பார்வை குறுங்கதை – இரா.கலையரசி
கையில் தடியுடன் நடக்க ஆரம்பித்தார் கணேசன்.
பறவைகளின் இன்னிசை கச்சேரி தொடங்கி இருந்தது.ம்.ம். பாடுங்கனு சொல்லிகிட்டே நடந்தார்.
தினமும் கடந்து போகும் அவரை சரக்கொன்றை மலர்கள் வரவேற்றன. ஏனோ? கணேசனை பார்க்க அவ்வளவு பிரியம் அவைகளுக்கு.
கீழே உதிர்ந்த மலரை கையில் எடுத்துக் கொண்டார்.பெருமையாக இருந்தது மலருக்கு.
தெரு முனையைக் கடந்ததும் அவருடன் சேர்ந்து கொண்டது தெருநாய்.”லொள்” லொள் என குரைத்து அவர் கால்களை நக்கியது.
அதை பாசத்துடன் தடவியபடி, வாங்கி வந்த பிஸ்கட்டை போட்டு விட்டு, நடையைத் தொடர்ந்தார்.
சாலையோர தேநீர்க் கடையில் சலசலக்கும் மனிதர்களின் ஓசை அன்றைய நாளின் தொடக்கத்தை பேசியது.
நடை பயிற்சியை முடித்து வீடு திரும்பிய கணேசனை பூனைகள் சுற்றி வளைக்க,
பாலை ஊற்றி விட்டு வந்தார்.
சற்றே அமர முற்பட, மேசையில் இருந்த அவரது கண்ணாடி கீழே விழுந்தது.கைகளை துழாவி, எடுத்துப் போட்டுக் கொண்டார்.
உலகின் அனைத்து நிகழ்வுகளையும் தன் அன்பு வழி பார்வையில் பார்க்கிறார் பார்வை மாற்றுத்திறனாளி கணேசன்.