணம். அவர் சென்னை நகர மக்களின் வாழ்வியல் முறையை தனக்குள் பதிவு செய்து வைத்திருக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய பத்திரத்தாள். அவர் கொண்டாடப்பட வேண்டிய சென்னை. அவரை பத்திரமாக தமிழ்ச்சமூகம் பாதுகாக்க வேண்டும்.

ஒருமுறையேனும் முந்தைய கால சென்னைக்குள் இன்றைய சென்னைவாசிகள் நுழைய வேண்டுமென்றால் இந்தச் சட்டைக்காரியின் விரல் பிடித்து மெல்ல நடந்து வருவோம். அவள் நிறைய விஷயங்களை நம்மோடு பேசுவாள். காடும் குன்றும் குளமும் நிறைந்த சென்னைக்குள் நம்மை அழைத்துச் சென்று நம் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்து நம்மை வாழ்த்திடுவாள். சிறப்பான முறையில் அட்டையினை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள் நீலம் பதிப்பகத்தார். வாழ்த்துகள்.

ஆசிரியர் கரன் கார்க்கி.. பேரன்பு முத்தங்கள். தோளில் சுமந்து கொண்டாடப்பட வேண்டியவர் நீங்கள். இன்னும் நிறைய எழுதுங்கள்.

கருப்பு அன்பரசன்

நூல்: சட்டைக்காரி
ஆசிரியர்: கரன் கார்க்கி
வெளியீடு: நீலம் வெளியீடு
விலை: ₹.375/-
பக்கம்: 313.

Sandwich Book by Dharani Rajendran Bookreview By Karuppu Anbarasan நூல் மதிப்புரை: தரணி ராசேந்திரனின் சாண்ட்விச் - கருப்பு அன்பரசன்

நூல் மதிப்புரை: தரணி ராசேந்திரனின் சாண்ட்விச் – கருப்பு அன்பரசன்

ஆண்மை என்றால்..

ம்ம்ம்… ஸ்டாப் ஸ்டாப் அப்படியே நிறுத்து..

அது கருப்பு மையா சிவப்பு மையா நீல மையா பச்சை மையா..?

தன் குறித்தான பொய்யான பிம்பத்தை ஊடகங்களின் துணையோடு கட்டமைத்து ஆட்சி அதிகாரத் திமிரின் உச்சத்தில் இருக்கக்கூடிய ஒரு ஆண் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக பெண் ஒருவரை ரகசியமாக பின்தொடர்ந்த, அரசு நிர்வாகத்தால் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் நாடெல்லாம் பேசப்பட்டது.. சமூகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெடாமல் இருக்கவும் மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்குமான காவல்துறைக்குள் ஆண் அதிகாரிகள் பலரால் அங்கு பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தொடர்ந்து வருவதை பலமுறை பத்திரிக்கையில் படித்து அறிந்திருக்கிறோம்.. பெண் குழந்தைகள் தொடங்கி வயது முதிர்ந்து பெண்கள் வரை பலரும் பாலியல் தொல்லைக்கு உட்பட்டு வருவதையும் பலர் காணாமல் போவதும் பலர் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்படுவதும் தினம்தோறும் செய்தியாகிக்கொண்டே வருகிறது எல்லா வயதிலும் உள்ள திமிர் கொண்ட ஆண்களால்.

கல்வி அறிவு போதிக்கும் கூடங்களில் ஆண் ஆசிரியர்களால் பெண் குழந்தைகள் பல நேரங்களில் மனதளவிலும் உடலளவிலும் அனுதினமும் சிதைக்கப்பட்டு கொண்டேதான் இருக்கிறார்கள் இன்றளவிலும்.

குடும்ப உறவுகளிலும் கூட தன்னுடன் பயணிக்கும் உறவுகள் தாயாக தங்கையாக அக்காவாக எவராக இருந்தாலும் அவரை பார்க்கும் பார்வைக்குள் அணுகுமுறையில் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை ஒவ்வொரு நாளும் செய்தித்தாளும் இன்னும் பல ஊடகங்களும் செய்தியாக்கிவிடும் பொழுது எந்தவித அதிர்ச்சியும் இன்றி கடந்து போகும் மனநிலையே இங்கே இரு பாலருக்கும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சமூக அமைப்பில் அரசு, தனியார் அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட பொது வெளிகளில் பெண் ஒருவரை நேர்கொண்டு பார்ப்பதற்கும்.. அவள் பார்க்கும்படியாக ஆண் ஒருவர் தன்னுடைய உதடுகளை மௌனமாக அசைப்பதைக்கூட அந்த பெண் விரும்பாத பொழுதினில் அந்த ஆண் மேல் குற்றச்சாட்டை முன்னிறுத்தி புகார் கொடுக்கலாம்.. பாலியல் தொந்தரவு செய்வதாக சொல்லி அவரை நடவடிக்கைக்கு உட்படுத்தலாம்.

பெண்கள் மீது நடைபெறும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக பல்வேறு வகையான சட்டதிட்டங்களும் ஒழுக்க விதிமுறைகளும் (ஒழுக்கம் என்று எவை இங்கு யாரால் வரை முறைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது அது யாருக்காக செய்யப்பட்டது என்பதெல்லாம் தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்) அறிவிக்கப்பட்டு சட்டமாக்கப் பட்டாலும் பெண்கள் மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் அச்சுறுத்த படுவது சிதைக்கப்படுவது என்பது நடைபெறாத நாழிகைகளே கிடையாது என்பதனை தினந்தோறும் ஊடகங்கள் செய்தியாக பெண்களை அழகி என்றும் இளம்பெண் என்றும் கள்ளக்காதலி என்றும் ஆண்களின் மனம் கோணாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறது எல்லாவற்றிற்கும் காரணம் பெண்களே என்கிற பொது பிம்பம் கட்டமைத்து வைத்திருக்கும் சிந்தனைக்குள்ளிருந்து வார்த்தைகளாக.

தன்னை காதலிக்க வில்லை என்பதற்காக கைகளில் கத்தியோடு அடர் திராவக குப்பியோடு அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்கள்.. தன்னுடைய கட்டுப்பாட்டை மீறி இன்னொரு சமூகத்தில் புழங்கி வரும் ஆண் ஒருவனை மனதளவில் நினைப்பது தவறு.. அந்த ஆண் மகளின் கரம் பிடிப்பது தான் சார்ந்த சமூகத்தை கேவலப்படுத்துவது தன் குடும்பத்தை அசிங்கப்படுத்துவது என்கிற சாதி ஆணவத்தோடு ஆண் திமிரும் சேர்ந்து கொள்ள அங்கே அது பெண் உடலை எரித்துக் கொள்கிறது, விஷம் வைத்துக் கொல்கிறது, நைலான் கயிற்றால் தூக்கிட்டு கொல்கிறது, தொண்டைக் குழியை அறுத்துக் கொல்கிறது..

Mee Too வில் இந்தியாவின் ஆளுமைகள் பலரின் முகமூடிகள் கிழித்தெறியப்பட்டது பாதிக்கப்பட்ட பெண்கள் பலரால்.. தன்னுடைய பெயரை எந்தப்பெண் எப்பொழுதும் எழுதுவாரோ பேசுவாரோ என்கிற அச்சத்துடனே பல தளங்களில் வேலை பார்த்து வந்த ஆண் சமூகம் இந்த நிமிடம் வரையிலும் தன்னுடைய சிந்தனைக்குள் பெண் குறித்தான பார்வையில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் ஆண் என்கிற திமிரோடு அலைந்து வருவதே பெரும் சிறப்பு என்கிற மனநிலையை ஆண் பெண் இருவருக்குள்ளும் கட்டமைத்து வைத்ததின் தொடக்கப் புள்ளியின் காலம் எங்கிருந்து என்கிற தேடுதலை தொடங்கினால் பெரும் சமூகத்திற்கு தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்திச் சென்று பெண்ஆளுமை வீட்டுக்குள் அடக்கப்பட்டு, உடமையாக்கப்பட்டு, பண்டமாக்கப்பட்டு, அடிமையாக்கப்பட்ட சமூக அறிவியல் வரலாற்றை அறிய முடியும்.

அந்தத் தேடுதலை மணமுடித்த காதலன் காதலி மன உணர்வுகளில் இருந்து பெண் உடல் குறித்தான புரிதலிலிருந்து தொடங்கி இருக்கிறார் தன்னுடைய “சாண்ட்விச்” நாவலில் எழுத்தாளர் “தரணி ராசேந்திரன்”

எல்லோரும் உற்றுநோக்கும் படியாக முகநூல் தளத்திலும் கொஞ்சம் பெண்கள் தங்களுடைய கருத்துக்களை குறைந்தபட்ச சுதந்திரத்தோடு பகிரும் பொழுது அவரின் முகநூல் அடையாளத்தையும் பாஸ்வேர்டையும் வாங்கி வைத்துக்கொண்டு அவருக்கு தெரியாமலேயே திறந்து பார்க்கும் மனநிலையில் வாழும் காதலர்கள் கணவர்கள் பெரிய அளவில் வளர்ந்து வரும் சூழலில் இந்த “சாண்ட்விச்” வருகை அவசியமே.

ஆசிரியர் “தரணி ராசேந்திரன்” அவர்களுக்கும்.. நல்லதொரு நாவலை முதன்முறையாக வெளிக்கொண்டு வந்திருக்கும் வர டீ பதிப்பகத்திற்கும் அன்பு வாழ்த்துக்கள்.

பதின் பருவத்தில் ஆண் பெண் என இருபாலருக்கும் உடலியல் ரீதியாக மாற்றம் நிகழ்வதை உணர முடியும்.. அந்த மாற்றம் ஹார்மோன்களின் கிளர்ச்சியால் உள்ளத்தில் உணர்ச்சிகளை வருடி மெல்ல இன்பமயமான நெருப்பு ஒன்றினை பற்ற வைக்கும்.. அந்த நெருப்பு, இருபாலருக்கும் அவர்கள் விழிகளில் நேர் எதிர் பட்டவைகளைப் பார்த்து ரசித்து.. கண்டாடிடும் உறவுகளின் பழக்கவழக்கம்.. பெண்கள் குறித்தும், பெண் உடல் குறித்தும் மூத்தவர்களின் அனுபவத்திலிருந்து.. அவர்களின் பேச்சிலிருந்து கடத்தப்பட்டவைகளே அவரவர் சிந்தனைக்குள் எரியத் தொடங்கும்..

அப்படி எரிந்து கொண்டிருப்பதை ஆண்களுக்குள் அடங்கி, அவர்களின் சதை தீண்டலின் அழுக்கைத் தாங்கிக்கொள்ளும் வடிகாலாக இருக்க வேண்டும் என்று பெண்களின் மனதில் கொதிநீர் ஊற்றி வேக வைத்தும்.. சிந்தனைக்குள் திராவகத்தை தெளித்தும் பெண்களை அவர்களின் சிந்தனைகளை ஆண்களின் எல்லாவிதமான அத்து மீறல்களுக்கும் வாட்டமாக மாற்றி வைக்கிறார்கள்.. பெண்கள் மீது ஆண்கள் நடத்திடும் அனைத்துவித தாக்குதல்களுக்கு கௌரவ கிரீடம் அணிவித்து ஆண்கள் என்றால் இப்படி இருப்பதுதான் பெருமை மிகுந்த, மரியாதைக்கு உகந்தது என சிந்தனையில் எரிந்து கொண்டிருப்பதற்கு தூபம் போட்டு வைக்கிறார்கள் ஆளுமை மிகுந்த பெண் சமூகத்தை பண்டமாக மாற்றி வைத்தவர்கள்.

அப்படித் தூபம் போட்டதின்.. எரிந்து கொண்டிருக்கும் நெருப்பாகவே காலாகாலமாக பதின்பருவ பள்ளி மாணவர்கள்.. பதின்பருவ இளைஞர்கள்.. ஆணாகப் பிறந்த நானும் நீங்களும் கூடத்தான் பெண் உடல் வேட்கையால் உந்தப்பட்டு அவரவர் வாய்ப்பிற்கு ஏற்ற முறையில் தரணி ராஜேந்திரன் தன்னுடைய நாவலில் சொல்லியிருக்கும் சிவா உள்ளிட்டு நண்பர்களைப் போன்று பால் உணர்வால் தூண்டப்பட்டு சரோஜாதேவி புத்தகங்களை அப்பா அம்மாவிற்கு தெரியாமல் பள்ளியில் மறைத்து படித்துக் கொண்டும், நண்பர்களோடு சேர்ந்து உடலுறவு வீடியோ படங்களை பார்த்துக்கொண்டும் மறைவிடங்களில் போய் சுய இன்பம் செய்து சிற்றின்பமாக அனுபவித்திருக்கிறோம் மனதில் யாராவது ஒரு பெண்ணுடலை நினைத்துக்கொண்டு.

பெண் உடல் மீதான உரிமையும் வெறியும் பள்ளிகளிலேயே இதிகாசங்களின் வழியாகவும் புராணங்களின் வழியாகவும் சொல்லி பாடம் நடத்துகிறார்கள் பிடித்தவனோடு வாழமுடியாமல் ஐந்து பேரோடு வாழும் பாஞ்சாலியின் கதையிணையும்’ அவளை வைத்து சூதாடிய தருமனின் நேர்மையையும்(!).. ஆண் ஒருவன் தன் நடத்தையை சந்தேகப்பட்டு கேள்விக்குள்ளாக்கினால் பெண் தானாகவே முன்வந்து தீயில் எரிந்து ஒழிந்து போக வேண்டும் என்கிற சீதையின்.. ராமனின் கதைகளை நீதி போதனைகளாக (!). குடும்ப அமைப்பு தொடங்கி பள்ளிகள் வழியாக பொதுவெளியில் பெண்கள் குறித்தான பிம்பங்கள் அவள் உடல் குறித்தான பார்வைகள் ஆண்களின் சிந்தனைக்குள் நட்டு வைக்கப்படுகிறது.

பள்ளியில் சிவா உள்ளிட்ட நண்பர்களின் கதாபாத்திரம் எதார்த்தமான நிஜம் என்றாலும் எழுத்து வடிவில் அதை அப்படியே கொடுப்பது என்பது இன்னுமொரு சரோஜாதேவி புத்தகத்தை வாசிப்பது போன்று தான் இருந்தது. எதார்த்தத்தை பொதுவெளியில் மறைத்து இலக்கியத் தரம் வாய்ந்ததாக எழுதச் சொல்லவில்லை.. ஆனால் எழுத்தாளன் நினைத்தால் அந்த சாராம்சத்தையே அழுத்தமாகவும் காத்திரமாகவும் அதைவிட இன்னும் சிறப்பாகவும் எழுதுவதற்கு தமிழ்மொழி நமக்கு நிறைய வார்த்தைகளை அளித்திருக்கிறது.. எதார்த்தத்தை சொல்லவதற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் எழுத்தாளர் ராஜேந்திரன்.

பெண் உடல் குறித்தான ஆதிக்கப் பார்வையோடு சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட சிவா இயக்குனராக பரிணமிக்கும் பொழுது சில முகமூடிகளை அணிந்து கொண்டுதான் வெளியே பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதுதான் எல்லா ஆண்களும் பொதுவெளியில் நேரத்திற்கு தகுந்தாற்போல் தேவையான முகமூடி அணிந்து இன்றும் கூட பல பொழுதுகளிலும். சிவா, பெண் உடல் மீது கொண்ட வெறியோடவே காமம் சேர்ந்து அவன் காதலிக்கத் தொடங்குகிறான் நவிராவை. உடலின் மீது தொடரும் ஆதிக்க வெறி கொண்டே அவனின் காதல் உரையாடலை காதலியோடு நடத்திக் கொண்டிருக்கிறான். அந்த உரையாடலை விரும்பியும் விரும்பாமலும் அவன் காதலை ஏற்க வேண்டிய இடத்தில் நிஜமாகவே காதல் வயப்பட்டு அவனை உள்ளன்போடு பேரண்பு உருகி வழிய பனித்துளியின் தூய்மையான மென்மையான காமத்தோடு காதல் உணர்வு மேலோங்க தென்றலின் ஆவேசத்தோடு காதலிக்கிறாள் அவனின் காதலி நவிரா.

காதலாக நினைத்து பயிற்றுவிக்கப்பட்ட காமஉச்சத்தின் சோதனைச் சாலையாக நவீரா.. புத்தகங்கள் பயிற்றுவித்த காமம் தோற்றுப்போக தன் உடல் குறித்த அதன் எதார்த்தம், சக்திதனை அவன் புரிந்து கொள்கிறான் உடலுறவின்போது. அதுகூட அவன் நவிராவிடமிருந்து கேட்டே பெறுகிறான். காமத்திற்கும் காதல் உணர்வுக்கும் வித்தியாசம் தெரியாமல் பயிற்றுவிக்கப்பட்ட அவன் காதலில் பெண்மன உணர்வுகளை புரிந்துகொள்ளத் தவறுகிறான்.. புரிந்து கொள்ள முற்படும் வேளையில் காமம் அற்று அவன் காதல் உணர்வுகளோடு பெண்ணின் மன உணர்வுகளையும் புரிந்துகொண்டு மனிதனாக.. நல்ல ஆணாக மாற முயற்சி செய்கிறான். மனதில் சிந்தனையில் பெண் உடல் குறித்தும் அவளின் மன உணர்வுகள் குறித்தும் தவறான புள்ளி அழிக்கப்பட்டு நல்லதொரு மனிதனாக பெண் மனதின் காதலை பிரியத்தை அன்பினை புரிந்துகொண்டு மாறக்கூடிய சூழலை மனிதனுக்குள் நிகழ்த்தப்படும் அந்த அற்புதமான தருணத்தை காலம் எப்படி அவனுக்கு அடையாளம் காட்டி சொல்லி நிற்கிறது என்பதை நீங்கள் நாவலை வாசிக்கும் பொழுது அறியமுடியும்.

சபாஷ் தரணி ராஜேந்திரன்.. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் இருக்கக்கூடிய எதார்த்தமான நிஜங்களை அவர்களின் உணர்ச்சி மயக்கங்களை.. பெண்ணின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவளின் உடல் மீது மட்டும் காதல் மயக்கம் கொண்டு வெறியாக மாறித் திரியும் ஆண்களின் திமிரை முழுவதுமாக சாண்ட்விச் நாவலில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
குறுநாவல் என்றே அழைக்க வாய்ப்பு அதிகம் இந்த சாண்ட்விச்க்கு.

இன்னும் கொஞ்சும் நாவலுக்குள் எடிட்டிங் வேலையை பார்த்து இருந்தா நாவல் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். பெண்களின் மன உணர்வுகள் குறித்து புரிந்து கொள்வதற்கு இந்த நாவல் பெண்மன உணர்வுகளை புரிந்து கொண்டு அவளோடு இணைந்து வாழ முயற்சி செய்யும் ஆண்களுக்கு சிறிதேனும் உதவி செய்யும் என நம்புகிறேன். அந்த விதத்தில் இந்த நாவல் ஆகப்பெரிய சிறந்ததொரு படைப்பாகவே நான் பார்க்கிறேன். நூல் வடிவமைப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இன்னும் நிறைய விவாதத்துக்குறிய விஷயங்களை. பேச மறுக்கப்பட்ட சங்கதிகளை.. நாகரிகம் அநாகரிகம் என்ற சொற்களுக்குள் மறைந்து கிடக்கும் பல விஷய தானங்களை புனைவுகளாக மாற்றி தொடர்ந்து உங்களின் படைப்புக்கள் பழத்தைக் கொண்டு வாருங்கள்.

புணர்தலின் ஊடல் இனிதே❤️ பேரன்பும் வாழ்த்துக்களும்.

நூல்: சாண்ட்விச்
ஆசிரியர்: தரணி ராசேந்திரன்
வெளியீடு: வர டீ பதிப்பகம்.
விலை ₹130/-
பக்கங்கள் 153.

Adhithi Novel by Varatha Rajamanikkam Novelreview By Jananesan நூல் மதிப்புரை: வரத. ராஜமாணிக்கத்தின் அதிதி நாவல் - ஜனநேசன்

நூல் மதிப்புரை: வரத. ராஜமாணிக்கத்தின் அதிதி நாவல் – ஜனநேசன்



அன்பு வழியும்  அதிதி

ஜிங்கிலி முதலான  மனதில்  நிற்கும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வழங்கியவர்  எழுத்தாளர் வரத. ராஜமாணிக்கம். அவர்  எழுதிய முதல் நாவல் “அதிதி.” ஓடிப்போன அம்மாவைத்  தேடிப்போன மகன் கோவிந்தின் அனுபவம் நாவலாக  விரிகிறது. பழநி நகரில் யாத்ரீகர்களை ஈர்க்கும் ஜட்கா எனும் குதிரை வண்டியையும், அபலைகளின் உணர்வுக்கும்  உடலுக்கும்  தீனிபோடும் மறைமுகமாக நடக்கும் பாலியல் தொழிலையும் சுற்றி இயங்குகிறது இந்நாவல் .

இளம் மனைவி  சசிவர்ணத்திடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தில் கோவிந்த் இராத்திரியோடு  இராத்திரியாக மனைவியிடம்  சொல்லாமல் இரயிலேறி பழநியில் இறங்குகிறான். அங்கு ஜட்காவண்டியோட்டி  சுப்பையாவிடம்  பரிச்சியம் ஏற்படுகிறது. ஊரைவிட்டு  ஓடிவரும்  அபலைப்பெண்களுக்கு அடைக்கலம் தந்து காக்கும் பசுபதியிடம்  கோவிந்தை சுப்பையா அறிமுகப்படுத்துகிறான். பசுபதி, பசுபதிவீட்டில்  தங்கியிருக்கும் பாலியல் தொழில் செய்யும் நேத்ரா, பானுமதி, விடிவெள்ளி, ராசாத்தி முதலான பெண்கள்  ஒரு நீள் கோடாகவும் ,   கணவனைத் தேடிக் காணாமல்  தந்தை வீட்டில் அடைக்கலமாகும், சசி,மருமகனைத் தேடும் தந்தை சுந்தரம். அவருக்கு துணைவரும் ரகீம் பாய், மகளுக்காக கவலையில் உழலும்  அம்மா கோமதி போன்றோர் ஒரு நீள் கோடாகவும்  இணையாக நெடுகப் பயணித்து சந்திக்கும் புள்ளியில் இந்நாவல் முடிகிறது. நாவல் இரயிலில் பழனிக்குள் நுழைந்து, இரயிலில் பழநியை விட்டு வெளியேறுகிறது.

கோவிந்து தன் அம்மாவைக் கண்டடைகிறானா .விட்டுப்பிரிந்த மனைவியோடு சேருகிறானா  என்பதை சிக்கல் சிடுக்கல் இல்லாத  நடையில் சொல்லப்படும் இந்நாவலில்  வாசித்தறியலாம்.  உள்ளங்கையில் கொஞ்சம்   பஞ்சாமிர்தத்தை ஊற்றினால் பழச்சக்கரைச்  சாறு  கையிலிருந்து  வழிந்தொழுகுவது போல  நாவல் முழுதும்  அன்பு கசிந்து வழிந்து  வாசகரையும்  அன்புமயமாக்குகிறது. பெண் ஓடினால் ஓடுகாலி என்று பழித்து ஒதுக்கும் சமுகம், ஆண் ஓடினால்  அவனை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை உணர்வு ரீதியாக பதிவு செய்கிறார் வரத. ராஜமாணிக்கம்.

இந்நாவலின் ஊடே ஜட்காவண்டிக்காரர்களின்  அன்றாட வாழ்கைப் பாடுகளை  சொல்கிறார். சசியைத் தேடிவரும் இளைஞன் நாகு, பாத்திமாவின் வார்த்தைகளுக்கு  கட்டுப்பட்டு திரும்பச் செல்லும்போதும், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின்  உணர்வுகளையும், ஓடிப்போன முத்தன் மனைவி பற்றியும் அளவாகச் சொல்லி சொல்லாமல் விட்டதை  வாசகர்களை ஆசிரியர் உணர வைக்கிறார்.

இந்நாவல் முழுவதும் வெயிலும்  ஒரு பாத்திரமாகத் தோன்றி நாவலின் உணர்வோட்டத்தை கவித்துவமாக நகர்த்துகிறது. ரகீம் பாய், பாத்திமா பாத்திரங்கள் எதார்த்தம் பிசகாமல் படைக்கப்பட்டிருக்கிறது. இந்நாவலில் விவாதிக்கப்படும் மனித வாழ்க்கைப்பாடுகள் வாசகனுக்குள் ஒரு நிறைவை பதிக்கிறது. இன்னும் இதுபோல பல நல்ல  நாவல்களை ஆசிரியரிடமிருந்து எதிர்நோக்க வாசகர்களை எதிர்பார்க்கத்   தூண்டுகிறது.   நல்ல  நாவலைத்  தந்த வரத.ராஜமாணிக்கத்தையும், அச்சும், அமைப்பும், கச்சிதமான இணைந்த  இதமான வாசிப்புக்குரிய புத்தகத்தை வெளியிட்ட பாரதி புத்தகாலய நிர்வாகிகளையும்  வாழ்த்தத் தோன்றுகிறது.

நூல்: அதிதி நாவல்
ஆசிரியர்: வரத.ராஜமாணிக்கம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 192
விலை: 180
புத்தகம் வாங்க கமெண்டில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

Kaala Paani Novel By M Rajendran Novelreview By S Subbarao. நூல் அறிமுகம்: டாக்டர். மு. ராஜேந்திரனின் காலா பாணி - ச.சுப்பாராவ்

நூல் அறிமுகம்: டாக்டர். மு. ராஜேந்திரனின் காலா பாணி – ச.சுப்பாராவ்



காலா பாணி

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், வரலாறு குறித்த பாரதி புத்தகாலயத்தின் ஒரு சிறு வெளியீட்டில் ஒரு முக்கியமான விஷயத்தைப் படித்தேன். நமக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு என்றால் மருத்துவர் வெளியூர் சென்றீர்களா? கடந்த  2- 3 நாட்களில் வெளியில் சாப்பிட்டீர்களா? என்ன சாப்பிட்டீர்கள் ? என்று கேட்கிறார். இன்னும் சில நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்குப் போனால் கடந்த சில வருடங்களாக உங்கள் வேலை, உணவுப் பழக்கம், தூக்கம் போன்ற விபரங்கள் தேவைப்படுகின்றன. சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு உங்கள் பெற்றோர், தாத்தா பாட்டிக்கு இந்த நோய் இருந்ததா என்ற பழைய கதை தேவை. எனவே தனி மனிதனின் நோயைத் தீர்க்க அவனது பழைய வரலாறு அவசியம்.

சமூகத்தின் நோயைத் தீர்க்க சமூகத்தின் பழைய வரலாறு அவசியம் என்று அந்த நூலாசிரியர் சொல்லியிருப்பார்.  நான் அதற்கு முன்பிருந்தே வரலாற்று நூல்களை மிக ஆர்வமாகப் படிப்பேன் என்றாலும், மேற்சொன்ன கருத்தைப் படித்த பிறகு கூடுதல் அக்கறையோடும், கவனத்தோடும் வரலாற்று நூல்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அப்படியான தேடலில் சமீபத்தில் கிடைத்தது தான் டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ.ப அவர்கள் எழுதியிருக்கும் காலா பாணி என்ற வரலாற்று நாவல்.

இந்திய விடுதலை இயக்கத்தின் துவக்கப் புள்ளியாக இருந்தது கட்டபொம்மன், மருதுபாண்டியர்களின் வீரம் செறிந்த எதிர்ப்பியக்கங்கள்தான்.  ஏற்கனவே டாக்டர் ராஜேந்திரன் அந்த வீர வரலாற்றை 1801 என்ற நாவலாக எழுதியிருக்கிறார். அது பரவலான கவனத்தையும் பெற்றது. மருது சகோதரர்களுடம் 512 பேரை ஒரே நாளில் தூக்கிலிட்ட கிழக்கிந்தியக் கம்பெனி சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவன், சின்ன மருதுவின் புதல்வன் 12 வயது சிறுவன் துரைசாமி உட்பட 73 பேரை நாடு கடத்தியது. பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் நாடுகடத்தப்பட்ட முதல் அரசர் னஉடையணத் தேவன்தான்.  இப்படி நாடு கடத்தப்பட்டவர்களை கம்பெனி காலா பாணி என்ற குறிப்பிட்டது.

காலா பாணிகள் 11.02.1802 அன்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கிளம்பி 66 நாட்கள் பயணத்தில் பினாங்கு வந்து சேர்கிறார்கள். இதில் உடையணத் தேவன் மட்டும் பிரி்ககப் பட்டு மால்பரோ கோட்டையில் சிறை வைக்கப்படுகிறார்.  19.09.1802 தனது முப்பத்திநான்காவது வயதில் தனிமைச் சிறையில் இறந்து போகிறார் உடையணத் தேவன். அந்தக் கண்ணீர்க் கதைதான் காலா பாணி. இந்தியாவின் முதல் சுதந்திர எழுச்சி தமிழகத்திலிருந்து தான் துவங்கியது என்பதை மிக ஆதாரபூர்வமாக நிறுவும் படைப்பு.  படைப்பிற்கு உதவிய துணைநூல்களின் பட்டியலைப் பார்த்தாலே தெரியும்.

கிழக்கிந்தியக் கம்பெனியின்  ஏராளமான ஆவணங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல். ஆனால் இன்று வந்து கொண்டிருக்கும் பல டாக்கு ஃபிக்ஷன் போல் கூகுள் செய்து உட்கார்ந்த இடத்திலிருந்து எழுதப்பட்டதல்ல.  உடையணத் தேவனின் மதுரை சக்கந்தி அரண்மனையிலிருந்து, பினாங்கு, பென்கோலன் என்று உடையணத் தேவனின் அந்த இறுதிப்பயண இடங்கள் அனைத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். கட்டபொம்மன், உடையணத் தேவன் போன்றோரின் இன்றைய வாரிசுகளிடம் நேர்காணல் செய்திருக்கிறார். உடையணத்தேவனின் வாளைக் கையில் ஏந்திப் பார்த்திருக்கிறார்.  கள ஆய்வு ஒரு நாவலுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை, அதுதான் நாவலின் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதைக் காட்டும் நாவல்.

காலா பாணி அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனி காலத்து தமிழகம், தமிழகம் மட்டுமல்ல,  அன்றைய  உலகம் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தைத் தருகிறது. பிரான்ஸில் பிரெஞ்சுப் புரட்சியின் சிறைத் தகர்ப்பை அறிந்து அதைப் போல கோயம்புத்தூரில் ஒரு சிறை உடைப்பை போராளிகள் நடத்துகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. சோஸ் லெப்டினென்ட், ஆப்காரி காண்ட்ராக்டர், மிஸ்தீஸ், பேஷ்குஷ் கலெக்டர், இஸ்திமிரார் என்று எத்தனை எத்தனை புதுப் புது வார்த்தைகள் ! கம்பெனி பதவிகள், அதிகாரப் படிநிலைகள், அலுவலக நடைமுறைகள், எந்தப் பதவியில் உள்ளவர் வரும் போது எத்தனை குண்டு முழங்க வரவேற்க வேண்டும் என்பது போன்ற சம்பிரதாயங்கள், அன்றைய மருத்துவ முறைகள், பானர்மேனின் சமாதி பினாங்கில் இருப்பது, என்று ஏராளம் ஏராளமான தகவல்கள். 

துலுக்கப் பெண்ணை சாகிபா என்றும், மலாயா பெண்ணை நயோன்யா என்றும், மராட்டிய பெண்ணை மாதுஸ்ரீ அல்லது பாயி சாகேப் என்றும். வெள்ளைக்காரியை மேம் சாகிபா என்றும், பிரெஞ்சுக்காரியை மதான் என்றும் தமிழ் பெண்ணை நாச்சியார் என்றும் அழைக்க வேண்டும் என்ற ஓரிடத்தில் ஒரு படை வீரன் சொல்கிறான். இந்தியாவைச் சுற்றியுள்ள சின்னச் சின்னத் தீவுகளில் கம்பெனியின் ஆட்சி, அங்கு அடிமையாகவும்,  கைதியாகவும் போய் வாழ்நாள் முழுதும் துன்பத்தில் உழலும் தமிழர்கள், சந்தர்ப்பவசத்தால் சற்றே வசதியான வாழ்க்கை கிடைக்கப் பெற்றவர்கள், அவர்கள் தம் சக தமிழர்களுக்குச் செய்யும் மிகச் சிறிய உதவிகள் எல்லாமே மிகையின்றிச் சொல்லப்பட்டுள்ளன.

ஆனால் நாவலில் ஆடம்பரமான மொழிநடை, வர்ணனைகள் எதுவும் கிடையாது. இயல்பான மொழி. ஆசிரியர் தனது மொழித் திறமையைக் காட்ட வேண்டும் என்று எந்த இடத்திலும் வலிந்து மிகையாக எதையும் எழுதவில்லை. ஆனாலும், பெரிய உடையணத் தேவன் தன் சகாக்களோடும்,  கம்பெனி அதிகாரிகளோடும் கையறு நிலையில் பேசும் போது எனக்கு கண் கலங்குகிறது. அதுவும் அந்த கடைசி மூன்று பக்கங்கள்….

அன்றாடம் நான்  பெரியார் பேருந்து நிலையத்திற்கு எதிரே மதுரையின் கோட்டையின் மிச்சத்தைப் பார்ப்பேன். என் மதுரைக் கோட்டை என்று என்னையறியாமல் பெருமிதம் கொள்வேன். நாவலைப் படித்து முடித்த அன்று அந்தக் கோட்டை மதிலைப் பார்த்த போது அந்த பெருமிதம் இல்லை. நாடு கடத்தப்பட்ட உடையணத் தேவனைக் கடைசியாகப் பார்ப்பதற்காக அந்தக் கோட்டை வாசலில் நின்று அவரது மனைவி மருதாத்தாள் கெஞ்சிக் கதறியதும், காவலன் அவளை விரட்டி விட்டு கோட்டைக் கதவை இழுத்து மூடியதும் தான் கண்முன் நின்றன. முதன் முறையாக என் மதுரைக் கோட்டை மதிலைப் பார்த்து நான் கண்கலங்கி நின்றேன்.

பழைய வரலாற்றைச் சொல்வதன் வழியே,  இன்றும் நாம் கைவிடக் கூடாத ஏகாதிபத்திய எதிர்ப்பை ரத்தமும், சதையுமாகச் சொல்லிய டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ. ப அவர்களின் கரம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறேன்.

நூல்: காலா பாணி
ஆசிரியர்: டாக்டர். மு. ராஜேந்திரன், இ.ஆ.ப
வெளியீடு: அகநி வெளியீடு
விலை: ரூ650.00
பக்கம்: 536

Pithirvanam Novel By Anbathavan Bookreview By Puthiyamathavi நூல் அறிமுகம்: அன்பாதவனின் பிதிர்வனத்தில் அலையும் வேதாளங்கள் - புதியமாதவி

நூல் அறிமுகம்: அன்பாதவனின் பிதிர்வனத்தில் அலையும் வேதாளங்கள் – புதியமாதவி




இந்த  வேதாளம் பிதிர்வனத்திலிருந்து வந்திருப்பதாகச் சொன்னது. கருகிப்போன உடல்களின் நாற்றமும் எரியாதக் கனவுகளின் மிச்சமும் வேதாளம் சொல்வது உண்மைதான் என்று நம்ப வைத்தன. என் சன்னலுக்கு அருகில் தண்டவாளத்தைப் பார்த்துக்கொண்டே என்னோடு வேதாளம் கதைகள் பேச ஆரம்பித்தது. ஜனக்கடலில் கரைந்துவிட்ட நினைவுகளின் சாம்பலை கடலில் கரைத்துவிட்டு அடுத்த நாள் எதுவும் நடக்காதது போல அதே தண்டவாளத்தில் இரயில்கள் ஓடின. நாங்கள் பயணித்தோம்.

நீங்களும் மனிதர்கள் தானா! என்று வேதாளம் கேட்டது. இல்லை நாங்கள் மனிதர்கள் இல்லை. நாங்கள் இப்பெரு நகரத்தை தின்று துப்பும் பெரு நகரப்பிசாசுகள் என்றேன். வேதாளம் சிரிக்க ஆரம்பித்தது. தண்டவாளத்தில் ஓடும் ரயில்களின் சத்த்த்துடன் கலந்து ஒலித்த வேதாளத்தின் சிரிப்போசை…யில் வீட்டிலிருந்த சமையல் குக்கர்கள் டிபன்பாக்ஸ்கள் அலற ஆரம்பித்தன. 11 நிமிடங்கள்.. அந்த அலறலை நிறுத்தமுடியவில்லை! தண்டவாளங்கள் குலுங்கி அழுதன.

11 ஜூலை 2006 மாலை 18. 24 முதல் 18.35 வரை 11 நிமிடங்களின் கதை பிதிர்வனம். பிதிர்வனம் நாவல் என்று சொன்னது வேதாளம். பிதிர்வனம்” நாவல் இல்லை” என்றேன். வேதாளம் புருவங்கள் சுருக்கி பதிலுரைக்கு காத்திருந்தது. விக்கிரமாதித்தனுக்கு வராத சோதனைகள் வேதாளம் அறியாத ரகசியங்களை எப்படி சொல்வது? வேதாளம் என் விளக்கவுரையில் திருப்தி அடையவில்லை என்றால்… என்ன நடக்கும்? 

தலை சுக்கு நூறாக உடைந்து சிதறிவிடும்! வேதாளம் கதை சொல்லி கேட்ட  நாட்கள் மறந்துவிடவில்லை. இருப்பதோ ஒரே ஒரு தலை. அதுவும் சில்லு தேங்காய் மாதிரி உடையும் என்றால் வேதாளம் பயமுறுத்தியது. பிதிர்வனம் நாவலில்லை என்றால் வேறு என்னவென்று சொல்வாய்?

வேதாளம் விடுவதாய் இல்லை. சிறுகதைகள் பலவற்றின் தொகுப்பு என்றால் அதுவுமில்லை. ஒவ்வொரு கதைகளும் தனித்தனியானவை தான் என்றாலும் அத்தனையும் சந்திக்கும் அந்தப் 11 நிமிடங்கள்  சிறுகதைகளிலோ சிறுகதை தொகுப்புகளிலோ காணக்கிடைக்காத சரடு. சிறுகதைகள் தனித்தனியானவை. ஒன்றுக்கொன்று தொடர்புகள் அற்றவை.

பிதிர்வனத்தில் தொடர்பற்றவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பயணிக்க வைத்திருக்கிறது அந்த 11 நிமிடங்கள். அப்படியானால் பிதிர்வனத்தில் அந்த 11   நிமிடங்கள் தான் கதைப்பாத்திரம், களம், காலம் எல்லாமும். கதைகளுக்கான எல்லா சுவைகளையும் ஒவ்வொரு துளியாக எடுத்து அந்த 11  நிமிடத்திற்குள் கொண்டுவந்து வாசகனைப் மிரட்டுகிறது  பிதிர்வனம்.

வழக்கமான நாவல்களில் இருக்கும் கதைப்பாத்திரங்களின் வலுவான சித்திரங்கள் இல்லை. அவை பென்சிலில் வரையப்பட்ட கோட்டோவியங்களாகவும் சில இடங்களில் முழுவதும் வரைந்து முடிக்காத கோடுகளாகவும் இன்னும் சில இடங்களில் வேண்டுமென்றே வண்ணங்களில் அழகாகத் தீட்டப்பட்டிருந்த ஓவியத்திரைச்சீலையின் மீது  மிச்சமிருந்த வண்ணங்களை வேதாளம் தெளித்துவிட்டு சென்றது போலவுமான தோற்றங்களை “ஓர்மையுடன் “ வரைந்திருக்கிறது பிதிர்வனம். கதைகளின் ஊடாக அவர் வைக்கும்  நுண் அரசியல் அவருடைய அனைத்து படைப்புகளில் அவரை அடையாளப்படுத்தும். பிதிர்வனத்தில் கூட வஞ்சமில்லாமல் நிறையவே அள்ளிவிட்டிருக்கிறார். 

பருத்திவீரன் திரைப்படம் , இயக்குநர் அமீர் குறித்த  உரையாடல் பகுதி: “பருத்திவீரன்.. ஒரு உயர்சாதி ஆணின் கீழ்சாதி காதலிக்குப் பிறந்தவன், அந்தக் காதலி பன்றி வளர்க்கும் குறவர் சமூகம்” 

.. “ஆமாண்ணா… அதில் என்ன பிரச்சனை?”

“இயக்குனர் சொல்லவரும் செய்தி இதுதான் என நான் புரிந்து கொள்கிறேன். 

உயர்சாதி ஆணும் கீழ் சாதிப் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்வதை சாதியச் சமூகம் அனுமதிக்காது. அப்படி அவர்கள் இணைந்து வாழ்ந்தாலும் கொல்லப்படுவார்கள். அவர்களுக்குப் பிறப்பவன் பொறுக்கியாக லும்பனாகத் திரிவான். .. அப்படிப்பட்ட ஒருவனை நம்பி எவளும் காதலித்தால், அவளும் பாலியல் வன்முறை செய்து கொல்லப்படுவாள்”

(பக் 75)
நாவலுக்கான சில அடிப்படை அம்சங்களான வலுவான கதைப்பாத்திரங்கள் பிதிர்வனத்தில் இல்லை. No  Main characters அதனால்தான் வாசகன் பிதிர்வனத்தை நாவல்தானா, இது என்ன? என்ற கேள்வியோடு  அல்லாடுவது நடக்கிறது. எழுத்தாளர் அன்பாதவனின் எழுத்தகள் கலக இலக்கியத்தின் குரல் மட்டுமல்ல, அதற்கான பாதைப்போட்டு கொடுப்பவை. வடிவத்திலும் உத்தியிலும் புதிய சோதனை முயற்சிகளின் பரிசோதனைக் கூடங்கள். 

ஏற்கனவே அறியப்பட்டிருக்கும் வடிவங்களச் சிதைத்தும் வெட்டியும் ஒட்டியும் ஒரு புதியவடிவத்தைக் கொடுக்க நினைத்திருக்கும் வேதாளத்தின் மாயஜாலம் புரிந்து கொள்ள அன்பாதவனைப் புரிந்து கொள்ள வேண்டியதும்  அவசியமாகிறது.

அவருடய முதல் கவிதை தொகுப்பில் ஒரு கவிதை  திமிங்கலத்தில் எழுதப்பட்டிருக்கும். தமிழ்க்கவிதை வரிகளுக்கு நடுவில் இடம்பெறும் அந்த ஆங்கில வரிகள் கவிதையின் மைய0ப்புள்ளியை விசாலமாக்கி ஒரு சூறாவளியைப் போல அதற்குள் நம்மை இழுத்துச் செல்லும் ஆற்றல்மிக்கவை. 

இலக்கிய உலகில் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் அழகியல் வடிவங்களை விலக்கி ஒவ்வொரு இலக்கிய வடிவத்திற்கும் இருக்கும் எல்லைக்கோடுகளை ஓர்மையுடன் சிதைத்து புதியதோரு வடிவத்தையும் இலக்கிய வகைப்பாட்டையும் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் அன்பாதவன். அதில் “பிதிர்வனம்” வேதாளத்துடன் வந்து விக்கிரமாதித்தன் அறியாத கதைகளைச் சொல்கிறது.

வேதாளத்திற்கு ஒரு சின்ன வேண்டுகோள்… கதையை எப்படி வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போ. கதைக்கு முன்னுரையாக பிதிர்வனம் என்றால் சுடுகாடு என்று “அந்தம்” பாட வேண்டாம். அதே போல கடைசிப்பக்கத்தில் வேதாளத்தை விக்கிரமாதித்தன் தோள்களில் சுமந்து கொண்டு அலைகிற அதே காட்சி வேண்டாம் வேண்டவே வேண்டாம். பிதிர்வனம் ஒரு பாக்கெட் நாவல் வடிவத்தில் அச்சிடப்பட்டிருப்பது வேதாளமும் பதிப்பகத்து மொதலாளியும் சேர்ந்து செய்த ஒரு சதிவேலையாத் தெரியுது.

மீண்டும் இதோ.. வேதாளம் எட்டிப்பார்க்கிறது. பிதிர்வனம் நாவல்.. என்று எதோ சொல்ல ஆரம்பிக்கிறது. பிதிர்வனம்  நாவலில்லை.. என்று சொல்கிறேன். இதோ என் தலை சுக்கு நூறாக உடையப்போகிறது. விக்கிரமாதித்தன் தன் உறைவாளை எடுத்துக்கொண்டு வருகிறான். 

“படைப்பாளி என்பவன் மாய எதார்த்தத்தில் திளைப்பவன்! மாயங்களில் நம்பிக்கை கொண்டவனல்ல…! புனைவெனும் எலும்புத் துண்டினை ரசித்து ருசிக்கும் தெருநாயின் மனநிலைக்காரன்”

(பக் 143)
எல்லா கருகல் நாற்றங்களுக்கு நடுவிலும் ஆண் பெண் காதலும் மனைவியின் அக்கறையும் சினிமா எடுக்கும் ஆசைகளும் தாபங்கள் தீராத இரவுகளும் கதை சொல்கின்றன. சர்ச் கேட் வாசலில் வணங்கிய கரங்களுடன் யாசிப்பவனை ஏளனமாய் வெறிக்கும் தலால் வீதியின் பங்குச்சந்தைக் கட்டடம் முன்னிரவிலேயே இரயிலடியில்  வாடிக்கையாளரை எதிர்ப்பார்த்துக் காத்திருப்பாள் அதீத ஒப்பனைக்காரி.

பிச்சையெடுத்து போதை சுவைத்து மரணம் வாங்கும் ஏதிலிகள் பிதுங்கி வழிகிறது பெட்டி. கூடு திரும்பும் களைத்து சலித்த மானிடர் எதிர்பாராத் தருணத்தில் ஒலிக்கிறது பார்வையற்றவனின் இசைக்குழல். கைப்பையில் நிரம்பி வழிகிறது நல்லிசையின் சுகந்தம் இன்றிரவு நல்லிரவு..”

(பக் 92)
தண்டவாளத்தில் எப்போதும்போல மின்சார இரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வேதாளமும் விக்கிரமாதித்தனும் டிரெயின் பிடிக்கும் அவசரத்தில் ஓடுகிறார்கள்.

அதோ… பிதுங்கி வழியும் அந்த ஜனக்கூட்டத்தில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருப்பது வேதாளமா? விக்கிரமாதித்தனா!  பிதிர்வனங்களை நோக்கி, கதைகளைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது பெருநகரம். 

அன்பாதவனின் வேதாளத்திற்கு வாழ்த்துகளுடன்.. தலை தப்பியதற்கு நன்றியுடனும். ….. அதே பெரு நகரத்திலிருந்து புதியமாதவி.. 

நூல்: பிதிர்வனம் நாவல்
ஆசிரியர்: அன்பாதவன்
வெளியீடு
உதயகண்ணன்,
பெரம்பூர், தமிழ் நாடு/
விலை:ரூ. 150/