களவு போன புத்தகம் கவிதை – அபர்ணா

களவு போன புத்தகம் கவிதை – அபர்ணா




களவு போன என் புத்தகத்தைத்
தேட எனக்கு மனமில்லை;
அது பழைய புத்தகக்கடைக்கு
விலை போன
விஷயம் தெரியாத வரை எனக்குக் கவலையும் இல்லை.
அங்காவது யாராவது படிக்க மாட்டார்களா என்ற என் ஆசைக்கும் குறைவில்லை.
கழுதையாகப் பிறந்தாலும் புத்தக மூட்டையைத் தவிர எதையும் தூக்க எனக்கு விருப்பமில்லை.
கரையானாகிப் போனாலும்,
வெற்றுத் தாளில்
எனக்கு வேலை இல்லை.

Kazhipparai Kagitham Article By Karkavi. கழிப்பறைக் காகிதம் - கார்கவி

கழிப்பறைக் காகிதம் – கார்கவி

” இந்த கக்கூஸ் இருக்கே”

“அட என்னயா இது நாலுபேர் மத்தியில இப்படி ஒரு வார்த்தையை சொல்ர.. கேட்கவே ரொம்ப ஒரு மாதிரி இருக்கேயா….” ஏன்டா மாடசாமி நீ என்ன வேல பாக்ர… நான் விவசாயம் பன்றன்டா ராமசாமி …

சரி இந்த இருபத்தோறாம் நூற்றாண்டுல நாம வயல்வெளியில கஸ்டபட்டு கண்ணுக்கு தெரியாதவன் பலபேருக்கு வயித்து பசிய போக்குறோம்…

ஆனா நம்ம புள்ளைங்க பள்ளிக்கூடத்தில உங்க அப்பா என்ன வேல பாக்ராங்கனு கேட்கும் போது…பல புள்ளைங்க அப்பா டாக்டர், இன்ஜினியர்,வக்கில் னு சொல்லும் போது ரொம்ப பெருமையா விவசாயம் னு சொல்ரத கவனிச்சிருக்கியா…

அதுவே அடுத்த வேல சாப்பிட வழி இல்லாம இன்னும் கஸ்டபடுற மக்கள் நம்ம நாட்டுல ஏதோ ஒரு மூலைல இருக்கதான் செய்ராங்க…..

“போனவாரம் நா அந்த மலைக்காட்டுக்கு பின்னாடி இருக்குற ஊர்க்கு என்னோட பொன்னுக்கு தொடர்ந்து காய்ச்சலுனு மூலிகை வாங்க போன.. அங்க ரொம்பவும் இருக்க வசதி இல்லாத இடத்துல எனக்கு மூலிகை கொடுத்தாங்க நானும் கொண்டு வந்து என் புள்ளைக்கு கொடுத்த இப்ப அவ நல்லார்க்கா…!

அங்க இருக்குற மக்களுக்கு இருக்க சரியான வீடு இல்ல, போட்டுக்க ஒழுங்கான துணி இல்ல, அடுத்த வேல சாப்பாட்டுக்கு வழி இல்ல..

அவங்களோட முக்கியமான வேலையே அவங்கள சுத்தி, அந்த மலையில கிடைக்க கூடிய ஆடு, மாடு விலங்குகளை பட்டிப்போட்டு வளர்த்து அதயே அவங்களோட வாழ்வாதாரத்து தேவையானதா மாத்தி பயன்படுத்திகிறாங்க, அவங்கள சார்ந்த மக்கள அவங்களே பாத்துகிறாங்க..

அதிலயும் நம்ம விளைவிக்கிற அரிசி அவங்களுக்கு சரியான விதத்தில் போய் சேருறது இல்ல..அவங்க அத பாத்ததும் கூட இல்ல கிராமத்துல இருந்து நகரத்துக்கு வந்து பெரிய வீடுகளுல்ல வேலை பாத்து,,,தெருவ கூட்டி,சுத்தம் செஞ்சி அவங்களோட வயித்து புழைப்ப பாத்துகிறாங்க, ஆம்பளைங்க வேட்டைக்கு போறாங்க, பல இடத்துல கூலீக்கு வேலை பாத்து குடும்பத்த பாதுகாக்குறாங்க….

இதுல முக்கியமான விசயம் னு சொல்லனும்னா… அவங்க வீட்லயே வளர்ப்பு பிராணியா பன்றிகளையும்,ஆடு,மாடு எல்லாம் வளர்த்து…அத தன்னோட உணவாகவும் விற்பனைக்கும் மலைக்கு கீழ கொண்டு வராங்க..

பன்றிகளோட கழிவ மூட்டைகள் ல சேகரிச்சு நம்மலோட விவசாயத்துக்கு உரமா கொண்டு வந்து தராங்க…

என்னோட பொன்னுக்கு மருந்து வாங்க போன்னு சொன்னல.. அந்ந மருந்து கொடுத்தவர் பேரு கூனியன் அவர்தான் என்னோட நிலத்துக்கு உரம் கொடுக்குறாரு…

“என்னயா ராமசாமி சொல்ர நீ அந்த உரமா வாங்கி போடுற… ஆமா முனுசாமி அதுவும் உரம் தான்…அத பயன்படுத்துறதுல என்ன இருக்கு…ஒருகாலத்துல பல பண்ணையாருங்க அத்தான் பயன்படுத்துனாங்க இப்ப பன்னுறது இல்ல…

இந்த ஒட்டுமொத்த மக்கள் தொகைல அப்படி ஒரு கூட்டம் இருக்குனே யாருக்கும் தெரியிறது இல்ல…

அவங்களும் மனுசங்கதான்.. அவங்களுக்கும் வாழ்வாதாரம் அப்படினு ஒன்னு வேணும்ல…

இந்த டீக்கடைல கக்கூஸ் கட்டனும் னு சொன்னதுக்கே நீ அவ்வளவு பெருசா முகம் சுழுச்சியே…பல சமுதாய மக்கள் அதயே தொழிலா செய்யுறாங்களே அத எல்லாம் நீ நனச்சி பாத்ருக்கியா…

பணவாதிங்க இருக்குற ஊர்ல கழிப்பற இல்லாத காலத்துல இரண்டு கல்லு வச்சு காலைக்கடன முடிச்சிட்டு போவாங்க… பிழைப்புக்காக அத சுத்தம் செஞ்சு கொடுத்துட்டு வயித்து பிழைப்புனு மனச கல்லாக்கிகிட்டு போற சமுதாய மக்கள நாம இதுவரை நாம நனச்சி பாத்ததே இல்ல அப்டிங்கரதுதான் உண்மை….

மலை,காடுனு இருந்த கூட்டம் இப்பதான் கிராம்ம் நகரம்,படிப்புனு கொஞ்சம் முன்னேறி வருது…

காலத்துக்கு ஏத்தமாறி அவங்களும் புள்ளைங்கல படிக்க வச்சு, பின்தங்கிய நிலையில இருந்து கொஞ்சம் மேல வந்துகிட்டு இருக்காங்க…

அதாவது உனக்கு ஒன்னு தெரியுமாடா மாடசாமி அவங்க தான் நம்ம பூமியோட பூர்வகுடி ன்னு சொல்றாங்க ஆனா நகரத்துல நாத்தம் புடிச்ச குப்பைகளுக்கு மத்தியிலயும் சாக்கடை சகதியிலும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ்றாங்க, கழிவுநீர் தொட்டியில் விழுந்து சாவரது யாரு இவங்க தான் டா இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அந்த மக்கள இப்போ இருக்கிறதுக்கு இடமில்லாமல் அழிஞ்சிட்டு வராங்க..

“சமுதாயம் என்பது மக்களை மேம்படுத்த ஒன்றுபட வேண்டுமே தவிர இழிவு படுததக்கூடாது” இனம்,மொழி, மதம் இவைகளை ஒன்றுபடுத்தி வாழ முற்படும் நாம் மக்களின் சூழல்,வாழ்வாதாரம் அவற்றிற்கான வழியை சற்று திரும்பி பார்த்து அனைத்து தரப்பு மக்களின் அடுத்த கட்ட நிலையை மேம்படுத்த போராடுவோம்…

மனிதம் உணருவோம்
மனிதம் காப்போம்…!
மனிதம் போற்றுவோம்…
மனிதம் புகட்டுவோம்…

Puli maditha Kagithathil Ottiyirundha Kavithaigal by Meera மீராவின் புளி மடித்த காகிதத்தில் ஒட்டியிருந்த கவிதைகள்

புளி மடித்த காகிதத்தில் ஒட்டியிருந்த கவிதைகள் – மீரா




அம்மா…
அவள் அவ்வளவு ஒன்றும் பெரிதாய் படிக்கவில்லை…
அவளை படிக்கத் தூண்டியது
பலசரக்குகளோடு ஒட்டி வந்த துண்டு காகிதங்கள் தான்…
மளிகை கடைக்காரருக்கு நன்றி…
நெகிழிகளில் நிரப்பாமல் காகிதப் பொட்டலங்களில் அனுப்பியதற்கு…
பருப்பு டப்பாக்களிலும்…
அஞ்சறைப் பெட்டிகளும் அடைப்பட்டிருந்த அவள் ஒரு கவிதைக்காரி…
அழகிய கதைகளுக்கும் சொந்தக்காரி…

துணுக்குகள் படித்துக்கொண்டே
ஆழ்ந்து போனதில்
பொங்கிய பாலின்
கருகிய வாசத்தில் வெளி வந்தது
அம்மாவின் எழுத்து நேசம்…

அப்பாவின் காதலால்
அவள் படித்தது எல்லாமே குமுதம், இராணி, குங்குமம்,
சில வார இதழ்களும்…
கடைகளில் தொங்கவிடப்பட்டிருக்கும் புத்தகங்களில் அழகாய் அம்பாரி செய்து கொண்டிருந்தது அம்மா அப்பாவிற்குமிடையேயான காதல்…

கதைகள் படித்துக்கொண்டே உறங்குவதும்…
பணிக்கு சென்ற அப்பா
வரும் வரை அவளுக்கு ஆறுதலாய் இருந்த புத்தகங்களை
அவளீன்ற கன்றுகளுக்காய் மறந்தே போனாள் போலும்…
இருந்தாலும் அவ்வப்போது வீசும் அவள் தமிழ் நேசக்காற்று… எங்களைத் தீண்டிச் சென்றது ஞாபகம் இருக்கிறது
பள்ளிப் போட்டிகளிலும்… கல்லூரி விழாக்களிலும்…

கட்டுரைப்போட்டிகளிலும் கவிதைப்போட்டிகளும் நாங்கள் பரிசாய் வாங்கிய சில்வர் டப்பாக்காளில் பதிந்திருக்கும்
கவிதைப்போட்டி முதல் பரிசு
இரண்டாம் பரிசு…
என்ற வாசகத்தில் இன்னும் சற்றுபெருமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்…
அவள் ஆசை நிறைவேறிய மகிழ்வில்…

அதே அடுப்பங்கரைகளில்
அதே துண்டு காகிதங்களோடு…
மூக்கு கண்ணாடி அணிந்துக் கொண்டு பாத்திரங்களை தேய்த்தபடியே
கரை படியவிடாமல் அடிக்கடி மிளிர வைத்துக்கொண்டே இருக்கிறாள்…
நான் அறிய நல்ல எழுத்துக்களை என் கைகளில் திணித்தித்துக் கொண்டே இருக்கும் அம்மா எனும் அரிய நூலகம் அவள்..