நூல் விமர்சனம்: பாரதிசந்திரனின் படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் – மு தனஞ்செழியன்
காலங்கள் தோறும் மனிதன் மறைந்திலும். அவன் அடையாளங்களின் ஊடாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். தமிழ் எழுத்துக்களை அடையாளமாகக் கொண்டு தமிழை உயிராகப் போற்றத் திகழ்ந்த தோழர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களின் படைப்புகளைப் பற்றிய ஆழமான திறனாய்வு கட்டுரை நூல்.
தமிழில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்களைப் பற்றிய சுந்தர ராமசாமி அவர்கள் பட்டியலிடும் போது கவிஞர் அபி அவர்களின் பெயரைக் குறிப்பிடுவார் இன்று இணைய தளங்களிலும் முகநூலிலும் எழுதிக்கொண்டிருக்கும் புதிய கவிஞர்களுக்கு நிச்சயம் அபி அவர்களைப் பற்றித் தெரிந்திருக்காது. ஆனால், காலத்தால் மறுக்கவே முடியாத கவிதைகளைத் தந்து விட்டுப் போனவர். கவிஞர் அபி அவர்களைப் பற்றித்தான் இந்த புத்தகத்தின் முதல் கட்டுரையே தொடங்குகிறது.
“எதிர் எதிர்
தன்னைத் தான் முட்டிக் கொண்டது
காற்று.”
அனுபவங்களை ஹைக்கூவாக கைமாற்றித் தந்திருப்பது கவிஞர் அபி அவர்களுடைய உடைய படைப்பு. தமிழின் மந்திர எழுத்தாளரான கவிஞர் ஆமீர்ஜான் அவர்களைப் பற்றிய கட்டுரை ஆழமாக நீண்டுகொண்டே செல்கிறது. தோழர் குட்டி ரேவதி தான் குறிப்பிடுவார் ‘கவிதைகளுக்கு இலக்கண வடிவம் கிடையாது அவை மொழிக் கருவி.’ என்று அதைப்போல ‘மழைப்பெண் -பழனி பாரதி’ அவர்கள் எழுதிய நூலைப் பற்றி அதன் உட் கூறுகளை அணுக்களாகப் பிளந்து காட்டுகிறார். கவிதையின் ரசனையை உணர்ந்து அதன் பங்களிப்பை மீட்டுக்கொண்டு வந்து கவிழ்ந்த மழை குடையில் சேமித்த மழைநீரை நமக்கெல்லாம் பருக தருகிறார்.
பழனி பாரதியின் கவிதை
“நீண்ட காலமாய்
எனக்குள் புதைந்தை
வைரம் ஆகிவிட்டது
உனக்கு
கொடுக்க முடியாமல்
போன அதே முத்தம்.”
“வரலாறு தெரியாமல் போகிறவர்கள் வேர்கள் அற்ற மரம் ஆகிறார்கள்” என்பார் மாயா ஏஞ்சலோ. அது அதுவே உண்மையும் கூட வரலாறு தெரியாத அவர்களிடம் நீங்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவார்கள். அப்படித்தான் இங்கே பகுத்தறிவுக்கு எதிராக மூடநம்பிக்கை சமூகம் கட்டி உருவாக்கப்பட்டது. மனிதர்களின் சிந்தனைகளை மடைமாற்றச் செய்து மதமும், சாதியும் திணிக்கப்பட்டது. இந்தியா மிகப்பெரும் வரலாற்றுச் சுழற்சியைக் கொண்ட நாடு. மதங்களின் வரலாற்றை மக்கள் தெரிந்து கொண்டால் எந்த மதத்திற்குப் பின்னாலும் வாலாக நிற்க மாட்டார்கள்.
இந்தியாவில் உருவான மதமாக இருந்த பௌத்த மத வரலாற்றைப் பண்டிதர் அயோத்திதாசர் ‘அம்பிகையம்மன்’ வரலாற்று நூலில் சாட்சியங்களுடன் விவரிக்கிறார். அதைப் பற்றிய ஆழமான கட்டுரையும் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
இணைய இதழ்கள் இன்று இலக்கியங்களின் ஒரு முக்கிய பங்காக விட்டது அப்படியான அயலகத் தமிழர்களின் இணையதளங்களான tamil.do.am , blog.selva.us, பற்றியும் அதில் வெளியான கவிதைகளைப் பற்றியும் நமக்கு ரசனையுடன், விவரித்துக் காண்பிக்கிறார் எழுத்தாளர் பாரதி சந்திரன் அவர்கள். தமிழ் இலக்கியங்களின் பகலவர் என்று அறியப்பட்ட சாமி. பழனியப்பன் கவிதைகளையும். ரெ. இராமசாமி அவர்களின் எண்ணற்ற படைப்புகளையும் நெறிப்படக் கட்டுரையாக்கி இருக்கிறார்.
கலைமாமணி விருது பெற்ற உடுமலை நாராயணகவி பாடல்களைப் பற்றி அதன் மனித மேம்பாடு சிந்தனைகளையும், சமூக குறைபாடுகளையும் கவிஞரின் வழியே நமக்கு உணர்த்துகிறார். 1946 ஏப்ரல் சென்னை மாகாணத்தில் ஆட்சி பொறுப்பேற்ற காங்கிரசு அரசு எட்டு மாவட்டங்களில் மதுவிலக்கை பிரகடனப்படுத்தியது அதைப்பற்றி நாராயணகவி எழுதிய சமூகப் பாடலை வித்யாபதி படத்தில் வரும்.
“கள்ளு பீர் , சாராயம்
காம வகைகள் கெட்ட
கஞ்சா அபினிகளெல்லாம்
செடியொழிக்கப்
பிள்ளை குட்டிப் பெண்சாதி
வயிறார உண்ணப்
பெற்றதே சுதந்திரம்.”
நவீன கவிதைகளுக்குள் மட்டும் பயணிக்காமல். சங்க இலக்கியங்களிலிருந்தும், குமரகுருபரர், ஆதிசங்கரரின் வரலாறு உருவாக்கிய பண்பாட்டுக்கூறுகள், சிந்தனைகளையும் ஒரு பிணக்கூறு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.
தமிழில் உருவான எண்ணற்ற அறியப்படாத படைப்புகளைப் பற்றியும், காப்பியங்களின் அறிவியல் கூறுகளைப் பற்றியும், சங்க இலக்கியங்களின் வேளாண்மை பற்றியும், ஒரு தமிழ் அறிவியல் ஏடாக “படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடு” நூலை கையில் ஏந்தலாம்.
நூல்: படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்
ஆசிரியர் : பாரதிசந்திரன் (முனைவர் செ. சு. நா. சந்திரசேகரன்)
ஆசிரியர் எண் : 92832 75782
பொருள் : ஆய்வுக் கட்டுரை
விலை : 180
பக்கங்கள் : 200
பதிப்பகம் : சிவகுரு பதிப்பகம்