Nedunalvadai Poem By Vasanthadheepan. வசந்ததீபனின் நெடுநல்வாடை கவிதை

நெடுநல்வாடை கவிதை – வசந்ததீபன்




எலிகள் திரியும்
இடத்தில்
பூனைகளின்
வருகை அவசியம்
வயலைத் தின்று
செரிக்க முயலும்
கொக்குகளின் நிறம்
வெண்மையாக
எளிதில் கடந்து
போகிறது
எறும்பு
நீரற்ற ஆற்றை…
வீடுகளிலும் இருள்
கண்களிலும் கண்ணீர்
யாருக்கு வளம்?
யாருக்குச் சந்தோஷம் ?
சோப்பு நுரையாய்
நகரும்
காலத்தின் மேல்
கனவுகள் பயணிக்க
விழுந்த மழை
ஓடியது தப்பிக்க…
சூரியனை நீட்டி மீண்டும்
வாரியடித்தது வானம்
கனவுகள் தருகிறாய்
கவிதைகள் தருகிறாய்
மனக் கதவுகளைத்
திறக்க மாட்டேன் என்கிறாய்
செடிகளோடு பேசினேன்
குழந்தைகளாய்க் குதூகலித்தது

நெஞ்சுக்குள் ஈரம் ஊறத் தொடங்கியது
மனசோ நடுக் காட்டில்
சிக்கிக் கொண்டது
மானோ கண்ணுக்குள் வந்து
மாட்டிக் கொண்டது
உயிரோ மீன்முள் தைத்தது போல் திக்கித் திணறுது
கனவுகள் இல்லாத இதயம்
கல்லில் செதுக்கிய சிற்பம்
கனிகள் விளையாத மரம்
கிளிமொழி கேட்டால் பரவசமடைகிறீர்கள்
குயில் பாட்டில் குதூகலமடைகிறீர்கள்
குரலின் தன்மையை அறிய அக்கறையில்லை