நிலையாமை நினைவுகள்! சிறுகதை – அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

நிலையாமை நினைவுகள்! சிறுகதை – அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி




பரமசிவத்துக்கு பழைய நினைவுகள் கண் முன் நிழலாடின!

மகள் வழிப்பேரன் வந்து “தாத்தா விளையாட வாரீங்களா?” எனக்கேட்ட போது “பாட்டியக்கூட்டிட்டு போ”என பதிலுரைத்தவர், கண் முன்னே இருந்த புத்தகங்களை புரட்டிப்பார்த்தார். மனம் அதில் நிலைக்க மறுத்தது. அப்போது தொலைக்காட்சியில் ‘தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் காலமானார், பிரதமரை முதல்வர் சந்தித்தார், அ.தி.மு.க பன்னீர் பக்கம் சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து பழனிச்சாமி தரப்பு மேல் முறையீடு’ என பல செய்திகள் ஓடியதில் ‘நெல்லை கண்ணன் இறப்பு செய்தி’ மட்டும் பரமசிவத்தை வெகுவாக பாதித்திருந்தது!

‘பல்கலைக்கழகம் போல் பல விசயங்களை ஒரே நேரத்தில் தமது பேச்சாற்றலால் சொன்னவர் தற்போது இல்லை. தமக்கும் ஒரு நாள் இந்த நிலை வரத்தான் போகிறது’ என மனது உறுதிப்படுத்திய போது, தாம் இது வரை ஆசைப்பட்ட , பேராசைப்பட்ட விசயங்களிலிருந்த நாட்டம் மனதை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அல்லாமல் படீரென ஒலகம் பஞ்சு வெடித்துப்பறப்பது போல் பறந்து சென்று மறைந்து விட்டதை உணர முடிந்தது.

ஆறு பத்து வயதைத் தாண்டி சஷ்டியப்த பூர்த்தியை திருக்கடையூரில் உறவுகள் சூழ முடித்து ஆறு மாதங்கள் உருண்டோடி விட்டன!

விவசாயி மகனாக இருந்தாலும் படித்து முடித்து அரசு வேலையை லஞ்சம் கொடுக்காமல் பெற்று, விடுமுறையே எடுக்காமல், கை சுத்தமாகப் பணியாற்றி, உடன் பணியாற்றியவர்களின் துன்பம் போக்க ஊதியம் வாங்கியவுடன் பாதியைக் கரைத்து, “நீங்க உருப்பட மாட்டீங்க” என கத்தும் மனைவி பேச்சைப் பொறுத்துக்கொண்டு காபி போட்டுக் கொடுத்து சமாதானப்படுத்திக் காதலை வளர்த்து, உடன் பிறப்புகளுக்குத் தாய் மகிழும் படி சீர், சிறப்பு செய்து, தனக்குப் பிறந்த ஒரே பெண்ணைப் படிக்க வைத்து திருமணம் செய்துவைத்து பிரசவ செலவைத் தாமே ஏற்று,பேரனைப்பார்த்த பூரணத்துடன் உறவுகளோடு இணக்கமாக வாழ்ந்தாலும், மனித வாழ்வின் நிலையாமையை எண்ணி அவ்வப்போது மனம் உடைந்து சோகமாகி விடும் பழக்கத்துக்கு சிலர் குடிக்கு அடிமையாவது போல் ஆகிவிடுவது வாடிக்கையாகி விட்டது.

“ஏங்க என் பெரிய பெரியப்பா பேரன் மாரடப்புல போயிட்டானாம். சின்ன வயசுதான். இன்னும் கண்ணாலங்கூட ஆகல. என்ன கருமமோ தெரியல. கொரோனா, கோழி காய்ச்சல், பன்றிக்காய்ச்சல்னு ஜனங்கள நோயி பாடா படுத்தறப்ப சின்ன வயசுல சரியா தூக்கமில்லாம கண்ட, கண்ட கடைகள்ல கண்டதத் தின்றதால இப்படியாகுது. நானும் நம்ம பொண்ணு சுருதியும் ஒரெட்டு ஸ்கூட்டர்லயே போயி பாத்துட்டு வந்திடறோம். நாம போயி காப்பாத்தப்போறதில்ல. ஏதோ இருக்கற கட்டைகளுக்கு ஆறுதலா நாலு வார்த்தை சொல்லிட்டு வாரோம். நீங்க பேரன் சஞ்சய பாத்துக்கங்க.பால் அடுப்புக்கிட்டவே பாத்திரத்துல இருக்குது. காபி போட்டு குடிங்க. உங்களுக்குத்தான் எழவூட்டுக்கு வந்தா ஒரு வாரம் பேச்சே வராதே” என ஒரே மூச்சில் பேசி விட்டுச் சென்ற மனைவி பரிமளத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்!

விளையாடப் போன பேரன் வீடு வரவே, தொலைக்காட்சியில் அவனுக்குப் பிடித்த நிகழ்ச்சியைப் பார்க்க அனுமதித்து விட்டுத் தனது அறைக்குள் சென்று இரண்டு தலையணைகளை ஒன்றாக வைத்து, அதில் முற்றிலும் படுக்காதவாறு உட்கார்ந்தவாறே தலை சாய்த்துக்கொண்டார்!

சிறு வயது அனுபவ பதிவுகள் திடீரென விழித்துக்கொண்டன!

சிறுவயதில் தந்தை நூலகத்திலிருந்து எடுத்து வந்திருந்த நாலடியார் புத்தகம் படித்த போது ‘பூக்கள் அனைத்துமே காய்ப்பதில்லை. காய்க்கும் காய்கள் அனைத்துமே பழுத்த பின்பே உதிர்வதில்லை. பெரிய காற்றடித்தால் பிஞ்சும் உதிரக்கூடும்’ எனும் நிலையாமை பற்றி சமண முனிவர்களின் கருத்துக்கள் பரமசிவத்தை பாதித்திருந்தன. அதே சமயம் உண்மை நிலையை உணர வைத்தன!

ஒரு முறை தினமும் தன் தந்தையை சந்திக்க வரும் பக்கத்து தோட்டத்து நண்பர் இறந்து விட, அவரைத் தம் தோட்டத்தருகே உள்ள மயானத்தில் எரிப்பதைப் பார்த்தவர் அடுத்த தீட்டு கழிக்கும் நாளில் சூடடக்க , பாத்தி கட்டி அன்னு வெதைச்சு அன்னறுக்கும் கறுப்பு எனும் சடங்கில் கலந்து கொண்ட போது சாம்பலைக் கையிலெடுத்து “இவ்வளவு தானா?” என தந்தையிடம் காட்ட, தந்தை அதிர்ந்து போனார்.

பெண்களையும்,குழந்தைகளையும் சுடுகாட்டுக்கு வர அனுமதிக்காத நம் முன்னோர்களின் செயல்களைப் புரிந்து கொண்டவராய், அடுத்த நொடியே மகனை அழைத்துக்கொண்டு வீடு சென்று விட்டார் தந்தை நல்ல சிவம்.

“வாழ்க்கை நிலையில்லைங்கறது தெரிஞ்சா தப்பு பண்ணத் தோணாதுங்கறது நல்லதுதான்.அதுக்காக பத்து வயசுல எழுபது வயசுக்காரங்களுக்கு இருக்கற எண்ணம் வந்தா இல்லற வாழ்க்கை இனிக்காது. நீ முதல்ல உம்பட வயசுள்ளவங்களோட பழகு. ஒவ்வொரு நாளையும் சந்தோசமா கடத்து” என தந்தை சொன்ன மந்திரச்சொற்கள் காதில் ஒலித்தாலும், பசுமரத்தாணி போல் சிறுவயதில் பதிந்த மனப்பதிவுகளை அழிக்க இயலாமல் திணறுவார்!

வேலை கிடைத்தவுடன் திருமணமாகி விட, வேலை குடும்பமென ஓய்வின்றி இருந்த நிலையில் அனைத்தையும் மறந்து மற்றவர்களைப் போல் இயல்பாக வாழ்ந்தாலும் உறவில், நட்பில் துக்கச்செய்தி வந்து விட்டால் கவலையில் ஆழ்வதோடு, வாரக்கணக்கில் யாரோடும் பேசாமல் இருப்பார்!

‘இளைய வயதுள்ளவர்களும் விதி முடிந்தால் இறக்கும் நிலையில், நீண்ட நாட்கள் உயிரோடு வாழ்வது கூட ஒரு சொத்து, வரம்’என தோன்றியது.

மனைவி சொல்லிச்சென்றதிலிருந்து ‘இனி மனம் இறப்பையே அடிக்கடி சிந்திப்பதை தடுக்க வேண்டும், தவிர்க்க வேண்டும். இருக்கும் வரை மகிழ்ச்சியாக வாழ வேண்டும்’ என புதிய சிந்தனை தோன்றியது.

‘ஆசையும் ஒருவகையில் நம் உடலை இயங்கத்தூண்டும் கருவிதான். பேராசை தான் கூடாது’ என எண்ணியவர் வெடித்துப்போன பேராசைப் பஞ்சுகளை ஒதுக்கி விட்டு, ஆசைப் பஞ்சுகளை மட்டும் ஈர்த்து மனதுள் வைத்துக்கொண்டார்!

தொண்ணூறைக் கடந்து மகிழ்வுடன் இருக்கும் மனிதர்களைப்போல, நற்சிந்தனைகளுடன் இருந்திட வேண்டும் எனும் மாற்று சிந்தனை தோன்ற, உற்சாகம் பொங்க, கூடுதல் இனிப்புடன் காபி போட்டுக் குடித்தவர் சிறு குழந்தையின் மன நிலைக்கு மாறியவராய் பேரனை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள பூங்காவிற்கு செல்லத் தயாரானார் பரமசிவம்!

– அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி