திருமலை சமுத்திரமும், நுங்கம்பாக்கம் ஏரியும் கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்
“சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது, அதன் குத்தகைக் காலம் முடிவுற்றபடியால், உடனடியாக அவர்கள் காலிசெய்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” இது சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் அதி முக்கியமானதொரு பொருளாக இருந்து வருகிறது.
இந்து அல்லாத சிறுபான்மையினர் நடத்தக்கூடிய கல்லூரிகள் மீது குறிவைத்துத் தாக்கப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக மட்டுமே இதை கொள்ளலாகாது.
தஞ்சை திருமலை சமுத்திரத்தில் தமிழக அரசு திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 20.62 ஏக்கர் நிலத்தில், எவ்வித ஒப்புதலும் ஆணையுமின்றி அத்துமீறி, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கட்டிய கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னரும், சச்சரவு நீடித்துவரும் சூழலின் பின்னணியில் இதைப் பார்க்க வேண்டும்.
தவிர தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகள் சாதி மத இன பேதமின்றி அரசு நிலத்தையும், ஆறுகளையும், ஆற்றுப் படுகைகளையும் ஆக்ரமித்துதான் கட்டுமானங்களை நிறுவியுள்ளது. அவ்வப்போது வெவ்வேறு காரணங்களுக்காக ஒரு சில பொறியியல் கல்லூரிகளின் ஆக்கிரமிப்பினை அகற்றிட, அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதும், பின்னர் அடங்கிப் போவதும் சம்பிரதாய பூர்வமானதொன்றாக இருந்து வருகிறது. நகரத்தை பிழைப்பிடமாகக் கொண்டு ஆற்றுப் படுகைகளில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வாழ்வையே போராட்டமாகக் கொண்டிருக்கக்கூடியவர்கள் நிர்ப்பந்தமாகக் கருணையின்றி வெளியேற்றப்பட்டு, நகரிலிருந்து இருபது முப்பது கிலோமீட்டர்களுக்கு அப்பால் குடியேற்றப்படும் அதே நேரத்தில், அரசு நிலங்களையும் நீராதாரங்களையும் நீர்ப்படுகைகளையும் ஆக்ரமித்து வர்த்தக நோக்கில் பல அடுக்கு மாடி வளாகம் அமைத்திருப்போருக்கும், பொறியியல் தொழிற்சாலைகளை நடத்தி வருவோருக்கும் கரிசனம் காட்டப்பட்டு வருகிறது.
சாஸ்த்ரா விவகாரத்தில் ஆக்ரமிப்பு என்பதை வழக்கமான விதத்தில் ஏதோ ஒரு பகுதியில் நடைபெற்றதாகக் கொள்ளமுடியாது. முழு வளாகமும் அரசு நிலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதோடன்றி, அன்றைய முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனும், பண்ருட்டி ராமச்சந்திரனும் இந்த ஆக்ரமிப்புக்கு வாய்வழி ஒப்புதல் வழங்கியதாக நீதிமன்றத்திலேயே அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆக்ரமிப்பை அகற்றுவதற்கு நிகராக அரசு நிலம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சாஸ்த்ரா விவகாரம் வெளியாகிய பின்னர் “தனியார் பொறியியல் கல்லூரிகள் அனைத்துமே இத்தகைய செயல்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றன, எனவே நகரில் ஆற்றோரத்தில் குடியிருப்போரை வெளியேற்றியதைப் போன்று, இவர்களின் ஆக்ரமிப்புகளை எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி அகற்ற வேண்டும்” என்று அழுத்தமாகக் குரல் எழுப்புவதற்கு மாறாக, குறிப்பிட்ட சில சிறுபான்மையினர் நடத்தும் கல்விக்கூடங்கள் மீது மட்டும் சமூக ஊடகங்களில் வலம்வரக்கூடிய நியாதிபதிகளும், நீதிமான்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அடுத்த கட்டத்தில் லயோலா கல்லூரி குறிவைக்கப்பட்டுள்ளதைத்தான் “கோயில் நிலம்” என்ற கூக்குரல் வெளிப்படுத்துகிறது.
குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்திணைகளுக்கு அப்பால் கோயில் நிலம் என்று ஏதோ வரையறை செய்யப்பட்டு வந்திருப்பதாக எவரும் கருதலாகாது. தமிழகத்தில் மன்னர்கள் குறிப்பாகச் சோழர்கள் ஆட்சியில் உருவான கோயில்களின் பராமரிப்புக்காகக் கோயிலுக்கான நிலங்களும், பிராமணர்களுக்கு சதுர்வேதிமங்கலங்களும், பிரம்ம தேசமும், சுரோத்திரியமும் ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறது. நாளடைவில் பல்வகை பயன்பாட்டுக்கு மக்களின் அடிப்படைத் தேவைக்கு இந்த நிலங்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதை வரலாற்றில் அறியலாம்.
இறைவனுக்குரிய நிலங்கள் என்று பிரத்யேகமாக இப்பூவுலகில் இல்லை என்பதையும், முன்னாளில் மன்னர்களும், பின்னாளில் தனிப்பட்ட நபர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் போன்றவை பல்வேறு காரணங்களில் பேரில், தங்கள் சொந்த நிலங்களையும் ஏற்கனவே அனுபோகத்திலிருந்து வந்த அரசு நிலங்களையும் கோயில்களுக்குத் தானமாக வழங்கியவையே கோயில் நிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன என்பதையும் அறிதல் வேண்டும். இன்னும் சொல்லப்போனால் நில உச்சவரம்பு சட்டத்திலிருந்து தப்பிக்கும் பொருட்டு இறைவனுக்கு நஞ்சையும், புஞ்சையும் ஹெக்டேர் கணக்கில் அர்ப்பணிக்கப்பட்டு அவர்களே அவற்றின் பாதுகாவலர்களாகவும் இருந்து வருகின்றனர். இதைத்தவிரச் சென்னை மாநகர் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சொந்த நலனைப் பாதுகாத்திடும் நோக்கில் பொதுப் பயன்பாட்டிலிருந்து வரக்கூடிய நிலங்களை இறைவனின் பெயரால் ஆக்ரமிப்பது என்பது மற்றொரு புறம் இருந்து வருகிறது.
மதராஸில் முதன் முதலில் உருவான முறைப்படுத்தப்பட்ட மொத்த விலை மார்க்கெட்டான கொத்தவால் சாவடி என்பது கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான நிலத்தில் உருவானதுதான். சரியாக முந்நூற்று பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே அம்மாவின் இடத்திலிருந்த அந்த அங்காடி வேறொரு அய்யாவின் இடத்திற்கு மாறியது. ஆம் கோயம்பேடு குருங்கலீசுவரர் ஆலயத்திற்குச் சொந்தமான இடத்தில்தான் அங்காடி மட்டுமல்ல, புறநகரப் பேருந்து நிலையமும் உருவாகியது. ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யக்கூடிய ஐசிஎஃப் தொழிற்சாலையின் ஒரு சில பகுதிகள் ஜார்ஜ் டவுனில் உள்ள ஏகாம்பரேஸ்வரனுக்கு சொந்தமான நிலத்தில்தான் உருவாயின. தற்பொழுது அவரது பிரதிநிதியாக கமலவினாயகர் ஐசிஎஃப்பையொட்டிய பிரதான சாலையில் குடிகொண்டு மிச்ச நிலங்களைக் கண்காணித்து வருகிறார். இப்படி பல்வேறு கோயில் நிலங்கள் பொதுப் பயன்பாட்டிற்காகக் கையகப்படுத்தப்படுவது காலங்காலமாகவே இருந்து வருகிறது. இன்னொரு பக்கத்தில் கோயில்களின் வருவாயைப் பெருக்கும் நோக்கில் கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் வர்த்தக வளாகங்களும், திருமண மண்டபங்களும், குடியிருப்புகளும் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றன. சோழிங்கநல்லூர், தரமணி பகுதிகளில் சாஃப்ட்வேர் பூங்காங்கக்களை உருவாக்கிடவும் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
கோயில் நிலங்கள் மட்டுமில்லை, கோயில் ஒன்றே பொதுப்பயன்பாட்டிற்காகக் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இத்தருணத்தில் அகழாய்வாளர்களும், கரசேவகர்களும் அறிவது முக்கியமானதாகும். இந்திய விண்வெளி ஆய்வுக்குழுவின் ராக்கெட் என்ஜினியராக சேர்ந்த அப்துல் கலாம் அவர்கள் ராக்கெட் ஏவுதளத்திற்கான இடம் தேர்வு செய்தது பற்றி அளிக்கும் தகவல் முக்கியமானது. தும்பாவில் ரயில்வே இருப்புப் பாதைக்கும் கடற்கரைக்கும் இடையே இடம் முடிவு செய்யப்பட்டதாகவும், அந்த இடத்தில் தூய மேரி மேக்டலீன் தேவாலயம் இருந்தையும் மத முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தை கையகப்படுத்துவது என்பது கம்பி மேல் நடப்பதைப் போன்றது என்றும் கூறுகிறார். பின்னர் திருவனந்தபுரத்தில் பிஷப்பாக இருந்த ரெவரண்ட் டாக்டர் திரெய்ராவின் “ஆசியோடு” தேவாலய இடம் கையகப்படுத்தப்பட்டதும், அங்கே விண்வெளி மையத்தின் முதல் அலுவலகம் அமைக்கப்பட்டதையும், பிரார்த்தனை அறையில் முதல் ஆய்வுக் கூடமும், பிஷப்பின் அறையில் வடிவமைப்பு மற்றும் வரைகலை அலுவலகமும் மாற்றம் கண்டதென்றும், அடுத்த கட்டத்தில் தேவாலயத்தில் இந்திய விண்வெளி அருங்காட்சியகம் அமைந்ததையும் பெருமை பொங்க எழுதியுள்ளார்.
சென்னையில் வரலாற்றின் துவக்க கட்டத்தில் கோயில் நிலங்கள் என்று பிரத்யேகமாக ஏதும் இருக்கவில்லை. கோட்டையை விரிவுபடுத்திடும் நோக்கில் ஏற்கனவே இருந்த கோயில்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பதை வரலாற்றுக் குறிப்புகளின் மூலம் அறிகிறோம். மதராஸில் கிழக்கிந்திய நுழைவுக்குப் பின்னர் நகரில் ஏற்கனவே இருந்து வந்த நில உடமைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்னர் மன்னர்கள் ஒதுக்கியதைப்போன்று ராணுவ வீரர்கள், அதிகாரிகள், கம்பெனி நிர்வாகிகள், வர்த்தகர்கள், துபாஷிகள் ஆகியோருக்கு கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
கறுப்பர் நகரெனும் ஜார்ஜ் டவுனைச் சுற்றியுள்ள நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கீழ்பாக்கம், பெரம்பூர், செம்பியம், புர்சவாக்கம், தொண்டையார்பேட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நிலப்படங்களில் ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடைக்கிறது. இவற்றைத் துல்லியமாகவே பார்க்கையில் வியப்படைவோதடன்றி, புதுப்புது விவரங்களையும் அறியமுடியும். மேற்குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள பல்வேறிடங்கள் வெவ்வேறு நபர்களுக்கு சொந்தமானதாகவே இருந்திருப்பதை அப்படங்கள் உணர்த்துகிறது. 1814ல் மேற்கொள்ளப்பட்ட சர்வேயின்படி வெளியிடப்பட்ட 1816ம் ஆண்டு நிலப்படத்தில் மேற்குறிப்பிட்ட கிராமங்களைத்தவிர திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, மீர்சாஹிப்பேட்டை, கிருஷ்ணாம்பேட்டை ஆகிய கிராமங்களும் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது.
1816ம் ஆண்டு நிலப்படத்தின்படி பூந்தமல்லி சாலையில் ஸ்பர் டாங்க் எனப்படும் குளத்திற்கும் மெக்நிக்கல்ஸ் சாலைக்கும் இடைப்பட்டதில் ஒரு பகுதி கர்னல் ஸ்மார்ட்க்கும் மற்றொன்று பெயர் குறிப்பிடப்படாததாகவும் உள்ளது. சாலையின் எதிரே தெற்கில் உள்ள பகுதி கர்னல் கென்னி, டெய்லர் இன்னும் பலருக்குச் சொந்தமானதாகக் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. 1909ம் ஆண்டு நிலப்படத்தில் ஸ்பர்டாங்கை யொட்டிய பகுதியில் அரசின் செங்கற் சூளை இருப்பதையும், எதிரே உள்ள பகுதி லாண்டன்ஸ் தோட்டமாக பெயர் மாறியதையும் அறிய முடிகிறது. அடுத்த இருபது ஆண்டுகளில் லாண்டன்ஸ் தோட்டத்திலும் செங்கற் சூளை இருந்த இடத்திலும் கீழ்பாக்கம் மருத்துவ மனையும், மருத்துவக் கல்லூரியும் உருவாயின. ஸ்பர்டாங்கின் தென் கரையில் கூவத்தின் மறு புறத்தில் வானிலை ஆய்வு நிலையம் இருப்பதை இரு படங்களும் தெளிவு படுத்துகின்றன. 1816ம் ஆண்டு படத்தில் வானிலை ஆய்வு நிலையத்தை அடுத்துள்ளது ரிபோக் என்பவருக்குச் சொந்தமானதாகக் காட்டப்படுகிறது. இங்குதான் பின்னாளில் காங்கிரசின் வருடாந்திர மாநாடொன்று நடைபெற்றதும், மகளிர் கிறித்துவக் கல்லூரி உருவானதும் குறிப்பிடத்தக்கது.
கர்னல் கென்னி நிலப்பரப்பிற்கு மேற்கிலிருந்து அதாவது ஈகா திரையரங்கத்திலிருந்து துவங்கி, தற்போதைய நியூ ஆவடி சாலை வரையிலான நிலப்பரப்பு கர்னல் கான்வே, மெக்ராட், பெயர் குறிப்பிடப்படாத மற்றொருவர் ஆகிய மூவருக்குச் சொந்தமானதாக இருந்திருப்பதை 1816ம் ஆண்டு நிலப்படம் வாயிலாக அறிய முடிகிறது. தற்போதைய பச்சையப்பன் கல்லூரிக்குக் கிழக்கில் அதாவது கான்வேயின் நிலப்பரப்பிற்கு எதிரே வாடல் என்பவருக்குச் சொந்தமானது என்பதையும் அறிய முடிகிறது. கீழ்பாக்கத்தில் பெயின்ஸ் சிறுமியர் பள்ளி எதிரே ஆர்ம்ஸ் சாலையையும் பர்னபி சாலையையும் இணைக்கக்கூடிய தெரு வாடல்ஸ் தெரு என்றழைக்கப்படுகிறது. அந்த வாடல் இவராக இருக்கலாம்.
சமீபத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு உரிய நிலம் மீட்கப்பட்டு, அந்த இடத்தில் அறநிலையத் துறையின் சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உருவானது பரவலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 1816ம் ஆண்டு நிலப்படத்தின்படி ஏகாம்பரேஸ்வரருக்கு முன்னர் இந்த இடம் மெக்ராட் அல்லது பெயர் குறிப்பிடப்படாத இன்னொருவருக்குச் சொந்தமானதாக இருந்திருக்கிறது. பிந்திய ஆண்டுகளின் நிலப்படங்கள் மூலம் இடைப்பட்ட காலத்தில் நில உடமைகளில் ஏற்பட்ட மாற்றங்களை நாம் அறிய முடியும். அவ்வாறே நகர வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படக்கூடியதும் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள சதுர்ப்புஜதாஸ் குடும்பத்தினருக்குச் சொந்தமான குஷால்தாஸ் தோட்டம் அதே காலகட்டத்தில் கர்னல் கான்வே என்பவருக்குரியதாக இ ருந்திருக்கிறது.
1814 ல் மவுண்ட்ரோடில் கன்னிமாரா மற்றும் ஸ்பென்ஸர்ஸ் வளாகம் இருக்கக்கூடிய பகுதி கஞ்சம் ஜில்லாவில் சர்ஜன் ஜெனரலாக இருந்த பின்னி என்பவருக்கு ஒதுக்கப்பட்டிருந்திருக்கிறது. அந்த அடிப்படையில்தான் அச்சாலை பின்னி சாலை என்றழைக்கப்படுகிறது. பின்னியிடமிருந்து இத்தோட்ட வீடு ஜான் ப்ரூம்ஹாலுக்கும், அவரிடமிருந்து தாமஸ் ஷார்ட்டுக்கும் கை மாறியது. 1854ல் சோமசுந்தர முதலியார் இதை வாங்கி இம்பீரியல் ஹோட்டலை நடத்தி வந்திருக்கிறார். பின்னர் குமாரகுரு முதலியார் மற்றும் சொக்கலிங்க முதலியார் ஆகியோரின் அனுபோகத்திலிருந்த இந்த இடத்தை 1891ல் யூகின் பிலிப் ஓக் ஷாட் கிரயம் செய்து கொண்ட பின்னர் கன்னிமாரா கட்டப்பட்டது.
கன்னிமாரா எதிரில் காயிதே மில்லத் மகளிர் கல்லூரி இருக்கும் இடத்திலிருந்து தொடங்கி அண்ணா சாலை தபால் நிலையத்தின் பின்னுள்ள ஹாரீஸ் பாலம் வரை மவுண்ட் ரோடின் மேற்கில் உள்ள பகுதி நான்கு பேருக்கு மட்டுமே சொந்தமானதாகும். மகளிர் கல்லூரியும் முகமதன் பள்ளியும் இருக்கக்கூடிய பகுதி அன்றைய தினம் அரசால் சுங்குராம செட்டிக்கு வழங்கப்பட்டதாகும். பின்னரே கன்னிமாராவைப் போன்று பல கை மாறி அரசுக் கல்லூரி அங்கே உருவானது. இதே சுங்குராமச் செட்டிக்கு 1717ல் அன்றைய கவர்னர் ஜோசப் காலட் வழங்கிய தோட்டம்தான் 1734ல் நெசவாளர்களுக்கான புதிய கிராமம் சிந்தாதிரிப்பேட்டையை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு அதே அரசால் ஏற்கப்பட்டது.
மதராஸ் எனும் சென்னையைப் பொறுத்தமட்டில் கோயிலுக்கு உரிய நிலங்கள் என்பது ஆதியிலிருந்து உருவாகவில்லை என்பதோடு ஒதுக்கப்பட்ட நிலங்களை ஏதோ ஒரு காரணத்தின் பேரில் வழங்குவதும், பின்னர் உரிமை மாற்றம் பெறுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வந்திருக்கிறது என்பதற்காகவே மேற்குறிப்பிட்ட தகவல்கள் சற்று விரிவாகவே தரப்பட்டுள்ளது.
லயோலா கல்லூரி விவகாரம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
ஸ்டெர்லிங் ரோடின் வட மேற்கில் தற்போது உள்ள இந்துக்களுக்கான மயானம் 1816ல் மட்டுமின்றி 1909ல் வெளியிடப்பட்ட நிலப்படத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஆற்காடு சாலையெனும் தற்போதைய கோடம்பாக்கம் நெடுஞ்சாலையை தெற்கு எல்லையாகவும், தற்போதைய ஏரிக்கரைச் சாலையை கிழக்கு எல்லையாகவும், பெயர் குறிப்பிடப்படாத பிந்திய நெல்சன் மாணிக்கம் சாலையை வடக்கு எல்லையாகவும், எம்எம்எடிஏவை மேற்கு எல்லையாகவும் கொண்டு நுங்கம்பாக்கம் ஏரி அமைந்திருக்கிறது. சூளைமேடு, புஷ்பா நகர், வள்ளுவர்கோட்டம், திருமூர்த்திநகர், ஜிஜி மருத்துவ மனை யாவுமே 1923-25ல் ஏரியை மேடடித்து உருவாக்கப்பட்ட பகுதிகளாகும்.
அவ்வாறே ஆர்காடு சாலையை வடக்கு எல்லையாகவும், மவுண்ட் ரோடை கிழக்கு எல்லையாகவும், கிட்டத்தட்ட கோடம்பாக்கம் மாம்பலம் ரயில் பாதையை மேற்கு எல்லையாகவும், சைதை மர்மலாங் பாலத்தை தெற்கு எல்லையாகவும் கொண்ட லாங்க் டேங்க் எனும் ஏரியும் அமைந்திருக்கிறது. இந்த ஏரியின் தென் கோடி சைதாப்பேட்டையில் கலெக்டர் கச்சேரி, அரசினர் கால்நடை மருத்துவ மனை, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, விவசாயப் பண்ணை, சைதை ரயில் நிலையம் ஆகியவை குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பழைய ஜெமினி படப்பிடிப்புக்கூடம், காங்கிரஸ் மைதானம், நந்தனம், தியாகராய நகர் முழுமையாகவும் லாங்க் டேங்கில் உருவான பகுதிகளாகும். பனகல் மன்னர் மாகாண முதலமைச்சராக இருந்தபோது மதராஸ் டவுன் பிளானிங் ஆக்ட் 1920ன்படி ஏரியை மேடடித்து உருவான பகுதிகள், தெருக்கள் யாவுமே ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்கள், அன்றைய அரசு அதிகாரிகள், பொறியியலாளர்கள், சாக்கடை நோண்டுகையில் மரித்தோர் இப்படி பலரது பெயரைக் கொண்டது.
இப்போது நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடின் தென் மேற்கில் உள்ள சுடுகாட்டுக்கு வருவோம். இந்த முனையிலிருந்து அதாவது நெல்சன் மாணிக்கம் சாலையின் கிழக்கு கோடியிலிருந்து வள்ளுவர்கோட்டம் சாலையாக மாறிய வில்லேஜ் ரோடு சந்திப்பு வரை ஏரிக்கரைச் சாலை என்றுதான் அழைக்கப்படுகிறது. அதாவது இந்த இடத்தில் ஏரியொன்று இருந்தது உறுதி செய்யப்படுகிறது. வள்ளுவர் கோட்டம் பகுதியே ஏரிக்கரைப் பகுதி என்றுதான் இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
லயோலா கல்லூரி 1925 ஜூலையில் நிறுவப்பட்டிருக்கிறது.
அதாவது ஏரியை மேடடித்த நிலத்தில் உருவானதாகத்தான் தெரிகிறது. இதில் விதி மீறல் ஏதேனுமிருப்பின் வெளிப்படையாகப் பகிர்வது அனைத்து கட்டுமானங்கள் விவகாரங்களிலும் லயோலாவை மட்டுமின்றி, வேறுபல கல்வித் தொழிற்சாலைகளையும் எச்சரிக்கையுடன் செயல்படச் செய்திடும். தவிர மக்கள் விழிப்புணர்வு கொள்ளவும் வழிவகுக்கும். அதை ஊடக அகழாய்வாளர்கள் செய்வார்களா?
இறுதியாக ஒரு கொசுறு தகவல்:
கமலாலயம் என்றாலே அந்தக் குளம்தான் எங்களுக்கெல்லாம் நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்த கமலாலயமோ ஏரியை மேடடித்த நிலத்தில் உருவானதுதான். ஏதோ கோயில் குளத்திற்கோ, சத்திரம் சாவடிக்கோ சொந்தமான நிலத்தில் உருவானதல்ல! இதில் யாதொரு சம்சயத்திற்கும் இடமளிக்க வேண்டாம்!
– ராமச்சந்திர வைத்தியநாத்