நூல் அறிமுகம்: பல்லவி குமாரின் ”உதிரும் பூக்களின் இறுதிக் கவிதைகள்” – பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம்: பல்லவி குமாரின் ”உதிரும் பூக்களின் இறுதிக் கவிதைகள்” – பெரணமல்லூர் சேகரன்




“படகெல்லாம் மூழ்கவில்லை
தோணிகள் அங்கங்கே
துணை அற்றுக் கிடந்தாலும்
துறை இன்னும் மூழ்காமல்
துடிப்புடனே இருக்கிறது”

இப்படி ஒரு இறுதிக்கால கவிதையைப் படித்துக் கொண்டிருந்த போதுதான் பல்லவி குமாரின் ‘உதிரும் பூக்களின் இறுதிக் கவிதைகள்’ எனும் நூல் கிடைத்தது. என்னே ஒரு பொருத்தம்!

பொதுவாகவே துன்பியல் குறித்து ஆர்வம் காட்டாதது தமிழ்கூறும் நல்லுலகம். துன்பியலே எல்லாமுமாக எனும்படியானது இறுதிக்காலம். ஏனெனில் பெரும்பான்மையோர் தனது இறப்பு குறித்துக் கவலைப்படுபவர்ககளாக, அச்சப்படுபவர்களாகத்தான் தமிழர்கள் அறியப்பட்டுள்ளனர். மிகச்சிலரே விதிவிலக்கு. இந்நிலையில் உலக அளவிலான எனும்படியாக இல்லையென்றாலும் பல மொழிகளில் வெளியான இறுதிக் கவிதைகளைத் தேடிப் பிடித்து அவை குறித்தான ஆய்வுகளை மேற்கொண்டு கட்டுரைகளாக பல்வேறு இதழ்களில் வெளியிட்டு அவற்றைத் தொகுப்பாகவும் கொண்டு வந்துள்ளதன் துணிவும் மெனக்கெடலும் மிகவும் பாராட்டத் தக்கவை. அவ்வகையில் பல்லவி குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்நூலில் இடம் பெற்றுள்ள 11 கட்டுரைகளும் இறுதிக் கவிதைகளையும் அவற்றுக்கான விளக்கங்களையும் பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்டுரையாக வாசிக்கும்போது வியப்பு மேலிடுகிறது. தனது இறுதிக் காலத்தை முன்கூட்டி உணர்தல், தாமாகவே தமது மரணத்தைத் தேடிக் கொள்ளுதல், அத்தகைய காலகட்டத்திலும் கவிதையைக் கட்டாயமாக எழுதிவைத்து விட்டுப் போதல் ஆகிய அம்சங்களில் வியப்பு மேலிடுவது இயல்புதானே!

மனிதனின் வாழ்க்கை ஒரு பூவிற்கு சமமானது. அதன் புனிதத்தால் அது மலர்கிறது. அதன்மீது பனித்துளிகள் விழலாம். அதிலும் சூரியனின் ஒளி பண்ணலாம். அல்லது அது ஒரு காட்சியாகவோ கனவாகவோ தோன்றலாம். ஆனால் இவையாவும் இயற்கைக்குப் புறத்தே இருந்து வருவதொன்றுமில்லை. அவையாவும் இயற்கையின் உள்ளிருந்தே தோன்றுகின்றன. இவ்வுலகினில் எதுவும் நிரந்தரமல்ல. எதுவும் நிலையானதுமல்ல. இயற்கையின் தோற்றம் அனைத்தும் இயற்கையுடன் இணைந்து விடுவதுதான் இயற்கையின் விதி. இது இவ்வுலகின் பிறப்பிற்கும் மற்றும் இறப்பிற்குப் பொருந்தும்.
இயற்கை என்பதுதான் நிரந்தரமானது என்ற புரிதல் ஜப்பானியர்களுக்கு உள்ளது சிறப்பு.

ஜப்பானியர்கள் பிறப்பு மற்றும் வாழ்வினைப் போலவே இறப்பும் ஒரு நிறைவான செயல் என்று கருதுவதை மும் அவர்கள் வாழந்ததற்கு அடையாளமாக உள்ள சமுதாயத்திற்கு நன்றி சொல்லவே இறப்பிற்கு முன்பு கவிதை எழுதும் வழக்கமும் கொண்டிருப்பது உண்மையில் வியப்பூட்டுவதாகவே உள்ளது.

“அழிவைத் தரும் கத்தி
அதனை விளையாட்டுத் திடலின்
பக்கத்தில் பதித்து வைத்தேன்
ஐயோ! அந்தக் கத்தி”

எனும் பாடலைப் பாடி முடித்தவுடன் யாமாட்டோ டேக்ரு-நோ-மிக்கோடோ இறந்து விட்டதாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

ஜப்பானிய கவிதைகளின் தந்தை என்று போற்றப்படுபவரான காகிநோமோட்டோ-நோ-ஹிட்டோமாரோ தமது மரணக் கவிதையாக இப்படி எழுதுகிறார்.

“எனக்குத் தெரியவில்லை
எனது உடல் கிடக்கிறது
காமோ மலைப்பாதையில்
எனது காதல்
எனக்காகக் காத்திருக்கிறது”

மரணக் கவிதை எழுதுவது வியப்பென்றால் வாள் பாய்ச்சி மரித்துப் போவது அதிர்ச்சியல்லவா?

“தேவையில்லையென வெட்டிய கிளை போல
மண்ணில் பாதி புதைந்துள்ளேன்
எனது வாழ்க்கை
இனிய மலர் முடியாது -வந்தது
இந்த சோக முடிவு”

இந்தக் கவிதையும் யோரிமாசா தன் கையிலிருந்த வாளைத் நன வயிற்றுக்குள் பாய்ச்சி மரணமடைந்தார் என்பது பெரும் சோகம் தானே!

புத்தத் துறவிகளின் மரணக் கவிதைகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
சுவாங்-சூ எனும் புத்தத்துறவி இறக்கும் நிலேயிலிருந்தபோது, அவரது சீடர்கள் அவருக்கு ஆடம்பரமான இறுதிச் சடங்குகளைச் செய்ய ஏற்பாடு செய்திருந்த நிலையில் சுவாங்-சூ அடக்கத்திற்கான அனைத்து அலங்காரங்களும் ஏற்கெனவே இருக்கின்றன என்றும் தமது சவப்பெட்டியினை வானமும் பூமியும் அலங்கரித்திருப்பதாகவும் ஆபரணங்களாக நட்சத்திரங்கள் மின்னுகின்றன என்றும் உலகின் பத்தாயிரம் விஷயங்கள் பரிசுப் பொருளாக இருக்கின்றன எனக் கூறியதோடு “தரையின் மேலே கழுகுகள் மற்றும் காகங்கள் என்னை சாப்பிடும் முந்தைய வர்களுக்கு உணவளிப்பதைத் தடுப்பது நியாயமானதில்லை” என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

சில ஜென் துறவிகள் இறப்புக் கவிதை எழுதும் நடைமுறைகளுக்கு எதிராகவும் இருந்துள்ளனர். அவர்கள் இதனைக் கடுமையாகவும் விமர்சித்துள்ளனர் என்ற பதிவையும் இந்நூலில் காண முடிகிறது.

தாம் இறக்கும் தேதியை முன்கூட்டி அறிந்து அறிவிப்பது பெரும் வியப்பூட்டுவதாக உள்ளது. ‘தேசிய ஆசிரியர்’ என்று பட்டமளிப்பு அழைக்கப்பட்ட என்னீ எனும் புத்தத் துறவி 1280 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் தமது 79வது வயதில் இறந்துவிடுவதாக அறிவித்து தன்னுடைய இறப்பினை முரசறிவித்துத் தெரிவிக்குமாறு கட்டளையிட்டார். பின்னர் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். அவருடைய இறுதிக்கவிதையினை எழுதினார். தேதியினைக் குறிப்பிட்டுக் கையெழுத்திட்டார். சற்று நேரத்தில் உயிர் துறந்தார் என்பது நம்புதற்கரிதாகவே உள்ளது. அவரது இறுதிக் கவிதை:-
“வாழ்நாள் முழுதும் மக்களுக்கு சென் போதித்தேன்
ஒன்பது மற்றும் எழுபது ஆண்டுகள்
விவரங்களை உணராதவர்கள் அதனைப் பார்க்கிறார்கள்
சென் ஒருபோதும் தெரிவதில்லை”

டெட்சூஜென் டோகோ எனும் புகழ்பெற்ற அறிஞர் 1682 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் போது தமது பெருஞ்செல்வத்தை மக்களுக்காகப் பயன்படுத்தியுள்ளதையும் அதன் மூலம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவரால் காப்பாற்றப்பட்டதும் இந்நூல் மூலம் அறியமுடிகிறது. மேலும் அவர் “ஏழைகளுக்கு உணவளிக்க நாம் கோயில்களையும் கூட விற்கலாம்” எனக் கூறிய பதிவுகள் சிறப்பு வாய்ந்தவை. அவரது நேர்த்தியான இறுதிக் கவிதை இதோ:-

“முழுவதும் பெரிய மாற்றங்கள் நிறைந்தவை
எனது மூன்று மற்றும் ஐம்பது ஆண்டுகள்
புனித எழுத்து குறித்த என் கருத்து-ஒரு பெரும் பாவம்
அது வானத்தில் எதிரொலித்தது
இப்போது நான் தாமரை மலர்ந்த ஏரியில் பயணிக்கிறேன்
அத்துடன் தண்ணீருக்குள் இருக்கும் வானத்தை உடைக்க”

சாமுராய் என அழைக்கப்பட்ட ஜப்பானிய போர் வீரர்கள் விசுவாசத்திற்காகவும் நாட்டிற்காகவும் மன்னருக்காகவும் போரில் ஏற்பட்ட தோல்விக்காகவும்
தங்களை மாய்த்துக் கொள்ளும் பழக்கம் மூட நம்பிக்கையாக இருப்பினும் அக்காலகட்டத்தில் மரணக் கவிதைகளையும் எழுதியுள்ளது வியப்பூட்டுகிறது.

சுகிடோமோ எனும் சாமுராய் போர் வீரர் விலங்கு கொம்பினாலான எறிந்து தாக்கும் ஆயுதம் ஒன்றின் மேல் அமர்ந்துகொண்டு வாழ்விற்கு விடை கொடுக்கும் கீழ்க்கண்ட இறுதிக் கவிதையை எழுதியதும் அக்கவிதை புத்தமதச் சிந்தனைகள் பொதிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

“பஞ்சபூதங்கள் என்னில் வெளியேற இறங்கிவிட்டன
அதில் நான்கு திரும்பவும் கீழ்ப்படிய மறுக்கின்றன
நான் என் கழுத்தினை உறை விடுத்த கத்தியில் வைத்தேன்
அதன் வெட்டு எனக்கான காற்றின் சுவாசம் போன்றது”

இறப்புக் கவிதைகள் எழுதுவதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்லர் என்பது இந்நூல் மூலம் தெரிகிறது. ரோமுரா பூடா எனும் பெண் கவிஞரின் தமது இறுதிக் கவிதையை இப்படி எழுதி விட்டுத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்.
“பயனில்லாத எனது உடலில்
பாசிப் படர்ந்து விட்டது
அது வளர்ந்து வருகிறது
இதில் நாட்டுப்பற்று மட்டும்
என்றுமே சிதைவடையாது”

காதலர்களும் தங்களது இறுதிக் கவிதைகளை எழுதியுள்ளதைப் பல கவிதைகள் மூலம் உணர்த்துகிறார் நூலாசிரியர்.

“நான் காதலித்த அவன்
என் பேச்சைக் கேட்கவில்லை
உன்னிடம் எனது கோரிக்கை
அவன் என்னைப் பிரிந்து விட்டான்
என் வாழ்க்கை மங்கிப் போகிறது”

“எனது நாட்கள் நீளமாகவுள்ளன
இருண்மை இன்னும் நீடிக்கிறது
நான் உலகை விட்டுப் பிரியமாட்டேன்
இறப்பின் வழியில் மலைமீதேறி
நான் நிலவைக் கைப்பற்றுவேன்”
போன்றவை சான்றுகளாகும்.

ஹைக்கூவின் தந்தை மாஸ்கோவின் இறுதிக் கவிதை:
“பயணத்தால் நோயில் விழுந்தேன்
என் கனவுகள் அலைந்தன
காய்ந்த புற்கள் வயற்பரப்பில்”

கொரிய இறுதிக் கவிதைகளுள் ஒன்று:
“இவ்வுடல் இறக்கும்
இறக்கட்டும் மீண்டும்
நூறு முறைக்கு மேல்
வெள்ளை எலும்புகள் தூளாகட்டும்
ஆன்மாவைக் கண்டும
காணாமல்
இறைவனை நோக்கியே இருக்கும்
எனது இதயம் சிறிதும் மாற்றிவிடாது.”

சீனாவில் தவறு செய்பவர்கள் தானே தம்மை மாய்த்துக் கொள்ளும் பழக்கமும் இறுதிக் கவிதை எழுதும் வழக்கமும் இருந்திருக்கிறது.

“வடக்கின் கண்ணாடி
தெற்கில் நிற்கவில்லை
வாரிசு யாரெனச் சொல்லிவிடும்
வாய்ப்பும் எனக்கில்லை
இல்லாத ஒருவனின்
இருப்பினை எப்படி
இன்னொருவர் அறியமுடியும்
எதையும் புத்தனிடம் ஒப்படை
எல்லாம் நிறைவாகும்”

இறுதிக்கவிதையில் அவமானம், அடிமைத்தனம் பற்றிய கருத்துக்கள் தெருப்பாடலிலும் ஒலித்துள்ளது. அதற்குச் சான்று இதோ:-

“நாம் போராடவில்லை யெனில்
நம் எதிரிகள்
நம்மைக் கொன்று விடுவார்கள்
அவர்களின் துப்பாக்கி முனையுடன்
அழுத்தமான எங்களின் எலும்புகளை
சுட்டிக்காட்டிச் சொல்லுங்கள்
சுதந்திரம் நம் வசமாகும்
பாருங்கள் அவர்கள் அடிமைகள்”

பிற நாடுகளின் இறப்புக் கவிதைகளைப் பேசிவிட்டு நம் நாட்டு இறப்புக் கவிதைகளை விடுவாரா நூலாசிரியர்?

இந்தியாவில் இறப்புக் கவிதைகளாக திருமந்திரத்தில் சில கையாளப்பட்டுள்ளன.

வள்ளலாரை விட மென்மையாக இருந்துள்ளார் கபீர்தாசர் எனக் கூறும் அதற்குச் சான்றாக அவரது கவிதை ஒன்றினைப் பொருத்தமாகப் பதிவு செய்துள்ளார் பல்லவி குமார்.
“பூக்களைச் பறிக்காதீர்
வலிக்கும் அதற்கும்
எனக்கும்.”

“பண்டம்பெய் கூரை பழகி விழுந்ததில் கல்
உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழி நடவாதே”

ஒரு மனிதனின் மரணத்திற்குப்பின் அவனது ஆவியுடன் வருவனவற்றையும் வராதவற்றையும் திருமூலரின் மேற்கண்ட பாடல் குறிப்பிடுகிறது.
பட்டினத்தாரின் “காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே” என்பதும் கையாளப்பட்டுள்ளது.

நேரு தம் கைப்பட ஒரு காகிதத்தில் எழுதி இறுதிக்காலத்தில் தலையணைக்கு அடியில் வைத்திருந்தது ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் பிராஸ்டின் கவிதை வரிகள்:-
“காடுகள்
அழகாக இருக்கின்றன
அவைகள் இருண்டு இருக்கின்றன
ஆனாலும்
நான் சில வாக்குறுதிகளை
நிறைவேற்ற வேண்டியிருக்கிறது
தூங்குவதற்கு முன்பாக
நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது”

இறுதியாக ‘தமிழ் இலக்கியத்தில் இறப்புச் சிந்தனைகள்’ எனும் கட்டுரையில்
“வினை விதைத்தவன்
வினை அறுப்பான்
தினை விதைத்தவன்
தினை அறுப்பான்”

என்ற பழமொழியையும்

“யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலுந் தணிதல மவற்றோ
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே
முனிவின்
இன்னா தென்றாலு மிலமே”
எனும் கலியன் பூங்குன்றனாரரின் புறநானூற்றுப் பாடலும் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

கணைக்கால் இரும்பொறையின் நிலைக்குத் தானே இரங்கிப் பாடிய

“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளின் தப்பார்,
தொடர்ப் படுஞமலியின் இடர்ப் படுத்து இரீஇய
கேள்அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி, வயிற்றிதுத். கீத் தணிய
தாம் இருந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத்தானே”

பாடல் குறிப்பிடப்பட்டுள்ளதும் மகா கவி பாரதியின்,
“காலா உன்னைச் சிறு புல்லென
மதிக்கிறேன்-என்றன்
காதருகே வாடா சற்றே உன்னை
மிதிக்கிறேன்”
எனும் இறுதிக் கவிதையும் சிறப்பு.

கடைசியாக இக்காலக் கவிஞர்களான கண்ணதாசனின்,
“வாழ்க்கை என்பது வியாபாரம்
ஜனனம் என்பது வரவாகும்
மரணம் என்பது செலவாகும்”

வாலியின்,
“பிறந்தாலும் பாலை ஊட்டுவார்-இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது கொண்டால்தான்
ஊர் போவது நாலால தான்
கருவோடு வந்தது
தெருவோடு போனது
மெய்யென்று
மேனியை யார் சொன்னது?
போன்ற பாடல்களைக் குறிப்பிட்டு சிந்திக்க வைக்கிறார் பல்லவி குமார். அத்துடன் ஜப்பானில் உள்ளதைப் போல இறப்பினை நேசிக்கும் வழக்கம் நம்மிடையே இல்லை எனக்குறிப்பிட்டுள்ளது அர்த்த அடர்த்தி மிக்கது.

வித்தியாசமான சிந்தனையுடன் எழுதப்பட்ட இக் கட்டுரைத் தொகுப்பிற்கு எழுதிய அணிந்துரையில் பொன்.குமார் “அவை இறவாக் கவிதைகள். இதயத்தை வருடுகின்றன. இறந்தவர்களை இருக்கச் செய்கின்றன. பல்லவி குமாருக்கு ஒரு பெயர் சொல்லும் தொகுப்பாகும் “உதிரும் பூக்களின் இறுதிக் கவிதைகள்” குறிப்பிட்டுள்ளது பொருத்தமானது. தொடரட்டும் பல்லவி குமாரின் வித்தியாசமான முயற்சிகள். படைக்கட்டும் மாறுபட்ட படைப்புகள்.

– பெரணமல்லூர் சேகரன்.

நூல் அறிமுகம்: பல்லவி குமாரின் ‘ஊடு இழை’ சிறுகதை – பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம்: பல்லவி குமாரின் ‘ஊடு இழை’ சிறுகதை – பெரணமல்லூர் சேகரன்



ஊடும் பாவுமான எளிய மக்களின் வாழ்க்கைக் கதைகள்
———————-
“இலக்கியத்தைக் கட்டளையிட்டு உருவாக்க முடியாது” என்பார் லெனின். உண்மைதான். இயல்பாய் இழைந்தோடும் அருவி போன்றது இலக்கியம். வாழ்வனுபவத்தின் கண்ணாடியால்.. பல வண்ணங்களோடு பல வடிவங்களோடு உருவாகும் படைப்பே இலக்கியமாக, அழியாத இலக்கியமாக நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.

அன்றாடம் வாழ்க்கையோடு மல்லுக்கட்டும் எளிய மக்களின் சராசரி வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் சிறுகதைகளாக ‘ஊடு இழை’ சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார் கவிஞர் பல்லவி குமார். இச்சிறு கதைகள் போன்ற மக்கள் இலக்கியமே அழியாத இலக்கியமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 15 சிறுகதைகளும் நாம் அன்றாடம் சந்திக்கும் கதை மாந்தர்களே. வாழ்க்கைப் போராட்டத்தில் அவரவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கதை நேர்த்தி குன்றாமல் ஊடும் பாவுமாக படைத்துள்ளார் பல்லவி குமார்.

பொருளாதாரம் தான் உறவு முறையையே தீர்மானிக்கிறது என்றார் மார்க்ஸ். அதை எளிமையாக ‘அம்மாசி தாத்தா’ சிறுகதை மூலம் உணர்த்தியுள்ளார் நூலாசிரியர். பெற்ற தந்தையே ஆயினும் பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் சாப்பாடும் மரியாதையும் கிடைக்கிறது என்பதை அம்மாசி தாத்தா பாத்திரத்தின் வழி நம்மைக் கரைய வைக்கிறார் பல்லவி குமார். நாள்தோறும் அரங்கேறி வரும் ஆணவக்கொலையின் அவலங்களை உணர்த்துகிறது ‘சாட்சி’ சிறுகதை. “ஆணவக்கொலை தொடர்பாகச் சிறப்புச் சட்டங்களை இயற்றி கறாராக அமுல்படுத்த வேண்டும்” என்னும் கோரிக்கையை வைத்துப் போராடிக் கொண்டிருக்கும் இடதுசாரிகள் நம் மனதில் வருகிறார்கள். மாடும் மனிதனும் ஒன்றாக வதைபடுவது இச்சமூகத்தின் மீதான கோபத்தை ஏற்படுத்துகிறது. இக்கதையில் ‘ஆச்சரியக் குறிகளாக வந்து விழும் மழைநீர்’, ‘முருக்கிப் போட்ட துணிபோல் கிடந்தான்’ என்னும் வர்ணனைகள் யதார்த்தக் காட்சிகள்.

கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத வேலையின்மை நாட்டில் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ‘கனல்’ சிறுகதை தகிக்கிறது.

இத்தொகுப்பின் தலைப்புக் கதையான ‘ஊடு இழை’ குறிப்பிடத்தக்கச் சிறுகதை எனலாம். சண்டை சச்சரவு இல்லாத குடும்பம் இருக்க முடியாது. ஆயிரம் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் குடும்ப உறவுகளுக்கு ஒன்று வந்துவிட்டால் ‘தானாடாவிட்டாலும் தன் தசையாடும்’ என்பதற்கொப்ப சண்டை சச்சரவுகளைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அன்யோன்யமாக இயங்குவது குடும்பத்தின் இயல்பு என்பதை அழகுறக் கதையாக்கியுள்ளார் நூலாசிரியர். “தறியில எந்த சிக்கலும், எவ்வளவு சத்தமும் வந்தாலும் ஊடு இழை மட்டும் அறுவாம ஓடிக்கிட்டு இருந்துதுன்னா.. நெசவு நல்லா இருக்கும். அதுமாதிரி நெசவாள  குடும்பத்துல எந்த சிக்கலும் எவ்வளவு சச்சரவு வந்தாலும் வீட்டுக்கு வந்த பெண் மட்டும் இழுத்துப் புடிச்சிக்கிட்டு போய்ட்டான்னா.. அந்த குடும்பம் நல்லாயிருக்கும்” என்பது காலங்காலமாக பெண்களே குடும்பத்தில் அனுசரித்துப் போக வேண்டும் என்பது எளிய குடும்பங்களில் இன்னமும் விரவிக் கிடக்கின்றன என்தற்கு இக்கதையும் ஒரு உதாரணம்.

‘கல்லு வூடு’ கனவில் ஓயாதுழைக்கும் குடும்பம்.. குறிப்பாக காமாட்சி கல்லு வூட்டில் கண்ட அவலக் காட்சிக்குப் பிறகு கல்லு வூடு பிரம்மை தகர்ந்து தனது கூரை வீட்டு மகிழ்ச்சியே மகத்தானது என்று எண்ணும் நிலை. ஆக.. கூரை வீடா கல்லு வீடா என்பதல்ல பிரச்சினை. வீட்டில் வாழும் மாந்தர்களின் நடவடிக்கைகளே வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பதைப் பூடகமாக இக்கதை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மண்ணுக்கும் மரத்துக்குமான உறவைத் தன் சொந்த அனுபவம் போல  இயல்பாகக் கதை சொல்கிறார் பல்லவி குமார்.

இன்றளவும் கிராமங்களில் நம்பப்படும் செய்வினை, ‘செய்வினை’ கதை மூலம் வாசகர்களுக்கு நினைவூட்டப்படுகிறது. ஆனால் இக்கதையில் மூடநம்பிக்கைகளையும் அறிவியலையும் ஒருங்கிணைத்துச் சென்று வெற்றி பெற்றுள்ளார் நூலாசிரியர்.

‘பிராது’ எனும் சிறுகதையில் குறி சொல்வது, பிராது கட்டி விடுவது போன்றவை பாத்திரங்களின் வழி இயல்பாக வந்து போகின்றன. ஆனால் இறுதியில் தனக்கு வரவேண்டிய பதவி உயர்வு பறிபோனதற்கு யார் மேல் பிராது கட்டுவது எனும் கேள்விக் கணையுடன் கதையை முடித்திருப்பது சிறப்பு.

இத் தொகுப்பில் உள்ள சில கதைகளில் நெசவுத் தொழில் காட்சிப்படுத்தப்படுவதும் அத்தொழிலில் கையாளப்படும் சிறுசிறு வேலைகளுக்கான வட்டார  வழக்குச் சொற்களை லாவகமாகக் கையாண்டுள்ளதும் பாராட்டத்தக்கது.

வெவ்வேறு கருப்பொருள்கள் போன்ற நல்ல சிறுகதைகளுக்குரிய இலக்கணங்களுடன் பெரும்பான்மை அளவில் பாத்திரங்களைப் படைத்துள்ள ஆசிரியரின் நடைச் செழுமையைப் போற்றியுள்ள எழுத்தாளர் ஜீவகாருண்யனின் அணிந்துரையை வழிமொழியலாம். இந்நூலை அழகுற வெளியிட்டுள்ள ‘தமிழ்ப் பல்லவி வெளியீடு ‘ பாராட்டுக்குரியது‌.

“கலை இலக்கியங்கள் யாவும் மக்களுக்கே” எனும் உயர்ந்த நோக்கில் வெளிவந்துள்ள எளிய மக்களின் வாழ்வியல் குறித்த “ஊடு இழை’ சிறுகதைத் தொகுப்பினை வாங்கிப் படிக்க வேண்டியது வாசகர்களின் கட்டாயக் கடமை.

– பெரணமல்லூர் சேகரன்

நூலின் பெயர் : ’ஊடு இழை’ சிறுகதைத் தொகுப்பு
நூல் ஆசிரியர் : பல்லவி குமார்
பக்கம்: 132

விலை : ₹125
வெளியீடு : தமிழ் பல்லவி
9/1ஏ இராஜ வீதி, கூட்டுறவு நகர்
பெரியார் நகர் (தெற்கு)
விருத்தாசலம் 606 001
கடலூர் மாவட்டம்
04143238369, 9942347079