Vanavasigal Book by P. Sasikumar Bookreview By V. Shankar நூல் அறிமுகம்: பெ. சசிக்குமாரின் வானவாசிகள் - வே. சங்கர்

நூல் அறிமுகம்: பெ. சசிக்குமாரின் வானவாசிகள் – வே. சங்கர்

நூலின் பெயர் : வானவாசிகள்
நூலின் : முனைவர் பெ.சசிக்குமார்
பதிப்பகம் : புக் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
பக்கங்கள் : 128
விலை : 120
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

பரந்துபட்ட வாசிப்பில், ஒரு குறிப்பிட்ட செய்தி அல்லது விசயம் மூளைக்கும் உட்கார்ந்துகொண்டு அச்செய்தியோடு தொடர்புடைய மற்ற செய்திகளையும், உள்மனம் நினைவுகூர்ந்து கிளறிக்கொண்டே இருக்கும். 

அப்படித்தான் முனைவர் பெ.சசிக்குமார் அவர்களின் “வானவாசிகள்” (பறக்கும் நுட்பம் குறித்த அறிவியல் பார்வை) என்னும் நூல் விளக்கிச் சொல்லும் செய்திகள்.

உண்மையில், வானவாசிகளான பறவைகள், கூட்டமாகப் பறந்தாலும் அழகு, தனியாகப் பறந்தாலும் அழகு. இந்நூலை வாசித்த பிறகு, காலை மற்றும் மாலை நேர நடைபயிற்சியின் போது பறவைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

புதரில் இருந்து விர்ரென்று குறுக்கே பாய்ந்தோடும் பறவைகள், ஆங்கில ‘வீ’ வடிவத்தில் பறந்து செல்லும் பறவைகள், மரத்தின் உச்சிக்கொம்பில் அமர்ந்துகொண்டு பாட்டுப்பாடும் பறவைகள், தோரணம் கட்டியதுபோல் கரண்ட் கம்பிகளில் வரிசைகட்டி அமர்ந்துகொண்டு அழகுகாட்டும் பறவைகள், மெல்லிய பூவின் காம்பில் அமர்ந்துகொண்டு தேனெடுக்கும் பறவைகள், பலம்கொண்ட கழுகைத் துரத்தியடிக்கும் குட்டிப்பறவைகள், கீச்சிட்டுக்கொண்டே இருக்கும் குஞ்சுகளுக்கு உணவூட்டும் பறவைகள், விசிலடித்தால் எதிர்பாட்டுக் குரல் கொடுக்கும் பறவைகள் என்று நாள்தோறும்  ஏதேனும் ஒரு பறவை அல்லது பறவைக் கூட்டத்தை தொடர்ந்து கவனிக்கவும் அவற்றை நேசிக்கவும் முடிந்தது. 

இத்தனை நாட்கள் பார்த்த அதே பறவைகள்தான் என்றபோதும், படிப்படியாக பறவைகள் பறக்கும் விதத்தை உற்று நோக்க வைத்தது இந்தநூல்தான். 

வெவ்வேறு சமயங்களில், வெவ்வேறு மனநிலையில், பறவைகளைப் பற்றிக் கவிதை எழுதவேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றியது தற்செயலா அல்லது திட்டமிட்டா என்று வேறுபடுத்திபச் சொல்லத் தெரியவில்லை.  ஏனெனில், சில பறவைகளின் சிறகடிப்பும், சிருங்காரமும் சிலிர்ப்பூட்டுபவை. 

இறகும் இறக்கைகளும் என்று தலைப்பிடப்பட்ட உரையாடலை வாசித்தபிறகு, நடந்துசெல்லும் சாலையின் ஓரத்தில் ஏதாவது ஒரு இறகு தட்டுப்பட்டால்போதும், பள்ளிக்கூடச் சிறுவனைப்போல், உடனே அதைப் பொறுக்கி எடுத்து அது எந்தப் பறவையின் இறகாக இருக்கும் என்ற ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது என்னளவில் பெருங்கதை. 

இந்நூல், இரண்டாம் வகுப்பு படிக்கும் கௌதம் தனது அண்ணன் கோகுல் மற்றும் அத்தை மகள்களான சிருஷ்டிகா மற்றும் கௌசிகா ஆகியோருடன் ஈரோடு அருகில் உள்ள வெள்ளோடு சரணாலயத்திற்கு செல்கிறான்.  அவனது சந்தேகங்களுக்கும் மற்ற மூன்று குழந்தைகளுக்குமான உரையாடல் மற்றும் அவர்களது சந்தேகங்களுக்கு அவர்களது மாமா தரும் பதில்கள் என்ற அளவில் இந்நூல் நம்மையும் அவர்களோடு நடைபோட வைக்கிறது.

சற்றேரக்குறைய 15 தலைப்புகளின்கீழ் உரையாடல் வடிவிலும், அதே சமயம் கதைசொல்லும் வடிவிலும் இந்நூலை வடிவமைத்திருப்பது சிறப்பிலும் சிறப்பு. பரவசமூட்டும் பறவைகளின் வாழ்வியலை குழந்தைகளுக்கேற்ற நடையில் எழுதப்பட்டிருப்பதால். பறவை ஆர்வலர்களுக்கு இந்நூல் மிகவும் பிடிக்கும் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியும்.

பறவைகள் பலவிதம் என்று அனைவருக்கும் தெரியும். அவைகள் பறக்கும் விதமும் பலவிதம் என்பதை படம்போட்டு விளக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாதாரண பாமரனுக்கு எழும் “என்னால் பறக்கமுடியுமா?” என்ற கேள்விக்கு விடை எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு பறவை அதிகபட்ச வேகத்தில் செல்லும்போதும், முன்னோக்கிச் செல்லும்போதும், பின்னோக்கிச் செல்லும்போதும், பறந்துகொண்டே ஒரே இடத்தில் நிற்கும்போதும்  தனது சிறகை எவ்வாறு உபயோகித்துப் பறக்கிறது என்ற தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை.

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு எப்போதெல்லாம் வெளிநாட்டுப் பறவைகள் வரத்து அதிகமாக இருக்க்கும்?, பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் பறவைகளின் பங்கு என்ன?  பறவைகள் வலசை செல்லும் பயணத்திற்க்கு எவ்வாறு தயாராகின்றன? என்று ஏராளமான கேள்விகளுக்கு மிக எளிமையாக  ஒரு கதை சொல்லும் பாணியில் பதில்கள் எழுதப்பட்டிருக்கிறது.

தொலைதூரப் பயணத்தை மேற்கொள்ளும் பறவைகள் ஏன் கூட்டமாகவே செல்கின்றன? என்ற கேள்வி மற்றவர்களுக்கு எழுவதைப்போல் எனக்கும் எழுந்ததுண்டு.  இந்நூலைப் படித்தபிறகுதான் அதற்கான விடையை அறிந்துகொண்டேன்.

அதைவிட ஹைலைட்டான விசயம், வல்லூறு, நாரை, பிஞ்ச், மரங்கொத்தி, காகம் போன்ற பறவைகள் பறக்கும் விதத்தைப் பற்றி வாசித்தபிறகுதான், அட! ஆமாம்! இத்தனை நாட்களாக இதனைக் கவனிக்கத் தவறிவிட்டோமே என்று வெட்கம்கொள்ள வைத்தது. 

இன்னும் சொல்லப்போனால், பறவைகளிலேயே மிகப்பெரிய இறக்கைகொண்ட பறவை மயில் என்றுதான் இத்தனை காலமாக எண்ணிக்கொண்டிருந்தேன்.  ஆனால் ஆல்பட்ரோஸ் என்னும் பறவைதான் இப்புவியில் இருக்கும் பறவைகளிலேயே மிகப்பெரிய இறக்கை கொண்ட பறவை என்ற தகவல் எனக்கு முற்றிலும் புதிது.

படித்தவர்களுக்கு அவ்வப்போது எழும் சந்தேங்களைத் தீர்ப்பதற்காகவும், இக்கால பள்ளி மாணவர்கள் எளிதாக அறிந்துகொள்வதற்காகவும் எழுதப்பட்டுள்ள இந்நூல் இயற்கை எவ்வாறு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் பேருதவியாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டத் தவறவில்லை.

இந்நூல் முழுவதும் விரவிக்கிடக்கும் பறவை பற்றிய தகவல்கள் ஆச்சரியத்தையும் சுவாரசியத்தையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

இந்நூலை ஒருமுறைக்கு இருமுறை வாசித்தபிறகு, பறவையின் காதலன் ஆகியிருக்கிறேன்.  வரப்போகும் கோடைகாலத்தில் பறவைகளுக்குத் தண்ணீரும் உணவும் தரத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் குழந்தைகளே. நீங்களும் என் கருத்துக்குச் செவிசாய்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.  

வாசியுங்கள் இந்நூலை.  ”வானவாசி”களோடு வசியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

P. Sasikumar (முனைவர் பெ. சசிக்குமார்) Vaanavasikal (வானவாசிகள்) Children's Books Intro By N. Madhavan (என். மாதவன்)

பரவசமூட்டும் பறவை வாழ்வியல் – என். மாதவன்



வானவாசிகள் (பறக்கும் நுட்பம் குறித்த அறிவியல் பார்வை)
முனைவர் பெ. சசிக்குமார்
பாரதி புத்தகாலயம் 
விலை: 120.00
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/

வேடந்தாங்கலுக்குப் பலமுறை செல்லும் வாய்ப்பைப் பெற்றவன் நான். அந்த ஏரியிலிருந்து அங்கிருக்கும் மரங்களிலெல்லாம் ஒரு போர்வை போர்த்தியது போன்ற நெருக்கமாகப் பறவைகள் அமர்ந்திருக்கும். அருமையான அந்தப் பறவைகளுக்கு அரிவாள் மூக்கன், கரண்டிவாயன் என நாம் வைத்திருக்கும் கரடுமுரடான பெயர்களைப் பார்க்கப் பார்க்க பரிதாபமே மிஞ்சும். காலை நேரங்களில் உணவுக்காக அவை புறப்படும் நேரமாகட்டும், மாலை நேரங்களில் அவை திரும்பும் நேரமாகட்டும் எப்போதும் ஒரே மாதிரியான பரவசத்தை அவற்றிடம் காணமுடியும். இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் மனநிலையை,சமூக வாழ்க்கையை,கூட்டுறவு மனப்பான்மையை அவைகள் கற்பித்துக்கொண்டுதான் இருக்கின்றன. நாம்தான் கற்பிக்கவே பிறந்தவர்கள் என்ற மனநிலையோடு வாழ்ந்து மடிகிறோம்.

கதைகளில் மட்டும் பறவைகளைச் சிலாகித்துப் பேச நாம் தயங்கியதே இல்லை. கூட்டுறவுக்கும், ஒற்றுமைக்கும் சின்னமாகப் பஞ்சதந்திர கதைகளில் பறவைகள் பல இடங்களில் பாராட்டப்பட்டிருக்கின்றன. சித்திரகிரீவன் கதையில் தலைவன் சொல் கேளாமல் இன்னலுக்கு ஆளாகும் பறவைகள் மீண்டும் தலைவன் சொல் கேட்டு உயிர்பிழைக்கும். ஆனால் நம்மில் பலரும் எந்தத் தலைவன் சொல்வதையும் கேட்கமாட்டோம். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தானே.

பறவைகள் எப்போதாவது உணவுக்காகச் சண்டையிட்டுப் பார்த்திருக்கிறோமா? வீடுகளில் வளர்க்கப்படும் கோழி,சேவல்,வாத்து போன்றவையும் வீடுகளை அண்டிவாழும் காகம்,குருவி,மைனா போன்றவையும் உணவுக்கான சண்டையின்றித் தத்தம் உணவை எவ்வளவு நேர்த்தியாகக் கண்டு உண்டு மகிழ்கின்றன. சமூக வாழ்வில் கூட்டுறவின் அவசியத்தை இதனைவிட வேறு எவ்வாறு விளக்கிவிடமுடியும். ஊருக்கு ஒதுக்குப் புறங்களில் பெரும் மரங்களில் வாழும் பறவைகளை உற்றுநோக்குவோம். காலை எழுந்தவுடன் கூடுகளைவிட்டு பறந்து எங்கெங்கோ சென்று கிடைக்கும் இரையினைத் தின்று திரும்புகின்றன. காலையில் அது செல்வதும்,மாலையில் திரும்புவதும் எத்தனை அழகானது. கிராமங்களில் நடைபயிற்சி செய்யும்போது வானின் குறுக்காக அவைகள் பறக்கும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

தேவையான காலங்களில் இறக்கைகளை உதிர்த்து வெப்பத்தைக் குறைத்துக்கொள்ளவும் அவைகளுக்குத் தெரியும். இறக்கைகளின் மூலம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் அவைகளுக்குத் தெரியும். நாம்தான் குளிருக்கேற்ற ஆடை,கோடைக்கேற்ற குளிர்பதனம் என இயற்கையிலிருந்து எவ்வளவு விலக இயலுமோ அவ்வளவு தூரம் விலகி சூழலுக்கு மாசு சேர்க்கிறோம்.

தமது கூடுகளை அவை அமைக்க அவை எடுக்கும் முன்முயற்சிகளைப் பாருங்கள். ஒரு பொறியாளர் தோற்றுவிடுவார். குறைவான வெளிச்சம், நிறைவான காற்று. மனிதர்களால் தொந்தரவின்மை போன்றவற்றை மதிப்பீடு செய்கின்றன. பின்னர்க் கிடைக்கின்ற நார், குச்சி, பஞ்சு போன்றபொருட்களைக் கொண்டு நேர்த்தியான கூடுகளைக் கட்டுகின்றன. பின்னர் அதில் முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொறிக்கின்றன. பின் அவற்றிற்கு உணவூட்டி அவை பறக்கும் வரை உடனிருந்துவிட்டு நீ யாரோ நான் யாரோ எனப் பிரிகின்றன. ஒரு ஆதார் கார்டோ, குடும்ப அட்டையோ நமக்குத் தான் தேவை. கடவு சீட்டில்லாமல், விசா இல்லாமல் கண்டம் தாண்டும் சாதுக்கள் அவை. அவைகள் எளிமையின் சிகரங்கள்.

P. Sasikumar (முனைவர் பெ. சசிக்குமார்) Vaanavasikal (வானவாசிகள்) Children's Books Intro By N. Madhavan (என். மாதவன்)புதிய ஏற்பாடும் இதனாலேயே பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை எனச் சிலாகிக்கின்றது. விதைக்காமல் அறுக்காமல் சாப்பிடுவது மட்டும் சரியா? என்றெல்லாம் கேட்கக்கூடாது. அவைகள் தானியங்களை மட்டும் சாப்பிடுவதில்லை. தானியங்களை உண்ணும் பூச்சி புழுக்களையும் உண்டு, உணவுச் சங்கிலியினைப் பராமரிக்கின்றன.

பறவைகளை அழித்துவிட்டு வெட்டுக்கிளிகளால் சேதப்பட்ட தேசங்களின் உதாரணங்கள் வரலாறு நெடுகிலும் உண்டு. கடந்த ஆண்டு ராஜஸ்தான் போன்ற வடமேற்கு மாநிலங்கள் பட்ட இன்னல்களை அவ்வளவு விரைவில் மறக்கமுடியுமா என்ன? பூச்சிகொல்லி தெளிப்பால் ஏற்படும் இரசாயன மாற்றங்களால், முட்டை ஒடுகள் மெலிதாகி முட்டை குஞ்சாகப் பொரியாமலேயே அழியும் உதாரணங்களும் உண்டு.

உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகளை இவ்வளவு எளிமையாக நிறைவு செய்துகொள்ளும் வாழ்வியல் கல்வி அவை பெற்றுள்ளன. அவற்றின் மொழி நமக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் அவைகள் ஒன்றோடு ஒன்று பல்வேறு கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுதான் இருக்கின்றன. உணவு கிடைத்தவுடன் காகம் கரையத் தொடங்கி அழைப்பது இதற்கான உதாரணம். நிசப்தமான நேரத்தில் சட்டெனத் தோன்றும் ஒலியைக் கேட்டு அவைகள் புறப்படும்போது அவை எழுப்பும் ஒலிக்கும், இயல்பான மாலைநேர இளைப்பாறலில் அவை வெளிப்படுத்தும் ஓசையயும் ஆய்ந்து பாருங்கள். அவற்றின் மொழி நாம் அறியாமலிருப்பதன் சோகம் விளங்கும்.

இப்படிப்பட்ட பறவைகளின் வாழ்வியல் அறிவியலைப் புரிந்துகொள்வது எவ்வளவு அவசியமானது. இந்நூலின் நோக்கமே அதுதான். பறவைகள் எத்தனை விதங்களில் காணப்படுகின்றன, அவற்றின் இறகுகளிடையே காணப்படும் வேற்றுமைகள்,அவை எவ்வாறு பறக்கின்றன, பறப்பதற்கு உதவியாக உள்ள அதன் உடலமைப்பு என்ன? கண்டம் விட்டுக் கண்டம் பறப்பதற்கான தேவை அவற்றிற்கு ஏன் உண்டாகிறது, பறவையைக் கண்ட மனிதன் எவ்வாறு விமானம் படைத்தான், விமானத்தின் அறிவியல் பின்னணி என்ன? பறவைகளைப் பற்றிய இப்படியான ஒவ்வொரு கூறுகளும் ஆச்சரியமூட்டுவன.

அவற்றை அறிவியல் பூர்வமாக விளக்க எவ்வளவு உழைப்புத் தேவைப்பட்டிருக்கும். இவை அனைத்தையும் சுவைபட எழுதுவது இன்னும் எவ்வளவு சவாலான பணி. இத்தகைய அரிய பணியை நண்பர் சசிக்குமார் செய்துள்ளார். சிறுவர்கள் மேற்கொள்ளும் களப்பயணம் போல இதனை வடிவமைத்திருப்பது கூடுதல் சிறப்பு. அறிவியலை புனைவு போலச் சொல்வது மிகவும் சவாலானது. அறிவியலும் தெரிந்திருக்கவேண்டும், படைப்பாற்றலும் வேண்டும், குழந்தைமொழியும் கைவரவேண்டும். இவை அனைத்தும் சசிக்குமாருக்கு வாய்த்திருப்பது சிறப்பே.

திருவனந்தபுரம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) பணியாற்றும் இவரது முந்தைய வெளியீடான “விண்வெளி மனிதர்கள்” பரவலான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத் தக்கது. சசிக்குமார் தொடர்ந்து பல வெற்றிகரமான படைப்புகளும் படைத்துப் படைப்புலகில் தொடர்ந்து சிறகடிக்க மனமார வாழ்த்துகிறேன்.

வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

என்.மாதவன்
ஆசிரியர் குழு உறுப்பினர்,
துளிர் (சிறார் அறிவியல் மாதஇதழ்),
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

புத்தகத்தின் அணிந்துரையில் இருந்து….