நூல் அறிமுகம்: மதுக்கூர் இராமலிங்கத்தின் ’கையளவு கடல்’ – அண்டனூர் சுரா
நூல் : கையளவு கடல்
ஆசிரியர் : மதுக்கூர் இராமலிங்கம்
விலை : ரூ. ₹130.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
மார்க்சிய செயற்பாட்டாளர் மதுக்கூர் இராமலிங்கம் செம்மலர் இதழில் அந்தந்த மாதங்கள் எதிர்க்கொண்ட பிரச்சனைகளைக் கொண்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வந்திருக்கிறது, ‘கையளவு கடல்’ கட்டுரைத் தொகுப்பு. இத்தொகுப்பை முழுமையாக வாசித்து முடித்து இந்நூல் குறித்து எழுதலாம் என முடிவு செய்கையில் உண்மையாக எழுதுவதா, இல்லை பொய்யாக எழுதுவதா, என்கிற குழப்பநிலை எனக்குள் ஏற்பட்டது. பொய்யாக எழுதுபவர்களுக்கே இப்பொழுதெல்லாம் அடுத்தடுத்த மேடையும், வாய்ப்புகளும் கிடைக்கிறது இல்லையா!. ஆனால் அத்தொகுப்பில் ஒரு கட்டுரை, பொய் சொன்னால் அதைக் கண்டுபிடிக்கும் கருவி வந்துவிட்டதாகப் பதிவு செய்துள்ளது. ஆகவே உண்மையாகவே எழுதிவிடலாம் என்கிற முடிவிற்கு வர வேண்டியதாகிவிட்டது.
உண்மையை எழுதவும், பேசவும் போய்தானே கல்புருக்கி, கோவிந்த் பன்சாரே, கவுரி லங்கேஸ்கர் போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்நூல் பேசியிருக்கும் சில உண்மைகளைக் கட்டுரையாளருடன் சேர்ந்து நாமும் பேசினால் அத்தகைய சூழல் நமக்கும் ஏற்படலாம் என்பதால் கட்டுரையாளர் இத்தொகுப்பில் ஒரு கட்டுரையின் தலைப்பாக வைத்திருக்கும் ‘ உண்மைக்குக் கொஞ்சம் அருகில்….’ எனும் வகையில் இந்நூல் குறித்து எழுதுகிறேன்.
இப்பொழுதெல்லாம் திரைப்படங்கள் எழுத்துகள் ஓடும் பொழுதே கதையைச் சொல்லத் தொடங்கிவிடுவதைப் போல இன்றைக்கு வருகிற படைப்புகள் காணிக்கை அல்லது சமர்ப்பணத்தில் இந்நூல் யார், யாருக்காக எழுதப்பட்ட நூல் என என்பதைச் சொல்லிவிடுகிறது. இந்நூல் ‘அப்பாவின் முகம் அறியா எனக்கு அப்பனாய், நண்பனாய், தோழனாய், நல்லாசிரியனாய் விளங்கும் என் இளைய மகன் ஆர். தமிழமுதன் ஒரு கொடிய விபத்தில் இழந்த வலது கைக்கும்..துயர் சூழ்ந்த அந்தப் பொழுதில் ஆதரவாய் நின்ற அத்தனை கைகளுக்கும்….எனfக் கனத்த வலியுடன் கூடிய காணிக்கையாக எழுதப்பட்டுள்ளது.
வலது கையை இழந்த மகனுக்கு உதவிய கரங்கள் இடது கைகளாகவே இருக்கும் என்கிற புரிதலோடு கட்டுரையை வாசிக்கத் தொடங்கினேன். செம்மலர் இதழில் கடைசி பக்கங்களில் கட்டுரையாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் கடைசி கட்டுரையிலிருந்து ஒவ்வொரு கட்டுரையாக வாசித்து வந்தேன். ஒரு கட்டுரை மலம் குறித்துப் பேசுகிறது.
இந்தியாவில் ஒருவருடைய மலம் மிக உயர்ந்த மலமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த மலத்தைக் கழிப்பறையில் கழிக்க முடியாது. வாழை இலையில்தான் வாங்க வேண்டும். அதை இரண்டு கைகளால் வாங்கி கங்கை ஆற்றில் அல்லது கங்கை எனப் பெயரிட்டு அழைக்கப்படக்கூடிய கிணற்றில் கரைத்து வருகிறார்கள். இந்த மலத்தை இரண்டு கைகளால் வாங்கக்கூடிய கொடுப்பினை எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. அந்த மணத்தை நுகரக்கூடிய வாய்ப்பு எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. அதற்கெல்லாம் மநு தர்மத்தின் படி நெற்றியில் பிறந்திருக்க வேண்டும். அவருடைய மலம்தான் இந்தியாவின் மிக உயர்ந்த மலம், என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இக்கட்டுரை வேறொருவருடைய மலத்தை மிக உயர்ந்த மலமாகக் காட்டுகிறது. அது மதுரை திருமங்கலம் தொகுதி மக்களுடைய மலம்.
வாக்குகள் விற்பனைக்கு….என்கிற கட்டுரையில் இப்படியாக ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தல் வருகிறது. தேர்தலுக்கு முதல்நாள் வீடு தோறும் பஞ்சாமிருதம் கொடுக்கிறார்கள். பஞ்சாமிருதத்தை வழித்துச் சாப்பிட்டப் பிறகு ஒரு வதந்தி திருமங்கலத்தில் எழுகிறது. பஞ்சாமிருதம் டப்பாவில் மோதிரம் இருந்ததாக. பஞ்சாமிருதத்தைச் சாப்பிட்டவர்கள் மோதிரத்தையும் விழுங்கிவிட்டதாக கருதி அவர்கள் மறுநாள் தாம்பூலத்தில் மலத்தைக் கழித்துப் பார்க்கிறார்கள். இது மதுக்கூர் இராமலிங்கத்திற்கே உரித்தான நடை. இலையில் கழிக்கும் மத தலைமை பீடாதிபதிகளின் மலம், தாம்பூலத்தில் மலம் கழிக்கும் பணத்திற்கு வாக்குகளை விற்கும் நம் மக்களின் மலம் இரண்டில் எது உயர்ந்த மலம், என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
எந்த எழுத்தும் தன் சொந்த மண்ணைப் பற்றி எழுதுகையில் எழுத்தின் வடிவமும், ஈரமும் மிளிரவே செய்யும். அப்படியான மிளிர்ப்பு ‘மனோரமா என்றொரு மனுஷி’ என்கிற கட்டுரையில் மிளிர்வதை வாசித்து உணர முடிந்தது. பிராமண பாஷை, செட்டி நாட்டு பாஷை, நெல்லை பாஷை, மதுரை பாஷை, கொங்கு பாஷை,சென்னை பாஷை,…எனத் தமிழகத்தில் புழங்கும் அத்தனை பாஷைகளிலும் கொடிக்கட்டிப்பறந்த மனோரமாவின் வாழ்க்கைப் பின்னணி சோகம் மிகுந்தது. ஈரம் கனிந்தது. சேர்ந்து வாழ முடியாது என்று கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியது, அதற்கு காரணம் நடத்தை சரியில்லை எனக் காரணம் கற்பித்தது, இத்தகைய மனக்கனத்துடன் அவர் நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடித்தது, சோகக் காட்சிகளில் கணவன் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைத்து அழுது நடித்தது, கணவன் இறந்த செய்தியை உள்வாங்கியது, அதைத் தன் மகனிடம் பகிராமல் இரங்கலுக்கு அழைத்துசென்றது, போனால் போகிறதென்று இறுதிச்சடங்கு செய்ய மகனை அனுமதித்தது,…என இக்கட்டுரை மற்றக் கட்டுரைகளை விடவும் படைப்பால் , செய்நேர்த்தியால், கட்டமைப்பால் மாறுப்பட்ட பதிவாக இருக்கிறது.
ஜாமீன் இழந்த ஜமீன் என்கிற கட்டுரை என் கிராமத்தில் நடந்தேறிய சில சம்பவங்களை நினைவுபடுத்தியது. தலித்திடமெல்லாம் வாக்கு சேகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதே, எனத் தனக்குத்தானே நொந்துகொண்டு ‘அய்யா தேர்தல்ல நிற்கிறேன்டா. ஓட்டுப்போட்டுவிடு. போகிறப் போக்கில் மிரட்டல் கலந்த சொற்களுடன் வாக்கு சேகரிப்பவர்களை எள்ளி நகையாடும் கட்டுரையாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு நிலச்சுவான்தாரரை தேர்தலில் நிறுத்த அவருக்கு எதிராக திமுக ஒரு மாணவனை நிறுத்தி அவர்களைத் தோற்கடித்த சம்பவத்தை பதிவு செய்திருக்கிறது.
சந்தைக் கடை சங்கீதம், இனிப்பைத் தொலைத்த நிமிடங்கள், அணுகுண்டுகளும் பூசணிக்காய்களும், வாக்குகள் விற்பனைக்கு, கடவுள் படும்பாடு, காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு, கழுதைகளும் நரிகளும், காதின் கதவுகள், தூர்ந்து போகும் தடங்கள்…எனப் பல கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பில் ஒன்றிரண்டு கட்டுரைகளில் பட்டிமன்ற மேடைகளில் மக்களைச் சிரிக்க வைக்க வேண்டும், என்கிற தேவையுடன் கூடிய நகைச்சுவையாக இருக்கிறது. அந்தரங்க எழுத்துகளில் இதுபோன்ற நகைச்சுவை தேவைதானே!
உதாரணமாக, ஓடும் காலத்தின் உறைநிலை என்கிற கட்டுரையைச் சொல்லலாம். இக்கட்டுரை உலகை உலுக்கிய புகைப்படங்கள் குறித்து பேசத் தொடங்குகிறது. அமெரிக்க – வியட்நாம் போரில் புகை மண்டலம் சூழ நிர்வாணமாக சாலையில் ஓடி வரும் சிறுமி, போபால் விஷவாயு கசிவில் வெளியே பிதுங்கிய விழி தெரிய புதைக்குழிக்குள் அடக்கம் செய்யப்படும் குழந்தை, குஜராத் மதக்கலவரங்களின் போது ஒரு காவி துண்டை தலையில் கட்டிக்கொண்டு வாளை உயரத்தியபடி ஒருவன் கொக்கறிக்க, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் கண்ணீர் செரிய முகம் உடைந்துபோய் கையெடுத்து கும்பிடும்படியான புகைப்படங்களைப் பட்டியலிட்டிருக்கும் கட்டுரையாளர் பிறகு அவரது இளைமைக்கால புகைப்படங்களை, புகைப்படம் எடுக்கையில் புகைப்பட கலைஞன் கொடுக்கும் ஆடாமல், அசையாமல் இருக்க வேண்டும் போன்ற செய்கைகளை நகைச்சுவை தெறிக்க பதிவு செய்திருக்கிறார்.
கோரச் சம்பத்துடனான தொடக்கத்தில் தன் இளைமைக் காலத்தில் நடந்தேறிய வேடிக்கையான சம்பவங்கள் நுழைகையில் கட்டுரையின் வீரியம் சற்றே குழைகிறது. இத்தகைய பதிவுகள் கட்டுரைக்கு தேவைதான் என்றாலும் உரக்கப்பேசுதல், சத்தமாக பேசுதல், பிற்போக்குகளை எந்த முகாந்திரமுமின்றி கத்திப்பேசி இதுதான் இந்தியா, ஒற்றை இந்தியா என்கிற கோஷிக்கும் இன்றைய சூழ்நிலையில், இடதுசாரி எழுத்தாளர், பேச்சாளர், செயற்பாட்டாளர் என்கிற வகையில் மதுக்கூர் இராமலிங்கத்திற்கு அதிக பொறுப்பு அதிகம் இருப்பதால் இந்தச் சுட்டிக்காட்டுதல் இங்கு தேவையென நினைக்கிறேன்.
பல கட்டுரைகள் மறைக்கப்பட்ட, கண்டுகொள்ளப்படாத செய்திகளைச் சொல்லியிருக்கிறது. இந்நூல் எளிய மக்களுக்கான , தொடக்கக்கால வாசகர்களுக்கான ஓர் பெட்டகம். சமீப கால நடப்புகளை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பதிவு செய்திருக்கும் தவிர்க்க முடியாத நூல். மொத்தத்தில் கையளவு கடல் – விளிம்பு நிலை மக்களின் மன அலையடிப்பு.