து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்




குற்றம் கூறாதீர் அவளை..
*******************************
எப்போதும் எவரிடத்தும் கையேந்தும்..
அவளைக் குற்றவாளியாகக் கூற வேணாம்..
அர்த்தநாரி அவள்..
ஆடவர் கூட்டத்திலும் ஆணாக முடியாது..
தங்கையர் நடுவிலும் நிலைத்திருக்க இயலாது..

அவள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய வேணாம்
சமூகத்தின் உதாசீனத்தில் கண்ணீர் விடாது கலந்து வாழ்பவள் அவள்..
ஆணாதிக்க அசூயத்தில் தகவமைத்துக் கொள்பவள் அவள்..

அவள் பொருட்டும் பழி கூற வேணாம்.
பிழைப்புக்கு வழியில்லை
உழைப்பு வழங்கவும் மனிதர் இல்லை..
பணியுண்டு அது அவளுக்கில்லை..
பிறப்பின் பிணியுண்டு
அதில் அவளுக்குப் பங்குமில்லை..

கையேந்திக் கரம் நீட்டும் அவளை
ஒருபோதும் புறக்கணிக்க வேணாம்.
பசியுண்டு அவளுக்கும்..
மானமுண்டு அவள் வாழ்விற்கும்..
உரிமையுண்டு இந்தக்‌ காணிநிலமெங்கும்

இனி..
கையேந்தி சிரம் மீது கரம் வைக்கும்
அவளை வசைபாடிக் குற்றம் கூறாதீர்!!

கதையல்ல நிஜம்
************************
அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்
அவளது குலுங்கும் சிரிப்பின் மௌன மொழி..
குமுறும் அடிவயிற்றின் ஆற்றவியலா வெறுப்பின் வலி..

அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்
பெற்ற பிள்ளையதன் பசியமர்த்த
மனதின் பாரத்தை மறைத்து
வலிய ஏற்கும் உடல் மீதான வன்மபாரமது.
சுகமல்ல..
அது ஒரு சுமை..

வயோதிக பெற்றோர்க்கு மருந்தாக வேண்டி
அரக்கர் கூட்டத்திற்கு விருந்தாகும் ..
அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்..

முடமான குடும்பத்திற்கு
நான்கு கரமாக உருமாறும் அவளை
கரையான் கூட்டம் களித்து அரித்திட
தன்னை விரும்பியே வழங்கி நிற்கும்
அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்..

இறப்பென்பது ஒருமுறையே நமக்கு..
அவளுக்கோ..
ஒவ்வோர் இரவும் மரணித்து
மீண்டு..
மீண்டும் ஒவ்வோர் விடியலிலும் மறுபிறவியெடுக்கும்..
அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்..

அவளுடன் சமரசம் செய்யாவிடிலும்
பரவாயில்லை
சக மனுஷியாகக் கருதாமல்

நொறுக்காதீர்கள் அவளை.
ஆம்..
அவளை ஒருபோதும் ஒன்றுமே சொல்லாதீர்கள்..

து.பா.பரமேஸ்வரி
சென்னை.