Pension Short Story by Jeyasri ஜெயஸ்ரீயின் ஓய்வூதியம் குறுங்கதை

ஓய்வூதியம் குறுங்கதை – ஜெயஸ்ரீ



ஈமச்சடங்குகளை எல்லாம் முடித்து. வெறுமையாய் இருந்த வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான் மதன். அவன் நிலையை உணர்ந்த காயத்திரி, “அப்பா எங்கயும் போகல.. நம்ம கூட தான் இருப்பாரு..”

“டாயிங் பண்ண போதேன்..” ஒரு டைரியும் ஒரு மூக்குக் கண்ணாடி பெட்டியும் கையில் பிடித்து தத்தக்கா பித்தக்கா என்ற மழலை நடையில் இரண்டரை வயது பால் மணம் மாறாத ஸ்ரீநிதி வந்து மதனின் மடியில் அமர்ந்தாள்.

“குட்டிம்மா.. இதெல்லாம் தாத்தாவோடது. தாத்தா உம்மாச்சி கிட்ட போய்டாங்க. இதெல்லாம் எடுத்தா கோபிச்சுக்குவாங்க. குடுத்துடு டா கண்ணு.. ”

அப்பாவின் உடலைக் கட்டிலில் இருந்து எடுக்கையில், அவரது தலையணைக்கு கீழே இருந்த டயரி அது. குழந்தையிடம் இருந்து வாங்கிப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தான் மதன் . பத்தாவது பக்கத்தில்.

“அன்பு மகன் மதன், காலன் பாசக்கயிறை கட்டிவிட்டான். எனது பென்ஷன் பணத்தை மாதா மாதம் என் பீரோ லாக்கரில் உள்ள அம்மாவின் கைப்பையில் போட்டு வைத்துள்ளேன். லாக்கர் சாவி என் மூக்குக் கண்ணாடி பாக்ஸில்
இருக்கிறது. ஸ்ரீநிதியை நன்றாக படிக்க வை.

இப்படிக்கு ராஜன்”

“அப்பா…. ஓவென்று அலறினான். லாக்கரில் எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் சுளையாக ஓய்வூதிய பணம் .

“ஐயோ… அப்பா.. பென்ஷன் பணம் எங்கே என்று எத்தனை முறை உங்களை திட்டி இருப்பேன். சாப்பாடு போடாமல் பட்டினி போட வைத்திருப்பேன்.
உன் அருமை புரியாமல் போனதே.. தலையிலடித்து கொண்டு கீழே விழுந்து அழுதான் மதன். அடம்பிடித்துக் கொண்டிருந்த ஸ்ரீநிதி அழுகையை நிறுத்தி மதன் அழுவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“தாத்தா.. உம்மாச்சி… என்று மழலையில் சொல்லிக் கொண்டே மதனை குனிந்து உற்று நோக்கினாள்.