தொடர் 20: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கிழக்கு முகமாய்
நம் நாட்டு நிகழ்த்துக் கலைகளில் முக்கியமான தொன்று யட்சகானம், தெருக்கூத்து போலவே வெட்ட வெளியில் நிகழ்த்தப்பட்டு வரும் பாரம்பரிய இசை நடன நாடகம். அதனால் அது “யட்சகான பயலாட்ட” என கன்னடத்தில் குறிப்பிடப்படுகிறது. “பயலு” என்றால் கன்னடத்தில் பொட்டல், வெட்டவெளி. எனவே பயலாட்ட யட்சகான புனைவுகளின் பாத்திரங்களுக்கான வேடம், உடை, கீரிட அலங்காரம், என சகலத்தையும், சிறிய பொம்மைகளை உருவாக்கி அவற்றுக்கு அணிவித்து, அதே கதைகளை, பாடல்களைக் கொண்டு யட்சமான பொம்மலாட்டங்களும், தென் கன்னட பகுதிகளில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இக்கலை வடிவின் தொடர்ச்சி தென் கிழக்கு நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் அந்நாட்டு கலை கலாச்சார நம்பிக்கைகளை ஒட்டி நடனக் கூத்தாகவும், பொம்மலாட்டமாகவும் நடத்திக் காட்டப்பட்டு வருகின்றன. நம்முடைய இராமாயண, மகாபாரதக் கதைகளையே அடிப்படையாகக் கொண்டு அனுபவம் மிக்க மாஸ்டர்களால் கடுமையான பயிற்சியளிக்கப்பட்டு அரங்கேற்றம் நடைபெறுகிறது.
தாய்லாந்து நாட்டின் இளம் திரைப்பட இயக்குனர் நான்ஜி நிமிபட் என்பவர் எழுத்தாளர் ஈக் ஐயம்சுவென் (EK IEMCHUEN) என்பவரது கதையைக் கொண்டு சக்கரம் (THE WHEEL) என்ற ஓர் அழகிய பேய்க்கதைத் திரைப்படமாக்கி பல விருதுகளையும், பரிசையும் பெற்றிருக்கிறார். திகிலூட்டும்படியான பேய்க் கதைகளில் இது வித்தியாசமானது. தாய்லாந்தின் பாரம்பரிய நடன நாடகம் மற்றும் பொம்மலாட்டக் கலையினூடே இந்த திகில் கதை சொல்லப்படுகிறது.
நான்ஜீ நிமிபட்ர் 1997-ல் இயக்கிய டாங்பிரேலிஸ் மற்றும் இளம் ரவுடிக் கும்பல் (DANG BIRELEYS AND THE YOUNG GANGSTERS) என்ற திரைப்படம் மிகவும் வெற்றிகரமான தாய் படம். வான்கூவர், லண்டன், ரோட்டர்டாம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வெகுவாக பேசப்பட்டது. இந்த THE WHEEL திரைப்படம் பிரஸ்ஸெல் நகரில் நடைபெற்ற 19வது உலகத் திரைப்பட விழாவில் (GRAND PRIX விருது பெற்ற படம். சிறந்த பேய்க் கதைப் படத்துக்கான விருது பெற்ற இப்படம் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றது. 29-வது ரோட்டர் டாம் திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய கதைப் படத்துக்கான (BEST ASIAN FETURE FILM) விருதையும் இப்படம் பெற்றது.
தாய்லாந்து நாட்டின் பொம்மலாட்டம், ஹுன் லகோர்ன் லேக் (HUN LAKORN LEK) எனும் கதை வகையது. பல தலைமுறைகளாய் குறிப்பிட்ட சிலரே இக்கலையில் கடவுளர்கள், வீரர்கள், அழகிகள் மற்றும் பூதங்களைக் கொண்ட கதைகளை திறம்பட மிகவும் அழகிய அலங்காரம் செய்யப்பட்ட பொம்மைகளைக் கொண்டு பொம்மலாட்டம் நிகழ்த்தி வந்தனர். அவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டார்கள்.
தாய்லாந்து நடனம் கோன் (KHON) என்றழைக்கப்படுவது, இது பொம்மலாட்டம் போலல்லாது. நெரிசலான தெருக்களில் நடத்தப்படுகிறது. கோன் கலைஞர்கள் தம் நிஜ முகத்தைக் காட்டாது, முக மூடிகள் அணிந்து முகத்தை மறைத்து பொம்மலாட்டத்தில் சொல்லும் அதே கதைகளை நடித்துக் காட்டுகிறார்கள். இவர்களின் வாழ்க்கை… கீழ் நிலையிலிருக்கிறது.
கோன் நடனக் கலைஞர்கள் விலைமதிப்புள்ள பொம்மலாட்ட பொம்மைகள் மீது பொறாமையும் எரிச்சலும் படுவார்கள். ஒவ்வொரு பொம்மையும் ஒரு பயங்கர சாபத்தால் பாதுகாக்கப்படுகிறது என்ற பலத்த நம்பிக்கையிருந்த போதிலும், அவற்றை அழிக்கும் யோசனையிலிருக்கின்றனர். அவற்றின் நிஜமான உரிமையுடைய சொந்தக்காரர்களால்தான் அவற்றை உயிர்ப்பிக்க முடியும்.
க்ரூ டோங் (KRU TONG) என்பவர் அனுபவமிக்க கோன் நடனக் கலைஞரும், பயிற்சியாளருமாவார். ஒரு சமயம் அவர், பெரிய பெட்டியொன்றில் விலை மதிப்புள்ள அழகிய பொம்மலாட்டப் பாத்திரங்களுக்கான பொம்மைகளைப் பார்க்கிறார். அவற்றைக் கொண்டு தானே ஹுன்லகோர்ன் லேக் பொம்மலாட்டக் காட்சிக்கான ஏற்பாட்டை செய்ய முற்படுகிறார். அச்சமயம் அவரது பேத்தி பூவா (BUA) ஒரு பூதப் பொம்மையை வைத்துக் கொண்டிருக்கிறது. சிறுமி பூவா ஒரு மர்மமான சித்தரிப்பு பொம்மைகளின் தாந்திரிக உள்ளர்த்தங்களையும், அவற்றின் சீற்றம் மிக்க எதிர்வினைகளையும் உள் வாங்கிக் கொண்ட மனிதப் பிறவியாக சிறுமி பூவா தோன்றுகிறாள். இப்போது பூவா தான் வைத்திருக்கும் பூதப் பொம்மையின் ஒரு காலைப் பலமாய்த் திருகுகிறாள். அவளது தாத்தாவும் கோன் நடன குருவுமான க்ரூ டோங் ஐய்யோ என்று அலறியவாறு தன் ஒரு காலைப் பிடித்துக் கொண்டு உட்காருகிறார். பொம்மைகளின் சாபம் மேலும் தொடருகிறது. படத்தின் ஆரம்பமே ஒரு திகிலில் அமைந்திருக்கிறது.
படுக்கையில் உடல் நிலை சரியில்லாது படுத்திருக்கும் தாய்லாந்தின் பொம்மலாட்ட நிபுணர் தாவோ எதையோ கண்டு மிரண்டு நெளிகிறார். கண்கள் பிதுங்க அலறுகிறார். அவர் படுக்கையைச் சுற்றி அவரது அரிய படைப்புகளான பொம்மைகள் சூழ்ந்து நிற்க, அவரது முக்கிய பொம்மலாட்ட மாணவனும் அழகிய இளைஞனுமான கான் (GAAN) இன்னதென்று புரிந்து கொள்ளுமுன் அவர் உடல்நிலை தீவிரமடைகிறது. அதே சமயம், கிராமத்துக் கோயிலில் கோன் நடன நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. இளைஞன் கான் அங்கு போயிருக்கிறான். பொம்மலாட்ட மாஸ்டருக்கு என்னவாயிற்று என்று க்ரூ டோங் கேட்கவும், தனக்கெதுவும் புரியவில்லை, எல்லாம் மர்மமாயிருக்கிறதென்கிறான் கான். அச்சமயம் பொம்மலாட்ட மாஸ்டர் தாவோவின் வீடு பற்றி எரிகிறது.
நடன மாஸ்டரின் பேத்தி பூவா பூதப் பொம்மையான தோசா கான் (TOSA GAN) என்பதை கையில் வைத்திருக்கும் காட்சியைக் கண்டுதான் தாவோ மாஸ்டர் மிரண்டு அலறுகிறார். வீடு எரிகிறது. விஷயமறிந்து கோயில் நடனக் காட்சி நிறுத்தப்பட்டு, நடன ஆசிரியரும், நடனக் கலைஞர்களும் பொம்மலாட்டக் கலைமாணவன் கானும் ஓடிச் சென்று தீயை அணைக்கின்றனர். நடனக் கலை மாஸ்டர் டோங், பொம்மலாட்ட மாஸ்டர் தாவோ தீயில் கருகிக் கிடப்பதைக் கண்டு மனம் பதறி தான் அங்கேயே இருக்க முடிவு செய்கிறார். எல்லோரும் போன பிறகு பொம்மைகளை எடுத்துக் கொண்டு போகிறார். இனி தாமே பொம்மலாட்டத்தையும் நடத்தலாமென்ற பேராசையோடு அந்தப் பொம்மைகளுக்கு புது வண்ணமேற்றி புதுமெருகூட்டுகையில்தான், குழந்தை பூவா பூதப் பொம்மை தோசா கானின் காலைத் திருக, க்ரூ டோங்கின் கால் பாதிக்கப்பட்டு சாய்கிறார்.
அதே சமயம், நடனக் கலை மாணவர்களில் ஒருவனான அவரது மகன் பொம்மலாட்டக் கலைஞனாக மாற விரும்புகிறான். காரணம், அவனது காதலி ஒரு பொம்மலாட்டக்காரி என்பதோடு, பொம்மலாட்டக்கார அழகன் கானோடு நெருங்கிப் பழகுகிறான் என்பதுமாகும். மாஸ்டர் தன் மகனை பொம்மலாட்டப் பயிற்சிக்கு லாயக்கில்லாதவன் என்கிறார். அவன் பொம்மலாட்டக்காரனான கானை கேலி செய்கிறான்.
பொம்மைகளின் சாபம் தொடருகிறது. அவரது அழகிய மனைவியும் தேர்ந்த கோன் நடனக்காரியுமானவள் தன் பேத்தி பூவாவின் கையிலிருக்கும் பூதப் பொம்மையைப் பிடுங்க முற்படுகிறாள். குழந்தை தர மறுக்கிறது. அச்சமயம் நடன மாஸ்டர் வீடும் தீப்பற்றிக்கொண்டு எரிகிறது. மாஸ்டரின் மனைவி முழு கோன் நடன ஒப்பனையோடு தூக்கிலிட்டுக் கொண்டு பிணமாய்த் தொங்குகிறாள். பூதப் பொம்மையோடு பூவா ஓடிவிடுகிறது. கான் தன் கதாலியுடன் சல்லாபித்திருக்கும் நிலையில், மாஸ்டரின் மகன் வந்து இருவரையும் கத்தியால் வெட்டிக் கொன்று விடுகிறான். மாஸ்டரின் வீடு எரிந்து எல்லாரும் எல்லாமும் சாம்பலாகின்றனர். குழந்தை பூவா தன் பொம்மையை அணைத்தபடியே நீரில் குதித்து மூழ்குகிறது.
இந்த தாய்லாந்து வண்ணப்படம், ஒரு திகில் படம் என்பதற்கும் பல படிகள் மேலாக, அரிய கலைக்காட்சிக் கூடமாயும் பாரம்பரிய கலைகளின் காட்சியகமுமாயும் தோன்றுகிறது. காமிரா கோணங்களும் வண்ண ஒளிப்பதிவும் அற்புதம் ஒளிப்பதிவு செய்தவர் தாய்லாந்தின் சிறந்த காமிரா கலைஞர் நட்டா வுட் கிட்டிகூன் [NATTA WUT KILLTKHUN] என்பவர்.
தென் கிழக்கு சினிமாவில் கொரிய திரைப்படங்களின் பங்கு முக்கியமானது. உலகின் எல்லா நாடுகளிலும் வணிக நோக்கிலான ஜனரஞ்சக சினிமா ஒரு பக்கம் பெரும் பகுதியை இடம் பிடித்துக்கொண்டிருந்தாலும் நல்ல சினிமா அர்த்தம் பொதிந்த சினிமா என்பது இணையான கோட்டில் பயணித்தே வருகிறது. கொரிய சினிமாவின் நிலையும் அதுவே.
நிறைய கொரிய படங்களைப் பார்த்ததில் அவற்றில் நவீன சீனப்படங்களின் பாதிப்பும் சாயலும் சில சமயம் பாணியும்கூட, நீரில் அமிழ்ந்தும், அமிழாது மிதக்கும் மிதவையைப் போல தோன்றுகிறது. நவீன கொரியப் படங்களில் ஓங்கார்வை-யின் பாதிப்பு தெரிகிறது. அதேசமயம், சில கொரிய திரைப்பட மேதைகளின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு சில படங்கள் இருக்கின்றன. அவர்களில் ஒருவர் இம் க்வோன் தாயெக் [IM KWON TAEK] இவரது “பீரியட்” படம் என்று தனித்துக் கூறத்தக்க மிகச் சிறந்த படம். கொரியாவின் புகழ்பெற்றவரும் பாரம்பரிய ஓவியக்கலைக்கு எதிரான பாதையில் போன ஓவியருமான சி-ஹ்வா-சியோன் [CHI-HWA-SEON] என்பவரின் வாழ்க்கையைச் சொல்லும் “PAINTED FIRE” எனும் திரைப்படம். இந்தப் படத்துக்கு டைம் வார இதழின் திரைப்பட விமர்சகர் ரிச்சர்டு கோர்லிஸ் [RICHARD CORLISS] விமர்சிக்கையில், “இம் க்வோன் தேயெக் ஒரு கொரிய கிராண்ட் மாஸ்டர். அவரைப் போன்ற கலைஞர்கள் இருக்கும்போது கீழை நாடுகளின் திரைப்படங்கள் கலைத்தன்மையை என்றைக்குமே இழந்து விடாது.” என்று குறிப்பிடுகிறார். 2002-ம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் இம் க்வோனுக்கு சிறந்த இயக்குனர் விருது இப்படத்துக்கென அளிக்கப்பட்டது.
இப்படம் 19-ம் நூற்றாண்டு கொரிய ஓவியர் சி ஹ்வா சியோன் [CHI HWA SEON] என்பவரையும் அவரது ஓவியக் கலைப்பணியைப் பற்றியுமான அழகிய படம். இவரது அசல் ஓவியங்களை மறு தயாரிப்பாகத் தீட்டியவர் [REPRODUCTION] அந்தப் பணியில் நன்கு அறியப்பட்ட கொரிய கலைஞர் ஜாங் சியூங் உப் [JANG SEUNG-UP] என்பவர், சி ஹ்வாவின் ஓவியங்களையும் ஜாங் சியூங்க் மறுபடைப்பாகச் செய்திருக்கிறார். எனது நண்பரும் ஓவியருமான கிருஷ்ணசாமி என்பவர் பெங்களூர் சஞ்சய் நகரத்திலிருக்கிறார். உலகச் சுகாதார அமைப்பின் [WHO] கிளையில்-இமாச பிரதேசத்தில் டல்ஹவுசி எனுமிடத்தில் புகைப்படக் கலை மற்றும் ஓவியப் பணியை செய்து வந்தவர். பணியில் ஓய்வு பெற்ற பின் சஞ்சய் நகரில் “ரமண கலா கேந்திர” என்ற ஓவியக் கூடம் ஒன்றை நிறுவி, உலகப் புகழ்பெற்ற ஓவிய ஒரிஜினல் மாஸ்டர்களின் ஒப்பற்ற ஓவியங்களின் மறுபடைப்பாக நகல் பணியைச் செய்தவர், அசலுக்கும், நகலுக்கும் சிறிதும் வேறுபாடு தெரியாத வகையில் தத்ரூபமாய் செ்து கொடுத்து வந்தார்.
அசல் ஓவியத்தின் அதே அளவுக்கு, கிட்டத்தட்ட அதே வகை கான்வாஸ் மீது, அசலின் வண்ணப்பூச்சுக்களின் ஆதார வண்ணங்களை ஆய்ந்தறிந்து அதே ரீதியில் தீட்டுவார். அனேகமாய் அவரிடம் வந்து கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அயல்நாட்டவர்கள், ரெம்ப்ரண்ட, வெர்மீரீ, கோயா, முதலியவர்களின் ஓவியங்களைக் காட்டி அதன் மறுபடைப்புகள் வேண்டி ஆர்டர் தருவார்கள். கிருஷ்ணசாமி, தாம் தீட்டிய ஓவியங்களுக்கான சட்டங்களைத் தேர்ந்தெடுப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரிஜினல் படத்தின் சட்டம் எப்படியோ அதே மாதிரி இருக்குமாறு முடிந்தவரை தேடிப் பிடித்து சட்டமிடுவார். அதற்கேற்றாற்போல ரேட்டும் அதிகம், அவரிடம். இதே விதமாய் 19-ம் நூற்றாண்டில் கொரியாவில் சி ஹ்வாவின் ஓவியங்களை, ஜாங்க் சியூஸ்-உப்-மறு தயாரிப்பு செய்து புகழ்பெற்றார்.
ஆரம்பத்தில் கடின உழைப்போடும், சிறிது தம் விருப்பத்துக்கு ஒப்ப நின்ன மாறுதல்களோடும் கிழக்காசிய ஓவியங்களை மறுபடைப்பு செய்தே புகழ்பெற்றார். அசலில் சி ஹ்வாவின் ஓவியத்தில் இல்லாத ஓரிரு அம்சங்களை கூடுதல் சித்தரிப்பாக செய்வார். ஒரு மரத்தில் கிளையொன்றை தம் மறுபடைப்பில் நீட்சியுற்றதாயும், ஓரிரு பூக்களை தீட்டியதோடு, ஒரிஜினலில் இல்லாத ஒரு பறவையையும் கூடுதலாக தன் நகல் ஓவியத்தில் ஜாங் சியூங் செய்தவர். 1882ல் கொரியாவின் சோசின் பேரரசு முடிவுக்கு வரும்போது கொரிய புரட்சியாளர்கள் அந்நிய படையெடுப்புக்கு எதிராகவும் அப்போதிருந்த ஊழல் சர்க்காருக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்த சூழலில் படத்தின் கதை தொடங்குகிறது.
சீ ஹ்வா சியோன் கொரியாவின் 19-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஓவியன். 1882 முதல் 1887 வரை கொரியா அரசியலில் நிகழ்ந்த புயலில் சிக்கி அந்நியர் சூழ்ச்சியில் குழம்பியிருந்த காலம். சமூக-அரசியல் மாற்றம் கருதி புராட்சியாளர்கள் ஜப்பானுடன் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க செய்த முயற்சி சீனாவின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டது. சீஹ்வாசியோன் சிறுவயதில் படிப்பறிவற்ற வறுமைக்கோட்டுக்குக் கீழிருந்தவர். நம் நாட்டிலிருப்பது மாதிரியே கொரியாவில் மேல் ஜாதி – கீழ் ஜாதி என்ற பாகுபாடு இருந்திருப்பதையும் இப்படத்தின் மூலம் அறிய வருகிறோம். ஓவியன் சீஹ்வா சீழ் ஜாதியை்சேர்ந்தவர் என்பதால் தெருவில் தள்ளப்படுகிறான். எவ்வித ஓவிய அடிப்படைப் பயிற்சியுமற்றவன் என்பதும், கீழ் ஜாதியன் என்பதும் அவனது ஓவியத்திறமையை மற்றவர்கள் அலட்சியப்படுத்தி பரிகசிப்பதற்கான காரணங்களாயிருந்தவை.
உயர் ஜாதி செல்வந்த பிரபு ஒருவர் அன்பு காட்டி அவனை ஊக்குவித்து பயிற்சி பெற உதவுகிறார். அவன் எவ்வித பயிற்சியும் படிப்புமில்லாமலே ஓவியக் கலையில் மேதைமை பெற்றிருப்பதை அவர் கண்டறிகிறார். அவரது முயற்சியால் அவன் ஒரு பெரிய மாஸ்டரிடம் ஓவியம் கற்க சேர்கிறான். கொரிய ஓவியக் கலை மரபு சீன ஓவியக் கலை மரபின் வழி வந்திருப்பதையும் இன்னும் அதே வழியைப் பின்பற்றுவதையும் பார்க்கையில் சீஹ்வா அதிலிருந்து வேறுபட நினைக்கிறான். தத்துவார்த்த ரீதியாக ஜப்பானும் சரி, கொரியாவும் சரி, சீன தத்துவ நெறிமுறை வழியையே பின்பற்றி வந்தன. சீன தத்துவ ஞானி கந்ஃபியூஷியஸின் தத்துவ கருத்துகள் 17ஆம், 18ஆம், 19ஆம் நூற்றாண்டு ஜப்பானையும் கொரியாவையும் நேரடியாகவே ஆட்கொண்டிருந்ததை இத்திரைப்படமும் காட்டுகிறது. சீஹ்வாவின் திறமை குருவையும் மிஞ்சுகிறது.
தன் சுய திறமையால் அவன் புகழ் பெற்ற ஓவியனாகிறான். அதன் பிறகு அவன் ஓஹ்வோன் என்று அழைக்கப்படுகிறான். ஆரம்பத்தில் அவனது கீழான ஜாதியின் காரணமாய் மரியாதைக் குறைவாக பல சந்தர்ப்பங்களில் நடத்தப்படுகிறான். அவனுக்கு குடிப் பழக்கமும் பெண்கள் சகவாசமும் சேருகிறது. இரண்டும் இல்லாமல் அவனால் இயங்க முடிவதில்லை. ஆண், பெண் உடலுறவுக் காட்சிகளின் சித்தரிப்பைக் கொண்ட காம சூத்ர படங்களை புத்தகத்தைத் தந்து புதியதாக தீட்டித் தருமாறு ஒருவர் கேட்கிறார். ஓஹ்வோன் காமசூத்திரப் படங்களைப் பிரதியெடுத்து தருவதின் மூலம் குடிப்பதற்கும் கூத்தி ஷோக்குக்கும் வேண்டிய பணம் கிடைக்கிறது. அவனை விரும்பிய அழகிய இளம்பெண் நோய்வாய்ப்பட்டு கிடக்கையில் அவனுடைய பறவைகள் ஓவியம் ஒன்றைக் கேட்கிறாள். ஓஹ்வோன் அவளருகிலேயே அமர்ந்து அவளது விருப்பப்படி பறவைகள் ஓவியம் தீட்டித் தருகிறான். அவள் அதை ஆனந்தமாய்ப் பார்த்தபடியே உயிரை விட்டு விடுகிறாள். அச்சம் பயம் அவனுக்குள் மரணத்தைக் குறித்த தத்துவம் ஒன்றை ஓதிச் செல்லுகிறது.
ஓஹ்வோன் அந்த ஊரைவிட்டு வேறிடம் போகும் வழியில் வானத்தில் ஆயிரக்கணக்கிலான பறவைக் கூட்டத்தையும் அதனூடே மிக அழகிய பெரிய பறவையொன்று நிதானமாய்ப் பறந்து செல்லுவதையும் கண்டு கண்களில் நீர் ததும்ப நிற்கிறான். அந்த பெண்ணே பறவையாக பறந்து போனதாய் நினைத்து கொள்ளுகிறான். இந்தக் காட்சி காமிராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருப்பதும், பின்னணியில் கேட்கும் பாடலும்், இசையும் மிகவும் இதமாயிருக்கிறது.
கொரியாலில் அப்போது சீனரும் ஜப்பானியரும் மாறி மாறி உள்நாட்டு புரட்சியாளருக்கு ஆதரவும் உதவியும் செய்வதுபோலிருக்கையில் அவ்விரு நாட்டுப் படைத் தளபதிகளும் ஓவியம் போன்ற கலைகளின் செயல்பாட்டிலும் நுழைகின்றனர். எந்த வகையிலாவது கொரியாவை கைப்பற்றி தம் வசப்படுத்திக் கொள்ளும் பெரு நோக்கில் அவர்கள் செயல்படுகின்றனர்.
ஓஹ்வோன் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடிய ஓவியன், தனக்கு முழுத்திருப்தியும் வரவில்லையெனில் தான் வரைந்த ஓவியங்களைக் கொண்ட காகிதங்கள் அவ்வளவையும் தீயில் போட்டு விடுவான். கிட்டதட்ட வின்சென்ட் வான்கோவைப் போன்ற மனமுடையவனாகவே தெரிகிறான். ஓவியர்களைப் பொறுத்தளவு கொரிய கலை, சீன- ஜப்பானிய ஓவியக் கலையையே ஒத்திருக்கிறது. காகிதங்களின் பரப்பிலும், பட்டுத் துணிகள் மீதும்தான் தீட்டப்பட்டிருக்கின்றன. தைலவண்ணம் OIL PAINT என்பது மேற்கத்திய ஓவியங்களுக்கானது. கொரிய ஓவியங்கள் பார்ப்பதற்கு, பறவைகள், விலங்குகள், குடியானவர்கள், விறகு வெட்டிகள், தாசிப் பெண்கள், சந்நியாசிகள், மரங்கள், மலர்கள், நீரோடை, மலைகள் என்று இருந்தாலும், திரைப்படத்தின் உரையாடல்கள், வழியாக நாம் அறிவது, அவை. யாவும் மனிதன் சம்மந்தப்பட்ட குறியீடுகளே என்பது. அந்நிய ஆக்கிரமிப்பு சமயம் குடியானவர்கள் எரிக்கப்படுகின்றனர்.
ஓவிய மாஸ்டர் துரோகியாக அறிவிக்கப்படுகிறார். அவர் தப்பி ஓடி விடுகிறார். கத்தோலிக்கர்கள் தலைவெட்டப்பட்டு அவர்களது தலைகள் மரங்களில் தொங்கவிட்டிருக்கும் காட்சி கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. அந்த கத்தோலிக்கத் தலைகளில் ஃபிரான்ஸ் போன்ற ஐரோப்பாவைச் சேர்ந்த தலைகளுமுண்டு. பின்னாட்களில் வயதான ஓஹ்வோன், தன் குருநாதர் ஓவிய மாஸ்டரை வயதான கோலத்தில் பனி நிறைந்த பகுதியொன்றில் சந்திக்கையில் இருவரும் கட்டியணைத்துக் கொள்ளுகின்றனர். தன் ஓவியங்கள் சிலதை தீயில் போட்டுவிட்டு அவனும் தீயில் புகுந்து எரிந்து போவதாய் படம் முடிகிறது. உண்மையில் சீஷ்வா சியோனின் மர்மமான மறைவு 1897-இல் நிகழ்ந்ததாகவும், அவர் திரும்பவேயில்லை என்பதாகவும் ஒரு வாசகத்தோடு படம் முடிகிறது.
சீஹ்வோன்வாக சோய் மின் சிக் (CHOI- MINSIK) என்ற நடிகர் சிறப்பாக அப்பாத்திரத்தை ஏற்று செய்திருக்கிறார். படத்தின் சிறப்பு அதன் காமிரா. அதைக் கொண்டு அற்புதமாக ஒளிப்பதிவு ஆற்றியிருப்பவர், ஜுங்-11- சுங் (JUNG-11- SUNG) இசையும் ரம்மியமானது. இசைப் பொறுப்பை ஏற்றவர், கிம் யோவுங் டாங் (KIM YOUNG DANG)
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்
தொடர் 16: பயாஸ்கோப்காரன்(கருப்பும் வெளுப்பும்) – விட்டல்ராவ்