Nithi Short Story by Jayasri ஜெயஸ்ரீயின் நிதி குறுங்கதை

நிதி குறுங்கதை – ஜெயஸ்ரீ




அன்று வியாழக்கிழமை. மறுநாள் ஆடி வெள்ளி என்பதால் மார்க்கெட்டில் பூ வியாபாரம் பலத்த போட்டியோடு ஓடிக் கொண்டிருந்தது. குமாருக்கும் காமாட்சி பாட்டிக்கும் இடையில் கடுமையான போட்டி.

“ஜாதி மல்லி.. மொழம் இருபது ரூபா.. பன்னீர் ரோசா பாரு செக்கச்செவேல்னு ஒரு கவர் பத்து ரூபா..” குமார் குரலிட.

பதிலுக்கு காமாட்சி பாட்டி “வாம்மா வாம்மா.. இரண்டு மொழம் முப்பது ரூபா மல்லி.. நல்ல மொட்டா கமகமன்னு இருக்கு பாரு. கவர் பத்து ரூபா..” என்று குறலிட்டாள். மாலை ஆறறை மணி. வானம் இளங்கதிரவனை வழியனுப்பிக் கொண்டிருந்தது. அன்று குமாரின் மொத்த பூவும் விற்றுத் தீர்ந்து விட..

“என்ன பாட்டி.. இன்னிக்கி கிராக்கி அவ்ளோ தான் போல… வழக்கம் போல ஓரு போட்டோவயும் அந்த ஸ்டீல் டப்பாவையும் வச்சி குறுகுறுன்னு பாத்திட்டு இருப்பியே.. இந்தா என் காசுல வாங்குன டீ.. சும்மா குடி பரவால்ல…” குமார் டீ வாங்கிக் குடித்தான்.

அமைதியாக. டீ வேண்டாம் என தலையசைத்து. பர்சில் வைத்திருந்த ஒரு போட்டோவையும் ஸ்டீல் டப்பாவையும் திறந்து பார்த்து. நிதானம் இழந்த குமார். காமாட்சியின் கையில் இருந்த போட்டோவை பிடுங்கி பார்த்தான். அதில் ராணுவ உடையுடன் ஒருவனின் இறுதி அஞ்சலி புகைப்படம்.

“பட்டாளத்துல செத்த எம்மவன்”

வேகமாய் ஸ்டீல் டப்பாவை திருப்பிப் பார்த்தான். அதன் மீது “கொடி நாள் நிதி” என்று எழுதப்பட்டிருந்தது.

“கடைசி காலத்துல இந்தக் கிழவியால முடிஞ்சது.”

“ஏ.. ஆத்தா… நில்லு..” தன் பங்குக்கு ஸ்டீல் டப்பாவில் அன்றைய தினம் வந்த ரொக்கத்தை டப்பாவில் போட்டான் குமார்.

“நல்லா இரு கண்ணு”. காமாட்சி புறப்பட்டாள்.