நூல் அறிமுகம்: பு.தனிசஷா பாரதியின் புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் – மு.ஆனந்தன்

நூல் அறிமுகம்: பு.தனிசஷா பாரதியின் புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் – மு.ஆனந்தன்




பொள்ளாச்சி இலக்கிய வட்டச் செயலாளர் கவிஞர் பூபாலன் அவர்களின் புதல்வி வளரிளம் பெண் கவிஞர் பூ.தனிக் ஷா பாரதி அவர்களின் புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் என்ற ஹைக்கூ தொகுப்பை வாசித்தேன். முதல் படைப்பு என்பதற்கான எந்த தடுமாற்றமோ தயக்கமோ இல்லாமல் வந்திருக்கும் தரமான படைப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

முற்றும் துறந்த முனிவரின்
கமண்டல நீரில்
மீன்களின் நதி…

ஒரு முனிவர் அதுவும் முற்றிலும் துறந்த முனிவர். அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவரிடம் அந்த கமண்டலத்தைத் தவிர வேறெதுமில்லை. அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த கமண்டலத்திலும் சிறிதளவு நீரைத் தவிர வேறெதுவும் இல்லை. அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த கமண்டலத்தில் ஒரு நதியை அதுவும் மீன்களின் நதியை அந்த முனிவர் அடைத்து வைத்திருப்பதை தன் கவிக் கண்களால் கண்டடைகிறார் இந்தக் குட்டிக் கவிஞர். எவ்வளவு பெரிய விசயத்தை ஒரு சின்ன ஹைக்கூவில் அடக்கிவிட்டார். அந்த முனிவரைப் போல்.

தொட்டி மீன்கள்
என்றென்றும் நீந்துகின்றன
கடலைச் சேர…

தொட்டி மீன்கள் அடைபட்டிருப்பதாக எதிர்மறையாகப் பார்க்காமல் கடலைச் சென்றடைவதற்காக நீந்துகின்றன என நேர்மறையாகப் பார்க்கிறார். அல்லது அந்தத் தொட்டி மீன்கள் கடலைச் சென்றடைய வேண்டுமென்ற தன் ஆழ்மன ஆசையை வெளிப்படுத்துகிறார். இப்படியான ஆழ்மன ஆசை ஒரு கவிஞனுக்கு மட்டுமே வாய்க்கும். அதுவும் பெண் கவிஞருக்கு. அதுவும் வளரிளம் பெண் கவிஞருக்கு மட்டுமே வாய்க்கும்.

வெண்ணிற மலருக்கு
சாயம் பூசிப் போகும்
பட்டாம்பூச்சி…

வெள்ளைப் பூக்களுக்கு வர்ணம் பூச பட்டாம்பூச்சிகளை அழைத்து வந்த கவிஞரின் பேனா முனையில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும்.

கசக்கி வீசிய கதை
விரித்து ரசிக்கிறது
காற்று …

கசங்கிக் கிடக்கும் தாள்களை நாம் வெறுமனே கடந்துதான் செல்கிறோம். அதில் என்னுடைய, உங்களுடைய கவிதைகளோ, கதைகளோ இருக்கலாம்.

ஆனால் நாம் என்றுமே அதை விரித்து வாசிக்க நினைத்ததில்லை. இருக்கட்டும். காற்று அப்படி இருக்காதே.  காற்றை வாசிக்க வைத்த கவிஞரின் கற்பனைக்கு தென்றலின் மென்மையை பரிசளிக்கிறேன்.  இதேபோல் மற்றொரு ஹைக்கூ.  இதில் இலைகளின் கதைகளை மழை படிக்கிறது. 

மழை தினந்தினம் படிக்கிறது
பழுப்பு இலைகளின்
பசுமைக் கதைகளை… 

வாசிப்பு ஆர்வம் குறைந்து வரும் மனிதர்கள் மத்தியில் மழையாவது வாசிக்கட்டுமே.

கனவுகளைத் தாங்கி
பகலெல்லாம் காத்திருக்கிறது
படுக்கை…

என்ற ஹைக்கூ உண்மையிலேயே ஆச்சரியப்படுத்துகிறது. கருப்பொருளிலும் கவியாடலிலும் என்ன ஒரு  முதிர்ச்சி. 

வீட்டுக் கதவைத் திறந்ததும்
கையை விரித்தபடி
காத்திருக்கும் டெடி பியர்கள்…

இப்படியாகக்  கவிஞரின் இளகிய குழந்தை மனது கனமான பெரிய பெரிய சொற்களால் அனைத்துக் கவிதைகளிலும் வெளிப்படுகிறது.

சிரித்த புத்தரின்
மூட்டை நிறைய
சுருண்ட செய்தித் தாள்கள்…

இந்த ஹைக்கு மீண்டும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. ஒன்பதாவது பயிலும் 14 வயதான ஒரு வளரிளம் பருவ வயதுக் கவிஞர் தன் முதல் படைப்பிலேயே இத்துனை தத்துவ வெளிச்சத்துடனும் அழகியலுடனும் கவித்துவத்துடனும் எழுத முடியுமா?. அந்த அரிய பெருமையை அடைந்திருக்கிறார் கவிஞர் தனிக்க்ஷா பாரதி. 

நூல் முழுவதும் மனிதத்தின் மீதும், சமூகத்தின் மீதும், இயற்கையின் மீதும், உயிரினங்கள் மீதுமான அக்கறையை தன் நுண்மைகளுடனும் முரண்களுடனும் படிமங்களுடனும் இயல்பாகக் காட்சிப்படுத்திச் செல்கிறார் கவிஞர்.  கவிஞருக்கு ஒரு கூட்டம் குளிர் மேகப் பொதிகளை வாழ்த்தின் அடையாளமாக பகிர்ந்தளிக்கிறேன்.

வாழ்த்துகளுடன்
மு.ஆனந்தன்.

நூல் : புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் – ஹைக்கூ தொகுப்பு
ஆசிரியர் : பூ.தனிக்க்ஷா பாரதி
விலை : ரூ.70/-
பக்கங்கள் : 88
வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்