பாலைப் பறவையின் குரல் கவிதை
தப்பு நடக்குது தப்பு நடக்குது
பாதிக்கப்பட்டவர் புலம்புகிறார்
மற்றவர்கள்
போரடிக்கிறார் என்கிறார்கள்
படகின் இருமருங்கிலும்
அழியும் கோலங்களை
தூறல் போடுகிறது
கனிகள் கனிந்திருக்கின்றன
பசி தீர்ந்த பறவைகள்
விநோதங்களைப் பாடுகின்றன
வழிப்போக்கர்கள் செல்லும்
வழியில் அந்தமரம்
நட்டவர் யாரென்று தெரியவில்லை
பினாமிகள் சொகுசாய் வாழ்கிறார்கள்
எடுபிடிகள் சந்தோஷத்தில் திளைக்கிறார்கள்
அடுத்த வேளை உணவு உனக்கும் எனக்கும் உத்தரவாதம் இல்லை
உன் கோபம் எனக்கும் இருக்கிறது
உன் வன்மம்
என்னையும் ஆட்டிப்படைக்கிறது
வஞ்சகத்தை வேரறுக்க
காலம் கூராகிக் கொண்டிருக்கிறது
அன்பாயிருங்கள்
நதி தவழ்ந்து செல்லட்டும்
வனத்தில் சகல ஜீவராசிகளும் வாழ்ந்து பெருகட்டும்
வாலை ஆட்டியது மகிழ்ந்தேன்
காலை நக்கியது குளிர்ந்தேன்
கடிக்க விரட்டுகிறது
வைதபடி ஓடுகிறேன்
கனவை வரைய பணிக்கிறான் ராட்சசன்
பல் வண்ணங்கள்
குவிந்து கிடக்கின்றன
வெண் வண்ணத்தில் வரைய முனைகிறேன்
கனவுகளைப் பின்தொடர்கிறது பிரமிப்பு
அறியாத தேசத்தின்
கதவுகள் திறக்கின்றன
ஒளிர் துகில் அணிந்த
ஒருத்தி வரவேற்கிறாள்.
– வசந்ததீபன்