Padugalam Book By Peramanallur Sekaran Bookreview By S. P. Agathyalingam நூல் மதிப்புரை: பெரணமல்லூர் சேகரனின் படுகளம்' நாவல் - சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் மதிப்புரை: பெரணமல்லூர் சேகரனின் படுகளம் நாவல் – சு.பொ.அகத்தியலிங்கம்

கூத்துக்கலையைச் சுற்றி…..

பெரணமல்லூர் சேகரனின் ‘படுகளம்’ நாவல் படித்தேன். தலைப்பும் அட்டையும் இந்நாவல் தெருகூத்து தொடர்பானது என அறிவித்தது. களமும் கதையும் அதுவேதான்.

தெருக்கூத்து கலைஞர் முருகேசன் மகன் கர்ணன் கூத்துக் கலைக்காக தன்னை அர்ப்பணித்து கொள்பவனாகவும், புதிய முயற்சி செய்பவனாகவும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறான். பெரியார் தொண்டரும் கட்டிட மேஸ்திரியுமான பலராமன் மகள் மண்டோதரி கதாநாயகி. இரு குடும்பமும் நட்பான குடும்பம். மண்டோதிரியின் தாய் கல்யாணிக்கு தன் அண்ணன் மணியின் மகன் ஐயப்பனுக்கு மகளைக் கட்டிகொடுக்க ஆசை. மண்டோதரியோ கர்ணனைக் காதலிக்கிறார். இந்த முடிச்சை சுற்றியும் தெருக்கூத்தைச் சுற்றியும் நாவலை கட்டி எழுப்புகிறார்.

சேகரன் அவருக்கே உரிய நாடக பாங்கில் கதையை நகர்த்திச் செல்கிறார். தெருக்கூத்து தன் பழமையான புராணத் தடத்திலிருந்து வெளியேறி புதுமையைப் படைக்க வேண்டும் என்கிற சேகரினின் ஆசையையும் அமைப்பு சார்ந்த பார்வையையும் இந்நாவல் நெடுக பிசைந்திருக்கிறார்.

தெருக்கூத்துக்கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டும், அதை நம்பி வாழும் கலைஞர்களை அமைப்பாக்கி வழிநடத்த வேண்டும் என்கிற தன் தீர்மானத்திற்கொப்ப பாத்திரங்களை கட்டமைத்திருக்கிறார். கதையைக் கொண்டு சென்றிருக்கிறார். ஆயின், தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியல் போக்கு யதார்த்தத்தில் எப்படி உள்ளது என்பதை அனுபவ ரீதியாக அறிந்த களச்செயல்பாட்டாளர்கள்தான் உரசிப் பார்த்து உண்மை சொல்ல இயலும்.

மகாபாரதத்தை கட்டியங்காரன் கர்ணன் மூலம் கேள்விக்கு உட்படுத்தும் இடங்களை நான் ரசித்தேன். இதுபோன்று குறுக்கீடுகள் மூலம் விமர்சனப் பார்வையை உருவாக்குவது ஏற்கப்பட்ட கலையுத்தியே !

இந்நாவலில் சாதியம் தீண்டாமை, பண நெருக்கடி, சக பெண் தொழிலாளிக்கு பாலியல் சீண்டல் போன்ற பிரச்சனைகள் வருகின்றன. தீர்வும் உடனுக்கு உடனே காணப்பட்டு விடுகின்றன. இதுபோல் யதார்த்தமும் இருந்தால் நல்லதுதான். சரி, கற்பனையிலாவது அப்படி இருக்கட்டும் என்று நாவலாசிரியர் முடிவெடுத்திருக்கலாம்.

நான் வாசிக்கத்துவங்கிய காலத்தில் நாவல்களில் கதாபாத்திரங்கள் வில்லனைத் தவிர அனைவரும் ஒழுக்க சீலர்களாக நூறு விழுக்காடு உத்தமர்களாக இருப்பார்கள். நெடிய இடைவெளிக்குப் பிறகு அப்படி ஒரு நாவலை வாசிக்க வழி ஏற்படுத்தியுள்ளார் சேகரன். தொலைகாட்சி மெகா சீரியல்களில் வில்லத்தனமே எல்லா பாத்திரங்களிலும் ஓங்கி நிற்பதைத் தொடர்ந்து அவதானித்த சேகரன் அதற்கு நேர் எதிரான ஒன்றை கட்டமைத்திருப்பாரோ ?

“…புதினத்தின் பக்கங்கள் தோறும் பாத்திரங்களின் நேர்த்தியான உரையாடல்களும் ஆசிரியரின் கருத்துப் பதிவுகளும் களச் சித்தரிப்புகளும் கதையை செம்மை செய்யும் வகையில் இயல்புச் சீர்மையில் இடம் பெற்றுள்ளன.” என்கிறார் அணிந்துரையில் ப. ஜீவகாருண்யன். அது ஒரு வகையில் சரியே !

ஆயின், முன்னுரையில் சேகரன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறபடி அவரின் கருத்துவரைவுக்கு ஒப்ப பாத்திரங்களையும் உரையாடல்களையும் ஆக்கியிருக்கிறார் என்பதும் மேலும் பொருத்தமான வரையறை ஆகும்.

நூலறிமுகத்தில் கதைச் சுருக்கம் சொல்லிவிடக்கூடாது என்பதால் விட்டுவிடுகிறேன். வாசகர்கள் படித்து தீர்ப்பெழுதுங்கள் !

நூல்: படுகளம் நாவல் 
ஆசிரியர் :பெரணமல்லூர் சேகரன் 
வெளியீடு : பாரதி புத்தகாலயம் 
பக்கங்கள் : 360 , விலை : ரூ.340/
நூல் பெற : இன்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com
தொடர்புக்கு: 044 24332424 ,24332924 ,24356935
[email protected] / www.thamizhbooks.com