நூல் அறிமுகம் : ஜே.சி.டேனியலின் திரையில் கரைந்த கனவு : ( திருத்தி எழுதப்பட்ட வரலாறு கட்டுரை ) – பாவண்ணன்

நூல் அறிமுகம் : ஜே.சி.டேனியலின் திரையில் கரைந்த கனவு : ( திருத்தி எழுதப்பட்ட வரலாறு கட்டுரை ) – பாவண்ணன்



திருத்தி எழுதப்பட்ட வரலாறு
பாவண்ணன்

ஒரு பழைய வரலாற்றுச் செய்தி. முதலாம் நூற்றாண்டில் தோன்றிய காளிதாசர் சமஸ்கிருத மொழியில் சாகுந்தலம், மேகதூதம் போன்ற மிகமுக்கியமான நாடகங்களை எழுதியவர். முதல் நாடக ஆசிரியர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர். ஆனால் அவருடைய காலத்துக்கு முன்பாகவே பஸன் என்னும் நாடக ஆசிரியர் வாழ்ந்தார். அவருடைய நாடகங்களுக்கு அவர் வாழ்ந்த காலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. எனினும் பஸன் எழுதிய எந்தப் பிரதியும் கிடைக்கவில்லை. காவ்யமீமாம்சையில் பஸனைப்பற்றிய ஒரு சிறுகுறிப்பு மட்டுமே கிடைத்தது. அந்தக் குறிப்பை மட்டும் வைத்துக்கொண்டு பஸனுக்கு முதல் நாடக ஆசிரியர் என்னும் புகழை அளிக்க ஆய்வாளர்கள் விரும்பவில்லை. ஆதாரமான நாடகப்பிரதி எதுவும் இல்லாத நிலையில் பஸனை யாராலும் எந்த அவையிலும் முன்வைக்க இயலவில்லை.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, 1913இல் கணபதி சாஸ்திரி என்பவர் பஸன் எழுதிய சமஸ்கிருத நாடகங்கள் அனைத்தையும் மலையாளத்தில் எழுதிவைக்கப்பட்டு கொடியாட்டமாக அரங்கேற்றப்பட்டு வருவதைக் கண்டுபிடித்தார். அவர் எழுதிய பதின்மூன்று நாடகங்களும் உடனடியாக மீட்டெடுக்கப்பட்டு புத்தக வடிவம் கண்டன. தேசமெங்கும் அரங்கேற்றப்பட்டு பஸனுடைய புகழ் நிறுவப்பட்டது. உடனடியாக பஸனுடைய நாடகங்கள் எல்லா இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. அவரே முதல் நாடக ஆசிரியர் என்னும் உண்மை வரலாற்றில் திருத்தி எழுதப்பட்டது. பஸன் எழுதிய நாடகப்பிரதிகள் ஒன்றுகூட எஞ்சாதபடி எப்படி மறைந்தன என்பது ஒருவராலும் புரிந்துகொள்ளமுடியாத புதிராகவே உள்ளது.

தென்திருவிதாங்கூரில் முதன்முதலாக திரைப்படம் எடுக்கும் கனவில் தன் செல்வத்தையெல்லாம் இழந்து வறுமையில் வாடியவர் ஜே.சி.டேனியல். ஆனால் அவருடைய பெயர் திரைப்பட வரலாற்றிலேயே இல்லை. அவர் உயிருடன் வாழ்ந்த காலத்திலேயே அவருடைய பெயரை ஆய்வாளர்கள் மறந்துவிட்டனர். அவருக்குப் பிறகு எட்டு ஆண்டுகள் இடைவெளியில் படமெடுத்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்தின் பெயர் மலையாளத்திரைப்பட உலகின் தந்தை என்ற அடைமொழியுடன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. முப்பது ஆண்டு கால இடைவெளியில் ஒருவர் உயிருடன் இருக்கும்போதே அவர் ஆற்றிய பணிக்குரிய அங்கீகாரமும் அடையாளமும் மறுக்கப்பட்டன.

பத்திரிகையில் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவந்த சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் என்பவர் ஒரு பெட்டிக்கடை வாசலில் தற்செயலாக டேனியலைப் பார்த்தார். கடைக்காரர் வழியாக அவர் திரைப்படம் எடுத்து பொருளை இழந்த கதையை அறிந்தார். பிறகு அவருடைய இருப்பிடத்துக்கே தேடிச் சென்று உரையாடி, அவர் திரைப்படம் எடுத்த வரலாற்றை அவர் வழியாகவே கேட்டறிந்தார். பிறகு அதை நிறுவும் வகையில் ஆவணங்களைத் தேடித் தொகுத்து ஊடகங்களோடும் அரசு அதிகாரிகளோடும் போராடி, ஜே.சி.டேனியலே மலையாளத் திரைப்பட உலகின் தந்தை என நிரூபித்தார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அதற்காக உழைக்கவேண்டியிருந்தது. துரதிருஷ்டவசமாக டேனியல் அப்போது மறைந்துவிட்டார். வரலாற்றை மாற்றி எழுதிய அந்தக் கால அனுபவத்தை ஜே.சி.டேனியல்: திரையில் கரைந்த கனவு என்னும் தலைப்பில் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார் சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன். அடூர் கோபாலகிருஷ்ணன் முன்னுரையோடு அது மலையாளத்தில் வெளிவந்தது. அந்தப் புத்தகத்தை தமிழில் இப்போது மொழிபெயர்த்திருப்பவர் செ.புஷ்பராஜ்.

அகஸ்தீஸ்வரத்தை பூர்விகமாகக் கொண்டு தென்திருவிதாங்கூரில் வாழ்ந்து வந்த கிறித்துவநாடார் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜோசப் செல்லையா டேனியல் என்கிற ஜே.சி.டேனியல். கேளிக்கை என்பதையே அனுமதிக்காத சமயப்பிரிவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். அவருடைய குடும்பத்தினர் அனைவரும் வழிவழியாக மருத்துவர்களாகப் பணிபுரிந்து செல்வமீட்டியவர்கள். ஜே.சி.டேனியலுக்கு மருத்துவத்தில் ஆர்வமில்லை. அதனால் திருவனந்தபுரத்தில் பட்டப்படிப்பைப் படித்துமுடித்தார். படிக்கும் காலத்திலேயே அவருக்கு சிலம்பாட்டக்கலையின் மீது ஆர்வம் இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் களரிப்பயிற்சியையும் மேற்கொண்டார். பிரபலமான ஆசான் ஒருவரிடமிருந்து அடிமுறைகளைக் கற்றுத் தேர்ந்தார். வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களைப் பார்த்த அனுபவத்தில், களரி அடிமுறைகளை முன்வைத்து தாமும் ஓர் ஆவணப்படம் எடுக்கவேண்டும் என்று விரும்பினார். அப்போது அவருக்கு திரைப்படம் பற்றிய எந்தத் தெளிவும் இல்லை

தான் எடுக்க நினைத்த ஆவணப்படத்துக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துகொள்வதற்காக அவர் சென்னையில் ஸ்டுடியோ வைத்திருந்த ஒருவருக்கும் பம்பாயில் ஸ்டுடியோ வைத்திருந்த ஒருவருக்கும் கடிதம் எழுதினார். ஒருவர் இருபதாயிரம் ரூபாய் கேட்டார். மற்றொருவர் நாற்பதாயிரம் ரூபாய் கேட்டார். தயாரிப்பு செலவு குறித்து பேசுவதற்காக டேனியல் சென்னைக்கும் பம்பாய்க்கும் சென்றார். ஸ்டுடியோ செயல்பாடுகளையெல்லாம் நேரில் பார்த்துவிட்டுத் திரும்பியபோது அவர் மனம் மாறியது. திருவனந்தபுரத்திலேயே ஒரு ஸ்டுடியோவைத் தொடங்க முடிவெடுத்தார். தனக்குச் சொந்தமான 108 ஏக்கர் நிலத்தை முப்பதாயிரம் ரூபாய்க்கு விற்று திருவனந்தபுரத்தில் இடம் வாங்கி ஸ்டுடியோ கட்டினார். 1928இல் திருவாங்கூர் நேஷனல் பிக்சர்ஸ் என்ற பெயரில் அந்த ஸ்டுடீயோ தொடங்கியது.

இந்தியாவில் முதல் மெளனப்படத்தை தாதாசாகிப் பால்கே 1913இல் எடுத்து வெளியிட்டார். தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் மெளனப்படம் 1918இல் வெளிவந்தது. இந்தியாவின் முதல் பேசும் படமும் தமிழ்நாட்டின் முதல் பேசும் படமும் 1931இல் வெளிவந்தன. ஆனால் அதற்கான பூர்வாங்க வேலைகள் 1928இலேயே தொடங்கிவிட்டன. சமகாலத்தில் பிற நகரங்களில் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருந்த திரைப்படச் சூழல் டேனியலின் நெஞ்சில் ஒரு கிளர்ச்சியை உருவாக்கியது. களரி ஆவணப்பட எண்ணம் பின்தங்கிவிட கதையம்சம் கொண்ட ஒரு மெளனப்படத்தை உருவாக்கும் ஆசையாக அது மாறியது.

விகதகுமாரன் என்னும் படத்துக்குரிய கதையை அவரே உருவாக்கினார். மேடை நாடகங்களில் பெண் பாத்திரங்களையும் ஆண்களே ஏற்று நடித்துக்கொண்டிருந்த காலம் அது. பெண் பாத்திரத்தை ஒரு பெண்ணே ஏற்று நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் டேனியல். ஆனால் சாதி இறுக்கமும் மத இறுக்கமும் கொண்ட கேரளசமூகத்தில் அவரால் பெண் பாத்திரத்தை ஏற்று நடிக்க ஒரு பெண்ணை எங்கும் கண்டுபிடிக்கமுடியவில்லை. செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து தேர்வு செய்யப்பட்டு வரவழைக்கப்பட்ட ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண், ஏராளமான பொருளிழப்பை டேனியலுக்கு ஏற்படுத்திவிட்டு ஒரு காட்சிகூட நடிக்காமல் பம்பாய்க்குத் திரும்பிச் சென்றுவிட்டார். இறுதியாக, கத்தோலிக்கக் கிறித்துவத்தைத் தழுவிய ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்த ரோசி என்ற பெண்ணைச் சந்தித்துப் பேசி ஏற்றுக்கொள்ள வைத்தார். படம் பிடிப்பதற்கு அவரால் பெரிய நகரங்களில் இருந்து கேமிராமேனை வரவழைக்க முடியவில்லை. அதனால் வெளிநாட்டிலிருந்து ஒரு கேமிராவை வாங்கி, கையேடுகளைப் படித்து, இயக்கும் முறைகளைக் கற்றுக்கொண்டு, அவரே படம் பிடிக்கத் தொடங்கினாறார். ஒவ்வொரு நாளும் எடுத்துமுடித்த படச்சுருளை அவரே இரவு வேளையில் கழுவினார். ஏறத்தாழ இரு ஆண்டுகள் முடிவில் 1930இல் திரைப்பட வேலை முடிந்தது.

23.10.1930 அன்று திருவனந்தபுரம் கேப்பிடல் திரையரங்கில் திரைப்படம் வெளியானது. முதல் காட்சியைக் காண்பதற்காக அதிகாரிகளும் நம்பூதிரி, நாயர் தறவாடுகளைச் சேர்ந்த உயர்சாதியினரும் வந்திருந்தனர். கட்டியங்காரன் திரைக்கு ஓரமாக நின்று காட்சிவிளக்கம் அளித்தபடி இருந்தான். சரோஜினி நாயர் என்னும் பாத்திரத்தில் ஒரு தலித் பெண் நடித்திருப்பதை பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அரங்கம் சிதைக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டதால் திரையரங்கத்துக்கு வெளியே நின்றிருந்த ரோசி, பார்வையாளர்களின் தாக்குதலுக்கு ஆளாகி, நகரத்தைவிட்டு வெளியேறி மறைந்தாள். திரையரங்கம் தாக்கப்பட்டது. ஏராளமான பொருளிழப்புக்கு ஆளான டேனியல் தனக்குரிய எல்லாச் சொத்துகளையும் விற்று கடனை அடைத்துவிட்டு குடும்பத்துடன மதுரைப்பக்கம் சென்றார்.

திரைப்படக் கனவுகளைத் துறந்துவிட்டு இரு ஆண்டுகள் பாடுபட்டு பல்மருத்துவம் படித்து பட்டம் பெற்றார் டேனியல். மதுரையிலேயே ஒரு கிளினிக் திறந்து மருத்துவம் பார்த்தார். குடும்பம் சற்றே தலைநிமிர்ந்து நிற்கத் தொடங்கிய காலத்தில் மருத்துவம் பார்த்துக்கொள்வதற்காக வந்த நடிகர் பி.யு.சின்னப்பாவின் தூண்டுதலால் மீண்டும் திரைத்துறையின் பக்கம் சென்றார் டெனியல். இறுதியில் உழைத்துச் சேர்த்த சிறு செல்வத்தையும் இழந்து வறுமையில் வாடினார். வேறு வழியில்லாமல் உறவினர்களின் கருணையால் அகஸ்தீஸ்வரத்தில் ஒரு பழைய பரம்பரை வீட்டில் வாழ்ந்து மறைந்தார்.

திரைப்படம் என்பதையே தீயொழுக்கச்செயலாக நினைக்கும் பின்னணியைக் கொண்ட குடும்பம் என்பதால், அவருடைய குடும்பத்தினர் அனைவருமே அவர் வாழ்க்கையையும் செயல்களையும் ஒரு கறையென நினைத்து ஒதுக்கினர். தன்னை ஒரு கட்டத்திலும் நிரூபித்துக்கொள்ளமுடியாத தோல்வியுணர்ச்சியால் அவரும் எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்திக்கொள்வதில் நாட்டமின்றி ஒதுங்கிவிட்டார்.

டேனியல் படமெடுத்தார் என்பதற்குச் சாட்சியாக அவரிடம் எஞ்சியதெல்லாம் ஒரு துண்டு பிலிம் சுருள். சில திரைக்கதைக் காட்சிகளை விவரிக்கும் படங்கள். சில புகைப்படங்கள். அவ்வளவுதான். ஓர் ஆவணமாக அவற்றை ஊடகங்களின் முன் காட்டி சேலங்காட்டாரால் டேனியலின் இடத்தை நிறுவமுடியவில்லை. அதற்கிடையில் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய பாலன் திரைப்படமே முதல் திரைப்படம் என ஆவணங்கள் உருவாகி நிலைபெற்றுவிட்டன.

மலையாளத் திரையுலகின் தந்தையென ஜே.சி.டேனியல் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்கிற ஆதங்கத்தோடு சேலங்காட்டார் பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். பல அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்து உரையாடினார். ஏறத்தாழ இருபதாண்டு காலம் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார் சேலங்காட்டார். அவர் எடுத்த திரைப்படம் மெளனப்படம் என்பதால் அதை மலையாளத்திரைப்படமாக கருதத் தேவையில்லை என ஓர் அதிகாரி நிராகரித்தார். தமிழகத்தைச் சேர்ந்த அகஸ்தீஸ்வரம் என்னும் பகுதியில் டேனியல் வசித்து வந்ததால், அவருடைய குறைகளை தமிழக அரசிடம்தான் முறையிட வேண்டுமே தவிர, கேரள அரசிடம் சொல்வதில் பொருளில்லை என்று நிராகரித்தார் மற்றொரு அதிகாரி. ஒரு தலித் பெண்ணை நாயர் பெண்ணாக நடிக்கவைத்தவர் என்னும் வெறுப்பில் டேனியலைப்பற்றி உரையாடுவதையே தவிர்த்தனர் சிலர். அவர் கிறித்து மதத்தைச் சேர்ந்தவர் என்னும் காரணத்தால் சிலர் தவிர்த்தனர். கிறித்துவத்துக்குரிய ஒழுக்கத்தை அவர் பின்பற்றாததால், கிறித்துவர்களும் அவரை ஆதரிக்கவில்லை. எல்லா முனைகளிலிருந்தும் வெறுப்பையும் புறக்கணிப்பையும் மட்டுமே எதிர்கொண்ட டேனியல் தீராக்கசப்பில் மூழ்கி விலகிச் சென்றுவிட்டார். எவ்விதமான பெருமையையும் பெறாமலேயே 1975இல் இந்த உலகத்தைவிட்டு மறைந்தார் டேனியல். தன் முயற்சிகளிலிருந்து சற்றும் பின்வாங்காத சேலங்காட்டாரின் தொடர் போராட்டத்தின் விளைவாகவும், மேலும் சில ஆவணங்கள் கிடைத்ததன் விளைவாகவும் அரசு தன் ஆவணத்தைத் திருத்தி எழுதியது. மலையாளத் திரையுலகத்தின் தந்தையாக டேனியல் அறிவிக்கப்பட்டார். திரையுலகச் சாதனையாளருக்குரிய விருதுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது.

புஷ்பராஜின் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் வழியாக கனவுகள் நிறைந்த ஜே.சி.டேனியலையும் உண்மையை உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்கிற முனைப்பு நிறைந்த சேலங்காட்டு கோபாலகிருஷ்ணனையும் அறிந்துகொள்ள முடிகிறது. ஒரு வாசகனாக, நமக்கு இவ்விருவரும் சாதனையாளர்களாகவே தோன்றுகின்றனர்.

(ஜே.சி.டேனியல்: திரையில் கரைந்த கனவு. சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன், தமிழாக்கம்: எ.புஷ்பராஜ், சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம், 4/16, முதல் குறுக்குத்தெரு, 9-வது பிரதான சாலை, சாமிநாதன் நகர், கொட்டிவாக்கம், சென்னை 600041. விலை. ரூ.100 )

Santhar Kanchana Seethai Novelette By Krishnamoorthy in tamil K. Nallathambi and Novelreview By Pavannan நூல் அறிமுகம்: கிருஷ்ணமூர்த்திசந்தரின் காஞ்சன சீதை குறுநாவல்

நூல் அறிமுகம்: கிருஷ்ணமூர்த்தி சந்தரின் காஞ்சன சீதை குறுநாவல்

கேள்வியும் விடையும்
பாவண்ணன்

சி.எஸ்.ஸ்ரீகண்டன் நாயர் என்னும் மலையாள எழுத்தாளர் ராமாயணக்கதையை மூன்று நாடகங்களாக எழுதினார். அந்த வரிசையில் மூன்றாவது நாடகத்தின் பெயர் காஞ்சன சீதை. அது உத்தரராமாயணக்கதையை ஆதாரமாகக் கொண்ட பகுதி. அயோத்தியின் ஆட்சிக்கட்டிலில் ஏறிய ராமன் தன் ஆட்சித்திறமையால் மக்களின் நற்பெயரைச் சம்பாதித்து சக்கரவர்த்தியாக உயர்கிறான். அப்போது வசிட்ட முனிவர் ராமனிடம் அஸ்வமேதயாகத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை சொல்கிறார். அது மனைவியோடு இணைந்து செய்யவேண்டிய யாகம் என்பதால், காட்டுக்கு சீதையை அனுப்பிவிட்டு தனிமையில் இருக்கும் நிலையில் யாகத்தை நடத்த வழியில்லை என்று ராமன் தயங்குகிறான். 

அமர்ந்த கோலத்தில் சீதையைப்போலவே தங்கத்தால் ஆன ஒரு சிற்பத்தைச் செய்து ராமனுக்கு அருகில் வைத்து, அதையே சீதையின் இருப்பாக நினைத்துக்கொள்ளலாம் என திட்டம் வகுத்துக் கொடுக்கிறார் முனிவர். அதுவே காஞ்சன சீதை. காஞ்சனம் என்றால் தங்கம். முனிவரின் ஆலோசனைக்கு இணங்கி காஞ்சன சீதையின் துணையோடு யாகத்தை நடத்தி முடிக்கிறான் ராமன். பல ஆண்டுகளுக்குப் பிறகு எழுபதுகளில் கலைப்பட வேட்கை ஓங்கிய காலகட்டத்தில் இயக்குநர் அரவிந்தன் அந்த நாடகத்தை அழகான திரைப்படமாக எடுத்து வெளியிட்டார்.

காஞ்சன சீதைக்கும் உண்மையான சீதைக்கும் உள்ள உறவு மிகவும் நுட்பமானது. வனவாசத்தில் ராமனின் குடிலிலிருந்து இராவணனால் கவர்ந்துசெல்லப்பட்டு அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்ட தருணத்திலிருந்தே அவள் தன்னைத்தானே சிலையாக மாற்றிக்கொண்டவள். தன் கற்பை நிரூபிக்க மன்னனின் கட்டளையை ஏற்று அக்கினிப்பிரவேசம் செய்தபோது மறுபடியும் சிலையானவள். கருவுற்றிருந்த நாளில் நாட்டிலிருந்து வெளியேற்றி காட்டிற்கு அனுப்பியபோது மீண்டும் சிலையானவள். வாழும் காலத்தில் சீதை என்னும் பெண்ணாக வாழ்ந்ததைவிட அவள் காஞ்சனசீதையாக வாழ்ந்த பொழுதுகளே அதிகம். அதிகாரச்சூழல் தன்னைப் பலிபீடத்தில் நிறுத்தியிருப்பதைப் புரிந்துகொண்டபோதும், சிறிய அளவில் கூட எதிர்ப்புணர்வைக் காட்டாமல் அந்த வாழ்க்கையை சீதை மெளனமாக ஏற்றுக்கொள்கிறாள். தன்னைத்தானே தியாகம் செய்கிறாள். 

காஞ்சன சீதை என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டால்தான் வாசகசாலையின் வெளியீடாக வந்திருக்கும் கன்னடக்குறுநாவலான காஞ்சன சீதையைப் புரிந்துகொள்ள முடியும் (தமிழாக்கம் : கே.நல்லதம்பி) என்பதால் இந்த நீண்ட விளக்கத்தைக் கொடுக்கவேண்டியதாயிற்று.

கன்னட எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி சந்தரின் காஞ்சன சீதை நாவலுக்கும் ராமாயணத்துக்கும் நேரிடையாக எவ்விதமான தொடர்புமில்லை. அது முழுக்கமுழுக்க இன்றைய காலகட்டத்தில் வாழும் ஒரு பெண்ணின் கதை. சிறுமியாக அக்கம்பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவர்களோடு ஆடித் திரிகிறாள். பள்ளிக்கூடம் செல்கிறாள். ஆற்றில் இறங்கிக் குளிக்கிறாள். பின்வீட்டு ராயர் சிறுவனோடு நட்பாக இருக்கிறாள். அவனோடு சண்டை போடுகிறாள். விவாதம் செய்கிறாள். அவனிடம் பிரியமாகவும் நடந்துகொள்கிறாள். கடைத்தெருவுக்குச் செல்கிறாள். குச்சி ஐஸ் வாங்கிச் சாப்பிடுகிறாள். சந்தகவாடி குளத்தில் நீந்திக் களிக்கிற யானைக் கூட்டத்தைப் பார்ப்பதற்காகச் செல்லும் ராயர் குடும்பத்தோடு அவளும் செல்கிறாள். பிளிறலோடு குளத்தைவிட்டு தெருவில் ஓடி வரும் யானையிடமிருந்து ராயர் மகனுடைய உதவியோடு தப்பிக்கிறாள்.

தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே ராயர் குடும்பம் மைசூருக்குப் போய்விடுகிறது. அவன் பட்டப்படிப்பை முடித்த கையோடு நியூஜெர்சிக்குப் போய்விடுகிறான். அவனுடைய திருமணவாழ்க்கையும் அந்த ஊரிலேயே அமைந்துவிடுகிறது. அவர்களுக்குப் பிள்ளைகள் பிறக்கிறார்கள். வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். பிறகு அவர்களும் திருமணம் செய்துகொண்டு வேறு இடம் தேடிச் சென்றுவிடுகிறார்கள். இவ்வளவு காலம் கூடவே இருந்த மனைவி இறந்துவிடுகிறாள்.

எழுபத்திரண்டு வயதில் தனிமை அவரை வாட்டுகிறது. திடீரென தன்னுடன் தொடக்கப்பள்ளியில் படித்த சிறுமி காஞ்சனாவின் நினைவு வருகிறது. “நான் நிச்சயமா திரும்பி வருவேன்’ என்று அந்தச் சின்ன வயதில் அவளுக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வருகிறது. அது அவருக்குள் தீராத ஒரு குற்ற உணர்ச்சியை உருவாக்குகிறது. ஒருமுறை அவளைப் பார்த்தால் நல்லது என்று மனத்துக்குத் தோன்றியதும், உடனே பயணச்சீட்டுக்கு ஏற்பாடு செய்துகொண்டு அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு வந்து, பிறகு அங்கிருந்து நஞ்சன்கூட்டுக்கு வந்து சேர்கிறார். 

அவளைப் பார்க்கவேண்டும் என்னும் ஆவலைத் தவிர வேறொன்றும் அவர் நெஞ்சில் இல்லை. அவருடைய எண்ணத்தின் தீவிரம் அவருக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்க வழியமைத்துக் கொடுக்கிறது. இரண்டுமூன்று நாள் அலைச்சலுக்குப் பிறகு அவர்கள் வாழ்ந்த வீட்டைக் கண்டுபிடித்துவிடுகிறார். காஞ்சனாவைப்பற்றிய தகவல் கூட கிடைத்துவிடுகிறது. ஆனால் அவளை எங்கும் சந்திக்க முடியவில்லை. அதுதான் பெரிய துயரம். எல்லோருக்கும் அவளைப்பற்றிய தகவல் தெரிந்திருக்கிறதே தவிர, அவளை நேரிடையாக ஒருவரும் பார்த்ததில்லை என்று சொல்கிறார்கள்.

அவை எதுவும் அவருக்கு மகிழ்ச்சி கொடுக்கக்கூடியதாக இல்லை. துண்டுதுண்டாக கிடைத்த தகவல்களை அவர் மனம் ஒருங்கிணைத்துக்கொள்கிறது. அவள் திருமணம் செய்துகொண்டு ஈரோட்டில் வாழ்ந்தாள். கணவர் இளம்வயதிலேயே மறைந்துவிட்டதால் அங்கே தொடர்ந்து வசிக்கப் பிடிக்காமல் சாமராஜநகருக்கே வந்துவிட்டாள். பெற்றோர்களும் மறைந்துவிட்டனர். பிள்ளைகள் வளர்ந்து வெளிநாட்டுக்குப் போய்விட்டார்கள். ஏராளமாக சொத்து இருக்கிறது. ஒருவித தனிமை வாழ்க்கை வாழ்ந்தாள். யாரும் அவளைப் பார்த்ததில்லை. ஆனால் அவள்தான் சந்தகவாடியிலிருக்கும் கோவிலைப் புதுப்பித்துக் கட்டும் செலவை ஏற்றுக்கொண்டாள். பிளிகிரிரங்கன மலையிலிருக்கும் கோவிலைச் சீர்ப்படுத்தியவளும் அவளே. ஏராளமான தர்மகாரியங்களைச் செய்தாள். ஆனாலும் எங்கும் தன் பெயர் வெளிப்பட்டுவிடாதபடி பார்த்துக்கொண்டாள்.  பிளிகிரிரங்கன மலைவாழ் சிறுவர்களின் படிப்புக்கும் சீருடைக்கும் தேவையான ஏற்பாடுகளை அவள் செய்தாள். ஓய்வு நேரத்தில் அவர்களுக்குப் பாடமும் சொல்லிக்கொடுத்தாள். சுற்றுப்புறத்தூய்மை போன்ற நல்ல பழக்கவழக்கங்களையும் கற்பித்தாள். தொடர்ந்து அங்கேயே தங்கி எல்லாச் செய்திகளையும் அவர் தெரிந்துகொண்டார். ஒருவரும் தன்னை நெருங்கிவிடாதபடி ஒரு தனிமையை தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட காஞ்சனாவின் போக்கை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

அவளைச் சந்திப்பதற்காக அவர் பிளிரங்கன மலைக்குச் செல்கிறார். காஞ்சனா அங்கே இல்லை. அந்த மலைப்பகுதியில் எங்கோ ஓரிடத்தில் தனிமையில் தியானத்தில் மூழ்கியிருப்பாள் என யாரோ சொன்னதைக் கேட்டு அவர் தேடிக்கொண்டு அங்கே செல்கிறார். ஆனால் அங்கும் காஞ்சனாவைக் காணமுடியவில்லை. கோவில் பூசாரி மலை சார்ந்த மற்றொரு பகுதிக்குச் சென்று பார்க்கும்படி சொல்கிறார். உடனே அங்கே செல்கிறார். அங்கும் அவள் இல்லை. அந்த இடத்துக்கு வரும் ஒரு சிறுவனிடமிருந்து இன்னும் கூடுதலாகச் சில தகவல்கள் கிடைக்கின்றன. அந்தச் சிறுவனே அவருக்கு வழிகாட்டி அழைத்துச் செல்கிறான். 

ஒரு செண்பக மரத்தடியில் ஒரு குடிசைக்குள் ஒரு தீபத்தின் முன்னால் அவள் முதுகைக் காட்டி அமர்ந்திருக்கும் தோற்றம் தெரிகிறது. அந்த நிழல் சுவரில் படர்ந்திருந்தது. அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்துவைக்க அவருக்கு மனம் வரவில்லை. தயங்கி நின்றுவிடுகிறார். சட்டென தன் பதற்றமெல்லாம் மறைந்து மனத்தில் அமைதி நிறைவதை அவர் உணர்கிறார். ஒரே ஒரு கணம் நின்று பார்த்துவிட்டு வேகமாகத் திரும்பி மலையிலிருந்து இறங்கத் தொடங்குகிறார். 

எழுபத்திரண்டு வயதில் நியுஜெர்சியிலிருந்து புறப்பட்டு பிளிரங்கன மலைக்கு, தன் மனத்திலிருக்கும் காஞ்சனாவைப் பார்ப்பதற்காக வந்த ராயரின் அனுபவக்குறிப்புகளைப்போல இந்தக் கதையை வடிவமைத்திருக்கிறார் சந்தர். உண்மையில் அக்குறிப்புகள் வழியாக காஞ்சனாவின் சித்திரத்தை அவர் ஒரு கோட்டோவியமாக நமக்குத் தீட்டிக் காட்டவே முயற்சி செய்கிறார். அந்தக் கோட்டோவியத்திலும் முழு உருவம் இல்லை. உருவத்தின் சாயலை மட்டுமே ஊகிக்க வைக்கிறார். எஞ்சிய கோடுகளை நம்மையே தீட்டி காஞ்சனாவின் ஓவியத்தை நிரப்பிக்கொள்ளத் தூண்டுகிறார்.

ராமாயணத்தின் சீதையைப்போலவே எதார்த்த உலகைச் சேர்ந்த காஞ்சனாவும் சூழலின் நெருக்கடிகளுக்கு இரையாகிவிட்டவள். எதையும் எதிர்க்க முடியாமல் ஏற்றுக்கொண்டவள். வாழ்க்கையை இழந்தவள். இன்பத்தை இழந்தவள். அந்தத் தியானத்தின் வழியாக அவள் எதை அடைய நினைக்கிறாள் என்பது சுவாரசியமான கேள்வி. இக்கதையின் முடிவில் எஞ்சியிருக்கும் இக்கேள்விக்கு சந்தர் விடையெதையும் அளிக்கவில்லை. வாசகராக நம்மையே விடையைத் தேடிக் கண்டடையும் பொறுப்பையும் உரிமையையும் கொடுத்துவிட்டு கதையை முடித்துவிடுகிறார்.

மகாபிரஸ்தானம் என்பது காவியங்களில் இடம்பெறும் சொல். அது ஒருவர் தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கொள்ளும் ஒரு வழி என்பது வழிவழியாக வந்த நம்பிக்கை. தான் நம்பும் ஒன்றுக்காக தன்னைத்தானே தியாகம் செய்வது அதன் வழி. அதன் மூலமாக தன்னையே கடந்து செல்லும் ஆற்றல் ஒருவருக்குக் கிடைக்கிறது. ஒரு துளி கறை கூட எஞ்சாமல் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்கிறது. உட்கார்ந்த கிளையிலிருந்து ஒற்றைக்கணத்தில் சட்டென விண்ணிலேகும் பறவையென விடுதலை பெற்று பறந்துபோய்விடுகிறது. அது புராண காலத்துச் சீதை பின்பற்றிய வழி.

காஞ்சனாவின் தியானக்கோலம் ஒருகணம் ராயரைப் பதற்றம் கொள்ள வைத்தாலும் மறுகணமே அந்தப் பரபரப்பெல்லாம் அடங்கிவிடுகிறது. அவளுடைய மகாபிரஸ்தானத்தை அவரால் உணர்ந்துகொள்ள முடிகிறது. அப்புள்ளி வரைக்கும் ஒரு பெண் வரவேண்டுமென்றால், எவ்வளவு இழந்திருக்க வேண்டும், எவ்வளவு துயரங்களில் தோய்ந்திருக்கவேண்டும் என்று அவர் நினைத்துப் பார்த்திருக்கலாம். விண்ணிலேகத் தயாராக இருக்கும் பறவையின் கவனத்தை ஈர்த்து, ஒன்றுக்கும் உதவாத பழைய கதையையெல்லாம் சொல்லி பின்னோக்கி இழுக்க அவருக்கு மனம் வராமல் போயிருக்கலாம். தனக்குக் கைகூடாத ஒன்று அவளுக்காவது கைகூடி வரட்டும் என்று அமைதிகாத்துத் திரும்பியிருக்கலாம்.

இது, சந்தரின் கதை எழுப்பும் கேள்விக்கு எனக்குத் தோன்றிய விடை. இந்தப் படைப்பை வாசிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் இப்படி ஒரு விடை பொருத்தமாகத் தோன்றலாம். சந்தர் விட்டு சென்றிருக்கும் மெளனம் என்னும் முற்றத்தில் எல்லா விடைகளுக்கும் இடமிருக்கிறது.

நூல்: காஞ்சன சீதை – குறுநாவல்
கன்னட மூலம் : கிருஷ்ணமூர்த்தி சந்தர்
தமிழில்: கே.நல்லதம்பி
வாசகசாலை பதிப்பகம்
விலை: ரூ.120
சென்னை -73

Milagu Book By Santhira Thangaraj Bookreview By Pavannan நூல் அறிமுகம்: சந்திரா தங்கராஜின் மிளகு கவிதைத்தொகுதி - பாவண்ணன்

நூல் அறிமுகம்: சந்திரா தங்கராஜின் மிளகு கவிதைத்தொகுதி – பாவண்ணன்



மலையும் குறுமிளகும்
பாவண்ணன்

எளிமையான கவிமொழியைக் கொண்ட எளிமையான காட்சிச்சட்டகங்களைக் கொண்டிருக்கின்றன சந்திரா தங்கராஜின் கவிதைகள். ஆனால் அந்த எளிமை ஆழமானதாக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையின் அன்றாட வாழ்க்கையையும் அன்றாடச் சிந்தனையையும் அந்தக் காட்சிச்சட்டகங்கள் நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன. காட்சித்தொகுப்பாக அமைந்திருக்கும் அதே வேளையில், எளிதாகக் கடந்து செல்லமுடியாதபடி ஒவ்வொரு காட்சியிலும் மனத்தை அசைக்கும் புள்ளிகள் நிறைந்து தனித்தன்மை கொண்டதாக மாற்றுகின்றன. கவிதையின் சாரமாக அமைந்திருக்கும் அந்தப் புள்ளிகள் சிற்சில தருணங்களில் பரவசமளிக்கின்றன. சிற்சில தருணங்களில் அமைதியிழக்க வைக்கின்றன.

சந்திரா தங்கராஜின் கவிதைகளில் வீடும் மிளகும் மீண்டும் மீண்டும் இடம்பெற்றபடி இருக்கின்றன. ஒருவருடைய வாழ்வில் வீடு  என்பது மண்ணுடன் நெருக்கமான தொடர்புடையது. அது பாதுகாப்பான வாழ்க்கைக்கான இடம். ஆனால் சொந்தமென சொல்ல கையகல மண் கூட இல்லாதவர்களுக்கு, வாழ்க்கையில் எவ்விதமான பாதுகாப்பும் இல்லை. காட்டையும் மலையையும் மட்டுமே நம்பி உயிர்வாழும் மனிதர்களுக்கு காட்டிலும் மலையிலும் நிரந்தரமாக ஓர் இடமில்லை என்பது மிகப்பெரிய துயரம். வாழ்வதற்காக இல்லாவிட்டாலும் சாவதற்காவது ஒரு நிலம் வேண்டும் என அவர்கள் மனம் தவித்தலைகிறது. ஆனால் மனிதர்களாலும் அரசு அமைப்புகளாலும் சட்ட விதிகளாலும் அவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு விரட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். காட்டைவிட்டு வெளியேற முடியாத அவர்கள் காட்டை ஊடுருவிக்கொண்டு உட்பகுதியை நோக்கி இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த இடப்பெயர்ச்சி பற்றிய சந்திரா தங்கராஜ் எழுதியிருக்கும் காடோடி என்னும் கவிதை வேதனையின் சித்திரமாக விரிந்திருக்கிறது.

அப்பாவிற்கு நீளமான கால்கள்
எப்போதும் கையில் விதைத்தவசங்களுடன்
காடோடிக்கொண்டே இருந்தார்
கூடவே நாங்களும்

‘சாவதற்கு ஒரு நிலம் வேண்டும் மகனே’
என்கிற அப்பத்தாவின் ஓயாத வேண்டுதலில்
அன்று மேற்குவழிப் பயணமானோம்
முகத்தில் பனிவெயிலை ஏந்தியபடி
தடிசங்காட்டுக்குள் நடந்தோம்
அம்மாவின் தலைக்கூடையிலிருந்த பருப்பலகை
காட்டை வேடிக்கை பார்த்தபடி வந்தது
அவள் இடுப்பிலிருந்து தங்கைன் நழுவிக்கொண்டே வந்தாள்
மரப்பொந்துக்குள் குஞ்சு பொரித்திருந்த இருவாட்சி
இணைவரவுக்காய் குரலெழுப்பிக்கொண்டிருந்தது
’மனுசங்க நடமாட்டம் இல்லாத எடத்தில்தான்
இருவாச்சி குஞ்சு பொரிக்கும்’ என்றார் அப்பா

அதற்கு மேல் நடக்கமுடியாத அப்பத்தா
மூட்டையைக் கீழிறக்கினாள்
அண்ணன் தன் எருமைக்கன்றுக்கு  புல்லறுக்கப் போனான்
நான் அத்திப்பழங்களை மண்ணூதித் தின்றுகொண்டிருந்தேன்
மூன்று கற்களைத் தேடியெடுத்து அடுப்புக்கூட்டினாள் அம்மா
அப்பா குடிசைபோட கம்புகளை வெட்ட
நடுவானில் சூரியன் அசையாது நின்றது

ஒரு குடும்பத்தின் வேதனையோடு ஒரு பறவையின் வேதனையும் இக்கவிதையில் இணைந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒருபுறம் எங்கிருந்தோ விரட்டப்பட்டு காட்டின் உட்பகுதியை நோக்கி நடையாய் நடந்து மனித நடமாட்டமே இல்லாத இடமொன்றைப் பார்த்து குடிசை போடத் தொடங்குகிறார் ஒருவர். இன்னொரு புறம் மனித நடமாட்டமே இல்லாத இடத்தில் குஞ்சு பொரித்து வாழ்ந்து பழகிய இருவாட்சிப்பறவை, அந்த இடத்தைத் துறந்து நடமாட்டமற்ற மற்றொரு பகுதியைத் தேடி இடம்பெயர வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. ஒரே நேரத்தில் இரு இடப்பெயர்ச்சிகள். இங்கு நாம் யாரை நினைத்து நிம்மதி கொள்வது? யாரை நினைத்து வேதனை கொள்வது? 

நடுவானில் அசையாது நின்று அனைத்தையும் பார்க்கும் சூரியன் வழிகாட்ட .காட்டுக்குள் இடம்பெயர்ந்து அமைந்த அந்தக் குடும்பம் தன் இருப்புக்காக ஒவ்வொரு நொடியும் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டிய சூழல். பெற்றெடுத்த குழந்தைகள் பசியின்றி வளர்வதற்காக தாயும் தந்தையும் ஓய்வில்லாமல் நிலத்திலும் மலையிலும் பாடுபடுகிறார்கள். காடோடி கவிதையின் தொடர்ச்சியைப்போல அமைந்திருக்கிறது குடும்பப்புகைப்படம் என்னும் கவிதை. அதில் நாம் பார்ப்பது, அவர்களுடைய முகங்களையோ புன்னகையையோ அல்ல, மாறாக அவர்கள் ஓய்வின்றி உழைக்கும் சித்திரங்களை. வலியை. வேதனையை. பிள்ளைகளை விளையாட அனுமதித்துவிட்டு, அவர்கள் வியர்வை சிந்தி உழைக்கும் சித்திரம் மனத்தை உருக்கும் வகையில் உள்ளது.

குடும்பப்புகைப்படத்தில்
அம்மா வெளிர்நீலப் புடவையில்
அழகாக இருப்பாள்
பூத்தோடும் வெள்ளைக்கல் இரட்டை மூக்குத்திகளும் எடுப்பாக
இருக்கும்
அப்பா மாலையானதும்
சுடுதண்ணீரில் குளித்து வெகுநேரம்
கண்ணாடி முன் நின்று தலைவாருவார்
என்னோடு மூன்று குழந்தைகள்
நாங்கள் நன்றாகத்தான் வாழ்ந்தோம்
அதற்காக அப்பா வாழ்நாள் முழுதும்
மூன்று குழிகளை வெட்டினார்
அதில் முப்பதாயிரம் முறை விழுந்தெழுந்தார்
278 தடவை அவருடைய
கழுத்துவரை மண் மூடியது
7063 முறை மேற்கு மலையில் சுமையுடன் ஏறினார்
மாடுபூட்டாமல் நிலம் உழுதார்
ஒற்றைத் தலைவலியோடு
நெற்கட்டுகளைச் சுமக்கும் அம்மா ஒருத்தியாய்
மூனு ஏக்கர் நிலத்தில் களையெடுப்பாள்
ஒரு மத்தியானம் நாங்கள் தட்டாமாலை சுற்றியதற்கு
அவள் பருத்திக்காட்டில் கிறுகிறுத்து விழுந்தாள்

எதார்த்தச் சித்தரிப்பின் வழியாக ஒரு வாசகனின் நெஞ்சை அசைக்கும் இத்தகு கவிதைகளுக்கு நேர் எதிரான வழிமுறையில் கற்பனையின் வழியாக வாசகனின் நெஞ்சைத் தொட்டு அசைக்கிற கவிதைகளையும் சந்திரா தங்கராஜின் தொகுப்பில் காணமுடிகிறது. பள்ளிக்கூடம் செல்லும் சிறுமியின் பயணத்தை விவரிக்கும்போது  சந்திராவின் கற்பனையாற்றல் தன்னிச்சையாக வெளிப்படுகிறது.

ஐந்துமைல் தொலைவு நடக்கவேண்டும்
சிறுமலைக்கு அப்புறம்தான் அவள் பள்ளிக்கூடம்
விரல்களால் மெதுவாய் மலையை அசைக்கிறாள் சிறுமி
அதுவொரு குறுமிளகென எம்பி மிதக்கிறது
இப்படித்தான் ஒரே எட்டில்
தினமும் மலையைக் கடக்கிறாள் மகாராணி

இதுவும் இடப்பெயர்ச்சியின் ஒரு துணைவிளைவாகவே உள்ளது. இடப்பெயர்ச்சியின் காரணமாக அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் குடிசை போட்டுக்கொண்ட இடம் எங்கோ தொலைவில் சென்றுவிட, ஒவ்வொரு நாளும் அந்த இடத்திலிருந்து பள்ளிக்கு நடந்து சென்று திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறாள் அச்சிறுமி. மலையை மெதுவாய் அசைத்து, உயர்ந்து அகன்ற அதன் உருவத்தையே ஒரு குறுமிளகென மாற்றி, அதை ஒரே எட்டில் மகாராணிபோல நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கடந்து செல்கிறாள். மலையைக் குறுமிளகாக மாற்றமுற வைக்கும் மந்திரத் தருணத்தில் மாபெரும் துயரங்கள் எல்லாம் காற்றில் பஞ்சாகப் பறந்துவிடுகின்றன. ஒன்றை மற்றொன்றாக உருமாற்றி எளிதாகக் கடந்துபோகும் குழந்தைமையை இத்தொகுதியின் பல கவிதைகள் நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

டெய்சியும் ஜான்சனும் உன்னியும் நானும்
வட்டப்பாறையில் அமர்ந்து வெயில் காய்ந்தபடி
தூரத்து மாலையில் மேயும் மாடுகளை
எண்ணிக்கொண்டிருந்தோம்
ஒவ்வொரு முறையும்
எண்ணிக்கை பிசகிக்கொண்டிருந்தது
மாடுகளை ஒளித்துவைத்து மலையும்
மலையை ஒளித்துவைத்து மாடுகளும்
விளையாட்டு  காட்டின

குழந்தைமையை மையமாகக் கொண்ட மற்றொரு கவிதை இது. ஒரு காட்சிப்பிழை ஒரு பேரனுபவமாகவும் ஒரு புன்னகைத்தருணமாகவும் மாறும் அபூர்வத்தன்மையை இக்கவிதையில் பார்க்கமுடிகிறது. ஒருபுறம் சிறுவர்கள். இன்னொருபுறம் மேய்ச்சலில் ஈடுபட்டிருக்கும் மாடுகள். மற்றொரு புறத்தில் உயர்ந்து சரிந்த மலை. தன் எண்ணிக்கைப்பிசகுக்கு சிறுவர்கள் கண்டுபிடித்துச் சொல்லும் காரணம் ஓர் அற்புதம்.  தன்னிச்சையாக அவர்கள் நாவில் பொங்கியெழும் கற்பனை நம்மைப் புன்னகைக்க வைக்கிறது. 

மலையை விழுங்குதல் என்னும் கவிதையில் வதைமிக்க இன்னொரு இடப்பெயர்ச்சிக்காட்சி இடம்பெற்றிருக்கிறது. இங்கு இடம்பெயர வைப்பவர்கள் வனத்துறையினர். மலைப்பகுதியிலிருந்து அந்தக் குடும்பங்களை வெளியேற்றுவது ஒருவகையில் அதிகாரத்தின் வெற்றியாக இருக்கலாம். ஆயினும், எந்த அதிகாரத்தாலும் அசைக்கமுடியாத அளவுக்கு  அந்த மலைப்பகுதியும் மிளகுக்கொடிகளும் அக்குடும்பங்களின் நினைவுகளில் இரண்டறக் கலந்துவிடுகின்றன.  

நுனிமூக்கில் மஞ்சல் நிறம்கொண்ட மைனாக்கள்
தேன்சிட்டுக் குருவிகள்
அவைகளின் கூவலில்தான் அன்றும் எழுந்தேன்
நான் நட்டு வைத்த தேக்கு மரத்திற்கு
பதினாறு வயதாயிருந்தது
அதைத் தழுவி முத்தமிட்டபோது
மிளகுக்காட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர் வனத்துறையினர் 

என் பின்னங்கழுத்தைத் தள்ளிக்கொண்டிருந்த
அதிகாரியின் கையைத் தட்டிவிட்டு
மலையை ஒரே விழுங்காக விழுங்கி
குலுங்கும் வயிறுடன் அங்கிருந்து ஓடினேன்
அன்றிலிருந்து என் கண்களில் மலைநதி பாய்கிறது
கால்நரம்புகளில் பிணைந்திருக்கின்றன இலைகள்

அதிகாரத்துக்கு எதிரான மானுட இருப்பின் அடையாளமாக அந்த மலையும் மிளகும் இருக்கின்றன. அன்று அக்குடும்பங்கள் விழுங்கிவிட்டு வந்த மலையும் மிளகும் சந்திராவின் கவிதைகளில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டபடி இருக்கின்றன.

இடப்பெயர்ச்சியின் அலுப்பும் வாய்ப்பின்மையின் சலிப்பும் மனிதர்களை ஏதோ ஒரு கணத்தில் நகரத்தை நோக்கிச் செலுத்திவிடுகின்றன. வாழ்வின் திசையில் அது தவிர்க்கமுடியாத ஒரு பயணம். நகரத்தின் அங்காடித்தெருவுக்கு ஏதோ ஒரு தேவையை முன்னிட்டுத்தான் அவர்களுடைய முதல் பயணம் நிகழ்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் அந்தப் பயணங்களை தன்னையறியாமலேயே விரும்பத் தொடங்கிவிடுகிறார்கள். காட்டுப்பகுதிகளுக்குள் இடம்பெயர்ந்துகொண்டே இருந்தவர்கள் நகரத்தெருக்களை நோக்கி இடம்பெயரத் தொடங்குகிறார்கள். திரும்பிச் செல்லும் வழியே மறந்துபோகும் அளவுக்கு அந்த இடப்பெயர்ச்சி ஏதோ ஒரு வகையில் அவர்கள் மனத்தை நிரப்பத் தொடங்கிவிடுகிறது. தவிர்க்கமுடியாத அம்மறதியின் சித்திரத்தை சந்திராவின் வசந்தகாலச் சிறுமி என்னும் கவிதை ஓர் அங்காடிக்காட்சியை முன்வைத்து உணர்த்துகிறது.

வசந்தகாலக் காற்றை ஊதி ஊதித் தள்ளுகிறாள் சிறுமி
காற்றின் வளையத்திற்குள் தொங்கியபடி
அவள் வந்து சேர்ந்தது நகரத்தின் அங்காடித் தெருவுக்கு
அச்சடித்தமாதிரி அவளைப்போல ஆயிரம் சிறுமிகள்
ஒருத்தி ரோஸ்நிற காலனிகளைக் கேட்டு அழுகிறாள்
ஒருத்தி காதை அறுத்தெரியும்
பெரிய சிமிக்கிகளைக் கைநீட்டுகிறாள்
இன்னொருத்தி தன்னைத் தடவிவிடும் கைகளைத் தட்டிவிட்டபடி
பளபளக்கும் நெயில் பாலிஷை எடுக்கிறாள்
சாஃப்டி ஐஸ் கடையின் முன்
முண்டியடித்து நின்றபடி பல சிறுமிகள்
விற்பனையாளர்களின் தாளநயமான அழைப்பில்
அவள் தவறவிட்டது இதைத்தான்
பறந்துகொண்டிருந்த வெள்ளைப்பலூன்கள்
சோப்புநுரை வளையங்கள்
அடுக்கிவைக்கப்பட்டிருந்த காமிஸ் புத்தகங்கள்
மக்காச்சோளம் வெந்த வாசனை
திரும்பிச் செல்லும் வழியை
என்றென்றைக்குமாக மறந்தவள்
கூட்ட நெரிசலில் மெல்லத் தொலைகிறாள்
சுவரெங்கும் வருடவாரியாக தேதிவாரியாக
காணாமல் போன சிறுமிகளின் புகைப்படங்கள்
எல்லாவற்றிலும் அவள் முகமே

’எனக்கு எவ்வித அச்சமும் இல்லை, வானில் நட்சத்திரங்கள் நிரம்பியிருக்கின்றன, அதில் ஒன்றைத் துணையாக்கிக்கொள்வேன்’ என்று தன்னிலை அறிவிப்பாக கவிதையொன்று இத்தொகுதியில் அமைந்துள்ளது.  நட்சத்திரங்கள் ஒரு மானசிகக்கவசமாக அவர்களோடு எப்போதும் இருக்கின்றன. அந்தக் கவசம் அவர்களுடைய நெஞ்சில் வாழும் காட்டுக்கும் கவசமாக இருந்து காப்பாற்றுகிறது.  எந்த ஊருக்குச் சென்று வாழ்ந்தாலும் காடோடிகளின் குடும்ப உறுப்பினர்கள் நினைவில் காட்டின் சித்திரங்களைப் புரட்டியபடியே  வாழ்கிறார்கள். நினைவுகளைக்  கொத்தும் கிளி கவிதை அத்தகு சித்திரங்களில் ஒன்று.

கட்டங்காப்பிக்கு எப்போதும் மிளகுக்காட்டின் சுவை
கோப்பையிலிருந்து சுருண்டு நெளியும் நீராவி
மிளகுக்கொடிகளாகி பால்க்கனி கம்பிகளில் படர்கின்றன
ஒவ்வொரு குறுமிளகிலும்
செளந்தர்யமாய் உன் நினைவுகள்
அதைக் கொத்திச் செல்லவே
வந்தமர்வதும் பறப்பதுமாக அலைக்கழிகின்றன பச்சைக்கிளிகள்

விலங்குக்காட்சிச்சாலையில் கூண்டுகளில் அடைபட்டிருக்கும் விலங்குகளைப்பற்றிய ஒரு கவிதையில் மலையாளக்கவிஞரான சச்சிதானந்தன் எழுதிய ‘நினைவில் காடுள்ள மிருகம்’ என்னும் வரி மிகவும் பிரபலமானது. மேற்குத்தொடர்ச்சிமலையில் வாழ்பவர்களின் கதைகளையும் அதைவிட்டு வெளியேறியவர்களின் கதைகளையும் தெரிந்துகொள்ளும் போது, தம் நினைவில் மலையையும் குறுமிளகையும் சுமந்திருப்பவர்கள் என்று குறிப்பிடத் தோன்றுகிறது. 

நூல்: மிளகு கவிதைத்தொகுதி.
ஆசிரியர்: சந்திரா தங்கராஜ்
வெளியீடு: எதிர் வெளியீடு. 96, நியு ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642002.
விலை: ரூ.170)

Gandhiyai Sumappavargal Book By Sunil Krishnan Bookreview By Pavannan. நூல் அறிமுகம்: சுனில் கிருஷ்ணனின் காந்தியைச் சுமப்பவர்கள் – பாவண்ணன்

நூல் அறிமுகம்: சுனில் கிருஷ்ணனின் காந்தியைச் சுமப்பவர்கள் – பாவண்ணன்



புதிய கோணங்கள் புதிய காட்சிகள்
பாவண்ணன்

காந்தியடிகளின் காலத்தில் வாழ்ந்த மற்ற தலைவர்களுக்கும் காந்தியடிகளுக்கும் இடையில் முக்கியமானதொரு வேறுபாடு இருக்கிறது. மற்றவர்கள் அனைவரும் நாட்டு விடுதலைக்காகவும் மக்களின் பொதுவான வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதுவதற்காகவும் உழைப்பவர்களாக இருந்தனர். காந்தியடிகள் இவர்களைவிட ஒரு படி மேலே சென்று, தனிமனித வாழ்க்கைத்தரத்தையும் கணக்கிலெடுத்துக்கொண்டார். வாழ்க்கைத்தரம் என்பதை போதிய அடிப்படை வசதிகளோடு வாழ்வது என்னும் வரையறையிலிருந்து ஒழுக்கத்தோடும் சத்தியத்தோடும் நேர்மையோடும் வாழ்வது என்னும் வரையறைகளையும் இணைத்துக்கொண்டார். 

இந்த வரையறைகளை ஒவ்வொரு கணமும் காந்தியடிகள் தன் செயல்கள் வழியாக நினைவூட்டியபடியே இருந்தார். அவற்றிலிருந்து ஒருபோதும் பிசகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். கதராடைகளை அணிவதையும், இராட்டையில் நூல்நூற்பதையும் வலியுறுத்தியதுபோலவே தீண்டாமையைக் கைவிடுவதையும் சத்தியத்தைக் கடைபிடிப்பதையும் அவர் வலியுறுத்தினார். ஒரு கண்காணிப்புக்கோபுரத்தின் மீதிருக்கும் விளக்கிலிருந்து பொழியும் வெளிச்சத்தைப்போல காந்தியடிகளுடைய சொற்கள் மக்களுக்குத் திசைகாட்டியபடி இருந்தன. அரசியல் களம் என்னும் எல்லைக்கு அப்பால் வாழ்க்கையை ஒரு கலைப்படைப்பாக தகவமைத்துக்கொள்ளும் விழைவையும் விசையையும் அவர் வழங்கினார். அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்த பிறகும் கூட அவரோடு உரையாடுவதற்கான தருணங்களை இந்த விழைவும் விசையும் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன.

கணக்கற்ற இத்தகு தருணங்கள் பெருகப்பெருக, கதைத்தருணங்களும் பெருகிக்கொண்டே செல்கின்றன. காந்தியடிகளை மையப்பாத்திரமாக்கி பல நூறு கதைகளை எழுதிப் பார்க்கும் சாத்தியங்கள் உருவாகின்றன. ஒவ்வொரு கதையும் காந்தியடிகளை மதிப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. காந்தியடிகளை நேர்மறையாகத்தான் மதிப்பிட வேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லை. எதிர்மறையாகவும் மதிப்பிடலாம். அந்தச் சுதந்திரத்துக்கு யாரும் குறுக்கில் நிற்பதில்லை. ஆனால் எப்படி முன்வைத்தாலும் அது ஒரு படைப்புக்குத் தேவையான தர்க்கத்தின் அடிப்படையில் எழுதி நிறுவப்பட வேண்டும். 

காந்தியை ஒரு கதைப்பாத்திரமாகக் கொண்டு தமிழில் பல்வேறு எழுத்தாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் சுனில் கிருஷ்ணன். இன்றைய வாழ்வில் காந்தியடிகள் என்னவாக நமக்கு எஞ்சுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளும் விதமாக நீண்டதொரு முன்னுரையும் இத்தொகுதிக்கு எழுதியுள்ளார்.  அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவருடைய எண்ணங்களும் நிலைபாடுகளும் நம் முன் ஒரு பெரிய சவாலாகவே காட்சி தருகின்றன. இன்னும் பல தலைமுறைகளுக்கு அவர் வாழ்க்கை ஒரு பேசுபொருளாக நீடிக்கும் என்பதில் ஐயமில்லை. 

கடந்த நூற்றாண்டில் ஐம்பதுகளில் ஜம்புநாதன் என்பவரின் முயற்சியால் ‘காந்தி கதைகள்’ என்னும் தொகுதி வெளிவந்தது. அவை அனைத்தும் காந்தியடிகளின் வாழ்க்கையிலே பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த உண்மையான நிகழ்ச்சிகள். காந்தியடிகளே நேரிடையாக எழுதிய குறிப்புகளிலிருந்தும் காந்தியடிகளோடு பழகிய பல ஆளுமைகள் எழுதிவைத்த குறிப்புகளிலிருந்தும் திரட்டியெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டவை. சுனில் கிருஷ்ணன் தொகுப்பிலிருக்கும் கதைகள் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. கற்பனையை அடிப்படையாகக் கொண்டவை. ஊகங்களின் அடிப்படையில் அமைந்த உரையாடல்களைக் கொண்டவை. அதே சமயத்தில் காந்தியடிகளை நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டவை.  தொகுப்பில் உள்ள பதினைந்து கதைகளில் ஏழு சிறுகதைகள் காந்தியடிகளின் மரணத்தை மையமாகக் கொண்டிருப்பது ஒரு விசித்திரமான ஒற்றுமை.

சுனில் கிருஷ்ணனின் ஆரோகணம் ஒரு முக்கியமான சிறுகதை. மகாபாரதத்தில் பதினெட்டாவது பருவமாக இடம்பெற்றிருக்கும் சுவர்க்க ஆரோகணப் பருவத்தின் சாயலை இச்சிறுகதை கொண்டிருக்கிறது.   தருமரின் இறுதி யாத்திரையையும் சொர்க்கத்துக்குச் செல்வதையும் மகாபாரத ஆரோகணம் விவரிக்கிறது. தருமருக்கு  வாய்த்த இறுதி யாத்திரையைப்போல காந்தியடிகளுக்கு ஓர் இறுதி யாத்திரை வாய்த்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்ற வினாவிலிருந்து தன் கதைத்தருணத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் சுனில் கிருஷ்ணன். இறுதி யாத்திரையின் முக்கியமான அம்சமே, தன் மனம் கொண்டிருக்கும் பற்றுகளை உதறிவிட்டுச் செல்வதுதான். மண்ணுலகில் வளர்த்துக்கொண்ட பற்றுகளை மண்ணிலேயே உதறிவிடுவது. 

காந்தியடிகள் உதறும் பற்றுகள் எதுவாக இருக்கும் என்று அறிந்துகொள்ளும் ஆர்வமே இக்கதையைப் படிக்கத்தூண்டுகிறது. முதலில் அவர் தன் ஆருயிர் மனைவி கஸ்தூர் பா மீது கொண்டிருந்த பற்றைத் துறக்கிறார். இரண்டாவதாக வாழ்நாள் முழுதும் விரும்பி உச்சரித்த ராமநாமத்தின் மீதான பற்றைத் துறக்கிறார். இறுதியாக வாழ்நாள் முழுதும் திருத்திச் சரிப்படுத்திவிடலாம் என நினைத்து தோல்வியுற்ற மூத்த மகன் ஹரிலால் மீதான பற்றைத் துறக்கிறார். இறுதியில் மலைச்சிகரங்களுக்கு அப்பால் பாற்கடலைப்போல வெள்ளைச்சமவெளியை அவர் பார்க்கிறார். தொடுவானம் என்பதே இல்லாத வெண்மை. ‘திருவாளர் காந்தி’ என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டு காந்தி திரும்பிப் பார்த்தார்.

அங்கே யமன் நின்றிருந்தார். “உங்களுக்காக சொர்க்கத்தின் தாழ்கள் திறந்திருக்கின்றன. நீங்கள் உங்கள் வாழ்வில் துறந்த எல்லா இன்பங்களும் அங்கே உங்களுக்குக் காத்திருக்கின்றன” என்று அவர் சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார். ஆனால் காந்தியடிகளுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல விருப்பமில்லை. அதனால் யமனிடத்தில் தன்னை நரகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறார். நரகத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, அங்கிருக்கும் நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன. எங்கும் சீழ் வடியும் புண் உடையவர்கள். ஆயினும் அவற்றைப் பார்த்து முகம்சுளிக்காமல் அங்கேயே நிற்கிறார். பிறகு தன் சேவை அத்தகையவர்களுக்கே தேவைப்படுகிறது என அறிவித்துவிட்டு காந்தியடிகள் நரகத்துக்குள் சென்றுவிடுகிறார். பிறர் துன்பம் கண்டு இரக்கமும் கொள்கிற, பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதி அவற்றை நீக்குவதற்குரிய வழியை உருவாக்குகிற ஒரு தோன்றாத்துணைக்கான கனவும் ஏக்கமுமே சுனில் கிருஷ்ணனை இக்கதையை எழுதத் தூண்டியிருக்கக்கூடும். 

கலைச்செல்வி எழுதிய ஆடல் மற்றொரு முக்கியமான சிறுகதை. சுடப்பட்டு கீழே ரத்த வெள்ளத்தில் விழுந்துவிட்ட காந்தியடிகளின் உயிர் பிரியவிருக்கும் தருணத்தில் அவர் கண்கள் வானின் மேகக்கூட்டத்திடையில் தென்படும் கஸ்தூர் பா வின் முகத்தைக் கண்டடைகின்றன. அந்த  இறுதிக்கணத்தில் இருவரும் ஒருவரோடொருவர் உரையாடிக்கொள்கிறார்கள். கேள்விகள். பதில்கள். விளக்கங்கள். விவாதங்கள். கோரிக்கைகள். மெல்ல மெல்ல அந்த உரையாடல் ஒரு முடிவைத் தொடுகின்றது. இறுதியாக அடுத்த பிறவியிலும் எனக்கு நீ துணையாக வருவாயா என்னும் கேள்விக்கு இருவருமே ஒருவருக்கொருவர் துணையாக இருப்போம் என சொல்லிக்கொள்கிறார்கள். கசப்புகளையும் துன்பங்களையும் கடந்து ஒருவர் மீது ஒருவர் கொள்கிற விருப்பத்தையும் ஈடுபாட்டையும் நாம் எப்படி புரிந்துகொள்வது? அந்த இயற்கையின் ஆடல் என்பது நம் புரிதல் எல்லைக்கு அப்பாலிருக்கும் புதிர். 

ஜெயமோகனின் நீரும் நெருப்பும் காந்தியடிகள் ஒரு பிரச்சினை சார்ந்து தன் அணுகுமுறையைத் தனித்தன்மை மிக்கதாக எப்படி மாற்றி அமைத்துக்கொள்கிறார் என்பதை உணர்த்துகிறது. அந்தத் தனித்தன்மையே அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சமாகும். காந்தியடிகள் 1918இல் ஸ்பேனிஷ் ப்ளூ என்னும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடக்கிறார். எந்த நேரமும் மரணம் வந்து தொட்டுவிடும் என்பதுபோல அவர் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அந்த உண்மை நிகழ்ச்சியை தன் போக்கில் விரித்தெழுதுகிறார் ஜெயமோகன். தன்னால் அவரை நோயிலிருந்து மீட்கமுடியும் என சொல்லிக்கொண்டு ஒரு பைராகி அங்கே வந்து சேர்கிறார்.

தன் வைத்திய வழிமுறை அனல்வழிப்பட்டது என்று அவர் தெரிவிக்கிறார். அவருடைய உயிராற்றலில் அணைந்துகொண்டிருக்கும் நெருப்பை மீண்டும் சுடர்விடச் செய்து பிழைக்க வைத்துவிட முடியும் என்று சொல்கிறார். காந்தியடிகளின் மனம் அந்த வைத்திய முறையை ஏற்றுக்கொள்ளலாம் என நினைக்கிறது. பைராகியின் உரையாடலை அசைபோடுவதன் வழியாக, அனல் வழிமுறைக்கு மாற்றாக நீர் வழிமுறையை அவர் தேர்ந்தெடுக்கிறார். கடைநிலை மக்களுக்கு அவர் ஆற்றவேண்டிய கடமைகள் சுட்டிக் காட்டப்பட்டதும் அவருடைய உடலில் துடிப்பு படரத் தொடங்குகிறது. மறுநாள் காலையில் மருத்துவத்தைத் தொடங்குவதற்கு ஆவலோடு வந்த பைராகி புன்னகையுடன் வெளியேறிவிடுகிறார். நீரும் நெருப்பும் வெறும் மருத்துவ வழிமுறையாக மட்டுமன்றி, படிமங்களாக மாறிவிடுகின்றன. 

பி.எஸ்.ராமையா எழுதிய பதச்சோறு சிறுகதையை காந்தியுகத்துக் கதை என்றே சொல்லவேண்டும். இது குமுதம் என்னும் பெண்ணைப்பற்றிய சிறுகதை. ஹரிஜன நலநிதியைத் திரட்டுவதற்காக தமிழகத்துக்கு வந்த காந்தியடிகள் குமுதம் வாழ்ந்த ஊருக்கும் வந்தார். அப்போது அவருடைய தந்தையார் சிறுமியாக இருந்த குமுதத்திடம் ஐந்து ரூபாய்த் தாளைக் கொடுத்து காந்தியடிகளிடம் ஒரு கையெழுத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அனுப்பிவைத்தார். 

காந்தியடிகளோ ‘என் கையெழுத்துக்கு விலை ஐந்து ரூபாய் என்று யார் சொன்னது? தொடர்ந்து “அதற்கு மேல் கொடுக்கமுடியாத ஏழைகளுக்குத்தான் அந்தத் தொகை. உன்னைப் பார்த்தால் செல்வச்சிறுமியைப் போல இருக்கிறது. நீ அணிந்திருக்கும் நகைகளை நிதியாகக் கொடுப்பாயா?” என்று கேட்டார். அக்கணமே தான் அணிந்திருக்கும் ஆபரணங்களைக் கழற்றிக் கொடுத்துவிட்டாள் சிறுமி. “இதையெல்லாம் என்னிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்று வேறு நகைகளப் போட்டுக்கொள்ளக் கூடாது. அதற்குச் சம்மதம் என்றால்தான் நான் இவற்றை எடுத்துக்கொள்வேன்” என்று காந்தியடிகள் சொன்னார். அதைக் கேட்டதும் “இனி ஒருபோதும் நகைகளை அணியமாட்டேன்” என்று உறுதி அளிக்கிறாள் அச்சிறுமி. 

அவள் வளர்ந்து பெரியவளான பிறகு திருமணத்தின்போதும் அதற்குப் பிறகும்  அவளுக்கு இச்சபதத்தால் பிரச்சினை உருவாகிறது. ஆயினும் தான் காந்தியடிகளுக்கு அளித்த வாக்குறுதியின் காரணமாக அனைத்தையும் அவள் மனத்துணிவுடன் எதிர்கொள்கிறாள். காந்தி யுகத்தில் ஏதோ மந்திரசக்திக்குக் கட்டுண்டவர்கள்போல அணிந்திருக்கும் ஆபரணங்களை உள்ளார்ந்த அன்போடு கழற்றி அன்பளிப்பாக வழங்கிய பல பெண்கள் இந்தியாவெங்கும் வாழ்ந்திருக்கிறார்கள். இச்செய்தியை பலருடைய சுயசரிதைகளில் பார்க்க முடிகிறது. காந்தியடிகளை ஓர் இலட்சிய மனிதர் என்று சொன்னால், இப்படி அன்பளிப்பாக ஆபரணங்களை அளித்த பெண்களை இன்னொரு வகையான இலட்சியப்பெண்கள் என்றே சொல்லவேண்டும். இந்த அதிசயக்காட்சியை பி.எஸ்.ராமையா தன் கதைக்குரிய தருணமாக அமைத்துக்கொண்டார். குமுதத்தின் நகையணியா குணத்தின் காரணமாக, அவள்மீது மணவிலக்கு வழக்கு தொடுத்து நீதிமன்றத்துக்கு இழுக்கிறான் அவள் கணவன். அப்போதும் அந்த இலட்சிய மனைவி கொண்ட கொள்கையில் உறுதியாகவே இருக்கிறாள். 

புதுமைப்பித்தனின் புதிய நந்தன் மற்றொரு முக்கியமான சிறுகதை. இச்சிறுகதையில் காந்தியடிகள் நேரடிப் பாத்திரமாக இடம்பெறவில்லை. அவர் தன் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஆதனூர் என்னும் ஊருக்கு வர இருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காக ஊர்மக்கள் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் போடப்பட்டிருந்த மேடைக்கு அருகில் காத்திருக்கிறார்கள். அந்தத் தருணத்தில் நிகழும் எதிர்பாராத விபத்தொன்றை கதைத்தருணமாக மாற்றியிருக்கிறார் புதுமைப்பித்தன். 

பிராமண குடும்பத்தில் எம்.ஏ.படித்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு காந்திய வழியை தன் வாழ்க்கைப்பாதையாக வகுத்துக்கொண்டவன் ராமனாதன். சேரியில் வாழும் பெண்ணொருத்தியைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பவன். அதே ஊரில் சேரியில் பாவாடையாகப் பிறந்து நகரத்துக்குச் சென்று ஜான் தானியலாக வளர்ந்து தோழர் நரசிங்கமாக மாறுகிறான் ஒருவன்.   நீண்ட இடைவெளிக்குப் பிறகு தந்தையைப் பார்க்க ஊருக்கு வந்திருக்கிறான். ஊருக்குள் மகாத்மா வரவிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு அவரைக் காண்பதற்காக பார்வைத்திறன் இல்லாத கிழவ்னொருவன் சேரியிலிருந்து மேடையை நோக்கி நடந்துவருகிறான். அந்த நேரத்தில் சிவனின் நெற்றிக்கண்ணென ஒளிவிட்டு விரைந்து கடந்துபோகும் ரயில் அவன் மீது மோதிவிடுகிறது. அவனைக் காப்பாற்றும் முயற்சியில் ஓடி வந்த நரசிங்கமும் ராமனாதனும் பலியாகிவிடுகிறார்கள். 

காந்திய வழியில் சமூக எதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர் ஒருவர். அதே எதார்த்தத்தை வேறு வழியில் புரிந்துகொண்டவர் இன்னொருவர். இவ்விரு கூட்டத்தையும் சேராத அப்பாவி மனிதர் மற்றொருவர். மதம் அல்லது சனாதனம் என்னும் ரயிலின் வேகம் எல்லாரையும் இரையாக்கிக்கொள்கிறது. அது யாரையும் பொருட்டாகக் கருதவில்லை. மதம் எல்லோரையும் இரக்கமின்றி அரைத்துக் கூழாக்கிவிட்டு நிற்காமல் போய்க்கொண்டே இருக்கிறது. புதுமைப்பித்தனின் கதைகளில் வழக்கமாகத் தென்படும் கசப்பின் சாரம் இக்கதையிலும் ஒட்டியிருக்கிறது. விடுதலையை ஒட்டிய காலத்தில் மதத்தின் பேரால் நிகழ்ந்த உயிரிழப்புகளைப்பற்றிய செய்தியைப் படித்த பிறகு புதுமைப்பித்தனின் கசப்பில் படிந்திருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

சூடாமணி, அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், சரவணக்கார்த்திகேயன், தேவிபாரதி, ஜி.நாகராஜன், நகுல்வசன் போன்றோரின் சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. எல்லாச் சிறுகதைகளும் தனித்தன்மை மிக்க புதியதொரு கோணம் வழியாக காந்தியடிகளைப் பார்க்க முனைகின்றன. 

நூல்: காந்தியைச் சுமப்பவர்கள்
தொகுப்பாசிரியர்: சுனில் கிருஷ்ணன்
விலை: ரூ 300
வெளியீடு: பரிசில் புத்தக நிலையம் 235, எம் எம் டி ஏ காலனி, அரும்பாக்கம், சென்னை -600106.

Dharmapuri Mannum Makkalum Book By T. Pazhamalai Booreview By Pavannan நூல் அறிமுகம்: த. பழமலயின் தருமபுரி மண்ணும் மக்களும் - பாவண்ணன்

நூல் அறிமுகம்: த. பழமலயின் தருமபுரி மண்ணும் மக்களும் – பாவண்ணன்



பழமலய் வழங்கிய அன்புக்காணிக்கை
பாவண்ணன்

பதிற்றுப்பத்து பாடல்தொகையில் எட்டாம் பத்துக்குரிய பாடல்கள் அனைத்தும் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் அரசனின் போர்வெற்றியைப் புகழ்ந்து  அரிசில் கிழார் பாடியவை. ஒவ்வொரு பாட்டும் தகடூர் என்னும் ஊரை இரும்பொறை முற்றுகையிட்டு அழித்துச் சூறையாடிய வீரத்தை விதந்தோதும் வகையில் எழுதியிருக்கிறார் அரிசில் கிழார்.  ’பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின் வெல்பேர் ஆடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பின் தகடூர் நூறி’ என்னும் வரிகள் அப்போரின் உச்சக்கட்டக் காட்சியை விவரிக்கின்றன.  ’மக்களுக்குப் பயனளிக்கும் பலவிதமான பொருட்களை காட்டின் உட்பகுதிகளில் குவியலாகக் குவித்து காவல் காத்தபடியே தமக்குள் மோதி போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களைத் தாக்கி, அக்காட்டின் அரணாக விளங்கும் கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கிய பெருமைக்குரியவன்’ என்பதுதான் அவ்வரிகளின் பொருள். அப்போது தகடூரை ஆண்டவன் அதியமான். அந்தக் கோட்டையின் பெயர் அதியமான் கோட்டை.

1978-79 காலகட்டத்தில் தருமபுரி அரசு கல்லூரியில் பணியாற்றிய போது, கவிஞர் பழமலய் தருமபுரியைப்பற்றிய வரலாற்று விவரங்களைக் கேட்டறிந்து தொகுக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு நாளும் சுற்றியலைந்திருக்கிறார். இரண்டாயிரம் நூற்றாண்டுக்கு முன்பாகவே அழிந்துபோன கோட்டையின் பெயர் ஊருக்குள் இன்னும் நிலவுவதைக் கேட்டு அவருக்குள் ஒருவித ஆர்வம் மூண்டிருக்கிறது. அந்தக் கோட்டை எங்கே இருந்தது என்பதையாவது பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆவலோடு விவரம் தெரிந்தவர்களிடம் கேட்கிறார். அவர்கள் சுட்டும் திசையில் நடந்தபோது, மலைத்தொடரைப் பார்ப்பதுபோல இருந்த ஏரிக்கரையின் பக்கம் வந்து நின்றுவிடுகிறார்.

வெட்டவெளியாக விரிந்திருந்த அவ்விடத்தில் வெகுநேரம் அலைபாய்ந்த அவர் கண்கள், அபூர்வமான ஒரு தருணத்தில் நிலத்தோடு நிலமென ஒட்டிக் கிடந்த கோட்டையின் அடிச்சுவரைப் பார்த்துவிடுகின்றன. இரண்டாயிரம் ஆண்டு பழமையான கோட்டையின் வேர். அதைப் படிக்கும் ஒவ்வொரு வாசகனையும் மெய்சிலிர்க்க வைக்கும் தருணம் அது. பரவசம் மிக்க அக்கணத்தை ஒரு புனைவுப்படைப்புக்கே உரிய நேர்த்தியோடும் சொற்சிக்கனத்தோடும் எழுதியிருக்கிறார் பழமலய். பெருஞ்சேரலால் அழிந்துபோன தகடூரை கொஞ்சம் கொஞ்சமாக பல நூற்றாண்டுகளாக உழைத்து மக்கள் மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். குடியிருப்புகள் உருவாகின்றன. இன்னொரு ஏரி வெட்டப்படுகிறது. இன்னுமொரு ஊரும் உருவாகிறது.  பன்னிரண்டாம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் புதிய தகடூர் முழுமையடைகிறது. 

ஒவ்வொரு நாளும் அலைந்து அலைந்து தகவல்களைத் திரட்டி, அன்றன்றே பழமலய் சிறுசிறு கட்டுரைகளாக எழுதி வைத்ததன் விளைவே இப்புத்தகம். தான் சந்தித்த வரலாற்று மனிதர்களைப்பற்றிய தகவல்கள், கோவில்கள், குளங்கள், சிற்பங்கள் என தெரிந்துகொண்ட தகவல்கள், பார்த்த இடங்களைப்பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒரு வரலாற்று ஆய்வாளரைப்போல ஒன்றுவிடாமல் அவர் தொகுத்திருக்கிறார்.  அவை ஒவ்வொன்றையும்  வரலாற்று நிகச்சிகளோடு அழகாக இணைத்துக் காட்டி ஒரு வெளிச்சத்தை உணரவைக்கிறார். 334 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் 144 கட்டுரைகள் உள்ளன. இது தருமபுரியின் மண்ணையும் மக்களையும் பற்றிய மிகச்சிறந்த சமூக ஆவணம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கவிஞரும் தமிழாசிரியருமான பழமலய்க்கு தருமபுரி நன்றிக்கடன் பட்டிருக்கிறது. 

மல்லிகார்ஜுனர் கோவில் முன்மண்டபத்தில் தொங்கும் தூணொன்றைப் பார்த்ததாகச் சொல்கிறார் பழமலய். ஏழடி உயரம் கொண்ட தூண். தரையில் நிற்பதுபோலத் தோற்றமளித்தாலும் உண்மையில் தரையைத் தொடாமல் நிற்கும் அதிசயமான கல்தூண் அது. பாபிலோனின் தொங்கும் தோட்டத்தைப்போல, அது தொங்கும் தூண். அம்பாள் கோவில் அடிமேடையை பதினெட்டு யானைகள் தாங்கி நிற்கின்றன. தென்கரைக்கோட்டையிலும் சூளகிரியிலும் இசைத்தூண்கள் உள்ளன. அதியமான் கோட்டை சோமேசுவரர் கோவிலின் முன்னால் உள்ள ஒரு கல்வளைவுக்குள் புகுந்துவரும் மாலைக் கதிரொளி, குறிப்பிட்ட நாளில் சிவலிங்கத்தின் மீது படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அத்திமுகம் என்னும் ஊரில் தரைமட்டத்திலிருந்து பதினைந்து அடி ஆழத்தில் சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் இப்படி தகவல்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன.

கிருஷ்ணகிரியில் சையத்பாட்சா மலையில் இரு உடல்களுக்கு நான்கு சமாதிகள் அமைந்திருப்பதைப் பார்த்து, அதன் பின்னணியாக இருந்த வரலாற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்டு எழுதிவைத்திருக்கிறார் பழமலய். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் கிருஷ்ணகிரியை ஆண்டு வந்த கிருஷ்ணராஜாவும் அக்பரும் சண்டையிடுகின்றனர். ஏறத்தாழ ஆறுமாத காலம் தொடர்ந்து போர் நடைபெற்றபோதும், ஒருவராலும் முழு வெற்றியை அடையமுடியவில்லை. அப்போது அக்பரின் கனவில் தோன்றிய தெய்வம் “உன் படையிலுள்ள சையத் பாட்சா, சையத் அக்பர்: ஆகிய இருவரால் மட்டுமே கிருஷ்ணராஜாவை வெல்லமுடியும்“ என்று தெரிவிக்கிறது. அதையே இறைவனின் கட்டளையாகக் கொண்டு அக்பர் அவ்விருவரையும் சண்டைக்கு அனுப்பினார். போரின் தொடக்கத்திலேயே இருவருடைய தலைகளும் சீவப்பட்டன. ஆயினும் தலையற்ற உடல்கள் எதிரிகளோடு மோதியபடி மலைமீது ஏறின. எதிரிப்படையைச் சேர்ந்த வீரர்கள் அதைக் கண்டு அஞ்சி பின்வாங்கினர். பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த திப்புசுல்தான் அத்தலைகளுக்கு மலையடிவாரத்திலும் தலையற்ற உடல்களுக்கு மலையுச்சியிலும் தனித்தனியாக சமாதிகளை எழுப்பினார். 

அதியமான் கோட்டை காளிக்கு பங்குனி விழாவின்போது எருமைக்கிடாவை பலியாகக் கொடுக்கும் வழக்கம் உள்ளது. அதையொட்டி பல இடங்களில் விசாரித்த பழமலய் அந்தப் பலியுடன் தொடர்புடைய பல கதைகளைத் திரட்டி ஒரு தர்க்கத்தின் அடிப்படையில் பதிவு செய்திருக்கிறார். அவர் கேட்டுப் பதிவு செய்திருக்கும் கர்ணகி கதை சுவாரசியமானது. மதுரையை எரித்த கர்ணகி வழியில் தென்பட்ட எல்லா ஊர்களையும் எரித்துக்கொண்டே வந்தாளாம். அவளைத் தடுக்க யாராலும் முடியவில்லை. எங்கோ ஒரு ஊரில் அவளுக்காக வெட்டிவைக்கப்பட்ட பொய்க்குழியில் இடறி விழுந்துவிட்டாள். மக்கள் அவளை அப்படியே கட்டிப் போட்டு விடுகிறார்கள். அவள் காளியாக மாறி விடுகிறாள்.

ஆண்டுக்கு ஏழு எருமைக்கடா பலி கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து அவளை அமைதிகொள்ளச் செய்கிறார்கள் மக்கள். பொதுவாக எருமையின் ஆண்கன்றுகளையே பலிகொடுக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள். மைசூர் என்பது மகிஷங்களின் ஊர். அதாவது எருமையூர். எருமைக்கடா சிங்கத்தையும் எதிர்த்து நின்று விரட்டியடிக்கும் ஆற்றலை உடையது. வெல்ல முடியாதது. கூற்றுவனுக்கு அதுவே ஊர்தி. அம்பாளின் ஊர்தி சிங்கம். அவள் சிங்கத்தின் மீது அமர்ந்து வந்து எருமையைக் கொல்கிறாள். தேவி எருமைவீரனைக் கொல்வதுபோன்ற கோலம் இந்தக் கருத்தை ஒட்டி உருவாகியிருக்கலாம். காளிக்கு எருமைக்கடா பலியிடும் சடங்கின் பின்னணியைப் புரிந்துகொள்ள பழமலய் சேகரித்திருக்கும் கதை உதவியாக இருக்கிறது.

தருமபுரி மக்களிடம் உரையாடும்போது தெரிந்துகொண்ட சில புதுமையான பழமொழிகளை ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் பழமலய். அவை அந்த வட்டாரத்துக்கே உரியவை. ‘கலகலவென்று இருக்கிற ஆலமரத்தை நம்பலாம். உம்மென்று இருக்கிற புளியமரத்தை நம்பக்கூடாது’, சக்களத்தி பிள்ளை தாகத்திற்கு உதவினால் தவத்திற்கு யார் போவார் வருணமலை’ ‘படுவது யானைப்பாடு படுப்பது முயல்படுக்கை’, ‘கோழியும் போய் குரல்வளையும் போன கணக்கு’, ‘அவரைக்கொல்லை மேய்ந்த மாடும் அடுத்தவனிடம் போனவளும் ஒன்று’, ’பாவம் என்று பழந்துணி தந்தானாம், வீட்டிற்கு முன்னாலேயே இழுத்து இழுத்து முழம் போட்டுப் பார்த்தானாம்’ ஒவ்வொரு பழமொழியும் உருவான பின்னணிக்கதை அருமையாக உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நரசையர் என்பவர் அதிகாரியாகப் பணிபுரிந்தார். அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆங்கிலேயரைப்போலவே அவரும் மக்களைச் சுரண்டி செல்வத்தைச் சேர்த்திருக்கிறார். ஓய்வுபெற்று வீட்டோடு முடங்கியிருந்த ஓய்வுக்காலத்தில் அவர் மனம் மாறியது. தான் செய்த பாவத்துக்கு மாற்றாக தருமபுரியிலேயே ஒரு பெரிய குளம் வெட்டினார். அது அவர் பெயராலேயே நரசையர் குளம் என்று அழைக்கப்படுகிறது. 

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் முள்ளிக்காடு என்னும் சிற்றூரில் ஒரு காலத்தில் யாரோ நாடோடிப் பெண்ணொருத்தி இரட்டைப்பிள்ளை பெற்றெடுத்தாள். இரண்டும் இறந்துவிட்டன. அக்குழந்தைகளைப் புதைத்த இடத்தில் இரு செடிகளை நட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். அவை வளர்ந்து மரங்களானபோது மக்கள் அவற்றை ராமர் மரம் – இலட்சுமணர் மரம் என்று அழைக்கத் தொடங்கினார்கள் வாணியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடி வந்தபோது, இராமர் மரத்தை வீழ்த்தி இழுத்துச் சென்றுவிட்டது. 

ஊர் சார்ந்தும் இடம் சார்ந்தும் பழமலய் சேகரித்திருக்கும் கதைகள், மக்களுக்கு தம் இடங்களை பிறர் முன்னிலையில் மிக உயர்ந்ததாகக் காட்டிக் கொள்வதில் இருக்கும் ஆர்வத்தைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கின்றன. பாண்டவர்களில் ஒருவரான தருமர் ஒரு காலத்தில் அந்த ஊரில் தங்கியிருக்கிறார். விடிந்ததும் கோவிலுக்கு எதிரில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு பூசை செய்திருக்கிறார். தருமர் வந்து தங்கிய ஊர் என்பதாலேயே அந்த ஊர் தருமர்புரி என்று பெயர் பெற்றது என்று ஒரு கதை நீள்கிறது. இன்னொரு கதையில் காசி ராஜாவின் மகன் தர்மாங்கதன் வருகிறான். அவன் வேட்டைக்குச் சென்றிருந்த சமயத்தில் ஒரு முனிவரின் சீற்றத்துக்கு இலக்காகி சாபம் பெறுகிறான்.

முனிவரின் சாபம் அவனை பாம்பாக மாற்றிவிடுகிறது. அழுது புலம்பிய மனைவியிடம் அந்தப் பாம்பை மடியில் கட்டிக்கொண்டு நாடெங்கும் எல்லாக் குளங்களிலும் மூழ்கி தீர்த்தமாடி வருமாறும், ஏதேனும் ஒரு குளத்தில் அவனுக்கு மனிதவடிவம்  மீண்டும் வரும் என்றும் தெரிவிக்கிறார். அதன்படியே குளம்தோறும் மூழ்கியபடி செல்கிறாள் மனைவி. தென்னாட்டில் பிரம்மாகுளத்தில் மூழ்கியபோது தர்மாங்கதன் மீண்டு வருகிறான். செய்தியை அறிந்த அரசன் அவனைச் சந்தித்து, அவனைத் தன் சேனாதிபதியாக வைத்துக்கொள்கிறான். வாரிசு இல்லாத அந்த அரசாட்சிப் பொறுப்பு, அரசனையடுத்து அவனிடம் வந்து சேர்கிறது. தர்மாங்கதன் ஆட்சி செய்த ஊருக்கு  தர்மபுரி என்று பெயர் வழங்கலாயிற்று. 

தர்மபுரியைச் சுற்றியும் உள்ள கோவில்களில் காணப்படும் சிற்பங்களைப்பற்றிய தகவல்களையும் ஒன்றுவிடாமல்  பழமலய் தொகுத்துள்ளார். சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள இராமாயண, பாரதக் கதைக்காட்சிகளின் சிற்பங்களுடைய அழகையும் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்களின் நேர்த்தியையும் சுருக்கமாக முன்வைத்திருக்கிறார். எல்லாக் கோவில்களிலும் பாவை விளக்கேந்திய பெண்சிற்பங்களையே நாம் பார்த்திருப்போம். பழமலய் தருமபுரியில் தான் பார்த்த பாவை விளக்கேந்திய ஆண்சிற்பத்தைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். கோவிலூரில் குந்திக்கு ஒரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் செய்தியையும் சேகரித்திருக்கிறார். காரிமங்கலத்தில் காணப்படும் நவகண்டச்சிற்பம், மதகுப்பட்டன் நினைவுச்சின்னம், கழுதைக்குறத்திக்கல், நடுகற்கள் என எல்லாத் தகவல்களையும் திரட்டித் தொகுத்திருக்கிறார்.

ஒருமுறை திப்புசுல்தான் தருமபுரிக்கு வந்திர்க்கிறார். அப்போது ராஜாபேட்டை என்னும் பகுதியில் ஒரு முகமதியப் பெரியவர் தங்கியிருக்கிறார். ஞானி. அவரை அழைத்து வருமாறு ஆள் அனுப்பிவைக்கிறார் திப்பு. “அவரால் எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை, வேண்டுமென்றால் திப்புவை இங்கு வரச் சொல்” என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார் ஞானி. பிழையை உணர்ந்த திப்பு உடனடியாக அவரைப் பார்க்கப் புறப்பட்டார். சந்தித்து உரையாடிய பிறகு தன் அன்பளிப்பாக ஞானிக்கு ஒரு வைரக்கல்லைக் கொடுத்தார். ஞானி தனக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து “இந்தா கற்கண்டு” என்று கொடுத்துவிட்டார். சிறுவனும் ஆவலோடு வாங்கித் தின்றுவிட்டான். அதைப் பார்த்து திகைத்து நின்ற திப்பு ஞானியின் மேன்மையை உணர்ந்துகொண்டார். அதற்குப் பிறகு தருமபுரிக்கு வரும்போதெல்லாம் அந்த ஞானியைச் சந்திக்காமல் சென்றதில்லை. அவருடைய மறைவுக்குப் பிறகு அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் ‘அலிசா காதர் அவுலியா தர்கா’ என வழங்கிவருகிறது. டேகிஷ்பேட்டை மசூதிக்கு அருகில் இருந்த அந்தத் தர்காவைத் தேடிச் சென்று பார்த்த அனுபவத்தை பழமலய் பதிவு செய்திருக்கிறார். 

ஆங்கிலேயர் காலத்தில் பள்ளிகளில் பாடப்பட்ட ‘லாங் லிவ் கிங்’ என்னும் ஆங்கிலப்பாடலை நாம் அனைவரும் கேட்டிருப்போம். அந்தப் பாடல் தமிழிலும் சில பள்ளிகளில் பாடப்பட்டது என்னும் செய்தி பழமலயின் குறிப்புகள் வழியாக உணர்ந்துகொள்ள முடிகிறது. தருமபுரி அவ்வைநகர் தெருவில் வசித்துவந்த எண்பது வயதுகொண்ட கிறித்துவர் தம்மிடம்  அந்தத் தேசிய கீதத்தைப் பாடிக் காட்டியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ‘கர்த்தாவே, ராஜனை, எங்கள் நல் வேந்தனைக் காப்பாற்றுமே. வெற்றி கம்பீரமும் கீர்த்த் பிரதாபமும் தீர்க்காயுள் ஆட்சியும் நீர் ஈயுமே’ என்று சில வரிகளையும் அவர் கொடுத்திருக்கிறார். 

தருமபுரியைப்பற்றி கண்ணால் கண்ட, காதால் கேட்ட ஒவ்வொரு சிறுசிறு தகவலையும் அர்ப்பணிப்புணர்வுடன் அலைந்து திரட்டித் தொகுத்திருக்கிறார் பழமலய். இரு ஆண்டுகள் தனக்குக் கிட்டிய ஓய்வுப்பொழுதுகளிலெல்லாம் நடந்து சென்றும் மிதிவண்டியில் சென்றும் பேருந்தில் பயணம் செய்தும் தகவலுக்காக ஒரு தேனீயைப்போல அலைந்திருக்கிறார். 

தருமபுரி வட்டாரத்தைச் சேர்ந்த முக்கியமான சுதந்திரப்போராட்ட ஆளுமையான தீர்த்தகிரி முதலியாரின் சந்ததியினரைச் சந்தித்து அவர் அளித்த தகவல்களையெல்லாம் தொகுத்திருக்கிறார் பழமலய். பாரதியார் மீது முதலியாருக்கு இருந்த ஈடுபாடு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊர்மக்களை தனக்குச் சொந்தமான வேறொரு இடத்துக்குக் குடியேறச் செய்து  அந்தப் பகுதிக்கு பாரதிபுரம் என்று பெயர் சூட்டியது, விவேகாநந்தரை தருமபுரிக்கு அழைத்துவந்து உரையாற்ற வைத்த செய்தி ஆகியவை அனைத்துமே இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டிய செய்தி. சுப்பிரமணிய சிவாவின் சமாதியைப் பார்ப்பதற்காக பாப்பாரப்பட்டிக்குச் சென்ற பழமலய் அச்சமாதியின் முன் விழுந்து வணங்கிய குறிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. அத்தியாகியின்  பாரதமாதா கோவில் கனவு, அதற்கு சுபாஷ் சந்திரபோஸ் அடிக்கல் நாட்டிய அளவிலேயே ஒரு நூற்றாண்டு கடந்த பிறகு சில மாதங்களுக்கு முன்புதான் நிறைவேறியது.   

இறுதியாக, தமக்கு முன்னால் தருமபுரி பற்றி எழுதிய பெரியவர்களை நினைவுகூர்ந்தபடி தம் குறிப்பேட்டை நிறைவு செய்திருக்கிறார் பழமலய். தருமபுரியின் துரதிருஷ்டமோ அல்லது தமிழர்களின் துரதிருஷ்டமோ, 1978ஆம் ஆண்டிலேயே அவர் இப்படி ஓடி ஓடிச் சேகரித்து எழுதிய குறிப்புகள்  அனைத்தும் நூலாக்கம் பெறாமல் கையெழுத்துப் பிரதியாகவே தங்கிவிட்டன. செலவு கூடிய வேலை என்பதால், முந்நூற்றுச் சொச்சம் பக்கங்களையுடைய புத்தகத்தை வெளியிடுவது அவருக்கும் சாத்தியமற்றுப் போயிருக்கலாம். அந்த பிரதியைத் தொடர்ந்து கவிதைகளும் கட்டுரைகளுமாக அவர் எழுதிய பதினாறு நூல்கள் வெளியான பிறகே, பதினேழாவது நூலாக அது வெளியானது.

அதையும் பழமலய் தன் சொந்தச் செலவிலேயே வெளியிட நேர்ந்தது. மேலும் பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு தகடூர் இலக்கியப் பேரவையைச் சேர்ந்த நண்பர்களின் கூட்டுமுயற்சியால் இப்போது மறுபதிப்பாக வெளிவந்திருக்கிறது. இது தருமபுரி மக்களுக்கு பழமலய் வழங்கிய அன்புக்காணிக்கை. சமீபத்தில் ஒசூர், மாயவரம், மதுரை, திருநெல்வேலி, சேலம், வெம்பூர் என ஒவ்வொரு இடம்சார்ந்தும் குறுவரலாறுகள் எழுதப்பட்டு வரும் சூழலில், தருமபுரியைப்பற்றிய பழமலயின் புத்தகம் இன்னும் சிலருக்கு இத்திசையில் எழுதுவதற்கான மன எழுச்சியை ஊட்டக்கூடும். 

நூல்: தருமபுரி மண்ணும் மக்களும்
ஆசிரியர்: த.பழமலய்
வெளியீடு: திருவள்ளுவர் பொத்தக இல்லம்
விலை: ரூ.330

Anthimam Novel written By P. Sagadevan Novelreview By Pavannan நூல் அறிமுகம்: ப.சகதேவனின் அந்திமம் நாவல் - பாவண்ணன்

நூல் அறிமுகம்: ப.சகதேவனின் அந்திமம் நாவல் – பாவண்ணன்



கரைந்த மனிதர்களின் கதைகள்
                                      – பாவண்ணன்

உத்தலாகர் என்று ஒரு முனிவர் இருந்தார். அவருடைய மகன் ஸ்வேதகேது. அவர்களுக்கு இடையே நிகழும் உரையாடல் தருணங்கள் சாந்தோக்கிய உபநிடதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. கண்ணுக்குப் புலப்படாத ஆன்மாவைப்பற்றியும் கண்ணால் காணக்கூடிய உலகத்தைப் பற்றியதுமான ஒரு கேள்விக்கு விடையளிக்கும் விதமாக உத்தாலகர் தன் மகனிடம் அருகிலிருந்த ஆலமரத்தைச் சுற்றி விழுந்து கிடந்த பழங்களில் ஒன்றைக் கொண்டு வருமாறு சொன்னார். மகன் எடுத்து வந்து கொடுத்ததும் அப்பழத்தை உடைக்கும்படி சொன்னார். அவன் உடைத்ததும் “அதில் என்ன காணப்படுகிறது?” என்று கேட்டார் உத்தாலகர். “சிறுசிறு விதைகள் உள்ளன தந்தையே” என்றான் மகன். அடுத்து அதையும் உடைக்குமாறு சொன்னார் உத்தாலகர். அவன் உடைத்து நசுக்கியதும் “அதில் என்ன காணப்படுகிறது?” என்று கேட்டார். ”எதுவுமே இல்லை” என்றான் மகன். உத்தாலகர் புன்னகையுடன் “எதுவுமற்றதாகக் காட்சியளிக்கும் அதற்குள் ஒரு பெரிய ஆலமரமே இருக்கிறது மகனே. விழவேண்டிய இடத்தில் விழுந்து முளைத்துவிட்டால் ஒரு பெரிய மரத்தையே அது உருவாக்கிவிடும்” என்றார்.

வாழ்க்கைக்கான வழியைத் தேடும் மக்கள் நசுக்கி வீசப்பட்ட விதைகளென  ஒரு மாநகரத்துக்குள் வந்து குவிகிறார்கள். ஒவ்வொரு நாளும் பல்வேறு திசைகளிலிருந்தும் வந்து சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வந்து நிலைபெறும் இடத்தின் தன்மை சார்ந்து மெல்ல மெல்ல முளைத்து மரமாகிறார்கள். அவரவர் தன்மைக்கேற்ப ஆலமரமாகவோ, வேப்பமரமாகவோ, முள்மரமாகவோ, மாமரமாகவோ , மழைமரமாகவோ மாறுகிறார்கள்.

அவர்கள் தம் சொந்த வாழ்நிலங்களில் ஏன் நசுக்கப்படவேண்டும், ஏன் வீசப்படவேண்டும் என்பவை முக்கியமான கேள்விகள். சிலப்பதிகாரத்தில் புகார் நகரத்தின் சிறப்பைச் சொல்லும்போது இளங்கோவடிகள் ‘பதியெழு அறியாப் பழங்குடி’ என்று குறிப்பிடுகிறார். புகார் நகரத்தில் வாழும் மக்கள் காலம்காலமாக அதே ஊரில் தலைமுறை தலைமுறையாக நிலைத்து வாழ்கிறார்கள் என்றும் இடப்பெயர்வு என்பதே அவர்கள் வாழ்வில் ஏற்பட்டதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்ட விரும்புகிறார். அது உண்மையாகவே இருக்கலாம். அந்தக் காலத்தில் அது சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் சிக்கல் நிறைந்த இன்றைய  காலகட்டத்தில் அது சாத்தியமில்லை. பசியும் பிணியும் பகையும் தன்மானமும் வாழ்க்கை நெருக்கடிகளும் அவமானங்களும் வாய்ப்பில்லாத சூழல்களும் ஒவ்வொருவரையும் ஊரைவிட்டு வெளியேற்றியபடியே இருக்கின்றன. அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு நகரம் அல்லது மாநகரம் தன்னை நாடி வரும் அனைவரையும் ஒரு பேரன்னையாக வாரி அணைத்துக்கொள்கிறது.  அந்தப் புதிய இடத்தில் அவரவரால் பற்றிக்கொள்ள முடிந்த விழுதைப் பற்றிக்கொண்டு தம் ஆற்றலால் விசைகொண்டு மேலே செல்ல முயற்சி செய்கிறார்கள் அவர்கள். 

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பொள்ளாச்சிக்கு அருகிலிருக்கும் கிராமத்திலிருந்து பெங்களூருக்கு வந்தவர் குமாரவேல். பட்டப்படிப்புக்குப் பிறகு அவருக்கு பெங்களூரில் வேலை கிடைத்திருந்தது. பிரம்மச்சாரி இளைஞனாக தங்குவதற்கு அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட இடம் கோரமங்கலா. அங்கே வாடகைக்கு அறையெடுத்து தங்கிக்கொண்டு அரசுப் பேருந்தில் வேலைக்குச் சென்று வந்தார். அதற்குப் பிறகு மிதிவண்டி வாங்கினார். அடுத்து சில ஆண்டுகள் கடந்ததுமே ஸ்கூட்டர் வாங்கினார். வங்கியில் வேலை செய்யும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அதே கோரமங்கலாவில் வாடகைக்கு இரு அறைகள் கொண்ட பெரிய வீடாக பார்த்து குடியேறினார். மனத்தில் கிராமத்தைச் சுமந்துகொண்டு வாழும் அவருக்கும் ஆங்கிலப்பண்பாட்டில் ஊறியிருந்த அவர் மனைவிக்கும் கருத்து முரண்பாடுகள் முளைத்தபடியே இருந்தன. அவற்றையெல்லாம் புறந்தள்ளி அவர்கள் சேர்ந்தே வாழ்ந்தார்கள். 

அப்போது பெங்களூரு நகர வளர்ச்சிக் குழுமம் கோரமங்கலாவின் பல பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து நிலங்களை வாங்கி, வீட்டு மனைகளாகப் பிரித்து அனைவருக்கும் வழங்கியது. ஏறத்தாழ நானூறு ஐநூறு மனைகள். எங்கெங்கோ புரட்டி கடன் வாங்கி குமாரவேலும் ஒரு மனையை வாங்கி வீடு கட்டினார். ஒரு கார் வாங்கினார். குழந்தைகளை நல்ல தரமான பள்ளிகளில் சேர்த்து படிக்கவைத்தார். பெரியவள் பெண். மருத்துவத்தில் பல மேல்நிலைப் படிப்புகளைப் படித்துவிட்டு வேலை பார்த்துவந்தார். திருமண வயதைக் கடந்தபோதும் அவளுக்கு அவரால் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. அவளுடைய சுதந்திர எண்ணப்போக்குக்கும் அவருடைய நகர்சார் சிந்தனைக்கும் இடையில் நிரப்ப முடியாத பள்ளம் இருந்தது. அது அவருக்கு பெரிய மனக்குறை. மகனோ சற்றே ஆரோக்கியக்குறைவு உடையவன். அவனும் பேருக்கு ஏதோ படித்துவிட்டு கல்லூரி அலுவலகத்தில் வேலை செய்து வந்தான். அவனுக்கு ஒரு பெண்ணைத் தேடி திருமணம் செய்துவைத்தார். ஆனால் அவருடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுபவளாக அவள் இல்லை. பூசல்களால் அமைதியைக் கெடுப்பவளாகவே இருந்தாள். 

அதற்குள் அவர் முதுமையின் தொடக்க எல்லைக்கு வந்துவிட்டார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற நேரத்தில்தான் அவருக்கு தன் ஆற்றலின் எல்லைகள் புரியத் தொடங்கின. உடல் உறுப்புகளின் செயல்திறன் குறையத் தொடங்கிவிட்டன. விருப்பமான உணவுகளை விரும்பும் நேரத்தில் விரும்பும் அளவு சாப்பிடமுடியாத சூழல். தன் அந்திமக்காலம் தொடங்கிவிட்டது என உள்ளுணர்வு உணர்த்துவதை அவரால் உணரமுடிந்தது. ஒரு காலத்தில் அவசரம் அவசரமாக பறந்துகொண்டிருந்த தெருக்களில் நிதானமாக நடப்பதும் நான்கு பக்கங்களிலும் வேடிக்கை பார்ப்பதைத் தவிர அவருக்கு வேலை எதுவும் இல்லை. 

ஒருநாள் நடையில் அவருக்கு தன் நாற்பதாண்டு கால பெங்களூரு வாழ்க்கையும் ஒரு காட்சித்தொகுப்பென சட்டென அவருடைய கண்முன்னால் விரிகிறது.  அந்த இறந்தகாலம் என்னும் தேனை நினைவுகளில் வழியவிட்டு துளித்துளியாக சுவைக்கிறார் குமாரவேல். ஒரு கிராமமாக நகரத்தைவிட்டு ஒதுங்கியிருந்த கோரமங்கலா. அரசின் நேரடிக் கண்காணிப்பில் உருவாக்கப்பட்டு நகரத்தின் ஓர் .உறுப்பாக இணைந்துகொண்ட கோரமங்கலா. கணினிநகரமாக பெங்களூரு உருமாறிய போது தன் வடிவத்தையும் மாற்றிக்கொண்ட கோரமங்கலா. எல்லா உலக வணிக நிறுவனங்களின் கிளைகளையும் தன் நிழலில் தாங்கி நின்ற கோரமங்கலா. இந்திராநகரையும் எலெக்ட்ரானிக் சிட்டியையும் இணைக்கும் சாலை உருப்பெற்றதும் புதுப்பொலிவுடன் நிமிர்ந்து நின்ற கோரமங்கலா. இப்படி காலம்தோறும் மாறிக்கொண்டே வந்த கோரமங்கலாவின் எல்லா வடிவங்களையும் அவர் மனம் அசைபோட்டு ஒருவித நினைவேக்கத்தில் மூழ்குகிறது. 

அந்தக் காலத்தில் சந்தித்துப் பழகிய மனிதர்களின் முகங்களும்  இடங்களும் சித்திரங்களாக அவர் மனத்தில் அசைகின்றன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் என பல்வேறு பகுதிகளிலிருந்தும் அந்த நகரத்தை அடைந்தவர்கள் அவர்கள்.  ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வேலையைச் செய்து பாடுபட்டு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தனர்.  சிலர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கினர். சிலர் வேறு இடம் தேடிச் சென்றனர். சிலரோ எங்கே சென்றனர் என்னும் விவரமே தெரியாமல் கண்காணாமல் போய்விட்டனர். அவர்களுடைய கதைகளை ஒவ்வொன்றாக அசைபோடுகிறார் குமாரவேல். ஒவ்வொருவருடைய கதையும் ஒரு குறுவரலாறாக உள்ளது. அந்தக் குறுவரலாறுகளின் தொகுப்பில் அவருடைய குறுவரலாற்றுக்கும் ஏதோ ஒரு பக்கத்தில் இடமிருக்கிறது. 

கோரமங்கலாவின் வரலாறு என்ன என்னும் கேள்விக்கு பெங்களூரு வைத்திருக்கும் விடை என்பது வேறு. தகவல்களாலும் புள்ளிவிவரங்களாலும் நிறைந்த அந்த விடையில் உண்மை இருக்கிறது என்றாலும் கூட, இந்தக் குறுவரலாற்றுத்தொகுப்பிலும் இன்னொரு விதமான உண்மை இருக்கிறது. இவ்விரண்டு உண்மைகளும் ஒன்றையொன்று நிரப்பிக்கொள்பவை. ஆதிக்குடி போல கோரமங்கலாவின் தொடக்க காலத்திலிருந்தே அதைப் பார்த்து வருகிற ஒருவரால் மட்டுமே தொகுக்கமுடிந்த வரலாறு இது. 

வாணியம்பாடியைச் சேர்ந்தவர் உசேன். நண்பரின் ஆலோசனையைக் கேட்டு கோரமங்கலாவுக்கு வந்து பிரியாணிக்கடை தொடங்குகிறார். அவர் குடும்பமே அதற்காக உழைக்கிறது. பிரியாணியின் சுவையால் வாடிக்கையாளர்கள் பெருகி, வருமானமும் பெருகுகிறது. எதிர்பாராத விதமாக அவர் மனைவிக்கு கருப்பைநீக்க அறுவைசிகிச்சை செய்யவேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. சேமிப்பு எல்லாவற்றையும் கரைத்த பிறகே அந்த நெருக்கடியிலிருந்து அவர் மீண்டு வருகிறார். இரு வார காலம் தொடர்ச்சியாக கடை மூடியே இருந்ததால் வாடிக்கையாளர்கள் சிதறிவிடுகின்றனர். மீண்டும் கடை திறந்தபோது அவருக்கு வியாபாரமே இல்லை. அந்தக் கடையை மூடினாலும் மனம் தளராத அவர் அருகிலிருக்கும் கணிப்பொறி நிறுவனங்களுக்கு தேநீர் விநியோகம் செய்து பிழைக்கிறார். சாலையோரமாக மேசை போட்டு பழங்களை நறுக்கி கிண்ணங்களில் நிரப்பி விற்பனை செய்கிறார். ஏதோ ஒரு கட்டத்தில் அந்த வியாபாரமும் நின்றுவிடுகிறது. அவர் கோரமங்கலாவை விட்டே சென்றுவிடுகிறார்.

ராமன் ஒரு கட்டடத்தொழிலாளி. ஒரு குடிசையில் மனைவியோடும் குழந்தைகளோடும் வசிக்கிறான். மூன்றாவது பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலில் மனைவி இறந்துவிடுகிறாள். மூன்று குழந்தைகளோடு ஊருக்குத் திரும்பிச் சென்ற ராமன் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியின் தங்கையை மணந்துகொண்டு கோரமங்கலாவுக்கே திரும்பி வருகிறான். தொடர்ச்சியாக அவனுக்கும் கட்டிட வேலை கிடைக்கிறது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களும் அதே நகரத்தின் வெவ்வேறு இடங்களில் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். வயது கடந்துபோனாலும் ஒரு தொழிலாளியாக கோரமங்கலாவின் சுற்றுப்புறத்திலேயே நடமாடிக்கொண்டிருக்கிறான் ராமன்.

இராணுவத்தில் ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு காலுவப்பட்டியிலிருந்து கிளம்பி வந்தவன் பாலகிருஷ்ணன். அதே தேர்வுக்கு வந்திருக்கும் ஆஸ்டின் டவுனைச் சேர்ந்த இருதயராஜும் அவனும் நண்பர்களாகிறார்கள். இருவரும் தேர்வு பெற்று இராணுவத்துக்குச் செல்கிறார்கள். ஓய்வு பெற்று பெங்களூருக்கே திரும்பி வருகிறார்கள். இருதயராஜ் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்துகிறார். பாலகிருஷ்ணன் ஓட்டல் நடத்துகிறார். இருதயராஜ் வாழ்க்கை நேர்க்கோடு போல ஒரே திசையில் செல்கிறது. பாலகிருஷ்ணன் வாழ்க்கை கொஞ்சம் வளைந்து வளைந்து செல்கிறது. அவர் மனைவி இறந்துவிடுகிறார். ஓட்டலில் வேலைசெய்ய வந்த பெண்ணை அவர் மறுமணம் செய்துகொள்கிறார். ஓட்டல் வேலை சலித்தபோது, அந்த இடத்தை வாடகைக்குக் கொடுத்தவரிடமே நேர்மையாக ஒப்படைக்கிறார். பாலகிருஷ்ணனின் நடவடிக்கை பிடிக்காவிட்டாலும் கூட வெளிப்படையாகக் கண்டிக்க முடியாத சூழலில் சலித்துக்கொள்கிறார் இருதயராஜ். ஒருநாள் எதிர்பாராத விதமாக வந்து தாக்கிய நெஞ்சுவலியால் அவர் உயிர் பிரிந்துவிடுகிறது.

ஏர்ஃபோர்சில் பதினைந்து ஆண்டுகள் வேலை செய்துவிட்டு ஓய்வு பெற்று பெங்களூருக்கு வந்து மைக்கோ கம்பெனியில் செக்யூரிட்டி ஆபீசராக இணைந்தவர் ராமகிருஷ்ணன் மாமா. கோரமங்கலாவிலேயே நீண்ட காலமாக வசிப்பவர். பெங்களூரிலேயே பெண்ணைத் தேடி திருமணம் செய்துகொண்டவர். யாராக இருந்தாலும் உதவி செய்யத் தயங்காதவர். அன்பான மனிதர். கிரிக்கெட் ரசிகர். நாற்பது ஆண்டுகளாக குமாரவேலுவுடன் நட்பில் இருந்தவர். பிள்ளைகள் பெரியவர்களாகி வெவ்வேறு இடங்களில் இருக்கிறார்கள். அப்பாவுடைய அணைக்கும் போக்குக்கு மாறாக விலக்கும் போக்கு கொண்டவர்கள் அவர்கள். அப்பாவுக்கு இல்லாத சாதி மேட்டிமைப்பார்வை அவர்களிடம் நிறைந்திருக்கிறது. செய்தியே வெளியே தெரியாதபடி, அப்பாவுக்கு சதாபிஷேகம் செய்கிறார்கள். அவருடைய மரணச்செய்தியைக் கேட்டு பதறியடித்துக்கொண்டு ஓடி நின்றபோது, அங்கிருந்த ஒருவரும் குமாரவேலுவைப் பொருட்படுத்தவே இல்லை. மாமாவின் மரணம் குமாரவேலுவை நிலைகுலைய வைக்கிறது.

இப்படி ஏராளமான மனிதர்கள். எல்லோருமே குமாரவேலுவை வசீகரித்த மனிதர்கள். பழைய பேப்பர் கடை நடத்தும் தணிகாசலம். ஐந்து பெண் பிள்ளைகளோடு செஞ்சியிலிருந்து வந்து பலகாரக்கடை நடத்தும் ஐயாசாமி. ஹார்ட்வேர் கடை வைத்துப் பிழைக்கும் அமானுல்லாகான். எலெக்ட்ரிக் வேலை தெரியாமலேயே எலெக்ட்ரிசியனாக வேலை செய்யும் பாலா. அனந்தப்பூரிலிருந்து வந்து லாண்டரி கடை வைத்து, தொழில் நல்ல நிலையில் சீராகச் சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராத தீவிபத்தால் எல்லாவற்றையும் இழந்து சோகத்தில் மூழ்கும் வாசு. கறிக்கடைக்காரர் சத்தார்கான். பழைய இரும்புக்கடை நடத்தும் தண்டபானி. வேலைக்காரி காணாமல் போன காரணத்துக்காக காவல்நிலையம் வரைக்கும் சென்றதில் மனம் சோர்ந்துபோகும் அஞ்சனப்பா தம்பதி. தன் பதவிக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி தெரிந்தவர்களுக்கு உதவி செய்யும் லீலா அக்காவின் அகாலமரணம். தேங்காய் வியாபாரம் செய்யும் திப்டூர்காரன். பாரத் கல்சுரல் சென்டர் உருவாக காரணமான ஆலத்தூர் வெங்கடராம ஐயர். அவர் வீட்டு மாட்டுக்கு வைத்தியம் பார்த்து அவருடைய மனத்தில் இடம்பிடித்த தண்டபானி. கோரமங்கலாவுக்கு உள்ளேயும் வெளியேயும் இப்படி ஏராளமான மனிதர்கள். ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே வீடுகள் நின்றிருக்க மற்ற இடங்களெல்லாம் வெட்டவெளியாக காட்சியளித்த கோரமங்கலா, சில ஆண்டுகளிலேயே நிற்க இடமில்லாத அளவுக்கு வீடுகளாலும் மனிதர்களாலும் நிறைந்துவிடுகிறது. 

அரை நூற்றாண்டுக்கு முன்பு கி.ராஜநாராயணன் கோபல்லபுரம் என்னும் நாவலை எழுதினார். இடப்பெயர்வு காரணமாக ஓர் ஊரிலிருந்து வெளியேறி இன்னொரு ஊருக்கு குடியேறிய மனிதர்கள் இணைந்து அந்தக் கிராமத்தை உருவாக்குகிறார்கள். கிட்டத்தட்ட சகதேவனின் அந்திமம் நாவலும் அதே தன்மையையே கொண்டிருக்கிறது. பல திசைகளிலிருந்து இடம்பெயர்ந்து வரும் ஏராளமான மனிதர்கள் ஒரு நகரின் ஒரு பகுதியில் குடியேறி அதற்கொரு முகத்தையும் உயிரையும் கொடுக்கிறார்கள். ஆனால் வரலாறு அவர்கள் அனைவரையும் முகமற்றவர்களாகவே வடிகட்டி வீசிவிடுகிறது. முகமற்ற மனிதர்களுக்கு முகத்தைக் கொடுக்கிறது அந்திமம் நாவல். 

தொடக்கத்தில் குறிப்பிட்ட உத்தாலகர், ஸ்வேதகேது உரையாடலில் வேறொரு பகுதியும் சுவாரசியமானது. உத்தாலகர் ஒருநாள் ஒரு பிடி உப்பை எடுத்து மகனிடம் கொடுத்து எதிரில் வைக்கப்பட்டிருந்த குடத்தில் போடச் சொன்னார். மகனும் அப்படியே செய்தான். மறுநாள் காலை ”நேற்று குடத்தில் போட்ட உப்பை எடுத்து வா” என்று சொன்னார். ”தண்ணீரில் உப்பு கரைந்துவிட்டது” என்றான் மகன். ”குடத்தில் மேற்பகுதியில் இருக்கும் தண்ணீரில் ஒரு கை அள்ளிச் சுவைத்துப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்” என்றார் உத்தாலகர். மகனும் அவ்வாறே அள்ளிப் பருகிவிட்டு தண்ணீர் கரிப்பதாகச் சொன்னான். தலையசைத்துக்கொண்ட உத்தாலகர் “குடத்தின் நடுப்பகுதியிலிருந்தும் அடிப்பகுதியிலிருந்தும் இதேபோல ஒரு கை அள்ளிச் சுவைத்துப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்” என்றார். அவர் சொன்ன விதமாகவே செய்து சுவையைச் சோதித்துப் பார்த்த மகன் ”எல்லாப் பகுதிகளிலும் தண்ணீர் கரிக்கிறது தந்தையே” என்றான். தொடர்ந்து அவனாகவே “தண்ணீரில் கரைத்த உப்பு எங்கும் போகவில்லை. வேறு வடிவத்தில் அப்படியே இருக்கிறது தந்தையே” என்று புதியதொரு உண்மையைக் கண்டுணர்ந்துகொண்ட உற்சாகத்துடன் சொன்னான். உத்தாலகர் அவனைப் பார்த்து புன்னகைத்தார். 

தண்ணீரில் உப்பு கரைவதுபோலவே, இந்தப் பெருநகரத்தை நாடி வருபவர்களும் அந்த நகரத்தோடு கரைந்துபோகிறார்கள். நேற்றுவரை கரைந்துபோன மனிதர்களை விரைவில் கரைந்துபோகவிருக்கும் தன் அந்திமத் தருணத்தில் வாழும் குமாரவேல் அசைபோடுவதாக இந்த நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது.  அவர்களோ, அவர்களுடைய பங்களிப்போ நம்முடைய பார்வைக்கு நேருக்குநேர் தெரியாவிட்டாலும் அவர்கள் நகரத்தில் கரைந்திருக்கிறார்கள். மையத்திலோ, விளிம்பிலோ எங்கோ ஓரிடத்தில் இருக்கிறார்கள்.

நூல்: அந்திமம் நாவல்
ஆசிரியர்: ப.சகதேவன்
வெள்யீடு: யாவரும் பதிப்பகம்
விலைழ்: ரூ.560

Algosama Novel written by Kanagaraj Balasubramanian Bookreview By Pavannan நூல் அறிமுகம்: கனகராஜ் பாலசுப்பிரமணியனின் அல்கொஸாமா நாவல் - பாவண்ணன்

நூல் அறிமுகம்: கனகராஜ் பாலசுப்பிரமணியனின் அல்கொஸாமா நாவல் – பாவண்ணன்



வன்முறை என்னும் உடனுறை தெய்வம்
                    – பாவண்ணன்

ஒரே குடியைச் சேர்ந்த நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் மோதிக்கொள்ளும் தருணத்தில் இருவரையும் சந்தித்து அறிவுரை கூறும் ஒளவையாரின் பாடலொன்று புறநானூற்றில் இருக்கிறது. அப்பாடலில் ”ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியே, இருவீர் வேறல் இயற்கையும் அன்றே” என்று துணிவோடு சுட்டிக்காட்டுகிறார் ஒளவையார். இறுதியாக, இயலாமையின் விளிம்பில் நின்றபடி “ஊரில் இருப்பவர்கள் ஏளனத்துடன் பார்த்து சிரிப்பதற்குத்தான் இந்தப் போர் வழிவகுக்கப் போகிறது” என்று சொல்லிவிட்டுப் போகிறார். குடிகளின் மனநிலையைத் துறந்து உலகம் தழுவிய மானுட மனநிலைக்கு மாறிவிட்டவர் ஒளவையார். அவர் சொல் அந்தக் குடிகளின் தலைவர்களுக்கு உறைக்கவில்லை. ‘அன்புக்கு அன்பு, ரத்தத்துக்கு ரத்தம்’ என்னும் ஆதிமனநிலையிலேயே அவர்கள் உறைந்திருக்கிறார்கள். அதற்காக எல்லா நெறிகளையும் மீறிச் செல்ல அவர்கள் தயாராகவும் இருக்கிறார்கள். 

புறநானூற்றுக்காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரைக்கும் இவ்விதமான தருணங்கள் எல்லாக் குடிகளிலும் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. ஒளவையாரை ஒத்தவர்களும் மீண்டும் மீண்டும் பிறந்து இயலாமையின் விளிம்பில் நின்றபடி சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அல்கொஸாமா நாவலைப் படித்து முடித்தபோது கனகராஜ் சுப்பிரமணியனின் எழுத்துகளின் ஊடாக ஒளவையாரின் குரலைக் கேட்கமுடிந்தது.

அரபுச்சமூகத்தைச் சேர்ந்த பதூவன், ஹதரி, கறுப்பு அரபி என மூன்று முக்கியப்பழங்குடிகளின் தொல்கதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக சேகரித்து நாவலில் முன்வைத்திருக்கிறார் கனகராஜ். சில கதைகள் அவர்கள் மதச்சட்டகத்துக்குள் வந்ததற்குப் பிந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை. சில கதைகள் அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை. 

மூன்று குடிகளில் பதூவன்கள் உயர்குடித் தகுதி உடையவர்கள். அவர்கள் ரத்த உறவையே பெரிதென மதிப்பவர்கள். காற்றில் தடம் மாறிக்கொண்டே இருக்கும் மணற்குன்றுகளைப்போல பாலைவனத்தில் ஒட்டகங்களோடு நகர்ந்துகொண்டே இருப்பவர்கள். தீராத விசுவாசம், பெருந்தன்மை, சுயமரியாதை, கெளரவத்துக்காக உயிரையே கொடுப்பது என எழுதப்படாத சட்டங்களை பல தலைமுறைகளகப் பேணி வருபவர்கள். ஒரே இடத்தில் தங்கி விவசாயம் செய்து குடும்பங்களைப் பெருக்கி தலைமுறை தலைமுறையாக நிலைத்துவிட்டவர்கள் ஹதரிகள். இவ்விரு குழுக்களுக்கும் அடிமைவேலை செய்து உயிர்வளர்ப்பவர்கள் கறுப்பு அரபிகள். 

பல நூற்றாண்டுகளாக அலைந்த இந்த நாடோடிக் குழுக்கள் மெல்ல மெல்ல ஒரே இடத்தில் நிலைத்து சமூகமாக வாழத் தொடங்கினார்கள். இஸ்லாம் மதம் அந்த மண்ணில் உருவாகி நிலைத்தபோது, அதை அனைவரும் தழுவிக்கொண்டனர்.  மதம் வலியுறுத்தும் அன்பின் மீதும் ஒற்றுமையுணர்வின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தனர். இருப்பினும் வன்முறைவிருப்பத்தை அவர்களால் முற்றிலும் கைவிடமுடியவில்லை. வன்முறை என்பது ஒருவித பழங்குடி மனநிலை. அந்த மனநிலையிலிருந்து அவர்களால் வெளிவரவே முடியவில்லை.

பதூவன் குழுவைச் சேர்ந்த சுஜா என்கிற சுஜா இபின் சகர் அல் சோபி அல் சொதரி நாவலின் ஒரு முக்கியச் சரடு. அவர்களுடைய கூட்டத்தைச் சேர்ந்தவன் நாயிஃப். அவன் முலாகிம் என்னும் கூட்டத்தைச் சேர்ந்த இன்னொருவனைக் கொலை செய்துவிட்டான்.  ஆனால் முலாகிம் கூட்டத்தினர் பதூவின் குழுவினரைப்போல கொலைவெறி கொள்ளவில்லை. மாறாக காவல்நிலையத்தில் புகார் செய்கின்றனர். அவர்கள் கொன்றவனைக் கண்டுபிடித்து நீதித்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டனர். அங்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை விதித்தனர். உடனே முலாகிம் கூட்டத்தினரைப் பழிக்குப்பழி வாங்க தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் சுஜா. 

இந்தக் காத்திருப்பின் ஊடாக, வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த அரபுப்பழங்குடிகளின் கதைகள் சின்னச்சின்ன சித்திரங்களாக நகர்ந்துசெல்கின்றன. எல்லாமே வாழும் விழைவையும் மனிதமனத்தின் ஆழத்தில் உறங்கும் வன்முறையென்னும் விதையையும் பறைசாற்றுபவை. 

சுஜாவின் முப்பாட்டன் அகமத். மூன்று பிள்ளைகளின் தகப்பன். ஒட்டகப்பிரியர். பதூவிகள் தம்  வாழ்விலிருக்கும் வன்முறையை உதறிவிட்டு வாழ வேண்டும் என்ற எண்ணமுள்ளவர். அந்த எண்ணத்தை சுற்றியிருக்கும் அனைவரிடமும் விதைப்பவர். ஒருமுறை துருக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில்  தன் மகனை இழந்தவர். அந்த மரணம் சார்ந்து ஆற்ற வேண்டிய சடங்குகளில் மூழ்கியிருந்ததால் அவரால் பாலைவனத்தின் பக்கமே ஐந்து   நாட்களுக்குச் செல்லமுடியவில்லை.

அந்த ஐந்து நாட்களும் அவர்மீது மிகவும் நெருங்கிப் பழகிய ஒட்டகம் இரையெடுக்காமல் பட்டினி கிடந்தது.  ஆறாம் நாள் பாலைவனத்துக்கு வந்த பிறகே அவர் அச்செய்தியை அறிந்தார். ஓடிச் சென்று அந்த ஒட்டகத்தின்  கழுத்தை அணைத்து கண்ணீர் சொரிந்தார். அப்படிப்பட்ட அன்பான ஒட்டகம் ஒரு சமயத்தில் குடற்புண்ணால் வேதனையுடன் துடித்தது. எந்த மருந்தும் அதைக் குணப்படுத்த முடியவில்லை. அதன் துயரத்தைக் காணப் பொறுக்காமல் தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார் அகமத். 

சில நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற கவிதை கூறல் நிகழ்ச்சியில் அவர் மகன் பாடுவதற்குச் சென்றான். அவன் பாடலுக்கு அந்த அரங்கத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. கூட்டத்தில் யாரோ ஒருவன் அவனுடைய மூதாதையர் நடத்தையைப்பற்றி கேவலமாகக் குறிப்பிட்டு எள்ளி நகையாடினான். மகனின் கவிதையைக் கேட்பதற்காக மாறுவேடத்தில் அரங்கத்துக்குச் சென்றிருந்த அவன் அப்பா அகமத் கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்த இளைஞனின் கழுத்தில் கத்தியைப் பாய்ச்சி கொலை செய்துவிட்டார். வன்மத்தைவிட்டு மதம் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என காலமெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தவரா இவர் என்று அதிர்ச்சியில் உறைந்து நின்றான் மகன்.

அகமத்தின் தாத்தா சகர். பாலைவனத்தில் பேரீச்சங்கன்றுகளை நட்டு வளர்த்துவந்தார். ஒருமுறை யாரோ புகுந்து அக்கன்றுகளை பிடுங்கி வீசி நாசம் செய்துவிட்ட்டனர். மேலும் தோட்டத்துக்குக் காவலாக இருந்த கறுப்பு அடிமை ஒருவரையும் கொலை செய்துவிட்டனர். அதே நேரத்தில் சகர் தன் வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு தோட்டத்தில் நடந்தது எதுவுமே தெரியாது. விருந்தில் எல்லாக் குழுக்களும் கலந்துகொண்டன. விருந்து நடக்கும்போதே, அவருடை ய சின்ன மகன் ஹுசைன் குழுவைச் சேர்ந்த ஒரு சிறுவனின் கழுத்தை வெட்டிவிட்டான். அதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான் சகர். பதூவிக்களின் எழுதாத சட்டத்தின்படி நடைபெற்ற ஒரு  கொலைக்கு ஈடாக, கொன்றவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் இருவர் கொல்லப்பட வேண்டும். வேறு எதையும் யோசிக்கத் தோன்றாத சகர் தன் மகனையும் அவனுக்கு அருகில் நின்றிருந்த சிறுவனையும் இழுத்து தன் இடுப்பில் இருக்கும் கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டார். 

அந்த இரண்டாவது சிறுவனை சகர் தன் மகன் என நினைத்துவிட்டார். சில கணங்களுக்குப் பிறகே அவன் தன் மகனல்ல என்பதும் முலாகிம் என்னும் வேறொரு குழுவை சேர்ந்த சிறுவன் என்பதும் அவருக்குத் தெரிகிறது. பெரிய அளவில் போர் மூண்டுவிடுமோ என அஞ்சிய சகருடைய உறவினர்கள் அவரை குதிரை மீது உட்காரவைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டே தப்பித்துவிடுகின்றனர். நடந்த உண்மையைத் தெரிந்துகொண்டதும் பழிக்குப் பழி வாங்க முலாகிம் கூட்டத்தினர் அவர்களைப் பின்தொடர்ந்தனர். அதற்குள் தோட்டத்தைச் சிதைத்தவர்கள் முலாகிம் கூட்டத்தவரே என்னும் செய்தியும் பரவிவிட, பதூவிக்களும் எதிர்த்துப் போரிட தயாரானார்கள்.

இப்படி சில தலைமுறைகளின் கதைகள் நாவலெங்கும் நிறைந்துள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் இனப்பெருமையில் திளைக்கும் மனிதர்களையும் அவர்களுடைய நடத்தையினால் விளையும் பூசல்களையும் கனகராஜ் மாறிமாறிக் காட்டியபடி செல்கிறார். மலருக்கடியில் இருக்கும் முள்ளாக அவர்கள் ஆழ்நெஞ்சில் வன்முறை மறைந்திருக்கும் புள்ளியை மிகச்சரியாக  அடையாளப்படுத்துகிறார் கனகராஜ்.

கதைமாந்தர்களுக்கு இணையாக இந்த நாவல் முழுக்க ஜின்னுகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். மண்ணுலகப்பாத்திரங்களா அல்லது வேறொரு உலகத்தைச் சேர்ந்த பாத்திரங்களா என உய்த்துணரமுடியாதபடி இரு இடங்களிலும் ஜின்னுகள் இடம்பெற்றிருக்கிறார்கள். பெரும்பாலும் கவிதைகள் இவ்விரு உலகங்களுக்கிடையான இணைப்புப்பாதையாக இருக்கிறது. அந்த மாயத்தன்மையை கலையழகு குன்றாமல் நாவலெங்கும் கையாள்கிறார் கனகராஜ். அரேபியாவில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து உயிர்துறந்தவன் தமிழ்நாட்டுக் கிராமத்து ஆழ்துளைக்கிணற்றிலிருந்து வெளியேறிச் செல்வது நல்ல கற்பனை.

பதூவிக் குழுவின் மூத்த தலைமுறைக்கதைகள் துண்டுதுண்டாகச் சிதறி நிகழ்கால மனிதனான சுஜா வழியாக வெளிப்படுகின்றன.  பொய்யாக திருட்டுப்பட்டம் சுமத்தி சகோதரனாலேயே அறைக்குள் வைத்து பூட்டப்பட்டிருக்கும் ராஜேந்திரனின் கனவில் அரேபியனான சுஜா வருகிறான். அரேபியனான சுஜாவின் கனவில் கேரேஜ் சிப்பந்தியான ராஜேந்திரன் வருகிறான். இப்படி கனவுகளும் நிகழ்காலச்சித்தரிப்புகளும் இணைந்து நாவல் வாசிப்பை சுவாரசியமாக்குகிறது.

அரபிக்குடிகளின் கதைகளை முன்வைக்கும் இழைகளுக்கு இடையில் வேலை தேடி அரேபியாவுக்குச் சென்று தங்கியிருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கையை வேறுசில இழைகளாக சித்தரிக்கிறார். அந்த இழைகளிலும் வன்முறை அடையாளப்படுத்தப்படுகிறது. ஒரே குடியைச் சேர்ந்த சகோதரர்கள் அவர்கள்.  ஆயினும் ஒருவரை ஒருவர் சிதைக்கப் பார்க்கின்றனர். தமிழ்மண்ணில் அவர்கள் குடும்ப வரலாற்றிலும் வன்முறையின் தடங்களும் ரத்தக்கறையும் நிறைந்திருக்கின்றன. ஒருவருக்கொருவர் துரோகம் செய்துகொள்வதும் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்ப்பதும் தொடர்கதைகளாக உள்ளன. பகைவனுக்கும் அருளுவாய் நன்னெஞ்சே என்று பாடும் மண்ணைச் சேர்ந்த உறவினர்களே ஒருவரையொருவர் வார்த்தைகளால் குதறிக்கொள்கிறார்கள். 

மனிதர்கள் இப்படி ஒருவரை ஒருவர் குதறிச் சிதைத்துக்கொள்பவர்களாக ஏன் இருக்கிறார்கள் என்பது ஒரு மாயப்புதிராகவே இருக்கிறது. கனகராஜின் நாவல் இச்சமூக உருவாக்கத்தைப்பற்றிய பல கேள்விகளுக்கான விடைகளை யோசிக்கத் தூண்டுகின்றன.

மனிதகுலம் ஒரு சமூகமென திரண்டெழுந்து நின்ற வரலாறு அவ்வளவு உவப்பானதல்ல. தனிமனிதர்களாக வாழ்ந்தவர்கள், ரத்த உறவுகொண்ட குழுக்களாக விரிந்து, பிறகு இடம்சார்ந்த குழுக்களாக மேலும் விரிவடைந்து, ஒரு சமூகமாக உருமாறிய காலகட்டத்தில் நடைபெற்ற வன்முறைகளுக்கு எல்லையே இல்லை. ரத்தத்தில் கால் நனைத்தபடியே ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்து, மனிதகுலம் இத்தனை தொலைவுக்குக் கடந்து வந்திருக்கிறது. உடனுறை தெய்வம் போலவே மனிதமனத்தின் ஆழத்தில் வன்முறைநாட்டமும் உறைந்திருக்கிறது. 

ஒரு நிலப்பரப்பில் தன்னை ஆற்றலுடன் நிலைநிறுத்துக்கொண்ட ஒரு சமூகம் ஆற்றல் குறைந்த பிற சமூகங்கள் மீது படையெடுத்துச் சென்று வென்று தன்னுடன் இணைத்துக்கொண்டன. தொல்குடிச்சமூகம் தனக்கே உரிய நெறிமுறைகளோடும் வன்முறைகளோடும் நீடிக்கத் தொடங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மதங்கள் உருவாகின. அவை சமூகத்தை மறுசீரமைப்பு செய்தன.  எல்லா மதங்களும் இணைந்து வாழ்வதையும் அன்பையும் போதித்தன. ஆனாலும், மதம் என்னும் கட்டமைப்புக்குள் வந்த பிறகு கூட, குடிகளுக்கு தமக்கிடையே உள்ள பேதங்களை மறக்கத் தெரியவில்லை. ஆழ்மனத்தில் உயர்வுதாழ்வு கருதி மதிப்பிடும் அளவுகோலை அப்படியே வைத்திருந்தார்கள். அதைக் காப்பாற்ற ஆவேசத்துடன் வன்முறையில் ஈடுபட்டனர். ஒருபுறம் மதங்கள் கற்பிக்கும் அன்பையும் பேசிக்கொண்டு, மறுபுறம் ஆழ்மனத்தூண்டலின் விசையால் வன்முறையிலும் ஈடுபட்டனர். அதையொட்டி அவர்களிடம் எவ்விதமான கூச்சமும் இல்லை. மற்றவர்கள் பார்த்து சிரிக்கத்தக்க அளவில் நடந்துகொள்கிறோமே என்கிற சங்கடமும் இல்லை. 

அல்கொஸாமா என்பது ஒருவகை மலர். குளிர்காலம் முடிந்து மழை தொடங்கியவுடனே மலர்ந்து மணக்கும் மலர். நாவலில் வன்முறை தொடர்பான  சிந்தனையுடன் நடக்கும் மனிதர்களுக்கு நடுவில் அல்கொஸாமா பூத்துக் குலுங்கும் காட்சிகள் நடுநடுவே இடம்பெறுகின்றன. பாலைவனத்துக்கு நடுவில் அரிய மலர்களின் நறுமணம் பாத்திரங்களின் கண்களையும் நெஞ்சையும் நிறைக்கின்றன. மாறிக்கொண்டே இருக்கும் மணற்குன்றுகள் நிறைந்த பாலைவனத்தின் வெம்மையையும் குழப்பத்தையும் இந்த மலர்களின் தோற்றம் மாற்றிவிடுகின்றன. 

சதுரம் போன்ற சிறு நிலப்பகுதியொன்றில் பூத்திருக்கும் அல்கொஸாமா மலர்களைப் பார்க்கும் கண்கள் பாலைவனம் முழுக்க அல்கொஸாமா பூத்துக் குலுங்கும் ஒரு காட்சியை ஒரு கணமேனும் கற்பனை செய்து பார்த்து, ஒருவித ஏக்கத்தில் திளைக்கும். ஒருவகையில் அல்கொஸாமா மலர்த்தோட்டத்துக்கான ஏக்கமும் வன்முறையற்ற அன்புமயமான உலகத்துக்கான ஏக்கமும் ஒன்றே என நினைக்கத் தோன்றுகிறது.

நூல்: அல்கொஸாமா நாவல்
ஆசிரியர்: கனகராஜ் பாலசுப்பிரமணியன்
வெளியீடு: எழுத்து பிரசுரம்
விலை: ரூ.320
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

Tip Tip Tip Book By Anandhakuma Bookreview By Pavannan நூல் அறிமுகம்: ஆனந்த்குமாரின் டிப்டிப்டிப் - பாவண்ணன்

நூல் அறிமுகம்: ஆனந்த்குமாரின் டிப்டிப்டிப் – பாவண்ணன்



பலாப்பழத்தின் மணம்
                                   – பாவண்ணன்

நவீன தமிழ்க்கவிஞர்களின் வரிசையில் பரவசமூட்டும் தருணங்களையும் மன எழுச்சியூட்டும் தருணங்களையும் முன்வைத்து ஒருவித கொண்டாட்ட மனநிலையை உருவாக்கித் திளைப்பவர்கள் மிகச்சிலரே. தேவதேவன், முகுந்த் நாகராஜன், ந.பெரியசாமி என எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களே அந்த வரிசையில் உள்ளனர். அவ்வரிசையில் இணைத்துக் கருதத்தக்கவராக ஆனந்த்குமாரைச் சொல்லலாம்.  அவருடைய முதல் கவிதைத்தொகுப்பாக சமீபத்தில் தன்னறம் வெளியீடாக வந்திருக்கும் டிப் டிப் டிப் அதற்குச் சாட்சி.
’வலது கையில்
அவளந்த
மலரை மலர்த்தியபோது
இடது காலை
அங்கு கொண்டு
சரியாக வைத்துவிட்டது
நடனம்’

தெய்வம் என்று இக்கவிதைக்குத் தலைப்பிட்டிருக்கிறார் ஆனந்த்குமார். கையில் மலரை ஏந்தியிருப்பது குழந்தையா, சிறுமியா, இளம்பெண்ணா, தாயா, காதலியா என எந்தக் குறிப்புமில்லை. அவள் அந்த மலரோடு வந்து கையை மலர்த்திக் காட்டுகிறாள். அதைப் பார்ப்பவனுக்கு அக்கணத்தில் அந்த மலரின் மீது தன் மலர்ப்பாதத்தை வைத்து நடனமிடும் தெய்வத்தின் தரிசனமே கிடைத்துவிடுகிறது. மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி. கச்சிதமான வடிவத்தைக் கொண்ட அக்கவிதையை வாசிப்பவர்களின் கண்களுக்கும் அந்தத் தரிசனம் கிடைக்கிறது. திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என ஆனந்தக் கூத்தாடும் ஆழ்வார்களின் பரவசத்தையும் ஆனந்தகுமாரின் பரவசத்தையும் ஒரே சரட்டில் இணைத்துக்கொள்ளலாம்.
பால்கனிச் செடிகளின்கீழ்
ஊறித் தேங்கும் தண்ணீரைப்
பருக வரும்
காலைப் புறாக்கள்
இன்று வெயிலேற வந்தது
ஒற்றைக் காலில்லாத
பொன்கண் புறா

துளசியின் கீழ்
தேங்கிய நீரை
முகர்ந்து பார்த்தபின்
தத்தித்தத்தி நகர்கிறது
ரோஜாவின் பக்கம்

பருகிப்பருகி ஒரு பக்கம்
மயங்கிச் சாயும் உடலை
மறுபக்கம்
காற்றில் ஊன்றித் தாங்குகிறது
ஒற்றைச் சிறகு

இக்கவிதையில் ஆனந்த்குமார் முன்வைக்கும் கோணம் மிகமுக்கியமானது. ஆரவாரத்துடன் பறந்துவந்து இறங்கும் புறாக்களுக்கு மட்டுமன்றி, தனித்து மெல்ல மெல்ல பறந்துவந்து ஒற்றைக்காலுடன் தத்தித்தத்தி வரும் புறாவுக்கும் இங்கே தேங்கியிருக்கும் நீரில் சமஉரிமையைத் தந்திருக்கும் இயற்கையின் மாட்சியை போகிற போக்கில் கோடிட்டுக் காட்டிவிடுகிறார்.
தூர்வாரிச் சுத்தப்படுத்துகையில்
அவர் எனக்கு அந்த
தண்ணீர்த்தொட்டியை
காண்பித்துத் தந்தார்
அவர் வீட்டுக்கு அடியிலும்
நீண்டு சென்றது
அது நிரம்பியதும்
வீட்டிற்கு மேலுள்ள தொட்டியை நிரப்புவாராம்
இரண்டும் நிறைந்து
நடுவில் நீந்தும் வீட்டில்
கொஞ்ச நேரம் இருந்துவந்தேன்

இருவித தண்ணீர்த்தொட்டிகளுக்கு இடையில் நீந்தும் உயிராக வீட்டைச் சித்தரிக்கும் ஆனந்த்குமாரின் கற்பனை மனத்தைக் கவர்கிறது. குழந்தைமைக்கு மட்டுமே சாத்தியமான ஒரு புள்ளியை அல்லது கனவை கவிஞனால் மட்டுமே மீண்டும் மீண்டும் தொட்டுவிட்டுத் திரும்ப முடிகிறது. 

ஆனந்தகுமாரின் கவிதையுலகம் இத்தகு பரவசங்களால் நிறைந்திருக்கிறது. இத்தொகுதியில் இந்த வாழ்க்கை மானுடக்கு அளித்திருக்கும் சின்னச்சின்ன மகிழ்ச்சித்தருணங்களை அவர் நமக்கு திரட்டி அளித்திருக்கிறார்.  எல்லாமே கற்பனை மிக்க கண்களாலும் நுண்ணுணர்வாலும் பார்த்து திளைக்கத்தக்க தருணங்கள். வாழ்க்கையைப் பற்றிய புதியதொரு பார்வையை அவர் கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன.
பல வருடங்களுக்குப் பிறகு
பார்க்கச் சுருங்கியிருக்கிறது
நான் வளர்ந்த வீடு

நான் முடிவில்லாமல்
தவழ்ந்த அறை
இப்போது எனக்கு மட்டும்
படுக்க கொள்கிறது

எல்லையே அறிந்திடாத
எனது ஊரை
இன்றைக்கே மூன்றுமுறை
ஊரைச் சுற்றிவிட்டேன்

தாமரைக் குளமிறங்கி குளிக்கையில்
கால்தடவி அடியில் கண்டுகொண்டேன்
சிறுத்துவிட்ட அதே வழுக்குப்பாறையை

அதில் ஏறி நின்றவன் கால்கொள்ளாமல்
வழுக்கி விழுந்தேன்
ஒரு நொடி
அதே பழைய ஆழத்துள்
திமிறி மூச்சடக்கி
துள்ளி மேலெழுந்தேன்
கண்டேன்
நீலவெளி

ஒரு சின்ன அனுபவக்குறிப்பைப்போல தோற்றமளிக்கும் இக்கவிதை ஆழமானதொரு உணர்ச்சியை நெஞ்சில் ஏற்படுத்துகிறது. குழந்தையாக இருந்து வளர்ந்து பெரியவனாக பிறகு சொந்த வீட்டையும் சொந்த ஊரையும் பார்க்கும்போது முதலில் எல்லாம் மாறிவிட்டதைப்போல நினைத்துக்கொள்கிறான் அவன். உலகமே மாறிவிட்டதாகத் தோன்றி ஒருவித நினைவேக்கத்தில் ஆழ்ந்துபோகிறான். தற்செயலாக வழுக்குப்பாறையிலிருந்து தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி, திகைத்துத் தவித்து மூச்சடக்கி நீந்தி மேலே வந்துவிடுகிறான். கண்டேன் நீலவெளி என்னும் இறுதி வரியின் வழியாக அவன் தான் பெற்ற ஒரு தரிசனத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறான்.

அறையை, வீட்டை, சுவர்களை, தெருக்களை, ஊரைச் சுற்றிச்சுற்றி பார்க்கும்போது பார்க்காத வானத்தை தண்ணீரிலிருந்து எழுந்துவரும் தருணத்தில்தான் அவனுக்குப் பார்க்க வாய்க்கிறது.  அத்தருணத்துக்கு முன்பாக அவன் கண்ட நீரின் ஆழமும் அப்போது அவன் கண்ட நீலவெளியின் காட்சியும் அவனுக்கு ஒரு செய்தியை உணர்த்திவிடுகின்றன. எல்லாம் மாறிவிட்டது என்ற அவனுடைய எண்ணத்தை ஒருபோதும் மாறாத விண்ணும் மண்ணும் அழித்துவிடுகின்றன. மாறிக்கொண்டே இருக்கும் மானுட இருப்பும் மாறாத இயற்கையின் இருப்பும் சக்தியின் ஆடலென புரிந்துகொள்ள அக்கணம் அவனுக்குத் துணையாக இருக்கிறது. 

பாட்டிக்கும் பேரனுக்கும் உள்ள நெருக்கத்தைப்பற்றிய சித்திரத்தை அளிக்கும் ஒரு கவிதை அழகான அனுபவம். இக்கவிதைகளை மூன்று காட்சிகளின் தொகுப்பாக ஆனந்த்குமார் பின்னியிருக்கிறார். 

முதல் காட்சியில் பாட்டி வெண்டைக்காய் நறுக்குகிறாள். வெட்டுண்டு ஒதுக்கப்பட்ட வெண்டைக்காய் கொண்டைகளையெல்லாம் எடுத்து முகத்தில் ஒட்டிக்கொண்டு சிரிக்கிறான் பேரன். அவன் கோலத்தைப் பார்த்து பாட்டியும் சிரிக்கிறாள். 

இரண்டாவது காட்சியில் தோட்டத்தில் விளையாடுகிறான் பேரன். அங்கே வளர்ந்துநிற்கும் ரோஜாச்செடியின் தளிர்களை ஏதோ விளையாட்டு எண்ணத்தில் கிள்ளி வீசுகிறான். தற்செயலாக அந்தப் பக்கம் வரும் பாட்டி அக்காட்சியைப் பார்த்து ஓடோடி அவனைக் கிள்ளி கண்டிப்பதுபோல பேசிவிட்டுச் செல்கிறாள். 

மூன்றாவது காட்சியில் மாலை வேளையில் பாட்டி ஓய்வாக அமர்ந்திருக்கிறாள். அவளுக்காக வாங்கிவரப்பட்டு பிரிக்காமலேயே வைத்திருந்த மாத்திரை உறையைப் பிரிக்கிறாள். அதைக் கண்ட பேரன் அவளுக்கு உதவும்பொருட்டு மாத்திரைப்பெட்டியை எடுத்துக்கொண்டு அவளுக்கு அருகில் ஓடுகிறான். பிரித்த உறையிலிருந்த மாத்திரைகளையெல்லாம் எடுத்து பெட்டிக்குள் போடுகிறாள் பாட்டி. பிறகு பாட்டியும் பேரனும் சேர்ந்துகொண்டு ஆளுக்கொரு உறையை எடுத்துவைத்துக்கொண்டு அதிலிருக்கும் பிளாஸ்டிக் குமிழ்களை உடைத்து, அதிலிருந்து வெளிப்படும் டிப்டிப்டிப் சத்தத்தை ரசிக்கிறார்கள். இனி எந்த இடத்தில் பிளாஸ்டிக் உறை உடைபடும் டிப்டிப் சத்தம் கேட்டாலும் நினைத்துக்கொள்ளத் தக்க கவிதை ஒன்றை அளித்திருக்கிறார் ஆனந்த்குமார்.

இன்னொரு சித்திரம். நன்றாகத் தெரிந்த ஒருவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக, அதுவரை சென்றே இராத அவருடைய ஊருக்குப் புறப்பட்டுச் செல்கிறான் ஒருவன். அந்த ஊருக்குள் நுழையும்போதே பாதையெங்கும் இறைபட்டுக் கிடந்த பூக்களின் தடத்தைப் பார்த்துவிடுகிறான். இறுதி ஊர்வலம் சென்றுவிட்ட செய்தியை அது சொல்லாமல் சொல்கிறது. சுடுகாட்டுக்குச் சென்று பார்த்துவிடலாம் என அவன் நினைக்கிறான். ஒருவரும் அறிமுகமில்லாத ஊரில் சுடுகாடு எங்கே இருக்கிறது என எப்படி, யாரிடம் கேட்பது என்று புரியாமல் குழம்புகிறான். பிறகு குத்துமதிப்பாக பூவின் தடத்தையே பின்தொடர்ந்து சென்றால் சுடுகாட்டை அடையலாம் என நினைத்து பூத்தடத்தைத் தொடர்கிறான். அவன் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக அந்தத் தடம் ஒரு வீட்டு வாசலில் சென்று முடிவதையும் நீர்தெளித்து கழுவிவிடப்பட்ட வாசலையும் திகைப்புடன். பார்த்து நிற்கிறான். இறுதித்தருணத்தில் உருவாகும் புன்னகையே இக்கவிதையின் மகத்துவம்.

இன்னொரு சித்திரம். இதுவும் பாட்டியைப்பற்றிய சித்திரமே. தாத்தா இறந்த பிறகு வெகுகாலம் அவள் கோவிலுக்குச் செல்லாமலேயே இருக்கிறாள். அவள் காலமெல்லாம் வணங்கிய அம்மன் தாத்தாவின் உயிருக்குக் காவலாக இல்லையே என்கிற சீற்றம் அவளை வதைக்கிறது. காலம் அவள் சீற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துவிடுகிறது. மீண்டும் அவள் கோவிலுக்குச் செல்லத் தொடங்குகிறாள். சீற்றம் தணிந்தாலும் வருத்தம் குறையாத பாட்டி, கோவிலில் வாசலிலேயே இருக்கும் பிள்ளையாரை வணங்குவாளே தவிர உள்ளே இருக்கும் அம்மனைப் பார்ப்பதில்லை. அம்மனுக்காக அவளே தொடுத்து எடுத்துச் சென்றிருக்கும் பூச்சரத்தையும் அணிவிப்பதில்லை. மாறாக, வாசலிலேயே நின்று கோவிலுக்குள் செல்பவர்களுக்காகக் காத்திருந்து, அவர்களிடம் ஒப்படைத்து அம்மன் பாதத்தில் வைக்குமாறு சொல்லிவிட்டுத் திரும்புகிறாள். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான வழக்குக்கு இப்படியும் ஒரு பரிமாணத்தை வழங்குகிறார் ஆனந்த்குமார்.

பலாப்பழத்தை முன்வைத்து ஒரு கவிதையை எழுதியிருக்கிறார் ஆனந்த்குமார். அவருடைய கவிதையுள்ளம் பலாப்பழத்தின் மணத்தை ஒரு குழந்தையின் மணத்துடன் இணைத்துக்கொள்கிறது. பழத்தை வெட்டியதும் வீடுமுழுக்க அதன் மணம் நிறைகிறது. அதன் சுளைகளை ஒரு சின்ன பாத்திரத்தில் வைத்து மூடி எடுத்துக்கொண்டு பக்கத்துவீட்டு நண்பருடைய வீட்டுக்குச் செல்கிறார்.  அழைப்புமணியை அழுத்திவிட்டுக் காத்திருக்கிறார். அச்சுளையை அவர் பெண்குழந்தையாகவே நினைத்துர்க்கொள்கிறார். அதனால் அந்த நண்பரிடம் ‘”உங்களுக்குச் சம்மதமென்றால் இவளை இங்கே கொஞ்சம் விளையாட விடுகிறேன்” என்று ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். தொகுப்பின் தொடக்கத்திலேயே இருக்கும் இக்கவிதை ஒருவகையில் ஆனந்த்குமார் வாசகர்களிடம் வைத்திருக்கும் கோரிக்கையைப்போலவே தோன்றுகிறது. அதனால் “இந்த வீட்டின் கதவு உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கிறது, நீங்கள் அவளை எப்போது வேண்டுமானாலும் அழைத்துவந்து விளையாடவிடலாம்” என்று நாமும் அவருக்குத் தெரிவித்துவிடலாம்.

நூல்: டிப்டிப்டிப்
ஆசிரியர்: ஆனந்த்குமார்
வெளியீடு: தன்னறம் வெளியீடு
விலை: ரூ150

Karungundram Book By Mamang Thai in tamil translated By Kannaiyan Dhachana Moorthy Bookreview By Pavannan. நூல் அறிமுகம்: மமாங் தய்யின் கருங்குன்றம் | தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி - பாவண்ணன்

நூல் அறிமுகம்: மமாங் தய்யின் கருங்குன்றம் | தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி – பாவண்ணன்



நூல்: கருங்குன்றம்
ஆங்கில மூலம்: மமாங் தய்
தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி
வெளியீடு: சாகித்திய அகாதெமி
விலை: ரூ.290
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

மூன்று கனவுகளும் மேலுமொரு கனவும்
                                                      – பாவண்ணன்

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்கக் குழுவினரும் அமெரிக்காவைச் சேர்ந்த பிராட்டஸ்டண்ட் குழுவினரும் அமெரிக்காவைச் சேர்ந்த சீர்திருத்தச் சமயக்குழுவினரும் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட தம் எண்ணற்ற சமயப்பரப்பாளர்களை ஆசிய நாடுகளுக்கு சமயப்பணிகளை மேற்கொள்வதற்காக அனுப்பிவைத்தனர். அவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மெல்ல மெல்ல கிறித்துவத்தை அறிமுகப்படுத்தி, கிறித்துவ நம்பிக்கைகளை வேரூன்றச் செய்வதையே தம் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டு இயங்கினர். எல்லா நாடுகளிலும் தொடர்யுத்தங்களால் நேர்ந்த சீரழிவுகளிலும் விளங்கிகொள்ள முடியாத நோய்களிலும் சிக்கித் தவித்த எளிய மக்களிடையில் சமயப்பரப்பாளர்களுடைய வருகை ஒரு மருந்தாக அமைந்தது. மதமாற்றங்கள் எளிதாக அமைவதற்கு அந்த வரலாற்றுத்தருணமே ஒரு தொடக்கப்புள்ளியானது.

ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவுக்குள் ஊடுருவி கொஞ்சம்கொஞ்சமாக இந்தியாவைக் கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரான்ஸ்  தேசத்தைச் சேர்ந்த கத்தோலிக்கச் சமயப்பரப்பாளர்கள் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட திபெத்தை இலக்காகக் கொண்டிருந்தனர். ஆனால் சீன எல்லைகளால் சூழப்பட்ட திபெத்தை ஒருவராலும் நெருங்கிச் செல்ல முடியவில்லை. தொடர்ச்சியாக நடைபெற்ற அபின் யுத்தங்களால் சீனாவுக்கும் பிரான்ஸ் தேசத்துக்கும் இடையிலான அரசியல் உறவு மோசமடைந்திருந்தது. பிரெஞ்சு சமயப்பரப்பாளர்களால் சீனாவுக்குள் நுழையவே முடியவில்லை. முயற்சி செய்யும்போதெல்லாம் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். 

திபெத்துக்குள் செல்பதற்கான மாற்று வழிகளை சமயப்பரப்பாளர் க்அமைப்பு தேசப்படங்களை வைத்துக்கொண்டு சிந்திக்கத் தொடங்கியது. அப்போது இந்திய எல்லையில் இருந்த அசாம் வழியாக மலைத்தொடர்களைக் கடந்து செல்வது மட்டுமே, திபெத்துக்குள் செல்வதற்கான ஒரே வழியாகத் தோன்றியது. அங்கே பாதைகள் இருக்குமா, ஊர்கள் இருக்குமா என்பதைப்பற்றியெல்லாம் எந்த விவரமும் தெரியாது. காட்டையும் மலைத்தொடர்களையும் கடந்து சென்றால் திபெத்தை அடையலாம் என்பது மட்டுமே புரிந்தது. திபெத்துக்குச் செல்லும் முதல் சமயப்பரப்பாளராக கிரிக் என்னும் இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டார். திபெத்துக்குச் சென்று கிறித்துவத்தை வேரூன்றச் செய்யும் பணியை பிரான்ஸ் அவரிடம் ஒப்படைத்தது.  மாதக்கணக்கில் கப்பலில் பயணம் செய்து இறுதியாக அந்தப் பாதிரியார் பிரம்மபுத்திரா நதியை வந்தடைகிறார். அதுதான் நாவலின் தொடக்கப்புள்ளி.

பிரம்மபுத்திராவுக்கு அருகில் காடும் மலைகளுமென விரிந்த அசாமில் எண்ணற்ற பழங்குடிகள் வாழ்ந்துவருகிறார்கள். ஒவ்வொரு குடியும் தன்னை தனித்தன்மை மிக்க குடியென நினைத்து பெருமிதத்தில் திளைக்கிறது. மற்றவர்களைவிட தனது நம்பிக்கைகளும் மரபுகளும் மட்டுமே உயர்வானது என பறைசாற்றிக்கொள்கிறது. குடிகளிடையில் ஒற்றுமையை உருவாக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைகின்றன. மிக்லுண்கள் எனப்படும் அயல்நாட்டினரை தம் எல்லைக்குள் நுழையவே அனுமதிக்கக்கூடாது என்பதில் மட்டுமே அவர்களிடையில் ஒத்த கருத்து இருக்கிறது. மறுபுறத்தில் அரசியல்ரீதியாக அந்த மலைப்பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டுவந்த போதும், அவர்களைத் தமக்கு இசைவானவர்களாக மாற்ற அரசு அமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தியபடி இருக்கிறது.

ஒவ்வொரு பேச்சு வார்த்தையும் தரைப்பகுதியான பள்ளத்தாக்கிலேயே நடக்கிறதே தவிர, ஆட்சி நடத்துபவர்களால் மேலே செல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறையும் பழங்குடித் தலைவர்களே மலையிலிருந்து கீழே இறங்கி பள்ளத்தாக்குக்கு வந்துவிடுகிறார்கள். அந்த அளவுக்கு அயல்நாட்டினர் மீது வெறுப்பும் விலக்கமும் அவர்களுக்கு இருக்கிறது. இது நாவலின் மற்றொரு புள்ளி. இந்த மலைக்குடிகளின் பகுதிகளூடே பயணம் செய்து, அசாமைக் கடந்து எப்படியாவது திபெத்துக்குச் சென்று கிறித்துவத்தை வேரூன்றச் செய்யவேண்டும் என்பதே அவருடைய பெருங்கனவு. 

பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் வாழும் எண்ணற்ற பழங்குடியினத்தினரிடையே அபோர் என்பது ஒரு பிரதானமான பழங்குடியினம். மிஷ்மி என்பது இன்னொரு பழங்குடியினம். பிரம்மபுத்திரா நதிக்கு மேலேயும் திபெத்துக்குக் கீழேயும் அசாமின் வெவ்வேறு பகுதிகளில் அந்த இனத்தினர் வாழ்கிறார்கள். எந்த இனமும் மற்றொரு இனத்துடன் திருமண உறவை வைத்துக்கொள்ளாத இறுகிய சூழலில் அபோர் இனத்தைச் சேர்ந்த கிமூர் என்னும் இளம்பெண்ணும் மிஷ்மி இனத்தைச் சேர்ந்த கஜின்ஷாவும் காதல் வசப்படுகிறார்கள். மரபை மீறிய அந்தக் காதலும் வாழ்க்கையும் நாவலின் பிறிதொரு புள்ளி. 

மூன்று கிளைகளாகப் பிரிந்து செல்லும் கதைச்சரடுகளின் தொகுதியாக கருங்குன்றம் நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நாவலை எழுதிய மமாங் தய் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர். கல்வி கற்று ஆட்சியர் பணிக்குத் தேர்வு பெற்றவர். ஆயினும் எழுத்தின் மீது இருந்த ஆர்வத்தால் ஒருசில ஆண்டுகளுக்கும் மேல் அந்தப் பணியில் அவர் தொடரவில்லை. பழங்குடியினரைப்பற்றி பல ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட தொடர் ஆய்வுகளும்   வரலாற்றின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வமும் இத்தகு ஒரு கதைக்கருவை மையமாக்கி நாவலாக எழுதத் தூண்டிவிட்டது. மொழிபெயர்ப்பாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்தியின் இயல்பான மொழியோட்டம் நாவல் வாசிப்பை மனத்துக்கு நெருக்கமாக்குகிறது.

கருங்குன்றம் அசாமின் மேல் எல்லையாக படர்ந்திருக்கும் அழகிய மலைத்தொடர். எல்லா மாற்றங்களுக்கும் சாட்சியாக அது உச்சியில் நின்றிருக்கிறது. காலத்தின் சாட்சியாக உயரத்தில் நின்று தனக்குக் கீழே நடப்பவை அனைத்தையும் அது கவனித்துக்கொண்டிருக்கிறது. 

நாவலில் தொடக்கத்திலிருந்து வளர்த்தெடுக்கப்படும் மூன்று கனவுகளும் நிறைவேறாக்கனவுகளாக கருகிப் பொசுங்கிவிடுகின்றன. காலத்தின் ஊழ் என்றுதான் அதைச் சொல்லவேண்டும். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, அசாம் வழியாக திபெத்துக்குள் அடியெடுத்து வைத்து மதத்தைப் பரப்பும் கனவோடு வந்த இளம்பாதிரியார் மனவலிமை மிக்கவர். ஆழ்ந்த இறைநம்பிக்கையும் உள்ளவர். இறையூழியம் செய்வதற்காகவே தான் பிறந்ததாக நினைப்பவர். அதற்காகவே எண்ணற்ற துன்பங்களை ஏற்றுக்கொண்டவர். ஆரம்பத்தில் அந்தப் பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் அனைவரும்  அவருக்கு வழிசொல்ல மறுக்கிறார்கள். அங்கே இங்கே என்று அலைய வைக்கிறார்கள். வழிகாட்டுவதாகச் சொல்லி அழைத்துச் சென்று பணம் வாங்கிக்கொண்டு நடுக்காட்டில் விட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள்.

ஏமாற்றுவார்கள் என்று தெரிந்தும்கூட, அடுத்த முறை அவர்கள் உதவி செய்வதாகச் சொல்லிக்கொண்டு நெருங்கும்போது, கிரிக் அவர்களை விலக்குவதில்லை. ஆனாலும் அவரால் அந்த மலைத்தொடரையும் காட்டுப்பகுதிகளையும் கடந்து செல்ல இயலவில்லை. மீண்டும் மீண்டும் காடுகளுக்குள்ளேயே சுற்றிச்சுற்றி அலைந்து திரிகிறார் பாதிரியார். ஒரே ஒரு முறை கருங்குன்றத்தை நெருங்கிவிட்ட சூழலில், கெடுவாய்ப்பாக சீன அரசின் நிர்வாகியால் அனுமதி மறுக்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார். தோல்வியடைந்தபோதும் சற்றும் மனம் தளராமல் முற்றிலும் புதியதொரு திசையில் பயணத்தைத் தொடர்ந்து கருங்குன்றத்தைக் கடந்துவிடலாம் என்று நினைக்கிறார் கிரிக்.  மற்றொரு வழிகாட்டிக் குழுவுடன் காட்டு வழிகளில் பயணத்தை மீண்டும்  தொடங்குகிறார். எதிர்பாராத விதமாக குடிகளிடையில் சிக்கி உயிரிழக்கிறார். கருங்குன்றத்தைக் கடக்க நினைக்கும் அவருடைய கனவும் கிறித்துவத்துக்கு தொண்டு செய்ய விரும்பும் கனவும் கருங்குன்றத்தின் மடியிலேயே கரைந்துபோகின்றன.

கீழ் எல்லையில் மெபோ கிராமத்தில் வசிக்கும் அபோர் குடியைச் சேர்ந்த கிமூர் மேல் எல்லையில் தாவு பள்ளத்தாக்கில் வசிக்கும் மிஷ்மி குடியைச் சேர்ந்த கஜின்ஷாவை மரபுக்கு எதிராகக் காதலிக்கிறாள். காதல் காரணமாக தன், குடியிருப்பை விட்டு வெளியேறி கஜின்ஷாவைக் கைப்பிடித்து புதிய எல்லைக்குள் நுழைகிறாள். கைப்பிடித்த காதலனோ காதலுக்கும் கடமைக்கும் இடையில் ஊசலாடுகிறான். ஒருபுறம் தந்தையின் வழியில் அயல்நாட்டினரின் காலடி படாது மலைப்பிரதேசத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறான். மற்றொரு புறம், நம்பிக்கையூட்டி மற்றொரு குடியிலிருந்து அழைத்து வந்த பெண்ணை மனம் கலங்காமல் காபாற்ற வேண்டும் என்ற உறுதியும் அவனிடம் இருக்கிறது. 

ஆனால் வாழ்க்கையில் அவன் சற்றும் எதிர்பாராத நிகழ்ச்சிகள் ஏராளமாக நடைபெறுகின்றன. அவனுடைய முனைப்பையும் உறுதியையும் பிழையான திசையில் திருப்பிவிட நினைப்பவர்களே இறுதிக்கட்டத்தில் அவனைச் சுற்றி சேர்கிறார்கள். இறுதியில் கிரிக்கைக் கொன்ற கொலைப்பழி அவன் மீது விழுகிறது. ஆங்கிலேயரின் இருட்டுச்சிறையில் வதைபட்டு மனம் குமுறுகிறான். கருங்குன்றத்தின் மடியில் ஆசை மனைவியுடன் ஆனந்தமயமான வாழ்க்கையை வாழ நினைத்தவனின் கனவு அக்குன்றின் அடிவாரத்திலேயே பொசுங்கிச் சாம்பலாகிவிடுகிறது. கருங்குன்றத்தைக் கண்ணால் கூட பார்க்கமுடியாத தொலைவிற்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டு இருட்டறையில் தள்ளப்படுகிறான்.

கருங்குன்றத்துக்குக் கீழே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் வாழும் குடிகள் தம்மிடையில் நிலவும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமை காத்து அயல்நாட்டினரின் காலடிகள் ஒருபோதும் குன்றின் நிலப்பகுதியில் பதிந்துவிடாமல் பாதுகாக்கவேண்டும் என்பதுதான் தலைமைப்பொறுப்பில் உள்ள ஒவ்வொருவருடைய விருப்பமாக இருக்கிறது. அந்த இலட்சிய விருப்பம், ஒவ்வொருவரையும் இயக்கும் தனி விருப்பங்களால் அடிபட்டுவிடுகின்றன.  மனிதர்கள் தன்னலத்துக்கு ஆட்பட்டு, எளிய லாபக்கணக்குக்காக வெகு எளிதாக துரோகம் இழைப்பவர்களாக மாறிவிடுகிறார்கள். தனியொரு விருப்பம் கூட்டுவிருப்பமாக செயல்வடிவம் பெறாத நிலையில் ஒற்றுமைக்கனவு பொசுங்கிச் சாம்பலாகிவிடுகிறது.

யாரோ ஒருவர் தூண்டிவிட, யாரோ ஒருவர் மறைந்திருந்து கிரிக்கைக் கொல்ல, அந்தக் கொலைப்பழி கஜின்ஷாவின்மீது விழுந்துவிடுகிறது. கிரிக் பாதிரியார் மதத்தைப் பரப்பும் நோக்கத்துடன் வந்தவர் என்பது எல்லாக் குடிகளும் அறிந்துவைத்திருக்கும் உண்மையே. குன்றைக் கடந்து செல்லும் வழி தெரியாமல் காட்டுப்பாதைகளின் குறுக்கும் நெடுக்கும் அவர் அலைந்து திரிவதை அவர்கள் பலமுறை பார்த்திருக்கிறார்கள். நோய்வாய்ப்பட்ட பல குடியினர், எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அவரை நெருங்கி குணம்பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ஆயினும் அவர் கொல்ப்படுவதை மெளன சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அந்தக் கொலையையே ஒரு திருப்புமுனையாகக் கொண்டு சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு அடியெடுத்து வைத்ததாக காரணத்தை முன்மொழிந்தபடி ஆங்கிலேய அரசு அதிரடியாக காட்டுக்குள்ளும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்குக்குள்ளும் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்துவிடுகிறது. மூன்று கனவுகள் பொசுங்கிய இடத்தில் ஆங்கிலேயரின் அரசியல் கனவு உண்மையாகவே மலர்ந்துவிடுகிறது. அந்த மாற்றத்துக்கும் சாட்சியாக நிற்கிறது கருங்குன்றம்.

நாவலின் முதல் அத்தியாயத்தில் கிமூர் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் மலையில் ஏறி நிற்கும் காட்சியை விவரிக்கிறார் மமாங் தய். மலையில் அடர்ந்திருக்கும் காட்டின் ஊடே பார்வையைச் செலுத்தி கண்ணுக்குத் தெரியும் புள்ளி வரைக்கும் ஏதாவது புதுமையாகத் தெரிகிறதா என்று பார்க்கிறாள். அயல்மனிதர்கள் யாரேனும் மலையை நெருங்குகிறார்களா என்று பார்த்துத் தெரிந்துகொள்ளும் கண்காணிப்புப்புள்ளி அந்த இடம். எங்கோ ஒரு புள்ளியில் புகைமண்டலம் தெரிகிறது. ஒருகணம் காட்டில் எங்காவது தீப்பிடித்திருக்குமோ என ஐயமெழுகிறது. மறுகணம் அயல்மனி்தர்கள் நெருங்கி வந்து அங்கே முகாமிட்டிருப்பார்களோ எனவும் ஐயமெழுகிறது. மீண்டுமொரு முறை பார்க்க நினைத்து பார்வையைத் திருப்புவதற்குள் மூடுபனி எழுந்து திசையை மறைத்துவிடுகிறது. அதே நேரத்தில் சூரியன் கடைசிக் கதிரொளியைப் பாய்ச்சிவிட்டு குன்றின் மடியில் மறைந்துவிடுகிறது. ஒருவித இயலாமையுடன் மலையிலிருந்து திரும்புகிறாள் கிமூர்.

முழு நாவலையும் படித்த பிறகு மீண்டும் ஒருமுறை நாவலின் முதல் பகுதியைப்  படிக்கும்போது, நாவலின் ஊடே அக்காட்சிக்கு வேறொரு பொருள் தொனிக்கிறது. அந்த அஸ்தமனக்காட்சி மனிதர்களின் கனவுகள் அனைத்தும் பொசுங்கிச் சாம்பலாகப் போவதை முன்கூட்டியே மறைமுகமாக உணர்த்துவதுபோலத் தோன்றுகிறது.  எல்லாம் மறைந்து கருங்குன்றமெங்கும் பனியும் இருளும் கவியப்போகிறது என்பதை சொல்லாமல் சொல்லி அக்காட்சி உணர்த்தி விடுகிறது.