Karkaviyin Kavithaigal 12 கார்கவியின் கவிதைகள் 12

கார்கவியின் கவிதைகள்

வயது தடையில்லை
*************************
முகம் மறைத்த
வெண்நறையை
இதழ் பிதுக்கி
ஊதிய நொடிகளில்
விட்டுப்போன
நம்பிக்கையும்
கடந்து போன நேற்றும்
காற்றோடு பறந்து விடுகிறது…..!

நடைபாதை வழியெல்லாம்
உன் இழப்புகளை
எல்லைக்கல்லாய்
செருகி வைக்க
ஏதாவது ஒன்றின்
மேல் அமர்ந்து பூர்த்தி செய்கிறது
வயதின் விடாமுயற்சி பயணம் தனை……!

நீர் நிறைந்த குளத்தில்
நீந்தியாட துடிக்கும்
வயதிற்கு
கைத்தாங்கலாக கொடுக்கப்பட்டது தடி
எடுத்தெறிந்து வா
இயல்பாக வாழ
வயது தடையில்லை…….!

இளமையோடு
போட்டியிடும்
நாளையது வயதினில்
புது கதவினை திறந்திடலாம் உலகை -என்றும்
வயது தடையில்லை…

எத்தனை நாம்
******************
துண்டு துண்டாக
வெட்டப்பட்ட
நீர்க்குழாயில்
துண்டுபடாமல்
கோர்த்து செல்கிறது
நீரோட்டம்………………………
நிரந்தரமில்லாத
நீ எம்மாத்ரம்…………………
எத்துணை
திருப்பங்கள் இருப்பினும்
கைக்கோர்த்து
நடைபோடுகிறது
நீர்சுழிகள்…………………
நீ
நான்
எத்தனை நாம்……………….

மண்ணும் மங்கையரும்
****************************
நீ நமிர்ந்த பார்த்த தருணத்தில்
நிச்சயம் கொட்டும் வான்மழை
நீ வளர்த்த சிறு பூச்செடிக்கு
சாரலை கொடுக்கும் அந்த மர சன்னல்

உழவாடும் வயல் வெளிகள் தாகம் சுரந்தது
நீ ஊற்றிய நீர் இனிப்பாய்
வரப்புகளுக்கு எடையேற்றிய உன் நடை
நீ குனிந்து பறித்த அந்த இயற்கை

பாதங்களை விட்டுச்செல்லும் உன் பாலை
நண்டுகளின் வரிசையில் உன் நெய்தல்
வரப்போரம் சாகுபடியில்
உன் மருதம்
ஓங்கிய அழகாய்
உன் முல்லை
சூடிக்கொள்ள நீ ஏற்கும் குறிஞ்சி

ஆறடியில் அழகை ஏற்க காத்திருக்கும் மண்
அடையாத ஏக்கத்தில் காலம் முடிக்கும் பெண்
வழியில்லை வழியுண்டு மண்ணில் பிறந்த மங்கையற்கு

சிந்தனை 1000
******************
நீ
சரியென்றாலும்
தலையாட்டும்
தவறென்றாலும்
தலையாட்டும்
நீ நம்பகமானவனாக இருந்தால்
இன்று தோளில்
உயர்த்தப்பட்ட
நீ
நாளை காலின்கீழ்
வைக்கப்பட வெகு நாள்
இல்லை

உன்குறைகளை பேசும்
அவர்
அவர் குறைகளை மட்டும்
கண்ணைக்கட்டிக் கொண்டு
வரையறுப்பதுதான் சிரிப்பு

உன் புரிதலில்லாத
மனதிற்கு நான்
சரி என்று
ஏற்றுக்கொள்ளும்
தவறைவிட
உன்னை நான் எப்படி
திருப்தி செய்துவிட முடியும்

Karattan Kavithai By Era. Kalaiyarasi இரா. கலையரசியின் கரட்டான் கவிதை

கரட்டான் கவிதை – இரா. கலையரசி

வேலியில் தவழ்ந்து வந்த
வயதான கரட்டான் ஒன்று
கண்களை சுருக்கிக் கொண்டது.
தடித்த கண்கள் கோலிகுண்டாக
வறண்டு வாடிய நாக்கை நீட்டியது.

தொண்டைகுழி விட்டு விட்டு துடிக்க
மீனின் செதிலாய் தோல் சொரசொரக்க
நகர மறுத்து உடம்பு நிற்கிறது.
பொடைத்த கண்கள்” வாங்கிய
அடியில் வீங்கி பருத்து இருக்கிறது.

பழத்தைக் கொரித்த அணில் ஒன்று
பயத்தில் பதுங்கி நிற்க,
கீச்சு குரலில் ரகசியம் பேசியது.
“பேயி பேயி”னு ஓட எத்தனிக்க
விழ இருந்த அணிலை
முதிர்ந்த கைகள் தாங்கின.

அம்மா நினைவுக்கு வந்துசேர
ஆசையாய் பார்த்தது குட்டிஅணில்.
பழுத்த பழத்தினை பார்த்த மகிழ்வாய்
முரட்டு கரட்டானை தொட்டு பார்க்க
“மெல்லிய அணிலின்” கைகள் படர
அணிலை அணைத்தபடி
தரைக்கு உயிரை தந்தது.