ஒலியின்றிப் பேரிசை கவிதை – ஆதித் சக்திவேல்
காலம் பரிசளித்த பெட்டியைத்
திறந்து பார்த்தோம் ஆவலாய்
இருள் நிரம்பி வழிந்தது
“நீரைப் போல்
உன் நினைவுகளைத்
தேக்கிக் கொள்வேன் ” என்றாய்
“மேகங்கள் இன்றி வானம் அழும்” என்றேன்
“வசந்தத்தின் ஒளிரும் பச்சை
மேகங்களில் உலவும் சாம்பல்
மலர்களின் அந்தரங்க மகரந்தம்
நிலவின் குளிர்க் கிரணங்கள்
இவை இணைந்து மிதக்கும்
இசைக் கோர்வை ஒன்று உருவாக்கிக்
கடவுச் சொல்லைக் கொடு
பின்னர் பிரியலாம்
உயிரில் கலந்திடும்
இசையின் நேசம்
தீச்சுடராய் அதன் பிரகாசம்
நீ இல்லா பயணத்தில்
ஒளியூட்டும் வழித்துணையாய்
உன் நினைவுகளைக் கால வரிசையில்
கவிழ்த்துக் கொட்டி
சிந்தும் இசைத் துளி
ஒவ்வொன்றிலும்
சிக்கியிருக்கும் உன் உயிர்
என் நினைவுகளின் உயிராய்
வெப்பம் உமிழும் மணலாய்
என் பாலையின் பூக்கள் சுடாது
நீ தரும் தீரா இசையின் ஈரமாய்
இதழ்களில் நீ இருக்கும் வரை”
என்றாய் இறுதியில்
ஒலியற்றவற்றை
இசையாக்கக்
கற்றுக் கொடுத்த
உன் புன்னகையை
நீ சொன்னவற்றோடு
கலந்து வார்த்தேன்
உன் உயிரில் வழியும்
அப்பேரிசை
ஆதித் தேன் துளிகளாய்
கடலளவு அன்பை
சுண்டக் காய்ச்சியதில் திரண்ட
நீயே அதன் கடவுச் சொல்
மறப்பினும்
உன் வாசம் சூழ்ந்த
என் கல்லறையை
எளிதில் அடையாளம் கண்டு கொள்வாய்