சிறுகதைச் சுருக்கம் 80: பாரவியின் ஒரு நெல்லின் மரணம் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
போலி கபட பாசிச மனோபாவ படைப்புச் சூழல்களிலிருந்து விடுபட்டு எதிரொலிச்சான் கோயில்களைத் தகர்க்கப் புறப்பட்ட பரிசோதனைக்காரர்கள், நவீன தமிழ் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் வரிசையில் இவரும் ஒருவர்
ஒரு நெல்லின் மரணம்
– பாரவி
புதிதாகத் தோண்டப்பட்ட பெரிய கிணறு புது சிமெண்டின் புது நிறங்காட்டிக் கொண்டிருந்தது. உள்ளே நிறமற்றிருந்தது புது ஊற்று. சுற்றிலும் பரந்திருந்த சில ஏக்கர் நிலங்களுக்கு அது தெம்பு காட்டுவதாயிருந்தது. பக்கத்தில் அரைகுறையாகக் கட்டப்பட்ட ஒரு நாலுக்கு நாலு ஷெட், அருகில் கிடந்த இரு நீண்ட சிமெண்டுக் கம்பங்கள் மின் இணைப்புக்காக அதன் மேல் சோர்ந்து உட்கார்ந்திருந்தான் மொழுதியப்பன். அவன் இடுங்கிய கண்கள் ஐ.ஆர்.ன் மேல் நிலைத்திருந்தன. வாய் ஜன்னி கண்டதாய் முனகியிருந்தது. ‘பாழாப்போன மழை மூணு தண்ணி வெச்சா கைக்குத் தேறிடும். ஏரி காஞ்சி ஒரு மாசமாச்சு. பம்பு செட் போட்டா ன்னான்னு பாத்தா, எந்தலையில கரண்ட்டு, நீம அலய தெம்பில்லடா சாமி.”
“என்னாங்க சாமி, ஒங்களத்தான் கடவுளா நினைச்சிக்கீறேன். நம்ப கெணத்துக்கு சீக்கிரமா கரண்டு குடுத்தீங்கன்னா.” வொர்க் ஆர்டருக்கு பணம்லாம் கட்டியதையும், பம்பு செட்டுல்லாம் வாங்கியாந்ததையும் சொன்னான்.
“சரி கெணத்தாண்ட ஒரு கொட்டாயாவது போட்டு, பம்ப்ப அங்க கொண்டாந்து வை, நான் வந்து இன்னிக்கு இன்னா புதனா, நாளைக்கும் முடியாது. வெள்ளிக் கிழமை அந்த ஊருக்குப் போகணும். சனிக்கிழமை செகண்ட் சாட்டர்டேவா போச்சி அப்புறம் ஞாயிறு சரிய்யா. அடுத்த புதங்கிழமை கட்டாயம் வந்து பார்க்கறேன்,”
“என்னாமோ ஒங்க தயவுதான் சாமி. பயிரு பூமி காஞ்சி கீறதால எடுப்பா கீது. ஒரு வாரம் தாக்குப் பிடிக்கும். அதுக்குள்ள செஞ்சீட்டீங்கன்னா.”
“எனக்கின்னாய்யா, எங்க வேலய நாங்க முடிச்சிடுவோம். சாமான்ங்களெ மேலே சீக்கிரமா கொடுத்தா ஏன் டிலே ஆகப்போகுது. நீயுங் கூடக்கூட ஒத்தாசையா நடந்துக்கணும். அப்பப்ப இங்கே ஊருக்கு வரப்போ இங்கேயும் வா பார்ப்போம்.”
மொழுதியப்பன் கும்பிட்டு விட்டு மோவாயைச் சொறிந்து கொண்டு நகர்ந்தான்.
அசிஸ்டெண்ட் எஞ்சினியரிடமிருந்து வந்திருந்த சீக்கிரம் மெமோவுக்கு பணிவுடன் எழுதினார் அந்த கட்டுமான சூபர்வைஸர். ‘இந்த இரண்டு பார்ட்டிகள் மட்டுமே இருப்பதால், அங்கு உடனடியாகக் கனெக் ஷன் கொடுப்பது நம் போர்டுக்கு லாபகரமானதாயிருக்காதாகையால் இன்னும் சில பார்ட்டிகள் சேர்ந்த்தும் ஆவன செய்ய இயலும் என்பதை தங்கள் பார்வைக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’.
அடுத்த புதன்கிழமை ஜீப்பில் வந்து இறங்கினார் சூபர்வைஸர். அவருடன் வந்த போர்மென் “என்னாய்யா நிக்கறியே! ஐயாவுக்கு ஏதாச்சும் குடிக்க கிடிக்க மோரு எளனி எதுவும் இல்லே?” என மொழுதியிடம் உரக்கச் சொல்வதாய் இரைந்தான்.
புது ஷெட்டிற்கு அவர்கள் நகர்ந்தனர். புதிய பம்ப் செட், குங்குமப் பொட்டு, சந்தனம், பூ எல்லாம் வைத்து கோணி பரப்பி அதன் மேல் வைக்கப்பட்டிருந்தது.
“ஏய்யா, இந்தப் பக்கத்திலே வேற யாரும் கெணறு எடுக்கலியா?”
“நம்ம மச்சான் பயதான் புதுசா எடுக்கறான். மதவுக்கா மோலியாரு எடுக்கறாரு. அவுங்களுதும் முடிஞ்சாப் போலத்தாங்..”
“அவங்க ரெண்டு பேரும் அப்ளை பண்ணலையா?”
“கேட்டேங்க ஒங்கெணத்துக்கு மொதல்ல வந்துட்டா, அப்பிடியே ஜுலுவா நம்புளுதுக்கும் கரண்டு இசுத்துக்கலாம்டான்றாங்க”.
சூபர்வைஸர், போர்மென், ஜீப் டிரைவர் யாவரும் மோர் குடித்து கிளம்பினர்.
“ன்னாங்க சீக்கிரமா கரண்டு குடுத்துடுவீங்களா! பயிர பாத்தீங்கள்லே மண்ணு காஞ்சிடுச்சி. ஒரு வாரந் தாக்கு பிடிக்கும்.”
“அதான்யா, அய்யா ஆபீசிலேயே சொன்னாரே. சொம்மா இன்னா சொல்லிக்கினு. வர்க் ஆர்டர் போட்டு சாங்கஷ்ன் ஆயி எஸ்டிமேட் ஸ்கெட்சில்லாம் போட்டு சாமானுங்களெ ரிக்யுசேஷன் போட்டு வாங்கி ஏத்தியாந்து போட்டா…”
“அது இன்னாமோ சீக்கிரமா கரண்டு குடுக்கணுங்க. போன போகமே காஞ்சிப் போச்சிங்க, அதாலதாங் இந்த மழெய ஏரிய நம்பி புரியோஜனம் இல்லேன்னு கடனோவுடனோ பட்டு கஸ்டத்துக்கு கஸ்டம். இதெப் போடறுதுங்க.”
“எல்லாருக்கும் கஷ்டந்தாய்யா. கஷ்டப்படாம துன்ன முடியுமா? ஐயாவை அப்பப்ப வந்து ஆபீசாண்ட பாரு” போர்மென் சொல்லியதற்கு சூபர்வைசர் தலையாட்டினார். மொழுதியப்பனும் தலையாட்டிக் கொண்டான். புழுதி கிளம்பி ஜீப் சென்றது,
ஒரு வாரம் போய், இரண்டாவது வாரம் வந்தது. மொழுதியப்பன் துவண்டு ஆபீஸில் தலையில் கைவைத்து ஓரமாய்க் குந்தியிருந்தான்.
முதலில் போர்மேன் வந்தான். “ன்னய்யா மோரு குடுத்தே, ஒரே பேஜாராப் போச்சி ஜலுப்பு புடிச்சிக்கினு கரகரான்னு பேச முடியல்லே, நீ ஆசையா குடுத்தியேன்னு நல்லாகீதுன்னு குடிச்சிட்டேன் ரெண்டு கிளாசு. மொடாவ கழுவாம கொண்டாந்தியா?” என்று மூக்கை உறிஞ்சினான். “சரி சரி அப்பால போயி ஒக்காரு மொதல்ல. கப்பலு கவுந்த போன மாதிரி தலையில் கை வச்சிக்கினு ஒக்காந்திட்டே.”
சூபர்வைசரும் வந்து விட்டார். நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து முன்னால் இருந்த பேப்பர்களைப் புரட்டினார் “இன்னைக்கி எங்க வேலை”? போர்மேனுக்கு வரிசையாக உத்தரவுகளை பிறப்பித்தார்,
காலையிலே வரச்சேவே மூஞ்சப்பாரு கல்லு மாதிரி எங்க கொஞ்சம் சாந்தமா காம்பிச்சா தலைக்கு மேலே ஏறிக்குவாங்களோன்னு பயப்படறான். நல்ல வாய்ச்சாண்டா என்று நினைத்துக் கொண்டே போர்மேன் நகர்ந்தான்.
மூன்று முறை கும்பிட்டும் சூபர்வைஸர் பார்க்காமல் ஃபைலைப் பார்த்திருந்தார்.
“சாமி வணக்கங்க.”
நிமிராமலேயே தலையை ஆட்டி ஏற்றார். “இன்னாய்யா விஷயம்.”
“அதாங்க நீங்க சொன்னாப்ல நாம்ப செய்ய வேண்டியதுல்லாம செஞ்சாச்சி, நீங்கதாம் பாத்தீங்களே. கரண்டுங்க பயிறு தீஞ்சுகினே வருதுங்க.”
“மொதல்லேயெல்லாம் சும்மாயிருந்துட்டு, இப்ப வந்து பயிரு தீஞ்சிப் போச்சி, உங்களாலேதான் டிலேன்னு சுளுவா சொல்லிடறீங்க” என்று உரக்கச் சொல்லி “இப்பத்தான் நாலு பார்ட்டிகளுக்கு சேத்து சாங்ஷன் கெடைச்சிருக்குது” என்று முணுமுணுத்தார். “முதல்லே போல்ங்களை கொண்டு போகணுமே? லாரி வெள்ளிக்கிழமைதான் நமக்கு வரும். அப்பக்கூட வேற எங்கயாவது முக்கியமான வேலையிருந்தா அங்கே போயிடும். இப்பல்லாம் பார்டிங்கதாம்பா கம்பங்களை அவங்களே வண்டி கட்டியார்ந்து கொண்டு போறாங்க என்ன சொல்றே?”
மொழுதியப்பன் அசட்டுத்தனம் நிரம்பியவனாய் காட்சியளித்து தலையைச் சொறிந்தான்.
“கம்பம் வேணும்னா நீயே எடுத்துக்கினு போ. சும்மா மசமசனு நின்னு பிரயோஜனம் இல்லை” என்று சூபர்வைஸர் சொன்னார்.
மொழுதிக்கு கொஞ்சம் உறைத்தது. “நீங்க சொல்றாப்பல வண்டி ஓட்டியாந்த எடுத்துக்கினு போறேன். எங்கே கீதுன்னுங்கீன்னா நாளைக்கு காலியிலேயே வறேன். எத்தினி கம்பங்க?”
“மூணுய்யா, பெரிய கோவிலுக்குப் பக்கத்திலே பேட்டையில்லே அங்கேதான் ஸ்டோர்லே இருக்கு. நா சீட்டு எழுதித் தரேன். அத காண்பிச்சிட்டு எடுத்துக்கலாம்”.
“வரேனுங்க” வெளியே போர்மென் நின்று கொண்டிருந்தான்.
“இன்னாய்யா ஆபிசரு என்னை சொல்றாரு?” என எகத்தாளமாய்ப் புகைபடிந்த பற்களைக் காட்டினான். “சரி வா காபி சாப்பிட்டு பேசலாம்” என்று முன் நடந்தான்.
“ஏம்பா சர்வ முறுகலா ரெண்டு செட் தோசை சாம்பார், அதுக்குள்ளே ரெண்டு செட் போண்டா சாம்பார் கொண்டு வா.”
போர்மென் போண்டாவை சாம்பாரில் கரைத்து ருசித்தான். “ன்னுங் கொஞ்சம் சாம்பார் கொண்டாய்ய. சாப்பிடுய்யா, சாப்பிடறதுக்குத்தானே சம்பாதிக்கிறோம், வேலை செய்ய றோம் என்ன நாஞ் சொல்றது?”
“ஆமாங்க, ஆமாங்க.”
சர்வர் பில்லை மொழுதியப்பனிடம் தந்தான். போர்மென் சிகரெட்டை பற்ற வைத்தான். “நாஞ் சொல்றதைக் கேளுய்யா, எதுவும் செய்றாப்போல செஞ்சாதான் வேலை நடக்கும். சுக்காஞ் செட்டியா துட்ட கோமணத்திலே முடிச்சி போட்டு அமுக்கிக்கினு ஒக்காந்திருந்தா ஒன்னுமே நடக்காது. ஆமா, அய்யாவுக்கெல்லாம் ரெடி பண்ணிட்டயா. இதெல்லாம் சந்தோஷமா செய்ய வேண்டியதுய்யா. அப்புறம் மூணு போகம் அறுத்தா எங்களுக்கா தூக்கிக் குடுக்கப் போறே?”
மொழுதியப்பனுக்கு எதுவும் நியாயமென்றேப்பட்டது. முன்னால் பம்புசெட் போட்டவர்களும் சொல்லக் கேள்விதான். எனவே உண்மைதான் என்று தலையாட்டினான்,
“செரி செரி ஒன் இஷ்டம் இப்ப ஒண்ணும் அவசரமில்லே. ஆனா மறந்துடாதே.”
போர்மென் சைகிளில் ஏறி வடக்காய்ப் போனான்.
ஆளுக்கு ரெண்டு ரூபாய் சாப்பாடு என்று கூலி பேசி ஆறு ஆட்களும் வண்டியுமாக மறுநாள் காலையில் மொழுதியப்பன் வந்தான். கும்பிட்டான். “போய் எடுத்துக்க” சூபர்வைஸர் சீட்டு தந்தார்.
மறுநாள் காலையில் வந்து ஆபிசரைப் பார்த்துச் சொன்னான்.
“சரி கொண்டு போயிட்டேயில்லை. கம்பம் நடறதுக்கு ஆளுங்க வருவாங்க. அப்புறம் ஒயர இழுத்து கனெக் ஷன் தருவோம் போ அங்கேயே இரு.”
போர்மென் வெளியில் வந்து சொன்னான் “கம்பம் நட வர்ற ஆளுங்களுக்கு சாப்பாடு போடுவேயில்லை. நம்பளாட்டம் மனுசங்க தானேயா அவுங்களும். இன்னா.”
மொழுதியப்பன் தலையை ஆட்டினான். “பயிரு அடி தீஞ்சி வருதுங்க ரெண்டு மூணு நாள்லே குடுத்தீங்கன்னா படிக்கிபாதியாவது தேறும்”.
“எல்லார்க்கும் இங்கே வரச்சேதான்யா அவுசரம். பயிருதீயுது எல்லாம் போவுதுனு” போர்மென் திரும்பி நடந்தான்.
கம்பங்களைப் போட்டு ஒரு வாரம் ஆனது. வேர் காய்ந்த சுருக்கில் பயிர் துளித்துளிக் கதிர் வாங்கி பூத்தது. நஞ்சை விரிசல் கண்டிருந்தது. ஆட்களைக் காணோம். ஆபீசரைப் பார்த்து சொல்லவும் பயமாக இருந்தது. ஆனால் அந்த மூன்ற ஏக்கர் பரப்பின் ஐ.ஆர் பயிர் யாருக்காகவும் காத்திருக்காமல் எந்தப் பசுமைப் புரட்சியையும் காட்டாமல் கருகியது.
புது நிறங்காட்டியிருந்த கிணற்றின் மேட்டில் நாலுக்கு நாலு ஷெட்டின் பக்கத்தில் கிடந்த இரு நீண்ட சிமெண்டுக் கம்பங்கள் மின் இணைப்புக்காக. அதன் மேல் உட்கார்ந்திருந்தான் மொழுதியப்பன். ணங்கியபடி அவன் இடுங்கிய கண்கள் மேலும் நொடித்து உள்ளாழத்தில் சாவியாகி வறண்டிருந்தன.
ஒவ்வொரு வாரங்களின் கழிவிலும் ஒவ்வொன்றும் நடக்கும். ஆட்கள் வரலாம். கம்பம் நடலாம் ஒயர் இழுத்து கனெக் ஷன் தரலாம்.
அந்தச் சிறு நெற்பூ காயாகப் பார்த்த போது பாளமாய் வெடி நஞ்சை மண்ணில் மாண்டது.
தெரியாமல் தவணை தவறியதால் கடன் கொடுத்த பாங்க்காரர்கள் அட்டாச் செய்ய வருவார்களோ?
@
தீபம் 1972