ஊமை எழுத்து கவிதை - ஜே. ஜே. அனிட்டா Oomai Ezuthu Kavithai By J. J. Anita

ஊமை எழுத்து கவிதை – ஜே. ஜே. அனிட்டா

பின் தூங்கி முன்னெழுகிற
இருட்காலங்களின் அகாலத்தில்
கிரகண மூச்செறிதலின் நீளும்
புகைக் கம்பியில் ஆவிகளைத் தோய்த்து பட்சணங்கள் தருகிறேன்.
சிறகுலர்த்தும் குழலிலிருந்து
திராவகச் சில்லுகளாய்ப் பறந்து மாய்கிறதைப் போலப்
பயன்படாத எதிர்ப்பின் குரல்.
உவர் மழையைப் பரிகசித்து
ஈரச் சுவற்றில் நிழலாடும் தாபத்தில்
அவர்களின் எந்திரப் பசிகள்
தீராப் பெருவுணவின் தேடலோடு.
நானென்பது தேயத் தேய
யாரோவென்பவர்கள் எல்லாமுமாய்
ஆகி விடுதல் அரூபச் சாபம்.

நீர்…அமிழ்வதற்கு
நிலம்…தோய்வதற்கு
காற்று… உயிர்ப் பருவம் நீந்த..
தீ.. ஒத்திகை எரியூட்டுப் பிரவாகம்
ஆகாயம்… கனவறுந்த வெற்றுக் கீற்று

நான்…
தசமபூதமாய்ச் சிரிக்கிற போது…

அறை அறைகளாய்
மிரண்டு திரிகிறது உடலம்.
ஒவ்வொரு அறையின் முதுகிலும்…
நூற்றாண்டு அடிமைச் சழக்கின்
நியாயக் கொக்கிகள்..!