நூல் அறிமுகம்: விட்டல்ராவின் ”மீண்டும் அவளுக்காக” – பாவண்ணன்
மனம் என்னும் விசித்திர ஊஞ்சல்
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பாக அஞ்சலை என்றொரு நாவல் வெளிவந்து வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதை எழுதியவர் கண்மணி குணசேகரன். அஞ்சலை என்னும் இளம்பெண்ணை அவளுடைய அக்காள் கணவனே இரண்டாம்தாரமாக மணந்துகொள்ள விரும்புகிறான். ஆனால் அஞ்சலையின் தாயாருக்கு அதில் உடன்பாடில்லை. அவளைப் பழிவாங்கும் எண்ணத்தோடு புதிய இடத்திலிருந்து ஒரு மாப்பிள்ளையை பெண் பார்க்க அழைத்து வருகிறான் மருமகன். திருமணத்துக்குத் தேதி குறித்துவிடுகிறார்கள். மணமேடையில் அமரும்போதுதான் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மணமகன், பெண் பார்க்க வரும்போது மாப்பிள்ளை என தனக்குச் சுட்டிக் காட்டப்பட்ட ஆளல்ல என்பதை அவள் உணர்கிறாள். அண்ணன் கட்டழகன். ஏற்கனவே திருமணமானவன். அவனைக் காட்டி நம்பவைத்து நோஞ்சானான தம்பிக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள். அந்த இல்வாழ்க்கையில் அவள் எப்படி சிக்கிச் சீரழிந்தாள் என்பதுதான் நாவலின் களம். இன்றளவும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் நாவல் வரிசையில் அஞ்சலையும் ஒன்றாக இருக்கிறது.
அஞ்சலை வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்தாளர் விட்டல்ராவ் திருமணத்தில் நிகழும் ஆள்மாறாட்டத்தை முன்வைத்து ஒரு நாவலை எழுதினார். மீண்டும் அவளுக்காக என்பது அந்நாவலின் தலைப்பு. தீயூழின் விளைவாக, அந்த நாவல் வெளிவந்த காலகட்டத்தில் அது சரியான வகையில் எதிர்கொள்ளப்படாமலேயே போய்விட்டது. அவருடைய நாவல் பட்டியலில் இடம்பெறும் ஒரு பெயராக மட்டுமே நின்றுவிட்டது.
கதையின் நாயகன் பசுபதி என்னும் இளைஞன். விமானப்படைப்பிரிவில் வேலை செய்பவன். அவனுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்புகிறாள் அவன் தாய். ஆனால் முதுமையின் காரணமாக அவளால் நாலு இடங்களுக்கு அலைந்து திரிந்து பெண் பார்க்க முடியவில்லை. எல்லைப்பகுதியில் பணிபுரியும் பசுபதிக்கோ பெண் பார்ப்பதற்காக ஊருக்கு வந்து செல்ல நேரமில்லை. ஊரிலேயே இருக்கும் மூத்த சகோதரனுக்கு அத்திருமணத்தில் எந்தவிதமான ஆர்வமும் இல்லை. வீட்டிலிருக்கும் மற்றொரு இளைய சகோதரனோ கூச்ச சுபாவத்தின் காரணமாக மற்றவர்களை நிமிர்ந்து பார்த்து பேசக்கூட தயங்கி ஒதுங்கிச் செல்பவனாக இருக்கிறான். அப்படிப்பட்டவனை அழைத்துச் சென்று ஒப்புக்கு ஒரு பெண்ணைப் பார்த்துப் பேசி முடிவு செய்கிறார் அவன் தாய்மாமன்.
பசுபதிக்கு பெண்ணின் புகைப்படம் மட்டும் அனுப்பிவைக்கப்படுகிறது. பெண்ணின் தோற்றம் நிறைவளித்ததால் அங்கிருந்தபடியே திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறான் அவன். மணமேடைக்கு வந்த பிறகுதான் புகைப்படத்தில் பார்த்த பெண் வேறு, மணமகளாக அமர்ந்து தாலி கட்டிக்கொண்டவள் வேறு என்பதை அவன் உணர்கிறான். அவளோடு சேர்ந்து வாழ விருப்பமில்லாமல் அவன் கிராமத்தைவிட்டு அடுத்த நாளே வெளியேறி எல்லைக்குச் சென்றுவிடுகிறான். அதற்குப் பின் உறவினரை வெறுத்து ஒதுங்கி வாழ்கிறான்.
அன்றே சட்டப்படியான மணவிலக்குக்கு அவன் முயற்சி செய்யத் தொடங்குகிறான். ஆனால் அவன் பிரிந்து செல்ல நினைத்தாலும் அந்தப் பெண் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிக்கிறாள். அதனால் மணவிலக்கு முயற்சி தோல்வியடைந்துவிடுகிறது. அந்தச் சலிப்பில் ஊர்ப்பக்கம் செல்வதையே நிறுத்திவிடுகிறான் பசுபதி. ஒருபக்கம் அவன் முயற்சிகளையும் மறுபக்கம் மணமகள் சார்பாக அவளுடைய தந்தை இருவரையும் சேர்த்துவைக்க எடுக்கும் முயற்சிகளையும் மாறிமாறி விவரித்தபடியே செல்கிறது நாவல். இறுதியில் அவன் மனம் மாறும் விதமாக ஒரு சூழல் உருவாகிறது. வாழ்நாள் முழுதும் ஒதுக்கி விலக்கிவைக்க வேண்டும் என நினைத்த பெண்ணை தன்னுடன் இணைத்துக்கொண்டு சேர்ந்து வாழத் தொடங்குகிறான் பசுபதி.
மனத்துக்கும் மனித ஆசைகளுக்கும் உள்ள தொடர்பு விசித்திரமானது. மாறிக்கொண்டே இருப்பதுதான் அதன் இயல்பு. மனத்துக்கும் மனிதர்கள் எடுக்கும் முடிவுகளுக்கும் உள்ள தொடர்பும் விசித்திரமானது. ஒரு கட்டத்தில் வேண்டாம் என்று முடிவெடுக்கும் மனம் இன்னொரு கட்டத்தில் வேண்டும் என்று முடிவெடுக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பின்னணி இருக்கிறது. மனம் செயல்படும் விதத்தை உறுதியான சூத்திரங்களைக் கொண்ட கணக்கு என வகுத்துவிட முடியாது. சூத்திரங்களே இல்லாமல் சுதந்திரமான செயல்பாடுகளைக் கொண்டது மனம். ஒன்றை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் அந்தச் சுதந்திரமே காரணம். விட்டல்ராவின் நாவல் அந்தச் சுதந்திரத்தை ஆய்வுப்பொருளாக்குகிறது.
பசுபதியின் வாழ்க்கையை ஒரு கோடு என வைத்துக்கொண்டால், அக்கோட்டைச் சுற்றி பல கோடுகளை முன்னும் பின்னுமாக இணைத்து நாவலின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார் விட்டல்ராவ். சுவாமிநாதன் – வேதவல்லி இணையரின் வாழ்க்கை ஒரு கோடு. கணவனை இழந்த லீலாவதியம்மாளின் வாழ்க்கை இன்னொரு கோடு. சாதிப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க விமான எல்லைப்படையில் வேலை செய்துவருபவனை மணம் செய்துகொண்டு வெளியேறும் திருத்துளாவின் வாழ்க்கை மற்றொரு கோடு. ஐசக் தம்பதியினரின் வாழ்க்கை பிறிதொரு கோடு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விருப்பத்தோடு வாழ்கிறார்கள். ஒரு புதிய தொடர்பின் வழியாக தனக்குத் தேவையான ஒரு விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள நினைக்கிறார்கள். எதிர்பார்ப்பில்லாமல் பழகுகிறவர்களே இல்லை. திகைப்பூட்டும் அந்த உண்மை, விட்டல்ராவ் சித்தரிக்கும் வெவ்வேறு காட்சிகளின் வழியாக திரண்டு வந்து முகத்தில் அறைகிறது.
எல்லையிலிருந்து விடுப்பில் சென்னை வரும் திட்டமிருப்பதாக பசுபதி தெரிவிக்கும் ஒவ்வொரு சமயத்திலும் சுவாமிநாதனின் மனைவி வேதவல்லி, டில்லி வழியாக வரும்போது ஏதேனும் சில பொருட்களை வாங்கிவருமாறு கடிதம் எழுத வைக்கிறாள். ஒருமுறை மோடாக்கள். இன்னொருமுறை பாசுமதி அரிசி. மற்றொருமுறை கம்பளி ஆடைகள். லீலாவதி அம்மாளுக்கு பொருள்கள் சார்ந்த எதிர்பார்ப்பு எதுவுமில்லை மாறாக, தன் மகள் மணம் செய்யவிருக்கிற இளைஞனின் நடத்தையைப்பற்றி விமானப்படைப்பிரிவில் தீர விசாரித்து தகவல் சேகரித்துத் தெரிவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். அவனிடமிருந்து பதில் கிட்டாத நாட்களில் அவள் ஏமாற்றத்தில் மூழ்கிவிடுகிறாள். அவன் நேரில் வந்திருந்தபோது அவளைச் சந்தித்து, எல்லைப்பிரிவில் பணிபுரியும் மாப்பிள்ளை வேண்டாம் என்று யோசனை சொல்கிறான். ஆனால் அவளுக்கு அந்த யோசனையில் நாட்டமில்லை.
பசுபதியோ வேறொரு நெருக்கடியில் மூழ்கியிருக்கிறான். மனைவியிடமிருந்து மணவிலக்கு பெறமுடியவில்லை என்கிற வருத்தம் ஒருபக்கம் இருந்தபோதும், மனைவியின் அப்பா விமானப்படைத்துறை மேலாளர்களுக்கு அடிக்கடி எழுதும் புகார்க்கடிதங்களால் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு ஆட்படவேண்டிய நெருக்கடிகள் அவனைத் தடுமாற வைக்கின்றன. இடமாற்றல் பெற்று அவன் எந்த ஊருக்குச் சென்றாலும், அதை எப்படியோ தெரிந்துகொள்ளும் அவர் உடனடியாக முகாம் தலைவருக்கு புகார்க்கடிதம் எழுதி நெருக்கடிகளை உருவாக்கிவிடுகிறார்.
அடிக்கடி நிகழும் துறைரீதியான விசாரணைகளையும் நெருக்கடிகளையும் தவிர்ப்பதற்காக, வேலையை உதறிவிட்டு விமானப்படைப்பிரிவிலிருந்து வெளியேறிவிடும் முடிவை எடுக்கிறான் பசுபதி. அது பல விதங்களில் தனக்கு மனவிடுதலையை அளிக்கும் என அவன் நினைக்கிறான். ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச ஆண்டுகள் வரைக்கும் பணியில் நீடித்த பிறகு, வேலையை உதறி துணிச்சலாக வெளியேறிவிடுகிறான். முன்னாள் படைவீரர் என்னும் பிரிவில் ஏதேனும் ஒரு வேலை தனக்குக் கிடைத்துவிடும் என்றொரு நம்பிக்கை அவனை இயக்குகிறது. வேலைக்காக நேரிடையாக அணுகிச் செல்லும்போது கிட்டும் அனுபவங்கள் அவன் நம்பிக்கையைச் சிதறடித்துவிடுகின்றன.
துறை விசாரணை என்கிற பெயரில் மன அழுத்தம் கொடுக்கும் நிலை இனிமேல் ஏற்பட வழியில்லை என்றான பிறகு மணவிலக்கு தொடர்பாக நேரிடையாக ஒருமுறை பேசிப் பார்க்கலாம் என நினைத்து ஊருக்குச் செல்கிறான் பசுபதி. பெண்ணின் தந்தையாரும் உறவினர்களும் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருகிறார்கள். ஆனால், அவர்கள் மணவிலக்குக்குச் சம்மதிக்க மறுக்கிறார்கள். ஆள்மாறாட்டம் செய்து நிகழ்த்திய திருமணத்தை பிழை என ஒருவரும் உணரவில்லை. ஒருவரும் எதிர்பாராத விதமாக மணப்பெண்ணே அந்தச் சபையில் தோன்றி, மணவிலக்குக்குச் சம்மதமென்று தெரிவித்துவிட்டுச் செல்கிறாள். பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ விரும்புவதாகச் சொல்லிக்கொண்டே இருந்தவள் எதிர்பாராத விதமாக மனம் மாறி பிரிந்துசெல்ல சம்மதித்த காரணம் அவனுக்குப் புரியவே இல்லை. மணவிலக்குக்காக வந்தவன், மணவிலக்கு செய்யும் முடிவை எடுக்கத் தடுமாறுகிறான்.
தொடக்கத்தில் இருந்த உறுதியை அக்கணத்தில் இழந்துவிட்டோம் என்பதை பசுபதியால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒருவகையில் அவன் எடுத்த முடிவுக்கும் அதில் அவன் காட்டிய உறுதிக்கும் அவனுடைய வேலைச்சூழலும் ஒரு காரணம். விமானப்படைப்பிரிவு ஊழியன் என்னும் அடையாளம் அப்படியெல்லாம் ஒரு வேகத்துடன் யோசிக்கத் தூண்டியது. வேலை தேடி அலையும் ஒரு சராசரி இளைஞனாக நிற்கும் தருணத்தில் அந்த வேகமில்லை. அதனால் அவனால் பழைய முடிவை எடுக்கமுடியவில்லை. அதில் உறுதி காட்டவும் அவனால் முடியவில்லை. நண்பன் வழியாக அவன் தெரிந்துகொண்ட இன்னொரு நிகழ்ச்சியும் அவன் தடுமாற்றத்துக்குக் காரணமாகிவிட்டது. தொடக்கத்தில் அவன் மணவிலக்கு வழக்கு வெற்றி பெறுவதற்காக, மணமகளுக்கு ஏற்கனவே ஓர் ஆணுடன் தொடர்பு இருந்தது என்றொரு கட்டுக்கதையை வழக்கில் சேர்த்துக்கொள்ளலாம் என்று பலரும் ஆலோசனை சொன்ன போதும், அதற்கு உடன்பட மறுத்தவன் பசுபதி. அவர்கள்தான் உண்மையை மறைத்தார்கள் என்றால் நாமும் உண்மைக்கு மாறாக பொய் சொல்வது பெரும்பிழை என்று எடுத்துரைத்து, அவர்கள் திட்டத்தையே உதறியிருந்தான். அந்தப் பழைய செய்தி எப்படியோ அவள் காதுகளை அடைந்துவிட்டது. உண்மையிலிருந்து பிறழ விரும்பாத பசுபதியின் நிலைபாடு அவளைக் கவர்ந்துவிட்டது. அவன் வழியிலிருந்து விலகிச் செல்ல அவள் அறிவித்த முடிவுக்கு அதுவே காரணம். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, மணவிலக்குத் திட்டத்தை கைவிட்டு, அவளோடு சேர்ந்து வாழ நினைக்கிறான் அவன்.
ஆள்மாறாட்டத் திருமணம், மணவிலக்கு முடிவு, சேர்ந்து வாழ எடுக்கும் முடிவெடுக்கும் திருப்பம் என்ற மூன்று புள்ளிகளிடையே நிகழும் உணர்ச்சிக்கொந்தளிப்பு மிக்க நாவலை, விமானப்படை நிலைய பின்னணியில் புதுமையான முறையில் விட்டல்ராவ் எழுதியிருக்கிறார். விமானப்படைப்பிரிவில் பள்ளியிறுதிப்படிப்பை முடித்துவிட்டு அடிமட்ட ஊழியர்களாகச் செல்பவர்களின் செயல்பாடுகளை கச்சிதமான சிறுசிறு காட்சிகள் வழியே சித்தரித்திருக்கிறார். விமானப்படைப்பிரிவில் ஊழியர்களாக இருப்பவர்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த முற்படும் நிர்வாகம், அவர்களுடைய குடும்பவாழ்க்கையின் நலன்சார்ந்தும் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்கிறது என்னும் தகவலை விட்டல்ராவின் நாவல் உணர்த்துகிறது.
துறைசார்ந்த விசாரணைகளில் சிக்கி பசுபதி படும் பாடு தமிழ் நாவல்களில் இதுவரை முன்வைக்கப்படாத காட்சியாகும். எந்திரமயமான செயல்பாடுகள் மிகுந்த ஓர் உலகத்தின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் துறையில், மனிதநலம் சார்ந்த செயல்பாடுகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று எந்திரமயமான குணம். மற்றொன்று இயற்கையான குணம். இரண்டும் நிறுவனத்தின் குணங்கள் என்னும் எல்லைக்கு அப்பால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அதே விகித அளவில் செயல்படும் குணங்களாக உள்ளன. அந்த உண்மையை விட்டல்ராவ் இந்த நாவலில் பல பாத்திரங்கள் வழியாக உணர்த்தியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் இவரால் நமக்கு எவ்வளவு தொல்லை என ஒரு கட்டத்தில் சலித்துக்கொள்கிறாள் வேதவல்லி. இன்னொரு கட்டத்தில் பசுபதி தன் மனைவியை அழைத்துக்கொண்டு வரவிருக்கிறான் என்னும் செய்தியைக் கேள்விப்பட்டதும் தன் அறையிலிருக்கும் மின்விசிறியைக் கழற்றி அவனுக்காக ஒதுக்கியிருக்கும் அறையில் பொருத்த யோசனை சொல்கிறாள். இப்படி நாவலெங்கும் விரவியிருக்கும் பல தருணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இரு குணங்களுக்கிடையில் ஊடாடும் ஊசலென மனம் இயங்கும் விதம், புரிதலின் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒரு விசித்திரம்.
– பாவண்ணன்