Pathayam Short Story by Kamaladevi Aravindhan Synopsis 74 Written by Ramachandra Vaidyanath. கமலாதேவி அரவிந்தனின் பத்தாயம் சிறுகதை - ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 74: கமலாதேவி அரவிந்தனின் பத்தாயம் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்




தமிழ் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதிவரும் திருமதி கமலாதேவி அரவிந்தன் சிங்கப்பூரின் முக்கியமான படைப்பாளி.

பத்தாயம்
கமலாதேவி அரவிந்தன்

நீலகேசம் தரவாட்டின் பாரம்பரிய வீடு விற்பனைக்கு என்றபோது போட்டி போட்டுக்கொண்டு வாங்க வந்தவர்களைப் பார்த்து ஒரு கணம் திக்குமுக்காடிப் போனெதென்னவோ உண்மைதான். ஆனால் நாட்டு நடப்பு அறிந்த பிஷாரடி அம்மாவன்   “சிங்கப்பூரிலிருந்து வந்திருக்காங்கன்னதும் சுலபமா அவுங்களை ஏமாற்றிடலாம்னு நினைபாடே! இந்த பிஷாரடி இன்னும் உயிரோடதான் இருக்கேன்” என்று சீறிப்பாய்ந்தபோதுதான் நிலவரமே புரிந்தது.

அது ஒரு நாலு கட்டு வீடு. சேதுலட்சமி சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தாலும், ஒவ்வொரு விடுமுறைக்கும் முடங்காது, கேரளத்தில் உள்ள இந்தத் தரவாட்டு வீட்டில்தான் வளர்ந்தாள். அன்று ஜே ஜே எனத் தாய்மாமன், சித்தி, தாத்தா, பாட்டி, சின்னத் தாத்தா, முறை வைத்த ஏட்டன்மார்கள், சேச்சிமார்கள் என வீடு முழுக்க உறவுகள் கொண்டாட விளையாடி மகிழ்ந்த நாட்களை அவ்வளவு லேசில் மறக்க முடியாது.

சித்தார்த்துக்கும் இந்த வீடு பிடிக்கும்தான் என்றாலும், விஸ்தரித்துக் கிடந்த சொத்துக்களை எவ்வளவு நாட்களுக்குத்தான் மற்றவர்களையே நம்பி விட்டு வைப்பது?  பையன்கள் இருவருமே கேரளத்தில் நிரந்தர வாசத்துக்குக் கூட பெற்றோரை விட விரும்பவில்லை.  அவ்வப்போது வந்து போவதற்கு முற்றிலும் நவீன மோஸ்தரில் கட்டிய புதிய வீட்டில்தான் அவர்கள் தங்கவேண்டும் என்று அன்புக் கட்டளை வேறு. 

தரவாடு பழையவீடுதான் என்றாலும் சேதுலட்சுமியின் உள்ளம் களித்த உவகை பொங்க வைக்கும் சம்பவங்கள் மட்டுமல்ல, மறக்கமுடியாத புகை படிந்த லிகித மாயையும் இங்குண்டு.  ஒரு விடுமுறைக்கு நடனம், அடுத்த விடுமுறைக்கு கர்நாடகச் சங்கீதம், இன்னொரு விடுமுறைக்கு அட்சரம் பிசகாமல் சொல்லும் நாராயணீயம் வகுப்பு என அப்படியே கேரளத்துக் குட்டியாகவே அவளைப் பழக்கியிருந்தனர் பெற்றோர்.  இந்த வீட்டில் வைத்துத்தான் சித்தார்த் அவளைப் பெண் பார்க்க வந்தான்.

அது முற்றம் ரேழி என்ற வீடமைப்பு அல்ல.  வீட்டு முகப்பே கிளிக்கூண்டில் வரவேற்கும் அழகிய வேலைப்பாடு அமைந்த விசாலமான வாசல் கட்டு. உள்ளே நுழைந்தால் தொங்கும் ரவிவர்மா ஓவியங்கள். சுவரெல்லாம் அழகிய குட்டிக் குட்டி சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த சுவரோவியங்கள் என எதுவுமே இடிந்து சிதிலமாகிவிடவில்லை. ஒவ்வோர் அறையிலும் பெரிய பெரிய கட்டில்கள் மர அலமாரிகள், விசாலமான ஜன்னல்கள். மாடிக்குச் செல்லும் படிக்கட்டே வேலைப்பாடு மிக்கதுதான்.  பதினெட்டு அறைகள் மேலும் கீழுமாகி கொண்ட அந்த விசால வீட்டைச் சுத்தப்படுத்தவே கொச்சு கேசவனுக்கும் அவன் மனைவிக்கும் நேரம் சரியாக இருந்தது,

வீடா அது? அப்படி ஒரு மகிழாலயம்.

அடுக்களைக்குப் போகும் அறைக்கு முன்னால் வெங்கல உருளிகள், வெங்கல தாம்பாளங்கள், உயரம் உயரமான குத்து விளக்குகள், எண்ணிக்கையே இல்லாத சமையல் பாத்திரங்கள் என எல்லாமே பொன்போல் துலங்கிய தூய்மையில் வீட்டை வாங்க வந்தவர்கள் உடனே வாங்க அவசரப்பட்டதொன்றும் கம்பச் சித்திரமல்ல.  

அடுக்களைக்கும் அங்கண அறைக்கும் இடைவழி அறையில்தான் நீண்ட அந்தப் பத்தாயம் இருந்தது.  உப்பு தொட்டு கற்பூரம் வரை அந்தப் பத்தாயத்தில்தான் சேகரமாய்ப் பத்திரம் காக்கப்பட்டிருந்தது.  இதுதான் இந்தப் பத்தாயம்தான் சேது லெட்சுமியை நிலை மறக்கச் செய்தது. தவறாது வரும் மாதவிடாய்பேல் இந்த பத்தாயம் காணும்போது மறவாது வரும் நினைவுகள். சிலந்தி வலையாய்ப் பின்னிய ஞாபக அடுக்குகளிலிருந்து நொறுங்கிப்போன கனவுச் சிப்பம், மூச்சுத் திணற அதைச் சுமக்கும் துக்கம், இப்படியே மோனம் முற்றாகச் சித்தித்து விடாதா என்றுகூட பேதையாய் ஏங்கினாள்.

வழவழப்பான நல்ல தடித் தேக்கில் செய்யப்பட்ட பத்தாயம், இன்றும் மெருகு குலையாமல் ஜம்மென்று வீற்றிருக்கிறது. பட்டுப்போல் பராமரிக்கப்பட்டு வரும் மென்மையான அதன் மேல் உட்காரும்போது ஏனோ விக்கி விக்கி அழவேண்டும்போல் இருந்தது. சிலந்தி வலையாய்ப் பின்னிய  ஞாபக இடுக்குகளிலிருந்து நொறுங்கிப் போன நோக்காடின் உசாவல்கள். சேதுலெட்சுமி பரிதவித்துக் கிடந்தாள்.

விலை ஒன்றரை கோடிக்குப் பேரம் படிந்ததில் சித்தார்த்துக்கு மகிழ்ச்சிதான். ஆனால் சித்தார்த்துக்குப் புரியாத புதிர் ஆரம்பத்தில் எல்லாவற்றுக்கும் உற்சாகமாய் ஆமாம் சாமி போட்டவள் இங்கு வந்தபிறகு ஏன் அடியோடு மாறிப் போனாள்?  

சேதுலெட்சுமி பருவம் மலர்ந்து நின்ற நேரம். அந்த விடுமுறைக்கு நாராயணீயம் வகுப்பில் மாணவன் ஒருவன் படுசுட்டியாய் உச்சாடனங்களை அவ்வளவு அழகாச் சொல்லிக் கொண்டிருந்தான். ஆசிரியர் இவர்களைத் திருத்திக் கொண்டே அந்த மாணவனை வியந்து ரசித்துக் கொண்டிருந்தார். அவ்வளவு பத்திச் சிரத்தையோடு நாமம் சொல்லும் வேணுவின் சொல்வளம் தாங்காது. சேது லட்சுமிக்கும் இவளது சேச்சிமார்களுக்கும் வேணு உற்ற தோழனானான்.  

இந்தப் பழக்கத்தின் சுவாதீனத்தில்தான் இவள் சிங்கப்பூர் திரும்பும் முன்தினம் மாலை அவளைத் தேடி வீட்டுக்கே வந்து விட்டான். அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க கையில் ஒரு புத்தகத்தோடு அவளைத் தேடி வந்த வேணு, அவள் பெயரை அழைத்துக் கொண்டே உள்ளே  வந்து விட்டான்.   

அதோடாவது நிறுத்தியிருக்கலாம். அல்லது அங்கிருந்தேயாவது அவளை அழைத்திருக்கலாம். ஆனா என்ன இருந்தாலும் அவனும் சிறுவன்தானே, யாரோ அவள் பத்தாய அறையில் இருப்பதாகச் சொல்ல நேராக  பத்தாய அறைக்கே தேடிச் சென்றுவிட்டான். அன்று உண்ணி அப்பமும் இலை அப்பமும்தான் பிரதானச் சிற்றுண்டி. கையில் உண்ணி அப்பத்தைச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த சேது லெட்சுமி கையிலிருந்த உண்ணி அப்பத்தை அவனை நோக்கி நீட்டினாள். அடுத்த கணம் தட்டு அப்படியே விசிறியடிக்கப்பட்டு தூரத்தில் போய் விழுந்தது என்ன ஏது என்று கூட புரியாமல்.

சேதுலெட்சுமி என்று அரண்டுபோய், அந்த 15 வயது சிறுவன் திகைக்க, “மடியிலிட்டுப் பெயர் வைத்தவன்போல் என்னடா சேதுலெட்சமி? தம்புராட்டி என்ற வாசலில் நின்று அழைக்க வேண்டியவன் நடு வீட்டுக்குள்ளேயே நுழைவதென்றால் என்ன தைரியம்?”  பிஷாரடி மாமன் அவன் செவியைப் பிடித்துத் திருகி வாசலில் கொண்டு போய்த் தள்ளாத குறையாய் விரட்டியடித்த கோலம், இந்த ஜென்பத்தில் சேதுலெட்சமியால் மறக்க முடியாது.  

அவளுக்கு ஜாதீயம் கற்றுக் கொடுக்கப்பட்டடதுகூட அன்றுதான். மிகக் கடுமையாக இவர்கள் பாரம்பரியமும் தரவாடு மகிமையும் விளக்கப்பட்டுக் கண்டிக்கப்பட்ட அனுபவமும் பல நாட்களுக்கு வடுவாகிப் போனது. 13 வயதுப் பெண் குழந்தையும், 15 வயது சிறுவனும் தரவாடு மகிமையில்தான் பேச வேண்டுமா?  பழக வேண்டுமா? யாரிட்ட சட்டம் இது?

பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் இன பேதம் தெரியாது வளர்ந்தவன் சேதுலெட்சுமி. கபடமற்றுச் சீன மலாய் என அனைவரிடமும் கலந்துறவாடும் பண்பு கற்ற அவளுக்குள் பெருந்திரையொன்று விழுந்தது. இற்றுப் பொடிந்த கனவில் சடங்கும் சம்பிரதாயங்களும் பூதாகரமாய் அவளை விழுங்கிக் கொண்டிருந்தன.  

திருமணம் நிச்சயமானதும்  சமையல் வேலை கற்றுக் கொடுத்த வந்த அம்மாயியிடம் லேசாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள். வேணு சாதாரண சமையல்காரனின் மகன் என்பது மட்டுமே தெரியவந்தது. மாந்தோப்பில் பழுத்த மாம்பழங்களில் இரண்டு கூடை எப்போதுமே இவள் ஆசையாய்க் கொடுக்கும் பள்ளி ஆசிரியர் மாதவன் நாயரின் மகள் தேவயானியின் மூலம்தான். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு வேணுவின் பெற்றோர் ஊரை வீட்டே போய் விட்டார்கள் என்ற செய்தி கிட்டியது. என்றேனும் ஒரு நாள் வேணுவைக் கண்டு அந்தச் சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற நினைப்பும் கருகியே போனது.

சித்தார்த் மகிழ்ச்சியோடு வந்தவரை வரவேற்றான். பிஷாரடி அம்மாவனுக்கும் பரம திருப்தி. என்ன தீட்சண்யம். பார்த்த கணமே மரியாதை பொங்கியது, சேதுலெட்சுமி மட்டும் இவரைப் பார்த்தால் வீட்டைக் கண்டவரிடம் கொடுத்துவிட்டுப் போகிறோமே எனும் அவள் கவலையே பறந்தோடிவிடும்.

ஒவ்வோர் இடமாகப் பார்த்துக் கொண்டே வலம்வந்த அந்த ஆங்கிலப் பேராசிரியம் அந்த இடைநாழி அறைக்கு முன்னே வந்ததும் சட்டென்று நின்றுவிட்டார். நின்று நிதானமாக அந்த அறைக்குள் நுழைந்தவரை சேதுலெட்சுமி அப்பொழுதுதான் ஏறிட்டாள்.

“நமஸ்காரம்” என்று கரம் கூப்பியவளை முகம் மலர மலர நிமிர்ந்து பார்த்தார்.

“தம்புராட்டி என்னைத் தெரியவில்லையா?”

சேதுலெட்சுமி வெலவெலத்துப் போனாள். அந்தத் தேஜஸ் அந்தக் கூர்மை அந்த மென்மை இவர். . . இவர். . . ஒரு வினாடி பிரபஞ்சம் கிடுகிடுத்தது. பொத்திப் பொத்தி இதயத்துள் போட்டு அழுத்திய லிகித மாயை சட்டென்று விலக “வேணு” என அவள் நாத்தழுதழுக்க, வேணு பத்தாயத்தின் மேல் கம்பீரமாக அமர்ந்தார்.

கேரளப் பல்கலைக் கழகத்தில் Involuted writing  எனும் தெரிவில் முதல் பரிசு பெற்ற கதை)

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.