Oh Engal Dhevane Poem by Adhirai. ஓ....எங்கள் தேவனே! கவிதை - ஆதிரை

ஓ….எங்கள் தேவனே! கவிதை – ஆதிரை




ஒரே தேவனை
விசுவசிக்கிறார்களா?

ரெட்டியார் கிறித்தவர்
முதலியார் கிறித்தவர்
செட்டியார் கிறித்தவர்
நாடார் கிறித்தவர்
வன்னிய கிறித்தவர்
படையாச்சி கிறித்தவர்
பிள்ளை கிறித்தவர்
மீனவ கிறித்தவர்
தலித் கிறித்தவர்…..

அட…டா…..
எத்தனை கிறித்தவர்!!!

ஒரே தேவனை
விசுவசிப்பவர்குள்
ஒன்பது….ஏசப்பா!

தூணிலும் இருக்கிறாய்
துரும்பிலும் இருக்கிறாய்….என்று
சொல்லிக் கொடுத்தார்கள் பாதிரிமார்கள்!

அதனால் தான்
சாதியிலும் இருக்கின்றாய்! சாதியாகவும்…
இருக்கின்றாயா?

தேவ மைந்தனே….
ஏசப்பா…..!

நீ எந்த கட்சியில்
இருக்கிறாய்….?

மனம் மாற காத்திருக்கும் மானுடத்திற்கு….
கொஞ்சம் சொல்லிவிடு
அவர்கள் எந்த
கிறித்துவை….
விசுவசிப்பதென்று?

உன் காலம் தொட்டு
இன்று வரை…ஆடுகள்
எல்லாம்….
ஆடுகளாகவே இருக்கின்றன!

மேய்ப்பர்கள் தான்
உனது இராட்சியத்தை
பரிபாலனம் செய்கிறார்கள் ஓநாய்களாக!

ஓ…எங்கள் தேவனே!
நல்ல பிதாவே!
இரங்கி வாரும்….!

வரும்போது..,
தனியாக வரவேண்டாம்!
இங்கே இருப்பது
ஒற்றை…..
யூதாஸ் அல்ல!