நூல் அறிமுகம்: மீனாசுந்தரின் ’புலன் கடவுள்’ – தேனிசீருடையான்.
நுகர்வின் வலிமையும் நியாயத்தின் சிதைவும்!
பவுனரசி ஓர் அரசு அதிகாரி. அவள் பைத்தியம் பிடித்ததுபோல் அலைகிறாள். எதைப் பார்த்தாலும் வெறுப்பு மேலிடுகிறது. சக ஊழியர்கள் அவளைப் பார்க்க வரும்போது ஏதாவது வாங்கிவந்தால் முகர்ந்து பார்த்து “மல வாடை அடிக்கிறது” என்கிறாள். எந்நேரமும் துள்ளிக் குதித்து இயங்கும் அவள் இப்போது நோயுற்ற சிங்கக் குருணையாய்க் கிடப்பது சகிக்கக் கூடியதா என்ன! ஒவ்வொரு நாளையும் கொண்டாடித் தீர்த்தவள் தலைவிரி கோலமாய் அலையக் காரணம் என்ன?
“செங்குத்தாய்த் தொங்கும் மஞ்சள் சரக்கொன்றை.” என்ற சிறுகதையில் வரும் சித்தரிப்பு இது. இந்த சித்தரிப்பு, வாசகனை அடுத்தகாட்டத் தேடலை நோக்கி நகர்த்துகிறது. அந்த அதிகாரி ஏன் இப்படிச் செய்கிறார் எனக் கேட்கத் தூண்டுகிறது. அந்தக் கேள்வியின் வழியாக விடைதேடிப் பயணிக்கிறான் வாசகன். வாசகனின் அந்தத் தேடல்தான் நடையில் விருவிருப்பை உண்டாக்குகிறது. முதலில் நிகழ்வைச் சொல்லிவிட்டுப் பின்னர் அதற்கான காரணத்தைக் கூறுவது கதை சொல்லலில் ஓர் உத்தி. இலக்கியத்தில் வாசகனை வேகவேகமாய் வாசிக்கத் தூண்டுவது இந்த உத்திதான். ஏன், எதற்கு, என்னாயிற்று என மனம் பரிதவிக்கும்போது இறுதி வரிவரை வாசிக்க முடிகிறது. எழுத்தாளர் மீனாசுந்தர் இந்த உத்தியைக் கையாண்டு முழு வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
மீனாசுந்தர் ஒரு பேராசிரியர் மட்டுமல்ல; நவீன இலக்கிய வாசிப்பாளரும் எழுத்தாளரும் ஆவார். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவரின் சமீபத்திய வெளியீடு “புலன் கடவுள்” என்னும் சிறுகதைத் தொகுப்பு. ஏற்கனவே இவரின் “மருதத்திணை” கவிதை நூல் இலக்கிய உலகில் பிரசித்தி பெற்றது. தஞ்சைத் தரணியின் உழவியல் வாழ்க்கைக் கூறுகளை உளவியல் தாக்கத்தோடு சித்தரித்த அரிய படைப்பு. உழவுச் சமூகத்தின் ஒவ்வொரு பண்பாட்டு அசைவையும் துல்லியமாய்ப் படம்பிடித்துக் காட்டுகிறது அந்த நூல்.
”புலன்கடவுள்” சிறுகதைத் தொகுப்பும் அப்படித்தான். நவீன நாகரீக வாழ்க்கைமுறையின் அனைத்துக் கூறுகளையும் யதார்த்தம் பிசகாமல் சித்தரிக்கிறது. யதார்த்தம் என்பது வாழ்வியல் நெறியின் இலக்கியப் பிரதிபலிப்பு. புல்மேட்டிலும் முள்மேட்டிலும் நடந்து பாதை சமைக்கிறான் மனிதன். அவன் நடக்கிறான் எனச் சொல்வதோடு நின்றுவிடாமல் நடந்த தடத்தில் பாதை உருவாகிறது எனச் சுட்டிக் காட்டுவதுதான் யதார்த்தவாதம். பாதை உருவாகிறது எனச் சொல்வதன்மூலம் அதைச் செப்பனிட வேண்டிய அடுத்தகட்ட இலக்கை நோக்கிய உந்துதல் கிடைக்கிறது. இன்னும் சுருக்கமாகச் சொல்வதென்றால் வாழ்க்கை மாறுகிறது என்பதையும் அதன்மூலம் புதிய சிந்தனை உருவாகிறது என்பதையும் சுட்டிக் காட்டும் வரலாற்று நெறிதான் யதார்த்தவாதம்.
90களில் சோவியத் யூனியன் சிதைந்து சிதறியபோது யதார்த்தவாதம் காலாவதியாகி விட்டதாக ஒருசில தமிழ் ஆய்வாளர்கள் ஓங்கிக் குரல் எழுப்பினர். யதார்த்தவாதம் என்ற உயிரியல் சித்தாந்தத்தை வெறும் அரசியல் தரவுகளோடு மட்டுமே பொருத்திப் பார்த்ததன் விளைவே இந்தக் குழறுபடிக்குக் காரணம். சோஷலிச அரசு கலைக்கப் பட்டுவிட்டது என்பதாலேயே யதார்த்தவாதமும் செத்துவிட்டது எனக் கணிப்பது அறியாமையின் வெளிப்பாடு என்பதைப் பின் வந்த காலங்களும் தத்த்வங்களும் நிரூபித்தன. 90களில் இருந்ததை விடவும் இன்று அது வானுயர்ந்து வளர்ந்து வெளிச்சம் காட்டுகிறது. யதார்த்தவாதக் கோட்டின்மேல் இலக்கிய ஓவியம் தீட்டாவிட்டால் அது செழுமையற்றதாகி விடும் என்பதை இன்று எல்லா எழுத்தாளர்களும் புரிந்துகொண்டனர். மற்ற இசங்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுவிட்ட நிலையில் இன்று ரியலிசம் மட்டுமே எதிர்நீச்சல் அடித்துக் கரை சேர்ந்திருக்கிறது. மீனாசுந்தர் ஓர் யதார்த்தவாத எழுத்தாளர்தான் என்பதை “புலன் கடவுள்” தொகுப்பு அடையாளப் படுத்துகிறது.
பேருந்து நிலயத்தில் கொய்யாப்பழம் விற்பவள் இலஞ்சியம். வாடிக்கையாளரை அனுசரித்து சிடுசிடுப்பு இல்லாமல் விற்பனை செய்து அனைத்து மனிதர்களையும் கவர்கிறாள். பேராசிரியர் பவித்திரம் அவளின் நெடுநாள் வாடிக்கையாளர். அவள் கொள்முதல் செய்து வரும்வரை அந்த விற்பனையைத் தொடர்வது அவள் கணவன் அம்மாபட்டி. இலஞ்சியம்போல் அவன் இல்லை. பேரம் பேசுபவர்களைக் கண்டால் எடுத்தெறிந்து விரட்டுவான். பழங்களை உலப்ப விட மாட்டான். ஆளண்டாக் குரங்குபோல் இருக்கிறான் எனப் பலரும் நினைக்கிறார்கள். படித்த படிப்பாளிகளுக்கு அவனைக் கண்டால் எரிச்சல் உண்டாகிறது. வெறுப்பை மட்டுமே சுமந்து திரிகிறான் என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஒருநாள் இரண்டு குழந்தைகள் அவனின் விற்பனை இடத்தில் வந்து அவனோடு கொஞ்சி விளையாடுகின்றன. தாடி வளர்ந்த அவன் முகத்தின்மேல் தமது முகத்தை உரசுகின்றன. அதுகள் கேட்கும் அனைத்தையும் வாங்கித் தருகிறான். இத்தனைக்கும் அவை அனாதைகள், இலஞ்சியமும் அம்மாபட்டியும் எடுத்து வளர்க்கின்றனர். தனது உயிரணுவில் உதிக்காத ஜீவன்களை அத்தனை பாசத்தோடு வளர்க்கிறான். அம்மாபட்டியின் இன்னொரு முகம் இது.
“நியதி” என்ற கதையில் வரும் இந்தச் சித்தரிப்பு வாழ்க்கைப் பதிவின் வேறொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. அம்மாபட்டி சினம் கொள்வதற்குக் காரணம் எதிர் மனிதர்கள் அவன்மேல் செலுத்தும் தாக்கம். கோபம் அவனுள் இருந்து வருவதல்ல; புறப் பொருள் ஒன்று அவனைத் தாக்கும்போது அவனுக்குள் நிகழும் எதிர்வினை. எவ்வளவு பெரிய கோபக்காரனாயினும் அவனுக்குள்ளும் அன்பும் வாஞ்சையும் ஊற்றெடுக்கின்றன. மனிதக் கோபம் என்பது வாழ்க்கை ஓட்டத்தில் நிகழும் சிறு இடறல். அந்த இடறலையும் தாண்டி வெளிப்படும் அன்பும் பாசமும்தான் யதார்த்தம். அன்பு என்பது இயல்பாய்ச் சுரக்கும் ஊற்று; வெறுப்பு நடைபாதையில் கிடக்கும் தடைக்கல். வெளிச் சூரியனின் வெப்பத்தால் நிலத்தடி நீர் வற்றும்; நீர் வற்றினால் வரட்சி உண்டாகும். அதன்பின்னும் ஊற்று சுரந்துகொண்டே இருக்கும். இந்த யதார்த்தத்தை சிறப்பாகச் சித்தரிக்கிறது “நியதி.”
இந்த நூலின் மிக முக்கியமான கதை “புலன் கடவுள்.” மனிதன் நுகர்வுக் கலாச்சாரத்தின் அடிமை. சாமான்ய மனிதன் ஒருவனின் எளிமையான வாழ்க்கை நடைமுறை மூலம் இந்த உண்மையை நிறுவுகிறார் நூலாசிரியர்.
ஒருகாலத்தில் ட்டீ சாப்பிடுவது குற்ற உணர்வின் வெளிப்பாடு. நான் நல்லவன் என்பதை நிரூபிக்க “டீ, காபி குடிக்க மாட்டேன்; வெத்தல போட மாட்டேன், புகைக்க மாட்டேன்” எனச் சொல்வார்கள். பெண்பார்க்கப் போகும்போது இந்தப் பழக்கங்கள் இல்லை என்பது மாப்பிள்ளைக்கான தகுதிகளில் ஒன்று. (இன்று மது அருந்துவது கூட அங்கீகரிக்கப் பட்டுவிட்ட்து என்பது வேறு கதை.)
கோவிந்து ஒரு “டீ குடிகாரன்.” சிவா டீக்கடை டீதான் அவனுக்குப் பிடிக்கும். வீட்டில் போடுவதையோ வேறு கடை டீயோ அவன் நாக்குக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை. திருமணம் ஆகி மனைவி வீட்டில் அருமையான ஆட்டுப் பாலில் டீ போட்டுத் தந்த போது அந்த வாடை அவனுக்குப் பிடிக்கவில்லை. சிவா கடை டீ குடிக்காமல் அவன் வாழ்க்கை வெறுமையாகி விடுகிறது. என்ன விலைகொடுத்தும் அந்த டீயைக் குடித்தே ஆகவேண்டும் என்ற தவிப்பை ஏற்படுத்துகிறது.
ஒரு சாமான்ய மனிதன் டீக்காக ஏங்குகிறான் எனப் புரிந்துகொள்ளக் கூடாது. கடலடிப் பிரவாகமாய் மகத்தானதோர் அரசியல் தத்துவம் இதில் உள்ளடங்கியிருக்கிறது. முதலாளித்துவம் பிரசவித்த நுகர்வுக் கலாச்சாரம்தான் அது. ஆரம்ப நாட்களில் கரம்பை மண்ணால் உடல் தேய்த்துக் குளித்தான் மனிதன். இன்று விதவிதமான சோப்புகளும் ஷாம்புகளும் வந்து மனதை ஈர்க்கின்றன. பல் தேய்ப்பது முதல் உறக்கம் கொள்வது வரை பத்துக்கும் மேற்பட்ட ரசாயனப் பொருட்களை உபயோகித்து நம்மை சொகுசுப் படுத்த வேண்டி இருக்கிறது. கொசுவிரட்டி, ஈவிரட்டி, கரப்பாம்பூச்சி விரட்டி என வீடு முழுக்க ரசாயனங்களைத் தெளித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. பாத்ரூமை சுத்தப்படுத்த ஒரு ஸ்ப்ரே, குளித்து முடித்து உடம்புக்கு வாசம் ஏத்த ஒரு ஸ்ப்ரே! எத்தனை எத்தனை நுகர்வுகள்! உணவு, உறைவிடம், உடை ஆகிய அடிப்படைத் தேவைகள்மேல் நுகர்வுப் பண்டங்கள் படிந்து பக்க விளைவு நோய்களாய் ஆட்டிப் படைக்கின்றன. அப்படியான பண்டங்களை விற்றுத்தான் சமநிலை குலைந்த வாழ்க்கையை முதலாளித்துவம் தந்து கொண்டே இருக்கிறது. உண்ணும் உணவு, உறைவிடம். மேல் அலங்கார ஆடைகள் என்று விதவிதமான நுகர்வுப் பண்டங்கள் மனசின் திடகாத்திரத்தை திசை மாற்றிவிடுகின்றன. பண்டங்களை உற்பத்தி செய்து மனிதன்மேல் எறிகிறது முதலாளித்துவம். வாங்க வேண்டாம் என்று நினைப்பவரைக் கூட வாங்க வைக்கிறார்கள். மேனியை அழகுபடுத்த வாசனைப் பவுடர்கள், பயணம் செய்ய விதவிதமான வாகன்ங்கள் வாங்கியாக வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது.
புகைபிடிப்பதில் கூட வேறு வேறு வாசனையைப் புகுத்தி அடிமைப் படுத்துகிறார்கள். 90களில் சோவியத் யூனியன் சிதைவதற்குமுன் அங்கு ஒரே மாதிரியான சிகரட்டைத்தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. புகைபிடித்தல் மட்டுமே அவர்கலின் தேவை. வேறுவிதமான தயாரிப்புகள் மூலம் பொருளாதாரத்தை வீணடிக்க வேண்டாம் என அந்த அரசாங்கம் சினைத்த்து..
கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான பி. ஆர். பரமேஸ்வரன் அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது ஒரு ரஷ்யப் பெண் சொன்னாராம். “இந்தியத் தயாரிப்பு சிகரட் பாக்கெட் ஒன்று தந்தால் உங்களுடன் ஒருநாள் இரவு தங்குகிறேன்.” முதலாளித்துவக் கலாச்சாரமும் பாடத்திட்டங்களும் சோவியத்துக்குள் ஊடுருவிக் கொண்டிருந்த காலம் அது. சோவியத் ரஷ்யாவின் சோஷலிச சமூக அமைப்பு சிதைந்து போனதற்கு இப்படியான நுகர்வுப் பண்பாட்டுத் திணிப்பு முக்கியக் காரணம்.
இப்படியாக உலகத்தை சமத்துவ நிலைநோக்கி நகராமல் பார்த்துக் கொள்கிறது நுகர்வுப் பண்பாடு.
இந்தக் கதை இந்தத் தொகுப்பின் மிக முக்கியப் படைப்பு என்று கருதுகிறேன்.
நாம் வாசித்து அனுபவிக்க வேண்டிய இன்னொரு கதை “தவிப்பின் மலர்கள்.” மகோன்னதமான இசைக் கருவியாகிய நாதஸ்வரம் பற்றிய வரலாறும் அதைக் கையாளும் மனிதர்கள் கீழ்மைப் படுத்தப் பட்டிருக்கும் சாதியக் கொடூரமும் அருமையாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. இதை வாசித்துக் கண்கலங்காமல் இருக்க முடியாது.
இன்றைய காலம் என்பது பெண்ணுரிமையை மீட்டெடுக்க வேண்டிய காலமாகும். அடுப்படிக்காரிகளாகவும் ஆணாதிக்க அடிமைகளாகவும் உழன்றுகொண்டிருக்கும் அவர்களை வாழ்வியல் மாற்றத்துக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. முற்போக்காளர்கள் அனைவரும் அதற்காகவே படைப்பு ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் முயன்று கொண்டிருக்கின்றனர். “செங்குத்தாய்த் தொங்கும் மஞ்சள் சரக்கொன்றை” கதையின் நாயகி பவுனரசி. அவர் ஒரு பெண் என்பதைவிட ஓர் அதிகாரி. லஞ்சம் வாங்காமல் எந்தக் காரியமும் நடக்காது; ஏழை என்றாலும் பணக்காரன் என்றாலும் அவருக்குத் தேவை பணம் மட்டுமே. நிறைவாக ஓர் ஏழைப் பெண் பிரியாணி வாங்கி வருவதாகச் சொல்லி மலத்தைப் பொட்டலம் கட்டித் தந்து விட்டுப் போகிறாள். அவிழ்த்துப் பார்க்கும் பவுனரசி வாந்தி எடுத்ததோடு பைத்தியம் ஆகிவிடுகிறாள். அன்றிலிருந்து அவள் நுகரும் ஒவ்வொரு பொருளிலும் மலவாடை அடிக்கிறது. ஓர் அதிகாரிக்கு இது சரியான தண்டனை என்று வாசக மனம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அதை ஏன் ஒரு பெண்பாத்திரமாகப் படைக்கவேண்டும். பவுனரசி என்பது அதிகார வர்க்கத்தின் குரியீடு. அது பவுனரசனாகவும் இருக்கலாம் அல்லவா?
அடுத்து “பாத்தியம்” என்றொரு கதை. ஓடிப்போனவள் பற்றிய சித்தரிப்பு. ஓடிப்போனவள் என்று பெண் மட்டுந்தான் பரிகசிக்கப் படுகிறாள். ஆணுக்கு அந்த “ஆகுபெயர்” கிடையாது.
ஓடிப்போதல் இரண்டு வகைமைக்குள் அடங்கும். கல்யாணத்துக்கு முன்; திருமணத்துக்குப் பின். முன் என்றால் காதல் வயப்பட்ட உணர்வின் வெளிப்பாடு. பின் என்றால் காம உணர்ச்சியின் தடுமாற்றம் அல்லது கணவனின் இம்சை தாங்காத கையறுநிலை. சந்திரஹாசனின் மனைவி, ராஜலட்சுமியின் தாய், மதுமதியின் பாட்டி கணவனை விட்டு ஓடிப் போனாள் என்று சித்தரிக்கப் பட்டிருக்கிறது. தொகுப்பின் எல்லாக் கதைகளும் வாழ்வியல் நிகழ்வுக்கான காரணத்தைச் சரியாகப் பதிவிடும்போது இதில் மட்டும் காரணம் சொல்லப் படவில்லை. தாத்தாவை விட்டு ஓடிப் போனாள் என்பதாலேயே தாத்தா அவளை வெறுப்பது நியாயம் எனப் புரிந்துகொள்கிறாள் மதுமதி. எந்த ஒரு சிக்கலான காரணமும் இல்லாமல் குடும்பப் பெண் ஓடிப்போவதில்லை என்ற யதார்த்தம் இந்தக் கதையில் சிதைவுண்டு கிடக்கிறது. “புலன் கடவுள்” என்ற தொகுப்பு மாளிகையின் சுத்தமில்லாத கழிவறையாய்க் காட்சியளிக்கிறது இந்தக் கதை. எழுத்தாளர் ஷாஜஹானின் “ஈன்றபொழுதில்” கதையும் ஓடிப் போனவளின் கதைதான். அதில் உள்ள நியாயமான காரணம் இந்தக் கதையிலும் பிரதிபலிக்க முடியும்.
மற்றபடி அனைத்தும் நேர்மையான எழுத்தின் நேர்த்தியான பிரதிபலிப்பு என்பதில் ஐயமில்லை.
நூல் : புலன் கடவுள்
ஆசிரியர் : மீனாசுந்தர்
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை : ரூ. 190/-
பக்கம் : 160
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]