ஞானோதயம் சிறுகதை – பூ. கீதா சுந்தர்

ஞானோதயம் சிறுகதை – பூ. கீதா சுந்தர்




” ஹாய் கூந்தல் ”

” ஹோ அண்ணா, நோ கூந்தல், மை நேம் ஈஸ் குந்தல், எல்லாரும் இப்படியே தான் சொல்றீங்க.. தமிழ் ஆளுக்கு ஒரு பேர் கூட சொல்ல வராது.. ” என்று லேசான கோபத்துடன் கூறி விட்டு கிளம்பினான் குந்தல்.

” சரி தம்பி விடுங்க விடுங்க … இதுக்கெல்லாம் கோச்சிக்கிட்டா அப்புறம் நம்ம எதுக்கு இங்க வந்தோம் சொல்லுங்க.. ஒரு பேர்லயே உங்க அடையாளத்தை விடலன்னா பிறகு எப்படி நாமெல்லாம் ஞானோதயம் அடையறது ? ” ம்.. சரி சாப்டீங்களா.. ?”

” ம்ஹீம்.. இல்லை.. இப்போ தான் யோகாசனம் பயிற்சி முடிச்சி இருக்கு .. ”

” யாரு ? ”

” நான் தான் ”

” அது இருக்கு இல்ல, இருக்கேன்.. ”

” ஆமா பா, நீங்க தமிழ் பேசறது ரொம்ப நல்லா இருக்கு, எந்த ஊரு நீங்க ? ”

” மும்பை ”

” ஆமா, மும்பையில நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க.. சொல்லுங்க…சொல்லுங்க.. சொல்லுங்க.. ”

” எதுக்கு இத்தனை தடவே சொல்ல சொல்றீங்க ? என்று புரியாமல் பார்த்தான..தொடர்ந்து,

” நானு போன அகாடமி இயர்ல தான் காலேஜ் முடிச்சேன்.. எங்க காலேஜ்க்கு சுவாமி ஜீ வந்தாங்க… வாவ்.. அவரோட ஸ்பீச் என் மனசுக்குள்ள போச்சு… எனக்கு ஸ்பிரிசுவல் இன்ட்ரஸ்ட் வந்துச்சு.. எப்படியாவது எனக்கு ஞானோதயம் அடையணும் .. அது தான் இங்கே வந்துட்டேன் ”

” வீட்ல ஒத்துக்கிட்டாங்களா ?”

” ம்ஹீம்.. அவங்க சம்மதிக்கல, ஒரே பிரச்சனை.. ”

“அண்ணா.. நான் எப்படியாவது யோகா டீச்சர் ஆகனும்.. அப்படியே.. ஸ்பிரிட்சுவல் கொஞ்ச கொஞ்சமாக பிராக்டிஸ் பண்ணிட்டு, சுவாமிஜி மாதிரி எண்லைட்மெண்ட் ஆகனும்.. ”

” என்ன?”

” அதுதாண்ணா ஞானோதயம் ”

” ஓ… ஓ. கே, ஓ. கே, உனக்கு இருக்கற ஆர்வத்துல சீக்கிரமே அது நடக்கும் இப்ப வா சாப்டலாம்.. ”

யோகாசனம் சொல்லி தரும் ஆசிரியருக்கான பயிற்சி தினமும் நடைபெறும்.. அன்று சீனியர் ஆசிரியர் வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்தார்…

அந்த ஆசிரமம் மிகவும் அழகாகவும்.. அமைதியான சூழலும் நிறைந்த இடம்… ஆன்மீகத்தின் மீது ஆர்வம் கொண்ட இளம் வயதினர் உட்பட குடும்பத்தோடும் அங்கேயே வந்து தங்கி… ஆன்மீக தேடலில் ஈடுப்பட்டனர். சமையல், ஆசிரம பராமரிப்பு, தோட்ட வேலை, கோவில் பராமரிப்பு என்று அனைத்து வேலைகளையும் அனைவரும் பகிர்ந்து செய்த நேரம் போக தீவிர யோகா மற்றும் தியான பயிற்சிகளில் ஈடுபட்டனர்..

குந்தலுக்கு ஆர்வம் அதிகம் .. எதையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு தெரிந்துக் கொள்வான். அவன் மிக அழகான இளைஞனும் கூட.. அங்கு பயிற்சிக்கு வந்துள்ள இளம் வயது பெண்கள் கூட அவனிடம் பேச விரும்பவார்கள்.. ஆனால் ஆன்மீக தேடலில் இருப்பதால் தாங்கள் அப்படி இருக்கக் கூடாது என்று தங்கள் ஆசையை அடக்கி கொள்வார்கள். அது தானே ஆன்மீகத்தின் முதல் நிலை…

ஒரு நாள் யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பில் பிராணாயாமம் என்று சொல்லப்படும் மூச்சு பயிற்சி வகுப்பு நடந்துக் கொண்டு இருந்தது ..

அப்போது சீனியர் ஆசிரியர் கால், கை பொசிஷன்களை எப்படி சரி செய்வது என்று கூறிக் கொண்டு இருந்தார்..

கபாலபாதி செய்த பின் ஆசனவாய் பகுதியையும் இறுக்கி வைத்து மூச்சை அடக்கி வைப்பது பற்றி கூறினார்..

அப்போது குந்தல் கேட்ட கேள்வியில் அனைவரும் ‘ குபீர் ‘ என சிரித்ததில் ஆசிரமத்தின் மொத்த அமைதியும் காணாமல் போனது..

மாஸ்டர் கூறினார்,
” யோகா பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி செய்யும் போது சரியாக செய்ய வேண்டும் தவறுதலாக செய்தால் பலன் இருக்காது. எனவே நாம் தேவை ஏற்பட்டால் அவர்களை மெதுவாக விரலால் தொட்டு சரி செய்யலாம்..”

” மாஸ்டர் ஜி.. என்க்கு ஒரு டவுட். ”

” சொல்லு குந்தல், என்ன டவுட் ? ”

” மாஸ்டர்… நம்ம கண்ணுக்கு தெரிந்த வரை தவறு இருந்தால் சரி செய்யலாம்.. ஆனால் ஆசனவாயில் மூச்சு இறுக்கமாக பிடித்து இருக்கிறார்களா என்று எப்படி பார்ப்பது? ”

இப்படி கேட்டதும் அனைவரும் சிரித்தது ஏன் என்று கூட குந்தலுக்கு யோசிக்க முடியவில்லை..

” சொல்லுங்க மாஸ்டர் ஜி ”

” குந்தல் முதல்ல நீ சரியா செய்றியா கவனி ” என்று கூறி விட்டு, மாஸ்டர் விட்டால் போதும் என்று கிளம்பி போய் தியானம் செய்ய உட்கார்ந்து விட்டார்.

யோக ஆசிரியர் பயிற்சிக்கு வந்த,
நிகிலா, சத்யா, ராதா, பிரகாஷ், கிருஷ்ணா ஐவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்..

சைலண்ட் போர்டு ஆசிரமம் முழுவதும் இருந்தாலும் இவர்கள் மட்டும் அதை கண்டுக் கொள்ளவே மாட்டார்கள்.. சிரிப்பும் அரட்டையும்.. அமர்க்களப்படும்.

அன்று மாலை ஆசிரமத்தில் ஸ்வாமிஜியின் ஆன்மீக சொற்பொழிவு இருந்தது.. புதிதாக யோகா ஆசிரியர் பயிற்சிக்கு வந்திருந்தவர்களும் அதில் கலந்துக் கொண்டனர்.

” நம்ம வாழ்க்கையில நம்ம செய்ற எல்லா செயலும் சந்தோஷத்தை நோக்கி இருந்தாலும் .. அது அவ்வளவு சுலமா நடக்கல. காரணம் நமக்கு வாழ்க்கை பற்றி புரிதல் இல்லை.. அதனால தான் நாம ஒரு ‘குரு ‘விடம் வந்து நம்மை ஒப்படைத்து ஆன்மீக பாதையில நம்ம கவனத்தை செலுத்தனும்.. ”

” இந்த வருடம் யோகா ஆசிரியர் பயிற்சிக்கு இளைஞன்கள், இளம் பெண்கள் நிறைய பேர் வந்து இருக்கீங்க… இது ஒரு நல்ல முன்னேற்றம்.. நம்ம கவனம் முழுக்க நம்ம ஆன்மீக பாதையில இருக்கனும்.. பிரம்மச்சரியம் கடைப் பிடிக்கும் போது, நம்ம நோக்கம் இன்னும் வேகமா நடக்குது.. நம்ம ஒவ்வொருவருக்கும் நோக்கம் என்ன?.. ஞானோதயம், அதுக்கு தடையாக இருக்கும் மனசையும் வயசையும் கட்டுப்படுத்தனும்.. இங்கே இருக்கற ஆண் பெண் விலகி இருந்து உங்க பிரம்மச்சரியத்தை கடை பிடிக்கனும் .. மனசுல சஞ்சலம் வராம பாத்தக்கனும்.. ”

ஸ்வாமிஜியின் இந்த சொற்பொழிவு குந்தலுக்கு மிகவும் உத்வேகத்தைக் கொடுத்தது.. பிரம்மச்ரியம் தான் ஞானோதயத்தைக் கொடுக்கும் என்று முடிவு செய்தான்.

ஒருநாள்,
ஆசிரமத்தின் அமைதிக்கு இடையே ஒரு சலசலப்பு ..

” குந்தல், உனக்கு விஷயம் தெரியுமா ? ஜோதி அக்கா நேத்து ராத்திரி சரியா பன்னிரண்டு மணிக்கு என்லைட் ஆகிட்டாங்க ”
மிகவும் ஆச்சரியமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள் நிகிலா… கூடவே அதே ஆச்சரியமான முகத்துடன் மற்ற நண்பர்கள்…

” வாட்… ரியலி. ஹோ… கிரேட் ஸ்வாமிஜி ” என்று குந்தல் மிகவும் பரவசமாகி விட்டான். கண்களை மூடி ஸ்வாமிஜியை நினைத்து வணங்கினான்.

தியானம் செய்யும் இடத்தில் ஜோதி அக்காவை பார்த்தவன், மிகவும் மரியாதையோடும் பய பக்தியோடும் வணங்கி சற்று இடைவெளி விட்டு விலகி சென்றான். ஜோதி அக்காவுக்கு ஒன்றும் புரியவில்லை,
‘ குந்தல் ஏன் இன்னைக்கு வித்தியாசமாக நடந்துக் கொள்கிறான் ‘ என்று எண்ணியபடியே போனார்.

குந்தலுக்கு அன்று முழுவதும் ஜோதி அக்கா ஞானோதயம் அடைந்த விஷயமே மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. தானும் தீவிர ஆன்மீக பயிற்சி செய்ய வேண்டும்.. அப்போது தான் ஸ்வாமிஜி
தனக்கும் அந்த அருளை வழங்கி ஞானமடைய செய்வார் என்று எண்ணினான். ஆக்டிவிட்டீஸ் நேரம் போக மற்ற நேரங்களில் தீவிர தியான பயிற்சிகளில் ஈடுப்பட்டான். யாரிடமும் அதிகமாக பேசாமல் மெளன விரதம் இருந்தான்…

உணவு வகைகளை தவிர்த்து கஞ்சி மட்டுமே இரண்டு வேளைக்கு குடித்து வந்தான். சில நேரங்களில் அதைமும் தவிர்த்து வெறும் தண்ணீர் மட்டுமே குடித்தான் .. ஒரு வாரத்திற்குள் மிகவும் சோர்ந்து போனான் .. உடலும் இளைத்தது.

மேலும் ஜோதி அக்காவை பார்த்து அவர்கள் ஞானோதயம் அடைந்த அனுபவத்தைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டி, அவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்றான்.

ஜோதி அக்கா தன் கணவர், மாமியார் மற்றும் ஐந்து வயது பெண் குழந்தையோடு ஆசிரமத்திற்கு மொத்தமாக வந்து விட்டார் … அவர் கணவர் அரசாங்க உத்தியோகத்தில் மேலதிகாரியாக இருந்தவர், கை நிறைய சம்பளம்.. சொந்த வீடு வாசல்.. வேலையை வாலண்டியரிங் ரிடையர்டுமெண்ட் கொடுத்து விட்டு வீட்டையும் விற்று விட்டு, ஆசினரமத்தில் உள்ள வானபிரஸ்தாவில் தனி வில்லா வாங்கிக் கொண்டு வந்து விட்டனர்..

அங்கு தனி வில்லா வாங்கினாலும் அது அவர்கள் சொத்து அல்ல.. ஆசிரமத்தின் சொத்து தான்.. எவ்வளவு நாள் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அது வரை அங்கு இருக்கலாம்.. அது அவர்களுக்கு பிறகு அவர்கள் சந்ததிக்கு சொத்தாக வராது.

வில்லா வாங்கியது போக
மீதி பணத்தை ஜோதி அக்கா வங்கியில் டெபாசிட் செய்து விட்டு வந்துள்ளனர்… அதில் வரும் வட்டியை தங்கள் செலவுக்கு பயன்படுத்தினார்கள்… ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட அவர்கள் குடும்பமாக ஆசிரமம் வந்து விட்டனர். அவர்கள் அடிக்கடி புதிதாக உடுத்தும் ஆடைகள் மற்றவர்களுக்கும் ஆசையை தூண்டும்..

‘ ப்ச், வீட்டுல இருந்து இருந்தா நம்மளும் இது போல ஆடைகளை உடுத்தி இருக்கலாம்’ என்று தோன்றும், உடனே தங்கள் ஆன்மீக பாதை நினைவுக்கு வந்த உடன் அந்த எண்ணம் விலகி விடும்.

அவர்கள் தங்கி இருந்த வில்லாவுக்கு தான் குந்தல் போனான். கதவு திறந்தே இருந்தது
உள்ளே போனான்.. ஜோதி அக்காவும் அவர் கணவரும் தியானத்தில் இருந்தார்கள். பாட்டி பாப்பாவுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருந்தார்.

” வாப்பா குந்தல் ” என்று அழைத்தவர் உட்கார சொல்லி சணல் கயிற்றில் பின்னிய மேட் எடுத்து போட்டார்.

குரல் கேட்டு இருவரும் கண் விழித்தனர்.

” ஹலோ குந்தல்.. வா வா என்னப்பா எங்களை தேடி வந்து இருக்க ?”

சற்று நேரம் அவன் ஒன்றும் பேசவில்லை..

‘ ஆன்மீகத்தில்
எவ்வளவு தீவிரம் இருந்து இருந்தால் இப்படி குடும்பமாக வந்து இருப்பாங்க ‘ என்று எண்ணியபடியே இருந்தவனுக்கு ‘ சட்டென ‘ தன் குடும்பம் நினைவுக்கு வந்தது… அவர்களும் இப்படி இவர்களை போல இருந்து இருக்கலாம் என்று எண்ணியவனுக்கு மிக பெரிய பெருமூச்சு வந்தது.

” குந்தல் என்ன ஆச்சு, ஏன் எதுவுமே பேசமாட்டேங்குற ?”

” ஜோதி அக்கா, யூ ஆர் சோ கிரேட், எப்படி இந்த சின்ன வயசுல இப்படி ?”

” எப்படி ? ” என்று கேட்டார் ஜோதி..
மற்றவர்களும் ஒன்றும் புரியாமல் குந்தலை பார்த்தார்கள்.

” உங்க கணவர் இருக்கார், பாப்பா இருக்கு, அவங்களை நீங்க மிஸ் பண்ண மாட்டீங்களா ?”

” நான் ஏன் அவங்கள் மிஸ் பண்ணனும், அவங்க என் கூட தானே இருக்காங்க…அப்படி இல்லன்னாலும் இப்போ என்ன ஆயிடுச்சு ? ” ஜோதி அக்காவுக்கு தலை சுற்றியது.

” ஆமா, நீங்கதான் எல்லாத்தையும் கடந்து போய்ட்டீங்களே, உங்களுக்கு ஏது பந்த பாசம் ? எல்லாருமே ஒன்னு தானே ? ” என்றான்.

” குந்தல், வந்ததுல இருந்து நீ என்ன பேசறன்னே புரியல ”

” நீங்க இப்போ இருக்கற தன்மைக்கு நான் பேசறது எல்லாம் உங்களுக்கு புரியுமா.. சரி அக்கா, நீங்க இந்த நிலையை அடைய என்ன பண்ணீங்க ? ”

” எந்த நிலையை ? ”

” ஜோதி, இந்தாம்மா பாப்பாவை பாத்துக்கோ, நான் சாப்பிட்டு வரேன்.. ”

” சரிங்கம்மா ” என்று பாப்பாவை தூக்கிக் கொண்டவள், ” நான் பாப்பாவை தூங்க வைக்கனும் குந்தல், அப்புறம் பாக்கலாம்.. ” என்று அவனை அனுப்பி விட்டு,
‘ அப்பாடா என்று பெருமூச்சு விட்டாள்.

” என்னாச்சு இந்த குந்தலுக்கு, ஏன் இப்பல்லாம் என்னை பார்த்தால் சம்மந்தம் இல்லாம பேசறான்… ” என்று தன் கணவரிடம் கூறினாள்.

“:எனக்கும் புரியல ஜோதி “.

மறுநாள்..

அனைவரும் காலை 5 மணிக்கு யோக பயிற்சி செய்யும் இடத்திற்கு ஒன்று கூடினார்கள்.

பயிற்சி செய்ய வராதவர்களை கண்காணிப்பது வழக்கம்.. குந்தல் தொடர்நது மூன்று நாட்களாக வரவில்லை… ஆண்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி இருந்த குந்தலை அழைத்து வர ஒரு சந்நியாசி பார்க்க சென்றிருந்தார்.

அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர வைத்தது… குந்தல் ஒட்டு துணி இன்றி அரை கண் மூடி இரண்டு கைகளில் முத்திரை வைத்து தியானம் செய்துக் கொண்டு இருந்தான்.

சந்நியாசி உடனே அவன் பக்கத்தில் இருந்த ஒரு போர்வையை எடுத்து அவன் மீது போர்த்தி விட்டு,

” குந்தல், என்னப்பா இது ? ஏன் இப்படி இருக்க ? என்ன ஆச்சு உனக்கு .. இப்படி சுத்தமா ஒட்டு துணி கூட இல்லாம இருக்கியே.. “”

” ஸ்வாமி, எனக்கு சீக்கிரம் ஞானோதயம் அடையனும், அதுக்கு தான் நான் கடுமையான பயிற்சி பண்றேன் ”

” இப்போ அது பத்தியெல்லாம் என்ன கவலை… அது நடக்கும் போது நடக்கும் .. நீ எழுந்து வா மொதல்ல.. ”

” இல்லை ஸ்வாமி.. அப்படி எல்லாம் இருக்க முடியாது, பாருங்க ஜோதி அக்காவுக்கு ஃபேமிலி இருக்கு… அப்படி கூட அக்கா இந்த நிலையை அடைந்து இருக்காங்க… ”

” எந்த நிலையை அடைந்தாங்க ?”
ஸ்வாமிக்கு ஒன்றும் புரியவில்லை..

” ஹோ.. ஸ்வாமி, அவங்க என்லைட் அடைஞ்சிட்டாங்க இல்ல, அது பத்தி தான் சொல்றேன். ”

” என்ன சொல்ற குந்தல்.. ?
அது என்ன எதாவது வேலையா? இல்லை ப்ரமோஷனா..? அப்படி எல்லாம் எதுவும் இல்லை, யாரோ உனக்கு சும்மா சொல்லி இருக்காங்க, அது அவங்க அவங்க உணர்கிற ஒரு நிலை … நீ ஏதோ தப்பா புரிஞ்சிகிட்டு, சாப்பிடாம, தூங்காம, இப்படி துணி உடுத்தாம, என்னப்பா நீ …? ஆமா, இதை எல்லாம் உனக்கு யார் சொன்னது? யார் எது சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா .. ” என்று கிளம்பி விட்டார் அந்த சந்நியாசி..

குந்தலுக்கு ஏமாற்றமும் அவமானமும் தாங்க முடியவில்லை
அவனுடைய உடையை எடுத்து உடுத்திக் கொண்டு நேராக நிகிலா கேங்கைத் தேடி போனான்..

” ஹே.. எதுக்கு எங்கிட்ட அப்படி எல்லாம் பொய் சொன்னீங்க.. ? ” கோபமாக கேட்டான்.

” என்ன சொன்னோம் ? ”

” அதான், ஜோதி அக்கா பத்தி..”

அனைவரும் சிரித்தனர்.

” குந்தல், உண்மையிலயே நம்பிட்டியா, நாங்க சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னோம் பா ”

” ஸ்டுபிட், ஞானோதயம் அடையறது எனக்கு எவ்வளவு விருப்பம் தெரியுமா… ?
இது என்ன விளையாட்டு? முதல்ல நீங்கல்லாம் எதுக்கு இங்கே வந்தீங்க.. ? சரி, அது உங்க இஷ்டம் … இனிமே இப்படி பண்ணாதீங்க .. ” என்று பேசும்போதே அழுது விட்பான்.

” நிகிலா தான் சும்மா விளையாட்டுக்கு பண்ணலாம்னு சொன்னா, நாங்களும் அப்படி தான் நினைச்சசோம்.. நீ இவ்வளவு சீரியசாக எடுத்துக்குவன்னு நாங்க நினைக்கல… தயவு செய்து எங்களை மிஸ்டேக் பண்ணிக்காத குந்தல்..” என்றான் கிருஷ்ணா.

அவன் பக்கத்தில் நின்றிருந்த நிகிலாவும் ‘ ஆமாம்’ என்பது போல முகத்தை வைத்து இருந்தாள்..

நிகிலாவை குந்தலுக்கு
மிகவும் பிடிக்கும். அவளைப் பார்க்கும் போது அவனுக்குள் ஒரு சந்தோஷம் உண்டாகும்.. ஆனால் அந்த பரவசத்தை விட அவன் வேறு ஒரு பரவச நிலையை அடைய விரும்பினான்.

ஆனால், அன்று அவளைப் பார்க்கவே பிடிக்காமல் போய் விட்டான்..

அறைக்கு சென்ற குந்தலுக்கு தன்னை தானே நினைக்கையில் அவமானமாக இருந்தது.. அதிகமாக அறையை விட்டு வெளியே வரவில்லை. யோகா பயிற்சிக்கு கூடத்திற்கு கூட செல்லாமல் அறையிலேயே பயிற்சி செய்துக் கொண்டான்.. சரியாக சாப்பிடவில்லை, யாரிடமும் பேசுவதில்லை.. அப்படியே சாப்பிட போனாலும் உணவு பறிமாறும் இடத்தில் நிகிலா இருந்தால் உணவை வாங்காமல் தட்டை வைத்து விட்டு வந்து பட்டினி கிடந்தான்… அவள் தன்னை ஏமாற்றி கோமாளியாக்கியது மிகவும் அவமானமாக உணர்ந்தான்.

குந்தல் முன்பு போல் உற்சாகமாக இல்லை.. ஏமாற்றமும் அவமானமும் கோபமும் அவனை ஆட்கொண்டது.. இவற்றை போக்க தியானம் செய்ய முயலும்
போதெல்லாம் கண்களை மூட முடியாமல் தவித்தான்..

நிகிலாவை எங்கே பார்த்தாலும் தவிர்த்து விலகினான். சாப்பிட போகும் இடத்தில் அவள் இருந்தால் சாப்பிடாமல், விளையாடும் இடத்தில் அவள் இருந்தால் விளையாடாமல் .. இப்படியே நீடித்தது..

” கிருஷ்ணா, என்ன இது… ஏதோ சும்மா விளையாட்டுக்கு தானே பண்ணோம், இதுக்கு ஏன் இந்த கூந்தல் இவ்வளவு பண்றான், நம்மகிட்ட கூட பரவாயில்லை ஆனா ஏன் நிகிலாகிட்ட இப்படி ஓவரா பண்றான் ? ” நிகிலா கூட ஒரு மாதிரி தான் இருக்கா .. என்னமோ பா நம்ம ஆசிரமத்து பேரைக் கெடுக்காம விட மாட்டாங்க போல இருக்கே ” என்றான் ரமேஷ்.

அன்று காலை, யோகப் பயிற்சி முடிந்து கூடத்தை விட்டு அனைவரும் வெளியேறிய பின்,

” குந்தல், நில்லு.. ஏன் எங்கிட்ட இவ்வளவு டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ற ? ஏன் பேச மாட்டேங்குற ? ”

” லுக் நிகிலா, நம்ம இங்க எதுக்கு வந்தோம் ..? நம்ம பந்தம் உருவாக்க இல்லை.. விடறதுக்கு, வந்த வேலையை பாரும்மா.. ” என்று கூறிவிட்டு சென்று விட்டான்.

நிகிலாவுக்கு ஏனோ மனம் பாரமாகிக் கொண்டே போனது.. குந்தல் அவளை விட்டு விலகி செல்ல செல்ல அவளுக்கு மனதிற்கு நெருக்கமானான்.

ஒரு நாள் ராதாவிடம்,

” ராதா, எனக்கு ஒரு உதவி பண்றியா ? ”

” என்ன ?”

” இந்த லெட்டரை குந்தல்கிட்ட நீ தான் கொடுக்கனும் ”

ராதாவுக்கு தூக்கிவாரிப் போட்டது, ஆசிரமத்துல ஆண்கள் பெண்கள் அதிகமாக பேசக் கூட கூடாது,
‘ இவ என்ன லெட்டர் கொடுக்க சொல்றாளே.. ‘

” அய்யோ என்ன உளற நீ ..லெட்டர் அது இதுன்னு என்னால முடியாது.. அது மட்டும் இல்லை, நீ கூட அப்படி எதுவும் பண்ணிடாதம்மா… ப்லீஸ் ” என்று கை எடுத்துக் கும்பிடு போட்டாள்.

” ராதா ப்ளீஸ்… இதுல தப்பா ஒன்னும் இல்லை, நமக்கு எதுவும் பிரச்சனை வராது” என்று காலில் விழாதக் குறையாக கெஞ்சினாள்.நிகிலா.

வேறு வழி இன்றி வாங்கிக் கொண்டாள் ராதா.. சாப்பிட போன இடத்தில் குந்தலை பார்த்ததும் கை நடுங்கியபடியே, அந்த கடிதத்தை அவனிடம் கொடுத்து,
” நிகிலா தர சொன்னாள் ” என்று கூறி விட்டு ஓட்டம் பிடித்தாள்.

மூன்று நாட்கள் கடந்து விட்டது, குந்தலிடம் இருந்து எந்த பதிலும் இல்லை… எப்போதும் போல எதிரெதிரே பார்க்க நேர்ந்தாலும் அவனிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை… பேசவும் இல்லை.

ஆசிரம அலுவலகத்திலிருந்து நிகிலாவுக்கு அழைப்பு வந்தது.. அங்கு சென்றதும் நிகிலா அதிர்ந்தாள் .. குந்தலுக்கு அவள் கொடுத்த கடிதம், ஆசிரம
நிர்வாகியான சந்நியாசினி ரேணுகா தேவி டேபிள் மீது இருந்தது… நிகிலாவின் முகம் வியர்த்தது.

” நிகிலா, என்ன இது நீ எதுக்கு இங்கே வந்து இருக்க ? உனக்கு என்ன இந்த இடம் காலேஜ் மாதிரி இருக்கா.. ? ஒவ்வொருத்தரும் இங்க வந்து இருக்கறது
எதுக்குன்னு தெரியுமா ? நீ இங்கே வந்து இருக்கறது ஆள் பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கவா இல்லை பிரம்மச்சரியம் வாங்கவா ? ”

” அய்யோ மா அதெல்லாம் எதுவும் இல்லை…சும்மா தான் அந்த லெட்டர்..”

” என்ன சும்மா வா… நீ எழுதி இருக்கற லெட்டருக்கு என்ன அர்த்தம்? ஒரு பிரம்மச்சாரி ஆக இருக்கற ஆண்கிட்ட, உங்கள பாக்காம என்னால இருக்க முடியல, உங்க கூட பேசாம இருக்க முடியல, ஐ மிஸ் யூ.. ன்னு எழுதி இருக்க..
எவ்வளவு கேவலமான விஷயம் இது ? ”

” இல்லம்மா, இதுக்கு அர்த்தம் வேற … நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க .. தயவு செய்து ஸ்வாமிஜி வரைக்கும் இந்த விஷயத்தைக் கொண்டு போகாதீங்கம்மா… ப்ளீஸ்… குந்தல் இதை உங்ககிட்ட கொண்டு வந்து கொடுப்பாங்கன்னு நான் எதிர்பாக்கல ” என்று அழுதாள், உடல் தளர்ந்து போனது.

” ஸ்வாமிஜிக்கு விஷயம் தெரியும்.. அதனால தான் மூனு நாள் ஆச்சி… அப்புறம் உங்க பேரன்ட்ஸ்க்கு தகவல் சொல்லியாச்சு .. அவங்களும் வந்துடுவாங்க .. நீ அவங்களோட கிளம்பலாம்.. வெளிய போய் கல்யாணம் பண்ணி உன் இஷ்டத்துக்கு இருக்கலாம் ”

” அய்யோ மா, தயவு செய்து அவசரப்படாதீங்க, இனி நான் இப்படி எல்லாம் பண்ண மாட்டேன்.. என்னோட அப்பா அம்மாவுக்கு ஸ்வாமிஜின்னா உயிர்.. இப்படி ஒரு விஷயம் நடந்து நான் வெளிய போனா அவங்களுக்கு ரொம்ப அவமானமாவும் கஷ்டமாகவும் இருக்கும்… வேண்டாம்மா … குந்தல்கிட்ட நான் மன்னிப்பு கேட்க்கறேன் .. ” என்று கால் பிடித்து கதறி அழுதாள்.

அவளை தூக்கி நிற்க வைத்தவர்,
” இனி ஒன்னும் பண்ண முடியாது நிகிலா.. போய், பேக் பண்ணு … ஆபிஸ் ரிஜிஸ்டர்ல சைன் பண்ணிட்டு ரெடியா இரு… முக்கியமான விஷயம் கிளம்பற முன்னாடி நீ யார்க்கிட்டயும் பேசக் கூடாது புரியுதா… ” என்றவர் அறையை விட்டு நிகிலாவை போக சொல்லி அனுப்பி விட்டார்.

அழுகையும் துக்கமும் தொண்டையை அடைக்க தன் அறைக்கு ஓடினாள்.. ஆசிரமத்தில் வேறு எங்கும் செல்லக் கூடாது என்று அவளுக்கு கட்டளை இடப்பட்டுள்ளது.

கிளம்பும் முன் எப்படியாவது ஒரு முறை தன் நண்பர்களை பார்த்து, விட வேண்டும் என்றும், குந்தலை பார்த்து, ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்த ?’ என்று கேட்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றாள். ஆனால், யாரையும் காண இயலவில்லை… ஆசிரமத்தில் வேறு யாரும் கூட அவளிடம் பேசவில்லை என்பது அவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

பெற்றோர்கள் வந்தததும், அவர்களும் நிகிலாவை கடுமையாக திட்டினர்… அழுது, அழுது வீங்கிய கண்களோடு நிகிலா பெற்றோர்களோடு கிளம்பினாள். அலுவலகத்தில் கை எழுத்து இட்டு செல்லும்போதும் அவள் பார்வை குந்தலை தேடியது..

நடந்து போகும் போது குந்தல் எதிரில் வந்தான்… அவள் முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை…

நிகிலா ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டாள்.

இனி ஞானோதயம் அடைவதற்கு எந்த தடையும் இருக்காது என்று குந்தல் எண்ணினான் ..

ஸ்வாமிஜி குந்தலின் ஆர்வத்தைத் கண்டு பல வித கடினமான ஆன்மீக பயிற்சிகள் வழங்கினார்.

ஆனால்…

தியானம் செய்ய குந்தல் இப்போதெல்லாம் ஆயிரம் முறை கண்களை முடினாலும் ஸ்வாமிஜி வரவில்லை..
நிகிலா தான் வந்தாள்.

முற்றும்.

பூ. கீதா சுந்தர்,
சென்னை.
91508 27982.