Orumurai Karuppagu Poem By Pangai Thamizhan ஒருமுறை கருப்பாகு கவிதை - பாங்கைத் தமிழன்

ஒருமுறை கருப்பாகு கவிதை – பாங்கைத் தமிழன்




ஒரு செய்தி படித்தேன்
வறுமையான மூளையில் இருந்து
வந்த செய்தியாகத்தான்
அது இருக்க வேண்டும்!
மூளையில் வறுமையா?

ஆம்.
செழிப்பான மூளை
செழிப்பான மண்ணுக்குச் சமம்;

செழுமையான மண்ணில்தானே
சிவந்த ரோஜா மலரும்!
செழிப்பற்ற மண்ணில்
புல் பூண்டும் முளைப்பதுண்டோ?

இப்போது சொல்வோம் செழுமையும், செழுமையின்மையும்
மண்ணிலும் உண்டு
மண்டையிலும் உண்டு!
செழிப்பற்ற நிலைதானே
வறுமை!

சாதியைப் பார்த்து
உதவாமல்
வறுமையைப் பார்த்து
உதவுதல் வேண்டுமாம்!

ஆம்.
உண்மையில் நூறு!
இந்திய மண்ணுக்கு
இந்தக் கருத்தில்தான்
சிக்கல்!

இங்கே….
உங்கள் சாதியைச் சொல்லுங்கள்
உங்கள் பொருளாதார
நிலமைத் தெரியும்
சமுதாய அந்தஸ்துத் தெரியும்!
மனித உறவுகள் தெரியும்!

வெள்ளையான சாதிக்கும்
மாநிறமான சாதிக்கும்
வறுமை என்றால்….

வெள்ளை மாநிறத்தைத் தாங்கும்;
மாநிறம் வெள்ளையைத் தாங்கும்!
கருப்பான சாதியென
ஒன்றுண்டு;

வெள்ளையும் வெறுக்கும்
மாநிறமும் மிதிக்கும்
கருப்பை!
கருப்புக்கு வறுமையே
பூர்விகம்;

கருப்பு தன் பசிக்கு
வெள்ளையின்
மாநிறத்தின் கழிவுகளை
சுமந்தால்தான் கஞ்சி!

வெள்ளையே….
மாநிறமே….
ஒரே ஒருமுறை
கருப்பாகப் பிற….
உணர்வாய்!