Poem - Good story writer | நல்ல கதை ஆசிரியர்

நல்ல கதை ஆசிரியர்: கவிதை

படித்த காலங்களில் ஒரு வேளையாவது பட்டினி! பத்தும் பறந்து போனதில் படித்ததையும் மறக்க வைத்தது பசி! பசி ஒரு புறம் பாது காப்பு உடை ஒரு புறம்! ஒருபுறம் ஒட்டுப் போட்டால் மறுபுறம் கிழியும், மறுபுறம் ஒட்டுப்போட்டால் ஒட்டுப்போட்டதில் கிழியும்! எவ்வளவுதான்…
கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற…
பாங்கைத் தமிழன் கவிதை

பாங்கைத் தமிழன் கவிதை




உறவுக்குப் பொருள்?
*************************
என் கண்கள்
தொடும் வரைதான்
வானத்தின் எல்லை!

என் கண்களுக்குத்
தெரியாதப் பகுதி
கடலன்று;
அது ஏதோ ஒன்றுதான்!

காற்று
உயிரற்றப் பின்பும்
என் பிணத்தையும்
சூழ்ந்திருக்கும்!

மண்
என்னை விடுவதும் இல்லை;
நான்
மண்ணை விடுவதும் இல்லை;
உயிருடனும், உயிரற்றப் பின்பும்!

என் பிணத்தை ருசிக்கும்
நெருப்பைக் கண்டு
என் உடல் அஞ்சுவதில்லை!

உறவுக்குப் பொருள்?
பொருள்தான்!

-பாங்கைத் தமிழன்…

இறைவி இவள் கவிதை – பாங்கைத் தமிழன்

இறைவி இவள் கவிதை – பாங்கைத் தமிழன்




அவள் என்ன
கற்சிலையா
உலோகத்தாலான
உருவச்சிலையா?

அரிதாரம் பூசி
அலங்கரித்து
அலங்கல் சார்த்தி….

திருவிழா என்னும் நாளில்
ஆராதிக்கப்படும்
பல்லக்குச் சிலையா?

சிற்பி செதுக்கிய
சிங்காரச் சிலையா?

அசையாத
அழகு செய்யப்பட்ட
அவயங்களால்
அம்மன் சிலையென
காட்டப்படும்
அலங்காரச் சிலையா?

நாள் குறித்து
அர்ச்சனை செய்து
திருவிழா நாளாக்கி
‘ மகளிர் நாளென’
கொண்டாடி……
விழா முடிந்து
மூலையில் முடக்கி
தாழிட்டு…..
இருட்டறையில்
இருக்கையில் அமர்த்தி
இயங்காதவளென
சொல்லாமல் சொல்கிறச்
சொப்பனக் குறியீடா?

இயக்குபவளை
இயங்குபவளை
இனிமைகளின்
இடமாக இருக்கும்
இளகும் இதயத்தவளை
இன்றொரு நாளில் மட்டும்
இமயமிவளென
இருட்டடிப்புச் செய்வதேன்?

அவள்
இன்றும் என்றும்
இயங்கும்……
இயன்றதையெல்லாம் செய்யும்
இறைவி அல்லவா?

-பாங்கைத் தமிழன்

தீண்டும் தீட்டு! கவிதை – பாங்கைத் தமிழன்

தீண்டும் தீட்டு! கவிதை – பாங்கைத் தமிழன்




எங்கள்
கண்கள் கூடத் தொட்டதில்லை;
கற்பகிரகத்தின் கதவுகளை!

நாங்கள்
எல்லாமும் சிந்திய
உழைப்பால் உருவான
கற்பக்கிரகத்தில்……
கடவுள்!

அபிஷேகங்களாலும்
அர்ச்சனைப் பூக்களாலும்
ஆனந்தப் படுகிறார்
ஆண்டவர்!

அபிஷேகப் பொருளும்
அர்ச்சனைப் பூக்களும்
நாங்கள் சிந்திய
வியர்வையிலும்
குருதியிலும் வந்தவை!

கற்பக்கிரகமும்
அய்யர் வீடும்
மணக்கிறது நாளும்
தீண்டும் தீட்டு….
கண்களுக்குத் தெரியாமல்!

– பாங்கைத் தமிழன்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




அட்சய திருதியை
**********************
அள்ள அள்ளக் குறையாதது
அட்சயம்!
இந்து சமண சமய
விரும்பிகளின் புனித நாள்!
இந்த நாளில்
எதனை ஒன்றை செய்கின்றோமோ
அது…
அப்படியே தொடரும்;
குறையில்லாமல்!

பிரம்மா…
இந்த பூமியை
சிருஷ்டித்தப் புனித நாளாம்!

எப்படி
நம்பாமல் போவது?

நாம்
குறையின்றி வளர வேண்டுமே!

பத்தாண்டுகளுக்கு முன்
அட்சய திருதியைக்கு
அட்டிகை வேண்டுமென
அடம்பிடித்தாளாம்
நண்பரின் துணைவி!

தெரிந்த… அறிந்த…
நண்பரின்
நகைக்கடையில்
கொஞ்சம் முன்பணமும்
அட்டிகைக்கான
பெரும் பணம் கடனாகவும்
வாங்கிக் கொடுத்தாராம்!

வளர்கிறதாம்….
அன்று
அவர் செய்த செயல்;
இன்றும்
கடனாக….

‘ஒரே நாடு’
*************
இரண்டு இடம் வேண்டாம்;
இந்த ஒரே இடம் போதும்!
ஏமாற்றுவதற்கும்
ஏமாறுவதற்கும்!

எங்கேனாச்சும்
கேள்விப்பட்டிருப்பீரா
இந்த
அநியாயத்தை!

முதல்
மனித இனமாகத் தோன்றி
வழி வழியாய்
வாழ்ந்து வந்தோரை….
வழி மறித்து,
அந்நியப் படுத்திய
அநியாயத்தை
வேறெங்கேனும்
கேள்விப்பட்டதுண்டா?

கறையான் புற்றுக்குள்
கருநாகம் புகுந்துக்கொண்ட
கதையதனை
வேறெங்கேனும்
கண்ட துண்டா…. கேட்டதுண்டா?

இந்த நாடுதான்
ஏமாற்றுவதற்கும்
ஏமாறுவதற்கும்
உகந்த நாடு!

ஒற்றுமையாகத்தான்
வாழ்கிறோம்
என்பதெல்லாம்…..
நரியின் ஊளை!

ஒரே தன்மையுள்ள
மண்ணில்
வெவ்வேறு தன்மையுள்ள
மனிதர்!
வேறு எங்கேனும்
நடப்பதுண்டா?

ஒரு பாம்புக்கு
படையே நடுங்கியக் கதை
இந்த
மண்ணிலிருந்துதானே?

விஷம் கொண்ட பாம்பை
அடித்து விரட்டுதற்கும்
அய்யோ பாவமென்ற
அடி மனதை தொட்ட
தந்திரவாதிகளை
வேறெங்கும் கண்டதுண்டா?

கண்ணுக்குக்
கசப்பானவனை
கறைப்படுத்தி…..
கண்ணுக்குத் தெரியாத
கரை கட்டி….
கரை உடையாமல்
காப்பதற்குக்,கையில் தடிகொடுத்து,
காவலரை நியமித்து
கர்வம் ஏற்றி…..
அடடா….
இதனை புத்திசாலித்தனமென்று
போற்றி மகிழும்
ஒரு தேசத்தை
வேறெங்கும் தேட வேண்டாம்;

அந்த
விடியாத தேசம்….
இதுதான்…. இதுதான்!

சொல்லுங்கள் சாமீ
**********************
தாலி அறுப்பதற்கு
நீங்கள்தான்
காரண மென்றால்
வலிப்பதாகவும்
நடிக்கத் தெரியும்
உங்களுக்கு!

புலிப் பற்களில்
தாலி கட்டிய
பூர்வீகக் காரனுக்கு
அறிவில்லை!

நீர் சொன்னதெல்லாம்
நம்பி… நம்பி….

தாலியை
தாரைவார்க்கிறோம்…
தங்கத்தில் கட்டி….
உடன்
உயிரையும்!

தாலி கட்டி
அதனை
சாதுர்யமாக
காக்கும்
வித்தகிகளை
வீட்டுக்காரிகளாக்கியவர்
நீங்கள்!

இப்போதும்
நம்புகிறோம்;
எங்கள் தாலிகளை
காப்பாற்றுங்கள்!

தங்கத்தில்
தாலி செய்தால்
விமோசனமில்லையென
ஒரு
வித்தையை வீசுங்கள்;

நம்புவதற்கு
நாங்கள்
காத்துக் கிடக்கிறோம்!

உடன்
ஒரு ஆலோசனை சாமி;
கொஞ்சம்
படிக்க விட்டுட்டீங்கல்ல
அதனால்தான்!

தாலியை
விலைமதிப்பற்றதாகவும்,
தாலி செய்யும்
தங்கத்தை மாற்றி
விற்பனைக்கு உதவாத
ஓர் உலோகத்தைக்
கூறுங்கள்….
ஏற்றுக் கொள்வோம் சாமி!

கூறுவது
நீங்களாயிற்றே!

– பாங்கைத் தமிழன்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




விழுதலும் எழுதலும்
***********************
இடத்தைப் பொறுத்தது
எழுதல் என்பது!
விழுந்து விட்ட
எல்லா இடங்களிலும்
எழுந்துவிட இயலாது!
மண்ணின் தன்மையைப்
பொறுத்துதான்
எழுந்திருப்பதும்
இயலாததும்!

மண் மட்டுமே
ஒட்டி… தட்டினால்
போகுமளவிற்கு
சில இடங்களில்
எழுந்து விடலாம்!

சில சிறு சிராய்ப்புகளுடன்
சில இடங்களில்
எழுந்து விடலாம்!

சில இடங்களோ
மூக்கும், மூட்டும்
முறிந்தேதான்
எழுந்திருக்க முடியும்!

சில இடங்கள்
சிலர் உதவியிருந்தால்
மட்டுமே
எழுந்திருக்க இயலும்!

சில இடங்களில்
விழுந்தால்…..
அம்புட்டே!
அதையெப்படி
நான் காதல் என்று
சொல்ல முடியும்?

இல்லந்தோறும் புனித நூல்
********************************
வள்ளுவனை திருவள்ளுவனை படிப்போர் நாளும்
தீங்கற்ற வாழ்வுதனை வாழ்வார் நாளும்
தெள்ளுதமிழ் அள்ளித்தரும்
செல்வம் எல்லாம்
திருக்குறளில் கிடைத்திடுமே பருகிப் பாரீர்!

உண்மையுடன் வாழ்க்கைதன்னை வாழ்வோர் யாரும்
ஒப்பற்றத் திருக்குறளை ஓதி வாழ்வார்!
ஆயிரத்து முந்நூற்றுமுப்பது குறளால் அய்யன்
அகிலத்தை ஆண்டகதை
படித்துப் பாரீர்!

அறந்தானே மானுடத்தின் நாதம்  என்றே
அதை வைத்தான்  அய்யனவன் முதலில்பாலாய்!
பொருளென்னும் செல்வந்தனை இரண்டாம் பாலாய்
பொய்யில்லா புலவனவன் போற்றிச் சொன்னான்!

இன்பமது என்னவென்றே விளக்கிச் சொல்லி
இறுதியிலே மூன்றாம் பால் ஊட்டினானே!
உலகோரின் வாழ்க்கையது சிறக்க வேண்டி
உத்தமனோ உண்மைகளை விளக்கி வைத்தான்!

அறியாமல் அகிலத்தில் வாழ்வோ ரெல்லாம்
அய்யனவன் திருக்குறளை
கற்று வாழ்ந்தால்
அகிலத்தில் மேன்மையுற வாழ்க்கை தன்னை
அற்புதமாய் வாழ்ந்திடவே வழியைச் சொல்லும்!

ஞானிகளின் குருவாக வந்துத் தோன்றி
ஞாலமது சிறந்திடவே வழியைச் சொன்ன
மேன்மைமிகுத் திருக்குறளை இல்லந் தோறும்
புனிதமிகு நூலாகப் போற்றி வாழ்வோம்!

– பாங்கைத் தமிழன்

தினம் ஒரு பூ கவிதை – பாங்கைத் தமிழன்

தினம் ஒரு பூ கவிதை – பாங்கைத் தமிழன்




வேண்டுகோள்தான் இது;
இறுக்காதே இன்னும்!
வலிமையற்றவர்
வாழ வேண்டும் இங்கு!

வியாபாரிகளுக்குத்தான்
வீரியமென்றால்
வியர்வை சிந்துபவனுக்கு
வீரியமும் வீரமும் விவேகமும் அதிகம்தான்!

இந்த தேசத்தில்
தேச பக்தனை
அடையாளம் தெரிந்துகொள்ளாமல் வாழ்வது
எவ்வளவு பெரிய அவலம்; அவமானம்!

இந்த மண்ணை
நேசிப்பதல்ல….
நம்புவதுதான்
பெரிய தேசபக்தி!

இந்த மண்ணே
வழி…
வாழ்வு….

பக்தி என்பதை
வேஷத்தை வைத்து
எடைபோடும் நிலை
எப்போது வந்தது
இந்த மண்ணில்?

வேஷம் போடத் தெரியாமல்
வியர்வையை மட்டுமே
இந்த மண்ணில் சிந்தும்
மண்ணுக்குச் சொந்தக்காரனின்
வேண்டுகோள்!

இடையில் வந்த
எதனை வேண்டுமானாலும்
விற்றுக்கொள்;
ஆணவம் வந்தால்
அதிக பசி வரும்தான்;
அதை இதை
எதை வேண்டுமானாலும்
பிராய்ந்து போட்டுக்கொள்;
பெரும்பசிக்காரனே!

ஆள வந்தால் மட்டுமே
அடிமட்டத்துக்காரனின்
பசியும் வலியும் தெரியும்!

ஆசைப் படுபவனும்
அள்ளிக் கொள்ள நினைப்பவனும்
வறுமைப் புத்தகத்தை
வாசிக்க முடியாதுதான்!

மீண்டும் மீண்டும்
வலியுறுத்துகிறேன்;
என்னுடைய வேண்டுகோள்
ஒன்றேவொன்றுதான்!
இடையில் வந்த
எதனை வேண்டுமானாலும்
விற்று, பசி போக்கிக்கொள்!

உனக்கு
இந்த மண்ணின்
பூர்வ குடியானவனின்

ஒரேயொரு….
இரகசியம் சொல்கிறேன்!

உலகில்
இருநூற்று முப்பதுக்கும்
மேலான
நாடுகளாம்!

எந்த நாட்டிற்கும்
இல்லாத பெருமை
என் தாயகத்திற்கு
மட்டுமே உண்டு;வியாபாரியே!
அது தெரியுமா உனக்கு?

பூ….
பூ தெரியுமா உனக்கு?
மென்மையும் செழுமையும்
வளமையும் உள்ள இடத்தில்
மட்டுமே பூக்குமே….
பூ….
அதனின் இரசியம்
சொல்கிறேன்!

உலகில் உள்ள நாடுகளில்
முன்னூற்று அறுபத்தைந்து
நாட்களிலும்
ஏதாவது ஒரு பூ
தினமும் கிடைத்துக்கொண்டே
இருக்கும் ஒரே தேசம்
என் இந்திய தேசம் மட்டுமே!

அந்த
என் தேசத்தை மட்டும்
விற்றுவிடாதே!

பாங்கைத் தமிழன்.

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




காதலைப் புரிந்து கொள்ளுங்கள்
**************************************
புரிந்து கொள்ளாதவர்கள்
தாமாகவே
பிரிந்து விடுவார்கள்!

புரிந்து கொண்டவர்களை
புரிந்து கொள்ளாமல்
பிரித்து வைக்க
பிரயத்தனப்படாதீர்கள்!

காதல்
ஒரு மலரின்
தேன் சுரப்பைப் போன்றது!

காதல்
காமமும்
கவர்ச்சியும்
கலந்ததுதான்!

பொய்கள்
ஊடுறுவ முடியாத
காதல் கோட்டைக்குள்
சாதி, மத, மொழி, இனச்
சாத்தான்களா?

எதனையும்
எதிர்க்கும்
வலிமை உடையதுதான்!

அவ்வளவு
எளிதாக
வசப்பட்டு விடாதது காதல்!

ஈர்ப்பு இல்லாமல்
இணைவதில்லை
இதயங்கள்.

காதலுக்கான
முக்கியமானது
சூழல்!

காதல்
வன்முறையை
ஒருபோதும் நாடாதது!

காதலுக்கு
கல்வியறிவு முக்கியமல்ல!

காதல்
தாவுகின்ற தன்மை இல்லாதது!

கலந்துவிட்ட பிறகு
குற்றவுணர்சசி கொள்வதில்லை காதல்.

தவறு செய்துவிட்டோமென்று
பின்னோக்கித் திரும்புவதில்லை
பிரியமான காதல்.

ஆயுதத்திற்கும்
அச்சப்படாதத்
தீவிரம்தான் காதல்!

நாடகக்காதல்
நடிப்புக்காதல்
என்பதெல்லாம்
வெறுப்பின் விதைகள்.

காதலை
குற்றமென்று
சொல்வதற்கு
எந்த நீதிபதியும்
சட்டம் பயிலவில்லை!

காதலில்
கருப்பு சிவப்பு என
பிரித்துச் சொல்லும்
மருத்துவம் இல்லை!

காதலுக்கு
எந்த சாயம் பூசினாலும்
ஒட்டிக் கொள்ளாது!
அது
சுயமரியாதைக் குருதி!

ஐயம்தான் ஐயனே…’!
**************************
நம்பிக்கை என்பது
அவரவர்
நம்பிக்கை!

உருவம் வைத்துப் பார்ப்பதா
உருவமற்றுப் பார்ப்பதா

உருவமென்றால்….
மலை போன்றா
மரம் போன்றா
விலங்கு போன்றா
பறவை போன்றா
மனிதன் போன்றா?

அவரவர் நம்பிக்கை….
ஆடைகளை, அணிகலன்களை
அணிவித்துப் பார்ப்பதா?

இயக்கும்
இயக்குநரை
மண், மரம்,கல், உலோக
உருவங்களுக்குள்
அடக்க முடியுமா?
அறியாமை கேள்வியென
நினைத்தாலும்…
ஆம். இல்லை.
மழுப்பலான பதில்தான்!

சரி…
உருவத்தில்
அடங்கிவிடும்
உலக இயக்குநருக்கு;
நுதலில்தான்
குறியீடுகளை
குறிக்கின்றீர்!

அதே
குறியீடுகளை
மனிதரும்
தம்தம் நுதலில்
குறித்துக் கொள்வது எப்படி?

மனிதரும்,
இயக்குநர் சிலையும் ஒன்றா?

மனிதரின் மனநிலை
சிலைக்கு உண்டா?

சிலைதான்
புனிதமென்றால்
குறியீடுகளை
சார்த்திக்கொள்ளும்
மனிதனும்
புனிதனா?

சிலை போன்றே
குறியீடுகளை
போட்டுக்கொள்ளும்
மனிதன்
ஆசையற்றவனா?

சிலைகளை வணங்கும் மக்கள்
சிலைகளைப் போன்று
குறியீடுகளை
அணிந்து கொள்ளும்
மனிதனையும்
வணங்குதல் வேண்டுமா?

உலக இயக்குநர்
சிலையிலிருந்து,
மனித உருவங்கள்
காப்பியடிக்கப்பட்டனவா?

மனிதன்
தன்னுருவத்தில்
உலக இயக்குநர் உருவத்தை
வடித்தானா?

ஏன்டா சாமி
பகுத்தறிவைக் கொடுத்தாய்?

சாமி….
நான் கேட்கும்
ஐயங்களெல்லாம்
உங்களையல்ல;

என்னைப் போன்ற
மனிதனை!

உலகின் உன்னதம் நீ
*************************
உணவுக்கும் உடுத்துதற்கும்
உழைப்பதனைக் கொடுத்தவன் நீ
உலகத்தார் வாழ்வதற்கு
ஓடாகத் தேய்ந்தவன் நீ!

நிலமுழைத்து நீர்கொடுத்து
நிம்மதியைத் தந்தவன் நீ
நிழல்கொடுக்கும் மரமதனை
நிலத்தினிலே நட்டவன் நீ!

மண்குடிலோ மாளிகையோ
மணக்கின்ற மலர்வனமோ
மாநிலத்தை வளம்செய்ய
மாசின்றி உழைப்பவன் நீ!

அலைகடலே யானாலும்
ஆகாய மானாலும்
சாலைகளே யானாலும்
சளைக்காமல் உழைப்பவன் நீ!

மலையுடைத்து மண்சுமந்து
காடுதனில் தினமுழைத்து
சுமைசுமந்து உனையிழந்து
பிறர்வாழ உழைப்பவன் நீ!

கணினியினை இயக்குபவன்
கழனியிலே இறங்குபவன்
சாக்கடையை அள்ளுபவன்
சரக்குமூட்டை தூக்குபவன்;

கனரகங்கள் இயக்குபவன்
கட்டைவண்டி ஓட்டுபவன்
கரமுழைக்கும் அனைவருமே
கடவுள்நிகர் உன்னதமே!

– பாங்கைத் தமிழன்