நூல் அறிமுகம்: ஓல்கா வின் தொடுவானம் தொட்டுவிடும் தூரம் தமிழில்: கெளரி கிருபானந்தன் – ச.குமரவேல்

நூல் அறிமுகம்: ஓல்கா வின் தொடுவானம் தொட்டுவிடும் தூரம் தமிழில்: கெளரி கிருபானந்தன் – ச.குமரவேல்




நூல் : தொடுவானம் தொட்டுவிடும் தூரம்
ஆசிரியர் : ஓல்கா
தமிழில் : கெளரி கிருபானந்தன்
விலை : ரூ.₹160/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

நீ மிகவும் அழகானவள், மென்மை தான் உன் பெண்மையை இந்த உலகிற்கு உணர்த்தும், பெண் என்றால் ஒரு குடும்பத்திற்கு குலதெய்வம் போன்றவள், பெண்கள் தான் இந்த நாட்டின் கண்கள் அதை நீ புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என பெண் என்பவள் ஒரு சக மனிஷி என்பதை கடந்து இந்த சமூகத்தில் பெண்ணுக்கான அடையாளங்களாக குறிப்பிடப்படும் பெரும்பான்மையானவை அபத்தமானவை

இந்திய பெண்களின் வாழ்நிலை தற்போது முந்தைய நிலையில் இருந்து சற்று மாறி இருக்கிறது என்றாலும் அது போதுமானதா என்றால் இல்லை.
இன்றளவும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது கொரோனா காலம் அதனை மேலும் அதிகமாக்கி உள்ளது.

அப்படி காலம் காலமாக பெண்கள் மீது ஏவப்படும் குடும்ப வன்முறைகளும், தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதே தெரியாமல் இருக்கும் அவர்களின் பரிதாப நிலையையும், ஒரு பெண் என்பவள் யார் அவளுக்கான உணர்வுகள் இங்கு என்னவாக இருக்கிறது அவை எவ்வாறு மாற வேண்டும் என்பன பற்றியும் நிதானமாகவும் அழுத்தமாகவும் உரையாடுகிறார் தொடுவானம் தொட்டுவிடும் தூரம் நூலின் ஆசிரியர் ஓல்கா. தெலுங்கு மூலத்தில் வந்த இந்நாவலை தமிழில் கௌரி கிருபானந்தன் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.

ஒரு வீடு, வீட்டில் இருக்கும் கணவன் தன்னுடைய இரு மகள்கள் மற்றும் வீட்டிலிருக்கும் அலமாரிகளும் வீடுகள் நிரம்பிய பொருட்களும் தோட்டத்துச் செடிகளும் இவைகளை பராமரிப்பதும் இவர்களுக்கு தேவையானவற்றை செய்வதும்தான் தன்னுடைய உலகம் என வாழ்கிற ஒரு நடுத்தர வயதுடைய பெண் வசந்தி,

ஒரு பெண் என்பவளுக்கு இந்த சமூகம் எந்த மாதிரியான கட்டுக்கதையான பிம்பங்களை எல்லாம் அள்ளித் தெளித்து இருக்கிறதோ அதனை அனைத்தும் தன்னகத்தே கொண்ட இந்திய குடும்ப தலைவி அவள்.

கணவன் ஒரு மருத்துவர், உயர்கல்வி பயிலும் இரு மகள்கள் இருக்கிறார்கள் இந்த மூவரை விட்டால் அவளுக்கு உலகம் என்பது வேறு எதுவுமே இல்லை, குடும்பமும் தான் தன்னுடைய வாழ்க்கை அர்த்தம் என மிக ஆழமாக நம்புபவள், அப்படி வாழ்ந்த ஒரு பெண்ணின் நம்பிக்கை சில்லு சில்லாக ஒரு நாள் உடைந்து போகிறது அதன் பின் வசந்தி என்னவானாள் என்பதை தான் நாவல் அழுத்தமாக பேசுகிறது.

தன்னுடைய கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் நட்பு இருக்கிறது என்று தெரிந்தவுடன் வசந்தி உடைந்து நொறுங்குவதும் தன் கணவனை மீண்டும் தமக்கு மட்டுமே உரியவனாக மாற்ற வேண்டும் என அவள் எடுக்கும் முயற்சிகளும் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்ற பின் அவள் மீண்டும் மீண்டும் உடைந்து உடைந்து நொறுங்குவதும் என அந்த கதாபாத்திரம் சாட் சாத் நம்ம ஊர் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று வாழ்கிற பெண்களை நினைவூட்டுக்கிறது.

தன்னுடைய சக தோழிகளில் ஒருத்தியின் வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ள மறுப்பது பின் அதன் ஆழத்தைப் புரிந்து கொண்டு அவளை அரவணிப்பது, தான் பெரிதும் எதிர்பார்த்த மூத்த மகள் தனக்கு துணையாக நிற்பாள் என்று எதிர்பார்த்த போது அவள் உதவாமல் போனது, சிறுவயதிலிருந்தே தனக்காக ஒரு வார்த்தை கூட உதிர்க்க மாட்டாள் என நினைத்திருந்த இளைய மகள் உதவுவது என, எதிர்பார்ப்புகள் அனைத்தும் கரைவதும் அதனால் நொறுங்கி போதுமாக இருக்கும் அதே வேளையில் எதிர்பாராமல் கிடைக்கும் அரவணைப்பை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறும் வசந்தி கதாபாத்திரம் வாசிப்போரை நிகழ்காலத்தோடு பொருந்தி பார்க்க வைக்கும்

தன்னுடைய இளையமகள் ஒரு சோசலிசவாசி என்பதை அறிந்து திகைப்பதும், பின் வசந்தி அவர்களில் ஒருவராக மாறுவதும், குடும்பத்தால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பது தன்னுடைய சொந்த மகளுக்கு குழந்தை பிறந்தபோது அந்த குழந்தையை பராமரிக்க அழைத்த பொழுது செல்ல மறுப்பதும் என வசந்தியை சந்திக்கிற அத்தனை கதாபாத்திரங்களும் நம் சமூகத்தில் தினம் தினம் நாம் பார்ப்பவர்கள் தான்.

காலமாக பெண்கள் தன்னுடைய சொந்த குடும்பத்தாலே சுரண்டப்படுவதும் ஒரு உறவு முறையில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கத் தேவையில்லை , திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் வாழ்வு இல்லை இதனைக் கடந்தது வாழ்வு என்பதையும் அழகாக அழுத்தமாக சொல்லுகிறது நாவல்.

நாம் பரவலாக பயன்படுத்தும் வாட்சப் பார்வேர்டு செய்தி ஒன்று உள்ளது அதில் நேர்முகத் தேர்வுக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய மகன் மழையில் நனைந்தபடியே வந்திருக்கிறான் வீட்டில் உள்ள அப்பா தங்கை அண்ணன் எல்லோரும் வேலை நேர்முகத்தேர்வு பற்றி கேட்க அவனுடைய தாய் மட்டும் அவனை சாப்பிட்டாயா என்று கேட்டால் என அந்த குறுஞ்செய்தி முடியும். இன்றும் வாட்ஸ் அப்பில் அந்த செய்தி பரவுவதை நாம் பார்த்திருப்போம்.
அம்மா என்றால் இப்படிதான் என மிகைப்படுத்தப்பட்ட உணர்வுகளின் பெயரால் பெண்களை அமுக்கி வைக்கப்படுவதை கூர்மையாக விமர்சிக்கிறார் நூலாசிரியர் ஓல்கா.

பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என இந்த சமூகம் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் ஆணாதிக்க நயவஞ்சக குரலை மிகக் கூர்மையாக விமர்சிப்பதோடு ஒரு பெண் ஒரு வேலை திருமண வாழ்வு தோற்றுவிட்டால் இந்த சமூகம் அவளை எவ்வாறு பார்க்கிறது என்பது பற்றியும் அப்படியான பெண்கள் சகஜமாக ஒரு சுதந்திர வாழ்வை வாழ்வதற்கு உள்ள தடைகளையும் அதில் உள்ள சவால்களையும் நாவலாசிரியர் சுட்டிக்காட்டி உள்ளார். எல்லாவற்றையும் மீறி அவர்கள் பொது வாழ்விற்கும் வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஒரு மொழிபெயர்ப்பு நூலை வாசிக்கிறோம் என்ற உணர்வே தெரியாத அளவுக்கு நேரடியாக தமிழில் வந்த நாவலைப்போல் மொழிபெயர்த்த கெளரி கிருபானந்தன் அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

யாரோ ஒருவர் வந்து விடுதலை கொடுப்பதற்கு பெண்கள் யாருக்கும் அடிமை இல்லை என்பதை அழுத்தமாக சொல்லும் அதே வேளையில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதையும் அவர்கள் நடத்தப்படும் விதத்தையும் அவர்களாகவே தங்களுக்குள் பெண்ணென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நம்பப்பட வைத்துள்ளதையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

மனைவி அம்மா சகோதரி சித்தி பாட்டி இப்படியான பலதரப்பட்ட உறவுகளை அடையாளங்களாக கொண்ட பெண் என்பவள் இந்த உறவுகளுக்கெல்லாம் கடந்து எல்லா உணர்வுகளையும் கொண்ட ஒரு ஆணைப் போல ஒரு சக மனித என்பதை இந்த சமூகம் உணர்ந்து பெண்களுக்கான இடத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என பேசி செல்கிறது நாவல்.

தொடுவானம் தொட்டுவிடும் இலக்கை நோக்கி உரையாடல்

ச.குமரவேல்
மாநில செயற்குழு SFI