Pangai Thamizhanin Kavithaigal 2 பாங்கைத் தமிழனின் கவிதைகள் 2

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




மனிதனே…வா..வா…
***************************
மதங்களால் மனிதம் போச்சே…
மாயமோ உண்மை ஆச்சே!
பேயெலாம் ஆட்சி செய்தே
பிராணனை வாங்கலாச்சே!

மனிதர்கள் ஒன்று சேர
மதியிலா நிலைமை யாச்சே!
மதமது மதுவைப் போலே
மயக்கிடும் தன்மை யாச்சே!

புரிந்திடா மூடர் கூட்டம்
புவிதனில் அதிக மாச்சே!
பிறவியில் மனிதன் தானே
பெருமையாம் புவியின் மீதே!

அறிந்திடா மூடரெல்லாம்
அடித்திங்கே சாகின்றாரே!
தடுத்திட வேண்டும் தோழா
தரணியை ஆள்வோம் வா… வா…!

போவான்… போவான்… 
*****************************
படித்தவன் பாவம் செய்தால்
பாவியாய்ப் போவான் போவான்
பண்பதை கொடுக்கா கல்வி
படித்தென்ன பயனோ சொல்வீர்!

அரசாங்கப் பணியின் வாய்ப்பு
அனைவரும் பெறு வதில்லை;
பெறுவோர்கள் சிலபேர் கூட
சிரமங்கள் கடந்தே தீர்வர்!

மதிப்பெண்ணில் கூடும் குறையும்
படித்திட்டக் கல்வி தன்னில்
கூடுதல் மதிப்பெண் மட்டும்
கொண்டிட்டோர் திறமை இல்லை!

பணிபெறும் வாய்ப்பில் கொஞ்சம்
பள்ளங்கள் மேடு பார்த்தே
நிரவிடல் சமூக நீதி;
நியாயமே யார்க்கும் நன்றே!

அரசாங்கப் பணியில் சேர்வோர்
அனைவர்க்கும் பொதுவாய் ஆவர்;
பணியிலே சேர்ந்தோர் பலரோ
பண்பிலே தவறு கின்றார்!

தன்சாதிப் பார்த்துப் பார்த்து
தன்கடன் தவறிச் செய்வோர்
தரித்திரர் என்று சொல்வோம்
தரங்கெட்ட மனிதர் தம்மை!

சாதியால் ஒன்றாய்ச் சேர்ந்து
நீதியில் தவறு கின்ற
நீசரே அதிகம் என்பேன்
நிதர்சனம் இதுதான் இங்கே!

உழைக்கின்ற மக்கள் ஈயும்
உவர்ப்பான வியர்வை வரியில்
ஊதியம் பெறுவோர் யார்க்கும்
உயர்வென்ன தாழ்வே என்ன?

படித்தவன் பாவம் செய்தால்
போவானே போவான் போவான்
அய்யோ என்றழிந்தே போவான்
பாரதி சாபந் தானே
பலியாக வேண்டாம் தோழா!

ஹிஜாப் என்பது…’       
***********************
அறியா வயதில்
அவளின்
முகம் பார்க்க முடியவில்லையே
என்று
வருத்தப்பட்டதுண்டு….
பிறை நிலவா
முழு நிலவா
தங்கை… தமக்கை
தாய் முகமா?
மேகமென
மறைத்த திரையின் மீது
வருத்தப்பட்டதுண்டு….
அது
கோபமல்ல!
அவள்
முகம் மறைத்த
அந்தத் திரையை
மத அடையாளமென்று
கருதியதே இல்லை!
ஒரு
ஆடையாக மட்டுமே
அறிந்ததுண்டு!
ஒரு
பெண்ணின் ஆடை…
அவ்வளவே தெரியும்!
ஒரு பெண்ணின்
விருப்ப உடையை…
உடையாகப் பார்த்தே
பழகிய தேசம்!
அந்த
உடையின் பெயரை
அறிந்திடக்கூட
ஆர்வம் இல்லை!
அது
ஒரு பெண்ணின் ஆடை!
அவ்வளவே….
அதில் என்ன
ஆராய்ச்சி?
மத ஆராய்ச்சி?
அவளின்
நாகரிக உடையது….
அவளின்
விருப்ப உடை அது….
போ….
போடா…..
சகோதரியை
சங்கடப்படுத்தாதே!
மதத்தைத் தூக்கி
மாக்கடலில் போடு! 

Pngai Thamizhan's Poems பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




‘பரம்பரை’
*************
காய் கனியில்
கண்டறிந்து…
காய்க்கும் விதையை
பூக்கா செய்தார்!
பூவா விதையை
காயாய் செய்தார்!
குட்டிகள் போட்டதை
மலடாக்கினர்!

மலட்டு விலங்கினை
மாதாவாக்கினர்!
உயிரென ஒன்றை
உசுப்பேத்தியே…
உடைத்தார் உடைத்தார்
படைத்தவன் விதியை!
மரபணு மாற்றம்
என்றதை அழைத்து….

உலகினை அதிலே
மயங்கிட வைத்தார்!
தத்தரிகிட தித்தோம்
தத்தரிகிட தித்தோம்;
தந்தனத்தோம் தந்தனத்தோம்
தாளம் மாற்றி
மேளம் அடித்தார்!
மரபணு உடைக்கும்
மதியாளர் சொல்வீர்….

மனிதர் தம்மின் மரபணுவதிலே
மதங்கள் தெரிந்ததா?
சாதிகள் தெரிந்ததா?
ஏழையர் மரபணு
ஏய்த்தவன் மரபணு
ஏதும் தெரிந்தால்
எம்மிடம் கூறும்!
கொற்றப் பரம்பரை
வீரப் பரம்பரை

அடிமைப் பரம்பரை
அணுக்களில் உண்டா?
மரபணு மாற்றும்
மா மேதைகாள்
மாநிலம் அறிய
மறைக்காமல் சொல்லும்!

‘குயிலோசை கேட்போம்’!
********************************
இங்கிருந்து தொடங்கு
சாதியை
சமயத்தை
உணவை
பழக்க வழக்கத்தை
ஒன்றெனச்செய்!

காசு பணத்தை
சொத்து பத்தை
ஒரே அளவீடாக்கு!
நிலம் நீரை
சமமாக்கு !
குப்பை அள்ளுவதை
கோயிலில் அள்ளுவதை
சமப் படுத்து!

இப்போது வா…
எந்த மொழி குயில்மொழியோ…..
அதன் குரலோசையை
ஒன்றாகக் கேட்போம்!

‘இதுதான் தலையெழுத்தோ? ‘
************************************
மாபெரும் கற்பனைக் கதையான
மகா பாரத பீஷ்மனின்
அம்புப் படுக்கைக்காக
அழுது கொண்டிருப்போர்
இருக்கும் வரை….
பசித் தீயின்
படுக்கையில்
மடிந்து கொண்டிருப்போர்
மடிந்து கொண்டுதான்
இருக்க வேண்டும்…
இந்த நாட்டில்!

இன்றும்….
பாஞ்சாலிகளின்
துகில் உரிப்புக்காக
துடித்துக் கொண்டிருப்போர்
இருக்கும் வரை…
எங்கள்
இந்திய ஏழைச் சகோதரிகளின்
மானத்தைக் காக்க
எந்த
கலியுகக் கண்ணனும்
பிறந்த பாடில்லை!

எந்த சாமியும் வந்து
எனக்கு
கோடி கோடியாய்க் கொட்டி
கோட்டை நிகர்
கோயில் கட்டிக்கொடுங்களென்று
கோரிக்கை வைக்காத முன்பே….
ஆட்டை போடுவதற்காக
ஆலயங்கள் அமைப்போர்
இருக்கும் வரை….
அரையாடை பக்கிரிகளை
அடையாளம் காண்போர்
வரப் போவதில்லை!

மதம் பிடித்தோர்களால்
தேசம் ஆளப்படும் வரை
மண்ணள்ளிப்
போட்டுக்கொள்ள வேண்டியதுதான்
தேசத்தின் தலையில்!

‘வலி’
***********
அதெல்லாம் ஒன்றும் பெரியதாகக்
காயப்படுத்தி விடவில்லை….
பழகிவிட்டது.

தொடாமல் இருப்பது
தொட்டுக் கொடுப்பதை
தூர வைக்கச் சொல்வது
வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து
பேசி அனுப்பி விடுவது…
அவனுங்களுக்கென்ன
அரசாங்கத்துப் பிள்ளைகள் என்று
அர்ச்சனை செய்வது;

கேட்டுக் கேட்டு
திரும்பக் கேட்டு விட்டால்
திமிரப் பார்த்தியா?
என்று
கும்பல் சேர்வது!
எல்லாமும் கடந்து
வந்தாகி விட்டது!
அடுத்தவருக்கு
முற்பட்டோர்… பிற்பட்டோரென்ற….
தூரத்தைத் தாண்டுவது மட்டுமே…
தாண்டி வரக்கூடியத் தடை!

இல்லாமை
கல்லாமை
அறியாமை
தெரியாமை
வறுமை
தீட்டு
அய்யோ…..அம்மாடி
தாண்டவே முடியாதத்
தடைகள்… தடைகள்… தடைகள்!

எந்த
மவராசனோ
அவன்
காந்தியோ…. நேரோ….
பீமாராவோ…. காம
ராசனோ
ராமசாமியோ….
கோடி புண்ணியமடா சாமி!
உங்கள் குலம் தழைக்கட்டும்!

சட்டம் வகுத்தது உச்சம்
அதனை
திட்டமாக்கியதும் உச்சம்!
சாமிங்கடா நீங்கள்!!

ஒரே வகுப்பு
ஒரே வாத்தியார்
ஒரே பாடத் திட்டம்
ஒரே தேர்வு முறை….
சாதியின் அடையாளமற்ற
விடைத்தாள்!
முன்னப் பின்ன மதிப்பெண்!

பத்துல….
ஒன்றோ…. ரெண்டோ…
குமாஸ்தா…. காவலன்… ஏவலன்….
அரசாங்கத்தில் அனுமதி!
அப்பாடா….
ஏதோ பசி போக்கிக்கொள்ள
ஒரு வழி!

அப்பனுக்கு….
ஆத்தாவுக்கு….
தாத்தா பாட்டிக்கு
மாமன் மச்சானுக்கு
அக்காள் தங்கை அத்தைக்கு
அண்ணன் தம்பிக்கு
சித்தப்பன் பெரியப்பனுக்கு
சந்தோசம்ங்றதை விட….
சப்போர்ட் கிடைக்குமாம்!

“ஏன்டா?
எங்கள் சோற்றில்
மண்ணள்ளிப்போட்டேன்னு”
கன்னத்தில் அறைந்திருந்தால் கூட
காயம் பெருசா இருக்காது!

தலைமுறையின்
முதல் கவர்மென்ட் குமாஸ்தா
வேலையில் சேருவதற்கான
என்னோடப் படிப்புச் சான்றையும்….
ஜாதிச் சான்றையும்
சோதிக்கும்போது….

நான் வேலையில் சேரும்
அலுவலக ஆபிஸரின்
முகத்தைப் பார்க்கணுமே….
ப்ப்ப்பா………
ஆயிரமாயிரம் கருந்தேள்
கொட்டிய
வலி……
இன்னும் வலிக்குது சாமி!

‘கைத்தடி’
*************
உடலது தளரும் போது
உள்ளத்தின் வலிமை குன்றும்;
உள்ளமும் உடலும் சோர்ந்தால்
உறுதியில் உடைசல் தோன்றும்

எண்ணத்தில் வலிமை கொண்டும்
இயல்பது தளரும் நாளே
முதுமைதான் வந்த போது
இயலாமை இயல்பு தானே!

மூப்புக்குத் துணை யென்றாலும்
மூர்க்கரை விரட்ட எண்ணி
காந்தியார் கையில் கொண்டார்
கைத்தடிக் காலாய் கொண்டார்!

பெரியாரின் கையில் தானே
பெருந்தடி கையில் கொண்டார்
பேய்களாம் மூடர்க் கூட்டம்
பிய்த்திட எண்ணம் கொண்டார்!

பெரியோர்கள் கையில் தானே
பேசின கைத் தடிகள்;
சிறியோர்கள் கூட்ட மாக
சேர்த்ததும் கைத் தடியே!

இயலாமை கொண்டோ ரெல்லாம்
எடுத்தனர் ஆளுக் கொன்றாய்
இதைமக்கள் புரிந்துக் கொண்டால்
எடுத்தவர் தடுக்கி வீழ்வார்!

சாதியை கையில் தடியாய்
சமயத்தை கையில் தடியாய்
கட்சியை கையில் தடியாய்
கைகொண்டார் கை இல்லாதோர்!

வாழ்க்கையில் வலிமை குன்றி
வந்திட்டக் காலந் தன்னில்
கைத்தடி ஊன்று கோ(கா) லாய்
உதவிடும் துணையாய் நின்று!

உழைப்பினால் உடைந்து போனோர்
ஊன்றியே நிற்றல் வேண்டி
கைத்தடி எடுத்தல் ஒன்றும்
கடுங்குற்றம் இல்லை இல்லை!

ஊரினை வளைத்துக் கொண்டோன்
உட்கார்ந்து உண்போன் எல்லாம்
சாதிகள் சமயம் தன்னை
சதிசெய்ய எடுக்க வேண்டாம்!

ஊன்றுகோல் உள்நோக் கத்தை
உலுத்தர்கள் அறிய மாட்டார்;
கைத்தடி போலே மக்கள்
கையிலே சிக்க வேண்டாம்!

Ithu Sathiyam Pesuthalalla Sandhegam Poem By Pangai Thamizhan பாங்கைத் தமிழனின் இது சாதியம் பேசுதலல்ல சந்தேகம்! கவிதை

இது சாதியம் பேசுதலல்ல சந்தேகம்! கவிதை – பாங்கைத் தமிழன்




வர்ணத்தைக்கொண்டு
பிரித்துப் பார்க்கும்
வர்ணாஸ்ரம அய்யம்!
நெற்றியில்
பிறப்பு சாத்தியப்படட்டும்!

மார்பில் ஜனனம்
உண்டாகியிருக்கட்டும்!
இடுப்பில் பிறப்பு
இருந்து விட்டுப் போகட்டும்!
காலில் பிறந்தவரெல்லாம்
நம்பி இருக்கட்டும்!

எந்த உறுப்பிலும்
பிறக்காமல்
அவன் அப்பா அம்மா வுக்குப்
பிறந்தவன்
ஏன் இழிந்த நிலை?

இப்போது
சொல்லுங்கள்
இப்படிப் பார்க்கும்
உங்கள் பிறப்பு
இப்போது
எந்த நிலை?