Indhiya Puratchi Pathai Book P Sundaraiah BookReview By K S Rathakrishnan நூல் மதிப்புரை: பி.சுந்தரய்யாவின் இந்தியப் புரட்சிப் பாதை - கே. எஸ். இராதாகிருஷ்ணன்

நூல் மதிப்புரை: பி.சுந்தரய்யாவின் இந்தியப் புரட்சிப் பாதை – கே. எஸ். இராதாகிருஷ்ணன்




முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் பி.சுந்தரய்யாவின் இந்தியப் புரட்சிப் பாதை என்ற அவருடைய சிந்தனைகள் தமிழ் மொழிபெயர்ப்பு இன்றைக்கு கையில் கிடைத்தது.

இது ஏற்கனவே தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் வெளி வந்துள்ளது. சுந்தரய்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர். மாபெரும் தியாகி. தெலுங்கானா போராட்டத்தை முன்னெடுத்தவர்.

இவரை 1985 கட்டத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நெடுமாறனோடும், தஞ்சை ராமமூர்த்தியோடும் அன்றைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த ப.மாணிக்கம் உள்ளிட்ட மூவரோடு சேர்ந்து சந்தித்தோம்.அப்போது அங்கு சிபிஎம் அன்றைய மாநில செயலார் ஏ.நல்லசிவன் இருந்தார்.

அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் சில நிமிடங்கள் தெளிவாக தன் கருத்துக்களை பேசிக்கொண்டிருந்தார். அது இன்றைக்கும் நினைவில் இருக்கின்றது. பின் சில நாட்களில் காலமானார்.

சுந்தரய்யா அன்றைக்கே கங்கை நதியை தென் முகமாக தமிழகம் வரை திருப்பப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர். கங்கையை திருப்ப வேண்டும் என்று தமிழகத்தை பொருத்தவரை திருவிதாங்கூர் சி. பி. ராமசாமி அய்யர்,சுந்தரய்யா ஆகியோரின் குரலே முதல் குரல் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

கடந்த 1940 முதல் 70 வரை உள்ள இந்திய அரசியலில் நடந்த விஷயங்களைத் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒரு அற்புதமான நூல் தொகுப்பு.மொழி பிரச்சனை, மொழிவாரி மாநிலங்கள் குறித்த செய்திகளும் கருத்தக்களை சுந்தரய்யா பதிவு செய்துள்ளார்.

இந்தியப் புரட்சிப் பாதை என்ற இந்த தொகுப்பை சிந்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதை அன்புக்குரிய க.மாதவ்தமிழில்மொழிபெயர்த்துள்ளார். இதன் மூலத்தை கே.பாலச்சந்தர் தொகுத்துள்ளார்.

மார்க்சியம் – லெனினியம்’ நடைமுறைக்கான சித்தாந்தம். அதை நடைமுறைப்படுத்தும்போது, அவ்வப்போது நிலையான, சீர்தூக்கிய மீளாய்வுகளுடன் மதிப்பீடு செய்ய வேண்டும். நடைமுறை அனுபவ மதிப்பீடுகளின் அடிப்படையில் சித்தாந்தம் மேம்படுத்தப்படும். அந்த வகையில் ‘மார்க்சியம் – லெனியம்’ ஒரு வளரும் சித்தாந்தம்.

தோழர் சுந்தரய்யா இந்தியப் புரட்சி இயக்கத்தின் சித்தாந்தத் தலைமையாக மட்டுமின்றி நடைமுறையிலும் முன் நின்று வழி நடத்தியதில் முக்கியமான தலைவர் ஆவார். இந்தியப் புரட்சிப் பாதையைப் பற்றி வேறு எவரையும்விட அதிகமாக எழுதிப் பதிவிட்டு ஆவணப்படுத்தியவர் தோழர் சுந்தரய்யா தான் என்று துணிந்து கூறலாம்.

பி. சுந்தரய்யா (1 மே 1913 – 19 மே 1985) மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினரும் , தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றியவர்.

பி. எஸ் சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் பொழுது சுதந்திர போராட்ட இயக்கத்திலும், பின்னர் பொதுவுடைமை இயக்கத்திலும் அதிக ஆர்வம் கொண்டார். 1932ம் ஆண்டு உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று தஞ்சாவூர் சிறுவர் சிறை, திருச்சி மற்றும் இராஜமகேந்திரபுரம் சிறைகளில் தண்டனைக் காலத்தை கழித்தார். 1933-34ம் ஆண்டுகளில் தென்னியதியாவில் பொதுவுடைமைக் கட்சியை உருவாக்க வந்த தோழர் அமீர் ஹைதர்கானின் தொடர்பால் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஈர்க்கப்பட்டார். பின்னர் 1934ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரானார். அவருக்கு கட்சி ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கட்சியை உருவாக்கும் பணியை அளித்தது. அதை அவர் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.

24 வயது இருக்கும் போதே 1936-ல் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக மாறினார். நாட்டில் கட்சி மத்தியத்துவப்படுத்தப்பட்ட கட்சியாக மறுசீரமைப்பு செய்யப்பட்டபின் அமைக்கப்பட்ட முதல் மத்தியக் குழுவாக அதுஇருந்தது. தென்னிந்தியாவில் பொதுவுடமைக் கட்சியைக் கட்டும் பணி அவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. ‘‘கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு’’ என்ற நூலில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதியிருப்பது போல, கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் முதல் பிரிவைத் தெரிவு செய்ததில் பி.சுந்தரய்யா முக்கிய பங்கு ஆற்றியிருக்கிறார். 1939ம் ஆண்டில் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியவுடன் கம்யூனிஸ்ட் கட்சி அந்த யுத்தத்தை எதிர்த்தது. இதனால் ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் 1940ம் ஆண்டில் நாடு முழுவதிலும் கம்யூனிஸ்டுகளை கைது செய்த பொழுது சுயதரய்யா கைதாகாமல் தப்பினார். சென்னையில் தென்னிந்தியாவுக்கான கட்சியின் தலைமறைவு மையத்தை உருவாக்கி வழிகாட்டினார்.

1942ம் ஆண்டில் தடை நீங்கிய பின், அவர் கட்சியின் முடிவுப்படி பம்பாயிலிருந்த கட்சியின் தலைமையகத்திலிருந்து செயல்பட்டார். கட்சிக்கென ‘பீப்பிள்ஸ் பப்ளிசிங் ஹவுஸ்’ என்ற புத்தக நிலையத்தை உருவாக்கினார். 1943ம் ஆண்டில் ஜப்பானியப் படைகள் இந்தியக் கடற்கரைப் பகுதிகளில் நுழைந்து இந்த நாட்டை கைப்பற்றக் கூடும் என்ற நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் சென்று கட்சி ஊழியர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க முடிவு செய்து, அந்தப் பணியை சுந்தரய்யாவிடம் ஒப்படைத்தது. அவர் நாடு முழுவதும் சென்று தோழர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தார்.

1952ம் ஆண்டில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரய்யா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1955ம் ஆண்டில் நடைபெற்ற முதல் ஆந்திர மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற சுந்தரய்யா சட்டமன்றத்தில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1955ம் ஆண்டிலிருயது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தோன்றிய வர்க்க சமரசப் போக்கு தொடர்ந்து நீடித்து, கட்சி 1964ம் ஆண்டில் பிளவுபட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது உருவாயிற்று.அவ்வாண்டு நவம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் ஏழாவது அகில இந்திய மாநாட்டில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 1977ம் ஆண்டு வரை(பன்னிரண்டு ஆண்டு காலம்) அப்பொறுப்பில் செயல்பட்டார்.

பின்னர் அவர் ஆந்திராவிற்கு திரும்பி, அங்கே கட்சியின் மாநிலச் செயலாளர் ஆனார்.1967இல் அக் கட்சியின் மத்தியக் குழுவால் நிறைவேற்றப் பட்ட ‘கட்சி ஸ்தாபனத்தின் பணிகள்’ என்கிற புரட்சிகர அமைப்பிற்கான செயல் திட்டத்தில் அவரது முத்திரையைப் பெற்றிருக்கிறது. 1968ம் ஆண்டிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சிக்குள் தோன்றிய இடது அதிதீவிரப் போக்கிற்கு எதிராக அவர் இதரதோழர்களுடன் சேர்ந்து பெரும் அரசியல் தத்துவார்த்தப் போராட்டத்தை நடத்தினார். 1975-76ம் ஆண்டுகளில் அவசரநிலை பிரகடனம் நாட்டில் அமலில் இருந்த போது தலைமறைவாகச் சென்று கட்சிப்பணியாற்றினார்.