Parinirvanam Poem by Puthiyamaadhavi புதிய மாதவியின் கவிதை பரிநிர்வாணம்

பரிநிர்வாணம் கவிதை – புதியமாதவி



தலையில் விழுந்த
காக்கையின் எச்சம்
மயிர் பிளந்து துளிர்விடும்
போதி மரத்தின் விதை.
நரம்பு மண்டலத்தை
துளைத்துக்கொண்டு
குருதி குடித்து
நீள்கின்றன வேர்கள்.
கபாலம் வெடித்துச் சிதறியதில்
புத்தனுக்கும் காயம்.
தலைகீழ் யோகாசனம்
மூச்சுப்பயிற்சி
முக்தி நிலை.
இரவுக்கு என்ன அவசரம்?
வெளிச்சம் தேடி
வனவாசம்.
இலைகள் போர்த்திய காடுகள்
பச்சையங்கள் தின்று
பசியாறும் நிழல்கள்
திரும்பிப் பார்க்காத நதியின்
வெள்ளம்
விழித்துக்கொள்கிறது
அவள் விடியல்.
வாசல் தெளித்துக்
கோலமிடுகிறாள்.
மரக்கிளைகள் அசைகின்றன.
சிறகு முளைக்காத
குஞ்சுகளின் பசி
பறவைகளின் படபடப்பு
வானத்தின் சிறகசைப்பு
நதியின் பயணத்தில்
துடுப்புகள் தடுமாறுகின்றன.
கழிமுகம் காத்திருக்கிறது
வந்து சேராத
பரிநிர்வாண புத்தனுக்காக.