நூல் அறிமுகம்: பிருந்தா சீனிவாசனின் “பதறும் பதினாறு” – இரா.இயேசுதாஸ்

நூல் அறிமுகம்: பிருந்தா சீனிவாசனின் “பதறும் பதினாறு” – இரா.இயேசுதாஸ்




நூலின் பெயர் “பதறும் பதினாறு” என்பதால் …பதினாறு…அதையொட்டிய பதின்பருவ குழந்தைகளின் பெற்றோராக உள்ள உறவினர்…தோழர்களுக்கு வாங்கிய விலைக்கு கொடுப்பதே நோக்கம், ஆனால் நூலின் உள்ளடக்கம் பதறுவது பதினாறல்ல… பதினாறின் அம்மாவாக…அப்பாவாக….உள்ள பரிதாபத்துக்குரிய பெற்றோர்தான் என்பதைப் புரிந்து கொண்டேன் .

நாமும் பதின்பருவத்தைத் தாண்டித்தான் பெற்றோராக…தாத்தா…பாட்டியாக வந்திருக்கிறோம்.. ஆனால் இன்றுள்ள பதின்பருவத்தினரும்… அவர்களின் பெற்றோரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கவில்லை… அப்படி என்ன பிரச்சினைகள் என பொறுப்புணர்வோடு ஆய்வு புள்ளிவிவரங்கள் துணையுடன்… கண்ட…கேட்ட… உண்மைச்சம்பவங்கள் அடிப்படையில் பிருந்தா சீனிவாசன் இந்நூலை நமக்கொரு எச்சரிக்கை நூலாக எழுதியுள்ளார்.

30 கட்டுரைகள் வழியாக 50 சம்பவங்கள்.. 50 வித்தியாசமான, தனித்தனியான பிரச்சினைகள்…அவற்றை எதிர்கொண்டு.. தீர்வு கண்டு..குழந்தைகளைத் தடம் பிறழ்ந்து விடாமல் காப்பாற்றியதை, பெற்றோருக்குப்
பயமுறுத்தலாக இல்லாமல் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது..5-6 மணிநேரத்தில் சராசரி வாசகரால் வாசித்து விடலாம்.

50 சம்பவங்களை விவரிக்க வேண்டியதில்லை… ஏனெனில் அதுவே நூலாகிவிடும். இப்படி அடக்க ஒடுக்கமா வீட்ல இருக்கற பொண்ணா இப்பிடி பண்றா..என்று பெற்றோரை பதற வைக்கும் பதினாறு வயது பெண் தொடங்கி… பத்தாம் வகுப்பில் ஸ்கூல் ஃபஸ்ட் வந்த மகன் ..12ம் வகுப்பில் மயிரிழையில் தேர்வில் பாஸ் பண்ண என்ன நிகழ்ந்தது அவனுக்கு..என நாம் தினசரி வீட்டிலும்..வெளியிலும்..சந்திக்கும் பல பதற வைக்கும் பதினாறுகளை இந்நூல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

தற்கொலை செய்வதாக கூறும் பதினாறுகளில் அதிகம் அதை செய்து கொள்வது ஆண்பிள்ளையா? பெண் பிள்ளையா?..ஏன் அப்படி….என நூல் விவரிக்கிறது..

பெண் வயதுக்கு வருவது.. மாதவிடாய், பற்றியெல்லாம் ஓரளவாவது அறிந்துள்ள நாம் ஆண்பிள்ளைகளுக்கும் வயதுக்கு வரும் சம்பவம் பற்றி கவனம் செலுத்தி அந்த வயதில் அவனுக்கு உடலில் (குரல்.. உயரம்…பிற) ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவனிடம்.. விவாதிக்கிறோமா…என்ற கேள்வியை இந்நூல் நம்முன் எழுப்புகிறது.

தன்னை அழகு படுத்திக் கொள்வது…முடியலங்கார கவனம்…முடி கொட்டுவது பற்றி கவலை.. நட்புவட்டத்தின் கேலி…கிண்டலால் மனமுடைந்து போதல்…தன்னைவிட மூத்த மாணவன்-மாணவி மீது ஈர்ப்பு…கூடா நட்பால் மது, புகையிலை, போதைப்பொடி பயன்பாடு, கூடுதல் செலவுக்காக வீட்டில் பொய்சொல்லி பணம் வாங்கல் அல்லது திருடுதல், வகுப்பை கட் அடித்துவிட்டு சினிமாவிற்கு செல்லல், என்று பெற்றோரின் கவனத்திற்கு வராமல் “பதினாறுகள்”பல சேட்டைகளில் ஈடுபடுவதும்….இவற்றில் இருந்து இவர்களை பக்குவமாக மீட்பது….மீட்டது பற்றி நூல் எடுத்துக்கூறுகிறது. தேவைப்படின் மனநல மருத்துவரின் கலந்தாலோசனை அவசியம் என நூல் வழிகாட்டுகிறது.

பதின்பருவ குழந்தைகள் உடல்ரீதியாக…மனரீதியாக..எவற்றை எதிர்கொள்ளவேண்டும் என்பதற்கு ஆறாம் வகுப்பு முதலே பள்ளிபாடத்தில் பாலியல் கல்வி படிப்படியாக அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்பது மிகச்சரியான ஆலோசனை.. வீட்டில் பெற்றோர்களை எதிர்க்கும் மனப்பான்மை பதின்மவயதில் பருவக்கோளாறாக பரிணமித்து விடுவதால்… ஆசிரியர் வழி அதற்கான உளவியல் பாடம் கல்வியில் படிப்பில் சேர்க்கப்பட்டு பாடமாக
நடத்தப்படும்போது… மாணாக்கரின் உணர்ச்சிபூர்வமான நிலையை… உணர்வுபூர்வமானதாக…மாற்றிப் பண்படுத்த முடியும்..

பெரும்பாலும் பெண்குழந்தைகளைவிட ,ஆண்குழந்தைகளை இந்த பதின்ம வயதைக்கடக்க வைப்பது அம்மாக்களுக்கு பெரும் சவால்…ஏனெனில் அப்பாக்களை குழந்தைகள் திடீரென வில்லன்களாக பார்க்க ஆரம்பித்து விடுகிறார்ளாம். (சிலர் விதிவிலக்காக இருக்கலாம்)

அண்மைக்காலத்தில் மாபெரும் சவாலான பிரச்சினை ஸ்மார்ட் போன்…பெண் குழந்தைகள் கூட முகநூல் நட்பால் கருகலைக்கும் நிலைவரை வந்து சிக்கவைக்கப்படுகிறார்கள்.

63%பேர் 4-7மணிநேரமும்….23%பேர் எட்டுமணி நேரத்திற்கு மேலாகவும்….14%பேர் 3மணிநேரமும் ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட் போனில்…சமூகவலைதளங்களில் புதைந்துகிடப்பதாக ஓர் ஆய்வு எச்சரிக்கை செய்கிறது.

கணிசமான தொகையில் இருசக்கர வாகனம்…. ஆண்ட்ராய்ட் செல் வாங்கி கொடுத்து குழந்தைகளை
அழகுபார்ப்பதாகக் கருதி நுகர்வுக் கலாச்சாரத்தில் அமிழ்த்திவிடும் படாடோப பெற்றோரை என்னவென்பது? மதிப்பெண்ணே வாழ்க்கை என வதைக்கும் ஜென்மங்களால் நிரம்பியுள்ளது தேசம்!

ஒரு குழந்தையை ஒரு பொறுப்புமிக்க குடிமகனாக வளர்க்கும் பொறுப்பு குடும்பம்,பள்ளி,சமூகம்,அரசு ஆகிய நால்வருக்கும் உள்ளது.

குடும்பத்தில் அம்மா, அப்பா ரோல் மாடலாக இருக்கவேண்டும்…குடி,புகை,வன்முறை குடும்பத்திலிருந்து குழந்தைக்கு தொற்றும் வியாதிதானே…எத்தனை பெற்றோர் தன் குழந்தை பற்றி பள்ளி ஆசிரியரிடம் சென்று பேசுகிறார்கள்? எத்தனை ஆசிரியர்களுக்கு திடீரென முரண்டுபிடிக்கும் மாணவனை அடையாளம் கண்டு அவனை தனியே அழைத்து பேசிட நேரமுள்ளது? “அதற்கான”வயசு இதுவல்ல என எடுத்துப்பக்குவமாய் சொல்ல எத்தனை பள்ளிகளில் உளவியல் ஆலோசகர் உள்ளார்?.. எல்லாம் போகட்டும்… எத்தனை அப்பா..அம்மாவுக்கு குழந்தையுடன் உட்கார்ந்து பேச நேரம் இருக்கிறது? யாருக்காக வாழ்கிறோம்…. எதற்காக வாழ்கிறோம்…என்பதை தெரியாமல்… வாழ்க்கை முடிந்தபின் வருந்தி என்ன பயன்?

எல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை…என எடுத்துச்சொல்ல அறிவியல் ஆசிரியர்கள் முடிவு செய்தால்… குழந்தைகளை இனிமையுடன் கடக்க வேண்டிய பதினாறு வயசு…. பதறும் பதினாறு ஆக பரிதவிக்க விடுமா? பாதிக்கப்படும் ஒவ்வொரு குழந்தையையும் மீட்டெடுக்கும் முதல் பொறுப்பு ஆசிரியருக்கு…அடுத்து பெற்றோருக்கு…. இதற்கான அறிவை சமூகத்திற்கு வழங்கவேண்டியது அரசுக்கு!..

“பதறும் பதினாறு”. ஒவ்வொரு ஆசிரியரும்…..அம்மாவும்…. அப்பாவும் படிக்க
வேண்டிய நூல்..

நூல் : பதறும் பதினாறு
ஆசிரியர் : பிருந்தா சீனிவாசன்
விலை : ரூ.₹180
வெளியீடு : தமிழ் திசை
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

– இரா.யேசுதாஸ்