நூல் அறிமுகம்: என்.மாதவனின் ”காலந்தோறும் கல்வி” – தி.தாஜ் தீன்
நூல் : காலந்தோறும் கல்வி
ஆசிரியர் : என்.மாதவன்
விலை : ரூ.90/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
‘காலந்தோறும் கல்வி’
இந்நூல் நீண்ட நெடிய கல்வி வரலாற்றைச் சுருக்கமாக நான்கு பகுதிகளைக் கொண்டது. கடைசியாக பிற்சேர்க்கை என்னும் பகுதி கொண்டு ஆசிரியர்,கல்வியாளர் என்.மாதவன் எழுதியுள்ளார்.
முதல் பகுதியான “ கல்வி” என்னும் தலைப்பில் கல்வியின் நோக்கங்களையும், இந்த சமூகத்தில் கல்வியின் தேவையையும் விவரிக்கிறார். இச்சமூகத்தில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்கிறார். இந்த அதிகாரம் பரவலாக்கப்பட ஒரு நாட்டில் தழைக்கும் ஜனநாயகமும், கல்விப்பரவலுமே கை கொடுக்கிறது என்கிறார்.சில காலம் முன்புவரை படித்தவர்கள் ஏதேனும் தவறு செய்தால், பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்க இத நீ செய்யலாமா என்பார்கள். இதில் சமூகம் படித்தவர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டிருந்ததைக் காணலாம். ஆனால் சம காலத்தில் மிகப்பெரிய தவறுகளெல்லாம் படித்தவர்களாலேயே செய்யப்படுகிறது. எனவே கல்வி என்பது அதன் உண்மையான நோக்கங்களை அடைவதில் இருந்து விலகி வெறும் ஏட்டுக்கல்வியாக, மனப்பாடக் கல்வியாக வளர்ந்திருப்பது எதனால்? என்ற கேள்வியாலும், அதற்கான விடை தேடலுமாக முதலாவது அத்தியாயம்.
அறிவின் ஆணிவேராய் குடும்பங்களும், பள்ளிகளும் விளங்குவதை பதிவுசெய்கிறார். கல்வி என்பதை பள்ளிக்கூடம், ஆசிரியர், பாடப்புத்தகம் இவற்றையெல்லாம் தாண்டி யோசிப்பது, கல்வி என்பது பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து வருவது, சமூகத்தில் ஒருவரது நடத்தையினை மேம்படுத்துவதைக் கல்வியின் பல்வேறு குறிக்கோள்களில் முக்கியமானதாகப் பார்ப்பது, மேலும் அனைவரையும் தனிப்பட்ட முறையில் மதித்தாலும் நியாயத்திற்கும் அவரது கருத்துக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்வது முதலாவது அத்தியாயத்தில் தெளிவுபட எடுத்துரைக்கிறார்.
இரண்டாவது அத்தியாயம் “பள்ளிகளின் பரிணாமம்” என்பது, இதில் உலக நாடுகளில் மன்னராட்சி காலம் தொட்டு இப்போதைய மக்களாட்சி காலம் வரை பள்ளி என்னும் அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன. இதில் ஆரம்பத்தில் மன்னராட்சி முறையில் கல்விக்கு அடிப்படை தகுதியாக உடல் வலிமை, போர்ப்பயிற்சி போன்றவை இருந்ததையும், இந்தக் கல்வியும் சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினருக்கே கிடைத்ததையும் குறிப்பிடுகிறார். பிறகு 14-17 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இத்தாலியில் தோன்றி பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவிய மறுமலர்ச்சி காலத்தில் கல்வி சிறிது பரவலாக்கப்படுகிறது. இலக்கியம், தத்துவம், அரசியல், மதம், உள்ளிட்ட மனிதர்கள் தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் மறுமலர்ச்சியின் தாக்கம் ஆதிக்கம் செலுத்தியது. அடுத்து மத ரீதியான கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. உலகில் மதங்களின் தோற்றங்களோடு பல்வேறு விதமான சாதக, பாதக விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும்.ஒரு ஆரோக்கியமான விஷயம் என்னவென்றால், பல்வேறு மதம் தொடர்புடைய இடங்களும் மதம் தொடர்புடைய கல்வியினை வழங்கின. 1464 ன் தொடக்கத்தில் ஜான் கூட்டன்பர்க் வடிவமைத்த அச்சு இயந்திரம் கல்வி வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்தது. இதன் மூலம் அச்சடிக்கப்பட்ட பைபிளின் பிரதிகள் அதிகமானோரைச் சென்றடைந்தது. அடுத்து சமய சீர்திருத்தத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட மற்றொரு சமூக நிகழ்வான தொழிற்புரட்சியும் கல்வி பரவலுக்கான பணியின் ஒரு சிறு தொடக்கமாகக் கொள்ள முடியும் என்கிறார். உலக நாடுகளின் ஆரம்பக்கல்வி சட்டங்களையும் இந்த இரண்டாவது அத்தியாயத்தில் விளக்கியுள்ளார்.
மூன்றாவது பகுதி “இந்தியாவில் கல்விப் பரவல்” என்பதாகும்.மகாபாரதம் போன்ற புராண காப்பிய காலம் தொட்டு, பிராமணர்கள் மட்டுமே கற்பிக்கும் கற்கும் உரிமை பெற்றிருந்த வேத காலம், பிராமண ஆதிக்கத்திற்கெதிராக வெகுண்டெழுந்த புத்த, சமண கல்வி முறை, முஸ்லீம் மன்னர்களின் ஆட்சிக்காலத்திலிருந்த இஸ்லாமியக் கல்விமுறை. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பிருந்த திண்ணைப் பள்ளிகள் என நீண்ட நெடிய கல்வி வரலாற்றை இந்த அத்தியாயத்தில் சுருக்கமாக விவரித்துள்ளார். பிறகு ஆங்கில ஆட்சியில் கி.பி 1757 பிளாசிப் போருக்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சி வலுப்பட கல்கத்தா, மதராஸ் போன்ற இடங்களில் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. பின் 1813 ல் நிறைவேற்றப்பட்ட சாசனச்சட்டமானது இந்தியக்குழந்தைகளின் கல்விக்கு ஒரு லட்சம் ஒதுக்கப்படுகிறது. பின் மிஷனரி பள்ளிகள் கல்வி அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோகலே போன்றவர்கள் தொடக்கக் கல்விக்கு முன்னுரிமை அளித்து செயல்படுகின்றனர். பிறகு காந்தியும் இந்திய விடுதலையோடு கல்விக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதையும் அழகாகத் தொகுத்துத் தருகிறார். பிறகு சுதந்திர இந்தியாவில் சமீப காலம் வரை அனைவருக்கும் கல்வி அளிக்க இந்திய அரசு உருவாக்கிய சட்டங்களையும், அவர்களின் திட்டங்களையும் தொகுத்து பட்டியலிடுகிறார்.
நான்காவது பகுதி “தீர்வின் திசைவழியில்”
சமூகம் முழுமையும் தரமான கல்வி கற்று நல்ல சமூகம் அமைவதுதான் அனைவரின் லட்சியம் ஆகும். இது எளிமையான ஒன்று என தெரிந்தாலும் சுதந்திரம் அடைந்து பல ஆண்டாகியும் இன்னும் அந்த இலக்கை அடைய முடியாத நிலையில்தான் இருக்கிறோம். அனைவருக்கும் கல்வி என்ற லட்சியத்தை அடைய முடியாமல் அடுத்தடுத்த பத்தாண்டுகள் என தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறோம். இந்த இலக்கை அடைவதற்கான பல்வேறு காரணிகளான குழந்தைகள், குழந்தை தொழிலாளர் முறை, ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி மற்றும் தேர்வு முறை சீர்திருத்தம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்குகளைப் பற்றி இப்பகுதியில் விவரித்துள்ளார்.
ஆண்குழந்தைகளின் வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் வெளியே சுதந்திரமாக அனுமதிக்கப்படும் நிலையில், பெண் குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்படுகிறது என்ற பேராசிரியர் கிருஷ்ணகுமாரின் பெண்கல்வி குறித்த கவலையோடு நூலாசிரியரும் கவலை கொள்கிறார்.
“குழந்தைகளைத் தொழிலாளர்களாக அமர்த்தும் எண்ணம் நீடிக்கும்வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிப்பது சாத்தியமில்லாததே என்று சத்தியம் செய்கிறார்.
ஒட்டுமொத்தத்தில் இந்த நான்காம் பகுதி முழுவதும் கல்வியின் வளர்ச்சிக்கும், அனைத்து குழந்தைகளையும் கல்வி பெற வேண்டும் என்னும் இலக்கை அடையவும் ஒரு நல்ல கல்வியாளராய் ஆசிரியர் மாதவன் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
கடைசியாக பிற்சேர்க்கை என்னும் தலைப்பில் சுருக்கமாக தமிழ்நாட்டின்.கல்வி வரலாற்றைத் தந்துள்ளார். கல்விப் பரவலாக்கத்தில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முண்ணனியில் நிற்பதாகக் குறிப்பிடுகிறார். 1854ல் தாமஸ் மன்றோ காலத்தில் DPI என்னும் கல்வி இயக்குநரகம் உருவாக்கப்பட்டது. 1921ல் அமல்படுத்தப்பட்ட துவக்கக் கல்வி விதிகள், 1924 ல் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மட்டும் அமல்படுத்திப் பார்க்கப்பட்ட கட்டாய ஆரம்பக்கல்வி என சுதந்திரத்துக்கு முந்தைய தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றை விவரிக்கிறார். பின் சுதந்திரத்திற்குப் பிறகு காமராஜரின் மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆரின் சத்துணவு மற்றும் புத்தகம், காலணி, சீருடை போன்ற பள்ளி அவசியப் பொருள்கள் இலவசத் திட்டம், வயது வந்தோருக்கான கல்வி அளிக்கும் திட்டமான அறிவொளி இயக்கம் போன்றவற்றின் செயல்பாடுகளால் தமிழகம் மற்ற பல இந்திய மாநிலங்களை விட கல்வி பரவலாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதை சுருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.
– தி.தாஜ் தீன்
