இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 11 ஐக்கிய முன்னணி அரசும் (எச்.டி.தேவ கௌடா, ஐ.கே.குஜரால்) வேளாண்மையும் பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 11 ஐக்கிய முன்னணி அரசும் (எச்.டி.தேவ கௌடா, ஐ.கே.குஜரால்) வேளாண்மையும் பேரா.பு.அன்பழகன்




1996ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியினைக் கண்டது. பாஜகவிற்கு 191 இடங்களும், காங்கிரஸ் கட்சி 140 இடங்களும், ஜனதா தளம் 46 இடங்களும், இடதுசாரிகளுக்கு 44 இடங்களும் மற்ற கட்சிகள் 100 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்ததால் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றது ஆனால் அரசுக்குப் பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் 13 நாட்கள் மட்டுமே வாஜ்பாய் பிரதம மந்திரியாக நீடித்தார். இதனை அடுத்து 13 கட்சிகளின் கூட்டுடன் ஐக்கிய முன்னணி அமைக்கப்பட்டு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததன் அடிப்படையில் இந்தியாவின் 11வது பிரதம மந்திரியாக எச்.டி.தேவ கௌடா ஜூன் 1, 1996ல் பதவி ஏற்றார்.

அன்றிலிருந்து ஏப்ரல் 21,1997 வரை 324 நாட்கள் இவர் பிரதமர் பதவியில் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்ற சீதாராம் கேசரி அரசியல் காரணங்களுக்காகத் தேவ கௌடா அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை காங்கிரஸ் விலக்கிக் கொண்டது. இதனை அடுத்து ஐக்கிய முன்னணியின் சார்பில் ஐ.கே.குஜரால் பிரதமரானர். காங்கிரஸ் கட்சி இவருக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. இவருடைய ஆட்சி பிப்ரவரி 1998வரையில் நீடித்தது (Amitab Tiwari 2016). மொத்தமாக ஐக்கிய முன்னணி அரசானது 17 மாதம் 21 நாட்கள் ஆட்சியில் இருந்தது.

தேவ கௌடா தன்னை ஒரு சாதாரண விவசாயி என அழைத்துக் கொண்டவர். 1991ல் பாராளுமன்றத்தில் மன்மோகன் சிங் தாக்கல் செய்த வரவு-செலவு திட்டத்தில் வேளாண்மைக்கான மானியம் ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பினை வெளியிட்டார். இதனை எதிர்த்து தேவ கௌடா “நான் ஒரு விவசாயி, உழவன் மகன், இதை நான் அனுமதிக்க மாட்டேன், நான் தர்ணாவில் அமர்வேன், நான் இந்த நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியே செல்ல மாட்டேன், இதை விளம்பரத்துக்காக நான் அப்படிச் சொல்ல வில்லை” என்றார். தேவ கௌடா தன்னுடைய வாழ்நாளை விவசாயிகளுக்காகவே அர்ப்பணித்துக்கொண்டவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 1996-97ல் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவு திட்டத்தில் விவசாயிகளுக்கானதாக இருந்தது. பின்னால் அவர் பதவியிலிருந்து வெளியேறிய பின்பு பஞ்சாப் விவசாயிகள் அம்மாநிலத்தில் பயன்படுத்திய புதிய தரமான நெல் விதை ரகத்திற்குத் தேவ கௌடா என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். இந்த ரகம் பத்தாண்டுகளுக்கு மேலாக மிகவும் அறியப்பட்டதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய விவசாயிகளின் தலைவராக அறியப்படும் மகேந்திர சிங் திகாயத், தேவ கௌடாவை தென்னிந்தியாவின் சவுதிரி சரண் சிங் என்று அழைத்தார் (Outlook web dest, 12.12.2021).

1991ல் புதிய பொருளாதாரக் கொள்கையானது நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது ஆனால் 1996ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் நிலையற்ற அரசியல் நிலைப்பாட்டினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படத் தொடங்கியது. 1996-97ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 விழுக்காடாக இருந்தது 1997-98ல் 5 விழுக்காடாகக் குறைந்தது. 1998-99ல் ஏற்றுமதி வளர்ச்சியானது எதிர்மறையாக இருந்தது. தொழில் வளர்ச்சியும் குறைத் தொடங்கியது. வெளிநாட்டு மூலதனங்களான அந்நிய நேரடி முதலீடு மற்றும் போர்ட்ஃபோலியோ முதலீடுகளின் வரத்து அதிக அளவில் குறையத் தொடங்கியது. இது 1998-99ல் எதிர்மறையாகவும் இருந்தது. முதன்மை பற்றாக்குறையானது (Primary deficit) 1996-97ல் 0.6 விழுக்காடாக இருந்தது 1997-98ல் 1.3 விழுக்காடாக அதிகரித்தது. மேலும் 1997ல் கிழக்கு ஆசியா நாடுகளின் ஏற்பட்ட பங்கு முதலீடு தொடர்பான நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்தது. இதே நேரம் இந்தியாவுடன் வர்த்தக உறவுடன் இருந்த நாடுகளான ரஷ்யா, பிரேசிலும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துவந்தது, இது இந்தியாவிற்கு பெரும் நெருக்கடியினை உருவாக்கியது. 1998ல் உலகப் பொருளாதார வளர்ச்சியும் குறையத் தொடங்கியது. இவை அனைத்தும் பகுதி அளவில் இந்தியப் பொருளாதாரத்தின் மீது பாதிப்பினை ஏற்படுத்தியது. 1991ல் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தியாவின் உள்கட்டமைப்பு மிகவும் பின்னிலையில் இருந்தது. இதன்பொருட்டு பொருளாதாரச் சீர்திருத்தத்தின் விளைவுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் இடர்பாடுகள் தோன்றியது. எனவேதான் அடல் பீஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டங்களில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அரசியலில் நிலையற்ற தன்மை, சந்தர்ப்பவாத கூட்டாட்சி, அரசின் இரட்டை நிலைப்பாடு (சுதேசி, புதிய பொருளாதார சீர்திருத்தம்) ஆகியன 1990களின் கடைசி காலகட்டங்களில் பொருளாதாரச் சரிவிற்கு முக்கிய காரணமாக அறியப்படுகிறது. அதே சமயம் புதிய பொருளாதாரக் கொள்கையினால் தொடர் வளர்ச்சி, தொழில் மயமாக்கல், சுயச்சார்பு, வறுமை ஒழிப்பு போன்ற தளங்களில் சிறப்பான வெளிப்பாட்டைக் காண முடிந்தது. இந்தியா அதுவரை கடைபிடித்து வந்த சோசியலிச கொள்கையானது கைவிடப்பட்டு புதியதான உலகமயமாக்கல் என்பதை இந்தியா உள்வாங்கிக்கொள்ளத் தொடங்கியது. கடந்த 40 ஆண்டுகளில் சுயச்சார்பு, தொழில் வளர்ச்சிக்கு இறக்குமதி மானியம் தேவைப்பட்டது ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கையினால் மூலதனம், தொழில்நுட்பங்களும் தருவிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட இந்தியாவில் உள்ள கட்சிகள் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையினைப் பொறுத்தவரையில் தேவை என்பதை உணர்ந்தன (Bipian Chandra et al 2008).

பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை எதிர்த்த இடதுசாரி கட்சிகள் அடுத்து ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைச்சரவையில் பங்கெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் தனியார் மயமாக்கலைக் கடுமையாக எதிர்த்தனர், மானியங்களைக் குறைப்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அப்போது வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த சதுரானன் மிஸ்ரா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்) அப்போதைய நிதி அமைச்சரான ப.சிதம்பரம் விவசாயிகள் மற்றும் ஏழை விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளைத் தடுக்கிறார் என்று குற்றம்சாட்டி தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் பின்னால் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார். ஐ.கே.குஜரால் பிரதமராக இருந்தபோது மின்சார துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையினைப் பின்பற்றி மாநில மின்சாரக் கழகங்களை வலுப்படுத்த வேண்டுமென்றார். ஐக்கிய முன்னணி அரசானது இறக்குமதியினை தாராளமயமாக்கியது. இதன்படி படிப்படியாகத் தடை செய்யப்பட்ட இறக்குமதியினைச் சிறப்பு இறக்குமதி பட்டியலுக்குக் கொண்டுசென்றது பின்னர் அதனைத் தடையற்ற இறக்குமதி பிரிவில் சேர்க்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப்பின் நிலக்கரி மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டு முற்றுரிமை நிலையிலிருந்ததை முடிவுக்குக் கொண்டுவந்தனர். ஐக்கிய முன்னணி அரசானது உலக வரத்தக அமைப்புக் கூட்டம் பிப்ரவரி 1997ல் ஜனிவாவில் நடந்ததில் கலந்துகொண்டு தொலைத்தொடர்பு உலகமயமாக்கல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தகவல் தொழில்நுட்பம் உலகமயமாக்கலுக்கு உலக வர்த்தக அமைப்பின் அமைச்சரவை அளவிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு அதில் கொண்டுவந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தொழிலாளர் நிலை தொடர்பாக இந்தியா பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் நடைமுறையினை ஏற்றுக்கொண்டு உலக வர்த்தக அமைப்பு நிலையினை நிராகரித்தது (Singh 2001).

மன்மோகன் சிங் 1991ல் தன்னுடைய முதல் நிதி நிலை அறிக்கையினைத் தாக்கல் செய்தபோது இந்தியப் பொருளாதாரம் மிகவும் தீவிர பொருளாதார நெருக்கடியினை (அந்நியச் செலாவணி கையிருப்பு வற்றியிருந்தது, செலுத்து நிலை இருப்பில் மோசமான நிலை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் கடும் சரிவு, தொழில் துறை வீழ்ச்சி, உச்ச அளவில் பணவீக்கம், இந்தியா மீது பன்னாட்டு நிதிச் சந்தையில் நம்பிக்கை இழந்த நிலை) சமாளித்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தருணம். ஆனால் 1996ல் ஒட்டு மொத்த பேரியல் பொருளாதார நிலைமை சிறப்பான இருந்த நிலையில் (பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடு, தொழில் துறை வளர்ச்சி 12 விழுக்காடு, பணவீக்கம் 4.5 விழுக்காடு, அந்நியச் செலாவணி கையிருப்பு 17 மில்லியன் டாலருக்கு மேல்) அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது முதல் நிதி நிலை அறிக்கையினைச் சமர்ப்பித்தார். இதில் முக்கியமானது மன்மோகன் சிங்கிக்குப் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ப.சிதம்பரம் பங்கேற்றிருந்த அரசானது 13 கட்சிகளின் கூட்டணியாக இருந்ததால் தன்னிச்சையாகச் செயல்பட இயலாத நிலையிருந்தது.

1996-97ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையானது நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத பொருளாதாரச் சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டும், பேரியல் பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையின் நோக்கங்கள் 1) பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து முடுக்கிவிடப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவது, 2) குறைந்தபட்ச சேவைகளை வழங்கி வறுமையை ஒழிப்பது, 3) அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகைகளைக் காண்பது, 4) நிதி மற்றும் பேரியல் பொருளாதார நிலைப்பாட்டை உருவாக்குவது, 5) உள்கட்டமைப்பின் மீது முதலீடு செய்வது, 6) மனித மூலதன வளர்ச்சியினை மேம்படுத்துவது, 7) செலுத்து நிலை இருப்பினை இயல்பான நிலைக்குக் கொண்டுவருவது போன்றவை ஆகும்.

வேளாண்மை முன்னேற்றத்திற்காகச் சிறப்பு நடவடிக்கையினை எடுக்க நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியானது முதலில் ரூ.500 கோடியும், பின்பு ரூ.1000 கோடியாகவும் செலுத்தப்பட்ட மூலதனம் அளித்தது. அடுத்த ஐந்தாண்டுகளில் இது ரூ.2000 கோடியாக அதிகரிக்க உத்தேசித்தது, கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதிக்கு ரூ.2500 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விரைவாக நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டது. பெரிய நீர்ப்பாசன திட்டங்களை விரைந்து முடிக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது. குறிப்பாகப் பெரிய விவசாயிகள் பயன்பெறும் விதமாக டிராக்டர், எந்திரக் கலப்பை (பவர் டில்லர்) போன்றவற்றை வாங்க நேரடி மானியம் வழங்கப்பட்டது. இதைத் தவிற்று உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி நிறுவனம் ரூ.5000 கோடியில் உருவாக்கப்பட்டது. இதன்படி போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு, சாலை போன்றவற்றைக் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டது (Bakul H Dhalakia 1996).

ஐக்கிய முன்னணி பல கட்சிகளின் கூட்டணியாக இருந்ததால் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்கியது. இதன்படி 100 விழுக்காடு பாதுகாப்பான குடிதண்ணீர் வழங்குதல், ஆரம்பச் சுகாதார மைய வசதியினை ஏற்படுத்தித் தருதல், அனைவருக்கும் தொடக்கக் கல்வி, வீடற்ற ஏழைகளுக்கு வீட்டு வசதி, மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துதல், அனைத்து கிராமங்களுக்கும் சாலை இணைப்பை உறுதி செய்தல், பொது விநியோக முறையை வலுப்படுத்துதல் போன்றவை ஆகும். இதற்காக ரூ.2466 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1997-98ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை பாராளுமன்றத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யும் போது, 1995-96ல் வேளாண்மையின் வளர்ச்சியானது 0.1 விழுக்காடாக இருந்தது, 1996-97ல் 3.7 விழுக்காடு வளர்ச்சியினை எட்டியதாகக் குறிப்பிட்டார். உணவு தானிய உற்பத்தியானது 191 மில்லியன் டன் அதிகரித்ததாகவும் ஆனால் மின்சாரத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்றும், ஏற்றுமதியின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது என்றும் குறிப்பிடப்பட்டது. வறுமையை ஒழிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டதால், பிரதம மந்திரி அடிப்படைக் குறைந்தபட்ச சேவை திட்டத்திற்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதுபோல் நீர்ப்பாசன பயன்பாட்டுத் திட்டத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. கங்கா கல்யாண் யோஜனா என்ற திட்டமானது நிலத்தடி நீர் மற்றும் சமதளப் பகுதிகளின் நீரைத் திறம்படப் பயன்படுத்த மானியமும், கடனும் வழங்கப்பட்டது. இது போன்றே குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் வழியாக வேளாண்மை மற்றும் வேளாண் சார் தொழில்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்கு அதிக அளவில் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி சிறப்பாகச் செயல்படுத்த முதல் கட்ட திட்டங்களுக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேசிய கிராமப்புற வளர்ச்சி வங்கியினை வலுப்படுத்தக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. உணவு தானியங்கள், சர்க்கரைக்கு மானியம் அதிகரிக்கப்பட்டது மொத்தத்தில் இந்த நிதி ஆண்டிற்கான செயல் திட்டங்கள் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தது (Government of India 1997). 1996-97ல் உரத்துக்கான மானியம் ரூ.6093 கோடியாக இருந்தது 1997-98ல் ரூ.10026 கோடியாக அதிகரித்தது (Government of India 1999). மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மைக்கான இடுபொருட்களின் விழுக்காட்டு அளவு 1996-97ல் 8.9 விழுக்காடாக இருந்தது 1997-98ல் 9.0 விழுக்காடாக அதிகரித்தது. இது ஒரு ஹெக்டேருக்கு ரூ.497.3 லிருந்து ரூ.509.4ஆக இவ் ஆண்டுகளில் அதிகரித்தது (Shovan Ray 2007).

1997-98ல் வேளாண் உற்பத்தி 6 விழுக்காடு வளர்ச்சியடைந்தது ஆனால் 1998-99ல் இது 3.9 விழுக்காடாகக் குறைந்தது. இதே ஆண்டில் உணவு தானிய உற்பத்தியானது 192.26 மில்லியன் டன்னாக இருந்தது 203.61 மில்லியன் டன்னாக அதிகரித்தது. உற்பத்தித் திறனானது ஒரு ஹெக்டேருக்கு 1552 கிலோவாக இருந்தது 1627 கிலோவாக அதிகரித்தது. நெல், கோதுமை, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, சிறு தானியங்கள் போன்றவை உற்பத்தியில் நேர்மறை வளர்ச்சியடைந்தது (Shovan Ray 2007). இக்கால கட்டத்தில் இந்தியாவில் பருவ மழை சாதகமான நிலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1995-96ல் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் வேளாண்மைத் துறையின் பங்கு 19.8 விழுக்காடாக இருந்தது 1996-97ல் 20.4 விழுக்காடாக அதிகரித்தது, 1998-99ல் 18.8 விழுக்காடாகவும் குறைந்தது. 1950களில் உணவு தானிய உற்பத்தியானது ஆண்டுக்கு 3.22 விழுக்காடாக இருந்து 1960களில் ஆண்டுக்கு 1.72 விழுக்காடாகவும், 1970களில் ஆண்டுக்கு 3.08 விழுக்காடாகவும், 1980களில் ஆண்டுக்கு 3.5 விழுக்காடாகவும், 1990களில் 1.7 விழுக்காடாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது (Government of India 1999).

1990களின் மத்தியில் வேளாண் வளர்ச்சி சரியத் தொடங்கியது (1980களில் ஆண்டுக்கு 3.5 விழுக்காடு என்றிருந்தது 1990களில் 2.7 விழுக்காடாகக் குறைந்தது). 1992-1997ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 4.7 விழுக்காடு என்ற சராசரி வேளாண் வளர்ச்சி இருந்தது ஆனால் இது 1997-2001ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 1.2 விழுக்காடு என்ற அளவில் இருந்தது (Shankar Achary et al 2003). இதனால் வேளாண்மையைச் சார்ந்து வாழ்ந்த வேளாண் குடிகள் அதிக அளவிற்குப் பாதிக்கப்பட்டனர். வேளாண் சார் துறைகளான கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, போன்றவை மீதும் பாதிப்பினை உண்டாக்கியது. இதற்கு முக்கியக் காரணம் நீர்ப்பாசனம், வெள்ளத் தடுப்பு, ஆராய்ச்சி, வேளாண் விரிவாக்கம், போன்றவை மீதான அரசின் முதலீடுகள் குறைந்ததாகும். பொதுத் துறை முதலீடு வேளாண்மையில் 1970கள் வரை தொடர்ந்து அதிகரித்து வந்தது ஆனால் 1980களில் இது குறையத் தொடங்கியது. பொதுத் துறை முதலீடு உண்மை நிலையில் 1980-81ல் ரூ.1793 கோடியாக இருந்தது 1990-91வட ரூ.1154 கோடியாகவும், 1996-97ல் இது ரூ.1132 கோடியாகவும் குறைந்தது. ஆனால் தனியார்த் துறை முதலீடு வேளாண் துறை மீது அதிகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது (Government of India 1999). வேளாண் வர்த்தகத்தில் தாராளமயமாக்கப்பட்டதின் விளைவு பன்னாட்டுச் சந்தையில் அதிகம் தேவையான வேளாண் விளைபொருட்கள் பயிரிடப்பட்டன. இதன் விளைவு அதிக அளவிற்கான வேளாண் உற்பத்தியினால் பன்னாட்டுச் சந்தையில் இப்பொருட்களின் விலையில் ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்டது. இந்தியா வர்த்தக கட்டுப்பாட்டை நீக்கியது, சுங்க வரியினைக் குறைத்தது. 1990களின் இடையில் பன்னாட்டுச் சந்தையில் வேளாண் விளைபொருட்கள் விலை குறைந்தது போன்ற நிலைகளினால் விவசாயிகள் பெரும் இழப்பினைச் சந்தித்தனர்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது பொருளாதாரச் சீரதிருத்ததிற்குப் பிந்தைய காலங்களில் குறைவான வேளாண் வளர்ச்சியினை அடைந்தது. வேளாண் வளர்ச்சி தொடர்ந்து வீழ்ச்சியினை அடைந்திருந்தபோதும் அதற்கு ஈடாக வேளாண் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர் ஆற்றல் (Labour force) குறையவில்லை இது ஒரு முக்கிய முரண்பாடாகக் காணப்படுகிறது. நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தின் விளைவால் அடைந்த உயர் பொருளாதார வளர்ச்சியானது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தரவில்லை எனவே வேளாண்மையிலிருந்து அதிகமாக வேளாண்மையில் சுய-தொழில் ஈடுபட்டிருந்தவர்களும், தொழிலாளர்களும் வெளியேறினார்கள். குறைவான வேளாண் உற்பத்தித் திறன், குறைந்த அளவிலான வேளாண் விளைபொருட்களின் விலை, வேளாண் பொருட்களின் தேவையில் வீழ்ச்சி, வேளாண்மைக்கு வெளியே தேவையான அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தராத நிலை, இவை அனைத்தும் வேளாண்மை 1990களின் கடைசி காலகட்டத்தில் எதிர்கொண்ட முக்கியப் பிரச்சனைகளாகும். நீர்ப்பாசனம் மீது பொதுத் துறையின் முதலீடு குறைந்து வந்தது. 1980களுக்கும் 1990களுக்கும் இடையே நீர்ப்பாசன சாகுபடி பரப்பானது ஆண்டுக்கு 0.8 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்தது. ஆனால் இது பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது ஆண்டுக்கு 2.5 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்திருந்தது குறிப்பிடத் தக்கது. இதுபோல் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 விழுக்காடு மட்டுமே அதிகரித்திருந்தது. நிறுவனம் சார் அளிப்பும் குறைந்து வந்தது. இதன் பங்கு மொத்த நிறுவனம் சார் கடனில் ஆண்டுக்கு 10-11 விழுக்காடு மட்டுமே இருந்தது. பெரும்பான்மையான விவசாயிகள் முறைசார ஆதாரங்கள் வழியாகக் கடன் பெற்றிருந்தனர், இதற்கு 30 விழுக்காட்டுக்குமேல் வட்டியாகச் செலுத்திவந்தனர். தொடர்ந்து வேளாண்மையில் லாமற்ற தன்மை, வேளாண்மை வணிகமயமாதல், அதிகரித்த கடன் சுமை போன்ற காரணங்களினால் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டிருந்தது (Narasimha Reddy et al 2009).

அட்டவணை: ஒப்பீட்டு அளவிலான துறைவாரியான செயல்திறன் (விழுக்காடு)

துறைகள்

ஆண்டு வளர்ச்சி வீதம்

பொருளாதார பங்களிப்பு

1981-1990

1991-1999

1980

1990

1999

வேளாண்மை

3.6

3.0

39.7

32.2

25.2

தொழில் துறை

7.1

5.6

23.7

27.2

26.7

சேவைத் துறை

6.7

7.8

36.6

40.6

48.1

Source: Shankar Achary et al 2003.

அட்டவணைவேளாண் உற்பத்திஉற்பத்தித் திறன் வளர்ச்சி (விழுக்காட்டில் ஆண்டுக்கு)

உற்பத்தி உற்பத்தி உற்பத்தி திறன்
1980-81முதல் 1989-90வரை 1990-91முதல் 2000-01வரை 1980-81முதல் 1989-90வரை 1990-91முதல் 2000-01வரை
உணவு தானியங்கள் 2.85 1.66 2.74 1.34
உணவல்லா விளைபொருட்கள் 3.77 1.86 2.31 0.59
அனைத்து விளைபொருட்கள் 3.19 1.73 2.56 1.02

Source: Shankar Achary et al 2003


1980களின் இறுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழ 1990களில் அமைந்த ஆட்சிகளே காணமாக இருந்தது. இவ்வாட்சிகள் சிறுபான்மை அரசாகவும், கூட்டணி அரசாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. வேறுபட்ட சித்தாந்தங்களின் கூட்டாக இவ்வாட்சிகள் இருந்தாலும் நாட்டின் நலன் கருதி அவ்வப்போது எடுக்கப்பட்ட உத்திகள் பெருமளவிற்குக் கருத்தொற்றுமையுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது (Singh 2001).

ஜி.எஸ்.பல்லா மற்றும் குர்மாயில் சிங்கின் ஆய்வுக் கட்டுரையில் பொருளாதாரச் சீர்திருத்தின் விளைவானது 1990-93 முதல் 2003-06ஆம் ஆண்டுகளுக்கிடையே வேளாண் வளர்ச்சியானது அதிக அளவில் வீழ்ச்சியடைந்தது. இக்கால கட்டங்களில் ஆண்டுக்கு 1.74 விழுக்காடு வேளாண் உற்பத்தி வளர்ச்சி இருந்தது இது 1980-83 முதல் 1990-93ஆம் ஆண்டுகளுக்கிடையே பதிவான வளர்ச்சியைவிட (ஆண்டுக்கு 3.37 விழுக்காடு) மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலைக்கான முக்கியக் காரணம் கிராமப்புற உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை, வேளாண் ஆராய்ச்சி மீதான முதலீடுகள் குறைந்தது எனச் சுட்டிக்காட்டுகின்றனர். புதிய பொருளாதாரக் கொள்கையின் முக்கிய விளைவாகச் சாகுபடி செய்யும் பயிர்களில் மாற்றம் ஏற்பட்டது. உணவு தானியச் சாகுபடியிலிருந்து விலகி உணவல்லா பயிர்களை (குறிப்பாக மதிப்பு மிக்க பயிர்கள்) நோக்கி விவசாயிகள் பயணிக்கத் தொடங்கினர். புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டபின் கோதுமை, நெல், எண்ணெய் வித்துக்கள், கரும்பு போன்றவற்றின் உற்பத்தித் திறன் வளர்ச்சியானது அதிக அளவிற்குக் குறைந்தது. தனியார் நிறுவனங்கள் வேளாண்மையில் ஊடுருவி உணவல்லா விளைபொருட்களை விளைவிக்க நிதி வழங்கியது. இதனால் பெருமளவிற்கான விவசாயிகள் வேளாண் சாகுபடி பயிர் வகைகளில் மாற்றத்தை ஏற்றுக்கொண்டனர். இவர்களில் பெருமளவிற்குப் பெரிய, நடுத்தர விவசாயிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1990-93ல் உணவு தானிய உற்பத்தியானது மொத்தப் பயிரிடும் பரப்பில் 73 விழுக்காடாக இருந்தது 2003-06ல் 68.9 விழுக்காடாகக் குறைந்தது. உணவு தானிய உற்பத்தியானது மொத்த உற்பத்தியின் மதிப்பில் 52.7 விழுக்காடாக இருந்தது 49.6 விழுக்காடாக இக்கால கட்டத்தில் குறைந்தது (Bhalla et al 2009). முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொழில் மற்றும் சேவைத் துறைகளுக்குச் சார்பானதாக இருந்தது. வேளாண்மைக்கான மானியங்கள் குறைக்கப்பட்டது, தடையற்ற வர்த்தகம் போன்றவை அதிகமாக வேளாண்மையைப் பாதித்தது. எனவே ஐக்கிய முன்னணி அரசு காலத்தில் வேளாண்மையினை முன்னிறுத்தி இரண்டாம் கட்ட சீர்திருத்தங்கள் (இடுபொருட்களுக்கான மானியங்கள் அதிகரிப்பு, நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை, வறண்ட சாகுபடிக்கு உகந்த பகுதிகளில் பசுமைப் புரட்சி விரிவாக்கம், கிராமப்புற உள்கட்டமைப்பு வலுப்படுத்துதல்) தொடங்கப்பட்டது. ஆனால் அரசியலில் ஏற்பட்ட நிலையற்ற போக்கினாலும், அழுத்தங்களினாலும் பல திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினாலும் வேளாண்துறையின் வளர்ச்சியினை பெருமளவிற்குப் பாதிப்பினை ஏற்படுத்தியது. பொதுவாகப் புதியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பின் வேளாண்மையின் போக்குச் சரியத் தொடங்கியது.

– பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 10 பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் – வேளாண்மையும்,  பாகம் – 2 பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 10 பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் – வேளாண்மையும், பாகம் – 2 பேரா.பு.அன்பழகன்




நரசிம்ம ராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது எட்டாவது ஐந்தாண்டு திட்டம் (1992-93 முதல் 1996-97) நடைமுறைப்படுத்தப்பட்டது. வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யவும், உற்பத்தித் திறன் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக அதிகரிக்கவும், பசுமைப் புரட்சி இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தவும்வறண்ட நிலப் பரப்பில் வேளாண்மைச் சாகுபடியினைச் செய்யவும், எண்ணெய்வித்துக்கள் அதிகமாக உற்பத்தி செய்யவும் உத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராமப்புற வறுமைக்கான முக்கியக் காரணம் விவசாயிகளிடையே நிலமற்றத் தன்மையாகும் என்றும் எனவே நிலச் சீர்திருத்தத்தை வேகப்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டது. கிராமப்புறங்களில் நிலவும் வலுவற்ற உள்கட்டமைப்பே அவற்றின் பின்தங்கிய நிலைக்கான காரணமாகக் கருதப்பட்டு அவற்றை மேம்படுத்த 1995-96ல் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியானது (RIDF) கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியை (NABARD) உருவாக்கியது. இதன்படி கிராமப்புறக் கட்டமைப்பினை மேம்படுத்த முன்னுரிமை அடிப்படையில் வேளாண்மைத் துறைக்குக் கடன் வழங்கியது (Chnandra Shekhar Prasad 2009).

நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்த உத்தியில் ஒன்றானதாக வேளாண் உற்பத்தி பொருட்களின் கொள்முதல்  விலையினை உயர்த்தியதாகும்இது உழவர்கள் வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியினை  அதிகரிக்க ஊக்கப்படுத்தியதுவேளாண் உற்பத்தி பொருட்கள் தங்கு தடையின்றி வணிகப் போக்கிற்கு வழிவகைச் செய்யப்பட்டது. ஏற்றுமதிக்கான  ஒதுக்கீட்டில் தளர்வு செய்யப்பட்டது.

விவசாயக் கடன்களை திரும்பப் பெறுவதற்காக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுஇவற்றின் விளைவால் பெரிய விவசாயிகள் அதிக அளவிற்கு பயனடைந்து லாபம் ஈட்டினர்.  1991-92ல் வேளாண் வளர்ச்சி எதிர்மறையாக 2 விழுக்காடு இருந்தது  1993-94ல் 4.9 விழுக்காடாக அதிகரித்ததுவேளாண் பொருட்கள் ஏற்றுமதியானது ரூ.700 கோடியாக 1990-91ல் இருந்தது ரூ.10840 கோடியாக 1993-94ஆக அதிகரித்தது. அதேசமயம் வேளாண்மையின் மீதான முதலீட்டில் தேக்க நிலை காணப்பட்டது.

முதல் கட்டப் பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி கிராமங்களை நோக்கிய உத்திகளை நடைமுறைப்படுத்தினார்இதன்படி வேளாண் இடுபொருட்களான மின்சாரம், உரம் போன்றவற்றுக்கு மானியம் வழங்கப்பட்டது. 1991-92ல் இம்மூன்று இடுபொருட்களின் மானியமானது ரூ. 122.6 பில்லியன் ஆகும் (இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.22 விழுக்காடு) இது 1995-96ல் ரூ.279.4 பில்லியனாக அதிகரித்தது (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.62 விழுக்காடு ஆகும்).  இம்மூன்றுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் பாதி அளவிற்கு மின்சாரத்திற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1970ல்  நாட்டில் 35 விழுக்காடு கிராமங்களும், 1990ல் 90 விழுக்காடு கிராமங்களும் மின்சார வசதியினைப் பெற்றது (தற்போது 100 விழுக்காடு கிராமங்கள் மின்சார இணைப்பு பெற்றுள்ளது). இதன் விளைவு வேளாண்மையில் மின்சாரப் பம்ப் செட்டுகள் பயன்பாடு; அதிகரித்தது. அதுவரை பயன்பாட்டிலிருந்த கால்வாய் பாசனம், குழாய் நீர்ப் பாசன முறைக்கு மாற்றமடைந்ததுஇதனால் விவசாயத்தில் விரிவாக்கம் அதிகமாக நடைபெற்றது. அதேசமயம் மின்சார பம்ப் செட்டுகளின் அதிக பயன்பாட்டால் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்பட்டு நீர்ப்பாசன பற்றாக்குறை ஏற்பட்டதுபீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இரண்டாம் கட்ட  பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது நெல் பயிர் செய்யும் பகுதிகள் பயன்பெற்று உற்பத்தி பெருகியதுவேளாண் உற்பத்தி உயர்ந்ததால்    இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் 1970களுக்கும் 1990களுக்கும் இடையில் 2லிருந்து 4 விழுக்காடு வளர்ச்சியினை கண்டது. இதனால் பஞ்ச காலங்களில் உணவு இறக்குமதி தவிர்க்கப்பட்டது. பசுமைப் புரட்சியின் விளைவால் 1980களில் வறுமை குறைய தொடங்கியது. குறிப்பாக 1990களில் வறுமை பெருமளவிற்கானதாகக் குறைந்தது. வேளாண் இடுபொருட்களின் விலைகளும் (குறிப்பாக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, விதை) கடுமையாக உயர்ந்தது. இதனால் விவசாயிகளின் வருமான இழப்பையும், கடன் அதிகரிப்பையும் எதிர் கொண்டனர்குறு, சிறு விவசாயிகள் இடுபொருட்களின் விலை ஏற்றத்தால் சாகுபடி செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டதால் பெருமளவிற்கு வேளாண் பணிகளைத் தவிற்று வேளாண் சாராத் தொழில்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். இதன் விளைவு பெரிய முதலாளிகள், மனை வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள், அரசியல்வாதிகளின் கைகளில் விளைநிலங்கள் மாறின. விளைநிலங்கள் பெருமளவிற்குச் சாகுபடியற்ற நிலங்களாக மாறத் தொடங்கியது. நிகர விளைநிலங்களின் பரப்பு குறையத் தொடங்கியது.

அரசு பஞ்ச காலங்களில் புதிய உத்தியினைக் கையாண்டு உணவு தானிய ஏற்றுமதிக்குத் தடை விதித்ததுபன்னாட்டு அளவில் வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்வதால் அதிக லாபம் பெற இயலும். அவ்வப்போது உணவு தானிய ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்படும் போது உள்;ர் விலைக்கு விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்பனைச் செய்வதால் பெரும் இழப்பினைச் சந்திக்க வேண்டியுள்ளது. உலக வர்த்தக மையத்தின் உருகுவே சுற்றின்படி விவசாய பொருட்களின் சுங்க வரியினைக் குறைத்ததால் வெளிநாடுகளுடன் காய்கறி, பழம், அதிக இறக்குமதி செய்யப்பட்டு சந்தைகளில் வரத்து அதிகமாகி உள்;ர் வேளாண் விளைபொருட்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. இதனால் இந்திய விவசாயிகள் அதிக பாதிப்பினை அன்மைக் காலமாக எதிர்கொண்டு வருகின்றனர். பன்னாட்டு அளவில் அதிக தேவையினை உடைய பாசுமதி அரசிசோயபீன்ஸ், மலர்கள், பழங்கள் போன்றவை சாகுபடி செய்தால் நல்ல லாபம் கிடைப்பதால் பல விவசாயிகள் பரம்பரைச் சாகுபடி பயிர்களிலிருந்து புதிய வகை பயிர்களுக்கு மாற்றினர் (Tirthankar Roy 2020).

நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது வேளாண்மையின் முக்கியப் பிரச்சனையாக நீர்ப்பாசன பற்றாக்குறை, அதிக அளவில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தியதால் தண்ணீர் உவப்பு தன்மையினை அடைந்ததுஇந்தியாவில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலையும் இருந்ததுஇவற்றால் 6 முதல் 13 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருந்ததுவிவசாயிகளின் கடன் தேவையினை அரசு முழு அளவிற்கு நிவர்த்தி செய்யும் நிலையினை அடையவில்லைகடனுக்கான மானியம் அதிக அளவிலிருந்தது இதனால் ஆண்டுக்கு ரூ.3000 கோடி ஒதுக்கப்பட்டது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் வேளாண்மையின் மீது திணிக்கப்பட்டது (India Today 1995).

புதிய பொருளாதார சீர்திருத்தங்களினால் முதலீடு, தொழில், வேளாண்மைபணித் துறைகள் ஆகியவற்றில் நேர்மறை வளர்ச்சியினைக் காண முடிந்ததுவேளாண்மையின் வளர்ச்சியானது 1991-92 மற்றும் 1996-97 ஆண்டுகளுக்கிடையே சராசரியாக ஆண்டுக்கு 3 விழுக்காட்டுக்கு மேல் வளர்ச்சியடைந்தது ஆனால் இது தொழில் மற்றும் பணித்துறையினை ஒப்பிடும்போது குறைவான அளவிற்கே இருந்தது.  1991-1996ஆம் ஆண்டுகளுக்கிடையே அந்நிய நேரடி முதலீடு 100 விழுக்காடு அதிகரித்தது. ஆனால் கிராமப்புற வறுமை 1992-93ல் அதிகமாக இருந்ததுஇதற்கு முக்கியக் காரணம் இக்காலத்தில் ஏற்பட்ட பஞ்சமாகும். 1993-1998க்கும் இடைப்பட்ட காலகட்டங்களில் சமூகச்செலவு மற்றும் கிராமப்புற வளர்ச்சி செலவானது 10 விழுக்காடு அளவிற்கு அதிகரித்தது. இதனால் வேளாண் கூலி 1992-93 மற்றும் 1993-94ஆம் ஆண்டுகளுக்கிடையே 5 விழுக்காடு அதிகரித்ததுஇதே ஆண்டில் 6.3 மில்லியன் மக்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்திருந்தது. பணவீக்கம் 1991ல் 17 விழுக்காடாக இருந்தது 1996ல்விழுக்காடாக்க குறைந்தது. உணவு தானிய மானியமானது 1991-92ல் ரூ.28.5 பில்லியனாக இருந்தது 1996-97ல் ரூ.61.4 பில்லியனாக அதிகரித்தது. உர மானியம் 1989-90ல் ரூ.45.42 பில்லியனாக இருந்தது 1995-96ல் ரூ.62.35  பில்லியனாக அதிகரித்தது. 1992ல் 7.3 மில்லியன் ஏக்கர் விளைநிலங்கள் உபரியானது என அறிவிக்கப்பட்டது. இதில்மில்லியன் ஏக்கர் ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதுஇதனால் 4.7 மில்லியன் விவசாயிகள் பயன் அடைந்தனர். வேளாண் சார்ந்த முக்கியத் தொழிலான கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 1995ல் இந்தியாவில் 69875 கிராமப்புற பால் கூட்டுறவு செயல்பட்டதில் 8.9 மில்லியன் விவசாயிகள் ஈடுபட்டுவந்தனர். இதில் 60 விழுக்காடு விவசாயிகள் குறு, சிறு விவசாயிகள் ஆவார்கள். ‘வெண்மைப் புரட்சி என்ற பால் உற்பத்தியினை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டது. இத் திட்டமானது கிராமப்புற வறுமை ஒழிப்பிற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது (Bipan Chandra et al 2008). வறுமையை ஒழிக்க 1997ல் தகுதியுடையவர்களுக்கான பொது விநியோக முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் வேளாண்மை விளைபொருட்களின் கொள்முதல் அதிகரித்தது

அட்டவணை: இந்திய வேளாண்மையின் போக்கு

வேளாண்மை தரவுகளின் விவரங்கள் 1990-91 1995-96
இந்தியாவின் மொத்த மதிப்புக் கூட்டலில் வேளாண்மையினை மொத்த மதிப்புக் கூட்டல் (விழுக்காடு) 35.13 30.61
நிகரச் சாகுபடி பரப்பு (மில்லியன் ஹேக்டேர்) 143.00 142.20
மொத்த சாகுபடி பரப்பு (மில்லியன் ஹேக்டேர்) 185.74 187.47
உணவு தானிய உற்பத்தி (மில்லியன் ஹேக்டேர்) 68.83 64.55
எண்ணெய் வித்துக்கள் (மில்லியன் ஹேக்டேர்) 13.00 13.85
பருப்பு வகைகள் உற்பத்தி (மில்லியன் ஹேக்டேர்) 13.28 11.88
உணவு தானிய ஏற்றுமதி (ஆயிரம் டன்னில்) 666.60 5636.29

Source: Akina Venkateswarlu (2021): “Polititical Economy of Agricultural Development in India: Policies, Achievements and Concerns,” Aakar Books, Delhi.

அட்டவணை: வேளாண் சாகுபடியின் பரப்பளவு, உற்பத்திஉற்பத்திறனின் போக்கு (விழுக்காட்டில் ஆண்டுக்கான வளர்ச்சி😉

விளைபொருட்கள் பரப்பளவு உற்பத்தி உற்பத்தித் திறன்
1980

களில்

1990

களில்

1980

களில்

1990

களில்

1980

களில்

1990

களில்

அனைத்துப் பயிர்களும் 0.1 0.4 3.2 2.2 2.6 1.4
உணவு தானியங்கள் -0.2 -0.1 2.9 1.8 2.7 1.4
உணவல்லா பயிர்கள் 1.1 1.5 3.8 3.3 2.3 1.4
நெல் 0.3 0.5 3.6 1.9 3.2 1.3
கோதுமை 0.5 1.7 3.6 3.1 3.1 1.6
சிறு தானியங்கள் -1.4 -1.8 0.4 0.2 1.7 2.0
பருப்பு வகைகள் -0.1 -0.2 1.5 1.0 1.6 1.7
எண்ணெய் வித்துக்கள் 2.4 0.8 5.5 3.4 2.9 2.6
கரும்பு 1.5 1.8 2.7 2.5 1.2 0.7
பருத்தி -1.3 3.3 2.8 1.7 4.1 -2.0

ource: Uma Kapila et al (2003): “Indian Economy Since Independance,”Academic Foundation, New Delhi. 

1950-51 மற்றும் 1994-95ஆம் ஆண்டுகளுக்கிடையே மொத்த சாகுபடி பரப்பானது 132 மில்லியன்  ஹெக்டேரிலிருந்து 188 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்தது. மேம்படுத்தப்பட்ட விதையானது 1950-51ல் மிகவும் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது 1996-97ல் 70 லட்சம் குவிண்டாலாக அதிகரித்தது. உரப் பயன்பாடு இக்கால கட்டத்தில் மிகக் குறைவாக 6900 டன்னிலிருந்து இது 14 மில்லியன் டன்னாக அதிகரித்தது. உரம் ஒரு ஏக்கருக்கு 1950-51ல் மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டது 1996-97ல் 77 கிலோவாக அதிகரித்தது. பூச்சிக் கொல்லியானது 2400  டன்னாக இருந்தது 59000 டன்னாக இதே காலகட்டங்களில் அதிகரித்தது. வேளாண்மைக்கான மின்சாரப் பயன்பாடானது 1980-81ல் 15200 மில்லியன் கிலோ வாட்டாக இருந்தது 1995-96ல் 85736 மில்லியன் கிலோ வாட்டாக அதிகரித்தது. 1990-91ல் மொத்த வேளாண்மையின் உள்நாட்டு உற்பத்தியில் அதன் ஏற்றுமதிப் பங்கானது 4.5 விழுக்காடாக இருந்தது 1995-96ல் 8 விழுக்காடாக அதிகரித்தது (Rao et al 2003).

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருந்ததை நரசிம்ம ராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகள் அதிகராம் பெறும் 73 (ஏப்ரல் 24, 1993ல்) மற்றும் 74வது சட்டம் (ஜூன் 1, 1993ல்) கொண்டுவரப்பட்டதுஇதன்வழியாக கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் தேவைகளை நிறைவுசெய்து கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டது.  நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சாலை போன்ற உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டது. 1988ல் தொடங்கப்பட்ட வேளாண் சூழலியல் வட்டாரத் திட்டமானது முன்னுரிமை நோக்கில் உள்கட்டமைப்பிற்கான முதலீடுகளைச் செய்தது.

நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 5.2 விழுக்காடாக இருந்தது இது ராஜீவ் காந்தி (5.7 விழுக்காடு) மற்றும் இந்திரா காந்தி (1980-84 கால கட்டத்தில் 5.5 விழுக்காடுஆட்சிக் காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவானதாக இருந்தது (Montek S Ahluwalia 2018). 1990களில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்ததால் வறுமையின் அளவு குறைந்ததுஅதே சமயம் ஏழைகள் கிராமங்களில் அதிக  எண்ணிக்கையில் வாழ்ந்துவந்தனர். பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவு பெருமளவிற்கு நகர்ப்புறங்களுக்குச்  சாதகமாக இருந்தது. 1990களில் வேளாண்மை வளர்ச்சியானது மிகவும் குறைவான அளவிற்கே இருந்ததுவேளாண் பயிர் சாகுபடியில் பெரும் மாற்றத்தைக் கண்டது. ஏற்றுமதி வழியாக அதிக லாபம் பெரும் நோக்கில் பழ வகைகள், காய்கறி, பூக்கள் பயிர் செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர். மற்ற பயிர் வகைகளின் சந்தைப் படுத்துதலின் கட்டமைப்பானது (குறிப்பாக மின்சாரம், சேமிப்பு கிடங்கு, சாலை போன்றவை) வலுவாக இல்லாததால்  குறிப்பிடத்தக்க வெற்றியினை பெற இயலவில்லை.

உணவு ஆதாரம் அரசின் கையிருப்பில் (Buffer stock) 40 முதல் 50 மில்லியன் டன் இருப்பிலிருந்ததுஇது மக்களுக்கு வழங்க போதுமானதாக இல்லை. பொதுவிநியோக முறையில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் இது எளிதாகச் சென்றடைந்ததுபொது விநியோக முறையில் நடைமுறைப்படுத்துதலில் ஊழல் தலைவிரித்தாடியது. கள்ள வாணிபம் வழியாகப் பொதுவிநியோக உணவு தானியங்கள் விற்கப்பட்டன. 20 விழுக்காடு உணவு தானியம் தகுதியான நபர்களுக்குச் சென்றடையவில்லை. பசியும், குறை ஊட்டச்சத்தும் இந்தியாவின் பல பகுதிகளிலும் தீவிரமாகவே இருந்ததுமழைபொழிவு இல்லாததால் பஞ்சம் ஏற்பட்டு  இறந்தவர்கள் பற்றிய தகவல்கள் காணப்பட்டது.

நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் ஒரு முக்கிய நிகழ்வாக அப்போதைய வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி உலக வர்த்தக அமைப்பில் கையெழுத்திட்டுத் துவக்க (1995 முதல்) உறுப்பினராக்கியது. இதன்படி வேளாண் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது (இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த காப்பு வரி மற்றும் வணிகம் பற்றிய பொது ஒப்பந்தத்தில் வேளாண்மை இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). இதன்படி உலக வர்த்தக அமைப்பின் கீழ் உள்ள உறுப்பு நாடுகள் வேளாண்மைக்கு அளித்துவந்த மானியத்தை 10 விழுக்காட்டுக்குக் கீழ் குறைக்க வேண்டும்,  ஒவ்வொரு நாடும் 3லிருந்து 5 விழுக்காடு நாட்டின் மொத்த வேளாண் பொருட்களின் நுகர்ச்சியின் அளவில் இறக்குமதி செய்ய வேண்டும், பொது விநியோக முறையில் கட்டுப்பாடுகள் விதித்து உண்மையாக வறுமையினால் பாதிக்கப்பட்டோர்களுக்கு உணவு தானியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது. வேளாண் ஒப்பந்தத்தில் பசுமைப் பெட்டி (Green Box) மற்றும் நீலப் பெட்டி (Blue Box) என்பதைச் சேர்த்துக்கொண்டதுபசுமைப் பெட்டி என்பது ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுக் கொள்கைகள் ஆகும். நீலப் பெட்டி என்பது வருமான ஆதரவு மற்றும் கால்நடைகள் வரையறுக்கப்பட்ட அளவில் பயன்படுத்தும் திட்டங்கள் ஆகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளின் பொருட்களின் மீது கட்டப்பாடுகளை விதித்ததுஇவையனைத்தும் ஜனநாயக முறையில் இல்லாமல் உலக வர்த்தக அமைப்பு கடைப்பிடித்தவையாகும்.

உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தின் வழியாக வேளாண்மையினைப் பொருத்த அளவில் சறுக்கலைச் சந்திக்க வேண்டியிருந்தது. வளரும் நாடுகளில் வேளாண்மையின் முன்னேற்றத்திற்கு பல செயல்பாடுகளைச் செய்து வந்த நிலையில் உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததால் அதன் சட்டதிட்டங்களை  நடைமுறைப்படுத்தப்பட்டதால் வேளாண்மை செயல்பாடுகள் குறையத் தொடங்கியது. வேளாண்மைக்கான நிலம் மற்றும் நீர் தவிற்று, விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றுக்கு உலக வர்த்தக அமைப்பின் விதிப்படி காப்புரிமை பெறப்பட்டதுஇதனால் காப்புரிமை வைத்திருந்த நிறுவனங்கள் இதன் விலைகளைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் பன்னாட்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியதுபல வளரும் நாடுகளின் வேளாண் பொருட்கள் பன்னாட்டு நிறுவனத்தினால் காப்புரிமை பெறப்பட்டதுஇவற்றைச் சாதாரண விவசாயிகள் (சிறு, குறு விவசாயிகள்) பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இயல்பாகவே இந்திய விவசாயிகள்; அறுவடையில் பெறப்படும் விளைச்சலின் ஒரு பகுதி தானியத்தை தங்களின் அடுத்த போக சாகுபடிக்காக  விதையினை எடுத்தும் பயன்படுத்தும் முறை புழக்கத்திலிருந்து வந்தது. மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகள் தங்களின் விருப்பப்படி பயன்படுத்த இயலாது. குறிப்பிட்ட காப்புரிமை பெறப்பட்ட நிறுவனங்களில் இருந்து விதைகளைப்  பெற்றுத்தான் பயன்படுத்த முடியும். புதிதாக உருவாக்கப்பட்ட காப்புரிமையும், சந்தைப்படுத்தும் முறையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்குள்ளானார்கள். இந்தியா உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தப்படி மூன்று முக்கியச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து. அதன்படி 1) சந்தை அணுகல்: அளவுக் கட்டுப்பாட்டு முறையில் பயன்படுத்தப்படும் சுங்கக் கட்டணத்தை குறைப்பது. 2) உள்நாட்டு ஆதரவு: குறிப்பிட்ட சில உற்பத்தி பொருட்களுக்கு மற்றும் உற்பத்தி சாராத பொருட்களுக்கும் மானியத்தை அடுத்த 10 ஆண்டுகளில் 13.3 விழுக்காடு குறைத்தல். 3) ஏற்றுமதி மானியம்: 2005க்குள் மதிப்பின் அடிப்படையில் 24 விழுக்காடு மானியத்தை குறைத்தல் மற்றும் 14 விழுக்காடு பொருட்கள் அளவின் அடிப்படையில் குறைத்தல் ஆகும். பன்னாட்டு அளவில் இந்திய வேளாண்மைக்கு பெரும் வாய்ப்புகள் உண்டாகும் என எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் பசுமை பெட்டி மற்றும் நீலப் பெட்டி என்ற காரணிகளைப் பயன்படுத்தி சில நிபந்தனைகளை வளரும் நாடுகள் மீது விதித்ததுஇதனால் இந்திய வேளாண்மையானது அதிக அளவில் பாதிக்கப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்தைப் பின்பற்றி கட்டுப்பாடற்ற வர்த்தக நடைமுறையினால் வேளாண் பொருட்களின் விலை குறைந்தது (பன்னாட்டுச் சந்தையில்).  இதன் விளைவு இந்தியாவில் பன்னாட்டு வேளாண் விளைபொருட்கள் இந்திய வேளாண் பொருட்களின் விலையினைவிடக் குறைவாகச் சந்தையில் கிடைத்தது. பன்னாட்டுச் சந்தையில் அதிக லாபம் பெற வாய்ப்புள்ள பொருட்களை இந்திய விவசாயிகள் பயிரிட அதிக கவனம் செலுத்தினர். இவர்கள் பெரும்பாலும் பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகளாக இருந்தனர்ஆனால் குறு மற்றும் சிறு விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்உலக வர்த்தக அமைப்பின் வேளாண்மை ஒப்பந்தத்தால் மொத்த அளவில் விவசாயிகள் அதிக இழப்பினைச் சந்தித்தனர். இதனால் வேளாண்மையிலிருந்து சிறு, குறு, நிலமற்ற விவசாயிகள் பெருமளவிற்கு வெளியேறத் தொடங்கினர்.

1991-92ஆம் ஆண்டைப் பொருத்த அளவில் 1990-91ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் காணப்பட்டது. எனவே அரசு இவற்றைச் சரிசெய்யும் முயற்சியிலிருந்தது. பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டில் கணிசமாகக் குறைந்தது. இதற்கு அடிப்படையாகப் பகுதி அளவில் வேளாண்மையில் ஏற்பட்ட தோல்வியும், தொழில் வளர்ச்சி குறைந்ததுமாகும். மூன்றில்ஒருபங்கு மக்கள் வேளாண்மையினைச் சார்ந்து வாழ்ந்தும், அதன் பங்களிப்பானது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மூன்றில்ஒருபங்கினை மட்டுமே அளித்தது. வேளாண்மை வளர்ச்சிக்கு முதலீடு, குத்தகைச் சீர்திருத்தம்விவசாய கடன் அளிப்பை அதிகரித்தல், சரியான வேளாண் விலைக் கொள்கை, புதிய தொழில்நுட்பங்களை வேளாண்மையில் புகுத்துதல் போன்றவை கட்டாயத் தேவைகளாக இருந்ததுவிவசாய இடுபொருட்களுக்கு வழங்கப்பட்ட மானியக் குறைப்பு நடவடிக்கையினால் இடுபொருட்களின் விலை அதிகரித்தது. அதே சமயம் விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வட்டார வளர்ச்சி வங்கிகள் பெரும் இழப்பில் இயங்கிக் கொண்டிருந்ததால் விவசாயிகளுக்கு போதுமான கடன் வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் முறைசாரா நிதி அமைப்புகளிடமிருந்து அதிக வட்டிக்குக் கடனை பெற்றதால் கடன் சுமை அதிகரித்தது. அதே சமயம் அரசு 1992-93 வேளாண் விளைபொருட்களுக்குக் கணிசமான அளவிற்கு ஆதார விலையினை அறிவித்தது. 1993-94ல் தடையற்ற வர்த்தக நடைமுறையின் விளைவு வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கத் தொடங்கியதுவேளாண் சார் தொழில்கள் பெருகத் தொடங்கியது. 1993-94ல் வேலைவாய்ப்பு உறுதி திட்டமும் பிரதமர் வேலைவாய்ப்பு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1994-95ல் பருவமழை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைத்ததால் வேளாண் உற்பத்தி அதிகரித்தது குறிப்பாக உணவு உற்பத்தியானது 185 மில்லியன் டன்னை எட்டியது. 1995-96ல் வேளாண்மை உற்பத்தி கணிசமான அளவில் அதிகரித்தது. அரசு பொதுவிநியோக முறையின் வழியாக உணவு தானியங்கள் வழங்க அதிகமாகக் கொள்முதல் செய்ய தொடங்கியதால் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்து வேளாண்மையில் லாபம் பார்க்க தொடங்கினர். இது  வேளாண் சாகுபடியினை அதிகரிக்க உதவியது. ஆனால் இது நாட்டின் அனைத்துப் பகுதி விவசாயிகளையும் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் கடந்த நிலையிலும் 40 விழுக்காடு பயிரிடும் நிலப்பரப்பு மட்டுமே நீர்ப்பாசன  வசதியினைப் பெற்றிருந்ததுபெரும்பாலான விவசாயிகள் மழைப் பொழிவினைச் சார்ந்திருந்தனர்நகர்ப்புறங்களில் தண்ணீர் பயன்பாடு பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்டதால் விவசாய நீர் ஆதாரங்கள் பறிபோனது. வறட்சி, பஞ்சம், இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, கடன் பொறியில் வீழ்ந்தது போன்ற நிலைகளினால் விவசாய தற்கொலைகள் அதிகரித்தது. 1995-2005ஆம் ஆண்டுகளுக்கிடையே 10000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பசுமைப் புரட்சிக்குப்பின் வேளாண்மையில் அதிக அளவிற்கு இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது, இதனால் வேளாண் தொழிலாளர்கள் வேலை இழப்பினைச் சந்தித்தனர், எனவே இவர்கள் கிராமங்களைத் தாண்டி நகரங்களுக்கு வேலைவாய்ப்பிற்கும், அதிக கூலி பெறவும் புலம் பெயர்ந்தனர். இதனால் குறு, சிறு விவசாயிகளின் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியது. வேளாண் சாராத் தொழில்கள் கிராமங்களிலும் அதிகரிக்கத் தொடங்கியது, இதனால் வேளாண் சாரா வருமானம் கிராமப்புறக் குடும்பங்களில் முக்கியப் பங்கினை எடுத்துக்கொண்டது. 1991ஆம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தினால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகமாக உருவாகும் என்ற எதிர்பார்த்த நிலையில், இந்திய வேளாண் பொருட்கள் மொத்த ஏற்றுமதியில் 14 விழுக்காடு அளவிற்கே இருந்தது. வேளாண் சாரா பொருட்களின் மீதான தாராளமய நிலையும், வேளாண்மை பொருட்களின் மீது குறைந்த நிலையிலும் உத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் வேளாண்மை அதிக அளவிற்குப் பாதிக்கப்பட்டது. இந்திய இறக்குமதிக்கு அதிக மதிப்புடைய பொருட்களின் மீது அதிக சுங்க வரி விதிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டது. 1980களிலும், 1990களிலும் இந்திய வேளாண்மைக்கான ஏற்றுமதி சார்ந்த நிலை காணப்படவில்லை. இக் காலகட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள்  வேளாண் பொருட்களின் மீது விதிக்கப்பட்டதுவேளாண் ஏற்றுமதிக் கொள்கையால்  1994 முதல் தொடர்ந்து வேளாண் ஏற்றுமதி அதிகரித்தது. இக் கொள்கையால் பல சீர்திருத்தங்கள் (பொருட்களின்  வர்த்தகத்துக்கு  ஏற்ப  எண்ணிக்கையை குறைத்தல், ஏற்றுமதி கட்டுப்பாட்டைத் தளர்வு செய்தல், குறைந்தபட்ச ஏற்றுமதி விலையினை ஒழித்தல் மற்றும் ஏற்றுமதிக் கடன் இருப்பை அதிகரித்தல்நடைமுறைப்படுத்தப்பட்டதுஉலக வர்த்தக அமைப்பின் சட்ட திட்டங்களை வளர்ந்த நாடுகள்  வகுத்தது இதனால் இது வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமாகவும், வளரும் நாடுகளுக்குப் பாதகமாகவும் அமைந்தது. இந்திய வேளாண்மையின் மீதான மானியத்தை குறைந்தது என்பது வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமான நிலையினை உருவாக்கித் தந்தது. வேளாண்மை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை நீக்கியது, இதனால் வேளாண்மை ஆராய்ச்சி கிராமப்புற உள்கட்டமைப்பு மீதான அரசின் ஆதரவு நிலைப்பாடு விளக்கிக் கொள்ளப்பட்டது. இதன் விளைவு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மையின் பங்களிப்பு குறையத் தொடங்கியது. வேளாண் தொழிலாளர்கள் பங்கேற்பு குறைந்தது, வேளாண்மையில் லாபம் பார்க்கும் பயிர் வகைகள் (பழம், காய்கறி, பூக்கள்பயிரிட தொடங்கினர். இதனால் தனியார் முதலீடு வேளாண்மையில்அதிகரிக்கத் தொடங்கியது. வேளாண்மையில் பொதுத் துறை முதலீடு மற்றும் மானியம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1986-90ல் 7.92 விழுக்காடாக இருந்தது 1991-95ல் 7.26 விழுக்காடாகக் குறைந்தது (Narasimha Reddy et al 2009). வேளாண்மையில் அரசின் முதலீடுகள் குறையத் தொடங்கியது, வேளாண்மையின் நிலைமையினை பெரும் சிக்கலான நிலைக்குக் கொண்டு சென்றது.

– பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 9 பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் – வேளாண்மையும், பாகம் – 1 பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 9 பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் – வேளாண்மையும், பாகம் – 1 பேரா.பு.அன்பழகன்




இந்தியாவில் 1960களிலே பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களினால் சீர்திருத்தங்கள் முழு வீச்சில் நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்திரா காந்தி பிரதமரானதும் தொழில் தொடங்க உரிமம் பெறும் கட்டுப்பாடுகளையும், தொழில் முற்றுரிமை கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார். அடுத்து பிரதமராகப் பதவி வகித்த ராஜீவ் காந்தி தொழில் துறையின் மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டது, செலாவணி மாற்றில் இணக்கத் தன்மை, இறக்குமதி மீதான பகுதி அளவில் கட்டுப்பாடுகளை நீக்கியது எனப் பல சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன. போபர்ஸ் உழல் பிரச்சனை எழுந்ததன் காரணமாக ராஜீவ் காந்தியின் சீர்திருத்தங்ளுக்குப் போதுமான சாதகமான சூழல் காணப்படவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்த வி.பி.சிங் நிலையற்ற அரசியல் மற்றும் குழப்ப நிலையினால் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் இவருடைய காலகட்டங்களில் முன்பு எப்போதும் கண்டிராத அளவிற்கு அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும் வற்றிய நிலையிலிருந்தது. இதனை எதிர்கொள்ள அடுத்துப் பிரதமராகப் பதவி ஏற்ற நரசிம்ம ராவ் பல்வேறு பொருளாதார சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டார். சீனா, 33 ஆண்டுகளுக்கு முன்பு (1978ல்) பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டது. சோவியத் யூனியன் 1980களின் மத்தியில் சீர்திருத்தங்களை மேற்கொண்டது. ஆனால் இந்தியா இச்சீர்திருத்தங்களை மேற்கொள்ள காலதாமதமானது. மேற்கண்ட நாடுகள் போன்ற அரசியல் முறையை இந்தியா பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேருவின் சோசியலிச சித்தாந்த முறையை இந்தியா நீண்டகாலமாகப் பின்பற்றி வந்தது. ஒரு நிலையில் உலக நாடுகள் பலவும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை பின்பற்றத் தொடங்கியது. எனவே இந்தியா இந்த முறைக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகியது. இந்தியா சுதந்திரம் அடைந்து 44 ஆண்டுகள் கடந்த நிலையில் சந்தைச் சீர்திருத்தங்கள் 1991ல் நடைமுறை படுத்தப்பட்டது.

மே 1991ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இத் தேர்தலில் காங்கிரஸ் 232 இடங்களில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து நரசிம்ம ராவ் ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரையில் பிரதம மந்திரியாக பதவியிலிருந்தார். நரசிம்ம ராவ் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றபோது இந்தியாவின் வெளிநாட்டு கடன் அரசுக்கு பெரும் சுமையாக இருந்தது. இந்தியாவின் கடன் 1991ல் 70 பில்லியன் டாலராக இருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு அடுத்து வந்த இருவாரங்களுக்கே போதுமானதாக இருந்தது. இதைத் தவிற்று வளைகுடா போரினால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருந்ததால் இந்தியாவின் இறக்குமதிச் செலவு உயர்ந்தது. பணவீக்கம் மிகவும் அதிக அளவிலிருந்தது. இந்தியாவில் நிலையற்ற அரசு நடைபெற்றதால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் வைப்புக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள தொடங்கினர். இது மேலும் சிக்கலை உருவாக்கியது. எனவே இந்த நிலையினை எதிர்கொள்ள அனுபவம் மிக்கப் பொருளியல் அறிஞரான மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது. பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் சுதந்திரமாகச் செயல்படுத்த இவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது (அரசியல் ரீதியான சவால்களை நரசிம்ம ராவ் எதிர்கொண்டார்). இதன் அடிப்படையில் அதிக வெளிப்படைத்தன்மையும், குறைவான பொருளாதாரக் கட்டுப்பாடும் வேண்டும் என்ற நிலைப்பாட்டை மன்மோகன் சிங் முன்னெடுத்தார். முதல் முயற்சியாக இரு முறை பண மதிப்பு குறைத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி முக்கிய வெளிநாட்டுச் செலாவணியுடன் இந்தியப் பணத்தின் மதிப்பை 9 விழுக்காடு குறைப்பினை ஜூலை 1, 1991அன்றும், மேலும் 11 விழுக்காடு மதிப்புக்கு குறைப்பினை ஜூலை 3, 1991அன்றும் மேற்கொள்ளப்பட்டது. இதன் முக்கிய நோக்கமாக இந்தியாவின் ஏற்றுமதியினை அதிகரிப்பதாக இருந்தது. ஜூலை 4-18, 1991ல் நான்கு கட்டங்களாக இந்தியா, இங்கிலாந்து வங்கியில் தங்கத்தை அடைமானம் வைத்து 400 மில்லியன் டாலர் கடன் பெற்றது. இதுமட்டுமல்லாமல் ஏற்றுமதியை அதிகரிக்கப் புதிய வர்த்தக கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி உரிமம் பெறும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. தேவையற்ற பொருட்கள் இறக்குமதி செய்வதை ஊக்கப்படுத்தவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்க பணமதிப்பினைக் குறைத்தது மட்டுமல்லாமல் மானியமும் வழங்கப்பட்டது. இறக்குமதிக்கான ஒதுக்கீட்டு அளவு (quotas) விலக்கிக்கொள்ளப்பட்டது, சுங்க வரி குறைக்கப்பட்டு ஏற்றுமதி ஊக்குவிக்கப்பட்டது, அந்நிய நேரடி முதலீடு வரவேற்கப்பட்டது. இதன்படி 51 விழுக்காடுவரை தங்குதடையற்ற முதலீட்டிற்கான ஒப்புதலுக்கு வழி வகுத்தது. இதுபோன்று உள்நாட்டில் உரிமம் பெறும் நடைமுறை விலக்கிக் கொள்ளப்பட்டது. பொதுத்துறை விரிவாக்கம் ஊக்குவிக்கப்படவில்லை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 விழுக்காடு அளவிற்கு நிதிப் பற்றாக்குறையாக இருந்தது இதனைக் குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நிறுவன வரியை 45 விழுக்காடு அதிகரித்தது. சமையல் எரிவாயு உருளை, உரம், பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டது, சர்க்கரைக்கு அளிக்கப்பட்ட மானியம் விலக்கிக் கொள்ளப்பட்டது (Ramya Nair 2021).

1991 ஜூலை புதிய தொழிற் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி தொழில் உரிமம் பெறும் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் சில குறிப்பிட்ட தொழில்களுக்கு விதிவிலக்கு இருந்தது. முற்றுரிமை வர்த்தக கட்டுப்பாட்டு நடைமுறை சட்டத்தில் தளர்வு அளிக்கப்பட்டது. பொதுத்துறை முற்றுரிமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இது போல் தனியார்த் துறை முற்றுரிமைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது (Ramya Nair 2021). 1991வது தொழிற் கொள்கையானது இந்தியாவில் எளிமையாக வாணிபம் செய்ய வழிவகை செய்தது. பணித்துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. காப்பீட்டுத் துறை, வங்கி, தகவல் தொடர்பு, வான்வழிப் போக்குவரத்து, போன்றவை மீது தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டது. அதே சமயம் தொழிலாளர்ச் சட்டங்கள் வளைந்து கொடுக்கும் நிலை உருவானது. அரசியல் ரீதியாகப் புதியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குக்கா கட்சிக்கு உள்ளேயும், வெளியிலும் கடுமையான எதிர்ப்பு உருவானது. ஆனால் இவற்றைத் திறமையாக நரசிம்ம ராவ் எதிர்கொண்டார். சுருக்கமாகக் குறிப்பிட்டால் இந்து வளர்ச்சி வீதம் (3.5 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள பொருளாதார வளர்ச்சி) என்ற நிலையினை 1950களிலிருந்து – 1970கள் வரை காணப்பட்டது. இதனை மீட்டெடுக்க 1980களில் வர்த்தக சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டது. 1990களில் சந்தைச் சார்பான சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனால் இந்தியப் பொருளாதாரத்தில் 2000ஆம் ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது (Ramachandra Guha 2017).

அட்டவணை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (விழுக்காடு)

ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி தாலாவருமனாம்
1972-1982 3.5 1.2
1982-1992 5.2 3.0
1992-2002 6.0 3.9

Source: Ramachandra Guha (2017): “India After Gandhi,” Macmillan, New Delhi.

1991ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது நிதி அமைச்சரான மன்மோகன் சிங் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்தார். இதற்கான முக்கியக் காரணம் சோவியத் ஒன்றியதில் மிக்கைல் கோர்பச்சோவ் கொண்டுவந்த பெரெஸ்த்ரோயிக்கா என்ற மறுசீரமைப்பு கொள்கையினைப் பின்பற்றி இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அடிப்படையில் இந்தியப் பொருளாதாரத்தில் 1991ன் படி 80 விழுக்காடு தேசிய உற்பத்தியில் தனியாரிடமிருந்து பெறப்படுகிறது ஆனால் இது சோவியத் ரஷ்யாவில் காணப்படவில்லை. எனவே இந்தியா தனி அடையாளக் கொள்கையினை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நிய முதலீடுகள் தேவைப்பட்டது எனவே இதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டன. இந்தியாவில் பெரும் தொழில் நிறுவனங்களை ஒழுங்கு படுத்த MRTP சட்டம் 1969ல் கொண்டுவரப்பட்டது. இதன் மீதான அனுமதி பெறுவது நீக்கப்பட்டது. இந்தியா உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகளில் நுழைவதற்காக சுங்கக் கட்டணங்கள் குறைக்கப்பட்டது, நடப்பு கணக்கு பரிமாற்றம், வர்த்தக நிலையினைத் தீர்மானிக்க சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. அந்நிய நேரடி முதலீடு, போர்ட்ஃபோலியோ முதலீடுகள் வருவதற்கு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டன. சந்தை அடிப்படையில் செலாவணி மாற்று செயல்படுத்தப்பட்டது, வர்த்தகம் தாராளமயமாக்கப்பட்டது, தொழிற்சாலைகளுக்கு தேவையானதைத் தடையற்ற முறையில் இறக்குமதி செய்துகொள்ளுதல், தொழில் உரிமம் ரத்து செய்தல், பொதுத் துறையில் சீர்திருத்தம், மூலதனச் சந்தை மற்றும் நிதித் துறையில் சீர்திருத்தம், பன்னாட்டு நிறுவனம் மற்றும் அந்நிய முதலீடு பெறுவதிலிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் என பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் ஒட்டுமொத்த நோக்கம் இந்தியா உலகப் பொருளாதாரத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வழிவகுப்பதாகும்.

பொருளாதாரம் சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகளின் விதிவிலக்காக ரயில்வே, துறைமுகம், பாதுகாப்பு மற்றும் அணு ஆற்றல் இருந்தது. நுகர்வோர்களுக்குச் சாத்தியப்படக்கூடிய நன்மைகள் கிடைக்கச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 1991ஆம் ஆண்டு சீர்திருத்தமானது உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க முற்றிலுமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பகுதியாக அந்நியச் செலாவணி பொதுச் சந்தையில் மாற்றிக்கொள்ள வழிவகுத்தது. லாபம் தரும் மூலதன வரவு கட்டுப்படுத்தப்பட்டது. அதேசமயம் பன்னாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை. உலக வர்த்தக அமைப்பின் கீழ் வந்த நடைமுறையில் வர்த்தக அளவு கட்டுப்பாட்டு முறை விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்தியா உலக அளவிலான தாராளப் பொருளாதார மயமாக்கலின் கொள்கையின் ஒரு பகுதியாகச் செயல்பட்டது. இதன் விளைவு இந்தியா மிகவும் திறனுடன் வேகமான வளர்ச்சியினை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவு, இந்திய பொருளாதாரம் விரைவாக மீண்டெழுந்தது. 1991-92ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.8 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டிருந்தது 1992-93ல் 5.5 விழுக்காடு வளர்ச்சியினை எட்டியது, 1993-94ல் 6.2 விழுக்காடு என மேலும் அதிகரித்தது. எட்டாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியினை கண்டது. முதலீடு, தொழில் துறை, வேளாண்மை, பணித்துறை போன்றவை வளர்ச்சிப் பாதையில் சென்றது. வேளாண்மையின் வளர்ச்சியானது 1991-92 மற்றும் 1996-97களுக்கிடையே ஆண்டுக்குச் சராசரியாக 3 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்தது. ஆனால் இது தொழில் மற்றும் பணித் துறையினை ஒப்பிடும் போது குறைவான அளவிற்கே பதிவாகியிருந்தது. 1991-1996ஆம் ஆண்டுகளுக்கிடையே நேரடி அந்நியச் செலாவணி முதலீடானது 100 விழுக்காடு அதிகரித்திருந்தது. 1992-93க்கு முன்பு இந்தியாவின் சில பகுதிகளில் பஞ்சம் ஏற்பட்டதன் காரணமாகக் கிராமப்புறங்களில் வறுமை அதிகரித்திருந்தது. ஆனால் அடுத்த ஆண்டே வறுமையின் அளவு 6 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்திருந்தது. 1993-1998ஆம் ஆண்டுகளுக்கிடையே சமூகச் செலவு மற்றும் கிராமப்புற வளர்ச்சி செலவானது 10 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருந்தது. இதனால் வேளாண் கூலியானது 1992-93 மற்றும் 1993-94ஆம் ஆண்டுகளுக்கிடையே 5 விழுக்காடு அதிகரித்திருந்தது. இதே ஆண்டுகளில் இந்தியாவின் வேலைவாய்ப்பானது ஆண்டுக்கு 6.3 மில்லியன் அதிகரித்தது. நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்றபோது பணவீக்கம் 1991ல் 17 விழுக்காடாக இருந்தது ஆனால் பணக் கொள்கைகள் மற்றும் நிதி சீர்திருத்தங்களினால் 1996ல் 5 விழுக்காடாக்க குறைக்கப்பட்டது. உணவுப் பொருட்களுக்கான மானியம் 1991-92ல் ரூ.28.5 பில்லியனாக இருந்தது 1996-97ல் ரூ.61.14 மில்லியனாக அதிகரித்தது. உர மானியம் 1989-90ல் ரூ.45.42 பில்லியனாக இருந்தது 1995-96ல் ரூ.62.35 பில்லியனாக அதிகரித்தது. 1992ல் 7.3 மில்லியன் ஏக்கர் பயிர்செய்யும் நிலங்கள் உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது. இதில் 5 மில்லியன் ஏக்கர் ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் 4.7 மில்லியன் விவசாயிகள் பயனடைந்தனர்.

பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பலன் 2003-04 முதல் 2008-09 முடிய இந்தியா இதுவரைக் கண்டிராத வளர்ச்சியினை எட்டியது (10 விழுக்காடு). சேவைத்துறையானது மற்றத் துறைகளைக் காட்டிலும் அபரீதமான வளர்ச்சியினைக் கண்டது. மறுகட்டமைப்பு செய்யப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழிற் கொள்கையானது சேவைத்துறையினை வேகமான வளர்ச்சியினை எட்டுவதற்கு உதவியது. 2008க்கு பின்பு உற்பத்தித் துறையின் வளர்ச்சி மிகவும் குறைவான அளவிலிருந்தது. வேளாண்மைத் துறையினை பொருத்தமட்டில் ஏற்றத்தாழ்வுடனான வளர்ச்சி பதிவாகியிருந்தது. உணவு உறுதியானது மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் உணவு கையிருப்பு குறைந்திருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையானது சேவை மற்றும் தொழிற் துறைகளுக்குச் சாதகமாகவும் வேளாண்மைத் துறைக்கு எதிராகவும் இருந்தது. அதே சமயம் வர்த்தக, தொழிற்கொள்கைகளின் சீர்திருத்தத்தினால் வர்த்தக நிலை மேம்படுத்துவதாகவும், இது வேளாண்மையினை நோக்கியதாக இருந்தது. இதனால் வேளாண் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையினை இந்தியா தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது போன்ற நிலைகளில் பெருமளவிற்கு நன்மைகளை உண்டாக்கியிருந்தது. இதன் விளைவு வேளாண் வளர்ச்சியானது 1991லிருந்து சீரற்ற போக்கு காணப்படுகிறது. சராசரி உற்பத்தியானது மக்கள் தொகையின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இல்லை. உலகளவில் தலா உணவு நுகர்ச்சி அளவினைவிடக் குறைவாக உள்ளது. குடும்பங்களின் சராசரியாக உணவிற்குச் செலவிடுவது உலக அளவில் உள்ள பணக்கார நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இதனால் உணவுப் பண்டங்களின் விலை அதிகரித்து பணவீக்கத்திற்கான காரணமாக உருவெடுத்தது. இது ஏழை மக்கள் அதிகமாக பாதிப்பிற்கு உண்டாக்கியது. தற்போது வருமையினைக் கணக்கிடுவதில் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உணவு மட்டுமல்லாமல் சமூகக் காரணிகளும் (கல்வி, சுகாதாரம்) கணக்கில் கொண்டு வறுமையினை அன்மைக் காலமாக அளவிடப்படுகிறது. இதனைக்கொண்டு பார்க்கும்போது, வறுமையில் வாழ்ந்தவர்கள் நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பெரும் ஏற்றத் தாழ்வுடன் உள்ளது என்பதைப் பல ஆய்வுகள் வெளிப்படுத்துகிறன. பொருளாதாரச் சீர்திருத்தங்களினால் சமுதாயத்தில் ஒரு பகுதி மக்கள் மட்டுமே பயன் பெற்றுள்ளனர். அதேசமயம், மக்களிடையே பெரும் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகிறது (Thomas Piketty). சில பொருளியல் அறிஞர்கள் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு 1991லிருந்து வறுமையானது அதிக அளவில் குறையத் தொடங்கியது என்று குறிப்பிடுகின்றனர்.

(தொடரும் ……)

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 6 ஜனதா அரசும் வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 6 ஜனதா அரசும் வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்




ஜன சங்கம், பாரதிய லோக் தளம், சோசியலிஸ்ட் கட்சி, மொரார்ஜி தேசாயின் பழைய காங்கிரஸ் ஒன்றிணைந்து 23.1.1977ல் ஜனதா கட்சியினைத் துவக்கி 1977ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. இத்துடன் பாபு ஜகஜீவன் ராமின் ஜனநாயகத்திற்கான காங்கிரஸ் இயக்கமும் ஒன்று சேர்ந்தது. 22.03.1977ல் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில் ஜனதா கட்சி 298 இடங்களைப் பெற்று மொரார்ஜி தேசாய் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றார். இது காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகச் சுதந்திரம் பெற்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனதா கட்சியானது வடஇந்திய மாநிலங்களான உத்திரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும் வெற்றியினைப் பெற்றிருந்தது ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொரார்ஜி அமைச்சரவையில் பாபு ஜகஜீவன் ராம், அடல் பிஹாரி வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ், எச்.எம்.பட்டேல், சரண் சிங், மது தன்டவதே போன்ற முக்கியத் தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர். இதன்பின் பல மாநிலங்களில் ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்தது. மேற்கு வங்காளத்தில் ஜோதி பாசு தலைமையிலான இடதுசாரி ஆட்சியானது நிலச் சீர்திருத்தத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. இதன்படி உழவர்களுக்கு நிலம் சொந்தம், நிலக் குத்தகையை 50 விழகாட்டிலிருந்து 25 விழுக்காடாகக் குறைத்தல் உட்பட பல சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவு ஒரு மில்லினுக்கு மேற்பட்ட ஏழை, நிலமற்ற விவசாயிகள் இம்மாநிலத்தில் பயனடைந்தனர்.

மார்சு 1977லிருந்து ஜூலை 1979முடிய 20 மாதங்கள் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்தது. வளர்ச்சி சார்ந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது, உண்மையான சமூக நீதியினை செயல்படுத்துவது, செயல்படாமல் அல்லது முடங்கியிருந்த நிர்வாகத்தைச் செயல்பட வைப்பது என்ற அடிப்படையில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டது. பின்னால் சில நாட்கள் சரண் சிங் பிரதம மந்திரியாகப் பதவியிலிருந்தார். பல்வேறு சித்தங்களின் கூட்டு ஆட்சியாக (ஜனதா, ஜன சங்கம், சோசலிஸ்ட் கட்சி, இளம் துருக்கியர்கள், காங்கிரஸின் ஜனநாயக போராளிகள்) இது அமைந்தது. மொரார்ஜி தேசாய் காந்திய நெறியில் பயணித்தவராக இருந்தாலும் முதலாளித்துவச் சார்புடையவர், சரண் சிங் விவசாயிகள் சார்புடையவர், ஜார்ஜ் பெர்னாண்டஸ் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான மனப்பான்மை உடையவர், ராஜ் நாராயண் கிராமப்புறத் தொழில் சார்ந்த நிலைப்பாடு உடையவர், ஜன சங்கத்தினர் உயர் ஜாதி ஆதரவாளர்கள் இவ்வாறு கலவையான சித்தாந்தத்தைக் கொண்டுள்ளவர் ஒன்று சேர்ந்து ஆட்சியினை நடத்தினர். மேலும் ஜனதா கட்சி வடஇந்தியாவில் அதிக செல்வாக்குடனும், தென்னிந்தியாவில் செல்வாக்கற்ற நிலையிலும் இருந்தது. பெரும் நிலக்கிழார்கள், நகர்ப்புற உயர் ஜாதியினர், இடைப்பட்ட ஜாதியினரின் ஆதரவு என ஜனதா கட்சிக்குக் காணப்பட்டது. இதனால் கிராமப்புறங்களில் சமூகப் பதற்றம், ஏழை, பட்டியல் இன மக்கள் மீதான அடக்குமுறை இருந்தது. கிராமப்புறங்களில் ஏழைகள், நிலமற்ற விவசாயிகள், பட்டியல் இனத்தவர்கள் தங்களின் உரிமைக்காகப் போராடினர். நெருக்கடிக் காலங்களில் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்த லேவாதேவியர்களால் கொடுத்த கடனைத் திரும்பப் பெற இயலவில்லை எனவே ஜனதா ஆட்சிக் காலத்தில் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் விவசாயிகளிடையேவும், ஏழை மக்களிடமும் பதற்றம் நிலவியது. இது ஜாதி மோதலை உருவாக்கியது. பல வடமாநிலங்களில் கலவரம் ஏற்பட்டு பட்டியலினத்தவர்கள் கொல்லப்பட்டனர். சட்டவிரோதமாகக் குவிக்கப்பட்ட செல்வங்களை ஒழிப்பதற்காக ஜனதா அரசு ரூ.1000, ரூ.5000, ரூ.10000 செலாவணியினை செல்லத்தக்கதல்ல என்று அறிவித்தது. நெருக்கடிக் காலத்தில் போராட்டம் சட்டப்பூர்வமானது இல்லை என்ற நிலையினை திரும்பப் பெறப்பட்டது. அந்நிய முதலீடு உச்ச அளவாக 40 விழுக்காட்டுக்கு மிகக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. விவசாயிகளையும், விளைநிலங்களையும் பாதிக்கும் கோகோ கோலா நிறுவனம் இந்தியாவில் இயங்க தடை விதிக்கப்பட்டது. இதுபோல் ஐபிஎம் நிறுவனமும் தடைசெய்யப்பட்டது (Mint 2019). இரயில்வே துறை அமைச்சராக இருந்த மது தன்டவதே ஏழை மக்கள் பயணிக்கவும், துறையினை நவீனப்படுத்தவும் பல்வேறு சீர்திருத்தங்களை அத்துறையில் கொண்டுவந்தார்.

ஜனதா கட்சி ஆட்சி அமைந்தபோது காந்தியவாதிகள் மகிழ்ச்சியடைந்தனர். வேளாண்மையிலும், தொழில் துறையிலும் காந்திய சித்தாந்தம் பின்பற்றப்பட்டது. கிராமப்புறம் சுயச்சார்பினை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. துரிதமான வேளாண் உற்பத்தியினை அடையச் செய்தல் என்பது உணவு பற்றாக்குறையினை தீர்ப்பதற்கானதாக மட்டுமல்ல தொழில் துறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்கும் சக்தியையும் உண்டாக்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டது (Georger Cristoffel Lieten 1980). அடிப்படையில் பல்வேறு சித்தாந்தங்களில் கூட்டாக இருந்தாலும் வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஜனதா அரசின் முதன்மையான சித்தாந்தமாக முறைசாரா சிறு மற்றும் பாரம்பரிய தொழில்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. எனவே ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1978-1983) வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், சிறு மற்றும் பாரம்பரியத் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சுயச்சார்பினை அடையவும், உள்நாட்டுத் தொழில்களை உருவாக்கவும் உத்திகள் வகுக்கப்பட்டது.

ஜனதா அரசு பொறுப்பேற்றபோது வேலையின்மையும் வறுமையும் முக்கிய அறைகூவல்களாக இருந்தது. இந்த நிலை பொதுவாகக் கிராமப்புறங்களைச் சார்ந்ததாக இருந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சரண் சிங் முயற்சியால் திட்டக்குழுவில் தொழில்துறையினை சார்ந்த வல்லுநர்கள் உறுப்பினர்களா இருந்த நிலையினை மாற்றி வேளாண் துறையினைச் சார்ந்த வல்லுநர்களை உறுப்பினராக நியமிக்கப்பட்டனர். இதனால் கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்டமிடுதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நவம்பர் 1977ல் கங்கை நதி நீரைப் பகிர்வு செய்வதற்கு இந்திய-பங்ளாதேஷ்க்குமிடையே வற்று காலங்களில் (Lean season) 20500 கன அடி தண்ணீரும் மற்ற காலங்களில் 34500 கன அடி தண்ணீர் பெற ஒப்பந்தம் கையெழுத்தானது. இது வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வேளாண்மையினை மேம்படுத்த உதவியது (Ramachandra Guha 2017).

வேளாண் இடுபொருட்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன, குறைந்தபட்ச ஆதார விலை வேளாண் விளைபொருட்களுக்கு அளிக்கப்பட்டது. இவ்விரண்டையும் பெரிய விவசாயிகள் பயன்படுத்தி அதிக லாபம் பெற்றனர். இதனால் மானியம் 1977-78ல் ரூ.4500 மில்லியனாக இருந்தது 1979-80ல் ரூ.5700 மில்லியனாக உயர்ந்தது. உணவுப் பொருட்களின் கையிருப்பு அதிகரித்திருந்தது. இதனால் 1971ல் கிராமப்புற வறுமை 49 விழுக்காடாகவும் நகர்ப்புற வறுமை 56 விழுக்காடாகவும் இருந்தது குறையத் தொடங்கியது. எனவே உபரியாக இருந்த உணவு உற்பத்தியினை ஏற்றுமதி செய்ய ஜனதா அரசு வல்லுநர்களைக் கொண்ட பணிக் குழுவினை அமைத்தது. இக்குழு பாரம்பரிய வணிகப் பயிர்கள் மற்றும் உணவுப் பயிர்களை ஏற்றுமதி செய்யப் பற்றாக்குறை நிலவும் நிலையினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தது. இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்று ஜனதா கட்சி ஆட்சியில் நிதி அமைச்சராகவும் இருந்த சரண் சிங் குறிப்பிட்டார். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நகர்ப்புறங்களில் வாழும் மேல்தட்டு வர்க்கம் நீண்ட காலமாகவே கிராமப்புற வெகுஜனங்களைச் சுரண்டி வாழ்ந்துவந்தனர் என்றும் அவர்கள் பொருளாதார வளர்ச்சியினைத் தங்கள் பக்கம் திருப்பிவிட்டுக் கொண்டுள்ளனர் என்று சரண் சிங் குறிப்பிட்டார். இத்துடன் தொழில் துறையும் முதலாளித்துவ வர்க்கத்தினரும் கூட்டாகக் கிராம மக்களைச் சுரண்டுகின்றனர் என்றார். இதனால் காலம் காலமாக நிலமற்ற விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் தொடர்ந்து தங்களின் பொருளாதார நிலையினை இழந்து வந்தனர் என்றார். எனவே ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் கிராமப்புற மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 1978-79ன் வரவு-செலவு திட்டத்தில் வேளாண்மைக்கு ரூ.10270 மில்லியன் ஒதுக்கப்பட்டது இது காங்கிரஸ் ஆட்சியில் 1975-76ல் ரூ.7270 மில்லியனா இருந்தது. ஜனதா ஆட்சிக்கு முந்தைய 20 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியில் வேளாண்மை வளர்ச்சியானது 20 விழுக்காடாக இருந்தது 1978-79ல் 1 – 2 விழுக்காடு அளவிற்கே வளர்ச்சி காணப்பட்டது. இது நெருக்கடிக் கால கட்டத்திலிருந்ததைவிட (8 விழுக்காடு) குறைவாகவே இருந்தது ஆனால் தொழில் துறை வளர்ச்சியானது 7 விழுக்காடு வளர்ச்சி காணப்பட்டது (துயல னுரடியளாi 2014). பல்வேறு முயற்சிகள் ஜனதா அரசினால் முன்னெடுக்கப்பட்டாலும் கிராமப்புற ஏழைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்தனர் எனவே அமைப்பு ரீதியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

1978-79ல் சுவிஸ் நாட்டுப் பொருளியல் அறிஞரான கில்பர்ட் எட்டியன் என்பவர் கடந்த 15 ஆண்டுகளில் இந்தியக் கிராமங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த ஆய்வினை மேற்கொண்டார். இவ்வாய்வானது, வேளாண்மைக்கான நீர்ப்பாசன வசதியினை மேம்படுத்தியதால் வேளாண் உற்பத்தித் திறன் அதிகரித்ததாகவும், இனால் கிராமப்புற வருமானம், வாழ்க்கைத் தரம் உயர்ந்தது என்று குறிப்பிடுகிறார். பசுமைப் புரட்சியின் விளைவினால் ரசாயன உரப் பயன்பாடானது நான்கு மடங்கு அதிகரித்தது. வெண்மைப் புரட்சியின் விளைவால் இந்தியாவில் ஆண்டுக்கு 500 மில்லியன் லிட்டர் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்றது. இதனால் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் பயன் அடைந்தனர். வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளில் அதிக அளவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாந்திருந்ததினால் அவர்களின் வாழ்க்கை நிலை மேம்பாடு அடைந்தது. இதனால் அரசியல் ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கினர். 1977ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 36 விழுக்காடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமப்புறங்களைச் சார்ந்தவர்களாக இருந்ததால் கிராமப்புற மேம்பாட்டிற்கு அதிக திட்டங்களைக் கொண்டுவர அழுத்தம் கொடுத்தனர். இதனால் நகர-கிராமப்புற போராட்டங்கள் அதிகரித்தது, விவசாய-தொழில் துறை போட்டிகள் உருவானது. ஜனதா கட்சி கிராமப்புற மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்ததால் பிற்பட்ட மக்களின் குரலாக இது பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. எனவே இதனைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை பெற பி.பி.மண்டல் தலைமையில் குழு அமைக்கப்பட்டது (Ramachandra Guha 2017).

காங்கிரஸ் கட்சி போன்றே ஜனதா கட்சியின் சித்தாந்தமும் பல்வேறு பொருளாதார பிரச்சனைகளுக்குத் தீர்வாக நிலச் சீர்திருத்தம் அவசியமானது என்று கருதப்பட்டது. எனவே ஜனதா அரசு ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் நிலச் சீர்திருத்தத்தைத் துரிதப்படுத்துதல் மற்றும் நிலப் பகிர்வினை செயல்படுத்துதலை முன்னிறுத்தியது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் கண்ட தோல்வியை ஜனதா அரசும் எதிர்கொண்டது. நிலச் சீர்திருத்தம், நிலப் பகிர்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்ற மாநிலங்களில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் விவசாயச் சங்கங்களின் தொடர் போராட்டமும் அரசியல் கட்சிகளின் அழுத்தமும் ஆகும்.

அட்ல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி தலைவர்களாக் கொண்ட பாரதீய ஜன சங்கமானது, இந்து-முஸ்லீம்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஜனதா கட்சியிலிருந்து வெளியேறியது. இதனால் மொரார்ஜி தேசாய் அரசானது கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து சரண் சிங் 28.07.1979ல் காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறது என்ற அடிப்படையில் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றார். ஆனால் பாராளும்மன்றத்தில் காங்கிரஸ் ஆதரவாக இல்லாத நிலையில் சரண் சிங் 20.8.1979ல் பதவியினை ராஜினாமா செய்தார். சரண் சிங் 23 நாட்கள் மட்டுமே பிரதம மந்திரியாக இருந்தார். ஆனால் 14.01.1980வரை காபந்து பிரதம மந்திரியாகப் பதவி வகித்தார். சரண் சிங் இந்திய அரசியலில் விவசாயிகளின் முகமாகவே பார்க்கப்பட்ட முக்கிய தலைவர் ஆவார். சரண் சிங் விவசாயிகளின் நலனையும், வாழ்வினையும் மேம்படுத்துவது மட்டுமே முக்கிய குறிக்கோளாகக் கொண்டவர். உத்தரப் பிரதேசத்தில் முதல்வராக பதவி வகித்தபோது நிலச் சீர்திருத்தத்திற்கான முக்கிய முடிவுகளை மேற்கொண்டார். ஜமீன்தார் ஒழிப்பிற்கான சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தினார் இதனால் இவரை இடைத் தரகர்களின் ஒழிப்பிற்கான வடிவமைப்பாளராகக் காண முடிகிறது. விவசாயிகள் முறைசாரக் கடனாக வட்டிக்காரர்களிடம் பணம் பெற்றுப் படும் துயரத்தினை ஒழிக்கச் சட்டம் கொண்டுவந்தார், நிலப் பயன்பட்டு சட்டம், உழுபவர்களுக்கு நிலம் சொந்தம், குத்தகைச் சட்டம், போன்ற சீர்திருத்தத்திற்கு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். 1959ல் நேருவினால் கொண்டுவரப்பட்ட கூட்டுறவு விவசாய முறையினை கடுமையாக எதிர்த்தார்

(https://theprint.in/theprint-profile/chaudhary-charan-singh-prime-minister).

அட்டவணை: ஜனதா அரசில் வேளாண்மையின் போக்கு (1980-81 விலையின்படி)

ஆண்டு வேளாண் உற்பத்தி (ரூ.கோடியில்) GDPயில் வேளாண் உற்பத்தியின் பங்கு
1977 37323 35.1
1978 41994 36.8
1979 63327 28.1
1980 37108 32.5

Source: Kalirajan et al 2001.

ஜனதா அரசிலிருந்த சரண் சிங் வேளாண்மையை ஊக்குவித்தாலும் அடிப்படையில் தொழிற்சாலைகளுக்குச் சாதகமான போக்கே இவ்வாட்சியில் காணப்பட்டது. வேளாண் இடுபொருட்களான ரசாயன உரம், உயர் விளைச்சல் தரும் விதைகள், வேளாண் இயந்திரங்கள், வங்கிக் கடன் போன்றவை வேளாண் சார்ந்ததாக இருந்தாலும் தொழில் வளர்ச்சிக்குப் பெருமளவிற்கு உதவியது. விவசாயிகளில் குறைந்த அளவிற்கே கடன் பெறும் நம்பிக்கை நிலையிலிருந்தனர். இவர்கள் வாணிப பயிர்களான ரப்பர், பழவகைகள், கரும்பு போன்றவை பயிர் செய்தனர். குறைந்த அளவிற்கு உணவு உற்பத்தியில் ஈடுபட்டனர். எனவே உணவு கையிருப்பானது குறைந்தது. அதேசமயம் உயர் ரக உணவு தானிய உற்பத்தியில் ஈடுபட்டு அதனை உள்நாட்டு, பன்னாட்டுச் சந்தைகளில் விற்று லாபம் பெற்றனர். இவர்கள் பெரும்பாலும் பெரிய விவசாயிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய விவசாயிகள் பாரம்பரிய பயிர் சாகுபடி முறையினை பின்பற்றியதால் பசுமைப் புரட்சிக்கு வெகு தொலைவிலிருந்தனர். ஆனால் பன்னாட்டு வேளாண் வாணிபம் என்ற சரண் சிங்கின் திட்டமானது இந்திய விவசாயிகளை புதிய தளத்திற்கு அழைத்துச் சென்றது (Georges Kristoffel Lieten 1980). ஜனதா அரசினை அன்றைய காங்கிரஸ் ஆட்சியினை ஒப்பிடும்போது வேளாண்மையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை ஆனால் கிராமப்புற மேம்பாட்டில் நேர்மறை மாற்றம் கண்டது என்பது மறுப்பதற்கில்லை.

– பேரா.பு.அன்பழகன்