Olivannan Gopalakrishnan (கோ.‌ ஒளிவண்ணன்) Olivannan Sirukathaigal (கோ.‌ ஒளிவண்ணன் சிறுகதைகள்) Book Review By Harsha Manokar

நூல் அறிமுகம்: *கோ.‌ ஒளிவண்ணன் சிறுகதைகள்* – அர்ஷா மனோகர்



கோ.‌ ஒளிவண்ணன் சிறுகதைகள்
கோ.‌ ஒளிவண்ணன்
எழிலினி பதிப்பகம்
விலை: ரூ. 330

ஒவ்வொரு நிகழ் நொடிகளிலும் , நம்மைச் சுற்றி நூறு கதைகள் நிகழ்கின்றன, காட்சிகள் எல்லோருக்கும் காட்டப்படுகிறது, ஆனால் எழுத்தாளருக்கே அதனுள் ஊடுருவிச் சென்று , அதன் அடிநாத்தை தொட்டு எழுத்துருவாக்க முடிகிறது.

பொதுவாகச் சிறுகதைகள் பொழுதுபோக்கு அம்சமாக இல்லாமல், நடைமுறை நிகழ்வுகளுக்கு புதிய மாற்றுச் சிந்தனைகளை விதைக்கின்றது.

எழுத்தாளர் விதைக்கின்ற விதைகள், வாசகன் மனதில் விருட்சமாக, ஆட்கொள்ள வைப்பதும், அரை மணிநேர வாசிப்பு அளவற்ற உணர்வலைகளைத் தூண்டி, சில நிமிடங்கள் சிலையாய் உறைய வைப்பதும், பட்டாம்பூச்சியாய் பறக்க வைப்பதும் சிறந்த சிறுகதைகள் ஆகும்.

அத்தகைய உத்திகள் அனைத்தும் நிறைந்த , உணர்களின் விளைநிலத்துள் ஊடுருவி நம் ஆழ் மன எண்ணங்களைக் கதைக்குள் நுட்பமாக விவரிக்கும் ஓர் எழுத்தாளர் சிறுகதை உலகில், பிரவேசிக்க ஆரம்பித்து விட்டார், என்பதே ‘ஒளிவண்ணன் சிறுகதைகள்’ வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான முதன்மை செய்தி.

ஆன்டன் செகாவ் சொல்வதுபோல் எளிய கருவையும், எளிய மனிதர்களின், பல்வேறுபட்ட உணர்ச்சிக் குவியலைச் சுருக்கமாகவும் சுருக்கென்று சொல்லும் கதைகள் சிறந்த சிறுகதைகள். அத்தகைய தகுதி பெற்ற 15 கதைகளை இத்தொகுப்பில் பார்க்க முடிகிறது.

*காயத்ரி மாமியும் பர்மா ஊஞ்சலும்*

நம் சமுகத்தின், அழிவுக்கும் இழிவிற்குமான காரணியே சாதிய பாகுபாடு. அவற்றைக் கடந்த நல் உறவுகளை நகரங்களில் பரவலாகப் பார்க்க முடியும். அத்தகைய வேறுபாட்டைக் கடந்த உறவாக , இனிய நட்பாகப் பயணிக்கிறது கதை.

காயத்ரி மாமியின் மீது கொண்ட அன்பின் மிகுதியால், அவள் மகள் நந்தினியை மணக்க விரும்புகிறான் ஆனந்த், அவனது ஆசை முற்றாக மறுக்கப்படுகிறது, சாதிய வேறுபாடே காரணம் என்று நினைக்கிறான். உண்மை காரணத்தை அறிந்த ஆனந்த் மேலும் மாமி மீது அன்பு மழை பொழிகிறான். காயத்ரி மாமி இறந்து போகிறாள். இடிந்துபோன ஆனந்த்திற்கு மாமி வீட்டு ஊஞ்சலே ஆறுதலாகிறது.

நுட்பமான உணர்வுகளின் சிக்கலாக நிறைவடைகிறது,
எந்தவிதமான உறவோ, ரத்த பந்தமும் இன்றி, சிலரோடு நமக்கு இருக்கும் ஆழமான அன்பும், அதற்குள் ஒளிந்திருக்கும் நெகிழ்ச்சியான தருணங்களையும் வாசிக்கும் போது, மாமியின் மறைவு ஆனந்தை மட்டுமல்ல வாசகனையும் கலங்க வைக்கிறது.

இக்கதை நம்முள் கடத்திய உணர்வலைகளைக் கடந்து, அடுத்த கதைக்குள் நுழைய அவகாசம் தேவைப்படுகிறது.

*அன்பரசியின் கைப்பேசி*

வாழ்க்கையில் நாம் சந்தித்த மனிதர்களுள், மறக்கமுடியாதவர்கள் l என்ற பட்டியலில் முதலிடம் எப்பொழுதுமே நம் ஆசிரியருக்குத்தான். ஆசிரியர்களை மறந்தவர்கள் நம்மில் யாரும் இருக்க முடியாது.

கல்வி நிலை உயர உயர, ஆசிரியர் மீதான பணிவும் பக்தியும் படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. சமுதாயத்தில் நல்வழி காட்டுவதில் அன்னைக்கு அடுத்தபடியாக ஆசிரியர் தான் முதலிடம் வகிக்கிறார், ஆனால் துரதிருஷ்டவசமாக, ஆசிரியரிடமிருந்து விலகி மாணவர்கள் தமது சோக அத்தியாயத்தைத் தொடங்குகிறார்கள். இந்த முரண் காலத்தாலும் மாற்ற முடியாமல், இன்றைய இணையவழி கல்வி மேலும் அபாயகரமாக முற்றிலும் ஆசிரியர் மாணவர் உறவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுமோ என்ற அச்சமும் எழுகிறது.

‘ஒன்றைச் செய்ய விரும்புகிறபோது அதைச் செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும் ‘ என்கிறார் பெருந்தலைவர் காமராஜர்.

அத்தகைய உயர் மனநிலையோடும் உயரிய கண்காணிப்போடும், பணியாற்றும் பெண் ஆசிரியை கதையின் நாயகி செண்பகம்.

தன் சமுகத்திற்கு தன்னாலானதைச் செய்து அவர்களை, கல்வியில் முதலிடத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்ற சுயநலமற்ற ஓர் ஆசிரியை, சில சந்தர்ப்ப சூழ்நிலையால் நிதானம் இழந்து பின், அதனைச் சரி செய்ய எடுக்கும் முயற்சிகளோடு நகர்கிறது கதை.

ஆசிரியையின் பதட்டங்களையும் குழப்பங்களையும், வாசகனுக்குள் கடத்தி அன்பரசி வீட்டிற்கு ஈக்காட்டுதாங்கல், கடை வீதிகளைக் கடந்து அம்பேத்கர் சிலை, தேநீர்க் கடை தாண்டி பல்வேறு புதிய மனிதர்களை அறிமுகம் செய்து கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் எழுத்தாளர்.

கதைக்கள விவரிப்பு என்பது வாசகர்களை கதைமாந்தராகவே மாற்றிவிடும், அபாரமான எழுத்து நடையில்.
கதைக்கு மேலும் சுவாரசியம் சேர்ப்பது இக்கதையின் சம்பவக் கோர்வைகள். சிறுகதை எழுத்துலகில் ஜாம்பவான்கள் வரிசையில், ஒளிவண்ணன் அவர்கள் தனக்கென ஒரு தனி இடத்தை கைப்பற்றி விடுவார், என்பதற்கு சான்று பகிர்கிறது “அன்பரசியின் கைப்பேசி” கதையின் நடையும் முடிவும்.

கோ. ஒளிவண்ணன் சிறுகதைகள் – Emerald

*பிரெஞ்ச் கிஸ்*

ஆரம்பித்தது முதல் இறுதிவரை தொடர் ஓட்டம்.
நாயகி எடுக்கும் அதிரடி முடிவுகள்,
கதை பேசும் பல்வேறு சமுக சிக்கல்கள்,
உலகின் அனைத்து மூலையிலும் உணர்ச்சிகளுக்கு எந்த வேறுபாடுமில்லை, உணர்வுகளை புரிந்து கொள்ள மொழி அவசியமும் இல்லை, என்கிறது தூய நட்போடு நகர்ந்த “பிரெஞ்ச் கிஸ்.

சாதி மத பேதங்கள் சரியான துணையைக்கூட தேர்வுசெய்ய முடியாமல் முட்டுக்கட்டையாக இருப்பதை சுட்டிக்காட்டி , பெண்கள் அச்சம் மடம் நாணங்களில் கட்டுண்டு கிடக்காமல் பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொண்டு வென்றுவர வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக எடுத்துச்சொல்லி ,
வாழ்க்கை எப்போதும் முடிந்து போவதில்லை , அது எல்லா துயரங்களுக்கும் சோதனைகளுக்கும் பின்பும் , முன்பைவிடவும் புதிதாகவும் சிறப்பாகவும் தொடரும் என்ற நம்பிக்கையை விதைத்து
வாசிப்பை பயனுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவுமாக்குகின்றது இக்கதை.

கதைமாந்தர்களின் மொழி, உணவுப் பழக்கமும், கதைக்கள விவரிப்பும் கதைக்கு மேலும் மெருகூட்டுகிறது.

காதலனைப் பிரிந்து பெற்றோர் விருப்பத்திற்கிணங்க திருமணம் செய்து, கணவனோடு பாரிஸ் செல்லும் நாயகி, விமான நிலையத்திலேயே போலீஸ்் கணவனைக் கைது செய்ய, செய்வதறியாது நிலைகுலைந்து, பின் நட்புகளின் துணையோடு, நாடு திரும்புகிறாள்.

விமான நிலையத்தில், நாயகியோடு சேர்ந்து வாசகனையும் ஓட வைக்கிறார் ஒளிவண்ணன். இறுதியில் நாயகியின் முற்போக்கான எண்ணங்களோடு, இப்படியாகுமோ அப்படி ஆகுமோ என்ற வாசகனின் எண்ணங்களுக்கு அவனது கற்பனைக் காண இடைவெளி விட்டு, கதையை நிறைவு
செய்திருப்பது சீரிய எழுத்து நடையின் வெளிப்பாடு.

ரம்யா போன்ற தனித் தன்மை கொண்ட கதை மாந்தர்களைப் பார்க்கும் போது , யார் இந்த எழுத்தாளர்..? என்ற தேடல் எழுந்தது.இது கதை அல்ல, பெற்றோர். புரிந்து கொள்ள வேண்டிய படிப்பினை.

*எக்ஸ்க்யூஸ் மீ எங்க வீடு எங்க இருக்கு.*

எனக்கு திடீரென்று ஒரு பிரச்சனை வீட்டுக்கு எப்படி போறது …எவ்வளவோ யோசித்துப் பார்த்தாலும் எங்க வீடு எங்க இருக்குன்னு நினைவுக்கு வரல….. “என்று தொடங்குகிறது, கதைக்கான விதை.

‘எங்க வீடு எங்க இருக்குன்னு நானே எப்படி கேட்க முடியும்’ என்னடா இது கதை ஒன்றும் விளங்கவில்லையே எனக் கண்கள் அடுத்த வரிகளில் பயணிக்க.

விழிகளை உருட்டி, தலை சொரிந்து உதடு பிதுக்கி தன் பயணப் பாதையை நினைவுப் பெட்டகத்தில் தேடிக்கொண்டிருக்கும்,
தொடக்கநிலை அல்சீமர் நோயாளி‌ யாகப்
பெரியவர்,

நைனா நீ எங்க போகணும் சொல்லு….’ என்ற சிங்காரச் சென்னை ஆட்டோ வாசிகளின் அரவணைக்கும் குரல், டீக்கடையில் பட்டர் பிஸ்கட்டோடு ஆரம்பிக்கிறது.

ஆட்டோகாரர் கதை நாயகனுக்கு மிடையிலான உரையாடலில், வயோதிப காலத்தில் ஏற்படக்கூடிய உளவியல் சிக்கல்களை , நடுத்தர வர்க்க குடும்பங்களில் ஏற்படக்கூடிய, யதார்த்த நிலையை விவரித்து, இவையெல்லாம் முதுமையின் சில சாபங்களோ என்று நினைக்கத் தோன்றினாலும்,

நித்திய வாழ்வின் வலிகளைச் சுமந்த மனிதர்களும், சற்றே அன்பின் நிழலில் இளைப்பாற, பிரதிபலன் எதிர்பாராத அமிர்த ஊற்றாய் அன்பு சொரியும் ஆட்டோ ஓட்டுநர் போன்ற மனிதர்களைப் பார்ப்பதும், யதார்த்தம் அதுதானே என்று மனதைத் தேற்றிக் கொண்டு முதியோர் இல்லங்கள் முதியவர்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருகின்ற இடமாகவே இன்றைய காலத்தில் மாறிவருகின்றன.

அதை நாம் இயல்பாக ஏற்றுக் கொள்வதே நலம் என்பதாக முடியும் தொகுப்பின் மிகச் சிறிய மனதைத் தொட்ட கதை.

*மூணு பவுன் சங்கிலி*

முதல் வரியிலேயே, எழுத்தாளரின் வலைக்குள் வாசகனைச் சிக்க வைக்க வேண்டும் என்பதே சிறுகதையின் முதல் பத்திக்கான சவால், அந்த மந்திர வித்தையை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்
ஒளிவண்ணன்.

பொதுவாக எதிர்மறையான மன உணர்வுகள், வாசகனுள் அடுத்தது என்ன..என்ற ஆர்வத்தை எளிதாகத் தூண்டிவிடும்.

இவ்வுத்தியைக் கச்சிதமாகக் கையாண்டு வாசகனை முதல் பத்தியிலேயே ஈர்த்துவிடுகிறது
‘3 பவுன் சங்கிலி….” எதிர்மறையான பாண்டியன் எனும் கதாபாத்திரம் சிறப்பாகக் கதையை நகர்த்திச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழ், முத்து, விஜய் மூவரும், அனுபவித்த வலிகள் அடியும் உதையும் பாவம் சிக்கக் கூடாத இடத்தில் சிக்கி விட்டார்கள் என்ற மனதின் தவிப்போடு கதை நகர்கிறது.

தடுப்புக் காவலில் வைக்கப்படும் மூவருக்கும் எதிராக நிகழ்த்தப்படும் ஒவ்வொரு சம்பவங்களும் கதை முடிவுக்கு அச்சாரம் இட்டுச் செல்வதைப் பார்க்க முடிகிறது.

கதாசிரியரின் கதைத் திட்டமிடலை இங்கே பாராட்டியாகவேண்டும். அடைமழையில் அடிபட்டுக் கிடக்கும் நாய்க்குட்டியைக் கவனியாது வண்டி வேகமாகச் செலவது போல், வருடத்திற்கு ஒரு முறை வந்து செல்லும் ஈழக் குடும்பம் மனதை வெகுவாக நெருடியது.

செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள என்னென்ன வகையில் வன்முறையையும் அத்துமீறல்களையும் காட்டமுடியுமோ, அவற்றை அதிகாரத்திலுள்ளோர் எந்தத் தயக்கமின்றி செய்யத் துணியும் துன்புறுத்தல்கள்.

கதைமாந்தர்களின் இன்றைய நிலை கூறும், கடைசி வரிகள் வலியின் உச்சக்கட்டம்.

சமீபகால செய்திகள், ஆசிரியரை இக்கதை எழுதத் தூண்டியிருக்கலாம், தன் இனத்தின் மீது திணிக்கப்படும் வன்முறைகள்,
ஆசிரியரின் மனக்குமுறல்கள் சமுதாய அக்கறையும் சிறப்பாக வெளிப்படுகின்ற உயிரோட்டமுள்ள சமூகத்தின் கன்னத்தில் அறைந்த கதை.

G. Olivannan… profile – olivannan
கோ.‌ ஒளிவண்ணன் (Olivannan Gopalakrishnan)

*அபர்ணா*

வாசகனை அதிகாலை 4:00 மணிக்கு எழுப்பி தரதரவென மூச்சிரைக்க இழு
த்துச் சென்று, “அப்பாடா…”, என்று சொல்லவைக்கும் கதை.

தன்நிலையலிருந்து கதை நகர்வதால்
கதையின் நாயகன் வாசகன் ஆகிறான்.

அப்பப்பா எத்தனை பதட்டம் எத்தனை போராட்டம் எத்தனை சிக்கல்கள் எல்லாவற்றுக்கும் தீர்வு எங்கனம் காண்பேன் என்று சமுதாய சிக்கல்களைப் பேசி கதற வைத்துவிட்டார்.

அபர்ணா , ராய் இருவரும் லிவிங் டுகெதரில் ஒரே வீட்டில் வாழ, ராய் திடீரென்று மாரடைப்பால் மறைந்து விடுகிறான். அடுக்குமாடிக்குடியிருப்பில் இருந்து அபர்ணா விரட்டியடிக்கப் படுகிறாள். விபத்தில் தன் முழுக் குடும்பத்தையும் இழந்து அனாதையாக இருந்த அபர்ணாவுக்கு ராய் தவிர வேறு எந்தத் துணையும் இல்லாத நிலையில் ராயின் மறைவால் தவித்துப் போய் விடுகிறாள்,

ராயின் குடும்பத்திடமிருந்து நாயகி தனக்கான, உரிமைகளைப் பெறுதலே இக்கதையின் நகர்வாக இருக்கிறது.

புரஃபஸராக நாம், மிகச்சிறந்த கதை மாந்தராக, பயணிக்க.

லிவிங் டு கதர் வாழ்க்கை முறை முற்போக்கான சிந்தனை, சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த பெண்களின் மீதான வன்முறைகளுக்கு, நியாயப்படுத்தக் கூடிய புதிய வழியாக இருந்தாலும், இந்த வழியிலும் ஆண்களை விடப் பெண்களுக்குப் பாதிப்பு அதிகம் என்பதால் பெண்கள் எவ்வாறான நிலைகளில் தமது இருத்தலை நிலைப்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்ற சட்ட ரீதியான அணுகுமுறைகளை சமூகத்திற்குச் சொல்கிறார் எழுத்தாளர்.

*தண்டனை*

வாசிப்பிற்கு முன்-பின் வாசகனின், உணர்வுகள் கிளர்ந்தெழலாம். சில படைப்புகள் கரைந்து காணாமல் போகலாம். புதிய சிந்தனைகளைக் கிளரச் செய்கிறது தண்டனை.

உடல் உரசலை உண்மை காதல் எனப் புரிந்து கொண்ட நந்தினி, உயிருக்கு உயிராக பிரசாத்தை நேசித்து அவன் ஏமாற்றி விட்டான் என்பதைத் தெரிந்து கொண்டபோது தற்கொலைக்கு முயல்கிறாள்.

முள் மேல் சேலை விழுந்தாலும், சேலையில் முள் விழுந்தாலும் இழப்பு சேலைக்குத் தான். என்று யார் யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அதற்கு
முற்றுப்புள்ளி வைத்தது நந்தினி பிரசாத்துக்குக் கொடுத்த தண்டனை. “அடடா . …சபாஷ் ” என்று வாசகனைச் சொல்ல வைத்த ஆசிரியரின் புதிய பார்வை, இத்தொகுப்பிற்கே முத்தாரம்.

மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்ட சொல்லாடல்களில் எந்த வித செயற்கைத் தன்மையும் இல்லாத கதையின் கருவிற்கு வலுசேர்க்கும் அற்புதமான உரையாடல்கள்.

பொண்ணுங்க இதை அனுபவித்துத்தான் ஆகணுமா..?

என்ன அநியாயம் இது எதை எதையோ கண்டுபிடிக்கிற சயன்ஸ் இதை ஒட்டுமொத்தமா நிறுத்த ஏதாச்சும் வழி கண்டுபிடிக்கணும்””

ஆம்பளைங்களுக்கு வந்திருந்த எப்போதோ கண்டுபிடித்து இருப்பாங்க…நாப்கின் வேணுமா..?

ஏன் அவ்வளவு கோபப்படாறீங்க லீலாவுக்கு என்ன பிரச்சனை?

“அவங்க லெஸ்பியன் பா

ஓ மை குட்னஸ் தப்பில்லையா..?

இதில் என்ன தப்பு உடல்ரீதியாக அவங்க டிஎன்ஏ சிஸ்டம் அப்படி..”

பல உணர்வுகள் பேசும் நுணுக்கமான உரையாடல்கள் . இன்னும் சில கதைமாந்தர்கள் எனக்குள்ளே பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

*தழலினிலே*

கடவுச் சீட்டு விமான சீட்டு இல்லாமல் சிகாகோ சுற்றிப் பார்க்கலாம் வாங்க என்று அழைத்து, அக உணர்வுகள் , புற நிகழ்வுகளால் ஏற்படுத்தக்கூடிய சலசலப்பைத் திறம்படச் சொல்கிறது.

சிகாகோ சாலைகளில் காரை ஓட்டிச் செல்கின்ற போதும் , ஷாப்பிங் கல்லூரி பொழுதுபோக்கு என அவர்கள் சுற்றித் திரியும் போது, நீரோடைகளின் குளிர்ந்த காற்றையும், நம் மீது படரச் செய்து, அழகிய நடையில். கதை மாந்தர்கள் வாழ்க்கைச் சூழலில் நம்பகமாகப் பொருந்தக் கூடியதாக,
கதைக் களத்தின் நேர்த்தியான சரியான புவியியல் வர்ணனைகளோடு,

ஓசையின்றி மலர்ந்த காதலை, உறவுகளோடும் சமூகத்தோடும் கூடி வாழப் பொருத்தமில்லாத ஒலியாக, முடிவு செய்த நாயகி, காதல் வேண்டாம் என்று விலகி, பரஸ்பரமாக பிரிந்து செல்லும்
காதலர்கள், மீண்டும் காதலியின் திருமணத்தில் சந்திக்கும்போது நாயகியின் மனதில் எழும் எக்கச்சக்க உணர்வலைகளின் மெல்லிசையே இக்கதை.

கதைக்குள் போட்டமுடிச்சியை ஆசிரியர் அவிழ்த்தவிதம், திக் திக்
திருப்பங்களோடு நிறைவடைந்தது. சிறந்த சிறுகதைக்கான அடையாளங்களோடும்.

மேல்தட்டு கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர வகுப்பிற்கு ஏற்ப கதை மாந்தர்களும் உணர்ச்சிகளும் கடத்தப்படுகின்ற சமூக சிந்தனைகளும், இம்மியளவும் பிறழாமல் சமூகத்தின் கண்ணாடியாக உள்ளதை உள்ளவாறு, மொத்தத்தில் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடிய சிறந்த சிறுகதைத் தொகுப்பாக ஒளிவண்ணன் சிறுகதைகளை அறிய முடிகிறது.
மனதை அசரச் செய்யும் நுட்பமான , பக்கத்துக்குப் பக்கம் விரவிக் கிடக்கும் சொற்கள்,

இச் சிறுகதைத் தொகுப்பிற்குக் குறையென்று சொல்வதானால், நூலை கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவிற்கு
நம் நேரத்தை விழுங்கிக் கொள்கிறது.

எந்த கதையிலும் சிறு தொய்வில்லாமல் ஜிவ்வென உந்துகணை வேகத்தில் நம்மை இழுத்துச் செல்கிறது.

ஓரிரு கதைகளைத் தவிர பெரும்பாலான கதைகளில் முடிவைத் தீர்மானிப்பதென்பது வாசகனுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது.

வியக்க வைக்கும் கதை மாந்தர்களாக மாறி கதைக்குள் பிரவேசிக்க, உங்களுக்குப் பிடித்த கதை மாந்தர்களைக் கதைக்கு வெளியே அழைத்து வர, தாமதமும் தயக்கமும் இன்றி *ஒளிவண்ணன் சிறுகதைகள்* தொகுப்பிற்குள் உற்சாகமாகப் உள்நுழைந்து, அலாதியான வாசிப்பு அனுபவத்தைப் பெறுங்கள்.

அர்ஷா மனோகர்