பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




பெண்தான் பேருலகம்
****************************
தேனின் சுவை பெரிதாம்
தெரியாமல் பிதற்று கின்றார்;
கரும்பின் சுவை இனிதாம்
கண்மூடி உளறு கின்றார்;
கனியின் சுவை யதுவோ
இனிமை நிறைந் ததுவாம்;
அமிழ்தை காணா தோர்
அதை சுவைதா னென்கின்றார்!

தென்றல் தீண்டு சுவை
தேகமெலாம் குளிரு மென்பார்
பனியின் தண்மை யது
பரவசமாம் சொல்லு கின்றார்
பூதான் மென்மை யென
பொய்யாகச் சொல்லு கின்றார்
சந்தனமே மண மென்று
சாதனையாய் புலம்பு கின்றார்!

நிலவு அழ கென்று
நியாயமற்றுச் சொல்லு கின்றார்
மயில்தான் மயக்கு மென
மனம் பிறழ்ந்து கூறுகின்றார்
மானை அழ கென்று
மயக்கத்திலே புலம்பு கின்றார்;
மங்கை பிறப்பினை தான்
மதியாலே உண ராதோர்!

எல்லாம் இவளி டமே
இரவல் பெற்ற தென
ஏனோ அறி யாமல்
இயம்புகிறார் கவிஞ ரென!
பெண்ணே பேர ழகு
பெண்ணே பெருஞ் சுவைதான்
பெண்ணே எல்லா மும்
பேருலகே அவள் தானே!

‘என்னம்மா…? ‘
****************
என்னம்மா சின்னப் பெண்ணே
இன்னுமா புரிய வில்லை?
மக்களின் சேவைக் காக
மாதாவாய் மன முருகி
செய்திட துடித்த போதும்
செய்திட முடியா வண்ணம்
சிறைதனைப் போடு கின்ற
சிறியவர் மதிதான் விந்தை!

மக்களால் தேர்வும் ஆகி
மதிப்பான பொருப்பும் ஆகி
பெயருக்கு நீதான் என்றால்
பெருமைக்கு ஆணே ஆனான்!
அதிகார ஒப்பம் நீயே
அதிலொன்றும் அய்யம் இல்லை;
அதனாலே பெருமை தன்னை
ஆக்கினான் ஆணே தன்னை!

பெருமைக்கு சிலைபோல் உன்னை
பேசாமல் பார்த்துக் கொள்வான்
தலைவியாம் சொல்வார் உம்மை;
தடுத்துமே தலைவன் தானே
சொல்லியே பெருமை பேசும்
சுயநலம் ஆணே என்பேன்!
சூழ்ச்சியைப் புரிந்துகொள் நண்பா!

கல்வியால் பதவித் தேட
கற்கணும் பெண்ணே கண்ணே;
கல்வியால் கலெக்டர் என்றால்
கணவனோ உரிமை இல்லை!
ஆசானாய் பொருப்பே யென்றால்
அதிலேது ஆணுக் குரிமை?
அதிகாரி யானால் நீதான்
அனைத்துமே நீதான் ஆவாய்!

கல்வியைத் தேடுத் தேடு
கல்வியை நாடு நாடு
கல்வியை உயிராய் என்றும்
கருத்தினுள் கொள்வாய் பெண்ணே;
கல்விதான் கண்கள் உண்மை
கல்விதான் கரையை சேர்க்கும்
கல்வியால் உயர்வாய் கண்ணே
கனிவோடு வாழ்த்து கின்றேன்!

செம்மொழி எம்மொழி
*******************************
அருவியில் குளிக்கும் போதும்
ஆகாயம் பறக்கும் போதும்
இனிமையை நுகரும் போதும்
ஈகையில் மகிழும் போதும்
உறவினைத் தழுவும் போதும்
ஊடல்தான் முடியும் போதும்
எண்ணங்கள் மலரும் போதும்
ஏற்றங்கள் வந்த போதும்
ஐநிலம் தவழ்ந்த யெங்கள்
ஒண்தமிழ்த் தாயே உந்தன்
ஓசையில் உலகம் உய்யும்
ஔடதம் நீயே அம்மா!
ஆயுதம்(ஃ) நீயே அம்மா!!

கனிநிகர் தமிழே நீதான்-தமிழ்க்
காவினில் பழுத்தாய் நன்கு
கிளியெனத் தமிழ ரெல்லாம்
கீறியே ருசித்தோம் உம்மை
குளிர்ந்ததே உள்ள மெல்லாம்
கூவினோம் குயில்கள் போலே!
கெடுமதி நினைப்போர் யாரும்
கேடுற்றே நிலத்தில் வீழ்வார்;
கையறு நிலையில் தாழ்ந்தே
கொடுமதி கொண்டு மாய்வார்!
கோவென எம்மை ஆளும்
செம்மொழித் தாயே வாழி!

கல்வி ஒளி ஏற்றுங்கள்
***************************
முப்பாட்டன் முது கொடிந்து
மூர்ச்சடைத்து நின்ற தினால்
எம்பாட்டன் எழுந் திருக்க
இயலாமல் விழுந்து போனான்!

எம்பாட்டன் எழுந்திருக்க
இயலாமல் போனதாலே
எங்கப்பன் முயலவில்லை
என் வாழ்க்கை அழிந்தது போச்சே!

யார்மீது குற்ற மென்று
இயம்புவேன் இந்த நாட்டில்?
தப்பான ஆட்களெல்லாம்
தாம் வாழ்வார் ஊரின் மேட்டில்!

நிலமுண்டு நீருமுண்டு
நித்திலமும் கிடைப்பதுண்டு
மலையுண்டு ஆறுமுண்டு
மண்வளம் மழையுமுண்டு;

மாறாதப் பழைமை ஆட்கள்
மனங்களைத் திரித்து வைத்தார்
மதமென்றுஞ் சாதியென்றும்
மக்களைப்பிரித்துவைத்தார்.

மண்ணோடுப் பிறந்தயினத்தை
மதியினை இழக்க வைத்தார்
மாமாங்கம் பலகடந்தும்
மாடெனப் பழக்கி வைத்தார்.

உறங்கிட இடமுமில்லை
உண்டிடச் சோறுமில்லை
பரங்கியர் போகவில்லை
பாரதம் மாறவில்லை.

செத்தாலும் பிணங்கள் போக
சீரான வழியுமில்லை
இத்தேசம் வாழ்வதற்கு
உத்தேசம் ஏதுமில்லை.

கல்வியில் தீட்டு என்றான்
களவுக்கு நீட்டு என்றான்
பொல்லாத வாழ்க்கையாச்சு
பொழுதெலாம் வீணாய்ப் போச்சு

நம்பியஜனங்கள் எல்லாம்
நாசமாய்ப் போனதிங்கே;
துணைவரும் கல்விஎன்று
தோழனே ஊது சங்கே!

ஒரு வேப்ப மரத்தின் சிரிப்பு
*********************************
இலை துளிர்காலம்
வசந்தகாலம்….
வனப்பில் துள்ளின
வேப்பிலை இலைகள்
பசேலென….

அந்த சாலை ஓரத்தில்
கம்பீரமாக….
மழை வரும்போதுகூட
அறியாமையில்
அண்டிச்செல்லும் மனிதர்கள்!

கோடை வெயிலென்றால்
குடும்பமே நடத்துகின்றார்!

ஒரு இலை நிழலுக்கு
ஒரு மனிதனென
சுகமென புகழும்
புகழுரைகள்!

எறும்புகளின்
எகத்தாளங்கள்
கன்று காளிகளின்
அண்டல்கள்!

சும்மா கிடைத்து விடும்
சுகபோகமென்ற
சோம்பேறிகளின்
சொர்க்கபுரியாகிறது
வேப்ப மர நிழல்!

ஓய்வை விரும்பி நின்றபோதும்
காமம் கொண்டுத் தழுவும்
காற்று;

காமக் காற்றின்
சுகம் உணரும்
சோம்பல் கூட்டம்!

உடலுக்கு நல்லதென
ஒய்யாரக்கூட்டம்;

கிளை அமர்ந்து
இல்லமாக்கும்
சின்னக் குருவிகள்!

இராக கீதமிசைத்து
எச்சமிட்டு
நாளை பறப்பதற்கான
ஆசுவாசம் கொள்ளும்
அடைக்கலம்!

சின்னக் குருவிகளின்
எச்சங்கள்
கனவுலகில் சஞ்சரிக்கும்
மரத்தடி மரண உறக்கக்காரர்களின்
திறந்த வாயில்…. !

உறக்கமற்ற சில
சோம்பேறிகளின்
காட்டுக்கூச்சல்….

எச்சமிட்ட சின்னக்குருவிகளை
வார்த்தை கல் கொண்டு
வீசி… விரட்டும் சோகம்!

முளைப்பதற்கு விதைபோடாதக் கூட்டம்;
உரிமை கொண்டாடி;
முளைப்பதற்கு விதைபோட்டக்
குருவியின் வாரிசுக்கு
அண்ட இடமின்றி
அடித்து விரட்டும் சோகம்!

உரிமைக்குக் குரல் கொடுக்கத் தெரியாத
சின்னக் குருவிகளின்
கூட்டம்!

யாரோ போட்ட விதையில்
சுகமாக குரட்டை விடும்
கூட்டம்;

சிரித்துக் கொள்வதைத் தவிர….
வேறென்ன செய்யும் மரம்?!

ஊர்தோறும் தமிழ்ச்சங்கம்
********************************
ஊர்தோறும் தமிழ்ச்சங்கம்
தோன்ற வேண்டும்;

உலகின் முதல் மொழிப்பெருமை
பேச வேண்டும்;

சங்கமது தமிழ் வளர
உழைக்க வேண்டும்

தன்மானம் தன்னினத்தை
வளர்க்க வேண்டும்;

தமிழ்நாட்டின் செல்வமெலாம் தமிழருக்கே

தடையின்றி சேருதற்கு
முயல வேண்டும்!

என் நாடு என் மக்கள்
உயர வேண்டும்;

என்ற நல்ல எண்ணமதை
வளர்க்க வேண்டும்;

பழந்தமிழர் பெருமையெலாம்
சொல்லிச் சொல்லி

பாரினிலே தமிழர் புகழ்
பரவ வேண்டும்!

ஊர்தோறும் தமிழ்சங்கம்
வளர்ந்து விட்டால்;

ஒண்ட வந்தக் கூட்டமெலாம்
ஓடிப் போகும்!

தேசபக்தி!
***************
இந்த மண்
இவர்களின் பிடியில்
சிக்கித் தவிக்க
விடுதலை என்னும்
வேடத்தைப் போட்டு விட்டனர்….

என்ன நடிப்பு!
தேச பக்தியாம்
ஒன்றுபட்ட தேசமாம்
வேற்றுமையில் ஒற்றுமையாம்;
நாம் அனைவரும்
ஒரு தாய் பிள்ளைகளாம்
அட… அட…. அடடா…..
என்னேவொருப் பித்தலாட்டம்!

தனக்கென ஒரு தனி சாதி
தனக்கென ஒரு தனி சமயம்
தனக்கென தனியாக சொத்து
தனக்கென உறவு!

எப்படி
நாமெல்லாம் ஒன்று?

இந்தியத் திருநாட்டை
ஏமாற்றுபவனெல்லாம்
எப்படி
தேசபக்தன்?

சாதியைப் பார்ப்பவன்
எப்படி
தேசபக்தன்?

ஒரு சமயத்தை
நேசிப்பவன்
எப்படி தேசபக்தன்?

நீ
ஒரு சாதியைச் சேர்ந்தவன்
என்று
உணருகின்றபோதே
பிற சாதிகளின்
எதிரியாகின்றாய்!

நீ
ஒரு சமயத்தை
தூக்கித் தாங்கிப் பிடிக்கும்போதே
மனித குலத்திற்கு
எதிரியாகின்றாய்!

ஏமாற்றும் பேர்வழிகள்,
பொய் வியாபாரம் செய்பவன்,
உழைத்து வியர்வை
சிந்தாதவன்,
சமய வேடமிட்டுச்
சாதி பார்ப்பவன்,
ஏழை பாழைகளை
அப்படியே இருக்க வைத்து
அவர்களின்
அறியாமையில்
குளிர் காய்பவன்,
எப்படித் தேசபக்தன்?

தேசம் என்றால்
என்னத் தெரியுமா?

உன் முப்பாட்டன்
உன் பாட்டன்
உங்கப்பன்
நீ
வியர்வையை
குருதியை
பிறர் வாழ
சிந்தியிருந்தால்
அவன்
தேச பக்தன்;
அதற்குப் பெயர்தான்
தேசபக்தி!

– பாங்கைத் தமிழன்

தினம் ஒரு பூ கவிதை – பாங்கைத் தமிழன்

தினம் ஒரு பூ கவிதை – பாங்கைத் தமிழன்




வேண்டுகோள்தான் இது;
இறுக்காதே இன்னும்!
வலிமையற்றவர்
வாழ வேண்டும் இங்கு!

வியாபாரிகளுக்குத்தான்
வீரியமென்றால்
வியர்வை சிந்துபவனுக்கு
வீரியமும் வீரமும் விவேகமும் அதிகம்தான்!

இந்த தேசத்தில்
தேச பக்தனை
அடையாளம் தெரிந்துகொள்ளாமல் வாழ்வது
எவ்வளவு பெரிய அவலம்; அவமானம்!

இந்த மண்ணை
நேசிப்பதல்ல….
நம்புவதுதான்
பெரிய தேசபக்தி!

இந்த மண்ணே
வழி…
வாழ்வு….

பக்தி என்பதை
வேஷத்தை வைத்து
எடைபோடும் நிலை
எப்போது வந்தது
இந்த மண்ணில்?

வேஷம் போடத் தெரியாமல்
வியர்வையை மட்டுமே
இந்த மண்ணில் சிந்தும்
மண்ணுக்குச் சொந்தக்காரனின்
வேண்டுகோள்!

இடையில் வந்த
எதனை வேண்டுமானாலும்
விற்றுக்கொள்;
ஆணவம் வந்தால்
அதிக பசி வரும்தான்;
அதை இதை
எதை வேண்டுமானாலும்
பிராய்ந்து போட்டுக்கொள்;
பெரும்பசிக்காரனே!

ஆள வந்தால் மட்டுமே
அடிமட்டத்துக்காரனின்
பசியும் வலியும் தெரியும்!

ஆசைப் படுபவனும்
அள்ளிக் கொள்ள நினைப்பவனும்
வறுமைப் புத்தகத்தை
வாசிக்க முடியாதுதான்!

மீண்டும் மீண்டும்
வலியுறுத்துகிறேன்;
என்னுடைய வேண்டுகோள்
ஒன்றேவொன்றுதான்!
இடையில் வந்த
எதனை வேண்டுமானாலும்
விற்று, பசி போக்கிக்கொள்!

உனக்கு
இந்த மண்ணின்
பூர்வ குடியானவனின்

ஒரேயொரு….
இரகசியம் சொல்கிறேன்!

உலகில்
இருநூற்று முப்பதுக்கும்
மேலான
நாடுகளாம்!

எந்த நாட்டிற்கும்
இல்லாத பெருமை
என் தாயகத்திற்கு
மட்டுமே உண்டு;வியாபாரியே!
அது தெரியுமா உனக்கு?

பூ….
பூ தெரியுமா உனக்கு?
மென்மையும் செழுமையும்
வளமையும் உள்ள இடத்தில்
மட்டுமே பூக்குமே….
பூ….
அதனின் இரசியம்
சொல்கிறேன்!

உலகில் உள்ள நாடுகளில்
முன்னூற்று அறுபத்தைந்து
நாட்களிலும்
ஏதாவது ஒரு பூ
தினமும் கிடைத்துக்கொண்டே
இருக்கும் ஒரே தேசம்
என் இந்திய தேசம் மட்டுமே!

அந்த
என் தேசத்தை மட்டும்
விற்றுவிடாதே!

பாங்கைத் தமிழன்.