நூல் அறிமுகம்: கவிஞர் மு. ஆனந்தனின் ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’ – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: கவிஞர் மு. ஆனந்தனின் ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’ – து.பா.பரமேஸ்வரி




கவிதை என்பது உணர்வுகளின் கூறுகள் மட்டுமல்ல அது காலதேச வர்த்தமானங்களைக் கடந்த மனித மனங்களில் செறிவூட்டப்பட்ட படிமங்கள்.ஏதோ கண்டதை காண்பதை உழல்வதை ஒட்டிச்செல்வதை உரசி விட்டுப் போவதை கண் முன் விரிவதைக் கடத்திவிடும் சாளரம் அல்ல. பல நாட்களாகக் கவிஞனின் மனச்சிறைக்குள் குமைந்துக் கொண்டிருந்த தீ மூட்டங்கள். சிந்தனைக்குள்ளும் மூளைக்குள்ளும் ஊடுருவிப் பல சூழல் பாதைகளில் அடுத்தடுத்தப் படிநிலைகளாகக் கடந்து வடிகாலிட்டுச் சொட்டு சொட்டாக பாசனம் செய்துப் பின் அடர்த்தியான திரவ நிலைக்கு மெருகேற்றி வெளிச்சமாகும் ஒளி வடிவமே கவிதை. மொழியை பொறுத்தமட்டில் கவிதையைத் தவிர வேறு எந்தத் தளமும் பெரிதாகச் சிலாகிப்பதில்லை. அதேபோல கவிஞனைப் பாடுபடுத்தும் ஏதொன்றும் கவிதையை தவிர வேறு எதுவும் அம்மணப்படுத்துவதுமில்லை. கனத்தக் கம்பளத்திற்குள் அகக்கருவை ஒளித்து உருவின் புற வடிவத்தை மட்டுமே வெளிக்காட்டும் ரகசியவாதம் கவிதை.

அதிலும் கவிஞர் மு.ஆனந்தன் போன்ற கவிஞர்கள் வாழ்வின் அர்த்த பேதங்களை பல ஆயிரம் வருடங்களைக் கடந்த வரலாற்றுக் கூறுகளை, வாழ்வியல் அன்றாடங்களை சுவாரஸ்யங்களாக ஆவணப்படுத்துகிறனர். சமகால மனித குலத்தின் செருக்குகளை அழகியல் செயல்பாடுகளை இனிவரும் காலங்களின் சிம்மசொப்பனங்களை மனித அறிவிற்கு பாற்பட்ட கணிப்புகளை தமது கவிதைக் களத்திற்குள் பதுக்கி வருகின்றனர் கவிதைக்காரர்கள். சமகால மனித இயக்கத்திற்கு எதிரான இயல்பற்ற சமூக சங்கதிகளை எதிர்க்கும் ஒரு பேராயுதமாகவே கவிதை என்கின்ற போர்க்கருவியை கையாளுகின்றனர் அசல் கவிஞர்கள். அந்தத் தடத்தைத் தமது ஒப்பற்ற உயிர்ப்பான கவிதைகளோடு இயல்பாக பொருந்திக் கொள்ளும் கவிஞராக மு. ஆனந்தன் தமது கவித்துவ ஊடாடலில் முத்துக்குளித்துள்ளார்.

சமூக வன்கொடுமைகளை நிகழ்த்தும் விஷக்கிருமிகளை அடையாளப்படுத்தும் தொலைநோக்கியாகவும் இயற்கை பேரழகை ரசிக்கும் சக மனிதர்களுக்கு அவிர்பாகமாக நைவேத்தியமாகத் தமது கவிதைகளை படைக்கிறார் தொகுப்பு ஒவ்வொன்றிலும்.

“யுகங்களின் புளிப்பு நாவுகள்” என்கின்ற இந்த கவிதைத் தொகுப்பில் அரசியல் நோய்மை, பொருளாதாரக்குலைவு, பண்பாட்டுப் போதாமை, சாதிய ஆணவம், வழிபாட்டு சிடுக்குகள், பாலியல் பரிதாபங்கள், வன்புணர்வு ஆதிக்கம், தாய்மை, சூழல் பரிமாற்றங்கள், உளவியல் உளைச்சல், இயற்கை அழகியல், பிரபஞ்சப் பிணைப்பு சமூக அவலம் என அனைத்தையும் தமது சில பல பக்கங்களின் செதுக்கி ஆதாரப்படுத்தியுள்ளார். இயற்கையை சாட்சிப்படுத்தி சமூக மாற்றங்களுக்கான தீர்வுகளைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

பச்சைக்கிளி, தேனீ, தட்டான், தவளை, குருவி, வானம்பாடி, மயில் பீலி, மீன் கொத்தி, தீனநுனண்மி,மினுக்கட்டான்கள் என அனைத்து ஜீவராசிகளையும் தமது குடுவையில் ஒரு மாதிரியாகவே வரிசைப்படுத்தியுள்ளார். வானவில், மிதுக்கல் கொடிகள், முருகு, வாளி,வல்லிக்கை,மின்னிக்காய்கள் மற்றும் பூக்கள் செடிகள் என அனைத்து இயற்கைப் பிரதிகளின் மீது தமது தீவிர காதலை நேசலைப் பரப்பி கவிதைகளுக்குள் உயிரூட்டி வாழ்வு தந்துள்ளார். சில கவிதைகளை அடிக்கோலிட்டு எனது வாசக ரசனையைப் பகிர்கிறேன்.

பொய்யின் ஆரவாரத்தில் உண்மை என்பது நிகழ்கணத்தில் எப்போதுமே வலுவிழந்து கிடக்கும் என்பதை வீரியமிழந்த ஆண் குறியுடன் ஒப்பிடுகிறார் புதுப் புனைவில் கவிஞர். வாய்மையின் பேராற்றலை பிரகடப்படுத்த இப்படியும் கவிதை சமைக்கலாமா என வியந்தோதி வாசிக்கக் கடத்திய வரிகளாய்..

பொய்யின் கரங்களில்
வீரியமிழந்த ஆண்குறிப்போல் மௌனித்து கிடக்கிறது உண்மை…

அப்பாக்களின் மாறுபட்ட படிமங்கள் ஒவ்வொரு மாதிரியாக கவிதைகளில் புலப்படுகின்றன. தொகுப்பில் வரும் அப்பாக்கள் ஒவ்வொருவரும் பல விதமான உணர்வுகளை நமக்கு வழங்குகிறார்கள்.

“அப்பாவின் முலைகள்” கவிதையில் ன்னுகுட்டியின் இப்படியான அப்பாவை நமக்கு அறிமுகப்படுத்துகிறாள். ன்னு குட்டியின் கனவுகள் பாப்பி வழங்கும் அப்பாவின் முலைகளுக்காக ஏங்குகின்றன. அப்பாவின் சூம்பிய முலையில் பாப்பி கேட்கும் ன்னு குட்டி முதிர்ந்த பருவத்தைத் தொட்ட அப்பாவை “மார்க்கண்டேய நந்தவனத்திற்கு” ஆதுரமாய் அழைத்துச் செல்கிறாள்..

அப்பாக்களின் ஆயுட்கரம் பற்றி ஆதூரமாய் அழைத்துச் செல்கிறார்கள்
ன்னுக் குட்டிகள்
தேவதைகளாய்…

ன்னு குட்டியின் அப்பா மட்டுமல்ல வாசகர்களும் மார்க்கண்டேயர்களாக பல நந்தவனங்களில் உலாவி வருகின்றனர்.

புதிதான வடிவங்கள் புதிய பரிணாமங்கள் சிந்தனை தூண்டல் என பக்கம் ஒன்றும் வாசகனை புத்தம்புதிய கவிதை வெளிக்கு அழைத்துச் செல்கின்றன.

குழந்தைகளின் உலகமும் உளவியலும் மனித அறிவிற்கு ஒருகாலும் புலப்படுவதில்லை. வகுப்பறை எனும் சட்டத்திற்குள் பிள்ளைகளை மடக்கி வேண்டுமானால் போடலாம் சிறகு விரித்து பறக்கும் மனத்தை முடக்கத்தான் முடியுமா..? முயக்கத்தான் இயலுமா..?

பாடம் நடத்தும் போது
யாரிடம் அரட்டை?
டோராவிடம் தான்..
என்று சொன்னால்
புரியவா போகிறது
இந்த மக்கு டீச்சருக்கு.

பிள்ளைகளின் ஆழ்மன தேடல் அசலில் புரியவா போகிறது கல்விமேலாண்மைக்கு..
கவிஞரின் வாழ்வியல் யதார்த்தங்கள் அன்றாடம் கடந்த ரசித்த சந்தித்த பல நிதர்சனங்கள் கவிதைத் தூளியாய் நிழலாடுகின்றன தொகுப்பு முழுதும். எந்த அளவிற்கு நிதர்சனங்களும் நித்தியமும் தொகுப்பைக் கொள்ளைக் கொண்டுள்ளதோ அதே அளவிற்கு புனைவுக் கவிதைகளும் ஆர்பரிக்கின்றன. “தீக்கூடு” என்ற ஒரு கவிதை தேனீக்களின் வாழ்வியலைச் சித்திரப்படுத்தி அதற்குள் பொதிந்திருக்கும் யதார்த்தங்களுக்கு உயிரூட்டி உலக இயல்பை தத்ரூபமாக்குகிறது. ராணி தேனீயைப் பற்றி பேசுகையில் பல அரசியல் சூத்திரம் சூசகமாக சுட்டப்பட்டுப் பல கேள்விகளை தட்டி எழுப்புகின்றன வரிகள். இந்தக் கவிதை வாசகரை பல்வேறு வளைவுகளில் சுற்ற விடுகிறது சிந்தித்தபடியே..

தீச்சுவாலைகளில் தன் சரீரத்தை சூடேற்றி பெருந்தீயாய் பரிணமிக்கிறது ராணித்தீ..

“கபாலங்கள் எழுதச் சொன்ன கவிதை” எதை பேசுகிறது? என்கிற ஆவலில் கவிஞருடன் நெடுந்தூர பயணம். பல அமானுஷ்யங்களைத் திகிலாக்கிக் காட்டிய கவிஞர் இவற்றையெல்லாம் விட சமூகத்தின் பல்வேறு உயிருள்ள பிணங்களின் மாயா லோகத்தை கைநீட்டுகிறார்.

பொழுது சாய்ந்ததும் உடுத்திய முகமூடிகளை அங்கங்கு விடுத்து இறுதியில் சொந்தக் கூட்டை அடையும் வேளை பொழுது முழுதும் பரிணமித்த முகமூடிகளிலிருந்து விடுபட்டு அப்பா என்கிற அசல் முகத்தை அணிகிறார் “அப்பா முகமூடி” கவிதையில்.

சுற்றித்திற்கும் உற்றாருக்கும் மாவீரனாக வாழ்ந்துப் பெருமை தேடிய தகப்பன் சொந்தப் பிள்ளைகளின் பாசமிகு அப்பாவாக இருக்கத்தவறி தோற்றுப் போகும் பல அப்பாக்களைத் தலைக்கவிழ்கிறது “அப்பா என்றொரு மாவீரன்..”
பிள்ளைகள் மனத்தின் ரணமாய் கசிகிறது வரிகள் ஒன்றும்.

வீரத்தின் சுவாசப் பெருமூச்சில்
எங்களுக்கும்
ஒரு மாவீரனாகவே வாழ்கிறார்.

அப்பாவாக தோற்றுக்கிடப்பதை
என்றுமே அவரிடம் சொன்னதில்லை…

எல்லாவற்றையும் விருப்பப்படி நிறைவேற்றிய ஒரு ஆண் உறவு அது எந்த வகைமையிலும் அடங்கட்டும்… கேட்பதையெல்லாம் சலிப்பின்றி வழங்கி பெண்களின் பொருட் பிரியவாத பலகீனத்தைத் தனக்கான பிடிவாத வசமாக்கி இறுதியாய் நான்கு சுவற்றுக்குள் முடக்கி போட்ட ஆணாதிக்க ஆணவவாதத்தின் அனைத்துத் தரப்புகளையும் ஊடுபாவிக் கொப்பளிக்கும் “வேறென்ன வேண்டும்”கவிதை.
பல்வேறு பரிணாமங்களில் உதிர்க்கப்படும் சொல் அருவங்கள் தொலியாக பீலிகளாக சிதறல்களாக வெளிப்படும் மனிதனின் மொழித்தெறிப்புகளில் என்பதை “நாக்குத்தொலிகள்” உரித்துக் காட்டுகின்றன. சுவைகளில் பரிணமித்தே தொலிகள் நாவுகளின் பரப்பைப் போர்த்தி விரிகின்றன.
முந்தைய காலங்களை பாரம்பரியமாகக் கடைந்து இன்று காலாவதியான நமது வழமைகளை வகையாக நினைவு கூட்டும் உறைமோரின் நீர்மையில் ஊடுப்பாவிக் கிடைக்கிறது “யுகங்களின் புளிப்பு நாவுகள்” கவிதை.

மற்றுமொரு பாரம்பரிய கசப்பைத் தடவிச் செல்கிற “மாறாத காரணமாய்” கவிதை காலங்காலமாய் புரையோடிக்கிடக்கும் பெண்ணடிமைத் தனத்தை சதித்தீக்கு இரையாக்கும் கணவன் என்கின்ற கடமை கனவாதம் வாரியள்ளி விழுங்குகிறது ஆதிக்க மரணக்குழிக்குள்.

அம்மாக்களின் செவிப்பூக்கள் எப்பொழுதும்
அடகு கடையிலேயே மலர்கிறது…

கவிதை வரிகள் குடும்பத்தின் ஏழ்மை கனத்தை வலிக்காமல் சுமக்கிறது. ஒரு பூவைத் தாங்குவது போல மலர் மலர்வது போல அம்மாக்களின் தோடுகளற்ற முகாந்திரம் வலிக்கோடுகளைப் புன்னகையில் துடைத்துத் துலக்குகிறது.

புக்கத்து கௌரவத்தையும் இடுக்கிப்பிடிக்கும் மாண்பையே அணிகலனாக நிதம் சுமக்கும் பெண்களின் மௌன மொழிகள் வாதைகளில் உழன்று துயர் கொழுத்த மனத்தையும் நீர் கோர்த்த விழியையும் சுமைத் தாங்கும் உடலையும் சுட்டிக் காட்டுகிறது. ரவிக்குைக்குள் மடித்து கிடக்கும் துளசி மணி போன்ற பல பெண்களின் சேர்க்கப்படாதக் கடிதாசி ஈரம் தோய்ந்துக் கிடக்கிறது. “மற்றவை நேரில்” கவிதை ஊடே வாய்ப்புக் கிடைத்தாலும் துளசி மணிக்கு நேரில் பெற்றோரை சந்திக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பது நாம் அன்றாடம் கடக்கும் பல துளசி மணிகளின் விழிமொழிகள் உணர்த்திவிட்டு செல்கின்றன. சாதிய குழிக்குள் புரண்டு எழுந்த கீழ் ஜாதி உடலுக்குத் தான் குறிகள் கூட ரத்தம் குழம்பிக் கிடக்கும். மேட்டுக்குடியின் அந்தரங்கச் சகதியின் வீச்சும் கௌரவ துர்நாற்றம் எப்போதும் சுமந்துக் கிடக்கும் அவர்களின் குறிகள் என்பதை “கௌரவக் குறிகள்” கவிதைத் தொக்கிக் காட்டுகிறது‌

மெக்காலே விதைத்து விட்டுச் சென்ற நோய்மைவாதக் கல்வித் திட்டத்தில் வெறும் புத்தகப் புழுக்களாய் இன்றைய பிள்ளைகள்… பள்ளியையும் புத்தகத்தையும் கண்டால் காததூரம் ஓடி ஒளியும் கல்விப்பீடிகையில் கற்றலும் கல்வியும் பிணிப்பிடியில் மருவிக் கிடக்கிறது. பிள்ளைகளையும் கற்றல் நோய் கவ்விவருவதைப் புடம் போடுகிறது “மெக்காலேவின் பிள்ளைகள்” கவிதை
நோய்ப் படிமங்களில் மருத்துவவணிகவாதத்தைப் பேசுகிற கவிதைகளும் தான் எத்தனை எத்தனை இங்கு விரைவிக் கிடக்கின்றன. இயற்கையை கொண்டு நிறுத்தி உடலை கூராய்ந்து அறுத்துப் பார்க்கும் செயற்கையான செயல் இயக்கங்களுடன் ஒப்பீடு செய்கிறார் கவிஞர். “ஆஞ்சியோ” கவிதை இப்படியான இயற்கைக்கும் செயற்கைக்குமான புனைவு.
இதேபோல மற்றொரு கவிதையில் கருவறையை பதம் பார்க்கும் மருத்துவக் கையாடல்களை புலப்படுத்திச் சாடுகிறார்..

அம்மாவின் மருந்துச் சீட்டில்
மண்டிக் கிடக்கிறது
நீர்க் கருவைகள்
நீர் மத்திகளையும்
அத்திகளையும் தின்று..

“எதிர்ப்படவில்லை மனிதம்” “மனப்பிறழ்வு” போன்ற கவிதைகள் மனித மனத்தின் பிறழ்வுப்பாடுகளைப் புனைகிறது. மனிதமற்ற மனிதர்களைக் காட்டிக் கொடுக்கிறது.

“கன்னி மேரியின் தீட்டு துணி” கவிதை மனதை எங்கேயோ கீறி விட்டு உசுப்புகிறது. “பதவிக்காய்ச்சல்” கவிதை நோய்த்தொற்றை விட அதி பயங்கரமான பதவி பற்றுத் தொடுக்கும் புதுவிதக் காய்ச்சலை மக்கள் வெளிக்கு அறியப்படுகிறது. நோய்மை அரசியல் தலைத்தூக்கி வரும் இன்றைய காலத்தில் மக்களை அதிவிரைவாக பாதிக்கும் பதவிக்காய்ச்சல் அறிகுறியை விலாவரிக்கும் வரிகள் பதவிமோகங் கொண்டவரிடத்துத் தற்காத்துக் கொள்ள எச்சரிக்கிறது.

அயராது பாடுபடும் விவசாயக் குடிகளின் விழுமியங்கள் இன்றைய விஞ்ஞான தொழில்நுட்ப நவீன பிடிக்குள் அகப்பட்டு அவதிப்படும் நிலையை நிலத்தில் ஆதியாகிப்போன பல ஏவாள்களின் அந்தரங்கங்களை அவலங்களாக்கி மகிழ்ந்துய்த்த நவீனதாரிகளை ஆதங்கிக்கிறது “மின்னிக் காய்களும் மினுக்கட்டான்களும்”.
ஐந்தறிவுக் கொண்ட ஜீவன்களின் தாய்மையைக் களவாடி ஆதாரம் தேடும் ஆறறிவு மனித பதர்களின் சூட்சம
திராணியை அம்பலப்படுத்துகிறது “நக்கிக் கொடுக்கிறது” கவிதை.

இன்றைய நவீனத்தோடு முரண்படுகிற விவசாய பாரம்பரியத்த திண்மமாகப் பேசுகிறது “கொழுவு எருத்து.” பாரம்பரிய மரபுடன் நவீனம் எப்போதும் நீர் மேல் படரும் எண்ணைப் போல ஒட்டியும் ஒட்டாது கிடக்கும்.
மனிதாபிமானமும் இரக்கவும் தாய்மையும் அன்பும் தின்பண்டங்களுடன் கரைத்துப் பொட்டலம் கட்டி வழங்கிய பள்ளிச்சாலையின் சாலையோரத்து பாட்டிமார்களும் அண்ணன்மார்களும் அக்காக்களும் இன்றும் நினைவில் ஊசலாடுகின்றனர். பணம் ஒருபோதும் அங்குப் பிரதானப் படவில்லை.”ஆயா கடை ஓர்மை” நமக்குள் இன்றும் ஒட்டிக் கிடக்கும் அன்பின் தின்பண்டத்தை நாநுனியில் தூண்டத்தான் செய்கிறது நினைவிலும் நனவிலும்…
“என் மகள் பெரியவளாகி” கவிதை மனதைக் கூராயுதம் கொண்டுக் குத்துகிறது தேவதாசி வம்சத்து மற்றொரு அம்சங்களாக இன்றைய பாலியல் தொழிலாளர் வர்க்கம். கையாலாகாத சமூக கட்டமைப்பைக் கொண்டு தமக்குத் தானே வலிந்து முத்திரை குத்திக்கொண்டு அடுத்தடுத்தத் தனது சந்ததியை ஆயத்தப்படுத்துகின்றது ஆண்களின் வன்ம விருந்திற்கு. திருந்தி வாழ நினைக்கும் இவர்களின் மீதான சமூகப் பார்வை இவர்களை மட்டுமா விழுங்கியது. தொடரும் பெண் பிள்ளைகளையும் சேர்த்தே சபிக்கிறது. தமது அருவருப்பு பார்வையில் வக்ரபமொழியைத் துப்பி விபச்சாரத்திற்குப் பலி கொடுத்து சமூகத்தின் ஒழுங்கீன குறிகளாய் அம்மணப்படுத்தப்படுகின்றது. பிற தொழில் போல பாலியல் தொழிலும்
பாரம்பரியமாகி வருகிறது..

என்னக்கா
வியாதி வந்து செத்து விடுவேனா?

பரவாயில்லை
அதற்குள் தொழிலுக்கு வந்து விடுவாளக்கா..
என் மகள் பெரியவளாகி..

தொகுப்பின் ஒவ்வொரு காவியப்படிமமும் பலதரப்பட்ட கோணங்களை வாசகருக்கு விட்டுச் சென்றுள்ளது. கவிதை தானே என போகிற போக்கில் அலட்சியமாக வாசித்து விமர்சித்து விட முடியாத வகைமைகளில் லாவகமாகக் கையாளப்பட்டுள்ளன.. ஒவ்வொரு வரிகளிலும் பன்முகப் பார்வையை விழிக்கச் செய்கின்றது. மீண்டும் மீண்டும் தன்னளவில் வாசகனின் வாசிப்பு அக்கறையை தூண்டி சிந்தனைச் செறிவை நுகர்பவனாக உருவாக்குகிறது. இது இல்லை.. அது வேறு.. இது எப்படி?அது இப்படி இருந்திருக்கலாம்… இது மாதிரியாக கூட வடித்திருக்கலாம்…. என்கின்ற பலதரப்பட்ட வாசக எதிர்பார்ப்பைப் பரிபூரணமாக்கி நிரப்பியுள்ளது.

கவிஞர் மு.ஆனந்தன் அவர்கள் வழக்கறிஞராக சமூக ஆர்வலராகத் தமதுப் பார்வையை தம்மைச் சுற்றி அன்றாடம் நிகழ்ந்து வரும் சமகால அவலங்களை கவிதைப் புறம் திருப்பியுள்ளார். அதன் விளைச்சலாக வெளிப்பட்ட கவிதைகள் ஏராளம் தொகுப்பில் தாராளம்.. பிரபஞ்சத்தில் இயற்கையில் மக்கள் கூட்டத்தில் மனித அபிமானங்களில் விளிம்பு உணர்வுகளில் உளவியல் சிதறல்களில் என யாதுமானவராக தமது பயண பாதைகளின் அனுபவ படிமங்களின் சூழல் பாதைக்குள் கவித்துவ தரிசனத்தைத் தந்துள்ளார் கவிஞர். கவிதைகளின் ஊடாக வாசகரைத் தன் இயல்பிலிருந்து தன்னகப்படுத்தி இப்படியான பல தலங்களுக்கு அனுமதியின்றி கரம் பற்றி அழைத்துச் சென்றுள்ளார் . பிரமிப்பும் பெருமிதமும் கொண்டாட சில கணங்களில் இன்பமும் இயலாமையும் ஒன்று சேர்ந்து பயணிக்க வலிகளும் வாதைகளும் வல்லமையாக காட்சிகள் சொப்பனங்களாகி கண்முன் ஊடாடுகின்றன. கவிஞரின் கவித்துவ மொழி வளம் இதுவரை எங்குமே ஆவணப்படுத்தப்படாத அரிய ஆதாரங்களில் பல நுட்பங்களை அறியும் சார்பு கருவூலமாகத் திகழ்கிறது. தமிழ்க்கவி உலகுக்கு இப்படியாக மாறுபட்ட செய்நேர்த்தி கவிதை கவிஞர் மு.ஆனந்தன் அவர்களால் இயங்கி வருகிறது. இப்படியான புத்தாக்கம் பெற்ற புதுக்கவிதைகள் அணிவகுத்து நிற்கும் இந்தத் தொகுப்பைப் போல பல கவிதைப் பொலிவுகள் புதிதாய் ஆக்கம் பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்து விமர்சனத்தை முடிக்கிறேன்.

து.பா.பரமேஸ்வரி
சென்னை
9176190778
நூல் : யுகங்களின் புளிப்பு நாவுகள்
ஆசிரியர் : கவிஞர் மு. ஆனந்தன்
விலை : ரூ.₹80
பக்கங்கள். : 79
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com
து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்




இப்போதும் நீ எனக்கு
*************************
மழலைப் பாதப் பயிலகம்
தடுமாறி வீழும் போதெல்லாம்
அள்ளியெடுத்து ஆரப்புதைத்து
தழுவுவாய் அம்மாவாக…

உனது ஆறுதல் வெப்பத்தைச்
சுவைக்கவே
மீண்டும் அடி வைப்பேன்
ஆசையாய்..

துளிக் கண்ணீரையும் சகிக்காத
உனது பேரன்பில்
எனது வலியும் கூட வலுவிழக்கும்…

இன்றும் நீ இப்படித்தான்..
எட்ட நின்று காட்டிக் கொடுக்கும்
உனது விழிவழி..
பளிங்கு பாசாங்கு ஒவ்வொன்றையும்

துள்ளித் திரியும் வாலிப முறுக்கு
அசட்டையாய் வன்மம் செய்யும்
சறுக்கல் மட்டுமே புலப்படும்..
மீதம் வீழ்த்திய பின் புலம்பும்

விசனமின்றி கைகொடுப்பாய்…
நொடிந்திடும் என் பாதங்களுக்கு..
அதே விசேஷ சாயல்
உனக்கே உனக்கான…
பிரத்யேக முறுவலுடன்..

பரிச்சயம் தான் எனக்கு
விழிகள் உதிர்க்கும்
கண்ணீர் வரிகளைத்
துடைத்துத் தூர்வாரும்
ஒரு அப்பாவாக..

தாழிட்ட இதயவாசல்
*************************
காதலர் தினமன்று மட்டுமே
சிலாகித்துப் பரிமாறும் நமது அன்பு..
இதுவரை காதல் என்பது போலவே
தான் உச்சிமுகர்கிறேன்..

தொலைவில் நின்று கொண்டு
நலத்தை மட்டுமே சம்பிரதாய காதலாக முன்வைக்கும்
உனது பிரியங்களை
காதலர் தினத்தின் அர்த்தராத்திரிகள்
எனது செவிகளைச் சன்னமாகச் சொல்லி விட்டுப் போகும்..

அந்த ஒற்றைத் திளைப்பிற்காக
ஆண்டு முழுமையும்
தவமிருக்கிறேன் …
விழியும் வழியும் மொழியும் பூக்க……..

இன்றும் நீ தாழிட்ட
இதய வாசல் திறக்கப்படாமல் தான் இருக்கிறது…
சாவியை கையிலேந்தியே..

ஞாயிறில் ஞாயிற்றின் மெத்தனம்
***************************************
முன்னிரவும் பின்னிரவும் பிரிந்து
கற்கலின் கடன் தீர்க்க
ஜன ஜந்துக்கள் ஒன்றும்
காடுகரை
களப்புமேடு
யாவும் தேடித்திரிய
நீலம் பாரித்த வானவள்
அங்கசுத்தி முடித்து
உடுப்பு மாற்ற பரிதவிக்கிறாள்…
வசந்தக்குளிரின் சுகவாசியாக
பஞ்சணையில் கதகதக்கும் கரும்போர்வை நீக்காது
சோம்பல் முறிக்கும் ஆதவனின் நிலைக்கதவு திறக்க வேண்டியே..

பாலியல் பரிசுத்தம்
*************************
பாலியல் பேதமற்ற பரிபாஷணை
இடைமறியாத இங்கிதத்தில்
மாடிமுகப்பிற்கு மகனை விரட்டுகிறாள் அன்னை…

கொஞ்சமும் சூதற்ற சம்பாஷணை
சற்றும் வாதமற்ற மொழியில்
தோழியிடம் அன்பைப் பரிமாறுகிறான் பிள்ளை..

உணர்வு புனிதம்போற்ற
உரிமைநம்பகம் சிறக்க
பாலியல் பரிசுத்தம் பறைசாற்ற
பக்கத்து அறைக்குப் பெயர்கிறாள்
அலைபேசி மகளின் மாற்றாந்தாய்..

கைம்பெண் கடன்
*********************
வாழ்வதையில் வதங்கி
மொழி தொலைத்து
மௌனம் தரித்து
உற்றார் நழுவி
உறவு உதிர்ந்து

அடுக்களை கூடாரவிருந்தாகி
அறுசுவை உணவில் கசப்பாகி
விழிகளுக்கு மட்டிலும் உவர்ப்பாகி
புதியன கழித்து
பழையன புகுத்தும்…
மனிதவிலக்கான..
அவளின் பற்றறுந்த கூடு தான்..
எங்ஙனம் வேகும்…?

இப்போதும் நீ எனக்கு….
***************************
மழலைப் பாதப்பயிலகம்
தடுமாறி வீழும் போதெல்லாம் அள்ளியெடுத்து ஆரப்புதைத்து
தழுவுவாய் அம்மாவாக…

உனது ஆறுதல் வெப்பத்தைச்
சுவைக்கவே
மீண்டும் அடி வைப்பேன்
ஆசையாய்..

துளிக் கண்ணீரையும் சகிக்காத
உனது பேரன்பில்
எனது வலியும் கூட வலுவிழக்கும்…

இன்றும் நீ இப்படித்தான்..
எட்ட நின்று காட்டிக் கொடுக்கும்
உனது விழிவழி..
பளிங்கு பாசாங்கு ஒவ்வொன்றையும்

துள்ளித் திரியும் வாலிப முறுக்கு
அசட்டையாய் வன்மம் செய்யும்
சறுக்கல் மட்டுமே புலப்படும்..
மீதம் வீழ்த்திய பின் புலம்பும்

விசனமான்றி கைகொடுப்பாய்…
நொடிந்திடும் என் பாதங்களுக்கு..
அதே விசேஷ சாயல்
உனக்கே உனக்கான…
பிரத்யேக முறுவலுடன்..

பரிச்சயம் தான் எனக்கு
விழிகள் உதிர்க்கும்
கண்ணீர் வரிகளைத்
துடைத்துத் தூர்வாரும்
ஒரு அப்பாவாக..

து.பா.பரமேஸ்வரி
சென்னை

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்




நான் என்‌ செய்வேன்?
**************************
உயிரொன்று தோன்ற
உளம் பூக்க ஊட்டமானாள் அன்னை.
மகனே தன் வாரிசெனப் பூரித்தான் அப்பன்..
இரட்டைப் பிள்ளை போல..
அங்கலாய்த்தாள் அப்பத்தா
பேரனோ பேத்தியோ இரண்டும் சுகமே..
பொக்கை வாய் சிவக்கக் கொக்கரித்தார் தாத்தன்..

உற்றார்கொண்டாட..
உறவுகள் மகிழ்ந்திருக்க..
முழங்கை முடிச்சுகள் ஸ்வரங்கள் இசைக்க
அன்னை அரவணைப்பில் களித்திருந்தேன்..
வெப்பத் திமிரில் வலசைபோனேன்..

நிதம் மல்லிகை வாசம்..
பொழுதொன்றில் ருசியான உண்டியின் சுவாசம்…

இருள் கவ்விய அறைக்குள்
ஈரைந்து கால தவமிருந்தேன்..
வானகமெங்கும் சிறந்திருக்கப்
பொழுதொன்றிலும் கனா கண்டேன்..

முட்டி மோதி முத்தெடுத்தேன்
முக்காடு போர்த்தி மூலையில் சாத்தப்பட்டேன்…

கண் சிமிட்டி விழித்தேன்..
சுற்றும் முற்றும் ரசித்தேன்.

பூவுலக சரித்திரங்கள் பல கதைக்கத் தித்தித்தேன்
அவை அத்தனையும் எனக்கானதே என்பதை
அப்போதுணரும் திறனற்றேன்..

சூழல் குறிகள் யாவும்
சுற்றியே வளைத்திட திணறிப்போனேன்
சுக்குநூறாகிச் சுருங்கியே திசைமறந்தேன்..

அழு குரல் ஒலித்தன..
ஆரவாரங்கள் அறுந்தன
கொண்டாடிய குரல் ஒன்றும்
கண்ணீரில் கனத்தே அமர்ந்தன..

கூர்ந்துற்றேன்..
கொஞ்சம் போல குனிந்து நோக்கினேன்..
நானல்ல என்பதில் துடித்து நொடிந்தேன்
கூனிக்குறுகியே வெலவெலத்து உருகினேன்.
கண்ணீர் பெருக்க இனம் மறந்து இற்றுத் தான் போனேன்..

ஆங்கே இரு பாலுறுப்புகள் அருகருகே அமிழக் கண்டேன்
வேதனையில் துப்பிய விழி நீரை மீண்டும் விழுங்கி ஆற்றினேன்.
வல்லுறவு குற்றம் தாங்க
இன்றே நிரந்தர மூலமானேன்

ஏனிந்த புதுவகை…
இறை எதற்கிழைத்தவிந்தக் தீராதவாதை..

ஆசுவாசமற்ற எனதிந்தப் பிறப்பு..
அவசியமற்ற அனாயாச சிறப்பு.
ஆயாசமாய் மக்கள் இனி இடிந்துரைக்கவிருக்கும்..
எனக்கே எனக்கான எகத்தாளச் சிரிப்பு..

குற்றமற்ற எனைக் கொண்டாட வேண்டாம் உறவுகளே
கொடுங்கோலின்றி எனைக் கொண்டால் போதும் மனிதர்களே..

அங்ஙனம் விட்டொழிக்க விலையோ கொஞ்சமே இனி..
வாங்கவோ விற்கவோ
அதுவும் கூட கெஞ்சுமே நனி..

வாய்க்கும் அது பத்தாது.
எனை வார்த்தெடுக்கவும்
மிச்சமிருக்காது…

புதிரான பாதைகள் புதுவிதமாய் விழுங்கின
மலமற்ற குடல் மலடிபோல மருவியே மிரண்டன..
கொடிசூடிய தொப்புளோ அங்ஙனமே சுருங்கின….
மரணகாலம் கூட களமிறங்க
கலகமற்று கைகழுவின..

இருபாலுறுப்பும் ஒருமித்தமான மனிதமானேன்
திருனர் சமூகத்தின் இருனரானேன்..
இனியோ…
இருபாலினர் மத்தியில் நான் மட்டும் இதரரானேன்..

மூண்ட போரில் மாளாத மணக்கோலம்..
*****************************************************
தொலைத்த உனது முகப்பொழிலைத் தேடியே
கனத்து நிற்கின்றன இமைகள்..

காதல் மொழிகளை மகன் கேட்கும் முன் மென்றுச் சுவைத்த நாவு
சுருண்டு உழல்கிறது..
இறுதியாய் பருகிய உனது பன்னீர் துளிகளை ருசித்தே..

வாரேன் என விடைப்பெற்றாய்..
மீள்வாய் எப்போது என்றே சுளித்தன உனது கரம் பற்றிய எனது விரல்கள்..

பசலையில் பரிதவிக்கிறது
கருஞ்சாந்துக் குறியீடாக….
நீயற்ற புருவ மத்திமம்..

உனக்கும் பிடிக்கும் என்பதாலேயே
மஞ்ச குளிப்பதை மறந்து பச்சையம் உடுத்தினேன்..

செய்தி உடன் வர..
கூடடைந்த புல்லலுருவியாய்
புசிக்க அமர்ந்து..
உடன் கைகழுவினாய்..
கைநழுவ வேண்டியே..

எங்கு தொலைந்தாய்
எங்கு தேடுவேன்

என்றறிந்தே..
உயிரை எனது அறைக்குள் புகுத்தி..
உடலை மட்டும் கயவனின் வேள்வித் தீக்கிரையாக்கினாய் போல…

குற்றவாளி பிறப்பதல்ல..
*****************************
உன்னைத் தவிர
எல்லோர் அழைப்பும் கொஞ்சும்..
நூறைத் தாண்டி உனை கெஞ்சியது எனது அழைப்புகள்….

உன்னைத் தவிர..
கனவுகள் பலதும் நனவுகள் சிலதும் நானே..
குப்பைக் கூடையில் அனாதையாய் முதல் நினைவுப் பரிசு…

உன்னைத் தவிர..
பலர் வாழ்விலும் நானே..
வீழ்விலும் உடனிருந்தேனே..
தூக்கியெறிந்த கலாப வாழ்வு கலங்கியது நேற்று…..

உன்னைத் தவிர…
பக்குவ முகிழ்வில் சமைந்த சமையலைக்
கொண்டாடிய நாவுகள் ஏராளம் ..
தூக்கியெறிந்த பாயாசம்
உவர்த்துக் கிடக்கிறது உலர்ந்து….

உன்னைத் தவிர..
நொடிந்தேங்கும் பாடுகளுக்கு
அலைபேசி விலையானேன்..
விருந்தான அந்தரங்கத்தை
மருந்தாக கசந்துத் துப்பிய உமிழ்நீர்
அறைகிறது முகத்தில்…

இன்று..
ஆசைக்காதலியாய் அந்தரங்க உயரூதியம் பெற்றேன்…
ஆயிரங்கால பதிவிரதயாய் ஓரங்க பதவிநீக்கம் செய்தபின்..

து.பா.பரமேஸ்வரி
சென்னை.