niruththame illatha kurigal poetry written by t.p.parameshwari கவிதை:நிறுத்தமே இல்லாத குறிகள் -து.பா.பரமேஸ்வரி

கவிதை:நிறுத்தமே இல்லாத குறிகள் -து.பா.பரமேஸ்வரி

கேள்விக்குறியாகிப் போன உமது முதுகுக்குத் தான் தெரியும் செந்நிற ரேகைகள் சிலதும் கருவிழிக்கோடுகள் பலதும் வலிந்து தீண்டிய பாரத்தின் பொதி எது என்று.. நட்சத்திங்களையும் விண்மீன்களையும் காண திராணியற்ற பிடரி குறுகித் தான் கிடக்கிறது நூற்றாண்டுகளாய்.. தாடையும் முகவாயும் தொட்டுக் கொண்ட…
து.பா.பரமேஸ்வரி கவிதைகள்

து.பா.பரமேஸ்வரி கவிதைகள்




கூடுதலாய் ஒரு பிணைப்பு
*******************************
எப்போதும் விரலொட்டியே கிடப்பாய்…
விறகு வெட்டி கோடாலியின்
மீள்புனைவு எடுப்பாய்..
கொஞ்சமுமாய் கரங்கள் உரச
காமாலையில் மிளிர்ந்து சிறப்பாய்..
மீண்டும் புணர்வு கொண்டு புத்தாக்கம் பெற்று ஒளிர்வாய்..

புதுமகளாய் நீ பூப்பெய்தினாலும்
பாமாலை சூட வக்கற்று நிற்கின்றேன்..
மயங்கொலிப்பிழையாய் மசக்கையில் கிடந்தாலும்..
உனதெழிலின் செழிப்பில்
சரணடைந்து கிடக்கிறேன்..

காற்புள்ளி சிலதும்..
முற்றுப்புள்ளி முழுதும்…
தரித்த வெண்சீலை நாயகியே,..
உன் திருமுகம் தீக்ஷைத் தாங்கி
திருமேனியில் தீர்த்தமாடினாலும்
தெவிட்டாது உன் மோகம்
உனை கொள்ளவே மனம் தினமேங்கும்..

கோட்டோவியமாய் ஒரு முகமும்
கூடுதலாய் கோலம் தீட்டிய சித்திரம் மறுசாயலிலும்..
ஆங்காங்கே தொக்கும்
மழலைப்பாதம் நடையழகிலும் ..

உச்சிமயிர் பிடுங்குகிறதே..
உயிர் மொத்தமும் மிச்சமின்றி உறைகிறதே..

மெய் விதிர்ந்து நிற்கின்றேன்..
மெய்யாக உனை தரிக்க விழைகின்றேன்..

டாவின்சியின் உயிர்ப்பே..

மோனோலிசாவின் சிரிப்பே..

தூரிகை பலதுகளின் முகப்பில் முடிசூடி உயர்கிறாய்.
ஒருமித்த மைக்கோல்களின் உளிச் சிலையாகி சிவக்கிறாய்

மானுட முகங்களில் வசிக்கிறாய்.
மனித மனோநிலையையும் வாசிக்கிறாய்…
மாதர் விளிம்புநிலையையும் பேசுகிறாய்..
மூன்றாம் பாலினரையும் கொண்டாடியே தீர்க்கிறாய்
வீணாக்கும் பொழுதுகளைக் கூட வீணையாய் மீட்டி அசத்துகிறாய்…

நீயில்லா பொழுதுகளின் நனவுகள் கூட நினைவில்லை…
நீயற்ற கனவுகளில் எனை நனைக்க கூட மனம் விழைவதில்லை…

பிரிவின் ஒற்றிலும் உன் அருகாமை வேண்டும் எனக்கு..
வாழ்துயரின் நிமித்தத்திலும் உனை பிரியாத வரம் கொடு எனக்கு…

இறந்துய்த்து வாழோம்
****************************
குலப்பெருமைப் போற்ற
வெற்றிக்களம் காணும் விரலொன்றை வேண்டி நின்றாய்..

வீழ்த்த யுக்திகள் பல இருப்பின்..
அத்துனையும் விடுத்து
ஒற்றை விரலில்
சாமர்த்தியம் கண்டாய்..

உணர்வொற்றில்
கலை பயின்றோம்…
நினைவாற்றில் கற்றுத்தேர்ந்தோம்..

இளவட்டத்தை பாதமாக்கி
முதிர் சிந்தையை சாதமாக்கிய
சாணக்கிய ஓரங்கத்தை சடுதியில் சிதைத்திட அறியேனோ யான்..?

ஆயப்பனுக்குப் பின் குலசாமி முன் கூடி சிரமது கொடி சாய்ந்ததில்லை இதுகாறும்…

கரையோரத்து நிலத்தை
கற்சிலையாக்கித் துதித்தேன்
பக்தியின் சித்தி செப்பனிட்ட…
வணங்கா குடியின் முடி…
வணங்கவே விழுந்தது நின்னை…

ஒப்பற்ற நின் வித்தையை
ஒப்பனையின்றி ஒப்பேற்ற…
பெயர்ந்து நின்றன புலன்கள்
நின்னிரு கமலபாத முன்னம்…

உபகாரமாய் ஏனோ
எமது ஆதார உபகரணமதை வீணே
இறந்து நின்றே..
உடன் உடுத்திச் சென்றாய்..

உயிர்மெய்யற்ற சிலையே அறிந்தும்
மெய்ஞானம் ஏற்று மானசீலமே சூடி மூச்சடைத்து நின்றேன்…

இறந்தாய் இருகரம் தயவின்றி
நாளமறுந்து கரைந்த மானமதை களையறுத்துப் பறித்தாய் தாட்சண்யமின்றி..

இரத்தவாடைத் தாங்கிய எமது குலப் பெருமையை உறிஞ்சி குடித்தாய் நின் குலம்‌ சிறக்க…

அசலில்..
இறந்த குடிக்கு மூத்தோனானாய் நீர்..
உனக்குத் துறந்து உச்சிகனத்து நிமிர்ந்தோனானேன் யான்..

துளியும் வெட்கித் தலைசாயாது
பிச்சைப் பாத்திரம் நிறைத்து
நடைப்பயின்றாய்..
போதிக்கும் தகுதியும் இழந்தாய்..
நீதிக்கு முன்பு நீச்சனுமானாய்..

தட்சணை வேண்டி குனிந்துக் கொடுத்தேன் எம் வீரத்தை அன்று
இன்றோ‌….
நுனி நகம் மட்டும் கேட்டுப்பார்‌…
முடிக்கும் முன்னம்
களமிறங்கும் எம் கேடில்கோஷ்டம்…

இறந்துண்டு மாள்வோம்
நின் போல் இறந்துய்த்து வாழோம்..

மீண்டும் ஒரு யாத்வஷேம்
******************************
பாறையின் பளிங்கில்
பாசாங்குச வெண்சிறையில்..
பனித்துளி குமிழில் பச்சைமெத்தை அரவணைப்பில்
நிதம் விடியலை விளித்திடுவேன்..

அடர் விருட்சங்கள் துப்பித்தீர்க்கும் குளிர்வாடையில்
அப்பிய சுவாச அரிதாரத்தில்
உயிர்வளி வாதையின்றி விரியப் பெற்றேன்.

ஆதவனின் ஆர்பாட்டமோ..
அந்திமாலையின் அல்லாட்டமோ..
அர்தராத்திரியின் அறிதுயில் மட்டும் எனக்கே எனக்காய் வாரியணைத்திடுவேன்

எல்லாம் சுகமே
எதுவும் நலமே..
அன்னை பூமிக்கிங்கு அவஸ்தைகள் இல்லையே..
சிலாகித்த கணங்கள் தான் எத்தனை…

இன்றோ…
கயவனின் கட்டுத் தறி முழுதும்
விலங்கிட்ட‌ மனித‌பரிதாபம்
பரிதவித்தும் பராமரிப்பற்றும்
பட்டித்தொட்டி எங்கும் விலங்குமனிதரானோம்
சவக்கோப்பையிலே..

கூனிட்ட உயிர்என்புகள்..
சதை தடவிவிட்ட கதை
தசை திருத்திக்காட்டுகிறது
அப்படமாய் ஊடுகதிரின்றி..

முகாந்திரமோ ரத்தத்தில் குழம்பிக் கிடந்தது..
நரம்பு புடைத்து பிக்காலி
போல கண்டமேனிக்கு சுற்றி வருவதை கதைத்துக் தானே வருகிறது வரலாறு ஒன்றும்..
விடியும் நாள் நோக்கி…

தாயகப் புலமும்
நாவதன் புலமையும்…
இந்த நரகக்குவளைக்குள் மசிந்துப் போயின..
சைகையொற்றில் மட்டுமே இங்குள்ள ஊமைகள் உறவாடின..

வன்ம புணர்விற்கு உயிர் தந்து..
உயிர்மூச்சை முடிஞ்சு விட
எத்தனிக்கும் உனது பெரும் தந்திரம்..
மழுங்கிடும் நாளொன்றிலும்
மிச்சமாய் மன்றாடி நிற்கும் எனது கடும்பிரயத்தனம்…

வம்பாய் அடித்தாலும்..
வசைகளால் சபித்தாலும்..
மனிதகழிவால் புரட்டினாலும்..
வலசை போய் தான் கிடப்பேன்
உனது துஷ்டவிளி
என் அங்கவெளியை விழுங்கிய கனத்திலும்..

வெட்கம் கெட்டுப் தான் கதைக்கிறேன்..
புழுத்துத் தடவிய உனது நீச்சக்கறையை
துடைத்து வருவேன்
துண்டு ரொட்டிக்காக நாளொன்றிலும்..

அம்மையை பிரிந்த அன்று அம்பலமானேன்
உனது இச்சைக்கு….
ஐயனைத் தொலைத்து இன்றே
மீதமும் நிர்மூலமானேன்
உயிர் பிச்சைக்கு..

ஒட்டியுள்ள உறுப்பொன்றையும்
செத்துப் போன புலனைந்தையும்
தானியங்கியாய் தனதாக்கினாய்..
எனக்கானதாக மட்டுமே எதை வழியனுப்புவாய் உயிர்பிரியும் கணத்தில்..

விட்டுவிடு என மெய் விதிர்ப்பதில்லை இப்பொதெல்லாம்..
கொன்று விடு என்றே உயிராவி ஒலித்துக் கிடக்கிறது
நீ புணரும்போதெல்லாம்..

கருநீலம் பூத்த ஈரபூப்பனல்
**********************************
புனல் என்பதாலோ என்னவோ
எப்போதும் நீர் குவிந்து நிற்கிறாய்…
உவர் நீர் சொறிந்து
உலர்தீயை அணைக்கிறாய்..
துவண்ட சுவரைத் துப்புரவும் செய்கிறாய்..

திரைச்சீலை தானே என
கண்மூடி அயர்ந்தால்
நீரலையின் நினைவு கூட நிர்வாணப்படுகிறது
நனவு வலிந்து வரிந்து
தனையே நிர்மூலமாக்குகிறது.

கலக்கம் போக்க கனவொன்று கண்டெடுத்தால்
அதுவும் கூட கலவரம் கக்கி கதிகலங்கச் செய்கிறது…
கதவடைத்து நின்றால் கரை புரண்டு கடைவாசல் கூட்டுகிறது..

கொடிது கொடிது என நனவுகளைக் கொட்டடித்தால்.
அங்குமொரு கதறல் கண்சிமிட்டிக் கனக்கிறது..

போதும் போதும் என
முகம் திருப்பி வந்தால்..
நான்முகப் பேயொன்று
தலை தட்டித் தரைமட்டமாக்குகிறது..

கடத்தலோ கடந்தவையோ வேண்டாமே இனி..
காண்பவையேனும் கைக்கூடட்டும் நனி..
என..
இருகரம் நீட்டி வழிவிட்டால்..
கலகலவென கள்ளிச்செடி கத்தியே கொக்கரித்துச் சிரிக்கிறது…
கைதட்டியே கும்மாளம் கூட்டுகிறது..

அடடா… ஆர்பாட்டம்..
ஆட்டிப் படைப்பது அதன் நாட்டம்..

புதுமையும் வேண்டாம்..
ஈரப்புனலும் வேண்டாம்…
கருவிழிப்பூ எப்போதும் போல உயிரற்றே இருக்கட்டும்..
கொஞ்சமேனும் காய்ந்து தனை கத்தரித்துக் கிடக்கட்டும்.

இப்போதும் கூட…
வசந்தத்தின் வரவு தூரத்தை அல்ல
மீள்துரிதத்தைத் தேடி காத்துத் தான் நிற்கிறது..

காட்சிப் பிழைகள்
**********************
இயல்பாய் நிகழும் பிம்பம் ஒன்றும்..
கணநேர பயண அசைவு
ஆழ்மன திரைகதம்பம் ஒன்றோடொன்று
திக்விஜயமாய் தோன்றி நிற்கும்..
திக்பிரமையை உண்டும் பண்ணும்..

உளத்தின் உணர்வுகள்
திடுமெனத் தோன்றிடும்..
சடாரென மறைந்திடும்…
மெலிதாய்க் கடக்கும் மேகம் போல..

தொலைநோக்குப் பார்வையோ அசைந்தாடும் பிழைகள்
துரிதமாய் ஊசலாடும்‌ காட்சிகள்..
நினைவிலும்
நனைவிலும்..
நிகழ்காலத்திலும்
தொலைந்த நொடிகளிலும்

சிலநேரம் மனதிற்கு நெருக்கமாய்
பலசமயம் ஏதோ தொலைந்த தூரத்தில்
நமக்குவப்பானதா.
அல்லாததா..
சிந்தனைச் செப்பனிடும் முன்
காட்சி சீலைகள் கலைந்தே போகும்..
காட்சிப்பிழையாய் மறைந்தும் போகும்..
இது ஏது‌…
அது எவ்வாறு
என்றெல்லாம் குளறும் எண்ணம்.

இதுகாறும் கொண்ட கனமா..
இப்போது மட்டுமே இருண்ட மனமா..
ஆராயும் முன்னம்..
நிகர்த்தியே தொண்டு செய்யும்..

மனம்….
அதுவொரு மாமேதை..
உடன் காலனும் தேவையில்லை.
நிதம் காக்க கடவுளின் அவசியமுமில்லை..
செல்லுமிடங்கெங்கிலும்
உடனிருக்கும் மருத்துவம்..
அதுவே மனம் எனும் மஹாஉன்னதம்..

எங்களுக்கும் வாழ வழியுண்டோ இப்புவியில்…
*****************************************************
குரலற்ற உயிர் வாழும் தேசம்.
ஏனோ…
இறைக்கிங்கே பாரபட்சம்…
மனிதர் மட்டும் ஒலிக்க
மனிதரல்லா உயிர்க்கிங்கே பெரும்கஷ்டம்..
அடித்து உதைக்கவும்..
சுருக்கி வதைக்கவும்
இழுத்து நொடிக்கவும்
விரட்டியே அடிக்கவும்
இரக்கமற்ற மனிதக் கூட்டம்.

வலி உணர மானுடர்க்கோ
வழியேதும் விளங்கவில்லை
வதையுண்ட அவன் செவிக்கோ
விடையேதும் ஒலித்திடவில்லை

இவர் தம் மொழியறிய
அவற்றிற்குப் போதிக்கவில்லை..
அவைதம் இசைவு உணர
இவனுக்கோ மனமது இறங்கி வழிவிடவுமில்லை.

ஏனோ மனிதன் விஞ்சியே நிற்கிறான்
நாங்கள் கெஞ்சியும்
தவிர்க்கிறான்..
இயற்கையை மிஞ்சியே உதறுகிறேன்.‌.
கிஞ்சித்தும் அசைய மறுக்கின்றான்

நீ மட்டும் வாழ..
எமது வாழ்வை ஏன் குலைக்கிறாய்..
உனக்கிங்கு வாழ உரிமை எத்தனையோ..
எமக்கும் உண்டு அத்தனையும்..
மறவாதே மானிடா..
மறந்தும் துன்புறுத்தாதே மனிதா..

எமக்கு மட்டும் ஏனிந்த வாழ்வு?
*************************************
வனக் குயிலே..
உனக்கும் கூட தனித்து வாழ இங்கு வழியுண்டு..
மனிதர் எமக்கோ எம்மினம் தவிர்த்துத்
தவித்து வாழவே மொழியுண்டு…

அன்பு நேசம் மனிதம்
போக..
தாய்மை மெய்யை வாய்மை..
அன்றி..
வேறென்ன வேண்டும் இங்கு
மகிமை சமைக்க…

ஆயினும்..
ஒருசாரார் மட்டுமே சுகித்திருக்க..
ஒடுங்கிய எமக்கோ நிதம் வலித்திருக்க..
புவியும் கூட ஒரு புறம் தாழ்த்தியே தான் படைத்திருக்க..
எங்குதான் போவோம் நீதி கேட்டு விழித்திருக்க…

களங்கமும் நிலவில் உண்டு
கலக்கமும் எமக்குள்ளும் உண்டு
சுட்டெரிக்கவும் சூரியனுக்கு வலிமையுண்டு..
இருள் சூழ்ந்து நிற்க
கருத்த மேகக் கூட்டத்மதற்கு
அதிக வாய்ப்புண்டு..

நிலமாந்தர் எமக்கோ
உயிர் நிறுத்தி வைக்கக்கூட
வக்கற்று ஒதுங்குகிறோம்
உடல் காத்து நிற்கவும்
அலைகின்றோம்…

என்று விடியும் எங்கள் புலம்பல்?..

உழைப்பின் வாழ்வாதாரம்
*********************************

உழைத்துப் பிழைக்க….
கரமிரண்டும் கூட அனாவசியமே..
உழைப்பின்றி இருகரமும் இங்கு அனாயாசமே..

உழைக்க வழி எப்போதும் முன் தோன்றுமே…
வாழ்ந்திடலாம் மீப்பெரும் வாழ்வதனை…
கடத்திடலாம் கலகமூட்டும் இப்பெரும் கவலை தமை..

உண்மை நிலைத்திருக்க.
வாய்மை மொழிந்திருக்க
பொய்மைத் தவிர்த்திருக்க
நேர்மை கைகோர்த்தே நிற்க
பேரச்சமூட்டும் யாவையும் சகித்திடலாம்
சகதியில் கிடத்தியும் விடலாம் நொடி ஒவ்வொன்றிலும்…

வேண்டும் இவையாவும்..
***************************
சீரிய மதிகொண்ட மானிடர் மாநிலமெங்கும் உண்டாகிட வேண்டுமம்மா..
கொஞ்சும் மழலையோடு குலாவிடும் மனமொன்றும் வேண்டுமம்மா..

குளிர்ந்த மழையை கொண்டாடவும் மாநிலம் ஒன்று தேவையமம்மா..
கூசும் கதிர்களை ரசிக்க விழியிரண்டும் தேடுதம்மா…

புலர்காலையில் பூக்கும் புஷ்பங்களை சுவாசித்தல் வேண்டுமம்மா..
அதில் கொஞ்சிடும் நாசியின் மகிழ்கூத்தாடிட வேண்டுமம்மா..

நீல வானம் அகன்று விரிந்தாடுதம்மா..
கரிய மேகக் கலைக் கூத்தோ விந்தையம்மா…

மொழிகள் அனைத்தும் வேண்டுமம்மா
தமிழ் மொழி அவற்றில் தலைமையாகுமம்மா.

து.பா.பரமேஸ்வரி
சென்னை

பொங்கலோ பொங்கல் கவிதை – து.பா.பரமேஸ்வரி

பொங்கலோ பொங்கல் கவிதை – து.பா.பரமேஸ்வரி




காணி நிலக் கருது கலத்துமேட்டில் சாடைபேச
கண்டாங்கி சேலை கட்டி கரையோரத்து கன்னிமயில் ஒயில்பயில
கட்டழகு காளையவனை
காடுகரை யாவும் மசமசத்துக் கிடக்க..

புதுப்பானை பொங்கு விழுங்கி வயிறு புடைத்து பெருத்திருக்க
செங்கரும்பு அடியோ
நிண்டமேனியில் ஓய்ந்து
பாக்கவாட்டில் பதமாய் சாய..

மஞ்சக்கிழங்கு மணந்து மங்கயரைச் மருவிக்கிடக்க
சர்க்கரைப் பொங்கலோ சுட்ட சட்டியில் சுருண்டு வெல்லக்கிடங்கில் வெளிறிக்கிடக்க….

சாணத்தின் விரிப்பில்
சந்தனக் கோலம் வாரோரை விளிக்க….
மாக்கோலம் மட்டும் மல்லிப்பூவாய் குறுநகைப்பூக்க..

தோரணமும் மாவிலையும் ஒன்றோடொன்றுக் கொஞ்சிப்பேச..
சுத்திநிற்கும் பெண்டுப் பிள்ளைகள் கூடி மகிழ்ந்துக் கொட்டடிக்க..
குலவையொலியில் பூமகள் ஊர்வலம் கும்மாளம் போட
பொங்கலோ பொங்கல் என்றே பூவுலகெங்கும் பூபாளம் இசைத்தன பூதமைந்தும்..

து.பா.பரமேஸ்வரி

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்




இப்போதெல்லாம்..
***********************
இப்போதெல்லாம் நான் உறங்கிவிடுகிறேன் இரவில்..
படுக்கையில் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டுருக்கும் நோயாளியின் ஆறுதல்..

இப்போதெல்லாம் நான் பசித்து உண்கிறேன்..
புளித்த ஏப்பகாரனின் வாக்குமூலம்..

இப்போதெல்லாம் நான் கிறித்துவ போதகன்
வெள்ளிக்காசுக்காக இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ் பிரகடனம்..

இப்போதெல்லாம் விவசாயக் கடன் தள்ளுபடியாகிறது..
தற்கொலையில் உயிரிழந்த விவசாயிகளின் ஏளனப் பார்வை..

இப்போதெல்லாம் நான் கோமாளி வேடம் நடிப்பதில்லை எங்கும்..
வேட்டி அவிழ்ந்து அம்மணமான கலைஞனின் அறியாமை

இப்போதெல்லாம் நான் சாலையை இருபுறம் திரும்பிப் பார்த்துக் கடக்கிறேன்..
சவக்குழிக்குள் குடும்பஸ்தனின் அங்கலாய்ப்பு.

புத்தம் புது பூமி வேண்டும்
******************************
புத்தம் புதுபூமி பிறந்திட வேண்டும்..
அழகிய நீல வானம் விரிந்திட வேண்டும்..
மின்னும் மழைத்துளிகள் உரசிட‌வேண்டும்..
பசுமை பூத்து நிலமெங்கும் செழித்திட வேண்டும்..

மனிதர் மனம் மகத்துவம் சமைத்திட வேண்டும்.
மெய்மை தாங்கிய சொல் உதிர்த்திட வேண்டும்.‌
பொய்யே இல்லா உலகு படைத்திட வேண்டும்..
கள்ளமில்லா நெஞ்சு வார்த்திட வேண்டும்

மனிதம் என்ற ஆடையை
மனிதர் உடுத்திட வேண்டும்..
வாய்மை என்ற ஒன்றே
வாழ்வாய் மலர வேண்டும்
மத வெறி அற்ற பூமி
மண்ணில் மலர வேண்டும்
சாதிகளற்ற சமத்துவம்
பூமியில் வாய்க்க வேண்டும்

உயிர்களிடத்தில் அன்பு
உயர் கல்வி ஞானப் பெருக்கம்

தன்னிகரில்லா தனித்துவம்
தரணி முழுவதும் தமிழ்
வேண்டும் வேண்டும் இவையாவும்
விரைவு கொண்ட விடியல் வேண்டும்..

அடக்கம் செய்வோம் வன்முறை தனை
*********************************************
போதுமே இனி வன்முறை..
அடக்கம் செய்து அஞ்சலி செலுத்திடலாம்
தேங்கியகழிவுகளை..

பரந்து பட்ட பூமியிது..
அமைதி நாடுவோம் நனி…

வேண்டாமே போர்.
போதுமே கண்ணீர்…
அணையுமோ அனல் தகிக்கும் செந் நீர்.‌.

குருதியுண்ட வீச்சத்தின் நீச்சத்தில்
திணறுகிறது தேசத்தின் மூச்சு..

போதுமே வன்முறை…
அடக்கம் செய்து அஞ்சலி செலுத்திடலாம் இனி

வாழ்வென்பது பெரும் பேறு
வழக்கொழிந்து கிடக்கிறது சகமனிதர் பாடு

போதுமே வன்முறை.
அடக்கம் செய்து அஞ்சலி செலுத்திடுவோம்…
குப்பைகளை…

து.பா.பரமேஸ்வரி.
சென்னை…

நூல் அறிமுகம்: சக.முத்துக்கண்ணனின் “புது றெக்கை” – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: சக.முத்துக்கண்ணனின் “புது றெக்கை” – து.பா.பரமேஸ்வரி




நூல் : புது றெக்கை
ஆசிரியர் : சக.முத்துக்கண்ணனின்
விலை : ரூ.₹40
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இலக்கியமும் தமிழும் சுவையும் சுவாரஸ்யமும் போல. எப்போதும் சுவைத்தும் சுருதி கூட்டியும் தித்திக்கும். நமது தமிழிலக்கிய பேரண்டத்தில் கதை கட்டுரை கவிதை என ஒவ்வொரு மாகாணமும் மாபெரும் கண்டத்தைப் போல விஸ்தரித்தும் வியாபித்தும் விசேஷமாய் நிற்கும் விளைச்சல் நிலங்கள்.‌ அதிலும் பிள்ளைகளுக்காக பிரத்யேகமாக எதை நாம் செதுக்கினாலும் அதில் மழலைத்தனம் மருவியே கிடக்கும் . பாடலோ படக்கதையோ ஓவியமோ ஒய்யார இசையோ பிள்ளை மனிதர்களுக்கான எழுத்தும் மொழியும் கூடுதல் பொலிவில் துய்த்து நிற்கும் என்பதே இலக்கியத்தின் தனித்த எழில். முன்பெல்லாம் இலக்கியப் படைப்புகளில் பிள்ளைகளுக்காக பிரத்தியேகமான வடிவங்கள் பல ஆளுமைகளின் கரங்களினூடே உதயமாகியுள்ளன. சமீபமாக சிறார் இலக்கியங்கள் பல படைப்புப்பாதையை பவித்திரமாக்கியுள்ளது. கவிமணி தேசிய விநாயகம் தொடங்கி சக்தி வை.கோவிந்தன், அழவள்ளியப்பா என நீளும் சிறுவர் இலக்கியவாதிகளில், சமீபமாக பிள்ளை இலக்கியச் சிற்பியாக எழுத்தாளர் உதயசங்கர் சிறார் இலக்கியத்திற்குக் கூடுதல் வலு சேர்த்துள்ளார். நூறு இலக்கியப் படைப்புகளை வெளியிட்டு பிள்ளைகளின் பிரியமான ஆளுமையாக உயர்ந்துள்ளார். அவரைத் தொடர்ந்து பல ஆளுமைகளும் ஆங்காங்கே தமது படைப்புகளில் பிள்ளைகளுக்காக ஒதுக்கிய பக்கங்களும் விதைத்த விதைகளும் இன்று இலக்கியவுலகில் முப்போக விளைச்சலைத் தருகின்றன.

சமீபமாக அரசு பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் எழுத்தாளர் சக.முத்துக்கண்ணன் அவர்கள் பிள்ளைகளின் கல்விப் புலத்தை மேம்படுத்தவும் பிள்ளைகளின் தனித்துவத்தை மெருகேற்றவும் இலக்கியமே ஆக்கப்பூர்வமான ஒன்று என்பதை உணர்ந்து தொடர்ந்து எழுத்து வழியாகவும் செயல் வடிவாகவும் தமது மேத்தகு ஆசிரியர் பணி ஊடாகவும் செயல்பட்டு வருகிறார். அவரது “சிலேட்டு குச்சி”, “ரெட்இங்க்” போன்ற நூல்கள் கல்வித் தரப்பில் பேசும் பொருளாகவும் விவாதங்களாகவும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் வளம் கண்டுள்ளது. அவரது படைப்புகளில் “சிலேட்டுக் குச்சி” எனை வெகுவாக ஈர்த்த ஒரு பிள்ளைக்காவியம். தொடர்ந்து பிள்ளைகளுக்கான அர்ப்பணிப்பில் அடுத்தக் கட்டமாக சிறார் இலக்கியத்தை நாடியுள்ளார். மழலைகளின் மனதை மகிழ்விக்க பிராயமொழியில் பிள்ளைப்போல கொஞ்சியுள்ளார்.

Pudhu Rekkai

“புது றெக்கை” எழுத்தாளர் சக.முத்துக்கண்ணன் அவர்களின் சிறுவர்களுக்கான கதைத்தொகுப்பு.தொகுப்பு முழுவதும் மழலை நாயகர்களின் வெவ்வேறு ரூபங்கள் காணக் கிடைக்கின்றன. கதைகள் ஒவ்வொன்றிலும் பிள்ளைகள் நடக்கின்றார்கள் அவர்களே பேசுகிறார்கள் கொஞ்சமுமாகக் கதைக்கிறார்கள் கேள்விகளாக வடிவெடுக்கிறார்கள் பின்பு அவர்களே விடைகளாக உருமாறுகிறார்கள். வாசிக்க வைத்து வசியப்படுத்துகிறது கதை ஒவ்வொன்றும். ஆசிரியர் பிள்ளையாகத் தோன்றி வாசகரை மழலை உலகத்திற்கு கரம் பற்றி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெரியவர் உலகின் கணம் விழுந்திடாத அளவிற்குப் பக்குவமாய் ஒவ்வொரு கதையையும் பாங்குடன் நகர்த்தியுள்ளார். அசலில் இந்நூல் கொண்டு வாசகரை குழந்தைகளின் அற்புத உலகில் திளைக்கச் செய்துள்ளார். எத்தனை எத்தனை கேள்விகள் தான் உதயமாகின்றன பிள்ளைகளின் சிறிய மூளைக்குள் .அத்தனையும் ஆச்சரியங்களின் அதீதங்கள்….. இத்தனையும் பிள்ளைகளின் சுடரும் அறிவொளியின் வெளிப்பாடுகள்… இவை ஒவ்வொன்றும் புனைவாக இருப்பதாகத் தோன்றவில்லை. ஆசிரியரின் குழந்தைகளுடனான இணக்கமும் பிணைப்பும் ஒவ்வொரு கதையிலும் ஜீவித்திருப்பதை உணர முடிகிறது.

“ஆலமரம்” கதையில் வசந்தி பாப்பா தனது தாத்தாவிடம் கேட்க எழுதி வைத்திருக்கும் கேள்விப் பட்டியல் மெத்த மேதாவிகளின் மேட்டிமை அறிவைத் தூளாக்குகிறது. எப்படி பூச்சிகளும் பறவைகளும் ஒரே மரத்தில் இருக்கின்றன? பூச்சி பறவைகளைக் கடிக்காதா? பறவைகளுக்கு சளி பிடிக்குமா? குட்டி பறவைக்குக் காய்ச்சல் வந்தால் அம்மா பறவை என்ன மருந்து தரும்? கல்யாணம் வைத்தால் அந்த மரத்திலேயே ஸ்பீக்கர் கட்டுகிறார்கள். பறவைகள் பாவம் இல்லையா… எப்படி காதை மூடும், அதுக்கு தான் கை இல்லையே.. இப்படி ஏராளமான அறிவுஜீவி ஐயங்கள்.. யாரேனும் யோசித்தது உண்டா….இதற்கு நம்மிடம் தான் பதில் உண்டா…

இதைத்தான் திறந்தவெளிப் பல்லறிவுக்கழகம் என்பார்கள். இப்படியாக பிள்ளைகளை நாம் சிந்திக்க விடுவோமேயானால் அவர்களின் அறிவுக்கிடங்கில் புதைந்திருக்கும் ஏராளமான கேள்விக்குவியலுக்கான விடைகளைத் தேட நாம் நம்மை அறிவூக்கப்படுத்த வேண்டும். பேராசிரியர்களிடம் கூட பிள்ளைகளின் தேர்ந்த சிந்தனைகளை அத்துனை எளிதாக அனுமானித்திட இயலாது. குழந்தைகளின் கற்பனை உலகிற்கு உருவம் தரும் மாயாலோக கதைகளாக “ஞாயிற்றுக்கிழமை” கதையும் “புது றெக்கை” கதையும். அடக்குமுறை ஆதிக்க வாதிகளான பெற்றோர் என்கின்ற பூதங்களின் பொருள்வாத வாழ்க்கை, பிள்ளைகளை எப்போதும் நான்கு சுவற்றுக்குள் முடக்கிப் போட்டு அவர்களின் கொண்டாட்ட வெளியை மறைப்பொருளாக்கும். சிறைச்சாலைகள் போன்ற எண்ணற்ற இல்லங்களில் பிள்ளைகள் கைதிகளாக கல்வி என்கின்ற விலங்கிட்டு வார்டன் போல மிரட்டியாள்கின்றனர் பெற்றோர்.இப்படியான இன்றைய பிள்ளை வளர்ப்புப் போக்கை அம்பலப்படுத்துகிறது “புதுறெக்கை” கதைப் பெட்டகத்தின் உவப்பானதொரு கதை.

யாழினி பாப்பாவின் ஏக்கம் பூக்கும் மொழிகள் வெவ்வேறு தளங்களில் வெளிச்சப்படுகிறது. பூதத்தைப் பார்த்துக் கூட பிள்ளை மனம் பரிதவிக்கவில்லை துளியும் அசரவில்லை என்றால் பெற்றோர் எத்தனை பெரிய பூதகணங்களாகத் தினம் வற்புறுத்தியும் பயமுறுத்தியும் அடக்கி ஆளுகின்றனர் பிள்ளையை என்பதே கதையில் ஆசிரியர் சமகால பெற்றோர்களை பிள்ளைச் சுதந்திரத்தின் மீதான ஆதிக்க மனோபாவத்தைத் துடைத்தெறிந்து பத்தம் புதுறெக்கை ஒன்றை முளைக்கச் செய்து யாழினி பாப்பா வழியாக தமது விண்ணப்பத்தை அந்த றெக்கையில் கட்டித் தூது அனுப்புகிறார் முத்துக்கண்ணன் அவர்கள்.

கதையில் ஒரு கட்டத்தில் பூதத்திடம் யாழினி பாப்பா இப்படி கேட்கிறாள்.. “அம்மாவும் அப்பாவும் உன்னைப் போலவே இருந்தால் நல்லா ஜாலியா இருக்குமே..” பலமுறை விழி வழியே செறிவூட்டியும் ஆற்றவியலா பிள்ளை மன ஏக்கங்கள் தான் அங்கலாய்த்துக் கிடக்கின்றன மொழியில். யாழினி பாப்பா, தம்போல் வீட்டிற்குள் மருட்சியாய் கிடக்கும் பிள்ளைகளின் சார்பாக வேண்டி நிற்கிறாள். “அப்பாவின் ஸ்கூட்டர் போல இல்லை பூதம் யாழினி எங்கே நிற்கச் சொன்னாலும் நின்றது.” பெரும்பாலான குடும்பங்களில் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளையும் அபிலாஷைகளையும் புறக்கணிக்கின்றனர் பெற்றோர். சிறு பிள்ளை என்ற போக்கில் அவர்களின் எந்த ஒரு விருப்பங்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் பிரியத்தின் கட்டளைகளுக்கும் மதிப்பளிக்க தவறுகின்றனர். என்பதே இக்கதையின் வழியாக ஆசிரியர் நமக்கு வலியுறுத்துகிறார். பிள்ளைகளின் முடிவுகளையும் தாங்களே எடுக்கின்றனர் தங்களின் விழைகளைத் திணிக்கின்றனர் அவர்களின் வாழ்க்கையையும் தாங்களே சேர்த்து வாழ்கின்றனர் பெற்றோர். “ஞாயிற்றுக்கிழமை” கதையில் பேசும் பென்சிலுக்கு டின் டின் என பெயர் சூட்டிய சுகந்தி பாப்பா, A B C யை பாட்டு போல ராகமாய் பாடும் அபிராமி குட்டி, உன்னிப்பழத்தை உண்டு நாவின் வையலட் நிறம் பரிமாறி அப்பிக் கிடப்பதில் விழிகளும் இதழ்களும் பூத்து நிற்கும் பிரியா குட்டி, கிளிகளை எப்படியாவது உண்ணவும் பருகவும் செய்திட வேண்டும் என்பதில் பெரும் முனைப்புக் காட்டி மெனக்கிடும் வெண்பா பாப்பாவும் பாபு செல்லமும் என மழலைப் பட்டாளங்களின் அலைவரிசை அலையலையாய்த் தவழ்ந்து நூலைக் களைக்கட்டுகின்றன. “இனிக்கும் Q” கதையில் வரும் ஈஸ்வரி அக்கா பாத்திரம் தொகுப்பில் என்னை வெகுவாக பற்றிக் கொண்ட பாத்திரப்படைப்பு. கற்றலில் தடுமாறும் பிள்ளைகளைக் கல்வியிலிருந்துத் தடம் மாறிடாது கற்பித்தலின் மாறுபட்ட கோணங்களில் பிள்ளைகளின் கற்றல் மனம் மசிந்திடாது எளிமைக் கூட்டியும் ஆர்வம் தூண்டியும் மனதில் அடாது பதிந்து நிற்கும் மாதிரியான கற்பித்தல் செயல்முறைகளில் அபிராமி பாப்பாவைக் கையாடல் செய்த ஈஸ்வரி அக்காவின் கற்றல் அர்ப்பணிப்பும் பிள்ளைகளைத் தன்வயப்படுத்தும் பக்குவமும் பாத தூரமாகப் பதிவு செய்கிறது கதை.

கல்வி என்பது போர்க்களம் அல்ல கற்றல் என்பது போராட்டமும் அல்ல இரண்டும் கற்பிப்பவர் கரங்களின் கனிந்துக் கிடக்கும்‌ என்பதை நிதர்சனப்படுத்துகிறது ஈஸ்வரி அக்காவின் செயல்முறைக் கல்வியார்வம் ஒவ்வொன்றும். வெகு நாட்களாக “Q” கற்கத் தலைப்படும் அபிராமி பாப்பாவின் முயற்சி அதற்கான ஈஸ்வரி அக்காவின் தொடர் செயலெடுப்புகளும் இறுதியில் அபிராமி பாப்பா Q மொழிந்து வெற்றிக் கண்டதில் எனக்கு அப்பாடா… என்றாகி பெருமூச்சொன்று ஆசுவாசப்படுத்தியது. ஜீனித்தண்ணியில் அபிராமிக்கு இனித்த எனக்குள்ளும் தித்தித்தது‌. தாத்தா பாட்டி என்றாலே பிள்ளைகளுக்கு அலாதி பிரியம். எத்தனை பரிசும் பகட்டும் அவர்களை வசியப்படுத்தினாலும் அவர்களின் சுய விருப்பமும் கொண்டாட்ட களமும் தாத்தா பாட்டியைச் சுற்றியே திரியும். அவர்களின் சுயப்பிரியத்தில் தோன்றிய அபிலாஷைகளின் பூர்த்திமை என்பது பேரானந்தத்தின் வெளிப்பாடு என்பதை பேசுகிறது “பிறந்தநாள்” கதை.

அதிலும் தாத்தா பாட்டி உடனான அனைத்து நெருக்கங்களும் அவர்களைக் கூடுதலாகவே அசத்தும். கதைசொல்லிகளாகவும் தமது விருப்பத்திற்கு மறுத்தலிக்காது ஊக்கப்படுத்தும் அவர்களின் தூய அன்பு பெற்றோரை விட அதீத பிணைப்பும் இணக்கத்தையும் பிள்ளைகளின் மீது கவிந்துக் கிடக்கும் என்பதை பிள்ளைகளின் தரப்பிலிருந்துப் பேசுகிறது கதை. மழலைகளின் கதை ஒவ்வொன்றும் ஜீவித்தத் தருவாய் யாவிலும் ஆசிரியரின் செல்ல மகள் வெண்பாவின் ரேகைகள் வெகுவாக பதிந்துள்ளதைக் காண முடிகிறது. “கிளிகள்” கதையில் வரும் வெண்பா பாப்பா அசலில் நூலாசிரியரின் செல்ல மகளின் பிரதிபாத்திரம் போல என்றே நினைக்கிறேன். வெண்பா பாப்பாவுக்கும் பாபு செல்லத்திற்கும் அந்த இரட்டை கிளிகளோடுடனான நட்புறவைப் புதுப்பிக்க மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வாசகரை ஸ்தம்பிக்க வைக்கின்றன. பாட்டு பாடியும், நேராக நின்று “ஹாய்” சொல்வதும் பிள்ளைமை வேட்கையில் பிரத்யேகமாகப் பூத்தச் சேட்டைகள். வாசிக்க வாசிக்கப் பேரானந்தத் திளைப்பைக் களித்துய்க்கச் செய்கின்றன. வாசக மனத்தை “புது றெக்கை” கட்டிப் பறக்கச் செய்கிறது தொகுப்பு.

பிள்ளைகளின் வெகு நேர பிரிய பாடுகளுக்குப் பின்பு கிளிகள் உணவு உட்கொண்டும் நீர் அருந்தியும் தமது நீண்ட நெடிய விரதத்தைக் கைவிட்டதில் உண்டான பிராய குதூகலிப்பில் வெண்பாவுடனும் பாபுவுடனும் நானும் கொண்டாடினேன். அத்துனை மாதுர்யமான காட்சிப் பிம்பங்கள். அடடா… என்றாகி விட்டது. . பிள்ளைகள் வெறும் ஏட்டுக்கல்வியின் பிரதிநிதிகளாக மட்டுமே இருந்து வருகின்றனர். பிள்ளைகளின் அறிவு தீக்ஷையானது.ஆனால் இன்றைய கல்வித்திட்டத்தின் வறுமை அவர்களின் பொலிவான ஞானத்தைச் சுருக்கி வருவதை ஆசிரியர் தமது கதைகளுக்குள் பூட்டமாகச் சுட்டிக் காட்டியுள்ளார். பள்ளியைத் தாண்டிய பொது உலக அறிவு என்பது பிள்ளைகளுக்கேயுரித்தான பிரத்தியேகமான கல்விச் சுதந்திரம். அது நிச்சயம் அனைத்துப் பிள்ளைகளுக்கும் வார்த்திட வேண்டும். “ஐயோ நான் பள்ளிக்கூடத்திற்கு உள்ளேயே தேய்ந்து போனேனே”! தொகுப்பின் ஏழு கதைகளும் மாறுபட்ட பிள்ளை முகங்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. நம் அனைவரின் வாழ்விலும் பிள்ளைகள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களைக் கதைக்காரர்களாகவும் கதாநாயகராகவும் உருத்தெழ வைப்பதில் இலக்கிய தாரிகளின் பங்கு அலாதி. அதிலும் தேர்ந்த எழுத்துக்காரர்கள் பிள்ளைகளுக்கான தமது விசேஷப் படைப்பின் வாயிலாக வசியப்படுத்தி விடுவர் என்பதற்கு ஆசிரியர் சக.முத்துக்கண்ணன் அவர்களின் இந்த தொகுப்பே சான்று. பிள்ளை மொழியில் மழலைப் பாத நடையில் வாசகரைத் துள்ளியாட வைத்துள்ளார். நிச்சயம் பிள்ளைகளுக்கு இந்தத் தொகுப்பு வாசிக்கப் பிடிக்கும். சிறார் இலக்கியத்தில் பல அற்புதப் படைப்புகளுடன் தோழர் அவர்களின் இந்த தொகுப்பும் தமக்கான தனித்த முத்திரையை பதிய வைக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. தொகுப்பின் கதைகளை வாசித்த கணநேரங்கள் ஒவ்வொன்றிலும் தன்னிலை மறந்தே மூழ்கிப் போனேன் பிள்ளைகளின் திரைக்காணலில்.

ஆசிரியர் முத்துக்கண்ணன் அவர்களின் மாறுபட்ட எழுத்து நடைகளின் பரிணாமம் தனித்துவத்தின் தன்னியல்பு. . அவரின் ஒவ்வொரு படைப்பிலும் அந்தந்த தளத்தின் சுவைக்கேற்றாற் போல புதிய எழுத்து வடிவத்தைக் காணலாம். “புது றெக்கை” ரோஜா இதழின் இதமான ஸ்பரிசத்தில் நமது இதயத்தைத் தடவி விட்டு செல்கிறது ‌. தொடர்ந்து பிள்ளைகளுக்கான தங்களது பணிமேலாண்மையுடன் எழுத்து அர்ப்பணிப்பிலும் செயல்படுத்தி வர வாழ்த்துகள்.

– து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: விஜிலா தேரிராஜனின் ’இறுதிச் சொட்டு ’ – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: விஜிலா தேரிராஜனின் ’இறுதிச் சொட்டு ’ – து.பா.பரமேஸ்வரி




நூல் : இறுதிச் சொட்டு
ஆசிரியர் : விஜிலா தேரிராஜன்
விலை : ரூ.₹150/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

கதைகள் எப்போது தோன்றியது என்று ஆராய்ந்தோமேயானால் கற்கால மனிதன் தான் கண்டுக் களித்த தன்னை பெரிதும் பாதித்த தான் கடந்துச்சென்ற அனைத்தையும் குகைப்பாறைகளில் ஓவியங்களாகச் சித்தரித்து வைத்தான். கதைகளின் தோற்றம் என்பது மனிதகுலம் இந்த பேரண்டத்தில் ஜனனம் எடுத்துக் கொஞ்சமுமாகத் தமது சிந்தனைச் செறிவையும் அறிவாற்றலையும் பெருக்கத் துவங்கிய கணம் முதல் பிறந்தது என்பதே உண்மை.மெல்ல பரிணமித்த இலக்கிய கலாச்சாரம் மனித அறிவைப் பெருக்கிக் கூடுதலாக தமது எண்ணச் செரிவுகளை மனதின் தூண்டலில் தோன்றிய அனைத்தையும் முன்பை விட மேம்பட்ட வகைமையில் உருவங்களாக, கல்வெட்டுகளாக, ஓவியங்களாக, சிற்பங்களாக, வரி கோடுகளாகத் தமது உணர்வுகளை, வெளிப்படுத்த விரும்பும் எண்ணங்களை படிமங்களாக வடித்து வைத்தான். அப்படியான கல்வெட்டுக் கதம்பங்களே பிற்காலத்தில் கற்கால மனித குலத்தின் வரலாற்றை ஆய்வு செய்ய பேருதவியாக இருந்தது.

தொடர்ந்த காலங்கள் மொழிகளின் தோற்றம் நமது மூதாதையர் பேச்சு மொழி வழக்கில் ஆகச்சிறந்த கதைச் சொல்லிகளாக அறிவு ஜீவிகளாகச் சொல்லாடல்களின் வழியாக பாடல்கள் மூலம் என மக்கள் மொழியாக மண்ணின் களஞ்சியமாகக் கதைகள் உருப்பெற்றன. அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டன. போக, சங்க கால இலக்கியங்கள் மனிதர்தம் வாழ்க்கையை உள்வாங்கிப் படைக்கப்பட்ட கதைகளைக் களங்களாகச் சுமந்து நின்றது. இலக்கியம் என்பதே மனிதவாழ்க்கையை உள்ளடக்கிய எழுத்துக்களின் சாரம் தானே.. பரிணாமங்களின் வளர்ச்சியும் கூட…இப்படியான பரிணாமங்களைப் பரிமாணங்களாகக் கடத்திய நமது மூதாதையர் அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கு வாய்வழிக் கதைகளாக்கி ஆவணப்படுத்தினர். ஆகச்சிறந்த புலவர் பெருமக்களின் செய்யுட்பாடல்கள், இலக்கியப்புனைவுகள், இதிகாசங்கள், நெடும் கதைகள், வரலாறுகள், சரித்திர சம்பவங்கள் என இன்றும் சங்க கால இலக்கியம் வாகை சூடு நிற்கிறது.

தொடர்ந்த எழுத்து யுகங்கள் புனைவிலக்கியம் அபுனைவிலக்கியம் என இருவகைகளைத் தமக்குள் கொண்டுச் சமகால யதார்த்த நிகழ்வுகளின் பயணங்களின் பிரதிகளாகப் படிமங்களாகச் சாதாரண மக்கள் பேசும் மொழிகளின் புழக்கத்தில் இலக்கியத்தில் நவீனத்துவம் கலந்துப் படைப்புலகில் இன்றுவரை நூற்றாண்டுகளைக் கடந்து பல்வேறு படைப்புகளின் முகங்களை தமக்குள் ஏந்தி நிற்கிறது.

இப்படியான படைப்பூக்கங்கள் கதையுலகில் தான் எத்தனை… நூறைத் தொட்ட கதைச்சொல்லிகள் எழுத்து வழக்கிலும் மொழிப் புலனிலும் வட்டார நில மாந்தர்களின் உடன்குடி நாவிலும் பூத்த வண்ணம் உள்ளனர். படைப்புகளின் ஆகச்சிறந்தத் தோன்றலான மனிதன் மட்டுமே இப்படியான கதைச் சொல்லியாக உயர்ந்து நிற்கிறான் மொழிவளமையின் சிறப்பில்.

உயிர்ப்பது, உறவு கொள்வது, வாழ்ந்துக் களிப்பது, உறவாடி ஓய்வது, இடம் பெயர்வது என்ற பிற உயிர்களிடத்திலிருந்துத் தனித்துப் பயணித்த மனிதன் மட்டுமே தன்னை அசைத்த இசைய வைத்த ஒவ்வொன்றையும் இலக்கியத்துடன் இணைத்துப் பார்த்தான். தன்முன் எதிர் நீளும் பாதைகளைக் கருவாக வடிவமைத்து அதைச் செப்பபனிட்டுப் பல கோணங்களில் படைப்புலகிற்கு வழங்கிப் பெருமைப் சேர்த்தான்.

இந்த உலகம் தான் எத்தனை எத்தனை மனித மாயங்களை தனக்குள் உள்ளொடுக்கியுள்ளது. எத்தனை வாழ்க்கைப்பாடுகளை விழுங்கி நிற்கிறது. எத்தனை மனிதர்களின் நிறங்களை அறியும் சாட்சிகளாகத் தோன்றி நிற்கிறது. சங்க கால இலக்கியத்தின் பெருவாரி புலவர்களும் மேதாவிகளும் கதாசிரியர்களாக ஏடுகளில் களைக்கட்டுகின்றனர்.

பிற்காலத் தமிழிலக்கியச் சிறுகதைகளில் நவீனத்துவம் நிரம்பிய கதைதாரிகள் அநேகர். வா.வே.சு ஐயா, கீ.ரா, கோணங்கி, தமிழ்ச்செல்வன், சூடாமணி என நீளும் வரிசைகள் தமது சிவந்தக் கரங்களைத் தமிழ் மண்ணில் ஆழ விதைத்து வளமாக்கிய கொடிகள் தான் தாராளம். அவற்றிலிருந்து முளைத்த செடிகளாகவும், விருட்சங்களாகவும் பூத்துக் குலுங்கிய கதைப்பூக்கள் தான் ஆயிரமாயிரம்.

சமபாலின எழுத்தாளுமைகளைக் கொண்ட இலக்கியவுலகமாகத் தமிழிலக்கியம் உச்சம் தொட்டுள்ளது. இவர்களின் மற்றுமொரு வெளிச்சமாகப் பெண் எழுத்தாளர்களில் போற்றலுக்குரிய ஆசிரியராக விஜிலா தேரிராஜன் அவர்கள் தமது விரிந்தச்சிறகைக் கதையுலகில் பறக்கச் சிறக்கச் செய்துள்ளார். சமகாலப் பாதிப்புகளையும் புரட்டிப்போட்ட சமூகப் பிளவுகளையும், புரையோடிக் கிடக்கும் சமூக அவலங்களையும், அசைத்து மட்டும் விடாமல் ஆட்டி வைத்தத் தருணங்களையும், வாழ்க்கை என்பது வெறும் கடத்தலல்ல அன்றாட வாழ்வின் சாதாரணம், தேடி எடுக்கப்பட்ட கருக்களின் மனிதாபிமானங்களில் விதைகள், மையக்கருத்துக்களின் உருவங்கள் என்பதை விஜிலா அவர்கள் தமதிந்த “இறுதிச்சொட்டு” என்கிற சிறுகதைத் தொகுப்பின் வழியே துலங்கி நிற்கின்றார்..

கதைகள் ஒவ்வொன்றும் ஒரு பாத தூரம் கடந்தவை. கதைக்காரன் ஒரு சுமைத்தாங்கியாக, முடிவுற்ற அழிந்துப் போன மண்ணை விட்டு மறைந்து மருவிய சம்பவங்களை வரலாறுகளை புனைவாகக் கற்பனைகளின் அதீதத்தில் பாத்திரங்கள் ஊடாக வழங்கி நிற்பதவன் மட்டுமன்று . கதைக்களங்களைச் சமகால அன்றாடங்களைக் கடந்து போகும் யதார்த்த நிகழ்வுகளைக் கொண்டு எங்கோ ஒரு மூலையில் யாருக்கோ ஒரு வீதியில் எப்போதோ ஒரு பாதையில் பாதிப்பை ஏற்படுத்திய மாற்றத்தைக்குட்பட்ட கருச்சுளைகளை உதிரி பாகங்களாகக் கொட்டி கிடந்தவற்றைச் சீரமைத்து அதிலிருந்து தேவையின் பொருட்டு வடிகட்டி அவற்றில் வடிவியலைக் கோர்த்துப் புனைவுக் கூட்டி மொழிப் புலமைச் ஏற்றி கொஞ்சமுமாக துள்ளல் சேர்த்து எள்ளல் சற்றே தூக்கலாகத் தூவி நடையில் மெல்லிய நளினத்தை மெருகேற்றி, கதைகளத்திற்கேற்ப உடன்குடி வட்டார வாசனையோடு பேச்சு வழக்கிலும் உறவு முறையிலும் வாயார விளித்தலிலும் நிலத்தின் அடையாளங்களிலும் ஓங்கிப் பிடித்து உருவான கதைத் துகள்களாகத் தோழர் விஜிலா அவர்களின் இறுதிச்சொட்டு நம்மை சொட்டு சொட்டாக நனைய வைத்து குளிருட்டுகிறது.

21 வாழ்க்கை நிறங்களைப் பரிணத்து நிற்கும் இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையும் மாறுபட்ட வர்ணங்களின் ஓவியங்கள்..
அட . ஆமா..
இது பற்றி யாரும் பேசவே இல்லையே..
இது இதேதான்..
நேற்று கூட நான் இதைப்பற்றி நினைத்தேன்..
இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.. ஆனால் இன்றோ வேறு மாதிரி..
சமூகம் எப்போது திருந்துமோ… போன்ற பாமர சமூகத்தினரின் நாளொன்றின் ஆதங்க மொழிகளை ஒலித்துப் பேசுகிறது கதை ஒன்றும்.
தொகுப்பில் அனைத்து சமூகம் சார்ந்த தரப்புகள் ஊடாடிக் கிடக்க என்னை வெகுவாக சில கதைகள் வியக்க வைத்தன. அதில் இறுதிச் சொட்டு, மண்குதிரை,பட்டுமனம்,
ரௌத்திரம் பழகு,வன்மம் போன்றவைக் குறிப்பிடத்தக்கவை.

பிள்ளைகளின் வலிகளை அவருக்கே உரித்தான பிரத்யேகப் பிராயத் திமிர்களைச் சுட்டித்தனங்களை நையாண்டிகளைக் காண்பிக்கும் விதமாக, புறத்தில் மழலையின் நெருடலில் தமது மகிழ்வைக் கொண்டாடினாலும் ஒவ்வொரு பிள்ளையின் திரைக்குப் பின்னால் என்பது ஒரு மறைக்கப்பட்ட வதை நிறைந்த இருட்டறை,இருண்ட முகங்கள் என்பதையும் உணர்த்திக் செல்கிறது நூல். அவற்றையெல்லாம் மறைக்கவே பள்ளியில் இயல்பாகத் தம்மை வெளிப்படுத்தும் அத்தனை பிரயத்தனங்களையும் தேடி நிற்கின்றனர் பிள்ளைகள். அப்படியான பிள்ளைகளின் துயர் நிறைந்த மற்றொரு முகங்களைக் கண்டறிந்து ஒரு ஆசிரியராகப் மாணாக்கர்களின் உளவியல் சிக்கல்களை வெளிச்சத்திற்குக் கொணர்ந்தப் படைப்புகளாகச் சிலகதைகள் திகழ்ந்தது சிறப்பு.

சமுதாயத்தை வெகுவாக உலுக்கி வரும் சமகால வக்கிரமான பாலர் வன்புணர்வுக் கொடுமையை எதிர்க்கிறது ‘மருளாடி’ சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்த கதையான “மண்குதிரை” சிறுகதை. வளரிளம் மொட்டுக்களின் மீதான வன்புணர்வு ஏற்கவே முடியாத குரூரம். பிள்ளைகளின் மனதில் ஆழப்புதைந்துக் கிடக்கும் இரணம். அந்த வலியைத் தாயாக ஆசிரியராக உணர்ந்துக் கதைத்துள்ளார் விஜிலா அவர்கள். சற்றே சிந்தித்தோமேயானால் நம் சமூகம் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கும் முன் வளாகக் கட்டமைப்பு, ஒழுங்குமுறை, கற்பிக்கும் திறன், தேர்ந்த ஆசிரியர் கொண்ட நிர்வாகம் போன்றவற்றின் அடிப்படையில் பெற்றோர்களின் கல்விசார் தேடுதல் அமைந்திருந்தது. ஆனால் தற்போதைய சமூக சூழல் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக மாறியுள்ளது. பல நூற்றாண்டு முந்தைய குருகுல காலத்தில் கல்வித் தரம் உயர்ந்து நின்றது. தற்போது அச்சுறுத்தி வரும் பிள்ளைகள் சார்ந்த வன்முறைகள் ஆசிரியர் என்ற புனிதத்தை, கற்பித்தல் என்கிற மாண்பை இழந்து நிற்பதுமே பெற்றோர் பள்ளிக் கல்வியின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். அதற்கேற்றார்ப் போல சங்கரன் சார் போன்ற வக்ரபுத்தி ஆண் ஆசிரியர்கள் பிள்ளைகளின் மீது நிகழ்த்தும் பாலியல் வக்கிரம் சுதா போன்ற நல்லாசிரியர் மேலிடத்தில் புகார் கொடுத்தும் பள்ளி நிர்வாகத்தின் பள்ளியின் நற்பெயர் தொடர்ந்திருக்க, பெண் பிள்ளைகளின் உடல் சார்ந்த அலட்சியப் போக்கு பாலியல் ரீதியான அவர்களின் இப்படியான துன்பங்களை அசட்டை செய்து வருவதைச் சுட்டிக் காட்டி வன்மையாகக் கண்டிக்கிறது கதை. பாலர் வன்புணர்வுக் குரூரங்கள் அநேக எழுத்தாளுமைகள் தமது படைப்புகள் வழியே சாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வந்த போதிலும் ஒரு பெண் ஆசிரியராக விஜிலா அவர்கள் இப்பிரச்சனையை சமூகத்தில் கொண்டுச் சேர்க்கக் கதையாக்கியுள்ளது சிறப்பு..

பள்ளிஆசிரியர் என்பவர் எப்போதும் கடுமையாகவும் பிள்ளைகளை அடிமைப்படுத்தும் மனப்பான்மைக் கொண்டவராக இருக்க வேண்டி பெரும் மெனக்கிடுவர். இப்படியான ஆசிரியர்களின் முன் அனுமானமான சுய கணிப்புகளை மூடநம்பிக்கைகளைத் தீவிரமாகப் பேசுகிறது “தீதும் நன்றும்” கதை. உடற்பயிற்சி ஆசிரியர் என்பவர் கூடுதலாகவே உடல் மொழியிலும் மொழிக் கண்டிப்பிலும் விறைப்பாய் இருப்பர் என்பது பொத்தாம் பொசிலித்தனமான சமூகப் பார்வை. ஒருவித மேம்போக்கு மனோபாவத்தை ஆசிரியர் மத்தியில் இவ்வாறாக நிறுவியுள்ளது. ஆசிரியர்கள் எப்போதும் கண்டிப்பாகவே இருக்க வேண்டும் என்கிற காலம் தொட்டுப் புரையோடிக் கிடக்கும் ஆசிரியர் மாணாக்கர் வெறுப்புறவை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது கதை. ஆசிரியர்களின் இப்படியான சுயமதிப்பீடு, மாணவர்களைக் கைக்குள் அடக்கிக் கட்டிப் போட வேண்டும், தமக்குக்கீழ் அடங்கியே இருக்க வேண்டும், மீறிய மாணவனை ஒழுக்கம் தவறியவனாக சித்தரித்து ஒருவித வெறுப்புணர்வைப் பிற ஆசிரியர்கள் மத்தியில் உண்டுப் பண்ணுவது, அவனுக்குள் ஒரு காழ்புணர்ச்சியை ஏற்படுத்தி பிற மாணவர் மத்தியில் அவமானப்படுத்தும் ஒரு சில ஆசிரியர்களின் போக்கைப் சமூகவெளியில் விரியப்படுத்துகிறார் விஜிலா அவர்கள். எப்போதும் மாணாக்கர் தவறானவரும் அல்லர் அதேபோல் மாணாக்கர் மீதான ஆசிரியர்களின் சுய கணிப்புகளும் எப்போதுமே சரியாகவே இருந்து விடுவதுமில்லை என்பதற்கு உடற்பயிற்சி ஆசிரியர் கண்ணனுக்கும் 12 ஆம் வகுப்பு மாணவன் பாஸ்கரனுக்கும் இடையே நடக்கும் பனிப்போரின் மெல்லிய அதிர்வைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது கதை.

பிள்ளைகளின் கனவுகள் என்பவை நினைவுகளின் நனவுகள். பிள்ளைமையின் குதூகலத்தோடுப் பேசுகிறது “வண்ணக்கனவு” சிறுகதை.

ஆம்…. பெரியவர்களுக்கே குறிக்கோள் இலட்சியமெல்லாம். பிள்ளைகளைப் பொருத்தவரை அவர்களுக்கான நிகழ்கால இனிமைத் ததும்பும் வண்ணக் கனவுகளே மகிழ்கூட்டும் கொண்டாட்டங்களே எதிர்கால இலக்கு. நிறைவேறுவதும் கடந்துப் போவதும் அவரவர் இயல்பு வாழ்க்கையின் கணக்கு. அதையும் தாண்டி சின்னத்துரை போன்றச் சுட்டித் தனமான சாதாரண மனநிலைக் கொண்ட பிள்ளைகள் பெரும்பாலும் எதையும் வேடிக்கையோடும் கேளிக்கையோடுமே அனைத்தையும் அணுகுவர். வாழ்க்கையைக் கொண்டாட்டமாகக் கொஞ்சும் மாண்புடையவர்.எதையும் எளிதில் மறந்துவிடும் மறைத்துவிடும் இயல்பைக் கொண்ட தூய மனம் பிள்ளை மனம் என்பதையே ஆசிரியராக மழலைகளின் அனுபவங்களை வண்ணமயமான நிறம் கூட்டிக் கதை முழுதும் சின்னத்துரை வழியாக திரைக்காணல்களின் ஒவ்வோரு துணுக்குகளையும் திரைப்பாடல்களையும் நிகழ்காலத்துடன் ஒப்பிட்டு ஒலிக்கச் செய்துக் காட்சிப்படுத்தியுள்ளது ஆசிரியரின் திரைப்பட ஆர்வத்தையும் பிள்ளைகளுடனான வகுப்பறை அனுபவத்தையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறது.

அடுத்ததாக தாய்மைத் ததும்பும் ஒரு ஆசிரியரின் பிற உயிர்களிடத்தில் ஏற்படும் மானசீக அன்பைக் வெளிகாட்டும் படைப்பொன்றை உள்ளொடுக்கியுள்ளது தொகுப்பு. தாய்மை என்பது பெண்மைக்கு மட்டுமே உரித்தான தனித்த குணம். உலகின் அனைத்து ஜீவராசிகள் மீதும் ஏற்படும் என்பதற்கு “பட்டுமனம்” நாயகி கோமதி எடுத்துக்காட்டு. குருவிகள் அடுக்களையில் கட்டிய கூட்டிலிருந்து அவற்றின் எச்சம் பட்டு அடுக்களை மேடை நிதம் கறைப்பட, பள்ளி விடுப்பில் தமது பிள்ளையைப் பார்க்கத் தாய்வீடுச் செல்லும் கோமதி, தமது இல்லாமையின் போது குருவிகள் அடுக்களை வாராதிருக்க வென்டிலேட்டர் வழியே அட்டை வைத்து அடைக்கிறாள். ஊருக்குப் போக பேருந்து நிலையம் காத்திருக்கும் அவள் ஆவென்று குருவிக்குஞ்சு போல் தம் பிள்ளை வாயைத் திறந்து உணவு கேட்கும் நினைவு வரவே குருவிகள் அடுக்களைக்குள் நுழைந்து தமது குஞ்சுகளுக்கு உணவளிக்க முடியாதவாறு அடைத்து விட்டோமே என்கிற குற்றவுணர்வு உறுத்த வீடு நோக்கிப் பயணப்படுத்தியது கோமதியின் தாய்மை. தாய்மனம் பட்டு மனம் என்பதை உணர்த்தியே தாய்மையின் தாகத்தில் மனதை வருடி செல்கிறது கல்கி இதழில் வெளி வந்த இந்தக்கதை. இன்றைய நவீன உபகரணங்களால் மருத்துவ சமூகம் ஏற்படுத்தும் மனரீதியான அழுத்தத்தை உளைச்சலை பயத்தை உளவியல் ரீதியாக படும் அவஸ்தையை “மாதவம்” கதை எடுத்தியம்புகிறது. சாதாரண தொந்தரவுக்காக மருத்துவமனைச் சென்று அல்லப்பட்டு அவஸ்வதைப்பட்டு உறக்கமின்றி குடும்பத்தின் நிம்மதியைப் பறிகொடுத்து என‌ எத்தனை பாடுகள், இறுதியாக ஒன்றுமே இல்லை என்கிற மருத்துவரின் ஒற்றை வார்த்தை மொழிய மனம் நிம்மதி பாராட்ட அமைதி கொண்டு வெளியேறுகிறாள் மருத்துவமனை விடுத்து தேவிகா . அசலில் மருத்துவமனை சென்று ஒன்றுமற்று ஒன்றுமேயில்லை என்று திரும்பி வருவதென்பது ஒரு மகா தவம் தான் இன்றைய மனித சமூகத்திற்கு.அதிலும் பெண்களின் நிலை அதோகதி. கர்ப்பப்பை புற்றுநோய் மார்பக புற்றுநோய் என்றே சாதாரண தொந்தரவுகளைக் கூட நோய்மையின் நோயாக மாற்றிவிடும் ஆங்கில மருத்துவத்தின் வண்டவாளத்தைத் தண்டவாளமாக்குகிறது கதை.

அரசாங்க மின்துறை அலுவலகத்தில் நிகழ்ந்து வரும் கீழ்த்தட்டு மக்களுக்கெதிரான கையூட்டை வெளிப்படுத்துகிறது அடுத்தக் கதை. விவசாயக் குடிகளை நஷ்டப்படுத்தும் கிராம மின்துறை வாரியத்தின் பாரபட்ச நடவடிக்கைகளை அதிகாரதுஷ் பிரயோகத்தை எடுத்துக்காட்டும் கதை சற்றும் வெட்கமேயின்றி மேல்தட்டு மக்களின் கைக்கூலிகளாகும் இப்படியான அரசு ஊழியர்களைச் சமூகவெளிக்குத் தர தரவென இழுத்து வந்து நிற்கச் செய்கிறது “இலவசம்” கதை.ஏழை குடிகளிடமும் அதே மேல்கூலிக்காக பாராமுகம் காட்டும் இவர்களின் கீழ்த்தர போக்கு பிற நேர்மையான அரசுஊழியர்களையும் தலைகுனிய செய்கிறது.

பெண் எழுத்தாளரின் தொகுப்பாயிற்றே பெண்மைக்கான முக்கியத்துவம் வழங்குவதே படைப்பைச் சிறக்கச் செய்யும் என்பதற்கான விடிவெள்ளியாகப் பெண்ணினத்தின் சமகாலப் பிரச்சனைகளைக் கொண்டு விசேஷமாகப் பல படைப்புகளை உள்ளடக்கியுள்ளது தொகுப்பு.

காலந்தொட்டுப் புரையோடிக் கிடக்கும் பெண்களுக்கெதிராக நிகழும் அநீதிகளில் ஒன்று ஆணாதிக்க அடக்கு முறை. தொகுப்பு இப்படியான ஆதிக்கத்திமிரை வன்மையாகக் கண்டிக்கும் விதமாக “புதைக்குழி”. கதை. ஆண்களின் அட்டகாசங்களாகப் போதை களியாட்டம் பெண்களின் அல்லாட்டமாக நாளொன்றின் திண்டாட்டம். நிதம் சிந்தனையிலும் செயலிலும் மொழியிலும் உயிருடன் சித்திரவதிக்கும் இந்திய தேசத்தின் ஏனைய குடிமகன்களில் ஒருவனான கந்தசாமி‌ கதாபாத்திரம். போதையின் தீவிரத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்படும் அரக்கனாக, மகளா மனைவியா என்கின்றப் பாகுபாடு கூட அறிந்திராத அவனின் போதை மயக்கம் அசுர தனத்தை அவ்வப்போது வெளிப்படுத்தும். சில ஆண்களின் இப்படியான மட்டமான போதைமைப் போக்கு ஒருநாள் சமூகத்தையே கொன்றொழிக்கும் என்பதே நிதர்சனம்.

“போதையின் உச்சத்தில் இருட்டு இரவில் கந்தசாமியின் கைகள் நீண்டுத் தடவிய போது தங்கம் தன்னருகே படுத்திருந்த பார்வதியை தடாலென தன் பக்கம் இழுத்துக் கொண்டாள். அந்த இரவுக்குப்பின் பார்வதியும் முத்துவும் முத்தாயி கிழவியிடம் தான் படுத்துறங்கினார்கள்.”

தலைமுறைகளின் தவிப்பு ஆசிரியரின் வரிகள் விதியை விளக்கி நிற்கிறது துலக்க வழியின்றி…
“அம்மா என்ன பெத்ததும் செத்துப் போச்சாம்.அப்பா பட்டச்சாராயம் குடிச்சே ஈரல் வெந்து செத்துட்டாரு. அண்ணே கூடத்தான் இருந்தேன். அண்ணனும் கட்டிட வேலை பாக்கும் போது போதையிலே மூணாவது மாடியிலிருந்து தவறி விழுந்து செத்துப் போச்சு. அத்தாச்சி சொந்தக்காரவுங்க தான் இவரு..
“இப்படி தலைமுறை தலைமுறையா தண்ணியடிச்சா விளங்குமா?”

பெண் பூதேவி போன்றவள் பொறுமையின் சிகரம் என்றெல்லாம் கொண்டாட்ட வார்த்தைகளை அடுக்கிப் பெண்களை அடக்கி மிதிக்கும் மேம்போக்கு மனோபாவம் கணவன்மார்களிடத்தில் ஆதிகாலம் முதலே ஆக்கிரமித்துத் தான் வருகிறது‌. பெண் பொறுமை தாண்டினால் பூதேவி ஸ்ரீதேவி அல்ல காளிதேவியாகி கணவனை துவம்சம் செய்யத் தயங்க மாட்டாள் தூர தள்ளி வைக்கவும் சுணங்க மாட்டாள் என்பதற்கு “சவால்” கதை ஒரு சவாலாக அமைகிறது. பொன்னக்கா போன்ற துணிச்சல் மிக்க பெண்கள் முத்துசாமி போன்ற ஆணவச்செருக்குக் கொண்ட கணவன்மார்களைத் துரத்தித் தள்ளி வைத்துத் தமது சொந்தக் காலில் வாழ்ந்து முடித்துக் காட்ட வேண்டும் என்ற துணிச்சலுடன் முன்வரும் பெண்களை அடையாளங்காட்டி கோழைகளாய் பயந்து ஆண்களை சார்ந்தே வாழும் பெண்களுக்கு தைரியத்தையூட்டும் வகையில் பொன்னக்கா பாத்திரம் விசேஷம். ஆசிரியரின் பெண்களுக்கான வலிமையை கூட்டும் விதமாகக் கதை. பெண்களை எப்போதும் தமக்கான கிளர்ச்சிப் பொருளாகவே பாவிக்கும் ஆண் வக்கிர புத்தியை வெளிச்ப்படுத்துகிறது “ரௌத்திரம் பழகு”கதை. பெண்களைத் தமக்கான போதையாகப் பிரயோகிக்கும் ஆண் மடமை சிந்தனைக் கொண்ட சமூகம்,கனகா போன்ற துணிச்சல் மிக்க பெண்கள் அவர்கள் புறம் வீசும் சொல்லம்புகளின் தீக்கணைகளாக ஆணாதிக்கத்தைப் பொசுக்கியே ஆங்காரத்தை நொறுக்கியே நிற்கிறது பாத்திரம். பெண்களை வதைக்கும் ஆண்களை எதிர்க்க ரௌத்திரம் பழக வேண்டிய நிலை இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளதை பறைசாற்றும் படைப்பாக ஆசிரியரின் இந்த கதைத் திகழ்கிறது.

சிரித்துப் பேசும் பெண்களைத் தவறான முறையில் அணுகும் ஆண்களின் கேடு கெட்ட சிந்தனையை சமாதி கட்டும் விதமாக செம்மலர் இதழில் வெளிவந்த “வன்மம்” கதை. கதையின் நாயகி முத்து தமது இயல்பான பேச்சையும் யதார்த்தமாகப் பழகும் முறையையும் தவறாகச் சித்தரித்துத் தப்பான பிடிமானம் கொண்டு அவளை நெருங்க நினைக்கும் அவளின் அக்கா புருஷனின் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி உடைத்துத் துரத்தி விடுகிறாள் முத்து.
சமூகத்தில் இப்படியான துணிச்சல் மிக்க பெண்களையும் அடையாளம் காட்டத் தவறவில்லை ஆசிரியரின் தொகுப்பு.

வன்மம் சிறுகதை போல “ரத்தத்தின் ரத்தம்” சிறுகதையும் ஆண்களின் விரலிடுக்குகளில் நசுங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் கொத்தடிமை வேதனையை கொப்பளிக்கச் செய்கிறது. ஆணாதிக்கத்தின் உச்சம் பெற்ற குடும்ப அந்தஸ்தனாக பெரியவரும் அவரை வழிமொழியும் மற்றுமொரு ஆதிக்கத் தொடர் சங்கிலியாக மகன் சுந்தர் பேரன் சுரேந்திரன்.இது போதிக்கப்பட்டதல்ல குருதியிலேயே ஊட்டி வளர்த்து இன்று ஊற்றாக ஊறிப்போன ஆண் என்கின்ற மேலாதிக்க எண்ணம். இந்த எண்ணம் வளர ஆண்கள் மட்டுமல்ல சுயவிரும்பிகளாக அடங்கிப் போகும் அடிமை மனநிலைக் கொண்ட பெண்களும் காரணமாக இருக்கின்றனர் என்பதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை கதை. பெண்கள் நிமிராது ஆண்களின் ஆதிக்க உணர்வுத் தாழாது என்பதற்கு..
“என்னடி ரொம்ப வாய் நீளுது பொட்டைக் கழுதை அறைஞ்சேனா….” என்று கையில் இருந்த பனையோலை மட்டையைத் தங்கை மீது வீசியெறிந்தான் சுரேந்திரன்…
இந்தப் பரம்பரை அடிமை சாசனத்தைத் தகர்த்தெறியும் பெண் தலைமுறை இனி துவங்க வேண்டும் இல்லையேல் புதியதொரு மாற்றுவழிமுறைத் துலங்க வேண்டும்..

பெண்களின் உளவியல் நுண்ணுணர்வை மன இறுக்கத்தை பேசும் கதையாகக் “கட்டாய கடிவாளம்” சிறுகதை. பெண்களின் புதைக்கப்பட்ட உணர்வுகளை நுட்பமான அவதானிப்புடன் துல்லியமாக வடித்துள்ளார் ஆசிரியர் விஜிலா. எதையும் எளிதில் வெளிப்படுத்தத் தயங்கும் இயல்பு கொண்டவர் பெண்கள். என்பதற்கு வசுமதி தியாகு மீதான தமது காதலை இறுதிவரை வெளிப்படுத்தத் தயக்கம் கொள்கிறாள். தியாகுவின் திருமண நடந்தேறுகிறது.கட்டாய இறுக்கத்தின் கடிவாளத்தைத் தானே போட்டுக் கொள்கிறாள் வசுமதி. பெண் சார்ந்த உளவியலின் நுண்ணுணர்வை அதி நுட்பமாக ஆராய்கிறது கட்டாய கடிவாளம்.

பெண்களின் உடல் சார்ந்த அவஸ்தையை அந்தரங்க பிரச்சனைகளைப் பொதுவிடங்களில் சிறுநீர் கழிக்க வழியற்ற நிலை உடல் சார்ந்த ஒழுக்கசீலத்தின் கட்டாயத் திணிப்பு என அல்லாடும் பெண்களின் அவலத்தை அவர்களிடத்திலிருந்தே சொட்டுச் சொட்டாக மொழிகிறது “இறுதிச் சொட்டு.”பொதுவெளியில், பிரயாணத்தின் போது என பெண்கள் படும் அவஸ்தைகள் ஆண்கள் போல இயல்பாக எவ்விடத்திலும் சிறுநீர் கழிக்கவியலா தருணங்கள் உடல் உபாதைகள் ஆடைகள் சரிசெய்யவியலாத பரிதாபம் என பெண்களின் தவிப்புகள் அவரிடத்திலிருந்தே பேசுகிறது கதை. இது கதையாக மட்டுமே வாசித்துக் கடத்தி விடுவதல்ல, ஒவ்வொரு பெண்ணின் மனதிற்குள் காலம் தொட்டு புழுங்கிக் கிடக்கும் உளக்குமுறலை உடலியல்பை வெளிப்படுத்தவியலாத தருணங்களின் கையாலாகாதத்தனத்தை மன அங்கலாய்ப்பைப் பெண்களின் உணர்வு சார்ந்த உடல் சார்ந்த குரலாக ஒலிக்கிறது ஆசிரியரின் படைப்பின் குரல்.

காலம் காலமாக நமது சமூகத்தில் ஸ்திரமாக இருப்பது பெண்களின் தாயகம் மற்றும் புக்ககம் இரண்டிற்கும் இடையேயான குடும்ப உறவுப் பாலம். இதில் சர்ச்சைகளும் பூசல்களும் என்பவை இயல்பு. விட்டுக் கொடுத்தலும் துடைத்துச் செல்வதுமே இயைபு என்பதை அப்போது நமது முன்னோர் வாழ்ந்துக் காட்டி நிரூபித்துள்ளனர் இன்றைய குடும்பங்களில் புக்கத்தாரும் சரி புது மகளும் சரி நீயா நானா என்கிற போட்டி மனப்பான்மையே மேலோங்கி இருக்கிறது. ஒருவரையொருவர் குற்றம் கூறியும் குறை பேசியும் வாழ்ந்து வரும் சமூகமாக இன்றைய மாமியார் மருமகள் பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.மறுத்தலும் மறுத்தலித்தலுமே ஓங்கி நிற்பதைக் கதைக்கிறது “ஆரஞ்சு பழங்களும் ஹார்லிக்ஸ் பாட்டிலும்” கதை. பெண்களும் தமது பெற்றோரைக் கவனிப்பது போல புக்கத்தாரையும் போற்ற வேண்டும் என்பதே கதை நமக்கு உணர்த்துகிறது.அதே சமயம் மகளைப் போலவே மருமகளையும் கொண்டாட வேண்டும் பெற்றோர்.அப்போதே குடும்பம் என்கின்ற சமூகம் சமன்படும் என்பதே கதையின் தாத்பரியம்.

சுற்றங்களின் அருமையை சுட்டிக்காட்டுமொரு படைப்பாக அடுத்த கதை.
சுற்றத்தாரின் உரிமை மிகுந்த உள்ளார்ந்த அன்பை உதவும் கரங்களைப் புடம் போட்டுக் காட்டும் படைப்பாகத் “தவறிய கணிப்பு” கதை. குடும்ப உறவு என்பது ஒரு புறம் இருந்தாலும் உதவி என்ற அழைத்தக் குரலுக்கு உடன் ஓடோடி வருவது நம் அக்கம் பக்கத்து உறவுகளே. ஆனால் இன்றைய நகர்ப்புற அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மத்தியில் வாழ்பவர் தமது இல்லத்தைத் திராபகக் கதவுகளைக் கொண்டு அடைத்துத் தம்மைச் சுற்றி எது நடந்தாலும் அது தமக்கொவ்வாததாகக் கண்டும் காணாமலும் வாழ்ந்து வருவதே இன்றைய நகர வாழ்க்கை என்னும் நரக வாழ்க்கை என்பதைத் திட்டவட்டபாக விளக்குகிறது கதை.அதற்கான காரணியாகக் கதை முன்வைப்பது சடகோபன் போன்ற மனிதர்களின் முன் முடிவுகளும் சுற்றத்தைப் பற்றிய தவறான கணிப்புகளுமே. அதே வேளை கவிதா போன்ற சுற்றத்தினருடனான நல்லிணக்கம் கொண்ட உறவுகளும் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை ஆசிரியர். உதவி என்ற எதிர்வீட்டுக் குரல் ஒலிக்க ஓடிச் சென்று உதவிய மாண்பைக் கொண்ட பாத்திரமாக கவிதாவின் பாத்திரம் நம் அன்றாட வாழ்வின் தரிசனம். நித்தம் நாம் பழகும் சாதாரண பக்கத்து வீடு எதிர்வீட்டு மனிதர்களைக் காட்சிப்படுத்துகிறது கதை. உண்மையில் இந்தக் கதை ஒவ்வொரு நகர்புறவாசிகள் அன்றாடம் எதிர்கொள்ளூம் அனுபவ செறிவே.

தொகுப்பில் பெருவாரியான கதைகள் வாசக ஈர்ப்பை சமூகத்திற்கான பாடத்தை சமகாலப் பிரச்சனையைப் பேசும் படைப்புகளாக இருப்பினும் ஒரு சில படைப்புகளின் இறுதிக்காட்சிகள் மற்றும் இடையில் கருவின் நகர்தல் சற்றே ஒப்புமையின்றி இருப்பதாக எனக்கு தோன்றியது.அதில் குறிப்பிடும்படியாக “அமுதா ஒரு..” கதை சிறு பிள்ளையாய் அமுதா பிராயகுதூகலத்தில் கொண்டாடியும் மகிழ்ந்தும் அதேசமயம் முதிர்ந்த மனநிலைக் கொண்ட பெண்பிள்ளையாகப் பெற்ற மகளையே பெண்டாள நினைக்கும் தகப்பனின் கீழ்தரச் செயலில் உடைந்துப் போகிறாள் எதிர்த்தும் போராடுகிறாள். தகப்பனின் எல்லை மீறிய மொழியிலும் செயலிலும் தற்கொலை வரை தமது எண்ணத்தில் அடர்த்தியாக நின்று சாதித்தும் விடுகிறாள். ஆனால் இறுதியில் தகப்பனின் அட்டூழியங்களை நீண்ட மனபோராட்டங்களுக்குப் பின் போலீஸிடம் வெளிப்படுத்திவிட்டு மரணிக்கிறாள். அமுதாவின் வாக்குமூலத்தை ஏற்க முடியாமல் ஆத்திரப்படும் அவளது தாய், அமுதாவின் இறப்பிற்கு பின் அவளைத் தூற்றுவதாகக் கதையைச் சித்தரித்துள்ளது சற்றே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. சிறுபிள்ளையாக அமுதாவின் முதிர்ச்சியைப் பாராட்டிய ஆசிரியர் பழைய சடங்குகளில் ஊறிய பெண்ணாகக் கணவனின் கேடுகெட்ட செயலை ஆமோதிக்கும் விதமாக அவளது தாயின் கதாபாத்திரம் கதைக்கு உவப்பானதாக இல்லை என்பதே எனது கருத்து. இறுதியில் அமுதாவின் மரணத்திற்குப் பிறகு அவளை சபிக்கும் தாயாக அமுதாவின் அம்மாவைக் காட்டியுள்ளது ஒரு தாய்மையை இழிவுபடுத்தும் விதமாகத் தெரிகிறது.

அடுத்ததாக “ஏலம்” கதை புனைவுக்காக மாறுபட்ட கண்ணோட்டத்தில் வாசகர் ஏற்புடையதாக இருந்தாலும் ஆசிரியப்பணியைக் களங்கப்படுத்தும் விதமாக ஏலம் விடுவதாகப் புனைந்துள்ளது கதையின் தொய்வைச் சற்றே வெளிப்படுத்துகிறது. ஊழல் எங்கு நடந்தாலும் எதிர்குரல் முதலில் ஒரு எழுத்தாளனிடத்திலிருந்தே ஒலிக்க வேண்டும். ஆனால் ஆசிரியர் இந்தப் போக்கை எதிர்க்காமல் கதையை முடிந்திருந்தது அத்துனை இதமாக இல்லை‌.நான் அறிந்த வரை ஆசிரியர் பணி பணத்தை முன்வைத்து ஏலம் விடுவதாக கேள்விப்பட்டதில்லை. கல்வி திறமை அறிவு பிள்ளைகளுடனான இணக்கம் பிள்ளைகளின் உளவியலை நேர்த்தியாகக் கையாள்வது இதுவே ஆசிரியர் பணிக்கான தகுதி என்பதே சரியான முறை. புனைவுக்காகக் கூட இப்படியாக ஆசிரியசமூகத்தை இழிவுப்படுத்தும் விதத்தில் படைப்பாக்காயுள்ளது நெருடலை ஏற்படுத்துகிறது. அப்படியே ஏதோவொரு மூலையில் அப்படியாக இயங்கும் அரசுசார்புப் பள்ளிகள் இவ்வாறாகச் செயல்பட்டாலும் அதைப் பொதுவெளியில் இலக்கியப்பரப்பில் வெளியிடுவது பிற அரசு சார்புப் பள்ளிகளுக்கு ஒத்திசைவாக இருந்துவிடக்கூடும். இயல்பான குற்றமாகத் தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்வர்.தொடர்ந்து இவ்வாறான இழிவு காரியங்களைச் சற்றும் குற்றவுணர்வின்றி மேத்தகு ஆசிரியப் பணியை ஏலம் விடும் பணியைத் தொடர்வர் என்பது என் புரிதல். ஆசிரியர் இலக்கணத்தையே மாற்றுவது போன்ற இறுதிப் பார்வை சற்றே ஏமாற்றத்தை வழங்குகிறது‌.

காதல் திருமணம் என்றால் இன்றும் குடும்பத்தில் வெறுப்பு ஆட்சியமனைகள் உதிர்த்த வண்ணமிருப்பர் பெற்றோர். விழைமேவிய பெண்ணையோ ஆணையோ பிள்ளைகள் மணக்க தமது விருப்பத்தை முன்வைக்கும் தருணம் பெற்றோர் முட்டுக்கட்டையாக முன் நிற்பர். எதிர்ப்பலைகள் ஓயாது வீசிக்கொண்டிருக்கும். வெகு நேரம் வெறும் அதிர்வுகளாக.. கணநேரம் எளிதான சண்டை சச்சரவுகள் என தொடர்ந்து பரிணமிக்கும் இப்பிரச்சனை பல சமயங்களில் குடும்பத்தில் உயிரைக் கூட காவு வாங்கும் என்பதையே தங்கம்மா கதாபாத்திரம் உயிர்த்துறந்து சொல்லிவிட்டு செல்கிறது “ஆத்தா சீருண்டு” கதையில். மகனின் ஆசையைப் மறுத்தலிக்கும் தங்கம்மா மகள்களுக்கான உவப்பான தாயாக இருக்கிறாள். தமது தாலிக் கொடியின் ஒரு பிரிவில் மகள்களுக்காகத் தங்க வளையல்களைச் செய்த தங்கம்மா மகனை பற்றிய சிறு பட்சாதாபமுமின்றி முற்றிலுமாக ஒதுக்கி வைத்தது தாய்மையில் ஒருவித பாரபட்ச மனோபாவத்தை வெளிப்படுவதாகக் காட்டுகிறது. சமூகத்தில் தாய்மையை இவ்வாறாக சித்தரிப்ப

நூல் அறிமுகம்: சக. முத்துக்கண்ணனின் ’ரெட் இங்க்’ – து.பா. பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: சக. முத்துக்கண்ணனின் ’ரெட் இங்க்’ – து.பா. பரமேஸ்வரி




நூல் : ரெட் இங்க்
ஆசிரியர் : சக. முத்துக்கண்ணன்
விலை : ரூ.₹95
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

பிள்ளைகளின் குதூகலத்தில் கொண்டாடி மகிழவும் அவர்களின் மனரீதியான அழுத்தங்களுக்காகச் செவிசாய்க்கவும் குழந்தைகளோடு குழந்தையாக பின்னிப்பிணைந்து ஒட்டி உறவாடவும் உள்ளார்ந்த பிணக்குகளைக் களையவும் என மழலை உலகின் மற்றுமொரு இனிய உறவாக அவர்களின் மனதில் உயர் மணி மகுடம் சூடி நிற்கும் மாண்பு ஆசிரியர் பெருமக்களையே சாரும். அதிலும் ஒரு தேர்ந்த பக்குவம் கொண்ட ஆசிரியர் ஒருவர்போதும், பள்ளி என்னும் நந்தவனத்தை மலர்களால் பூத்துக் குலுங்கச் செய்யதிட. உறவுகள் ஆயிரம் இருந்த போதிலும் பிள்ளைகளின் மானசீக நாயகர்களாக முன்மாதிரியாக இலக்காக எப்போதும் இருப்பது ஒரு ஆசிரியர் மட்டுமே. அனைத்து உறவுகளாகவும் ஒரு ஆசிரியர் பிள்ளைகளுக்குள் வாழ்ந்து விட முடியும் என்பதே உண்மை. ஆதலால் மட்டுமே ஆசிரியர் என்கிற உன்னத உறவை செகண்ட் மதர் ஆஃப் த சைல்டு second mother of the child. என்று வழங்கி வருகின்றனர். தாய்மையின் பேரூற்றை ஆசிரியரின் அரவணைப்பில் ஒரு பிள்ளை நிச்சயம் நீந்திக் களைப்பார முடியும்.தலைசிறந்த ஆசிரியர்களால் மட்டுமே பார்போற்றும் ஆகச் சிறந்த குடிமக்களை ஒரு தேசத்திற்கு உருவாக்கி வழங்கிட முடியும். பெற்றோர் கைவிடுத்து உறவுகள் புறக்கணித்து சுற்றம் ஒதுக்கி வைத்து நிலைக்குலைந்து நிற்கும் ஒரு பிள்ளையை அன்பான பாசமான ஆசிரியரால் இறுகப்பற்றி நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு உயரிய எதிர்காலத்தை நோக்கி கொண்டுச் சேர்த்திட முடியும். என்கிற ஒட்டு மொத்த ஆசிரியர் நல்லுள்ளங்களின் சார்பாக தோழர் முத்துக்கண்ணன் “ரெட் இங்க்” வழியே அனைத்து பிள்ளைகளுக்கும் நன்னடத்தை சான்றிதழில் கையொப்பமிட்டு வழங்குகிறார்.

ரெட் இங்க் இரண்டு வெவ்வேறு காலங்களை என் நினைவிற்குள் கொண்டு வருகிறது. ஒன்று என் மாணவப் பருவத்தை மீட்டுருவாக்கம் செய்யவும், அதே வேளை நிகழ்கால ஆசிரியர் பணியின் அனுபவங்களைப் பக்கங்கள் வழியே கடத்தியும் செல்கிறது.

த மு எ க ச வின் போடி பாலன் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசுப் பெற்ற முதல் அத்தியாயம் “அவனே சொல்லட்டும்” முருகேசுவின் விளங்காத காலுக்கு ஆசிரியர் தந்தையின் இடத்தைத் தனதாக்கிக் கொண்டு எண்ணை போட்டு நீவிவிடும் போது ஒரு ஆசிரியராக மட்டும் இருந்திடாது தந்தைமையின் முழுமையாகவே தெரிகிறார். இன்றும் கிராமப்புறங்களில் ஒரு ஆசிரியருக்கு வழங்கப்படும் மரியாதையில் ஒருபோதும் குறைவிருக்காது. நகரத்து வாழ்வில் காணக் கிடைக்காத ஒன்று மதிப்பும் மரியாதையும். அது ஆசிரியர்களுக்கே உரித்தானது. பூர்வ குடி மக்களின் இயல்பு அதிலும் நம் ஆசிரியர் முத்துக்கண்ணன் போன்ற ஆகச் சிறந்த ஆசிரியர் அந்த ஊருக்கு மட்டுமே வாய்த்த அருமையான ஆசிரியர் என்று சிலாகிக்கலாம்.

திறமையும் அறிவும் இருந்தும் கூட பல நேரங்களில் வாய்ப்பும் சூழலும் தட்டிவிடும் என்பதை ஆசிரியர் தகுதித் தேர்வின் போது உடன் தேர்வு எழுதிய சகதோழன் அறிவிலும் தமிழிலும் மேம்பட்ட குமரேசன் பற்றிய “வாத்தியார்கள் தினம்” அத்தியாயத்தில் உருக்கமாக கூறியுள்ளது ஒரு ஆசிரியராக குமரேசனின் இழப்பையும் தமது தேர்ச்சிக்குப் பின்பாக நண்பனை சந்திக்கவும் பேசவும் விசனப்படும் ஆசிரியரின் மனநிலையும் உணர முடிகிறது. தனியார் பள்ளியில் வேலைக்கு போக மறுக்கும் குமரேசன், தந்தையின் பெயிண்டிங் வேலையைத் தனதாகிக் கொண்ட அந்த முடிவு என்னை நெகிழ்த்தியது.

தொடரும் காலங்கள் நண்பனை சந்தித்திர முடியாத சங்கடங்கள் அடுத்த தேர்விலும் மீண்டும் தோல்வி என ஒரு சிறந்த அறிவார்ந்த ஆசிரியரை மாணவச் சமூகம் இழந்தது ஆசிரியருடன் எங்களுக்கும் பெரும் வருத்தம்.

தொடரும் அத்தியாயம் “கீச் கீச்..” எனை வெகுவாக ஈர்த்தும் ரசிக்க வைத்தும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த ஒரு அத்தியாயம் என்று சொல்லலாம். காரணம் ஒரு ஆசிரியராக இதில் எனக்கும் அனுபவம் உண்டு மலரும் நினைவுகளாய் .சில ஆண்டுகள் முன் என் பிள்ளைகளின் சேட்டைகள் கூடிய கட்டத்தில் பள்ளியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இன்றும் மறக்க முடியாது அந்த தருணங்களை.
கோழிக்குஞ்சுகளுக்காக பாடப் புத்தகங்களை எடைக்குப் போட்ட பிள்ளைமை சேட்டை தைரியமும் ஒருவித துணிச்சலும் பாம்பிற்கும் அஞ்சாத பிள்ளைகளின் இயல்பை நமக்கு உணர்த்துகிறது.

“நாலஞ்சு பேர் தமிழ் புஸ்தகத்தையும் போட்ருக்கானுங்க சார்.நோட்ஸ் இருந்ததால போதும்ன்னு விட்டேன்.”
என்கிற தமிழ் ஐயா போன்ற நல்ல ஆசிரியரும் தேவையற்ற விஷயத்தில் தலையிடாது பிள்ளைகளின் நலன் மட்டுமே அக்கறை காட்டும் கணக்கு டீச்சரும் இதே ஆசிரியர் சமூகத்தை உயர்த்தியும் பிள்ளைகளின் மனதில் உயர்ந்தும் மனிதத்தில் சிறந்தும் வாழ்கின்றனர் என்பதை ஆசிரியர் முத்துக்கண்ணன் சுட்டிக் காட்டுகிறார். விரல் விட்டு என்னும் அளவீடுகளிலேயே உன்னதங்கள் உண்டு என்பதும் ஒரு புறம் இருந்தும் இதே நல்லுள்ளங்கள் இந்த ஒரு சில ஆசிரியர்களுடன் நின்றுவிடவில்லை ஆசிரியர் முத்து கண்ணனின் பார்வையில் தொடர்கின்றன மேலும் சில தாயுள்ளங்கள் என்பதை அத்தியாயங்கள் மேடையேற்றுகின்றன.

“நைட் இவ்ளோ நடந்திருக்கு அவன் ஏன் ஸ்கூலுக்கு ஓடி வரனும்..”
என்கிற பாமா டீச்சரின் உளவெதும்பல் கேள்விகளாக “டிராப் அவுட்” அத்தியாயம்.. பத்து வயதே நிரம்பிய கார்த்தியின் உளவியலை சற்றே துணுக்காக உணர்ந்து மறுபடி மறுபடி புலம்பிய அந்த சம்பவத்தை ஆசிரியர் எழுதியுள்ளது பெற்றோர்களாலும் உறவுகளாலும் சமூகத்தாலும் நெருக்கமானவர்களாலும் கூட உணர முடியாத ஒரு பிள்ளையின் ஊமை மொழி வீட்டில் கிடைக்காத நிம்மதியும் அமைதியும் அன்பும் அங்கு அவனை பேரச்சத்தில் இருள் சூழ்ந்த கானகத்தில் தனித்து விடப்பட்ட அந்த இரவுகளில் இருந்து தன்னை மீட்க பள்ளிக்கு ஓடி வந்து தஞ்சம் புகுந்தது அந்தப் பிள்ளை தேடி வந்த பாதுகாப்பும் அரவணைப்புமே என்பதை நமக்குப் புலப்பட வெகு நேரம் பிடித்தது. சமூகத்தில் நாம் ஆராய்ந்தோமானால் ஒவ்வொரு பிள்ளையின் வாழ்க்கை சூழலும் குடும்ப பின்புலமும் ஒரு போல இருப்பதில்லை. பல்வேறு மனக்கசப்புகளைத் தாண்டியே அவர்களின் பள்ளிக்கூட பிணைப்பு.இதை எத்தனை ஆசிரியர் உணர்ந்திருப்பர். படிக்க முடியாமலும் படிப்பில் கவனம் செலுத்த இயலாமலும் பள்ளிக்கு வர தடைகள் என வெளிப்படுத்த முடியாத மர்ம தேசத்திலிருந்து பள்ளிக்கு வரும் அவர்களை எத்தனை ஆசிரியர்கள் அரவணைத்துப் புதைந்து கிடக்கும் மனதின் மர்மங்களைத் தாய்மையாலும் அன்பாலும் வெளிக் கொணரும் வல்லமை பெற்றிருப்பர். இந்தப் பேராற்றல் நம் நூலாசிரியருக்கும் பாமா டீச்சர் போன்ற இன்னும் அத்தியாயங்களில் உலவிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கும் இயல்பில் அமையப்பெற்றது பிள்ளைகளின் பாக்கியம். இவர்கள் இப்படியான பிள்ளைகளுக்கும் பள்ளிக்கும் வாய்த்த மகான்கள்.

கார்த்தி மட்டுமல்ல “மே ஐ கம் இன் சார்” அத்தியாயத்தில் வரும் மாரி, எல்லா வசதியும் வாய்ப்பும் வழங்கப்பட்ட பிள்ளைகள் மத்தியில் இப்படியான சூழல்களால் புறக்கணிக்கப்பட்ட பிள்ளைகளையும் அடையாளம் காட்டுகிறது நூல். எட்டாவது படிக்கும் மாரி குடும்பத்தைக் கட்டி காத்துத் தம்பியை அரவணைத்து சத்துணவில் தரப்படும் முட்டையை தம்பிக்காகப் பத்திரப்படுத்தி உணவு அருந்தும் டப்பாவில் கொண்டு செல்லும் தமக்கை, தகப்பனுக்குத் தாய் போல் பொறுப்பாக உணவு சமைத்து வழங்கும் மகள், இதற்கிடையில் பள்ளியையும் பாடத்தையும் டெஸ்ட்களையும் வீட்டுப்பாடத்தையும் நிறைவேற்றி வருவது என்பது எத்தனை சிரமம். எத்தனை ஆசிரியர் உணர்ந்திருப்பர் மாரி போன்ற குழந்தைகளின் குடும்ப சூழல். அவர்களை அடித்தும் துன்புறுத்தியும் காயப்படுத்தியும் வீட்டில் மட்டுமல்ல வகுப்பறையிலுமே இப்படியான பிள்ளைகளின் போர்க்களம். நித்தம் நித்தம் அச்சத்தையும் நடுக்கத்தையும் உள்ளங்கை வேர்வையில் ஆசுவாசப்படுத்தும் இவர்களின் அன்றாடம் கண்ணீர்க் காதை. பிள்ளைகளின் கனவுகளுக்கும் வீட்டின் யதார்த்தத்திற்கும் இடையே பெரும் பள்ளம் உண்டு. இணைக்கவும் சமன்படுத்தவும் பெரும் மெனக்கிடல் தேவைப்படுகிறது.

“நீலப்பந்து” அத்தியாயத்தில் மு ராசாவும் பள்ளி வீடு என்கிற சமூக கட்டமைப்பில் வஞ்சிக்கப்பட்டு உயிரிழக்கிறான். எல்லா பிள்ளைகளும் அவர்களின் குணங்களும் அறிவுத்திறனும் ஒரு போல இராது என்பதை படிப்பறிவற்ற பெற்றோர் சமூகம் உணர மறுத்தாலும் தேர்ந்த அறிவுடைய ஆசிரியர் பெருமக்களும் மதிப்பெண், தேர்ச்சி விகிதம், சராசரி, முதல் மதிப்பெண் என கல்வி அறிவு தராசை முன்னிறுத்தியே தேர்வு சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை இறுக்கமாக பற்றிருப்பதன் காரணமாக மு.ராசா போன்ற பிள்ளைகள் கல்வியின் மீதும் பள்ளியின் மீது ஒருவித வெறுமையும் காழ்ப்புணர்ச்சிக்கும் ஆளாகி எதிர்காலத்தில் போக்கிரிகளாகவோ அல்லது வாழ்வையே தொலைத்த நடைப்பிணமாகவோ வாழ்கின்றனர் என்பதை இன்றும் சமூக வெளியில் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

“ஸ்கூலுக்கு போயிருந்தா உசுரோடயாவது இருந்திருப்பியே… ஏய்யா இப்படி ஒன்ன பெயிலாக்கி கொன்னு போட்டாய்ங்களே… யெய்யா..”
நான்காம் வகுப்பில் பெயிலாகிய மு ராசாவை அடித்துப் பள்ளியை விட்டு நிறுத்திய பெற்றோர் அவனைத் தேர்வில் பைலாக்கிய ஆசிரியரும் பள்ளியும் என படிப்பைப் பாதியில் நிறுத்திய அவன் தந்தை என அவனின் மரணத்திற்கு இத்தனை பேர் காரியதர்சிகளாகி நிற்கின்றனர்.

பதின்ம பருவத்தில் மனரீதியான மற்றும் உடல் ரீதியான மாற்றங்களைச் செவ்வனே வெளிப்படுத்தும் பகுதியாக மலரும் நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்கிறது “பரு”. பக்கங்களை வாசித்தேன் என்று மேலோட்டமாகக் கூறிப் புத்தகத்தை மூடி விடுவதை விட வாழ்ந்தேன் நினைத்தேன் நனைந்தேன் என நினைவு போர்வைக்குள் உறங்கிடலாம். நினைவு கூடாரத்தின் மாதுரியம் இந்தப் பகுதி. மெர்லின் வருவதற்கு முன் மெர்லின் வருவதற்குப்பின் என பதின்ம வயது பருவ அதிர்வை கூடுதலாகவே சிலாகித்து எழுதியிருப்பது நினைவுகளை பள்ளிப்பருவத்தில் கடத்திச் சென்றது. சகபாலின ஈர்ப்பு என்பது பாலியல் பருவம் தொட்டு வயோதிக காலம் வரையிலும் அதிர்வை சிறிதேனும் ஏற்படுத்தும் என்பதே உடல் ரீதியான புரிதல் .அதிலும் பதின்மத்தை அப்போதே தொட்ட இரு பாலருக்கும் ஒருவித ஈர்ப்பு விசைக்குள் சிக்காது பருவத்தை கடத்திட முடியாது .அதிலும் ஒரு அழகிய மலராக வகுப்பிற்குள் உலா வரும் மெர்லின் போன்ற பெண் பிள்ளையை ஆண்பிள்ளைகள் அவள் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் செயல்படும் ஒவ்வொன்றும் சரித்திர சம்பவங்களே.. வாழ்வில் மறக்கவியலா நினைவுச் சின்னங்களே. தமக்குள் ஒளிந்திருக்கும் ஆகப்பெறும் திறமைகள் வெளிப்படும். அகமதும் அப்படித்தான். மெர்லின் முன் தன் மேதகுத் திறமைகளை அவளின் ஒற்றை பார்வைக்காக விஸ்தாரப்படுத்தினான். முகத்தில் பரு தோன்றுவது என்பது ஒருவித உடலில் ஏற்படும் பருவகால ரசாயன மாற்றம் என்பதே நிதர்சனம். ஆனால் வெகுவாக பருதோன்றுவதை பற்றிய பொத்தாம் பொசிலித்தனமான கருத்து என்பது இந்தப் பருவத்தில் ஏற்படும் எதிர்ப்பாலின ஈர்ப்பினால் மனதில் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கால். உடலில் பருவாக வெளிப்படுகிறது என்பதும் அதற்கான தீர்வாக கிராமப்புறங்களில் பல வட்டார நம்பிக்கைகளும் உண்டு.என்பதை அத்தியாயத்தில் வெகு சிறப்பாக ஆசிரியர் தமது பருவ கால நினைவுகளை கொண்டாட்டத்துடன் இறக்கியுள்ளது சிறப்பு.

ஒருசில மனித உளவியல் சிக்கல் ஆசிரியர்களுக்கு உண்டு. இது மனித உளவியல் சிக்கல் என்பதைவிட ஆசிரிய மனோநிலைச் சிக்கல் என்பதே சரி .இதை நானும் எனது பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்களிடம் உணர்ந்துள்ளேன். மாணவர்களை குழந்தைகளாகவே கண்டு கொஞ்சிய ஆசிரியர்களுக்கு திடீரென பருவ வயதின் உடல் மாற்றம் அழகு செகிழ்ச்சி அந்த பருவத்திற்கே உரிய பிள்ளைகளின் மனமாற்றம் தமக்கு வழங்கப்பட்ட அழகிய தோற்றத்தைத் தக்க வைக்க சற்றே கூடுதல் மெனக்கிடலின் பொருட்டு மெருகேற்றும் செயலால் எரிச்சல் ஏற்படுத்துகிறது ஆசிரியர்களுக்கு. பிள்ளைகளின் நடத்தையில் கூட சில நேரம் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பர். ஆசிரியர்களுக்கு அவர்களின் பார்வைக்குள் ஒரு கடுப்பு தென்படுகிறது. படிப்பிலும் அனைத்திலும் சூட்டிகையான ஜெயந்தி பருவ வயதை அடைந்து தோற்றத்தில் பளபளப்பு கூட ராசாத்தி டீச்சர்..

“இனி இப்படி மினிக்கிட்டு வரக்கூடாது..”” என்ற கருக்கான வார்த்தை ஒரு வளரும் பிள்ளையின் மனநிலையை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதை உணர மறுக்கும் ஆசிரியர் சமூகம். தமது உடல் மாற்றத்தையும் பருவ வளர்ச்சியையும் எட்டிய கணத்தை வெறுத்தும் தமது தோற்றப் பொலிவை அருவருப்புடன் புறக்கணிக்கும் பெண் பிள்ளையின் சோர்வுற்ற மனதை வரிகளில் வழியே எடுத்துக்காட்டியுள்ளார் ஆசிரியர்.
ஒரு கணம் என் பள்ளிப்பருவ நாட்களின் நினைவுகள் ஆட்கொள்ள அப்பட்டத்தை எழுத்தில் உணர்ந்தேன். அதே வேளை சோர்ந்து போன ஜெயந்தியை தலைமை ஆசிரியர்…

“என்ன ஜெயந்தி டீச்சர் நீங்க என்ன சொல்றீங்க…”

என செல்லமாக சிலாகிக்க ஜெயந்திக்குத் தன்னை டீச்சர் என்று அழைத்ததில் பெரும் குதூகலம். ஒரு வலியை சமன்படுத்த வேறொரு வாழ்த்து வழங்கி சிறப்பிக்கும் பிள்ளைக்கேயான சமன்படுத்துதல் விதி நமக்கான நிரூபனம்‌. அந்த பிஞ்சு மனதின் ஆறுதல் வாசிக்கும் எனக்கு ஒரு ஆசுவாசம்.

வேறுபட்ட சூழலிலிருந்து பெரும் மன உளைச்சலிலிருந்தும் வரும் பிள்ளைகளைப் பற்றிய மற்றொரு சரிதையை ரெட் இங்க் வெளிப்படுத்துகிறது‌‌.

ஜீவிதா- தந்தையின் குரூரத்தால் அழுதும் புரண்டும் வாழ்ந்தும் அதில் படித்தும் பத்தாவது இறுதி தேர்வில் பள்ளியில் இரண்டாம் இடத்தை பிடித்தும் துயரங்களுக்கு மத்தியில் வாழ சுவைக்கப் பழகிய அவளைப் போன்ற பிள்ளைகளுக்கான பெரும் ஆதரவாக தேன்மொழி டீச்சர் மற்றும் பன்னீர் சார்.

“டிராப் அவுட்* பாமா டீச்சர் போல தேன்மொழி டீச்சரும் பிள்ளைகளின் வாழ்வியல் பின்புலத்தை அறிந்து அதற்கு ஏற்ப அரவணைத்தும் ஆறுதல் வழங்கியும் ஆசிரியர்கள் என்கின்ற தமது பொறுப்பில் அடாது நின்றனர். இப்படியான மாந்தர்களையும் பேசுகிறது ரெட்இங்க். இவர்களே தேசத்தின் சமூகத்தின் எதிர்காலச் சிற்பங்களைச் சிதிலமடைய விடாமல் உயர்த்திப் பிடிக்கின்றனர்.

இந்த தொகுப்பில் ஆக சிறந்த வரிகள் என்று நான் பெருமிதத்துடன் ஆசிரியர் முத்துக்கண்ணனைச் சிலாகித்துப் பாராட்டும் வரிகளில் இதுவும் ஒன்று.. உறவுகளின் மேத்தகு நிலை..

“அதென்னக்கா சார் ஒங்கள்ட்ட பேசும் போது மட்டும் தோழர் தோழர்ன்னு பேசுறார்.”
தோழர்னா என்ன அர்த்தம்?

ஃப்ரெண்டு..
அவ்ளோதான்
அப்ப நானும் அப்படியே கூப்டவா?
பிடிச்சிருந்தா கூப்டு..”
” வெள்ளைப் பூக்கள்” மனநிலை குன்றிய தாச்சிக்கு தினம் ஐந்து ரூபாய் முறையாக எடுத்து வைக்கும், அவளை ஏளனம் செய்தும் இழிவுப் படுத்தியும் பேசும் சமூகக் கூட்டத்தை புறக்கணிக்கவும் தமது எதிர்ப்பை தெரிவிக்கக் குடித்துக் கொண்டிருந்த தேனீர் குவளையை பாதியிலேயே வைத்து விட்டு வீடு திரும்பும் ஆசிரியர் முத்துக்கண்ணன் மாண்புதனை போற்றத் தொகுப்பு முழுதும் ஏராளமான சாட்சிகள்.
ஆசிரியப் பணியில் நெளிவு சுளிவு ஏற்றத்தாழ்வு இண்டு இடுக்கு நல்லவை கெட்டவை என அனைத்து தரப்பிலும் ஒரு தேர்ந்த ஆசிரியரால் மட்டுமே தீர்க்கமாகக் கண்டறிய முடியும் என்பதை ஆசிரியர் முத்துக்கண்ணன் தமது இந்த நூலின் வழியே திறம்பட எடுத்துரைத்துள்ளார். தொகுப்பு முழுதும் வளமான மொழி என்பதை விட எளிமையான கதையாடல் என்றே கூறலாம். ஆசிரியர் தாம் கடந்த சாதித்த தேர்ந்த நிகழ்வுகளைத் தமது பள்ளிப் பருவம் கொண்டு ஆசிரியர் பணி வரையிலான பாதித்த அனைத்து சம்பவங்களையும் ஒரு கதாசிரியராக இல்லாமல் தோழராக வாசகரிடம் பகிர்ந்துள்ளார் என்பதே நிதர்சனம்.ஒவ்வொரு நிகழ்வுகளுக்குள்ளும் ஆசிரியரின் உணர்வுகள் உடைப்படும் போது வெளிப்படும் மொழியாகவே நூலின் மொழி தெரிகிறது.

வகுப்பறை விதி கட்டுப்பாடு என்னும் இறுக்கங்கள் ஏற்படும் போது உடைத்தெறிந்து விதிவிலக்கு நடத்தப்படும் என்பதை..
“அவங்கவங்ளுக்கு ஒரு கதவு இல்லாமல் இல்லை..”
என்கிற வரிகள் வசப்படுத்துகின்றன.

ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு என்பது பெரிதாக அலட்டிக் கொள்ளும் காட்சிகள் அல்ல. எள்ளலற்ற ஒரு நையாண்டித்தனத்தையே உரையாடல்களில் வெளிப்படுத்துதல் ஒருவித துள்ளலற்ற சீண்டல்களாகவே நமக்கு மகிழ்ச்சியை வழங்குகிறது.

“பேப்பர் கட்டு போட்டீங்ளா டீச்சர்..? இல்ல காசு கொடுத்தா..?”
இனது 9 பி கணக்கு டீச்சரை ஆசிரியர் நையாண்டியாக கோழிக்குஞ்சுக்காக கேலி செய்வது சிறப்பு.

எத்தனை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள் பிள்ளைகளின் திறமைகளை. அவர்களுக்கு பின்புலமாக இருக்கிறார்கள்… பன்னீர் சார் போன்ற நல்லுள்ளங்கள் படைத்த ஆசிரியர் இருந்தால் உயரம் பறந்தாலும் உச்சத்தையும் தொட்டிட முடியும்.
“நாங்கள் இருக்கிறோம் உயரப் பற..”

நல்லுள்ளங் கொண்ட ஆசிரியர்களின் இதயத்தின் உறுதிக்கான மொழி. இப்படித்தானே இருக்க வேண்டும். இதுதானே பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் அச்சத்தைப் போக்கி சாதனையை நோக்கிய இலக்கைத் தொட உதவும்.

வகுப்பறை என்பது பிள்ளைகளின் மன இறுக்கமாக இருக்கக் கூடாது. உயிருள்ள கலைக்கூடமாக இருக்க வேண்டும்.
“செத்த வகுப்பறை மெல்ல உயிர் பிடித்திருந்தது..”

இப்படி இப்படி என சிலாகித்தும் கொண்டாடியும் சிநேகித்தும் அடிகோலிட்டு எடுத்துச் சொல்ல ஆயிரமாயிரம் உள்ளன பக்கங்களின் புரட்டல்களில் .வாசித்தோம் என்று சொல்லிவிட்டுப் புத்தகத்தை மூடி விடுவதை விட ஒவ்வொரு நிகழ்வுகளுக்குள்ளும் நெருக்கமான இருத்தல் கொண்டோம் என்பதே சரியாக இருக்கும் .அதைவிட ஆசிரியர் ஒவ்வொரு நிகழ்வுக்குள்ளும் உடன் கரம் பற்றி காட்சிகளுக்குள் புகுத்தி சமூகத்திற்கான ஆசிரியர்களுக்கான அறிவு கண்ணை திறக்கும் பேழையாகவே இந்நூலை சமர்ப்பித்திருக்கிறார். பாமா டீச்சர் பன்னீர்சார் தேன்மொழி டீச்சர் தமிழ் ஐயா என இவர்களுடன் ஆசிரியர் முத்துக்கண்ணனும் இணைந்து ஒரு நல்ல ஆசிரியர் சமூகத்தை உருவாக்கியுள்ளார் காண்பித்துள்ளார் வாசகப் பரப்பிற்கு அடையாளம் காட்டி தானும் ஒரு சிறந்த மனிதநேயம் மிக்க ஆசிரியர் என்பதை உறுதி செய்துள்ளார்.

ஆசிரியரின் சிலேட்டுக்குச்சி நூலைத் தொடர்ந்து இந்த நூல் எனை வெகுவாகவே அணைத்துக் கொண்டும் மிக நெருக்கமான ஒரு பார்வையை பிள்ளைகள் மத்தியில் வழங்கியும் உள்ளது. வாழ்த்துக்கள் தோழர். இதுபோன்ற பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு நூல்கள் தொடர்ந்து எழுத என் வாழ்த்துகள்.
நன்றி.

– து.பா. பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: எழில் சின்னதம்பியின் கடைசி வருகை – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: எழில் சின்னதம்பியின் கடைசி வருகை – து.பா.பரமேஸ்வரி




வணக்கம்.
எப்போதும் கதை கேட்பதும் கதை சொல்வதும் கதை வாசிப்பதும் சுவாசிப்பதும் ருசிகாரமானது சுவாரஸ்யமானதும் கூட .அதிலும் கதைக்கும் கதை பேசுவதென்பது கூடுதல் பெருமிதம். இலக்கியவுலகம் பன்மொழி இலக்கியங்கள் துவங்கித் தமிழிலக்கியம் வரையிலான மாறுபட்ட பல தளங்களைத் தமக்குள் உள்ளொடுக்கி உள்ளன. அதிலும் சிறுகதைகள் இலக்கிய வரலாற்றின் வெவ்வேறு கூறுகளில் தன் தனிப்பெரும் முத்திரையைப் பதித்துக் கொண்டு தான் வருகிறது. இதற்கு காரணம் பல்கிப் பெருகி வரும் தலைசிறந்த சிறுகதை எழுத்துதாரர்கள் உலகம் முழுதிலும் ஆங்காங்கே புத்தம் புதிதாய் முளைத்துத் தத்தம் மகத்துவப் பங்கை பாங்காக இலக்கியப்பரப்பில் சமூகத்திற்காகவும் எழுத்து இறைக்கவும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர். குறிப்பாக தமிழ் சிறுகதைகள் அடைந்திருக்கும் பாய்ச்சல் வேக மாற்றங்களை விதவிதமாக எழுதத்தான் வேண்டும். போற்றிக் கொண்டாடவும் வேண்டும். அத்தனை மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது நமது தமிழ் சிறுகதைகள்.

அதிலும் குறிப்பாக மொழிபெயர்ப்புப் படைப்புகள் என்பவை தமிழில் அதிக அளவில் காணக்கிடைக்கின்றன. பல மகத்துவ மேன்மை எழுத்தாளுமைகள் உலகபிரசித்திப் பெற்ற பல்வேறு புனைவுகளைத் தம் சீர்மை மிகு எழுத்துகளில் தமிழிலக்கியத்தை அலங்கரித்துள்ளனர். உலகளாவிய புகழ் பெற்ற சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து இலக்கியவெளியிலும் வாசகப் பரப்பிலும் விரியுப்படுத்தியுள்ளனர். வங்காள மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்ந்த யாத்வஷேம், உலகமொழிகளிலிருந்து தமிழில் எழுத்தாக்கப்பட்ட இக்கிகய், மரணவீட்டின் குறிப்புகள், போரும் வாழ்வும், ரசவாதி போன்ற புனைவுகள் உலகபிரசித்தி பெற்ற படைப்புகள். ஆயிரத்தொரு இரவுகளின் ஷீராசத்தாக்கிக் கதைக்தாரர்கள் கதைகள் முன்வைக்கும் சவாலை எதிர்கொள்ள வேறு என்ன முகாந்திரம் தேவை மாய விசித்திரங்களின் புனைவுகளைப் பரிந்துரைக்க.

ஆனால் உலகளாவிய இயல்பு புனைவல்லாது மாய எதார்த்த படைப்புகள் தமிழாக்கம் செய்யப் பெற்றவை குறைவே. அந்த இடத்தைத் தமநதிந்தப் தொகுப்பால் நிறைசெய்துள்ளார் எழுத்தாளர் எழில் சின்னதம்பி அவர்கள். லத்தின் அமெரிக்க எழுத்தாளுமைகளின் உலகபிரசித்திப் பெற்ற பன்மொழிப் சிறுகதைகளைப் தம் வளமைமிகுந்த எழுத்துப் புலமையில் தேர்ந்தப் படைப்பாகத் தமிழிலக்கியத்திற்கு வழங்கியுள்ளது சிறப்பு. இப்படியான பற்பல விருதுகளும் பெரும் அங்கீகாரங்களும் உலகமக்களாலும் ஆகச்சிறந்த ஆளுமைகளாலும் இலக்கியவாதிகளாலும் பெரும் பாராட்டையும் சிறப்பையும் பெற்ற புனைவுகளைத் தேர்ந்தெடுத்து வளமான மொழியிலும் தீர்க்கமான நடையிலும் மொழிப் பெயர்த்து தமிழிலக்கியத்திலும் தமிழ் வாசிகப்பரப்பிலும் விரியுப்படுத்தி இலக்கியத்திற்கான தமது பெரும் எழுத்துக்கடமையை “கடைசி வருகை” என்கிற இந்தத் தொகுப்பின் வழியே நிறைவேற்றியுள்ளார் தொகுப்பாளர்.

ஒரு மகத்துவமிக்க எழுத்தாளனால் அதுவரைக் கண்டிராத இயல்பு மனிதர்களின் கதையுலகில் புகுத்தப்பட்ட மாய லோகத்தை இயல்பான பொதுவான அன்றாட நிகழ்வுகளிலிருந்துக் கடத்தப்பட்ட விலக்கப்பட்ட இயற்கையின் வழக்கமான வரையறைகள் விளங்கமுடியாத மாய யதார்த்த நிகழ்வுகளை ஒரு அற்புதத்தால் திருத்திக் கதைகளாகப் புனைவுகளாகப் படைத்துள்ளனர் எழுத்துதாரிகள்.

உலகளாவிய லத்தீன் அமெரிக்க எழுத்துக்கவிஞர்கள் இப்படியான கற்பனைக்கப்பாற்பட்ட மாய எதார்த்தக் கூறுகளைப் புனைவுகளாக மயக்க உலகின் பாத்திரங்களை இயல்பிற்குப் பாற்பட்ட விளிம்பில் நின்றுகொண்டு தமது புனைவுகளில் கொண்டாடியுள்ளனர்.

நம் தமிழிலக்கியமும் இதுமாதிரியான மாய. மயக்க இயல்பல்லாத மனித சிந்தனைக்கும் செயலுக்கும் அப்பாற்ப்பட்ட பல அதிசயங்களையும் விசித்திரங்களையும் புனைவுகளாக ஒளித்துள்ளது. சமகால இலக்கியவாதிகளும், தமிழறிஞர்களும்,. சங்ககாலந்தொட்டு இந்த மாதிரியான மனித சிந்தனைக்குப் பாற்பட்ட படைப்புகளைப் புனைவுகளாக இதிகாசங்களாக‌ப் படைத்து தமிழுக்கு வழங்கிச் சிறப்புச் சேர்த்துள்ளனர்.

நம் இலக்கியமல்லாத பிற மொழிப் புனைவையும் உலகபுகழ் படைப்பாளிகளின் மாய எதார்த்த கற்பனைத் திறனையும் அவர்களின் பார்வையில்‌ இப்படியான புனைவுகளையும் தமிழ்மக்கள் அறிந்திடவும் தமிழிலக்கியம் கொண்டாடவும் வேண்டி நூலாசிரியர் தேர்ந்த உலகப்புனைவுகளை நேர்த்தியாக அணிவகுத்து பெரும் மெனக்கிடல் கொண்டு தொகுத்திருப்பது இலக்கியத்திற்கான செயற்கரியத் தொண்டு என்று கூறலாம்.

பழகியப் பாதையில் பயணம் செய்பவர்கள் நிஜத்தில் பெரும் பாக்கியவான்கள். அதுவரையிலும் தமிழ்க் கதைக் கண்டிராத மனித மயக்க மாய வித்தைக்கொண்ட இயல்பற்ற கதையுலகைக் காட்சிக்குள்ளாகியுள்ளனர் இலத்தின் அமெரிக்க எழுத்தாளர்கள்‌. இந்தத் தொகுப்பு முழுதும் வரம்பு மீறிய கனவு மெய்மைகளையும் புனைவுகளையும் பேசுகின்றன. இக்கதைகளின் பாத்திரங்கள் கனவுகளையும் மாயத் தோற்றங்களையும் சேர்த்துக் கட்டிய கற்பனைக் கடலின் அதீதங்களில் அளவலாவிக் கிடக்கின்றன. தனிமையின் முகட்டில் தொங்கி உழல்பவர்களாய் இருக்கின்றனர் கதை மாந்தர்கள்.

வாழ்வில் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவங்களைக் கடந்தவர்கள், வலிகளும் வதைகளும் நிறைய தின்னப்பட்டு உளச்சலிப்புகளில் போராடுபவர்கள் வாழ்வின் மீதான பேரச்சத்தால் எண்ணகுலைவில் சிக்கிக்கொண்டு தோல்விகளின் தழுவலில் தம்மைத்தாமே இறுக்கிக் கொண்டு இழித்தும் பழித்தும் தனிமையின் நிழலில் தவித்துக் கொண்டு தம்மைத் தற்காத்துக்கொள்வதாய் நினைத்துத் தவிக்கும் நபர்களும், எதிலும் திருப்தியைக் காணவில்லையா பெருமூச்சிட்ட இதயத்தைச் சுமக்கும் மாந்தர்களாய் எப்போதும் ஒருவித கனவுக் கூட்டில் மயக்க அதீதத்தில் உழன்றுக்கொண்டு போலியான பிம்பத்தைத் தமக்குள் உருவாக்கிக் கொண்டு அதனுடன்பேசியும் வாழ்வைக் கழித்தும் மகிழ்ந்தும் போராடியும் பல தருணங்களில் நடுங்கியும் அவஸ்தைக்காட்பட்டும் வாழும் மனநோயாளிகள் தொகுப்பில் அதிக அளவில் நிரம்பியுள்ளனர்.
இப்படியான மனிதர்கள் பெரும்பாலும் தனிமைத் தீயில் உழன்று வாழ்பவரே. மனநிலைச் சரிவில் சிக்குண்டுக் கிடப்பவர்களைச் சுற்றிய நிகழ்வுகளைக் கதைக்கிறது இத்தொகுப்பு.

சாதாரணமாக நாம் காண்பவை கடப்பவை அதிர்ந்தவைகளைக் கருக்கொண்டு கதை உருவாகப் புனைவேற்றி வடித்து விடலாம். ஆனால் நம் பண்பாட்டிற்கும் நில சூழலுக்கும் மாந்தர் அனுபவங்களுக்கும் வாழ்வியல் கூறுகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட வேற்று மொழியினரின்‌ மனநிலை முற்றிலும் வேறுபட்ட கலாச்சாரம் கொண்டவர்களின் தீவிரமான பெருக்கப்பட்ட உளவியல் மனநிலையில் உழலும் பாத்திரங்கள் நிரம்பிய இந்தப் படைப்புகளை மொழிபெயர்த்து தமிழுக்கு வழங்குவதென்பது அத்துணை சாமானியம் அல்ல.பெரும் அசாத்தியத்தைச் சாத்தியமாக்கியுள்ளார் எழுத்தாளர் தொகுப்பின் மொழிப்பெயர்ப்பாளர் எழில் சின்னதம்பி.

சிறு பிசகும் கதைக் கருவைத் தொலைத்து விடும். மொழியில் நேர்த்திமை அளவளாவி இருந்தாலொழிய மொழிபெயர்ப்பு என்பது கதை வாசிப்பின் கவனத்தை ஈர்க்காது. சொந்த மொழித்திறன் முழுவதாகப் பிற மொழிப் புலமை நேர்த்தியாக இருந்தால் மட்டுமே இவ்வாறான மொழிபெயர்ப்புப் படைப்பு முழுமையின் முச்சந்தியைத் தொடும் சாத்தியம் பெறும் என்பதில் பெரும் கவனம் கொண்டு நூலைக் கையாண்டுள்ளார் தொகுப்பாளர்.

எவ்வளவு வலிமையான கதையாகவோ மொழிபெயர்ப்புப் புனைவாக இருப்பினும் அது தன்னளவில் முழுமை அல்லது பகுதியாகத் திறந்துக் கொள்வது வாசகனிடம் மட்டுமே. வாசகனை சென்றடைய முடியாத மொழிபெயர்ப்புப் படைப்புகள் நிச்சயம் விளைவுகளை நிகழ்த்துவதற்கான வாய்ப்பில்லை. ஆனால் நம் நூலின் தொகுப்பாளர் தமது நூலின் மொழிபெயர்ப்பில் அணிவகுத்திருக்கும் கதைகள் வாசகனின் முழு நிறைவைப் பெற்றுள்ளது.மொழிபெயர்ப்பு நூலிற்கான வாசிப்புச் சலிப்பை முற்றிலும் தகர்க்கிறது இந்த நூல்.வேற்று மொழிப் படைப்புகளான அதிலும் ஐரோப்பிய அமெரிக்க புனைவுகள் விளங்கிக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ளும்படியான மனப்பான்மையை தமிழ் வாசகர்களுக்கு வழங்கியுள்ளது. .

தொகுப்பின் அத்துணை கதைகளையும் மொழிபெயர்ப்பின் சுவாரஸ்யத்தைக் கூட்டித் தமது இலக்கிய உயிரோட்டம் கூடிய மொழிக்குடுவையில் வாசகனை வாசிப்புத் தளத்திலிருந்து துளியும் நகர விடாமல் நிறுத்தி வைத்துள்ளது என்பதே பெரும் வியப்பிற்குரியது. அதீத அசாத்தியங்களைத் தமது வளம் கூடிய மொழிப் புலமையில் சாத்தியமாக்கி உள்ளார் எழுத்தாளர் என்று விதந்துப் போற்றலாம்.

1947இல் பிரேசிலின் மாய எதார்த்த புனைவுகளின் முன்னோடி எழுத்தாளர் முரிலோ ருபய்யோ அவர்கள் மனித மனத்தின் வரம்பு மீறிய கனவு மெய்மைகளையும் மாயத் தோற்றங்களையும் ஒன்று திரட்டி மனித கற்பனைக்கப்பாற்பட்ட விளிம்பில் நின்று தனிமையின் முகட்டில் தொங்கி உழலும் மாந்தர்களின் வாழ்க்கை அபத்தங்களைப் பேசும் புனைவாக “முன்னாள் வித்தைக்காரன்.” வாழ்க்கையின் திடீர் சரிவுகளால் பெரும் மன உளைச்சலில் சிக்குண்டு வாழ்க்கையின் மீது சலித்து நிற்கும் மனநிலை, இயல்பு வாழ்க்கை வாழும் மனிதரல்லாத மாய வித்தைகளால் சூழப்பட்ட வித்தைக்காரன். அவனின் மனநிலை ஒருவித தனிமையில் முகட்டில் தனித்துவிடப்பட்ட வெறுமை. கண்ணுக்கு தெரியாமல் மறைந்து மரித்துப் போக விழையும் சோகம் குடிகொள்ள இந்த உலகம் அவனுக்கு பேரச்சம் நிறைத்து பெரும்வாதை வழங்கியது.

இவ்வித்தைகளும் மாயங்களுக்கும் அவனை முற்றிலும் ஆட்கொள்ள தன்னையே மீறி அவனைத் துரத்தின. அவனை அலைக்கழித்த வினோதங்களின் மிரட்டலில் மரணத்தின் பிடியை விரைந்துத் தேடினான். ஆனால் அனைத்தும் தோற்று நிற்க தோல்விகளெல்லாம் பன்மடங்கு மலைக்க வைத்து எண்ணக்குலைவு செய்தன. கூடப்பிறந்த ஒட்டு உறவான வினோத வித்தைகளும் கைவிடவே விழைந்து விரும்பிய ஒரு சிறு காதல் அசைத்தலும் அவனைத் தூக்கியெறிய வெற்றுத்தாரனாகிப் போனான் வித்தைக்காரன். வித்தைகள் யாவும் இப்போது வெறும் பிரமை ஆகி விட்டன. அவனுக்கு நன்றாகவே புலப்பட்டது மயக்க எண்ணம் ஒருபோதும் ஆறுதலைத் தரப்போவதில்லை என்று. இது நாள் வரை தான் வெறுத்து விட்டொழிக்க விழைந்த விசித்திர விநோதங்கள் கொண்டு மந்திர உலகை படைக்கத் தவறி விட்டோமே என்கிற பின்புத்தி பெரும் மன உளைச்சலில் வித்தைகளைக் கற்பனையில் ஆரத்தழுவி நிறைவேற்றிக் கொண்டான்.

தொகுப்பின் தொடரும் அடுத்த சிறுகதை புனாப்பகுதியில் கரீப் பழங்குடி இன மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அவர்களின் பெரும் பூர்வகுடி நம்பிக்கைகளையும் இயற்கை சார்ந்த இறைமையைப் பற்றிய மறைக்கப்பட்ட பிரபஞ்ச இரகசியங்களைக் குறிப்பறிந்து உணரும் தீர்க அறிவையும் தொலைநோக்குப் பார்வையையும் தமது வெகுவான படைப்புகளில் பிரதிலிபியாக்கிய மெக்ஸிகோவின் ஆகச் சிறந்த எழுத்தாளுமைகளில் ஒருவரான ஃபிரான்சிஸ்கோ ரோஹாஸ் கன்ஸாலெஸ் அவர்களின் “சாமியாக்கி” சிறுகதை ஒரு மேம்பட்ட படைப்பு. இந்தச் சிறுகதை அக்டோபர் மாத சிறுகதைகள் காலாண்டில் பதில் பிரசுரமாகியுள்ளது சிறப்பு. இந்தச் சிறுகதையின் நகர்வு ஒவ்வொன்றும் திடுநிகழ்வுகளையும் பழங்குடி மக்களின் தலைவனான கைலான், படைப்பின் பேறாற்றலைத் தமது நுண்திறன் கொண்டு உணரும் பாங்கும், இயற்கையின் செயலூக்கத்தைத் தமது விரல் இடுக்குகளில் கண்டறியும் பகுத்தறிவும், நுட்ப அறிவும் நம் வேட்டையாடி மூதாதயரை நினைவுக்கூர வைக்கின்றன.பெரிய ஆச்சரிய அதிர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு படித்தான சொல் முறையிலிருந்தும் முற்றாக விலகிச் செல்லாத வகையில் புனையப்பட்டுள்ள இந்தக் கதை ஆச்சரிய ரேகையை ஏற்படுத்துகிறது.

பழங்குடியினரின் இயற்கையுடனான பிணைப்பை எழுத்தின் வழியே காட்சிப்படுத்தியுள்ள தொகுப்பாளரின் எழுத்து முயற்சி நம் குடி அல்லாது நமது பார்வைக்கப்பாற்பட்ட பகுதிகளின் பழங்குடியிருப்புகளின் பண்பாட்டு வழக்கத்தைத் தமிழிலக்கியம் அறிய வழிவகுத்துள்ளது ‌சிறப்பு. சாமானியர் அல்லாத உலகத்தின் பிற இனக்குடிகள் கூட பெண்களை ஒதுக்கியும் வழிப்பாட்டுத்தளத்தில் பெண்களைத் தீட்டுப்பொருளாகத் தள்ளி வைத்து அவர்களை வெறும் உடல் துய்ப்பிற்கான கொள்வதற்கான பொருளாக ஆண்மமதைக்கும் ஆதிக்கத்திற்கும் பயன்படுத்தி வந்தனர் என்பது இந்த கதை வழியே புலனாகிறது. சற்றே வருத்தம் மேலோங்கியது. தொகுப்பின் இந்த வரிகள் கண்ணுக்குப் புலப்படாத கடவுளின் மீதான பார்வையைப் பலகோணங்களில் திருகி நிற்கிறது.

“மனிதனின் கைகளில் சாமி மீண்டும் ஒருமுறை மாண்டுப் போனான்.”

1907இல் இத்தாலியைச் சேர்ந்த பன்முகம் திறங்கொண்ட பயனீட்டுவாதத்தை முன்னிறுத்தும் படைப்பாளியாக ஜொவானி பாப்பிளி அவர்களால் வரையப்பட்ட கதையே “கடைசி வருகை”. தொகுப்பின் தலைப்பைப் சூடிய இந்தப் புனைவு மகத்துவம் நிரம்பப் பெற்ற ஒரு படைப்பு. கனவுலகின் மாய பிரம்மாண்டத்தை அதீத அசாத்தியங்களைக் கண்டெடுத்த கதைத் தொகுதி. கனவு காணும் ஒரு மனிதனின் மாய உலகில் சிருஷ்டித்த ஒரு உருவத்தின் ஆற்றாமையை அந்த மனிதனின் நீளும் கனவுகளால் சிக்குண்டு கனவுதாரனின் கனவுகளின் சாயையைப் போர்த்தி இயலாமையின் விளிம்பில் அவனது உயிர்ப்புள்ள ஆழமான சக்திவாய்ந்த கனவுகளால் இருள் சூழப் பெற்று கொடூரமான படிமங்களால் நிரம்பி வெளி வர இயலாமல் தவிக்கும் மனித பிம்பத்தின் கதறலைப் பேசுகிறது “கடைசி வருகை”.
வாழ்க்கை என்பதே கனவுகளின் சுயம். அதில் மெய்மை என்பது மாயத் தோற்றமே அன்றி வேறில்லை என்கிற தத்துவ மேதாவிகளின் கூற்றைப் பிரதிபலிக்கிறது இந்தப் புனைவு .

கனவு காணும் மனிதனின் குரூரத் தன்மையால் இழிவான வாழ்க்கையை நீட்சியாகக் கொண்டிருக்கும் அந்த பொய்மையின் பிரதிஷ்டை யால் நொந்துபோன மாய உருவின் நிலையே மனிதர்களைச் சூழ்ந்துள்ள வன்ம வாழ்வு என்பதை உணர்த்துகிறது இந்தப் புனைவு.

நீர்க்குமிழி போன்ற மனித வாழ்க்கையில் அனைத்தும் மாயக் கனவுகளே. இவ்வுலகில் கண்களுக்கு புலப்படும் எதுவும் நிதர்சனம் அற்றது. நிஷ்சாசுவமற்றது. நிரந்தரமற்றது நாம் எதைக் கொண்டு கனவாக்குகிறோமோ நம் நனவுகளும் அவற்றைச் சூடியே நம்மை சூழ்ந்திருக்கும் என்கிற மனித வாழ்வின் எதார்த்தத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது கடைசி வருகை. கடினமான கேள்விகளையும் ஊடுருவல் பொருளையும் கொண்டுள்ள புனைவு இது. பிற கதைகளை உட்கொள்வது போல இதை அவ்வளவு எளிதில் உள்வாங்க இயலாத ஒரு ஆழத்தைத் தனக்குள் புதைக்கொண்டுள்ளது. இத்தனை கடினமான புனைவைப் பொருட்புதிர் விலக்கியப் பக்கங்களின் கதைகளை உளவியல் சிக்கல்களால் நிரம்பப்பெற்றப் புனைவை மொழிபெயர்த்து வழங்கியுள்ளது தொகுப்பாளரின் மேலாண்மை பொருந்திய மொழி மீதான பற்று கட்புலனாகிறது.

தொடரும் புனைவுகளில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் ஜுனிசிரோ டானிஸகி அவர்களால் 1912ஆம் ஆண்டில் எழுத்தாக்கபட்ட சிறுகதை “சிலந்தி”. மாறுபட்ட மனித உளவியல் குரூரத்தை உள்ளார்ந்த அடர்த்திக் கூடிய வக்கரத்தை மெல்லியதாய் வெளிப்படுத்தாது, இயல்பின் ரசிகனாய் கலைஞனாய் மிளிரும் ஒரு மனிதன் உள்ளுக்குள் ரகசிய குரூர ரத்த வாடை துய்க்கும் மனிதநேயமற்றக் குரூரத்தைச் சுமந்து மனித வேதனையில் மனக்கிளர்வு உண்டு நிற்கும் ஒரு மனநோயாளி உருக்குத்துதாரியின் வாழ்நாள் பேரவாவைப் பேசுகிறது சிலந்தி. புனைவிலக்கியத்தில் மனித உளவியல் பங்கு என்பது மிகவும் அசூயையானது. மனித மன இயக்கம் சில சமயம் அறிவுப்பூர்வமாகவும் வெகுநேரம் உணர்வுகளின் அல்லாட்டத்தில் மல்லுக்கட்டிக் கொண்டுத் தமது வாழ்நாள் விழையை வன்மவதையின் விளிம்பில் நின்று பூரணத்தின் வாசலைத் தொட்ட பின்பே ஆற்றுப்படும் என்கிற மனித மனத்தின் இரக்கமற்ற இருள் கவ்விய உளவியல் பெருக்கத்தைக் கதைக்கிறது இந்தப் புனைவு.

மனித உடலில் குருதியையும் வலியால் வதைபடும் அந்த உயிர் படும் வேதனையை நிதம் உண்டு களித்து கொண்டாடி மகிழ்ந்து மனமது மறுத்துப் போய் இன்னும் வேண்டும் சித்திரவதைக் கிளர்ச்சி என்கிற வக்கிர வெறித் தலைதூக்க பச்சிளம் மேனி கொண்ட பெண்ணுடல் மீது உருகுத்த அல்லாடுகிறது. அதற்குத் தக்கன தருக்கான பெண்ணுடல் தேடித் தமது ஆன்மா முழுவதையும் அந்த உருவின் மீது ஊற்றவும் விழைகிறது வக்ரம் கொண்ட அந்த கலைஞனின் மனம். அதற்கான பெரும் மெனக்கிடல் அவனை அவன் லட்சியத்தை உச்சம் தொட செய்கிறது. தமது எண்ணத்தைப் பரிபூர்ணமாக்கும் பெண்ணைக் கண்டடைந்துத் தமது விழையை சிலந்தியின் உருக் கொண்டு அவளது பச்சைதோல் முதுகில் முடித்து வைக்கிறான். ஆத்ம திருப்தியும் அடைகிறான்.

மனித மன உணர்வுகளை அழுத்தமான தமது எழுத்ததிகாரத்தில் திண்ம மொழி வளத்தில் ஆங்காங்கே உணர்ச்சிப் பிரவாகச் சொற்களின் கோர்வையில் திடுக்கிடும் சொற்களின் பயன்பாட்டில் இறுதிவரை வாசகனை உருகுத்தலின் வேதனையை பக்கங்களின் வழியே வலிக்கச் செய்கிறது. தொகுப்பாளர் புனைவை சின்னபார் தாது நிறைந்த சொற்களின் கூர்மைக்கூடிய பயன்பாட்டில் நிரப்பி இறுதிவரை வாசகனை உணர்வுக் கிடங்கில் கிடத்தி வைக்கிறார்.

முதல் சிறுகதை காலாண்டிதழில் வெளிவந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஆகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர், கற்பனைகளின் அதீதத்தைப் புனைவாகப் படைப்பதில் வித்தகரான செலினா ஆண்டர்சன் அவர்களின் கைவண்ணம் “ஞான மாதாவின் தேனீர்” சிறுகதை 2020இல் “சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள்” எனும் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. பெற்றோருக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படும் ஒருவராக சமய அறிவுரைகள் சொல்லி நல்வழிப்படுத்தும் பொறுப்புமிக்கவரான ஞானமாதா அவர்களை மையமாகக் கொண்டுப் புனையப்பட்ட சிறுகதை இது.தனிமையின் ஒவ்வாமையால் உழலும் பேசும் பாத்திரமாக கதாநாயகி. தனிமையின் பொருட்டு தனது ஒதுக்கான வெறுப்பார்ந்த குணத்தால் இயல்பான வாழ்விலிருந்து விலகி மாய உருவங்களையும் கற்பனை உரையாடல்களிலும் சிக்கிக்கொள்கிறது சிந்தனை. இது ஒருவித மனப் பிராந்தி மனப்பிறழ்வும் கூட. பெரும் மன உளைச்சலின் பொருட்டு நெறிபடும் சீர்மைப் பிம்பம். அனேகர் இதுபோன்ற பிம்பங்களுடன் பேசியும் பழகியும் இயல்பு வாழ்விலிருந்துத் தனித்து விடப்படுகின்றனர். இதையே நாம் நம் மனசாட்சி என்று அழைக்கிறோம்..

தீவிரமான பெருக்கப்பட்ட மனநிலையில் குழப்பங்கள் சூழ திண்ம முடிவுகளோ அல்லது வருந்தக்கூடிய சூழலையோ கடக்க முடியாமல் இருக்கும் பட்சத்தில் தீர்வை நாடும் மனம் அது பிரதிபலிக்கும் மாயத் தோற்றமே ஞான மாதா போன்ற அருவமற்ற உருவங்கள். அவரவர் நம்பிக்கையின் நீட்சி மாயத் தோற்றத்தைத் தோற்றுவித்து உருவ பிம்பமொன்றைப் பிரதிபலிக்கும். வாழ்க்கையில் வெறுமை, விரும்பியவர் ஒதுக்குதல், சுவாரஸ்யமற்ற ருசிகரமற்ற நிலை, அபிலாஷைகளின் பூர்த்தியின்மை, வாழ்வின் மீது அயர்ச்சி, பிறரிடமிருந்து தனித்து விடப்படுதல், தேவையற்ற எதிர்பார்ப்புகள், எதிர்பார்ப்புகளின் ஏமாற்றம், விருப்பங்களை மாற்றிக்கொள்ளும் தெளிவின்மை, புறக்கணிப்புகளின் உச்சம் என மனித மனத்தின் வெகுவான உளவியல் சிக்கல்களில் உழன்று மனப்பிறழ்வில் அகப்பட்டு பெரும்பாலானோர் தம்மைச் சுற்றிய வட்டமிட்டுக் கசந்தவர்களாகக் கிடப்பர்.அப்போது மனதின் ஆற்றல் இந்த இயல்பற்ற ஆற்றாமையைக் கழுவிவிட உருவங்களை உண்டு பண்ணும். இங்கு ஞான மாதாவாக நமது கதாநாயகிக்கு மனம் என்னும் ஆழம் ஏற்படுத்திய மருட்சியின் மறு உரு.

புனைவின் தமிழாக்கம் தேர்ந்தச் சொற்களின் அபரீதக் கோர்வையாய் உள்ளத்தில் உறைந்து நிற்கின்றன. மாறுபட்ட மொழிபெயர்ப்பாக வாசகனை அடுத்தடுத்தப் பத்திகளுக்கு இமை கொட்டாமல் கடத்துகிறது. ஆங்கிலப் பதத்திற்கான தேர்ந்த ஆழமான தமிழ் பதத்தைக் கொண்டு தொகுப்பு முழுமையிலும் தவழவிட்டுள்ளார் மொழிப்பெயர்ப்பாளர் எழில்சின்னதம்பி அவர்கள்.

1951 இல் வெளிவந்த “தண்டவாள மாற்றி” சிறுகதை மெக்சிகோ எழுத்தாளர்களின் தலைசிறந்த எதார்த்த எழுத்துக்களின் சொந்தக்காரரான ஜுவான் ஹோசே அர்ரியோலா அவர்களால் எழுத்துக் காட்சியாக்கப்பட்ட புனைவு முயற்சி‌. இதுவும் மாய யதார்த்தத்திற்கும் விசித்திர வினோதங்களுக்கும் பாற்பட்டப் புனைவு. பிரபஞ்சவெளியில் மறைந்து நிற்கும் ரகசியங்களின் விளிம்பு இந்தப் புனைவு.

கதையின் நகர்வு ஒருவித திராபையான கதவுகளைக் கொண்ட அறைகளைத் திறக்க மேற்கொள்ளும் திகிலூட்டும் நொடிகளைக் கொண்டு மனத்தின் எல்லா விதமான மயக்க மருட்சிகளை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட புனைவாகத் ‘தண்டவாள மாற்றி’ வாசகப் பரப்பை அசத்துகிறது.

பொய் உணர்வையும் போலியான மயக்க அதீதத்தையும் துல்லியமாக்க மாயலோக தரிசனம் தந்துள்ளார் எழுத்துதாரர். வாசிக்கும் தருணங்கள் மாய உலகத் திரை காணலைப் பிரம்மாண்டமாக தோற்றுவிக்கிறது. தொகுப்பாளரின் மைக்கோல் வண்ணம் வாசகனைப் பயண அயர்ச்சியில் வினோத சுழற்சியில் ஆட்படுத்தியது.

முற்றிலும் மனமது கொள்ளவியலா பகுதிகளும் நம்பகமற்ற பாத்திரப் புனைவுகளும் எழுத்தின் சுபிக்ஷம் கைக்கொண்டு வாசகனை சிலிர்பூட்டுகிறது. பிள்ளை மனநிலையை உண்டுப்பண்ணுகிறது . மாய உலகிற்குள் புகுத்தி ஆளரவமற்ற அச்சந்தரும் அதிர்ந்தப் போக்கை உருவாக்கி அடுத்தடுத்த காட்சி எதிர்பாரப்புகளை தோற்றுவிக்கிறது. பேரச்சம் சூடி நிற்கும் எழுத்துக்களை மாயப் பிடியில் நிறுத்தி வைக்கிறது.

கரு கொண்டுக் கதைப் பதிப்பித்தக் கதைக்காரர் தம் புகழ்ச்சி மாலை சூடினாலும் வேற்று மொழியின் விஸ்தாரத்தை சுவாரஸ்யமாக அச்சு அசலாக படைப்பின் மூலத்தை சற்றும் பிசிறின்றி அலுங்காமல் குலுங்காமல் மொழியைப் பந்தாட விட்டு அதே ருசிகரத்தைச் சுவை மாறாமல் கூடுதல் நளினமேற்றிச் செரிவான படைப்பாகத் தமிழுக்கு வழங்கியுள்ளது வெகு சிறப்பு.

மனித வாழ்வின் பயணங்கள் என்பவை ரயில் பயணங்களின் யதார்த்தம். உடன் பயணிப்பவர் இறுதிவரை உடன் வருவதில்லை. நடுவில் ஏறுபவர் உறவாக ஆவதும் இல்லை. கடந்தவர் கடத்துபவர் என அனைவரும் இந்த மீச்சிறு வாழ்வின் இடைப்பட்ட காலப் பிரதிநிதிகள். வந்துக் கொண்டும் சென்று கொண்டும் இருத்தலின் அடையாளத்தை மட்டும் விட்டு சென்று விலகிச் செல்வர். இது வாழ்தலின் பொருட்டில் மட்டுமல்ல மரணத்தின் மருண்மைக்கும் பொருந்தும் என்பதை வாழ்க்கைப் பயணத்தின் உருநிழலின் ஒதுக்கத்தில் நின்று பேசுகிறது, வெனிசுவேலாவைச் சேர்ந்த இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற மகத்துவ எழுத்துதாரியான அந்தோனியா பலசியோஸ் அவர்களால் 1990 இல் சித்தரிக்கப்பட்ட சீர்மைமிகுப் புனைவான “பயணம்”.

உலகச் சிறுகதைத் தளத்தில் இதுவொரு மேம்பட்ட புனைவு. பயணத்தின் அறிதுயில் நிலைக்கு ஆட்படும் மனித மனம் பல படிநிலைகளைக் காண்கிறது .டேலியாவின் பயணமும் அப்படித்தான். உடன் வந்துப் பயணித்துப் பேசிப் பழகிய மனிதர் கண்டுகளித்த பொருட்கள் என அனைத்தும் பாரிய இயக்கமில்லாத உருவமில்லாத அரவமற்ற இருட்டில் தொலைந்து விட்டதை உணர்கிறாள் டேலியா.

இங்கு எல்லாமே மாயை எதுவுமே மெய்யற்றது. நிலையற்றது. இருள் மட்டுமே நிலையானது. அதுவே நம் வாழ்வின் இறுதிநிலை இன்று நமக்கான உறவும் சுற்றமும் வாழ்வின் முதிர்ச்சியில் நம்மை விட்டு வெகு தொலைவில் விலகிச் சென்றுவிடுவர். தனியாக இவ்வுலகிற்கு வந்த நாம் துணையாக பலர் வாழ்வில் சூழ்ந்தாலும் இறுதியில் தனியாகவே தனிமையின் துணை வழங்கிவிட்டு செல்வர் என்பதே “பயணம்”நமக்கு வழங்கும் நிலையாமையின் கற்பிதம். பிரதியேகமாக மறைக்கப்பட்ட மறுக்க முடியாத யதார்த்தம். இந்த ஆழிசூழ் உலகத்தில் மெய்மைக் கோலம்.

மனித மனம் அபிலாஷைகளின் இறுக்கங்களில் கட்டுண்டுத் தனிமை நோய் பீடித்து அவதிப்படும் வேளை உறவுக்காகவும் வாழ்த்துணைத் தேடியும் சுற்றித்திரியும் தனிமையின் பேரச்சம்,போதாமை, வாழ்க்கைப் பேதைமை, திண்மமில்லா நிலை, சுற்றியே இருண்மை, வாழ்க்கையின் அடிப்படைக்கான சிறுதுளிக் கிளர்வும் நீக்கப்பட்டு சிக்கல் உணர்வு சூழ மனித மனம் பேரிரைச்சலைச் சந்திக்கிறது. அந்த இரைச்சலின் உரையாடல்களாக உதிர்க்கும் உதிர்ந்திடும் சொல்லாடல்கள் கண்ணெதிரே நம் உணர்வுகளை உறவுகளை நாடிய ஏக்கத்தைத் தாங்கி நிற்கும் . அவ்வாறு தாங்கும் உளவியல் வெளியில் தோன்றுபவை யாவும் உருநிழல் ஏற்று பிரதிபலிக்கும்.மனம் விழையும் துணையைத் தேடி வாழ்ந்த காலங்களில் ஏங்கிய உறவுகளைப்போலவே போலி மாயத்தோற்றம் சூடி கண் முன் நிழலாடும். முன்பே பெரும் குழப்பத்திலும் தனிமையின் உருக்குத்தலில் தமக்குத்தாமே ஒன்றுமில்லை நான் இயல்பாக தான் இருக்கிறேன் என்கிற போலிப் பகட்டுப் போர்வையைத் தாங்கி நிற்கும். அசலில் மனம் தனிமையைப் போக்க ஆள் தேடி விம்மும். மெல்லமெல்ல கற்பனையின் மாயப்பார்வை ஒருவித மாயமனிதர்களையும் அவர்களின் ஒலிகளையும் உரையாடலாகப் பிரதிபலிக்கும். இவை யாவும் கனவுகளே என உணர உணர்த்த துணையின்றி மாய நிகழ்வுகளிலேயே அகப்பட்டு திக்குமுக்காடும். இந்தத் தனிமையின் பீடிகை பேரச்சத்தை அவர்களுக்கு உண்டு பண்ணும். வெகுதொலைவில் தோன்றிய மாய பிம்பங்களின் சாயை மனத்தின் பலவீனத்தால் மெல்ல நகர்ந்து அவர்கள் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டுத் திகிலூட்டும். தமக்குள் அவர்களை இழுத்துச் சென்று எப்போதும் சிக்கலான நூற்கண்டு போலச் சிக்க வைத்து விடும். அநேகர் தமது வாழ்நாள் இறுதிவரை தமைச்சுற்றிய இப்படியான மாய உறவுகளுடன் உறவாடிக் களித்திருப்பர். இறுதியில் மரித்தும் போவர்.

அமெரிக்காவின் ஆகச் சிறந்த சிறுகதைப் புனைவாளர் ட்ரூமேன் கபோட்டி அவர்களால் உயிர் ஊட்டப்பட்ட எழுத்தான “மிரியம்” சிறுகதை தனிமையில் சிக்குண்டு மனித உளவியலின் உறவுகளுடனான வாழும் அபிலாஷைகளின் புறக்கணிப்பால் ஏற்பட்ட அல்லாட்டத்தை அதன் விளைவில் தோன்றிய மிரியம் என்கின்ற மாய உருவம் ஏற்படுத்திய பேரச்சத்தில் திகிலூட்டத்தில் திடுக்கிடும் திருமதி மில்லரின் சிந்தனை சிக்கல், அமைதியின் மேல் மனம் ஒரு நூற்கண்டாகச் சுற்றி உறக்கம் போன்ற ஒருவித சிந்தனை மயக்க அதீதத்தை உண்டு பண்ணி மில்லரை அலைக்கழித்தது. வெகுகாலமாக உயிரற்ற உருப்படிகளுடன் தமது வாழ்வைக் கடத்திய மில்லர் வெறுமைச் சுமந்த அவரின் மனம் உறவு ஏக்கத்தை உள்ளுக்குள் புதைத்துக் கிடந்தது. அதன் தாக்கமே மிரியத்தின் மாயத் தோற்றத்தில் அகப்பட்டுக் கிடுகிடுத்து இறுதியில் தன் நிலை உணர்ந்து மீள்நிலைக்குத் திரும்புகிறார் திருமதி மில்லர்.

வளவளப்புக்கு இடமின்றி எழுத்தின் மையம் வாசகனும் வாசிப்பும் என்பதை கருத்தில் கொண்ட எழுத்துதாரி மனித மனத்தின் பல்வேறு கோணங்களைப் படைப்பின் வழியே நிறுவியுள்ளார். இப்படியான தேர்ந்தப் படைப்புகளைக் கைக்கொண்டுத் தொகுப்பை உரமேற்றி வளமாக்கியுள்ளார் நூற்தொகுப்பாளர். அவருடைய மொழியும் எழுத்து நடையும் கூடுதல் பலம். வாசகனை ஒருபோதும் சோதிப்பதில்லை.
அருகில் அமர்ந்து அவரே தேனூறும் தமிழில் கதை சொல்லியாக உருமாறி மாய யதார்த்தப் புனைவுகளை உணர்வுப் பெருக்கின் நீட்சி மிகுந்த சுவாரஸ்யம் கூட கதைகளைச்ச் சொல்லி முடிக்கிறார்.

பிரபஞ்சத்தின் மெய்யாளுமை நம் பிள்ளைகள்‌ அவர்களின் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் கொண்டாட்டங்களும் புரிதல்களும் பெரியவர்களின் சேகரித்த அறிவிற்கு முற்றிலும் முரண்பட்டது. குழந்தைமை மூலமாகவும் பிள்ளைப் பிராயத்தின் வழியாகவும் இயல் முரணிய புனைவின் உருவாக்கமே சிலியைச் சேர்ந்த அறிவியல் புனைவுக் கதைகளின் அரசியாகவும் சிறார் இலக்கியத்தின் தன்னிகரில்லா எழுத்துதாரியாகவும் அறியப்படும் எலினா அல்துனாட்டே‌ அவர்களால் 1977 இல் பாந்தமாகப் பிள்ளைகளின் ஏக்கங்களை எதிர்பார்ப்புகளை பெற்றோர்கள் தம் பிள்ளை மீதான ஆதிக்க வட்டத்திலிருந்து வெளிவந்து குழந்தைகளின் கற்பனை உலகிற்குள் அவர்களின் பிடித்தத்திற்குள் பிரவேசித்து அவர்களின் எதிர்பார்ப்புகளை வியனுலக விந்தைகளைத் தனதாக்கிக் கொள்ளும் முனைப்பைப் பெற்றோர் யாவரும் கையாள வேண்டும் என்கிற பிள்ளை மனதின் உளவியல் எதிர்பார்ப்புகளைப் பேசுகிறது “வண்ணத்துப்பூச்சி மனிதன்” சிறுகதை நான்கு சுவருக்குள் உள்ளொடுக்கப்பட்ட ஒரு குழந்தையின் வெளியுலக ஏக்கம். தனக்குக் காண்பிக்கப்படாதஅந்த உலகை பெற்றோர் உறவுகள் அல்லாத அந்தப் பிரபஞ்ச வெளியை காண ரசித்துத் துய்க்க வீட்டை கடந்து வெளியேறுகிறாள்.

இதுவரை அவளுக்குப் பாதுகாப்பானதாக மனமுவந்ததாக இருந்த வீடு பலமற்று படி தாண்டியதும் உலகம் மாய வித்தைகள் நிரம்பியதாகக் கட்டுப்படுத்தவியலா படிமங்களின் உருவங்களாகத் தீய விலங்காய் அச்சுறுத்துகிறது. திக்கற்று துழாவியக் குழந்தையை வண்ணத்துப்பூச்சி மனிதன் தமது மாய வித்தைகளில் அசத்துகிறான். குழந்தைமையின் பரிமாணத்தில் மினுக்கும் சுவாரஸ்யத்தில் தன்னை இழக்கிறது அந்தப் பச்சிளம் பிள்ளை.ஆரவாரம் கூட்ட திளைக்கிறாள். அந்த மாய மனிதனின் மென்மையான அன்பும் மகிழ்ச்சியூட்டும் நேசமும் அவளை ஒரு நாளும் சலிப்படைய வைக்கவில்லை. தமது ஆழ்மன ஏக்க நிறைவின்மையை அந்த வண்ணத்துப் பூச்சி மனிதன் தமது பூரண அன்பினால் பூர்த்திச் செய்கிறான். அவள் எதிர்பார்த்த அந்த பேரன்பும் சுதந்திரமும் இயல்பைத் தாண்டிய மகிழ்கூடிய திண்டாட்டங்களும் அவளுக்குள் பெரும் உளக்களிப்பை ஏற்படுத்தியது.

திடீரென மறைந்துப் போகும் அந்த மனிதனைத் தொலைத்து தேடி அழுகிறாள் பிள்ளை. குழந்தையின் பரிதவிப்பை உணர்ந்த தந்தை அவள் கண்டதும் கொண்டாடிய யாவும் மாயபிம்பங்களே. கற்பனையே என்பதைப் புரிய வைத்து குழந்தையின் எதிர்பார்ப்பை அவள் தேடித் திரிந்த வெற்றிடத்தைக் கதை சொல்லியாக தன்னை உருமாற்றி நின்று பூர்த்தி செய்கிறார் தந்தை.

குழந்தைமையின் விஸ்தார லோகத்தின் அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் முழுமையாக எழுத்தில் வார்த்திட முடியாது. அத்துணை வினோதங்களும் நம் கற்பனைக்கப்பாற்பட்ட அந்த உலகை அந்தக் குதூகலத்தைச் சொல்லாடிக் களிக்கிறது கதை.

மொழிபெயர்ப்பாளரும் கதைக்காரருக்குச் சற்றும் சளைத்தவர் அல்லர் என்பதைத் தமது எழுத்துப் புலனாய்வில் ஒவ்வொரு கதைகளையும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் . கதைக்களத்தில் வாசகனைத் திருப்தியடையச் செய்து பரிபூரணத்தை நிலைநாட்டி வெற்றிவாகை சூட வழிவகுக்கிறது தொகுப்பு.

எப்போதும் புனைவிலக்கியத்தின் உளவியல் பங்கு என்பது மிக முக்கியமானது. இன்னொரு மனிதரின் வாழ்க்கையைப் புனைவின் வழியே துய்த்து அனுபவம் பெற புனைவுகள் பேருதவி செய்கின்றன. வாசிப்பனுபவம் வழியாக இது வாய்த்தும் விடுகிறது. ஒவ்வொரு கதையும் கூடுதல் உயிர்ப்பும் அசத்தலான மனிதர்களின் இயல்பின் சாயலாகவும் அமைந்து வருவதை வாசிக்கிற யாரும் உணர்ந்து விட முடியும். தொகுப்பாளர் ஒவ்வொரு கதைக்காரரின் வாழ்ந்த காலப் பதிப்புகளையும் புனைவுகளின் பதிப்புகளையும் எழுத்துக்களின் சிறப்புகளையும் தனித்துவத்தையும் அணிவகுத்துப் பதிவிட்டிருப்பது ஒவ்வொரு கதைக்கான பின்புலத்தையும் ஆய்வையும் தேடி அலைய தேவையின்றி நூலின் பக்கங்களிலேயே கண்டடைய வழிவகுத்துள்ளது சிறப்பு.

மனித மனத்தின் அபத்தமான உளவியலை பேசுகிறது ஒவ்வொரு புனைவும். மொழியின் சீர்மையுடன் வாசகனை கதைக் காட்சியகத்திற்குள் புகுத்த எழுத்தாளர் எழில் சின்னதம்பி அவர்கள் மேற்கொண்ட பெருங்மெனக்கிடல்களும் தீர்க தமிழாய்வும் தொகுப்பை உச்சம் பெற செய்கிறது.

தெறிப்பான மொழியும் கோர்வையான வரிகளும் வாசகனை வாசிப்பு வெளியிலிருந்து கடத்திடாது இருத்தி வைக்கிறது. தத்துவ உரையாடல்களோ கோட்பாட்டு இறுக்கங்களோ இன்றி உலகமொழி மாய யதார்த்த உளவியல் சார்ந்த உலகளாவிய எழுத்தாளுமைகளின் புனைவுகளைத் தமிழிலக்கிய வாசகப் பரப்பில் மொழிபெயர்ப்பின் வலிமையில் கூடுதலாக ஒளிர்ந்து நிற்கிறது நூல்.

நம் தமிழ் சிறுகதை இலக்கியம் அல்லாது உலக மொழிக் கதைகளையும் ஆகச்சிறந்த எழுத்து கவிஞர்களின் படைப்புகளைச் சராசரி அல்லாது விளிம்புநிலைப் புனைவுகளை எழில்மிகு நம் தாய்மொழியில் மீள்புனைவு செய்து வாசக வெளிக்குள் விரவ மேற்கொண்ட முயற்சிக்கு என் பாராட்டுகள். தங்களின் மேலான இந்த இலக்கியத் தொண்டு இத்துடன் ஒடுங்கி விடாமல் தங்களுக்குள் துளிர்விடும் புதிய படைப்புகளையும் உலக தத்துவ எழுத்துக்களையும் தமிழ் இலக்கிய வெளியில் படரவிட்டு நிரப்பிட வேண்டும் என்கிற வேண்டுதலை முன்னிறுத்தி உளமார்ந்த வாழ்த்துக்களையும் சேர்த்துப் பதிவிடுகிறேன்.
நன்றி.

நூலின் பெயர் : கடைசி வருகை
நூல் ஆசிரியர் : எழில் சின்னதம்பி
பக்கம்: 176
விலை : ₹ 280
வெளியீடு : நூல் வனம்

Poems By Parameshwari. பரமேஸ்வரியின் கவிதை

பரமேஸ்வரியின் கவிதை




இயற்கைப் படைப்பின்‌ பாலில் காணும் வேற்றுமை.
இலக்கியப் படைப்பின் பாலிலும் காணும் பேதைமை…
பெண் முன் தாண்டவியலா இலட்சுமணக் கோட்டிட்டு
ஆண்-பெண் சமத்துவம் பேசும் சமூகக்கட்டு

ஆணுக்குப் பெண் சளைப்பில்லை என்பது
சம்பாத்தியத்தில் மட்டுமே
பெண் சமத்துவத்தில் அல்ல..

படி தாண்டினாலும் பத்தினி
என்று வியாக்கியானம் பேசும்
விரும்பிய
படி தாண்டிய பெண்ணை
வசவுகளால் வீசும்.
அதைச் செய் இதைச் செய் என்பர்
பெண் எதைச் செய்தாலும் குற்றம் பார்ப்பர்..

பெண்ணுக்கான முற்போக்கு
பேசுவதில் பயனில்லை
முற்போக்காக வாழும் பெண்களே
எதார்த்தமாக வாழவிட்டு
இலக்கியமாக கொண்டாடுங்கள்.

பெண் கொண்ட கருத்தில் முரண்பாடு காணலாம்..
பெண் மீதே கருத்து முரண்பாடு காணலாமா?
புனையப்பட்ட இலக்கியத்தை வாசிப்பதில் சிறப்பில்லை.
செறிவுற்ற இலக்கியமாக வாழ்வதே
சிறப்பு..

பெண் மீதான போர்த்தொடுப்பு குறைந்திருக்கலாம்..
பெண்மை மீதான படையெடுப்பு
பாரதியின் பிறப்பாலும் மாறப்போவதில்லை..
பாரதியின் படைப்பாலும்
மீளப்போவதில்லை…

பெண்சமத்துவத்தைப் பாராட்டிப்
பேசுவதை விட
பெண் சமூகத்தைப் பிரித்து பார்க்காதிரு..
பெண்ணுரிமைப் பேசாதே..
பெண்ணுயர்வைத் தடுக்காதே..
உலவ விடு பெண்ணை தடுப்பின்றி
மலர்ந்து விடும் பெண்ணுரிமை தடையின்றி.